Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 03 – PART 02

 

நிசப்தம் அழகாய் ஆட்சி செய்து கொண்டிருந்தது அவ்விடத்தில். பேச்சிழந்த நிலை என்பதை விடவும், செந்தாமரைக்கு என்ன பேச என்றே தெரியாத நிலை.

 



Advertisement

“என்ன ரொம்ப மோசமாகவா இருக்கேன்? இவ்வளவு ஷாக் கொடுக்கிற?” வெற்றிச்செல்வன் அவளைச் சீண்ட, அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

“நீங்க சொல்லறதை நம்ப முடியலை” என்றாள் எங்கோ பார்த்தபடி.

Advertisement

 

Advertisement

அவன் நகையொலியில் அவள், அவனது முகத்தைப் பார்க்க, “எனக்கே நம்ப முடியலை. உன்னால எப்படி நம்ப முடியும்?” என்றான். இந்த சொற்களுக்கும் கோபம்தான் வந்தது மங்கைக்கு.

 

மெல்லிய குழப்பமும் எழ, “அச்சோ ஏன் குழப்பறீங்க” என்று தலையில் கைவைத்து அவள் புலம்ப,

Advertisement

 

“மாஹி, எந்த குழப்பமும் இல்லை. நான் தெளிவா தான் இருக்கேன். உன்னை பிடிச்சு போனதால தான் கல்யாணம் வரை யோசிச்சுட்டேன். உனக்கு இப்போ விருப்பம் இல்லைங்கிறப்ப நானே தெளிவா பேசி நிறுத்திடறேன். ஆனா, இனியும் நீ இந்த ஊர்ல இருக்க வேணாம். திருச்சியில என்னோட பிரண்ட் இருக்கா, நீ அங்க போக தேவையான ஏற்பாட்டை நான் செஞ்சுடறேன்” என மடமடவென திட்டங்களைக் கூற,

மாஹி என்ற பெயர் இப்பொழுதும் அவளுக்கு வித்தியாசமாகப் பட்டது. கேட்டாலும் உண்மையைச் சொல்ல மாட்டான் என்பதால் அதைப்பற்றிய கேள்வியை அவள் எழுப்பவில்லை.

 

அவனது தொடர் திட்டங்களில், “ஸ்ஸ்ஸ்… போதும் உங்க மூளைக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுங்க” என்றவள் மேற்கொண்டு பேசும் முன்பு அவனது கைப்பேசி இடையிட்டது.

 

வெற்றிச்செல்வன் அந்த கைப்பேசியில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்ததுமே, ‘என்னடா இன்னும் போன் வரலையேன்னு நினைச்சேன்’ என்று இதழ்களைக் கேலியாகச் சுளித்தவன், வேண்டுமென்றே அழைப்பை ஏற்கவில்லை. மீண்டுமொரு அழைப்பு! இம்முறை அழைப்பு துண்டிக்கும் நேரம் வரை வேண்டுமென்றே காத்திருக்க வைத்து எடுத்தான்.

 

இத்தனை நேரமும் செந்தாமரை தேடிக்கொண்டிருந்த அவனது கம்பீரமும், மெல்லிய கர்வமும் அவனது முகத்தில் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. அவளையும் அறியாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என் ஆளுங்க எங்க?” கைப்பேசியின் எதிர்புறத்தில் கர்ஜனையாய் ஒலித்தது மாரியப்பனின் குரல். இந்த ஊரின் பழைய தலைவர்.

 

“என்கிட்ட கேட்டீங்கன்னா…” வெகு அலட்சியமாகக் கேட்டவன், எதிர்புறத்தை இன்னும் வெறியேற்றினான்.

 

“வேணாம் வெற்றி. ஏதோ சின்ன பையன்னு பார்க்கிறேன். என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. அவனுங்களை விட்டுடு”

 

“என்னை கொல்ல வந்தவங்களை காப்பாத்த உங்களுக்கு என்ன இவ்வளவு அக்கறை மிஸ்டர் மாரியப்பன்” இலகுவாக மெல்லிய குரலில் தொடங்கிய பேச்சு, அழுத்தமான குரலில் முடிந்திருந்தது.

 

மாரியப்பன் என்பது யாரென்று ஊருக்கு புதிதாக வந்திருக்கும் செந்தாமரைக்குப் புரியாதபோதும், கொல்ல வந்தவர்கள் என்ற பேச்சில் மிகவும் கலவரமானாள்.

 

“உன்னைத் தட்டி வைக்கத் தான் இதுவரை நினைக்கிறேன். கொல்லணும்ன்னு இதுவரை யோசிச்சதில்லை. அந்தளவு எங்களை போக விட்டுடாத” மாரியப்பனின் கோபத்தின் அளவு ஒவ்வொரு வார்த்தையிலும் பிரதிபலித்தது. அதீத கோபம் தான் என்பது அவரது, கட்டுப்பாட்டை மீறி வெளிப்படும் வார்த்தைகளிலேயே புரிந்தது.

 

“ஓ… சரிங்க மிஸ்டர் மாரியப்பன். உங்களை… ஐ மீன் உங்களையும், உங்க கூட்டாளியையும் அந்தளவு பெரிய விளையாட்டெல்லாம் விளையாட விட மாட்டேன். நீங்க கவலையேப் படாதீங்க” என கேலிக்குரலில் வெற்றிச்செல்வன் சீண்டி, நீ தவறுதலாக சொல்லிவிட்ட வார்த்தைகளை நான் கவனித்து விட்டேன் என்று எதிர்புறத்திற்கு உணர்த்தினான்.

[the_ad id=”6605″]

“ஏய்… யாரு… யாரு எனக்கு கூட்டாளி… அதெல்லாம் யாருமில்லை. நான் தனி தான். நான் மட்டும் தான்” என படபடவென இடைவெளியில்லாமல் ஆவேசமாகக் கத்தியவரின் குரல் சிறிது நடுங்கித்தான் ஒலித்தது.

 

அவரது நடுக்கத்தைக் கைப்பேசியிலேயே கணித்து விட்டவன், வாய்விட்டுச் சிரித்து, “சரி சரி நான் நம்பறேன். விடுங்க. விடுங்க” என்று சொன்ன வார்த்தைகளில் அத்தனை விஷமம்.

 

“வேண்டாம் வெற்றி. ஏதோ வந்தமா ஊரை சுத்தி பார்த்தோமான்னு புறப்படுற வழியைப் பாரு. அதைவிட்டு, இங்கேயே இருக்கிறேன்னு நீ வீம்பு செய்ய செய்ய உன்னோட ஆயுளை நீயே குறைக்கிறேன்னு தெரிஞ்சுக்கோ” என மாரியப்பன் மீண்டும் எச்சரிக்கை விடுக்க,

 

“ஹாஹா மிலிட்டரிகாரன் மகன், உயிருக்கு பயப்படுவேன்னா நினைச்சீங்க?” என அதற்கும் வெற்றிச்செல்வன் சிரித்தான்.

 

“முடிவா என்ன சொல்லற? ஆளுங்களை வெளிய விட முடியுமா முடியாதா?” என மாரியப்பன் மீண்டும் கர்ஜித்தார்.

 

அவருக்கு அவர்களை மீட்டே ஆக வேண்டும். இதுநாள் வரை இந்த வேலைகளுக்கு அனுப்பியது அவருடைய நேரடி ஆட்களை! அவர்களால் வெற்றிச்செல்வனை எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் தான் இந்தமுறை வேறு ஏற்பாடு செய்திருந்தார்., தற்சமயம் அனுப்பியிருந்த ஆட்கள், சற்று பெரிய இடத்திலிருந்து வரவழைக்கப்பட்டவர்கள். இப்பொழுது அவர்களை மாரியப்பன் திரும்பி அனுப்பியே ஆகவேண்டும் என்னும் நிலை.

 

வெற்றிச்செல்வனோ நிதானமாக, “எந்த ஆளுங்களை மிஸ்டர் மாரியப்பன்?” என்றான் போலிப் பணிவுடன்.

 

இனி அவனுடன் பேசிப் பயனில்லை என்று புரிந்த மாரியப்பன், “உனக்கு நேரம் சரியில்லை வெற்றி … கவனம்…” என்ற எச்சரிக்கையுடன் அழைப்பை துண்டித்திருந்தார்.

 

அழைப்பு துண்டிக்கப்பட்ட கைப்பேசியைப் பார்த்தவனின் இதழ்கள் இகழ்ச்சியாய் வளைந்தது. இத்தனை நேரமும் சுற்றுப்புறமும் உரைக்கவில்லை, எதிரில் மீன் குஞ்சாய் மெலிதாக வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் மங்கையையும் கவனிக்கவில்லை.

 

சட்டென்று இருக்குமிடம் உணர்ந்தவன், “அது மாஹி…” என்று தொடங்க,

 

“போதும்… நீங்க மாஹிக்கு சொன்ன விளக்கமே இன்னும் காதிலேயே நிக்குது. இனி புதுசு புதுசா மூளைக்கு வேலை தந்து விளக்கம் சொல்லாதீங்க. அதுக்கெல்லாம் எனக்கு பொறுமை இல்லை” என்று படபடவென பொரிந்து நொடித்துக் கொண்டவள்,

 

“உங்க போன் நம்பர் கொடுங்க. ஒரு போன் வந்ததுமே கிட்ட இருக்கிறவளை மறந்துடறீங்க. இனி அப்பப்ப போன் பண்ணி என்னை ஞாபக படுத்திக்கிறேன்” என்று கூறி இலைமறை காயாக தன் சம்மதத்தைக் கூறியது அவனுக்குச் சுத்தமாக விளங்கவில்லை.

 

அவன் பாட்டிற்கு வெகு இயல்பாய் அவனது கைப்பேசி இலக்கங்களைத் தந்தான்.

 

அதை குறித்துக் கொண்டவள், சற்றே யோசித்து, “ஆமா வேஷ்டிக்கு எதுக்கு பெல்ட் போட்டு இருக்கீங்க?” என்று கேட்டபொழுது, அவனுக்கு குப்பென்று வியர்த்து விட்டது. ரத்தம் முழுவதும் முகத்திற்குப் பாய்வது போல திடீரென சிவந்து படபடப்பானான்.

 

அவனுக்கு வேஷ்டி என்ற உடையே பரிட்சயம் இல்லை. இந்த ஊருக்கு வந்த பிறகு, அதிலும் ஊர்த்தலைவராய் நின்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தின் பிறகு, சிறு பையன் போலத் தோற்றம் இருக்கக்கூடாது என்றும், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாகத் தெரியக்கூடாது என்றும் வேஷ்டி அணிய தொடங்கினான்.

 

ஆனால், பழக்கமே இல்லாத உடை என்பதால், அவனால் இலகுவாக அந்த உடையில் பொருந்த முடியவில்லை. கட்டிப் பழகி முயன்ற போதும் வேஷ்டி இடுப்பில் நிற்பேனா என்று சதி செய்ய, வேறு வழியே இல்லாமல் வேஷ்டியை இடுப்பில் நிற்க வைக்க பெல்ட் போடத் தொடங்கினான். இதுவரை ஒருவரும் கவனித்ததில்லை. இன்றுதான் இப்படி ஒரு தர்ம சங்கடமான சூழல்.

[the_ad id=”6605″]

செந்தாமரைக்கும் தெரிந்திருக்காது. மயக்கம் தெளியாமல் அவள் சிறிது நேரம் அங்கிருந்த பெரிய ஸ்டூலில் படுத்த நிலையில் இருக்க, வெற்றிச்செல்வனின் கண்ணசைவில் வீரமணி அங்கிருந்த கூட்டத்தைக் கலைத்திருந்தான்.

 

சிறிது நேரத்தில் அவளது மயக்கம் தெளிவது போலத் தெரிய, விரைந்து அவளருகில் சென்றவனின் எதிர்பார்ப்பைப் பொய்யாகாது, செந்தாமரையும் மயக்கத்திலிருந்து எழ முயன்றாள்.

 

அத்தனை நேரமும் மயங்கிய நிலையில் இருந்ததாலோ, உடலின் சோர்வாலோ அவளுக்கு உடனடியாக அவளது புலன்கள் ஒத்துழைக்காமல் சதி செய்ய, மீண்டும் சரிய இருந்தவளை இம்முறையும் தாங்கியது வெற்றிச்செல்வனே! அவள் படுத்த நிலையிலிருந்திருக்க, இவன் குனிந்தபடி அவளை தாங்கிக் கொள்ளப் பிடிமானத்திற்கு அவனைப் பிடிக்க முயற்சித்தவளின் கைகளில் அகப்பட்டிருந்தது அவனுடைய பெல்ட்.

 

அந்த வித்தியாசத்தில் அவளது மயக்கம் முழுவதும் தெளிந்து விட்டது. அப்பொழுதிருந்த மனநிலையில் அவள் அதைக் கேட்கவில்லை. இப்பொழுது அவளுக்குக் கேட்டே ஆக வேண்டும் என்று தோன்றியிருக்க, கேட்டு விட்டிருந்தாள்.

 

‘இதை எப்போ கவனிச்சா?’ என்று எண்ணியவன், அவசரமாகச் சட்டையை நன்றாக இறக்கி இழுத்து விட்டபடி, தன்னை சுற்றிலும் பார்வையை ஓட்டியபடி, “அதெல்லாம் எதுவுமில்லை உனக்கு யார் சொன்னது?” என்றான் அவசரமாக.

 

இத்தனை நேரமும் கம்பீரமாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவன், அதற்குள் முழுவதுமாக ஒவ்வொரு செயலிலும் மாறி இருக்க, விழுந்து விழுந்து சிரித்தாள்.

 

“ஸ்ஸ்ஸ் சிரிக்காத…” என்றான் பற்களைக் கடித்தபடி.

 

“ஊர்த்தலைவர்ன்னு சொன்னாங்க. ஒரு வேஷ்டியைக் கூட கடிக்கத் தெரியாது போல” என அவள் மீண்டும் சிரிக்க,

 

“ஸ்ஸ்ஸ் பிளீஸ்… அதெல்லாம் எதுவும் இல்லை. சும்மா இன்னைக்கு நிற்கலைன்னு போட வேண்டியதா போச்சு” என அவன் சமாளிக்க, அவள் நம்பிவிடுவாளா என்ன?

 

“சரி விடு யாருகிட்டேயும் சொல்லிடாத. சரியா?” என்று சற்று இறங்கி வந்து கேட்க, அதற்கும் புன்னகைத்தாள்.

 

“அப்படின்னா மாஹின்னா என்னன்னு சொல்லுங்க?” என்று டீல் பேசினாள்.

 

இவ ஒருத்தி என்று சலித்தவன், “அதெல்லாம் முடியாது போ” என்றான் வீம்பாய்.

 

கூடவே பேச்சை மாற்றும் விதமாக, “சரி சரி இங்கேயே மணிக்கணக்கா பேசிட்டு இருந்தா, நமக்குள்ள எதுவுமே இல்லைன்னு சத்தியம் அடிச்சு சொன்னா கூட நம்ப மாட்டாங்க. நீ மயக்கமா இருக்க மாதிரியே படுத்துக்க. நான் போன் பேசிட்டு இருக்கிற மாதிரி பில்ட் அஃப் கொடுக்கிறேன்” என்று அவன் சொல்ல,

 

“அதெல்லாம் யாரும் நம்ப மாட்டாங்க. நான் உங்க போன் நம்பர் வாங்கி இருக்கேன். இன்னும் மக்கு மாதிரியே இருக்கீங்க” என்று செந்தாமரை காய,

 

“புரியலை…”

 

“உங்களை மக்குன்னு சொன்னேன்…”

 

“எதுக்கு?”

 

“பாருங்க, நீங்க இந்த ஊர் தலைவர். பரமேஸ்வரன் ஐயாவோட மகன். நீங்க மத்தவங்க முன்னாடி கீழிறங்கறது எனக்கு பிடிக்கலை. அதனால…” என்று அவள் நிறுத்த,

 

“அதனால?” என்று புருவங்களை ஏற்றி இறக்கி அவனும் கேட்டான்.

 

“அதனால என்ன… நீங்க சொன்னது சொன்னதாவே இருக்கட்டும். அவ்வளவுதான்” என்றாள்.

 

இப்பொழுது ஒரு வழியாய் அவனுக்கு புரிந்திருக்க, “ஹே நிஜமாவா?” என்று ஆர்ப்பரித்த கையோடு அவளை அணைக்க அருகில் செல்ல,

 

மிரண்டவள் சற்று விலகி நின்று, “என்ன?” என்று கேட்டாள்.

 

என்னவோ அவளுக்கு எதுவுமே விளங்கவில்லை. பரமேஸ்வரன் ஐயாவை அவளுக்கு ஊர்த்தலைவராய் தான் தெரியும். ஆனால், வெற்றிச்செல்வன் கைப்பேசியில் பேசியபோது ‘மிலிட்டரிக்காரன் மகன்’ என்று குறிப்பிட்டிருந்தான். பொதுவாக ஊர்ப்புறம் வளரும் ஆண்களுக்கு வேஷ்டி இலகுவான உடை தான். ஏனென்றால், லுங்கியைக் கட்டி பழகி இருப்பார்கள். பெண்களுக்கு நைட்டி போன்று, ஆண்களுக்கு லுங்கி தேசிய உடை போல! ஆக வேஷ்டி கட்ட சிரமப்பட்டு அவள் யாரையும் பார்த்ததில்லை. அதோடு வெற்றிச்செல்வனின் பேச்சு வழக்கிலும், ஆங்கில உச்சரிப்பிலும் நல்ல வித்தியாசங்கள் தெரிகிறது. இப்பொழுது அவனது செய்கையும், என்னவோ கிராமப்புற பழக்கவழக்கம் போலத் தெரியவில்லை!

 

இத்தனை சந்தேகங்கள் இருந்தபோதும், ஏன் இவனைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாள் என்று அவளுக்கே புரியவில்லை. அவனிடம் விளக்கங்களைக் கேட்கவும் அவளுக்கு தோன்றவில்லை.

 

வெற்றி எப்படி அவளைப்பற்றி அவளே சொல்லட்டும் என்று நினைக்கிறானோ, செந்தாமரையும் அதையே தான் நினைத்தாள்.

 

இந்த திருமணம் சரியா? தவறா? என்ற விவாதத்தை மனதிற்குள் எப்பொழுதோ கடந்திருந்தாள். காரணம் பரமேஸ்வரன் ஐயா! அவர் உயிரோடே இல்லை என்றபோதிலும் அவரது பெயருக்குக் களங்கம் ஏற்படும்படியான ஒரு விஷயத்தை அவளால் யோசிக்கவே முடியாது. ஆனால், பரமேஸ்வரன் ஐயா மட்டும் தான் காரணமா? என்றால் நிச்சயம் இல்லை தான்.

 

அவளது குழப்பமான தோற்றத்தில், “அது… சாரி… உனக்கு நிஜமாவே சம்மதமா?” என்றான் அவனது செய்கையில் அவனே சங்கடப்பட்டபடி.

 

“தெரியலை… ஆனா, நீங்க பொய் சொன்னதா சொல்லறேன்னு சொல்லறது எனக்குச் சரியா படலை” என்றவள், அவன் பதிலை எதிர்பாராது, “நான் கிளம்பறேன்” என்று சொல்லி வெளியேறியிருந்தாள்.

 

என்ன சொல்கிறாள் இவள் என செல்லும் அவளையே யோசனையோடு பார்த்திருந்தான் வெற்றிச்செல்வன்.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!