Skip to content
Post Views: 2,688
“திகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்
சகட சக்கரத் தாமரை நாயகன்
சகட சக்கர விண்மணி யாவுறை
விகட சங்கரன் மெய்ப் பதம் போற்றுவோம்.”
Advertisement
என்ற கணீர் குரலால், விநாயகர் காப்புப் பாயிரம் பாடி இறைவனைக் குளிர்வித்துவிட்டு, புதுக்கணக்கு போட இருக்கும் புத்தகத்தையும், எழுத்தாணியையும் எடுத்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார் அருணகிரி. பின் வேழமுகத்து விநாயகரைப் பிரார்த்தனை செய்து, புது கணக்கு புத்தகத்தில் பிள்ளையார் சுழி போட்டு, முதல் கணக்கை தொடங்கிவைத்தார்.
பின் திரும்பவும் அந்த புத்தகத்தை இறைவனின் பாதமலர்களில் சமர்ப்பித்துவிட்டு, அப்போது தான் திரும்பினார்.
அங்கே அவரது மகன் ரவி நின்றுகொண்டிருக்க, அவர் அருகில் அவர் கையை இடித்துக்கொண்டு, “ம்…. சொல்லுங்கள்….” என்று சமிக்கை செய்தவாறு நின்றுகொண்டிருந்தார், அவரின் மனைவி உமா.
Advertisement
தன் முன்னே நிற்கும் இருவரையும் தீர்க்கமாக பார்த்தவர், எதுவும் பேசாமல், அவர்களைத் தாண்டி சென்றார்.
Advertisement
உடனே ரவியை முறைத்துப் பார்த்த உமா, “உங்கள் தந்தையுடன் பேசுவதற்கு உங்களுக்கு என்ன தயக்கம்?. ம்…. பேசுங்கள்.” என்றார்.
உமாவின் மொழி கேட்டு, “கொஞ்சம் பொறு உமா.” என்றார் பொறுமையாக.
தொழிலில் பிரச்சனை. அதில் இருந்து சமாளிக்க மனைவியின் போதனையை ஏற்றவர், எப்படியாவது இன்று தன் தந்தையுடன் பேசிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.
Advertisement
உமா கணவரிடம், “அவர் வீட்டின் பின்பக்கம் தான் சென்றுள்ளார். வேகமாக சென்று பேசுங்கள்.” என்றதும், தன் தந்தையைத் தேடி பின்பக்கம் சென்றார்.
அந்த பங்களாவின் பின்பக்கம் இருந்த தோட்டத்தில் குயில்களின் கூச்சலும், அலைகடலின் ஓசையும், முரசாக ஒலி செய்தன. அலைகள் கவரிவீச, வானளவு உயர்ந்து இருந்த செண்பக மரம் நிழல் கொடுக்க, அதன் கீழே இருந்த கல் இருக்கையில் அமர்ந்தவாறு, அந்த இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார் அருணகிரி.
வயது எழுபத்தைந்தைக் கடந்து தலையில் நரை கூடி இருந்தாலும், அவர் உள்ளம் இன்னும் இளமையாகத் தான் இருந்தது. அவர் வயதைக் கணிக்கவே முடியாதபடி அவரின் உடம்பு மிடுக்குடன் இருந்தது.
மெதுவாக பதுங்கிப் பதுங்கி அவர் அருகே சென்றார் ரவி. அவரைத் திரும்பி தன் பக்கவாட்டுப் பக்கமாக பார்த்த அருணகிரி, “இப்போது எதற்காக நீ என்னிடம் பேச வந்துள்ளாய் என்பதை நான் அறிவேன்.” என்றார் ஒரு வித பீடிகையுடன்.
“உங்களுக்கு தெரியாமல் ஏதாவது இருக்கா மாமா.” என்றார் ரவியின் பின்னே வந்த உமா.
உமாவையும், ரவியையும் ஒரு பார்வை பார்த்தவர், “நமக்கு இருக்கும் தொழில்கள் போதாதா?. எதற்காக, உன் நண்பனுடன் சேர்ந்து இன்னொரு தொழிலை ஆரம்பித்து அதில் நட்டம் அடைந்தாய்?” என்றார் ரவியைப் பார்த்து.
ரவி தயங்கிய குரலில், “அதில் இன்னும் கொஞ்சம் லாபம் வரும் என்று நினைத்தேன் அப்பா.” என்றார் தன் தலையைக் கீழே குனிந்தபடி.
“சரி இப்போது எதற்காக என்னை சந்திக்க வந்தாய்?.” என்று தெரிந்து கொண்டே கேட்டார்.
ரவி தயக்கத்துடன், தன் தந்தையை நோக்கி, “எனக்கு பணம் தேவைப்படுகின்றது அப்பா.” என்றார்.
“நம் தேவி நிறுவனத்தில் இருந்து வரும், உன் பங்கு பணத்தை எடுத்து உன் கடனை அடைக்கலம் இல்லையா?.” என்றார் யோசனையாக.
“அதில் உங்கள் பேத்தி மாலினிக்கு நகை வாங்கிவிட்டேன் மாமா. இப்போது எங்களிடம் சுத்தமாக கையில் காசு கிடையாது.” என்று ரவியை முந்திக்கொண்டு பேசினார் அவரின் மனைவி உமா.
மாத வருவாயே கோடிக்கணக்கில் வரும்போது, அதை அனைத்தையும் நகை வாங்கிவிட்டேன் என்று சொன்னால் யார் தான் நம்புவர்.
உமாவின் மொழி கேட்டு சிரித்தவர், “அதனால் என் பங்கு பணத்தை கேட்க வந்திருக்கின்றீர்கள் என்பதனை நான் அறிவேன். ஆனால் என்ன செய்வது!. என் பங்கு பணத்தை எல்லாம், நான் செலவழித்து விட்டேனே.” என்றவர் குரலில் ஏகத்திற்கும் நக்கல் நிரம்பி வழிந்தது.
அதுவரை அமைதியே உருவானவர் போல் நின்றுகொண்டிருந்த ரவி, தன் தந்தையின் பேச்சில் சினம் கொண்டவராய், “கோடிக்கணக்கான பணத்தை செலவழித்துவிட்டேன் என்று சுலபமாக சொல்கின்றீர்கள்!. சொல்லுங்கள் அந்த பணத்தை எல்லாம் என்ன செய்தீர்கள்?.” என்று கேட்டு கத்தினார்.
உமாவோ, தன் மாமனாரிடம் கோபத்தை நேரடியாக காமிக்காமல், அவரை முறைத்தபடியே, தன் வாய்க்குள் எதுவோ முணங்கிக்கொண்டிருந்தார்.
“உனக்கு அது தெரியவேண்டிய அவசியம் இல்லை ரவி.” என்று சொல்லிக் கொண்டே இருக்கையில் இருந்து எழுந்தவர், “எனக்கு நேரமாகிவிட்டது. இன்று நம் தேவி நிறுவனத்தில் வருடாந்திர கூட்டம் நடக்க உள்ளது. மறக்காமல் நீயும் வந்துவிடு.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
செல்லும் அருணகிரியைப் பார்த்து, கணவன் மனைவி இருவரும் கோபமாக எதுவோ தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
பின் அருணகிரி அலுவலகம் செல்ல கிளம்பி கீழே வந்தார். அவர் வெளியே வருவதற்காகவே காத்துக்கொண்டிருந்தவர் போல, அவர் முன்னே வந்து நின்றார் ரவி.
ரவி, “அப்பா, என்னை மன்னித்து விடுங்கள். நான் முன்பே உங்களிடம் கேட்டிருக்க வேண்டும். கேட்காமல் விட்டது என் தப்பு தான். மாலினியின் நிச்சயதார்த்தம் வேறு நெருங்குகின்றது. இந்த சமயத்தில் பணம் அதிகம் தேவை. மண்டப அலங்காரம், சாப்பாடு என அனைத்தையும் ஏற்பாடு செய்யவேண்டும் அப்பா.” என்றார் பாவமான குரலில்.
“நீ என்ன சொல்கின்றாய் ரவி!. நம் மாலினிக்கு நிச்சயதார்த்தமா?” என்று எதுவும் அறியாதவர் போல் கேட்டுவைத்தார் அருணகிரி.
“அப்பா விளையாடாதீர்கள் நம் மாலினிக்கும் உங்கள் பேரன் சக்ராவுக்கும் திருமணம் என்று உங்கள் முன் வைத்து தானே முடிவு செய்தோம்.” என்றார் படபடப்பாக.
அதற்கு அருணகிரியும் மிகவும் சாவகாசமாக, “அதற்கு தான் நான் சம்மதிக்கவில்லையே!.” என்று ஒரே போடாக போட்டார்.
இவர்கள் பேச்சை எல்லாம், அலமாரியின் தடுப்பின் அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த உமா, தன் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்து, “என்ன மாமா இப்படி பேசுகின்றீர்கள்!. அவள் உங்கள் பேத்தி. உங்களுக்கு அவள் மேல் சிறிதேனும் அக்கறை இருகின்றதா?. ஐயோ நான் இப்போது என்ன செய்வேன்!” என்று கூறியபடியே கதறி அழ ஆரம்பித்தார்.
ரவியை முறைத்தவர், “எனக்கு இதெல்லாம் பிடிக்காது ரவி. நீ உன் மனைவியின் நாடகத்தை உடனே நிறுத்த சொல்.” என்றார் தீர்க்கமான குரலில்.
“அவள் வேதனையை அழுகை மூலம் காட்டிவிடுகின்றாள். ஆனால் நான் அதை வெளியே காட்டாமல் இருக்கின்றேன் அப்பா.” என்று உருக்கமாக பேசினார் ரவி.
ரவியின் பேச்சு பெரியவருக்கு சினத்தைக் கொடுத்தது. “ரவி! குதர்க்கம் பேச இதுவா நேரம்! எனக்கு நேரமாகிவிட்டது.” என்று சொல்லி தன் மணிக்கட்டில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.
அதைக் கண்டுகொள்ளாத கணவனும், மனைவியும், தங்களுக்குள் எதுவோ சைகை செய்துகொண்டனர். அதில் இன்னும் கோபமான அருணகிரி, “எனக்கு இந்த திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை ரவி. உன் மூத்த பெண் திருமணம் ஆகாமல் இருக்க, நீ எப்படி உன் இரண்டாவது மகளுக்கு திருமணம் பேசுவாய்?.” என்று சூடாக வந்தது அவர் கேள்வி.
அவர் மொழி கேட்டு, விலுக்கென்று நிமிர்ந்து தன் தந்தையைப் பார்த்தவர், “எனக்கு ஒரே ஒரு பெண் மட்டும் தான் அப்பா. என் மகள் மாலினி மட்டுமே எனக்கு வாரிசு.” என்றதும் உமாவின் உதட்டில் புன்னகை. ஆனால் அடுத்த வினாடியே அதை மறைத்துக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய ரவி, “ உங்களிடம் போய் கேட்க வந்தேனே! என் தவறு தான்.” என்று சொல்லிவிட்டு, அருகில் இன்னும் அழுதபடி பார்த்திருந்த தன் மனைவியைப் பார்த்தவர், “இன்னும் ஏன் இங்கே நிற்கின்றாய்? எனக்கு உணவை எடுத்துவை.” என்று கத்தியபடி உள்ளே சென்றார்.
அருணகிரி, தமிழ்நாட்டிலையே மிகப்பெரிய செல்வந்தர். அவரின் மனைவி தேவி இப்போது உயிருடன் இல்லை. அவர் பெயரில் துவங்கப்பட்டது தான் தேவி நிறுவனம்.
தான் சிறுவயதாக இருக்கும் போதே, தன் நண்பனுடன் சேர்ந்து இந்த நிறுவனத்தை அராம்பித்தார். அவருக்கு பதினெட்டு வயதிலையே தேவியுடன் திருமணமாகிவிட்டது. பரம்பரை பணக்காரர் அதனால் காசுக்கு குறைவில்லை. இப்போது இந்த நிறுவனத்தை உலக அளவில் கொண்டு சென்ற பெருமை, அவர் பேரன் சக்ராவையே சேரும்.
அருணகிரி தேவி தம்பதிக்கு, ஆண் ஒன்று பெண் ஒன்று என இருபிள்ளைகள்.
தங்களக்குப் பிறகு தங்களது நிறுவனம் உடைந்துவிடக்கூடாது என்று கருதி, அருணகிரி தன் மகள் வேதாவை, தன் நண்பனின் மகன் சுந்தருக்கு திருமணம் செய்துவைத்தார். அவர்களுக்கு சக்ரா, சிவா என்று இரு மகன்கள். அதில் தேவி நிறுவனத்தின் அடுத்த வாரிசு என அனைவரும் சொல்லும் அளவுக்கு தொழிலில் வெற்றிக்கொடி நாட்டிக்கொண்டு இருப்பவன் நம் கதையின் நாயகன் சக்ரா.
*************************************
“நான் சொல்வதை கேட்கக் கூடாது என்ற முடிவோடு தான் இருக்கின்றாயா சனா?.” என்று கோபமாக வந்தன அமலாவின் வார்த்தைகள்.
தன் செண்பகப்பூ போன்ற காதுகளுக்கு, வைர தொங்கட்டானை அணிவித்தபடியே, தன் அஞ்சன விழியால் தன் அன்னையை நோக்கியவள், “நான் அங்கே செல்வது, இது ஒன்றும் முதல் தடவை இல்லையே!. இன்று வருடாந்திர கூட்டம் நடக்க உள்ளது. அதற்கு நான் கண்டிப்பாக செல்லவேண்டும் அம்மா.” என்று சொல்லிவிட்டு, தன் நீள் கருநிறக்கூந்தலை வாரிவிட்டு, அதை ஒற்றை கட்டுக்குள் சிறு கிளிப்மூலம் அடக்கினாள்.
கமலமலரின் மென்மையான இதழ் போன்ற கருவிழிகளும், தீர்க்கமான நாசியும் கொண்டு அழகுத் திருமகளாய் தோற்றம் தரும் சனா என்ற சுதர்சனாவிற்கு இருபத்தி ஐந்து வயதாகின்றது.
சகல கல்யாண குணங்களும் நிரம்பியவள், மிகவும் தைரியசாலி. அன்புக்கு மட்டுமே கட்டுப்பட்டவள்.
தன் படிப்பை லண்டனில் உள்ள, புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் முடித்தவள், தன் அன்னையுடன் சேர்ந்து அவரது தொழிலுக்கு உறுதுணையாக் நிற்கின்றாள்.
அமலா, தன் தந்தையின் தொழிலை பார்த்துக்கொள்கின்றார். திருமண வாழ்க்கையில் தோற்று, பெண் குழந்தையுடன் வெளியே வரும் போது, அமலாவின் தந்தை மிகவும் நொடிந்து போனார். அதில் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாகி இறந்தும் போனார்.
தன் குழந்தையுடன் சேர்ந்து, தன் தாயையும் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதை அதன் பிறகு, காலம் கடந்து உணர்ந்தவர், தன் தந்தையின் தொழிலை, அன்று கையில் எடுத்து ஓட ஆரம்பித்தவர். இன்றும் ஓடிக்கொண்டே தான் இருக்கின்றார்.
பிரபல பெண் தொழில் அதிபர் அமலாவை தெரியாதவர்கள் யாரும் இல்லை. ஆயத்த உடை ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டி பறப்பவர். தன் வாழ்க்கை இதோடு முடிந்து விடவில்லை! என்னை நம்பி இரண்டாயிரம் குடும்பங்கள் உள்ளது. இதோ பார் நான் வெற்றி அடைந்து விட்டேன் என்பது போல, அவர்கள் வீட்டில் உள்ள வரவேற்பு அறையில் காட்சி படுத்தி வைக்கப்பட்டு இருந்தது, சமீபத்தில் அவர் ஜனாதிபதி கையால் வாங்கிய பத்ம விபூஷன் விருது.
தொழிலில் மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல், தன் தொண்டு நிறுவனம் மூலம், கணவனால் கைவிடப்பட்ட ஏழை பெண்களுக்கு, அவர்கள் வாழ்வாதாரத்தைப் பெருக்க உதவியும் செய்கின்றார்.
“என் பேச்சைக் கேட்க கூடாது என்ற முடிவோடு தான் இருக்கின்றாயா?.” என்று கோபத்தோடு கத்த ஆரம்பித்தார்.
கையில்லாத வெள்ளை நிற மேக்சி அணிந்திருந்தவள், அதன் மேலே ஜீன்ஸால் ஆன மேல் அங்கியை அணிந்துகொண்டே, “என் உரிமையை விட்டுக்கொடுக்கக் கூடாது என்ற முடிவோடு இருக்கின்றேன்.” என்றாள் தீர்க்கமான குரலில்.
அவள் மொழி கேட்டு அமலாவின் கோபம் அதிகமாக, இருவருக்கும் இடையே வந்து நின்றார் அமலாவின் தாய் ஆண்டாள், “அவள் தான் கிளம்பிவிட்டாள் அல்லவா.” என்று மகளிடம் சொன்னவர், தன் பேத்தியைப் பார்த்து, “நீ போயிட்டு வாடா சனா.” என்றார்.
“அம்மா…. இதெல்லாம் உங்கள் போதனை தானா?.” என்றவர் கோபம் இப்போது தன் அன்னையை நோக்கி சென்றது.
அவர் தன் பாட்டியிடம் பேசும், அந்த இடைப்பட்ட நேரத்தைப் பயன்படுத்தி, அங்கிருந்து எப்போதோ பறந்து சென்றிருந்தாள் சுதர்சனா.
அப்படியும் விடுவேனா என்பது போல, அவளுக்கு அலைபேசியில் அழைத்தவர், அவள் அந்தப்பக்கம் இணைப்பை எடுத்ததும், “இப்போது நீ அங்கு செல்வதை தடுப்பதற்காக உன்னை நான் அழைக்கவில்லை. நீ இப்போது எது வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால் அதற்கு கைமாறாக நான் பார்க்கும் பையனை திருமணம் செய்ய ஒத்துக்கொள்ளவேண்டும்.” என்று நேரம் பார்த்து பேசினார்.
“அம்மா… என் வாழ்க்கையில் காதல், திருமணம் போன்ற முட்டாள் தனமான விஷயங்களுக்கு இடம் இல்லை என்பதை நீங்களும் அறிவீர்கள் தானே!.” என்று அவருக்கு சிறிதும் குறையாத கோபத்தில் பேசினாள் சுதர்சனா.
“என் வாழ்க்கையை உன் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திப் பார்ப்பதை முதலில் நிறுத்து சனா.” என்றவர், தன் தாடை இறுக ஒரு முறை சுவாசத்தை ஆழ்ந்து வெளியிட்டு, “சரி நீ வீட்டிற்கு வந்ததும் இதைப் பற்றி பேசிக்கொள்ளலாம்.” என்று சொல்லி வைத்தார்.
‘நீங்கள் எவ்வளவு பேசினாலும் என் பதில் இல்லை தான் அம்மா.’ என்று தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டவள் மகிழுந்து, தேவி நிறுவனம் என்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கேட்டின் உள் பக்கமாக சென்று நின்றது.
error: Content is protected !!