Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ12_1 – செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி-12_1

 

இன்று போல் அன்றைய இரயிலில் அத்தனை வேகமில்லை. இரண்டு இரவுகள் ரயிலில் கழிக்க வேண்டும். சுமார் முப்பது மணி நேரப் பயணம். ரயில் பயணம் முடியும் முன் அருகிலிருக்கும் குடும்பத்தோடு உணவு பரிமாறிக்கொள்ளும் அளவு நெருக்கம் ஏற்பட்டுவிடும்.

 



Advertisement

இரயில் பயணம் தொடர்ந்தது. முதியவரின் பேரன் துளசியோடு ஒன்றிக் கொண்டான். அவனோடு பேச… அவன் விளையாட அழைக்க ஆடு புலி ஆட்டம் விளையாட ஆரம்பித்தனர். இருவர் ஆரம்பிக்க… பின் இவளோடு மூர்த்தியும் சிறுவனோடு முதியவரும் சேர்ந்துகொள்ள ஆட்டம் களைகட்டியது.

 

சிறுவன் ஏதேதோ விளையாட்டெல்லாம் வைத்திருக்க இருவரும் அதில் மூழ்கிவிட்டனர். சிலதில் மூர்த்தியும் சேர்ந்துகொள்ள நேரத்தை நெட்டி தள்ள வேண்டியிருக்கவில்லை.

Advertisement

 

Advertisement

முதியவர் மூர்த்தியோடு பேச.. அவருக்கு மூர்த்தியைப் பிடித்து போனது. நேற்று எழுந்த எண்ணம் எல்லாம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. தானாக பேச்சில் ஒரு மரியாதை எட்டிப் பார்த்தது.

 

முதியவர் பேசும் பொழுது மூர்த்தியை ‘சார்’ போட்டே பேச.. சிறுவனும் அப்படியே அழைக்க.. அவளுக்குத் தான் அவனை எப்படி அழைப்பதென்ற பெருத்த சந்தேகம் தீரவில்லை. ‘சார்’ என்று தள்ளி வைக்கமுடியவில்லை. ‘மூர்த்தி’ என்று அழைக்க வரவில்லை.

Advertisement

 

நேரம் கரைந்தது. விளையாட்டுகள் முடிந்தது. சிறுவன் தூங்கிவிட வெளியே பார்த்திருந்தாள். பழைய குப்பையைக் கிளறவில்லை. அது எல்லாம் நினைக்கக் கூட தகுதியில்லாத ஒன்று! மூர்த்தி விளக்கியிருந்தான்.

 

பொழுது போகவில்லை. பொழுதைக் கழிக்கத் தெரிந்த ஒரே வழி உறங்குவது. அவளுக்குத் தூங்கப் பயம். சாய்ந்து அமர்ந்திருந்தவள் பார்வை அருகிலிருந்தவனை நோட்டமிட அவனோ உலகம் மறந்து புத்தகங்களோடு மூழ்கிப் போயிருந்தான். பாடப் புத்தகம் போல் தான் தெரிந்தது. வந்ததிலிருந்து அவளும் பார்க்கத் தானே செய்கிறாள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் புத்தகமும் கையுமாய் இருப்பதை. ஏனாம்? அவனைப் பார்த்தால் மாணவன் போலில்லை. ‘என்னத்த தான் மாஞ்சு மாஞ்சு படிக்கிறார்?’ மெல்ல எட்டி பார்த்தாள். கணக்கு புத்தகம். அருகிலிருந்த புத்தகங்களும் கணக்கு புத்தகங்கள் தான்.

 

‘ஓ.. பாவம் அரியர் கேஸ் போல… எக்ஸாமுக்கு படிக்கராரோ என்னமோ.. எத்தனை வருஷ அரியரோ?’ அருகிலிருந்த அரியர் கேசுக்காக மனம் வருந்தியது.

 

வெளியே வேடிக்கை பார்த்து பொழுது போகவில்லை. நன்றாகப் படித்த பெண். மனம் அருகிலிருந்த புத்தகங்களைச் சுற்றி வந்தது! அதை ஏந்திக் கொண்டிருந்தவனையும்!!

 

‘பாவம் ரொம்ப திணறுறார் போல… வேணும்னா படிச்சு ஹெல்ப் பண்ணலாம்.. உனக்கு இவ்வளவு பண்ணியிருக்கார். இது கூட நீ பண்ணலனா எப்படி? சரித்திரம் உன்ன தப்பா பேசாதா?’

 

இருவருக்கும் இடையே இருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் புரட்ட ஆரம்பித்தாள். அவள் புரட்டிய வேகத்திற்கு கிழித்து விடுவாள் என்று பயந்திருப்பான் போலும்..

 

“அதுல படம் எதுவும் இருக்காது.” என்றான்.

 

“மூர்த்தி சார்..” என்றாள் புத்தகத்திலிருந்து முகத்தை உயர்த்தி

 

‘மூர்த்தி சா..ரா..?’ வேறு எப்படி அழைக்கச் சொல்ல? தெரியவில்லை. எப்படியோ அழைக்கட்டும் என்று விட்டுவிட்டான்.

 

“ம்ம்..?”

 

“நான் ரொம்ப நல்லா படிப்பேன்” என்றாள்.

 

“சரி.. அதுக்கு?”

 

“ஓஹ்.. அது வந்து நான் ரொம்ப நல்லா படிப்பேனா.. அதுவும் கணக்கு எனக்கு ரொம்ப நல்லா வரும். கணக்கு வாத்தியாரே என்னை பார்த்தா மெரண்டுவார்ன்னா பார்த்துக்கோங்களேன்.”

 

“ஓஹ்!!? கணக்கு வாத்தியார் உன்ன பார்த்து மிரண்டுடுவார்? ம்ம் அப்புறம்..”

 

“நீங்க கவல படாதீங்க மூர்த்தி சார். எல்லாரும் மக்காவே பிறக்கிறது இல்ல. ஒழுங்கா சொல்லிக் கொடுக்க ஆள் இல்லாம போகும் போது இப்டி ஆகிடுது! நான் படிச்சு சொல்லித் தரேன். நீங்க அடுத்த அட்டெம்ட்-ல பாஸ் ஆக.. நான் ஹெல்ப் பண்றேன். நான் ட்வெல்த் பாஸ்! ஸ்கூல் ஃபர்ஸ்ட்” என்றாள் படு சிரியசாக.

 

“ஆங்? என்ன? நான் மக்கா?”

 

“ச்ச.. சா.. நான் அப்டி சொல்லுவேனா? ஃபெயில் ஆர எல்லாரும் மக்கா இருக்கணும்னு அவசியம் இல்லேன்னு சொன்னேனே கவனிக்கலியா? நான் ஸ்கூல் ஃப்ர்ஸ்ட்ன்னு சொன்னேனே.. அதையும் நீங்க கவனிக்கல! மக்குன்னு சொன்னத மட்டும் கவனிச்சு இருக்கீங்க!! நான் இருக்க வரைக்கும்.. அப்டி உங்கள நினைக்கவே விடமாட்டேன். நான் படிச்சு சொல்லி தரேன். கவலப்படாதீங்க”

 

அவள் முகத்தில் எப்படியும் அவனைத் தேற்றிவிட வேண்டும் என்ற வேகம். அள்ளி முத்தம் கொடுக்கலாம் அந்த அழகு முகத்தை. அவன் அம்மா அப்படி தான்.. மகனை எதிலுமே குறைத்து எடை போட விடமாட்டார். “உன்னால முடியும் மூர்த்தி! நீ யாருக்கும் சளைச்சவன் இல்ல! அம்மா இருக்கேன் உனக்கு. துணிஞ்சு செய்.” என்பார். அதனால் அவன் இழுத்து வைத்த வம்புகள் ஏராளம். அது வேறு கதை!

 

புன்னகைத்தவன்.. “சரி. புக்க மட்டும் கொஞ்சம் பார்த்து திருப்பு.. கிழிச்சிடாம!” என்றுவிட்டான்.

 

கூறியவள் மீண்டும் புத்தகத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். ஒவ்வொரு பக்கமாகப் புரட்டினாள். புரட்டிக் கொண்டே இருந்தாள். கண் சுருக்கி உற்றுப் பார்த்தாள். கண்ணைக் கசக்கிப் பார்த்தாள். கண்ணை முட்டை சைசிற்கு விரித்து பார்த்தாள். ஏதோ சிந்தித்தாள். மண்டையை மண்டையை ஆட்டினாள். மீண்டும் புத்தகத்தை உதடு கடித்து முறைத்துப் பார்த்தாள்.

 

அவன் திரும்பிப் பார்க்காமலே அவள் சேட்டை தெரிந்தாலும்.. சிரிப்பு வந்தாலும்… அடக்கிக் கொண்டு அவன் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பினானில்லை.

 

படிப்பாளியின் கண் தன்னால் மூடினாலும் கண்ணை முட்டை அளவுக்கு விரித்து விரித்து புத்தகத்திலிருந்த எண்களை எல்லாம் முறைத்தாள்.

 

அவன் கால் அருகில் அவள் கையிலிருந்த புத்தகம் விழ, திரும்பிப் பார்த்தான். சாமி ஆடிக்கொண்டிருந்தாள். அடுத்த இரண்டு நிமிடத்தில் அவன் தோளில் சாய்ந்து நிம்மதியான உறக்கம்.

 

‘பாடம் சொல்லித் தர மூஞ்சியும் ஆளையும் பாரு!’ புன்னகைத்துக் கொண்டவன் அசையாமல் அமர்ந்துகொண்டான், அவள் தூக்கம் கலையாத படி.. அவன் புத்தகத்தோடு.

 

கணக்கு புத்தகத்தைப் பார்த்தால், அவளுக்கு கண் சொருகும், அவனுக்குச் சகலமும் மறந்து போய்விடும். ஏனோ இந்த அறிவாளியின் மோகம் எண்களோடு!

 

இருட்ட ஆரம்பித்தது. அடுத்த நிலையத்தில் ஏதேனும் வாங்க வேண்டும் உண்ண. அவளாய் எழுந்திருப்பாள் என்று பார்த்தால் அவள் அசையவே இல்லை.

 

“சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரேன். எழுந்திரு” என்று இரவு உணவுக்கு அவன் எழுப்பும் வரை ஆனந்த சயனத்தில் அவள்!

 

“கோமல்..”

 

சத்தம் காதில் விழ அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். கை கால் நடுங்க விழித்தவள் கண்ணில் மூர்த்தி தெரிந்தான். இவர் தான் அழைத்ததா! மூச்சு மீண்டது.

 

‘அச்சோ’ என்றாகிவிட்டது அவனுக்கு! “என்ன ஆச்சு? ஏன் எதுக்கு எடுத்தாலும் இப்படி பயப்படுற?”

 

ஒற்றை அழைப்பு ஐந்து மாத வாழ்க்கையை நினைவூட்டியது. “தெரியாம பயந்துட்டேன்! ப்லீஸ் என்னை எப்படி வேணும்னா கூப்பிடுங்க… இப்படி மட்டும் வேண்டாம்.” என்றாள் வாட்டமாய்.

 

அவன் பதில் கூறவில்லை. ஏன் என்றும் கேட்கவில்லை.

 

உணவு முடிந்து விளக்குகள் அணைக்கப்பட உள்ளுக்குள் ஒளிந்திருந்த அச்சம் உச்சத்தை எட்டியது, கனவு ஏதேனும் வந்துவிடுமோ என்ற அச்சம் தான்! மாலை முழுவதும் உறங்கி விட.. இரவு உறக்கம் வருவேனா என்றது.

 

நடு பர்த்தில் அவன் படுத்திருக்க.. நேர் கீழே அவள் படுத்திருந்தாள். ரயிலின் தாலாட்டிற்கு தானாய் கண்ணயர்ந்தாள்.

 

தூக்கத்தின் நடுவில் மீண்டும் அதே அனத்தல்.. கதறல்! கீழே குதித்து அவளிடம் வந்தவன், எப்படிக் கூப்பிட என்று தெரியவில்லை. துளசி என்றால் அவளுக்குத் தெரிய வேண்டாமா?

 

அவள் கன்னம் தட்டி எழுப்பினான். கன்னம் தொட்ட விரலில் ஈரம்.

 

விளக்கை யாரோ உயிர்ப்பிக்க.. ஈர கையை பார்த்தான். மனதில் சொல்லொண்ணா சோகம். அவளைப் பார்க்க, எதிரில் குனிந்து நின்றிருந்தவனை ஒரு வகை இயலாமையோடு பார்த்து எழுந்தமர்ந்திருந்தாள். கண் கசிந்திருந்தது.

 

“யாரெல்லாமோ வந்தாங்க மூர்த்தி சார். உங்களப் பார்த்ததும் போய்ட்டாங்க போல..” என்று எச்சில் விழுங்கினாள்.

 

சட்டைப் பையில் வைத்திருந்த கைகுட்டையை எடுத்து கண்ணீரை ஒற்றி எடுத்தவன் அதை அவளிடம் கொடுத்துவிட்டு, “யாரும் இல்ல. இது ட்ரெயின். நான் இருக்கேன். பயப்படாத” என்றுவிட்டுத் திரும்பவும், அங்கிருந்த பெண்மணி முறைத்து கொண்டு நேர் எதிரே அமர்ந்திருந்தார். முதியவர் நடு பர்த்திலிருந்து நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்.

 

“தம்பி… நீங்க பண்றது சரியே இல்ல. அந்த பொண்ண நீங்க என்ன பண்றீங்க? அது ஏன் பயந்து பயந்து கத்துது? அந்த பொண்ணு உங்களுக்கு என்ன வேணும்?”

 

என்ன சொல்லி சமாளிப்பது? கண்டு கொள்ளாமல் நடு பர்த்தை இறக்கியவன் அவளருகில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டான்.

 

“பயப்படாத” என்றான். அவன் முகத்தில் தூக்கக் களைப்பு.. அதையும் விட அவள் நிலை.. யோசனையில் அவன் முகம் சற்று கடினமாய் தெரிந்தது.

 

“ரொம்ப சாரி. எனக்கே தெரியாம தான் சத்தம் போட்டுட்டேன். நிஜமாவே அவன் வந்த மாதரி இருந்துது. பயத்தில கத்திடேன் போல… என்னால உங்களுக்கு பிரச்சனை” என்றாள்.

 

அவன் கடின முகமும் அவள் கெஞ்சும் முக பாவமும் மட்டுமே தெரிய… பெண்மணிக்குக் கோபம் மூண்டது.

 

“தம்பி.. உங்கள தான்!” என்றார் சத்தமாக

 

மூர்த்தி இழுத்துப் பிடித்த பொறுமையோடு, “என்ன மேடம் உங்க பிரச்சினை? அவளே எதையோ பார்த்திட்டு ரெண்டு நாளா பயந்து போயிருக்கா.. நீங்க வேற சும்மா குறுக்கு விசாரணை பண்ணிக்கிட்டு! என்ன தெரியணும் உங்களுக்கு?” என்றான் காட்டமாக.

 

என்ன நினைத்தாரோ, “இல்லப்பா.. தூக்கம் கலையுதில்ல அதுதான். உன் வீட்டம்மாவ பக்கத்தில இருந்து நீ கவனிச்சுக்கோ பா..” கூறிவிட்டு விளக்கை அணைக்க, இருவரை தவிர அனைவரும் மீண்டும் அவரவர் இடத்தில் கட்டையை நீட்டினர்.

 

அருகருகே அமர்ந்திருந்தாலும் பேசவில்லை. இருவரும் இரவை வெறித்தனர். ‘இருட்டிலிருந்து இவளை எப்படி மீட்பது’ என்பது அவன் எண்ணம்.

 

‘இருட்டில் மூழ்கிப் போய்விடுவேனோ’ என்பது அவள் பயம்.

 

“எனக்குப் பைத்தியம் பிடிச்சிடுமா?”

 

அவளின் கேள்வி அவன் எண்ணவோட்டத்திற்கு தற்காலிக விடுமுறை கொடுக்க, “இல்ல… கொஞ்சம் நாள்ல சரி ஆகிடும். வீட்டுக்குப் போய் பேசலாம். இத எல்லாம் வெளியில பேச கூடாது”, என்றான்.

 

“நான் யாரையுமே நினைக்கல… பழச மறக்க தான் நினைக்கிறேன். இருந்தாலும் படுக்கவே பயமா இருக்கு.”

 

தைரியமான பெண் தான். கடக்க முடியாத பாதை எல்லாம் கடந்தவள் தான். இது அவளையும் மீறின விஷயமாய் இருக்கவே அவளும் சமாளிக்க தெரியாமல் திணறினாள்.

 

“வா” என்று கதவின் பக்கம் அழைத்து சென்றான். ஆடைகள் பறக்க… கேசம் கலைய.. முகத்தில் சில்லென்று மோதிய காற்று நுரையீரலை நிரப்பியது.

 

அவள் முகம் தெளியவும் ஆரம்பித்தான்..

 

“இந்த பயம்… எத்தன நாளா?”

 

“முதல் தரம் அப்படி நடந்ததில இருந்தே..”

 

“படுத்தாலே வருமா?”

 

என்னவென்று கூறுவாள்… “இல்ல… அப்பப்போ..” என்றாள்.

 

“ஓரே மாதிரி கனவு வருமா?”

 

“முன்ன எல்லாம் ஓரே மாதிரி தான். ஆனா இப்போ தான் புதுசா… ஏன் கல்ல போட்ட கோமல்ன்னு கேட்டுட்டே..” எச்சில் விழுங்கினாள்.

 

சம்பவம் நடக்கும் வேளை வலி என்று தெரியும், ஆனால் இப்படி மாதக் கணக்கில் வலியை அவன் எதிர்பார்க்கவில்லை. இன்று இப்படி கதறியவள் இன்று வரை எப்படி எல்லாம் கதறியிருப்பாள். உள்ளுக்குள் பிசைந்தது.

 

“அது இருக்கத் தான் செய்யும். மனச தாக்கின விஷயம் இல்லையா… கொஞ்சம் நாள் ஆகும் சரி ஆக. நீ தனியா இல்ல… உன் கூட நான் இருக்கேன். எதனாலும் என்னைத் தாண்டி தான் உன் கிட்ட வரும். பயப்படாத!” என்றான். ஆழமான வார்த்தைகள். அவளுக்குள்ளும் ஆழமாய் இறங்கியது.

 

“நிஜமா இருப்பீங்களா? விட்டிட மாட்டீங்களே?” அவனோடு ஒட்டிக் கொள்ள நினைக்கவில்லை தான். ஆனால் வெளிச்சத்தைக் கண் நோக்கியது. குழியிலிருந்து வெளி வர விருப்பம்… பிடித்து வெளிவரக் கயிறு தேவை.. நீட்டிய கரம் மூர்த்தியினது என்றதும் பிடித்துக் கொண்டாள்.

 

“இருப்பேன். கண்டிப்பா இனிமேல் விடவே மாட்டேன்” என்றான். நிம்மதியாய் உணர்ந்தாள்.

 

“அவன் மேல கல்ல போட்டது தப்போன்னு யோசிக்கிற. அதனால தான் இந்த புது விதமான கனவெல்லாம்..”

 

“ஒரு தரம் தப்புன்னு தோணுது. ஒரு தரம் தப்பில்லன்னு தோணுது! என்ன பண்ண?”

 

“உனக்கு குற்ற உணர்ச்சி தேவையே இல்ல. ஒரு நாய் திமிரெடுத்து உன் வீட்டு பூனையை கடிச்சா… அந்த பூனை திரும்பி நின்னு பிறாண்டுமா பிறாண்டாதா?”

 

“பிறாண்டும்!”

 

“அதுக்கு நகம் இருக்கு, பிறாண்டும். அதுவே ஒரு முயல் குட்டிய அந்த நாய் கடிச்சா.. அத நீ பார்த்தா… உன் கையில சின்னதா ஒரு கல்லு இருந்தா… அந்த முயல காப்பாத்த அந்த நாய் மேல அத தூக்கி போடுவியா இல்லியா?”

 

“ம்ம்ம் போடுவேன்..”

 

“நீ செஞ்சதுதப்பு-னு அந்த நாய் சொன்னா.. நீ என்ன சொல்லுவ?”

 

“நீ முயல கடிச்சது தான் தப்பு. அதனால தான், முயல காப்பாத்த உன் மேல் கல்ல போட்டேன்னு சொல்லுவேன்! இனி மேல் கொழுப்பெடுத்து மத்த முயல் கிட்ட போகாதன்னு சொல்லுவேன்”

 

அவன் அவளை பார்த்து புன்னகைக்க அவளும் சிரித்தாள்.

 

“என்ன? சந்தேகம் போச்சா?”

 

“இதில நான் தானே முயல்?”

 

“ம்ம்”

“அப்போ நீங்க தானே கல்ல போட்டுருக்கணும்.. என்னையே போட சொல்லிடீங்க…” அவனைப் பார்த்துச் சிரிக்க..

 

“உன் முயலுக்குத் தெம்பில்ல, நீ கல்ல போட வேண்டியதா போச்சு. என் முயலுக்குத் தைரியம் ஜாஸ்தி.. ரொம்ப ஸ்ட்ராங்-கும் கூட. அதனால் தான் என் முயலே கல்ல எடுத்து போட்டுட்டா. ஆனா நானே போட்டிருக்கணும். நேரா தலையில போட்டு சாகடிச்சிருப்பேன்..”

 

தனக்காகக் கொன்றிருப்பாரா? அவள் சிரிப்பெல்லாம் போன திசை தெரியவில்லை.

 

வெளியே தெரிந்த நிழல் போன்ற காட்சி எல்லாம் வேகமாய் ஓடி மறைந்தது. நான்கு கண்களும் அதையே வெறித்தது.

 

“பஞ்சவர்ணம் கல்யாண அன்னைக்கு உங்கள பார்த்தேன்..” வெளியே பார்த்துக்கொண்டே கூறினாள்.

 

அவன் பதில் பேசவில்லை. ஏனோ அதைப் பற்றி இன்று பேசத் தோன்றவில்லை. “ம்ம்… ரொம்ப குளிருது இல்ல… உள்ள போகலாமா?” பேச்சை மாற்றினான்.

 

அருகருகே அமர்ந்திருந்தாலும் ரயிலின் சத்தம் மட்டுமே ஆட்சி செய்தது. நடு பரத்தைத் தூக்கி விடவில்லை. அவன் ஜன்னலோரம் அமர்ந்திருக்க அவள் அவன் அருகில் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தாள்.

 

“ஏன் மூர்த்தி சார்?” என்றாள்.

 

அவளுக்குத் தெரியவேண்டும் ஏன் இவருக்கு தன் மேல் இப்படி ஒரு அன்பென்று. ஒருவனை தனக்காகக் கொல்லவும் துணிவாரா? அதற்கு தனக்கு தகுதி இல்லை என்று இவருக்குத் தெரியும் தானே.. பின் ஏன்?

 

கேள்வி புரியவில்லையா… பதில் கொடுக்க தோன்றவில்லையா? அவன் பதில் கூறவில்லை! அவளும் பதிலை எதிர்பார்க்கவில்லை போலும்.. அமைதியானாள்.

 

மௌனமான நிமிடங்கள். இருவர் மனதிலும் ஒரு நிறைவு. பாரங்கள் எல்லாம் தாண்டிய நிறைவு. தனக்காக ஒரு ஜீவன் இருக்கிறது என்ற நிறைவு. அதில் காதல் என்ற வார்த்தைக்கு இடமில்லை. ‘இப்படிப் பட்ட ஒருவரை இழந்துவிட்டேனே..’ என்ற வலி மட்டும் ஓங்கி உயர்ந்து நின்றது. இருட்டில் கண்ணீர் தெரியவில்லை.

 

ஒரு சில நிமிடத்தில் அவள் தலை அவன் தோள் சாய.. திரும்பிப் பார்த்தான். தூங்கி இருந்தாள். அதிக களைப்போ.. அருகில் மூர்த்தி உள்ளான் என்ற நிம்மதியோ.. எதுவோ ஒன்று, தூங்கி இருந்தாள். சீரான மூச்சு!

 

அவள் விட்ட கண்ணீர் இன்னும் கன்னத்தில் காய்ந்திருக்கவில்லை. தோள்பட்டை நனைந்தது. அவன் இதயமும்.

 

ஜன்னல் அருகில் அமர்ந்திருந்தவன், அதில் தலை சாய்த்துக்கொண்டான். பெயருக்குக் கூட தூக்கம் வரவில்லை. மனம் கனத்தது. தூக்கத்தில் கூட ஒருத்திக்கு நிம்மதி கிடைக்காதா?

 

ரயில் ஆடிக்கொண்டே செல்ல… அவள் தலை அவன் நெஞ்சிற்கு இறங்க, அவளும் முழுவதுமாக அவனுள் இறங்கியிருந்தாள்.

 

 

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!