Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 01 )

 

ராஜேஸ்வரி அம்மாள் அதிகாலை எழுந்தது முதல் பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தார். தன் கணவர் தன்னுடன் இருந்திருக்கலாம் என்னும் ஏக்கம் எப்பொழுதும் போல இன்றும் மனதில் எழுந்தது.

 



Advertisement

 

எப்படி எல்லாமோ வாழ வேண்டிய வாழ்க்கை. ஆனால் ஒற்றை மகனைக் கூட அருகில் வைத்துக் கொள்ள முடியாமல் தானும், தன் கணவனும் மட்டுமாய் தனித்து காலத்தைக் கடத்தியாகி விட்டது. அதிலும் கணவர் இறந்ததும், தன்னாலும் மகனுடனும் சென்று இருக்க முடியாமல், மகனும் தன் உத்தியோகம் காரணமாக அங்கிருந்து வர முடியாமல் அது எல்லாமே நரகமான நாட்கள் எனலாம்.

Advertisement

 

Advertisement

 

அந்த காலகட்டத்தில் பல நாட்கள் வீட்டிற்குள் முடங்கிய சம்பவங்களும் நடந்திருக்கிறது.

Advertisement

 

 

ஆனால், மகன் பரமேஸ்வரன் இங்கு வந்து அவனது உயிரைத் துறந்ததை நினைத்தால், அதற்குத் தான் அந்த தனிமை சிறையிலேயே அடைந்திருக்கலாமோ என்று பலமுறை தோன்றும். ஒருவேளை மகன் இங்கு வராமல் இருந்திருந்தால், எங்காவது ஓரிடத்தில் உயிர் வாழ்ந்து கொண்டாவது இருந்திருப்பான் என்று நினைக்க நினைக்க அந்த அன்னையின் மனபாரம் அதிகமாகும்.

 

 

அல்லது, மகன் ஒருவேளை தங்களுக்குப் பிடிக்காத பெண்ணை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால், பட்டாளத்து வேலைக்கு போயே தீருவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் இருந்திருந்தால் தங்களுடனேயே இருந்திருப்பான்.

 

 

இல்லை தன் கணவர் இறந்ததும் இங்கு வந்திருந்தாலாவது அப்பொழுதே ஊர்த்தலைவர் பொறுப்பை எடுத்திருந்திருப்பான்.

 

 

ஆனால், இரண்டும் நடக்காமல் போனதை என்னவென்று சொல்வது? எல்லாம் விதியைத் தவிர வேறு என்னவாக இருக்கும்.

 

 

தந்தை இறந்தவுடன் பரமேஸ்வரனால் திடீரென்று தன் உத்தியோகத்தை உதறி வரமுடியாமல் போயிருக்க, தன் சிறுவயது தோழன் என்பதனால் ஊர்த்தலைவர் பதவிக்கு நிற்கும் பொறுப்பை மாரியப்பனுக்குத் தந்திருந்தான். அப்பொழுது கணவரை இழந்த சூழலிலிருந்த ராஜேஸ்வரி அம்மாளும் பெரிதாக எந்த முடிவிலும் தலையிடும் நிலையில் இல்லை என்பதால், அனைத்தும் மாரியப்பன் தரப்பிற்கு வசதியாகப் போய்விட்டது. பரமேஸ்வரன் செய்த மிகப்பெரிய பிழையும் அதுவே!

 

 

ஆரம்பத்தில் நல்லவன் போல நடித்த மாரியப்பனின் சுயரூபம் வெளிப்படச் சிலகாலம் பிடித்தது. அதற்குள் பல மோசடிகள் நடந்திருந்தது. ஊருக்கென்று கிடைத்த பல சலுகைகளில் ஊழலே பிரதானமாக இருந்தது. பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே இல்லை என்னும் நிலை வந்திருந்தது.

 

 

ஒருவழியாக ஊர் பெரியவர் சின்னச்சாமி ஐயா என்பவர் தான் மாரியப்பனின் முறைகேடுகளைக் கண்டுபிடித்தார். அதை எதிர்க்கவும் துணிந்தார்.

 

 

சின்னச்சாமி ஐயாவிற்குத் தான் கண்டுபிடித்த புகார்களை பரமேஸ்வரன் ஐயாவிடம் தான் கூற வேண்டும் என்னும் நிலை. ஏனென்றால் மாரியப்பனை எதிர்க்குமளவு இந்த ஊரில் செல்வாக்கானவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை.

 

 

ஆனால், பரமேஸ்வரன் ஐயாவிடம் இந்த விஷயத்தை எப்படிக் கூறுவது? அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவரின் நண்பரைப் பற்றி அவரிடமே எப்படி ஆதாரம் இல்லாமல் சொல்ல முடியும்?

 

 

ஆகையால், அதிக சிரமங்களுக்கிடையில் தன்னால் முடிந்த ஆதாரங்களை எல்லாம் திரட்டி, பரமேஸ்வரன் ஐயாவைத் தொடர்பு கொண்டு, அவரிடம் அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைத்தார்.

 

 

பட்டாளத்தில் நல்ல பதவியில் வேலைபார்த்துக் கொண்டிருந்த பரமேஸ்வரன் இந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டுப் பலத்த அதிர்ச்சி அடைந்தார். தன் நண்பன் தனது நம்பிக்கைக்கு ஏற்றார் போல நடக்கவில்லையே என்னும் ஆதங்கமும், கோபமும் அவர் மனதில் கனன்றது.

 

 

நாம் எதுவும் தலையிடாமல் இருந்திருந்தால், ஊர் மக்களே ஒரு நல்ல தலைவரைத் தேர்ந்தெடுத்திருக்கக்கூடும். அதைவிடுத்து நாம் ஒருவரைக் கைகாட்டி, ஊருக்கே கெடுதல் செய்து விட்டோமே என்னும் குற்றவுணர்வில் பெரிதும் தவித்தார்.

 

 

விரைவில் இதற்கு ஒரு தீர்வை ஏற்பாடு செய்கிறேன் என்று சின்னச்சாமி ஐயாவிடம் கூறிய பரமேஸ்வரன், அடுத்த சில மாதங்களில் தனது பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

 

 

ஊருக்கு வந்ததும், முதல் வேலையாக மாரியப்பனின் குற்றங்களை எல்லாம் நிரூபித்து, அவருக்குத் தண்டனை வாங்கி தந்து, பதவியிலிருந்து விலக வைத்தே ஓய்ந்தார்.

 

 

அதன்பிறகு ஊர்த்தலைவர் பதவியில் தானே நின்று வெற்றி பெற்ற பரமேஸ்வரன், பிரச்சனைகளை ஒவ்வொன்றாகத் தீர்க்க தொடங்கியிருக்க, எல்லையற்ற கோபத்திலிருந்த மாரியப்பன் தனது சதியின் மூலம் அவரை கொன்றிருந்தான்.

 

 

கணவரின் இழப்பையே தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த ராஜேஸ்வரி அம்மாள் மகனின் இழப்பில் உடைந்து போனார்.

 

 

மாரியப்பனை போன்ற பாம்பிற்குப் பால் வார்க்காமலிருந்திருந்தால், இந்தளவு பிரச்சினை வந்திருக்காதே என்று ராஜேஸ்வரி அம்மாள் வருந்தாதே நாளே இல்லை. அது அவ்வப்பொழுது அவருடைய வார்த்தைகளில் ஆதங்கமாகவும் வெளிப்படும்.

 

 

ஆள்பலம், பணபலம் எல்லாம் இருந்தும் அந்த மாரியப்பனை எதுவுமே செய்ய முடியவில்லையே என்னும் இயலாமையும் அவரது மனதை வெகுவாக வருத்தும்.

 

 

இதையெல்லாவற்றையும் விட, பேரனுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்ற தவிப்பும் அவருக்கு ஒருபுறம் இருக்கத்தான் செய்யும். பேரனின் வீரமும், துடிப்பும் தெரியும் என்றாலும், இது அவருக்குள் இருக்கும் இனம்புரியாத பயம். ஏற்கனவே மகனை இழந்ததால் வந்த முன்னெச்சரிக்கை உணர்வு என்று கூடச் சொல்லலாம். தன் பேரனிடம் கூட இதுவரை காட்டிக் கொண்டதில்லை.

 

 

கடந்த கால சுமைகளை அசைபோட்டபடி அமர்ந்திருந்த ராஜேஸ்வரி அம்மாளுக்கு நேரம் போனதே தெரியவில்லை.

 

 

வெற்றிச்செல்வன் குளித்து, கிளம்பி உணவு மேஜைக்கு வர, பணியாளர்கள் மட்டுமே இருந்தனர்.

 

 

“அப்பத்தா எங்க இருக்காங்க?” என்றான் சுற்றியும் பார்வையைச் சுழலவிட்டபடி.

 

 

“அம்மா இன்னும் ரூம்ல இருந்து வரலைங்க சின்னய்யா”

 

 

“ஓ…” என்றவன், தனது வேக எட்டுகளில் பாட்டியின் அறையை அடைந்து மெதுவாகக் கதவினை தட்டினான். எந்த பதிலும் கிடைக்கவில்லை. சற்றே வேகமாகத் தட்ட, தன் யோசனையில் மூழ்கியிருந்த ராஜேஸ்வரி அம்மாளின் கவனம் இன்னமும் சிதறவில்லை.

 

 

யோசனையும், மெல்லிய பயமும் வர “அப்பத்தா…” என்றவாறே அறையின் கதவைத் திறந்து உள்ளே சென்றான்.

 

 

எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும் தான் ஆசுவாசமே வந்தது. “அப்பத்தா உங்களை ரொம்ப நேரமா கூப்பிட்டுட்டே இருக்கேன். என்ன யோசனை?”

 

 

“கண்ணு வாய்யா…”என்றார் அவனைத் தாடையைத் தடவிய வண்ணம் வாஞ்சையாக. குரல் கரகரப்பாக இருக்கவும்,

 

 

“என்ன அப்பத்தா?” என்றான் வெற்றிச்செல்வன் ஆறுதலாக.

 

 

“உங்க அப்பன், அப்பாரு நியாபகம் கண்ணு. உனக்கு ஒரு நல்லதை நடத்தி வெச்சு பார்க்கிற கொடுப்பினை அவங்களுக்கு இல்லாம போயிடுச்சே” என்றவரின் முகமே வாடியிருந்தது.

 

 

“அப்பத்தா… அவங்க எங்கேயும் போகலை. நம்ம கூட தான் இருந்து வழி நடத்துவாங்க. கண்டதையும் யோசிக்காம சாப்பிட எழுந்து வாங்க”

 

 

“ஏன் கண்ணு ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?”

 

 

“சொல்லுங்க அப்பத்தா”

 

 

“அந்த டீச்சர் பொண்ணு பத்தி நல்லா தெரியும் தானே? தெரிஞ்சுகிட்டு தானே கல்யாணம் செஞ்சுகிட்ட… அது… எப்படிக் கேட்க? அவ மாரியப்பன் ஆளு இல்லை தானே? நல்லா விசாரிச்சுட்ட தானே?”

 

 

மகனின் இழப்பு ராஜேஸ்வரி அம்மாளை பெரிதாகப் பாதித்திருந்தது. அதனால் தான் பேரனின் விஷயத்தில் அத்தனை முன்னெச்சரிக்கை. வெற்றிச்செல்வனுக்கும் செந்தாமரைக்கும் காதல் என்று வதந்தி பரவவும், ஒருவேளை இது மாரியப்பனின் சதியோ, அதில் பேரன் மாட்டிக் கொண்டானோ என்ற அச்சம் பிறந்து விட்டது. அதற்கேற்றாற்போல் வெற்றியும், செந்தாமரையோடு பள்ளியில் தனித்துப் பேசியிருக்க, உடனடியாக செந்தாமரை கர்ப்பம் என்ற நாடகத்தை அரங்கேற்றி விட்டார். ஆனால், அதன் பின்னர் தெரிய வந்த விஷயங்கள் எல்லாம் அவர் முற்றிலும் எதிர்பாராதது.

 

 

பேரனின் திருமணம் முடிந்து விட்டது என்பது ராஜேஸ்வரி அம்மாளுக்குப் பலத்த அதிர்ச்சி. எல்லையற்ற கோபம் கூட கனன்றது. இத்தனை நாளாய் பேரன், திருமணத்திற்கு மறுத்ததன் பின்னணி இதுதானா என்று ஆத்திரம் அடைந்தார்.

 

 

ஆனாலும், மொத்த கோபத்தையும், ஆத்திரத்தையும் பேசியே பேரன் செல்லாக்காசாக்கி விட்டான். இப்பொழுது செந்தாமரையை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருந்தது. இருந்தாலும் மனதோரம் உறுத்திய விஷயத்தைப் பேரனிடம் கேட்கத் தோன்றியது. அதனால் தான் அப்படிக் கேட்டார்.

 

 

வெற்றியோ ஆத்திரப் படாமல், “அப்பத்தா கண்டதையும் யோசிச்சு குழம்பிக்காதீங்க” என்றான் அழுத்தம் திருத்தமாக.

 

 

“நீங்க என்னை எப்படி நம்பறீங்களோ அவளையும் அப்படி நம்பலாம் அப்பத்தா. இப்போ சாப்பிட போகலாமா?” என்று கூற,

 

 

“நீ படிச்சவன். உனக்குத் தெரியாதது இல்லை.கவனமா மட்டும் இருந்துக்கய்யா” என்று சொன்னவர் சற்று இயல்புக்குத் திரும்பி உணவுண்ண அவனோடு சென்றார்.

 

 

வெளியில் காரோட்டி பாண்டி, வாகனத்தோடு தயாராக இருக்க, வீரமணியும் வந்து சேர்ந்தான்.

 

 

“என்ன அண்ணே இன்னைக்கு பளிச்சுன்னு இருக்கீங்க?” வீரமணியிடம் பாண்டி வரவேற்பாய் கேட்க,

 

 

பளீரென்ற புன்னகையுடன், “தேங்க்ஸ் டா” என்றான் வீரமணி.

 

 

“உங்களைப் பார்த்தா யாரும் நாப்பது வயசுன்னே சொல்ல மாட்டாங்கண்ணா. அம்புட்டு இளமையா இருக்கீங்க” என்று பாண்டி மீண்டும் சிரிக்க,

 

 

“டேய் எனக்கு முப்பத்தி ரெண்டு தான் டா ஆச்சு” என்று பல்லைக் கடித்தான் வீரமணி.

 

 

“எல்லாம் ஒன்னு தான ண்ணே…”

 

 

“டேய் முப்பத்தி ரெண்டு எங்க இருக்கு. நாப்பது எங்க இருக்கு”

 

 

“அட போங்கண்ணே! இன்னும் உங்களுக்கு விவரம் போதலை. இதுக்கு தான் கால காலத்துல கல்யாணம் செய்யணும்ங்கிறது”

 

 

‘பொண்ணு எங்கடா கிடைக்குது’ என மனதிற்குள் நொந்த வீரமணி, “டேய் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கும் முப்பத்தி ரெண்டு நாப்பது ஆகறதுக்கும் என்ன டா சம்மந்தம்? என்கிட்ட வீணா அடி வாங்காத” என்று மிரட்டல் குரலில் கூறினான்.

 

 

“ஓ அதானா சங்கதி… நீங்க இம்புட்டு கோபப்படறதுலயே தெரியுது பிபி, கொலஸ்ட்ரால் எல்லாம் வந்திருக்கும் போலயே! இனி எவன் பொண்ணு கொடுப்பான்” என்று பாண்டி கேலியாகச் சொல்ல,

 

 

“அடேய் எனக்கு எவனும் பொண்ணே, கொடுக்க வேண்டாம். உன்னை சாத்தற சாத்துல இனி நீ வாயே திறக்கக் கூடாது” என்று அருகிலிருந்த கட்டையைத் தூக்கிக் கொண்டு அவனைத் துரத்த ஆரம்பித்தான்.

 

 

பயந்து ஓடிய பாண்டி அப்பொழுதும் சும்மா இருக்காமல், “வயசான காலத்துல ஓடாதீங்கன்னா…” என்று அந்த நிலையிலும் வம்பு வளர்க்க, “அடேய் உன்னை….” என ஆவேசமாய் அவனை நெருங்கியிருந்தான் வீரமணி.

 

 

நல்ல வேளையாய் ராஜேஸ்வரி அம்மாளும், வெற்றிச்செல்வனும் சரியான நேரத்திற்கு வந்து அவர்களின் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

 

 

அவர்கள் நால்வருடன் ஒரு பணிப்பெண்ணுமாய் சேர்ந்து, ஐவரைச் சுமந்த வாகனம் செந்தாமரை தங்கியிருக்கும் வீட்டை நோக்கிப் பயணப்பட்டது.

 

 

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!