Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 03 – PART 01

தலையைத் தாங்கியபடி செந்தாமரை அமர்ந்திருந்தாள். மயக்கம் தெளிந்து எழுந்தவளிடம், தாமதிக்காமல் நிதானமாக வெற்றிச்செல்வன் விவரத்தை கூறிவிட்டான்.

 

அவள் அமர்ந்திருந்த தோற்றத்தைப் பார்த்து, ‘என்ன சண்டை போடுவான்னு பார்த்தா, இப்படி உட்கார்ந்திருக்கா?’ என வெற்றிச்செல்வன் யோசனையானான்.



Advertisement

 

வெகுநேரம் பதில் வராததால், “செந்தாமரை…?” என இவனாகவே அழைக்க,

 

Advertisement

அவள் நிமிர்ந்து பார்த்த பார்வையில் கோபம் இருந்திருந்தால் கூட சமாளித்திருப்பானோ என்னவோ? ஒருவித இயலாமையும், மெல்லிய வலியும் தெரிய அவனுக்கு மொத்தமும் ஸ்தம்பித்த உணர்வு.

Advertisement

 

“அது…” என விளக்கம் தர முனைந்தவனின் முன்பு கை நீட்டித் தடுத்தவள், அதற்குள் அலட்சிய பாவத்தை முகத்தில் கொண்டு வந்துவிட்டாள்.

 

Advertisement

அவன் பார்த்த வலியும், தவிப்பும், இயலாமையும் மாயமோ என்னும் படியான தோற்றம்.

 

எதுவும் பேசாமல் எழுந்து அந்த அறையின் ஓர் ஓரத்தில் நின்றாள். அவளுக்கு வெளிக்காற்றைச் சுவாசித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

 

ஆனால், அவள் எதிர்பார்த்ததற்கு மாறாய் ஒரு சூழல்!

 

வெளிப்புறம், ஒரு பெண்மணி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள். “அட நிசமாத்தான்! அவங்களுக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு. வைத்தியச்சி வந்து மாசமா இருக்குன்னு சொன்னதும் ஐயாவுக்கு எத்தனை சந்தோஷம் தெரியுமா?

 

நான் கூட நீங்க எல்லாம் பேசிக்கிறதை கேட்டுட்டு, நம்ம ஐயா இம்புட்டு வீராப்பா திரியறாரே… இவராவது காதலிக்கிறதாவதுன்னு நினைச்சேன். நம்ம ஐயா என்னன்னா கல்யாணம் செஞ்சு குடும்பமே நடத்திட்டு இருக்காரு” எனப் பேசிக்கொண்டே போக,

 

இப்பொழுது அவளது அவயங்கள் அவன் எதிர்பார்த்தது போல வேலை செய்தது. கோபமாய் அவனைப் பார்த்து முறைத்தாள்.

 

ஆனால், வெற்றிச்செல்வன் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கி இருந்தான். ஆகையால் அவளைக் கவனிக்கவில்லை.

[the_ad id=”6605″]

கோபம் சொற்களில் பிரதிபலிக்க, “யோவ்…” என்றாள் அதட்டலாக.

 

என்ன கூறினாள் என்று வெற்றிச்செல்வன் கவனிக்கவில்லை. பேசிவிட்டாள்; தன்னை அழைத்து விட்டாள்; என்பது மட்டும் புரிய, தன் சிந்தனையிலிருந்து உடனே வெளியில் வந்தான்.

 

“என்னம்மா…” என்றான் பரிவாக.

 

இதுவரை அவள் அறிந்திராத அவனின் குரல்.

 

“எதுக்கு இப்படியெல்லாம் சொல்லி வெச்ச? கேட்க ஆள் இல்லைன்னா?” கேட்கும்போதே குரல் கலங்கி இருக்க, விழிகளுக்கு அணைப்போடும் வழி தெரியாமல் கீழ் உதட்டைச் சிறை செய்து கொண்டாள். பார்வையும் எங்கோ வெறித்தது.

 

“ம்ப்ச்…” என்றவன் பின்னந்தலையைக் கோதி, இப்பொழுது அங்கிருந்த நாற்காலியில் தலையைத் தாங்கியபடி தொப்பென அவன் அமர்ந்துவிட்டான்.

 

ஆழ மூச்செடுத்து விட்டு, அவளை நிமிர்ந்து பார்த்தவன், “கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன் இல்லை” என அவளிடமே கேட்டான்.

 

அவள் அவனது விசித்திரமான செய்கைகளை அசையாமல் பார்க்கவும், “அப்ப இதுதான் சரின்னு தோணிச்சு. எப்படி அத்தனை பேரு கூடுனாங்க தெரியலை. அவங்க முன்ன வைத்தியச்சி நீ மாசமா இருக்கேன்னு சொல்லவும்… என்னால… என்னால…” என்று தடுமாறியவன்,

 

மீண்டும் நிறுத்தி, மெல்லிய குரலில், “தப்பு தான்! அப்போ யோசிக்க நேரம் இல்லை… இப்போ யோசிச்சா புரியுது… ரொம்ப பெரிய தப்பு தான். நானா இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடாது” என்றான் எங்கோ பார்த்தபடி.

 

“சரி இப்போ இதை எப்படியாவது சரி செய்ய பார்க்கலாம்… உன் மேல இருக்கும் விருப்பத்தால… நான் தான் வைத்தியச்சிக்கிட்ட நீ மாசமா இருக்கேன்னு பொய் சொல்லச் சொல்லி, அதைச் சாக்கா வெச்சு நீ என் மனைவின்னு பொய் சொல்லிட்டேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடறேன். இப்போ இதுல இருந்து பின்வாங்க வேற வழி தெரியலை” என்றான் பிசிரற்ற குரலில்.

 

அவன் தெளிவாகத் திட்டத்தை கூறும்பொழுதே இத்தனை நேரமும் இதைக்குறித்துத் தான் யோசித்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது.

 

“யோவ்… நீ ஊரு தலைவர்… பரமேஸ்வரன் ஐயாவோட மகன்… உனக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்குமா இருக்காதா?” என்றாள் காட்டமாக.

 

அதை சொல்லிவிட்ட பிறகே உரைத்தது, தந்தை பெயரைச் சொன்னால் கோபப்படுவானோ என்று! பிறகு, கோபப்பட்டால் எனக்கென்ன என்னும் அலட்சியம் வந்து ஒட்டிக்கொண்டது.

 

ஆனால், அவள் எண்ணத்திற்கு மாறாக, “ஹ்ம்ம்… அவரோட குணம் எனக்கும் வந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். இப்படி நிதானமே இல்லாம இருக்கேன்” என்றான் நெற்றியைத் தடவியபடி.

 

‘ஏன் இப்படி இருக்கிறான்?’ என அவளுக்கே தோன்றிவிட்டது.

 

“முதல்ல எழுந்து நில்லு. இப்படிச் சோர்ந்து போய் உட்காராத” என்றாள். அவன் திமிர் காட்டி இருந்தால் இவளும் திமிர் காட்டி இருந்திருப்பாளோ என்னவோ, ஒரு மாதமாக அவன் அப்படி, அவன் இப்படி எனப் பெருமை புராணங்கள் கேட்டு சலித்தவளுக்கு, இவனது புதிய அணுகுமுறையை எளிதாக ஏற்க முடியவில்லை.

 

“ம்ப்ச்…” என்றான் சலிப்பாக.

 

அவன் அவனது இயல்பில் இல்லையோ என்று தோன்றியது. “யோவ்… என்னய்யா இது?” என்று மீண்டும் கேட்க,

 

“என் அம்மா சொன்ன மாதிரி இதெல்லாம் என்னால முடியாது போல! எங்க அப்பா கனவு… ம்ப்ச்… எனக்கே என்னை பிடிக்கலை மாஹி” என்றான் சோர்வாக.

 

“மாஹி யாரு?”அனைத்தையும் அந்தரத்தில் விட்டு விட்டாள். இப்பொழுது இந்த கேள்விக்குப் பதில் அவளுக்கு அவசியமாகப்பட்டது.

 

ஏதேதோ கொட்டிக் கொண்டிருந்தவன் அப்பொழுது தான் தெளிந்தான் போல, “என்ன?” என்றான் தெளிவான ஸ்ருதி ஏறிய குரலில்.

 

“ஏதோ மாஹின்னு சொன்னீங்க. யாருன்னு கேட்டேன்” என்றாள்.

 

“உன்னை மாஹின்னா சொன்னேன்…” என அவனை நினைத்து அவனே அதிசயித்தது சில நொடிகளே!

 

அதற்குள் தன்னை மீட்டு, “அது மேகி நூடுல்ஸ் இருக்கல்ல… அதைத் தான் சுருக்கி, விரிச்சு, திரிச்சு மாஹின்னு சொல்லி இருப்பேன்” என அவன் விளக்கம் தர,

 

‘நம்ப முடியலையே!’ என்ற பாவனையில் அவள் பார்த்து வைத்தாள்.

 

“பெயர்க் காரணம் எல்லாம் இப்போ அவசியமா? நிறைய வேலை இருக்கு. இந்த பிரச்சனையைச் சமாளிக்க நான் சொன்ன மாதிரி சொல்லிடலாம். அதுதான் சரியா வரும்” என்றபடி அவன் எழ,

 

“யோவ்…” என்றாள் மீண்டும் அதட்டலாக!

 

இப்பொழுது தான் சரியாகக் கவனிக்கிறான். கவனித்ததும் தன்னிச்சையாகச் சுற்றும் முற்றும் யாரை அழைக்கிறாள் இவள் என்று தேடினான்.

 

“என்ன தேடற?”

 

“யாரைக் கூப்பிட்ட?”

 

“உன்னைத்தான்…”

[the_ad id=”6605″]

“ஏய் அடங்கவே மாட்டியா நீ? ஊர்த்தலைவர் டி நானு?”

 

“அது உனக்கு ஞாபகம் இருக்கா?”

 

“மரியாதை கொடேன். என் மானத்தை வாங்கிடுவ போல இம்சை!”

 

“பின்ன என்ன? நீங்க சொன்ன மாதிரி சொன்ன ஊருக்குள்ள உங்களை எல்லாரும் என்ன நினைப்பாங்க” என்றாள்.

 

அலட்சிய பாவனையில் தோளைக் குலுக்கியவாறு, “ஐ டோன்ட் கேர்” என்றான். அவனது இயல்பான ஆங்கிலத்திலும், அந்த உச்சரிப்பிலிருந்த வித்தியாசத்திலும் ஒரு நொடி அவனை ஆழப் பார்த்துவிட்டு,

 

“கண்டிப்பா உங்களைத் தப்பா நினைப்பாங்க” என்றாள்.

 

“என்னால சமாளிக்க முடியும். ‘என்னை மறுக்க மாட்டாங்கிற தைரியத்துல தான் அப்படி ஒரு பொய் சொன்னேன். இப்போதான் தெரியுது, அவளுக்கு விருப்பம் இல்லை போல! அதான் உண்மையை ஒத்துக்கிட்டேன்’னு சொல்லிடுவேன்.

 

இந்த விஷயத்தை எப்படி வேணும்னாலும் என்னால சமாளிக்க முடியும். ஆனா, ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாம அவளைத் திருமணம் செய்யும் தவறைக் கண்டிப்பா நான் செய்ய மாட்டேன்.

 

அதை செஞ்சுட்டா என் அப்பா கூட என்னை மன்னிக்க மாட்டாரு” என்றான் மனதிலிருந்து.

 

அவனது உறுதியும், தெளிவும் அவளுக்கு விசித்திரமாக இருந்தது.

 

“இந்த முடிவு என் சம்மதம் இல்லைங்கறதுக்காகவா?”

 

அவளை ஆழப் பார்த்தானே தவிரப் பதில் சொல்லவில்லை.

 

“அதுக்கு நீங்க அப்படி ஒரு பொய்யைச் சொல்லாமலே இருந்திருக்கலாமே!”

 

“ஹ்ம்ம் தாராளமா இருந்திருக்கலாம். உன்னையும், என்னையும் இணைச்சு இந்த ஊர் கதை பரப்பாமல் இருந்திருந்தா… நீ என்கிட்ட திரும்பத் திரும்ப வம்பு வளர்த்து ஊர் மக்களோட வாய்க்கு தீனி போடாம இருந்திருந்தா… நீ மயக்கம் போடாமா இருந்திருந்தா… அப்போ கூட்டம் கூடாம இருந்திருந்தா… அந்த வைத்தியச்சி எல்லார் முன்னாடியும் நீ கர்ப்பமா இருக்கேன்னு தவறா கணிச்சு சொல்லாம இருந்திருந்தா…” என்று அவளிடம் காரணங்களை அணிவகுப்பாய் கூறியவன்,

 

மனதிற்குள், “நீ உங்க ஊருல இருந்து கிளம்பின மறுநாளே இங்க வந்து சேர்ந்திருந்தா…” என்றும் சொல்லிக் கொண்டான்.

 

என்னவோ அதை அவளிடம் நேரடியாகக் கேட்க அவனுக்கு மனம் விளையவில்லை. அவள் விஷயங்களை அவளாகச் சொல்லித் தெரிந்து கொண்டால் தானே சரியாக இருக்கும் என்னும் எண்ணம். அவளாக எப்பொழுதேனும் சொல்வாளா? என்னும் மெல்லிய ஆவலும், ஏக்கமும் அவனுக்குள் இருக்கிறது.

 

“என்ன உளறுறீங்க? நம்மளை இணைச்சு ஊர் என்ன பேசுச்சு?”

 

“எதுவுமே தெரிஞ்சுக்காம சுத்திட்டு இரு. நீ தனியா இந்த ஊருக்கு வந்தியாம்! வந்ததும் என்னைத்தான் தேடி வந்தியாம்! என்கிட்ட நிறைய நேரம் பேசுனியாம்! உனக்கு நான் சகல வசதியும் செஞ்சு தந்தேனாம்! உடனே வேலை போட்டு குடுத்துட்டேனாம்! உனக்குத் தனியா இருக்கறோமேன்னு பயமே இல்லையாம்! ஏன்னா நான் இருக்கேன்னு தைரியமாம்! இப்படி என்ன என்னவோ அவங்களா ஒரு கதையை உருவாக்கிட்டாங்க”

 

அவனது விளக்கத்தில் அவள் வாய் பிளந்தாள். “இப்படியுமா பேசுவாங்க? இதென்ன அநியாயமா இருக்கு! எங்கேயாவது லாஜிக் ஒத்துப்போகுதா? அதோட நான் எப்போ உங்களைத் தேடி வந்தேன். பரமேஸ்வரன் ஐயான்னு தெளிவா கேட்டுத் தானே வந்தேன்”

 

“அவங்களே அந்த பேச்சு ஓஞ்சு விட்டிருப்பாங்க. ஆனா, நீ என்னைத் தேடித் தேடி வம்பு வளர்க்கவும்… அந்த பேச்சு இன்னும் வளர்ந்திடுச்சு…” என்றான் கோபமாய்.

[the_ad id=”6605″]

“உங்களுக்கே இது அநியாயமா தெரியலை. நான் உங்களை இன்னைக்குத் தான் ரெண்டாவது முறை பார்க்கிறேன். நான் உங்களைத் தேடித்தேடி வம்பு வளர்த்தேனா?”

 

“இந்த ஊருக்கு வந்த பத்து நாளுல, காலையில எல்லாரும் நேரமே வயலுக்கு போனாங்களா? அவங்களைப் பார்த்து நீ என்ன கேட்ட?”

 

என்ன கேட்கிறான் என அவள் வினோதமாகப் பார்க்கவும், அவனே பதில் கூறினான். “ஏன் இந்த நேரத்துக்கு போகறீங்கன்னு அவங்ககிட்ட வம்பு வளர்த்து… தொழிலாளிகளின் உரிமை… முதலாளிகளின் கடமைன்னு… பக்கம் பக்கமா வசனம் பேசி, உங்க ஐயாகிட்ட நான் பேசறேன்னு ஏதோ உரிமை பட்டவ மாதிரி சொல்லியிருக்க…”

 

“ஆனா அவங்க தான் விளக்கம் தந்துட்டாங்களே, இப்போ நேரமா போய் வேலை செஞ்சுப்போம். வெயில் அதிகம் இருக்கும்போது ஓய்வெடுத்துப்போம்ன்னு சொன்னாங்களே… அதுக்கப்பறம் நான் எதுவும் சொல்லலையே…” என்று நியாயம் பேசினாள்.

 

“அதை எங்க அவங்களை சொல்ல விட்ட, நீ பேசி ஓஞ்சதும் அவங்க பதில் தந்திருக்காங்க. அதுக்கு முன்ன நீ பேசுனது எல்லாம் இல்லைன்னு ஆகிடுமா?”

 

“இதெல்லாமா பிரச்சனை?” என்றாள் பரிதாபமாக.

 

“நீயும் கிராமத்துல தானே வளர்ந்திருப்ப, அங்க எல்லாம் எப்படி பேச்சு வரும்ன்னு உனக்குத் தெரியாதா?”

 

“வரும் தான்… ஆனா நாம தான் பார்த்துக்கறது கூட இல்லையே? இப்படி மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டா எப்படி?”

 

“எனக்கு மட்டும் என்ன தெரியும்?” என்றான் விட்டேரியாக.

 

“இதுக்காக கல்யாணம்ங்கிறது பெரிய முடிவு… அதை அவ்வளவு சுலபமா எடுத்துடுவீங்களா?”

 

“உன்மேல பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு எடுத்தேன்னு நினைச்சியா?”

 

“என்ன என்ன? இரக்கமா? என்மேல நீங்களா? அப்படிப் பரிதாபப்பட்டு வாழ்க்கைத் தர அளவா நான் இருக்கேன்?” என்றாள் கோபமாக.

 

“அப்படி எல்லாம் எனக்கு எண்ணமே இல்லை! நீ அப்படி யோசிச்சியான்னு கேட்டேன். தட்ஸ் இட்” என்றான் தோளைக் குலுக்கியபடி.

 

மேலும் அவனே தொடர்ந்து, “ரெண்டு முறை உன்னை பார்த்திருக்கேன். என்னவோ உன்கிட்ட பிடிச்சிருந்தது. அந்த பிடித்தம் கல்யாணம்ன்னு ஒரு முடிவை எடுக்க வெச்சிருக்கும்” என்று மனதை மறையாமல் அவன் சட்டென்று சொல்லிவிட, என்ன என்று அவள் சற்று அதிர்ந்து அவனைப் பார்த்திருந்தாள்.

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!