Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viral Meerum Nagangal

சுகமதி’யின் விரல் மீறும் நகங்கள் – 06 ( PART 02 )

 

*** மறுநாள் காலையில் கௌதம் விழித்தெழும் போது, மதன் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருந்தான். இந்த இதமான குளிரில் அதிகாலை உறக்கம் என்பது அழையா விருந்தாளி. இந்த குளிரிலும், அது தரும் சுகத்திலும், போர்வையின் கதகதப்பிலும் தன்னிலை மறந்து, தான் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் என்பதும் மறந்து வரும் உறக்கம் அரிது என்பதால் மதனின் உறக்கத்தை தொந்தரவு செய்யாமல் கௌதம் மட்டும் எழுந்தான்.

 



Advertisement

‘எப்பொழுது இங்கிருந்து விடுதலை?’ என்னும் ஏக்கத்தோடு எழுந்தவனுக்குப் பெருமூச்சு வந்தது. பல் துலக்கி, அங்கு அனைவருக்கும் பொதுவாக வைத்திருந்த காஃபியை சூடாகப் பருகினான்.

 

சுடுதண்ணீரில் எதையோ கலந்தது போலச் சுவை தான், ஆனாலும் அந்த இடத்தின் சீதோஷ்ணநிலைக்கு அது அத்தனை இதமாக இருந்தது.

Advertisement

 

Advertisement

இன்னமும் மதன் போர்வைக்குள்ளேயே சுருண்டிருந்ததைக் கண்டு ‘இந்த குளிருல சுடச்சுட குடிச்சா தான் காஃபி நல்லா இருக்கும். லேட்டா எழுந்தா இதுவும் குடிக்க முடியாதே’ என்னும் கரிசனம் எழ அவன் அருகில் சென்று, “மதன் நேரமாகுது பாரு” என மெல்ல அவனை அசைத்தான்.

 

மதன் எழும் வழியை காணோம். “நேரம் ஆகுது டா” என்ற கௌதம், அவனின் போர்வையை விலக்க நினைக்கும் நேரம் அவ்விடத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

Advertisement

 

சத்தம் எழுந்த இடத்தினில் ஆராய்ச்சியாய் பார்வையைச் செலுத்தியபடி, “அங்கே என்னடா பண்ணறானுங்க?” என்று அருகில் நின்று கொண்டிருந்தவனிடம் கௌதம் கேட்டான்.

 

“ரமேஷை காணோம் மச்சி” என்று பதில் தந்தான் அவன்.

 

“அது யாருடா ரமேஷ்?” எனச் சட்டென்று நினைவில் வராமல் கௌதம் யோசனையாகக் கேட்க,

 

“டேய், ஒருத்தன் உசரமா, மாநிறமா இருப்பானே? அவன்கூட திருடன் டா. ‘நான் உள்ளே போய் வெளியில வராத வீடே இல்லை. என்னையவே அடைச்சு வெச்சு இருக்கானுங்க. இவனுங்களுக்கு என்னைப் பத்தியும், என் திறமையைப் பத்தியும் தெரியலை’ன்னு அப்பப்ப வீராப்பா பேசுவானே?” என்று மற்றவன் இவனுக்கு நினைவு படுத்த,

 

“அட ஆமா ஆமா, அந்த திருட்டு ரமேஷ். சரி அவனுக்கு என்ன ஆச்சு?” என்று யாரைப்பற்றிக் கூறுகிறான் எனப் புரிந்த விதமாகப் பதில் கேள்வி கேட்டான் கௌதம்.

 

“யாருக்குத் தெரியும் மாப்பிள்ளை? காலையில இருந்து காணோமாம்”

 

“அப்படின்னா அவன் வெறும் வாய்ச்சவடால் இல்லையா? இங்கிருந்து தப்பிச்சுட்டானா?” என்று கேட்ட கௌதமின் விழிகள் கனவில் மின்னியது. ‘இங்கிருந்து தப்பிக்க வழி இருக்கிறது’ என அவனுக்குப் புரிய அப்படியொரு மகிழ்ச்சி. ‘இதை மதனும் தெரிந்து கொண்டால் எவ்வளவு மகிழ்வான்?’ என்று ஆனந்தம் அடைந்தான்.

 

அவனது ஆசையையோ, எதிர்பார்ப்பையோ கவனிக்காத மற்றவன், “யாருக்குத் தெரியும்?” என்று கூறிவிட்டு, “சரி மதன் ஏன் இன்னும் எழலை?” என்றான் கேள்வியாக.

 

“அவனை எழுப்ப தான் நினைச்சேன். அதுக்குள்ளே பேசிட்டு நின்னுட்டேன். இரு எழுப்புவோம்” என்று மற்றவனிடம் கூறியபடி, மதனின் போர்வையை விளக்கிய கௌதம், “நேரம் ஆகுதுடா” எனக் கூற, மதன் நடுங்கிக் கொண்டு படுத்திருந்தான்.

 

மதனது தோற்றத்தில் பதற்றம் எழ, “டேய் என்னாச்சு டா?” என அவனின் நெற்றி, கழுத்தில் கவலையுடன் கைவைத்துப் பார்த்த கௌதம், “என்னடா இப்படி கொதிக்குது” என அச்சத்தோடு கேட்டான்.

 

ஆனால், பதில் கூறும் நிலையில் மதன் இல்லை. ஏன் சுயநினைவு இருந்தது போலக் கூட தெரியவில்லை. கௌதமின் பதற்றத்தில் மற்றவனும், “என்னடா இப்படி ஜன்னி வந்த மாதிரி நடுங்கறான்” என்று கவலையாகக் கேட்டான்.

 

“எனக்கும் ஒன்னும் புரியலை டா. ராத்திரி தூங்கும்போது கூட நல்லா தான் இருந்தான்”

 

“இப்ப என்ன பண்ணறது டா?”

 

“எனக்கும் புரியலையே” என்றான் கௌதம் கவலையுடன்.

 

அதற்குள் ஆஜானுபாகுவான ஆட்கள் நான்கைந்து பேர் வந்து, “என்ன இங்க கூச்சல்?” என்று அதட்டல் போட, அவ்விடமே நிசப்தமானது.

 

“போங்க சீக்கிரம் குளிச்சுட்டு வாங்க” என விரட்ட, சிலர் எதிர்த்துப் பேசும் திராணியற்று வேகவேகமாக குளியலறை நோக்கி ஓடினர்.

 

அப்பொழுதும் ஒருசிலர் கலக்கமாக இருக்க, “என்ன யோசனை உங்களுக்கெல்லாம்?” என்றான் அதட்டலாக ஒருவன்.

 

‘சொல்லலாமா, வேண்டாமா என்று சிலர் தயங்கிய போதும், சிறிது நேரத்தில் ஆட்களின் எண்ணிக்கையைச் சரிபார்ப்பார்கள் அப்பொழுது மாட்டிக் கொள்வோமே’ என்னும் எண்ணம் தோன்ற, தயங்கியபடி, “ரமேஷை காலையிலிருந்து காணோம் சார்” என்றான் ஒருவன் வெகுவாக தயங்கியபடி.

 

“ஓ, அவன் பேரு ரமேஷா?” என்றவன் ஆர்ப்பாட்டமாகச் சிரித்துவிட்டு, “அவன் வர இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அவனுக்கு ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு. நீங்க உங்க வேலையை கவனிங்க” என்று மற்றவர்களை ஏவினான்.

 

நடுங்கியபடி நகர்ந்து விட்டனர் அவர்கள். மேற்கொண்டு கேள்வி கேட்கும் துணிச்சல் அவர்களுக்கில்லை.

 

கௌதமும், இன்னொருவனும் நிற்பதைக் கண்டவர்கள், “உங்களுக்கு என்ன?” என்று அதட்டல் போட,

 

“அது மதனுக்கு திடீர்ன்னு காய்ச்சல் அதிகமாயிடுச்சு. சுயநினைவோட கூட இல்லை” எனத் தயக்கமாக கௌதம் இழுக்க,

 

தன் அழுத்தமான, கம்பீரமான வேக எட்டுகளில் அவர்களை நெருங்கிய ஒருவன் மதனைப் பரிசோதித்தான்.

 

“என்ன ஆச்சு திடீர்ன்னு? எப்படி இவ்வளவு காய்ச்சல் வந்தது?”

 

“தெரியலை சார்”

 

“டேய் இவனுக்கும் ஒரு பெட் ரெடி பண்ண சொல்லுங்கடா” என்று தன் கூட்டாளிகளிடம் கூறியவன், எளிதாக மதனைத் தூக்கி தோளில் கடத்தி நடக்கத் தொடங்கினான். இத்தனை இலகுவாக அவன் மதனைத் தூக்கியதை வாயைப் பிளந்து பார்த்தபடி நின்றிருந்தனர் மற்றவர்கள்.

 

கண்காணிப்பாளர்களில் இருவர் மதனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்க, மீதமிருந்தவர்கள், “சீக்கிரம் கிளம்பி வாங்க” என்கிற அதட்டலோடு அங்கிருந்து நகர்ந்தனர்.

 

அவர்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்ததும் தான் அனைவருக்கும் மூச்சே வந்தது.

 

கௌதம் மட்டும் வெகுவாக குழம்பினான். ‘ரமேஷை எப்போ டாக்டர் கிட்ட கூட்டிட்டு போனாங்க? அவன் அப்ப இங்கிருந்து தப்பிக்கலையா? அவனுக்கு என்ன ஆகியிருக்கும்? மதனுக்கு ஏன் திடீர்ன்னு காய்ச்சல் வந்தது?’ மனதில் ஏற்கனவே அணிவகுத்து நிற்கும் விடையறியா கேள்விகளின் அணிவகுப்பில் இந்த கேள்விகளும் இணைந்து கொண்டன.

 

எதுவும் செய்ய முடியாத, தெரிந்து கொள்ள முடியாத இயலாமை பெருமூச்சுடன், அன்றைய நாளினை தொடங்க சென்றான்.

 

இரண்டு தினங்கள் தீவிர சிகிச்சையிலிருந்தும் காய்ச்சல் குறையாமல் சிரமப்பட்ட மதன், அதன்பிறகு மெல்ல மெல்லச் சுயநினைவிற்குத் திரும்பினான். இன்னமும் மயக்கம் முழுவதும் தெளியாத நிலை. மனம் விழித்துவிட்ட போதும் உடலின் பாகங்கள் இயங்க சிறிது நேரம் பிடித்தது. இமைகளைக் கூட பிரிக்க முடியாத நிலையிலிருந்தான்.

 

சிறிது சிறிதாக மனம் விழித்திருக்க, அங்குக் கேட்ட பேச்சு சத்தத்தில் கவனம் பதித்தான்.

 

“என்ன டாக்டர், காப்பாத்தறது சிரமமா?” என்றது ஒருவனின் குரல்.

 

“விடுடா இவன் எல்லாம் உயிர் வாழ்ந்து என்ன சாதிக்க போறான்?” என்று கோபத்தில் கத்தினான் இன்னொருவன்.

 

“காப்பாத்த தான் முயற்சி செய்யறேன். உடம்பு முழுக்க காயம்? ஹாஸ்பிடல்ல வெச்சு ட்ரீட்மெண்ட் பார்க்கலாமா?” என்று கேட்டது மருத்துவரின் குரலாக இருக்க வேண்டும்.

 

ஏற்கனவே கத்திக் கொண்டு இருந்தவன், “அதெல்லாம் முடியாது டாக்டர். தப்பிச்சுட்டா என்ன செய்ய?”

 

“சரி மேற்கொண்டு உங்க விருப்பம்”

 

“இல்லை டாக்டர். இந்த இடத்தை விடப் பாதுகாப்பு வேற எதுவும் இல்லை. இவனுங்கள இங்கதான் வெக்க சொல்லி நமக்கு இன்ஸ்டரக்ஷன்ஸ்” என்று பொறுமையாகக் கூறினான் முதலாமவன்.

 

“அப்ப காப்பாத்தற சான்ஸ் கம்மி தான்”

 

“நீங்க கேட்கற எல்லா பெசிலிட்டீஸ்’யும் (facilities) அரேஞ் செஞ்சு தந்துடறோம் டாக்டர்”

 

“ஓ காட். படிச்சவங்க மாதிரி பிஹேவ் பண்ணுங்கப்பா. இங்க கஷ்டம்”

 

“டாக்டர் முடிஞ்சா காப்பாத்துங்க. இவனுங்க எல்லாம் உயிர் வாழ்ந்து யாருக்கும் லாபம் இல்லை. இவனுங்களால மத்தவங்க கஷ்டப்பட்ட வரை போதும்” என்றான் ஆத்திரக்காரன்.

 

“ஷ்… நீ அமைதியா இருடா” என்று அவனை அடக்கிய முதலாமவன், மருத்துவரிடம், “எதுக்கும் இன்னும் ரெண்டு நாள் பார்ப்போம் டாக்டர். உங்களால முடிஞ்சவரை ட்ரை பண்ணுங்க. நம்ம ஷிடுவேஷன் (situation) உங்களுக்குத் தெரியும் தானே?” என்று தன்மையாகவே கேட்டான்.

 

அவன் எதற்காகக் கவலைப் படுகிறான் என்பது புரிந்தது போல, “டோன்ட் வொரி. எனக்கும் புரியுது. கண்டிப்பா மேற்கொண்டு ப்ரோஸீட் பண்ண வழி கிடைக்கும். இவனோட ட்ரீட்மெண்ட்’லயும், நீ கவலை படற விஷயத்துக்கும்” என்று ஆதரவாகக் கூறினார் மருத்துவர்.

 

“இதுக்கு ஒரு தீர்வு கிடைக்கத் தான் காத்திருக்கோம் டாக்டர். கொஞ்ச நாளுல நாங்களே நேரா அப்ரோச் செய்யறதா முடிவெடுத்திருக்கோம்.”

 

“கலெக்டர் கிட்டேயா?”

 

“ஹ்ம்ம் அவரு பொறுப்புல கொடுத்துட்டா ஒவ்வொரு முடிவுக்கும் தடுமாற அவசியமே இருக்காது டாக்டர்”

 

“ஏன் இப்போவே அப்ரோச் செய்ய வேண்டியது தானே?”

 

“அவரு கவனம் வேற விஷங்கள்ல இருக்கு டாக்டர். அதைச் சரி பண்ணட்டும். அதுதான் அவருக்கு ரொம்ப முக்கியம்”

 

“ஆமா, நமக்கும் அந்த வேலைகள் ரொம்ப முக்கியம்” என்றார் மருத்துவர். அவர் முகத்திலும், குரலிலும் வேதனையின் சாயல்.

 

“நாம நிதர்சனத்தை ஏத்துக்கிட்டு தான் ஆகணும் டாக்டர்” என்று ஆதரவாகக் கூறியவன், சிறு தலையசைப்புடன் விடைபெற்று மற்றவனுடன் அங்கிருந்து நகர்ந்தான்.

 

பேச்சுவார்த்தைகள் செவியில் விழ, எதுவுமே புரியாமல் வெகுவாக குழம்பினான் மதன். அதிலும் கலெக்டர் அது இதென்று பேச்சுவார்த்தைகள் வர, ‘என்ன நடக்கிறது இங்கு? இது என்ன இடம்? இவர்களுக்கு ஏன் நம்மைக் கொல்லும் ஆத்திரம்? இதில் கலெக்டர் எங்கிருந்து வருகிறார்?’ என எதை எதையோ யோசித்துக் குழம்பியபடி வெகுநேரம் படுத்துக்கிடந்தான்.

 

குழப்பம் மட்டுமே மிஞ்சியது. எதற்கும் விடை கிடைக்கும் போலத் தெரியவில்லை. தலை பாரமாவதைப் போன்று உணர்ந்தவன், நெற்றியைச் சுருக்கி, மெல்ல முணங்கினான்.

 

அவனது முனங்கலில் அவனை நெருங்கிய மருத்துவர், அவனைப் பரிசோதித்துப் பார்த்துக் காய்ச்சல் சற்று குறைந்திருப்பதை உணர்ந்தார்.

 

காய்ச்சலின் வீரியம் குறையத் தொடங்கியவனுக்கு, மனதின் பாரம் முன்பைவிட கூடியிருந்தது.

 

Sugamathi

தமிழில் எழுதுவதில் எல்லையற்ற ஈடுபாடு தோன்றுகிறது. காரணங்கள் இதுவரை பிடிபடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!