Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுதர்சன சக்கரம்

சுதர்சன் சக்கரம் – 8

சனாவின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக ஆராய்ந்தவன், அவள் கோப முகத்தைப் பார்த்து, “இதற்காக ஏன் கோபம் கொள்கின்றாய் சனா?. இது மாலினியின் வாழ்க்கை யாரை திருமணம் செய்வது என்பதை அவள் தானே முடிவெடுக்க வேண்டும்.” என்றான் சிரித்துக் கொண்டே.

அவனது முகத்தை கூர்மையாக ஆராய்ந்தவளுக்கு, தன் திட்டத்தை தெரிந்து கொண்டு புதிய ஆட்டத்தை சக்ரா ஆடுவது போல் தோன்றியது.

கோபத்தில் அவனது சட்டையைப் பற்றியவள், “உன்னை….” என்று பல்லைக்கடித்தாள்.

அவள் தன் சட்டையை இழுத்தது தான் சாக்கென்று அவளின் அருகே மிகவும் நெருங்கி வந்தவன், “ம்…. என்னை….” என்றான் கிறக்கமாக.



Advertisement

“சீ….” என்று முகத்தை சுழித்தபடியே அவனது சட்டையை விட்டவள், “என் வழியில் குறுக்கிடாதே சக்ரா.” என்றாள் ஆவேசமாக.

“நான் எங்கே குறுக்கிட்டேன்.” என்றபடியே தன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு, கீழிருந்து மேலாக அவளைப் பார்த்தவன், “தாத்தாவிடம் திருமணம் செய்துகொள்ளப்போவது இல்லை என்றாயாமே!. ஏன்?.” என்றான் கேள்வியாக.

அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாதவள் மூளையோ, மாலினி எங்கு சென்றிருப்பாள் என்பதையே ஆராய்ந்து கொண்டிருந்தது.

Advertisement

அவள் கவனம் இங்கில்லாததை உணர்ந்து கொண்டவன், “உன் தங்கையைப் பற்றி யோசிக்கின்றாயா?. அவளது காதலன் மிகவும் நல்லவன் தான். நான் விசாரித்துவிட்டேன். அவள் காதல் விஷயம் அம்மாவிற்கும் அத்தைக்கும் தெரிந்தால் அவ்வளவு தான். அதனால் தான் நான் இந்த ஏற்பாட்டை செய்தேன்.” என்றான் சாதரணமாக.

Advertisement

அவனைப் பார்த்து முறைத்தவள், “உன் விளக்கத்தை நான் கேட்கவில்லை. இன்று உனக்கும் அவளுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தே தீரும்.” என்று சொல்லிவிட்டு செல்லப் போனவளின் கையைப் பற்றி இழுத்தான் சக்ரா.

அவள் அதிர்ந்து பார்க்க, “அலைபேசியில் என்னிடம் என்ன கூறினாய்?.” என்றான் இப்போது முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு.

இப்போது சனாவின் முகத்தில் கேலித்தனம் மண்டிக்கிடந்தது.

Advertisement

“உண்மையைக் கூறினேன். உனக்கும் எனக்கும் நடுவில் இருந்த ஒரே பொருள் அது மட்டும் தான். இப்போது அதுவும் இல்லை.” என்று சொல்லிக் கொண்டே, அவன் இரும்பை ஒத்த கைகளில் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாள்.

ஆனால் அவன் கஜாயுதத்தை ஒத்த கைகளால் அவளது சாதாரண வெற்றிலை கொடி போன்ற கைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கோபத்தில் அவனது விரல்கள் மேலும் மேலும், அவளது கையை அழுத்தமாக பற்றின.

அவனது இன்னொரு கையோ, அவள் சுதாரிப்பதற்குள் அவளது கைப்பையை ஆக்ரோஷமாய் அபகரித்தது.

அவள் என்னவென்று உணரும் முன்னே, அதில் இருந்த பொன் தாலியை, தன் கைகளால் எடுத்தவன், அவள் கண் முன்னால் நீட்டி, “பின் இது என்ன?” என்றான் வார்த்தைகளை தன் பற்களுக்குள் கடித்து துப்பியவாறு.

அவனது செய்கைகள் ஒவ்வொன்றும் பெண்ணவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. தன் கண் முன்னால் ஊஞ்சல் போல், அவன் கையில் இருந்தபடி ஆடிக் கொண்டிருக்கும் பொன் தாலியைப் பார்த்தவள், ‘நான் இதில் வைத்திருப்பது இவனுக்கு எப்படி தெரிந்தது.’ என்று நினைத்துக் குழம்பினாள்.

“ரொம்ப யோசிக்காதே!. உன்மனதில் இப்போது என்ன ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை கூட நன் அறிவேன். நான் வேண்டாம் என்றால், நான் கட்டிய தாலியை மட்டும் ஏன் உன்னுடன் சுமந்து கொண்டு திரிகின்றாய்?.” என்றவனிடம், இருந்து தாலியைப் பிடுங்கப் போனாள்.

ஆனால் அவனோ, அது அவள் கைகளுக்குள் சிக்காதவாறு தன் உயரத்திற்கு தூக்கி பிடித்தவன், “இதற்காக தானே திருமணம் வேண்டாம் என்கின்றாய்?.” என்றான் அவளை கழுகுப் பார்வை பார்த்தபடி.

எந்த நோக்கத்திற்காக சனா கிளம்பி வந்தாளோ அந்த நோக்கம் நிறைவேறாத காரணத்தால், கோபம் அடைந்தவள் சக்ராவை நோக்கி, “எனக்கு பிடித்திருந்தால், எப்பாடு பட்டாவது அதை என்னுடன் தக்கவைத்துக் கொள்வேன். ஆனால் எனக்கு பிடிக்காத ஒன்றை நினைத்து என் வாழ்க்கையை வீணாக்க நான் ஒன்னும் மூடன் அல்ல.” என்றாள் அழுத்தமாக.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்லையே!.” என்றான் தன் நாக்கை சுழற்றியபடி.

நிமிர்ந்து அவனைப் பரத்தவள், “இத்தனை நாள் இல்லாத அக்கறை இப்போது மட்டும் ஏன் வந்தது சக்ரா. நான் இரண்டு வருடங்களுக்கு முன்பே உனக்கு மனைவி தானே!.” என்றாள் நக்கல் தொணிக்கும் குரலில்.

நீண்ட மூச்சை உள்ளே இழுத்து வெளியே விட்டவன், “அப்போது எனக்கு காதல் வரவில்லை.” என்றான் சின்ன குரலில்.

அவன் சொன்னதை எல்லாம் நம்ப சனா தயாராக இல்லை. அவன் ஏதோ புதிய விளையாட்டய் தன்னிடம் ஆடுகின்றான் என்றே நினைத்தாள். “இப்போது மட்டும் வந்துவிட்டதோ!. இங்கே பார் சக்ரா. நடந்தது அனைத்தும் ஒருவித விபத்து மட்டும் தான். நீயும் தெரிந்தே இதை என் கழுத்தில் கட்டவில்லை.” என்றாள் அவன் கையில் இருந்த தாலியை சுட்டிக்காட்டியபடி.

அவள் சொன்ன விபத்து என்ற சொல், அவன் மனதில் சுருக்கென்ற வலியை ஏற்படுத்தினாலும், அவள் முன் தெனாவட்டாகவே இருந்தவன், “சரி. நீ சொன்னது போலவே இருக்கட்டும். இந்த தாலி உன்னிடம் இருப்பது நல்லது அல்ல. இது என்னிடமே இருக்கட்டும்.” என்று சொல்லிக்கொண்டே, அதை தன் காற்சட்டைப் பையில் போட்டுக்கொண்டான்.

அதில் சனாவின் முகம் பதற்றமானது. அதை அவனிடம் திரும்பவும் கேட்க முடியாமல், இக்காட்டான சூழ்நிலைக்கு உண்டானாள்.

அவள் பதற்றத்தைக் கண்டு மனம் குளிர்ந்தவன், ‘என்னையவே கோபம் கொள்ள வைகின்றாயா! உன்னை எப்படி சுத்த விடுகின்றேன் பார்.’ என்று தன் மனதினுள் நினைத்துக் கொண்டவனுக்கு, உள்ளத்தில் சாரல் அடித்தது.

ஆனால் அவள் தான் இவனை சுத்தவிடப்போகின்றாள் என்பது அப்போது அவனுக்கு தெரிந்திருக்கவில்லை.

ஒருமுறை தேவி நிறுவனத்திற்கு சனா வரும் போதே, அவள் கைப்பையில் இருந்து எதையோ எடுக்கும் போது, அந்த தாலி கீழே விழுந்ததையும், அதை யாரும் பார்த்துவிட்டார்களோ என்று பதறிப்போய், அதை உள்ளே எடுத்து அவள் வைத்ததையும் சக்ரா பார்த்திருந்தான்.

அவள் பையின் உள்ளே தாலி கண்டிப்பாக இருக்கும் என்ற தைரியத்தில் தான் அவள் பையை அபகரித்தான். அவன் நினைத்தது போலவே தான் உள்ளே தாலி இருந்தது.

சனா நினைத்திருந்தால், அது வெறும் கழுத்து சங்கிலி மட்டுமே என்ற நினைப்பில் அதை சாதரணமாக எடுத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இப்போதோ அவளது அலைப்பாயும் கண்கள் அவனுக்கு வேறு செய்தியைத் தந்தன.

‘அவள் என்னை நினைக்கின்றாளா! அவள் நினைப்பில் நான் இருக்கின்றேனா!. நான் அணிவித்த தாலிக்கு மதிப்பு கொடுக்கின்றாளா!’ என்று காற்றாற்று வெள்ளம் போல் அவனது மகிழ்ச்சி அதிகமாகி இன்னும் இன்னும் பெருகியது.

“இப்போது ஏன் உன் முகம் பதற்றமாக உள்ளது சனா?.” என்று கேட்கும் போதே, தன் அலைபேசியை எடுத்து எதுவோ செய்ய ஆரம்பித்தாள்.

அவளது பதற்றம் எல்லாம் சில கணங்கள் மட்டும் தான். சனாவுடன் விளையாட சக்ராவிற்கு பிடித்திருந்தது. ஆனால் அவளது அடுத்த கணமே தெளிந்திருந்த முகத்தைப் பார்த்து, அவளை தன் மனதிற்குள்ளே மெச்சிக்கொண்டான்.

இந்த செயல் தான் எப்போதும், அவனை சனாவை நோக்கி இழுக்கின்றது. அவளிடம் பேச்சு இல்லை. அவனோ மெய்மறந்து, அவள் தொடுதிரையில் செய்யும் மாயாஜாலங்களை ரசித்துக்கொண்டிருந்தான்.

முன் பதிவு இல்லாத ரயில் பெட்டியில், நிற்க கூட இடம் இல்லாத அளவிற்கு உள்ள கூட்டத்தில் மாட்டிக் கொண்டதைப் போல தான் அவன் காதலும் இருந்தது.

இருபக்கம் காதலும் ஒன்று சேர்ந்தால் தானே, காதலின் ஆன்மாவும் ஒன்று சேரும்!. ஆனால் சக்ராவோ, கிடைக்குமா? கிடைக்காதா என்பதை தாண்டி, பிடித்ததை தேடி ஓடுவதில் ஒரு சுகம் இருக்கத் தான் செய்கின்றது என்பதில் நிற்பவன். எப்போது அவளிடம் தாலியைப் பார்த்தானோ, அதில் இருந்து மேலும் மேலும் தன் காதல் ஜெயிக்கும் என்பதில் உறுதியாக இருந்தான்.

ஆனால் சனாவிற்கோ, காதல் திருமணம் என்பதை எல்லாம் தாண்டி, அவள் அடைய வேண்டிய உரிமை அவள் கண் முன்னால் வந்து நின்றது.

சில நிமிடங்கள் இருவரும் அமைதியாக நிற்க, காற்றைக் கிழித்துக் கொண்டு வேகமாக ஒரு மகிழுந்து அவர்கள் அருகே வந்து நின்றது.

அதில் இருந்து இரண்டு பேர் ஆஜானுபாகுவான தோற்றத்தில் இறங்கினர்.

சனாவை நோக்கியவர்கள், “மேம்! நீங்கள் சொன்ன வேலையை முடித்துவிட்டோம்.” என்றனர்.

அதில் சிரித்துக் கொண்டே, இடப்பக்கமாக உள்ள கண் மூலம் சக்ராவையும் திரும்பி நக்கலாக பார்த்துக் கொண்டவள், தன் கையில் இருந்த இரு சக்கர வாகனத்தின் சாவியை அவர்களிடம் கொடுத்து, “இதை நீங்கள் எடுத்து செல்லுங்கள்.” என்று தன் வண்டியை சுட்டிக் காட்டிக் கூறியவள், அவர்களிடம் இருந்து அவர்கள் வந்த மகிழுந்து சாவியை வாங்கிக்கொண்டாள். அவர்களும் அதைப் பெற்று கொண்டு சென்றனர்.

அங்கே நடப்பது எதுவும் புரியாமல், முகத்தில் தோன்றிய குழப்ப ரேகையோடு சனாவைப் பார்த்தான் சக்ரா.

மகிழுந்தில் சாவியை மகாவிஷ்ணு கையில் இருக்கும் சுதர்சன சக்கரம் போல் தன் ஆள்கட்டி விரலில் வைத்து சுற்றியவள், “நான் ஆடும் ஆட்டத்தின் குறுக்கே வந்து தவறிழைத்து விட்டாய். மாலினி உடனான உன் நிச்சயதார்த்தத்திற்கு விரைவாக வந்து சேர்.” என்று சொல்லிக் கொண்டே மகிழுந்தில் சென்று படு ஸ்டைலாக ஏறினாள்.

அப்போது தான் சக்ரா ஒன்றை கவனித்தான். மகிழுந்தில் உள்ளே பூட்டப்பட்ட கதவின் கண்ணாடியை தட்டிக்கொண்டிருந்தாள் மாலினி.

அதைப் பார்த்தவனின் முகம் அடுப்பில் வதங்கிய வெங்காயம் போல் சுருங்கியது. அவனது முகத்தில் ஏற்பட்ட மாற்றங்களை கண்டு திருப்தி அடைந்த அவனின் காரிகை, அதிக வேகம் எடுத்து, தன் மகிழுந்தை திருப்பி, அதை ஒரு குதிரையை இயக்குவது போல் இயக்கி அங்கிருந்து சென்றாள்.

‘தான் கட்டிய தாலியை பொக்கிஷம் போல் பேணி காப்பவள், எதற்காக நான் மாலினியை திருமணம் செய்யவேண்டும் என்பதில் இவ்வளவு அக்கறை காட்டுகின்றாள். தான் சனாவைப் பற்றி அறியாதது இன்னும் அதிகமாக உள்ளதோ!’ என்று நினைத்தபடி அங்கிருந்து சென்றான்.

*****************************************

சனாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் அவளின் மகிழ்ச்சிக்கு எதிர்பதமாக, சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் நின்றிருந்தனர், மாலினியும் சக்ராவும்.

மயில் போல் வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அழகிய மேடையில் தான் மூவரும் நின்று கொண்டிருந்தனர்.

சக்ராவோ, தன் பக்கவாட்டுப் பக்கமாக, அதிக மகிழ்ச்சியுடன் நிற்கும் சனாவைப் பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான். அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல், அவன் அருகில் இருந்த மாலினியும் தன் அக்கா சனாவைத்  தான் முறைத்துக்கொண்டிருந்தாள்.

சக்ராவோ சனாவைப் பார்த்து, “மிகவும் மகிழ்ச்சியோ!.” என்றான் பல்லைக் கடித்துக்கொண்டு.

“இல்லையா பின்ன….” என்றாள் சிரித்துக் கொண்டே.

“உலகத்திலையே இவ்வளவு மகிழ்ச்சியாக, தன் கணவனுக்கு தன் தங்கையுடனே நிச்சயதார்த்தம் செய்து வைக்கும் மனைவி நீயாக தான் இருக்கும்.” என்று அவன் சொல்லும் போதே உமா மோதிரத்தைக் கொண்டு, இவர்கள் அருகில் வந்துவிட்டார்.

“இந்தாப்பா சக்ரா… இதை மாலினியின் கைகளில் போட்டுவிடு!.” என்றதும் அவனது முகம் கரையான் திண்ற புத்தகமாய் மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!