Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சுதர்சன சக்கரம்

சுதர்சன சக்கரம் – 12

தன் நெற்றியை நீவி விட்டபடி சனாவை முறைத்துப் பார்த்த சக்ரா, “சுதர்சன சக்கரத்தை அடையப்போவதாக உளருகின்றாய்… இதனால் எவ்வளவு பெரிய ஆபத்து வரும் தெரியுமா?. உன்னை நினைத்து தான் உனக்கு கவலை இல்லை. என்னை விடு. உன் அன்னையை நினைத்துப் பார்த்தாயா?. எதற்காக…. மச்…” என்று சொல்லிவிட்டு தலையைக் கோதினான்.

அவனுக்கு அவ்வளவு கோபம் வந்தது, ‘அவளுக்கு அன்பானவர்கள் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று நிற்பவளை என்ன செய்வது.’ என்று நினைத்து வருந்தினான்.

“எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. எனக்கான உரிமை எனக்கு வேண்டும். அதற்காக தான இந்த போராட்டாம்.” என்று சொன்னவளின் தலையில் ஓங்கி கொட்டினான்.

அவள் வலியால் தலையை தடவ, “இன்னொரு தடவை ஏதவாது இதுபோல் பேசினால் உன்னை கொன்றுவிடுவேன்.” என்று தன் விரலை நீட்டி எச்சரித்தவன் ஆழ்ந்த மூச்சை விட்டான். அவளோ தலையை தடவிக்கொண்டே அவனைப் பார்த்து முறைத்தாள்.



Advertisement

பின் அவளைப் பார்த்தவன், “நீ இதை தேடுவது தெரிந்து தான், உன்னை யாரோ கொலை செய்ய முயல்கின்றனர். இது வேண்டாம் சனா.” என்று ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்தவன், அவள் மேல் உள்ள அக்கறையில் மென்மையாக சொல்லி முடித்தான்.

“யாருக்கு வேண்டும் உன் அக்கறை?. நான் சுதர்சன சக்கரத்தை தேடுவது யாருக்கும் தெரியாது.”

“பின் எதற்காக உன்னை கொல்ல அந்த லாரி வந்தது.”

Advertisement

“எனக்கு என்ன தெரியும். எனக்கு உன் மேல் தான் சந்தேகம். நீயே என்னை கொலை செய்ய அந்த வண்டியை அனுப்பிவிட்டு, இப்போது வந்து நாடகம் ஆடுகின்றாயா?.” என்று தான் என்ன பேசுகின்றோம் என்று தெரியாமல் பேச ஆரம்பித்தாள் சனா.

Advertisement

“உன்னை காப்பாற்ற நான் வரவில்லை என்றால், இப்போது நீ இவ்வளவு பேசி இருக்கமாட்டாய். எல்லாம் என் தப்பு தான். உன்னை அந்த லாரியில் தள்ளிவிட்டு சாவடித்திருக்க வேண்டும்.” என்றவன் வார்த்தைகளும் வரம்பு மீற ஆரம்பித்தது.

“செய்திருக்க வேண்டியது தானே! உன்னை யார் என்னை காப்பாற்ற சொன்னது. உன் பேச்சை கேட்பதற்கு பதில், நான் அந்த லாரியிலையே விழுந்திருப்பேன்….” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை, அவளின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறைவிட்டான்.

இப்போது மறுபடியும் பளாரென்று ஒரு அறை. ஆனால் விழுந்தது என்னவோ சக்ராவின் கன்னத்தில்.

Advertisement

ஆனால் அவனோ கோபம் கொள்ளவில்லை. மாறாக, “சரி அடிக்கு அடி சரியாகிவிட்டது. இப்போதே உன் வீட்டிற்கு செல்கின்றேன். அங்கு சென்று அத்தையிடம் உன்னைப் பற்றி வத்தி வைக்கின்றேன்.” என்றான் சாதாரண குரலில்.

“சொல்லேன். நானும் அவரிடம் சொல்லிவிட்டு தான் சுதர்சன சக்கரத்தை  தேடுகின்றேன்.” என்று சொல்லி தன் தோள்களைக் குலுக்கினாள்.

“அப்போ சரி. உனக்கும் எனக்கும் திருமணம் ஆனதையும் சேர்த்தே கூறுகின்றேன்.” என்றதும் சனாவின் முகத்தில் திகில் பரவ ஆரம்பித்தது.

“நீ அளவுக்கு மீறி செல்கின்றாய் சக்ரா.” என்க.

நக்கலாக அவளைப் பார்த்தவன், “நான் சொல்ல தான் போகின்றேன்.” என்றான் அவளை நோக்கி குனிந்தபடி.

“சொல். நானும் சொல்வேன். இதெல்லாம் உன் நாடகம் என்று. என் அன்னை என்னைத் தான் நம்புவார்.” என்றாள் உறுதியான குரலில்.

“அப்படியா! இந்த புகைப்படத்தை பார்த்தும், அவர் உன்னை நம்புவாரா?.” என்றவன், தன் அலைபேசியில் பதிவு செய்து வைத்திருந்த புகைப்படத்தை அவளிடம் கட்டினான்.

அதில் அவனும் அவளும் மாலையும் கழுத்துமாய் சேர்ந்து நின்றிருந்தனர். அதைப் பார்த்தவளின் கண்கள் வெறித்தது.

“இது எப்படி உன்னிடம்….” என்று புரியாமல் அவனை ஏறிட்டாள்.

“அது எதற்கு உனக்கு?. இப்போது என்ன சொல்கின்றாய்?.” என்றான் தன் ஒரு புருவத்தை மட்டும் உயர்த்தியபடி.

“உனக்கு என்ன வேண்டும் சக்ரா?. நான் உன் மனைவியாக வேண்டுமா?.” என்றாள் கறார் குரலில்.

“நீ ஏற்கனவே என் மனைவி தானே!.” என்றவன், இப்போது வண்டியை எடுத்தான். அவளிடம் எந்த பதிலும் இல்லை.

“உன் திட்டம் தான் என்ன?. மீதி இருக்கும் சாவியை கண்டுபிடித்து உன் உயிரை விட போகின்றாயா?.” என்று கேட்டுக்கும் போதே அவள் வீடு வந்துவிட்டது.

வெளிகேட்டில் சக்ரா தன் மகிழுந்தை நிறுத்தியதும், வேகமாக அதில் இருந்து இறங்க முற்பட்டவளை கையைப்பிடித்து தடுத்தவன், சிறிதும் தாமதிக்காமல், தன் காற்சட்டைப் பையில் இருந்த தாலியை எடுத்து, அவள் கழுத்தில் இரண்டாவது முறையாக அணிவித்தான்.

அவள் என்னவென்று உணர்வதற்கு முன்பே அவள் கழுத்தில் தாலி ஏறியது. அவள் அதிர்ச்சியுடன் பார்க்க, “என் வாழ்வில் எனக்கு ஒரே ஒரு மனைவி மட்டும் தான்.” என்றான்.

உடனே தன் கழுத்தில் இருந்து அதைக் கழட்டப்போனவளின், கையைப் பிடித்தவன், “இது உன் கழுத்தில் எப்போதும் இருக்க வேண்டும். கழட்டி வைக்கும் வேலை எல்லாம் வைத்துக்கொள்ளாதே!. இல்லையென்றால் உள்ளே வந்து அத்தையிடம் பேச வேண்டியதாகி விடும். பார்த்துக்கொள்.” என்று சொல்லி எச்சரித்தவன், அவளை வாசலிலையே இறக்கி விட்டு சென்றான்.

தன் கழுத்தில் தொங்கும் தாலியை, தன் கைகளால் எடுத்துப் பார்த்தவள், “இவன் சொல்வது போல, நிஜமாகவே இவன் மேல் எனக்கு காதல் இருக்கின்றதா?.” என்று தன்னைத் தானே ஒருமுறை கேட்டுப்பார்த்தாள்.

ஆனால் அவளது மூளையோ, ‘அதெல்லாம் ஒன்றும் இல்லை. மாலிக்கும், சக்ராவுக்கும் நிச்சயதார்த்தம் நடக்கும் போது நீ மகிழ்ச்சியான மனநிலையில் தானே இருந்தாய்!.’ என்று எடுத்துரைத்தது.

அவள் நினைத்திருந்தால், அப்போதே அந்த தாலியை கழட்டி இருக்கலாம். ஆனால் கழட்டுவதற்கு பதில், அதை தன் சேலைக்குள் மறைத்து வைத்தாள்.

பின் அவள் வீட்டினுள் செல்ல, அங்கே நடுக்கூடத்தில் அவளுக்காக காத்துக்கொண்டிருந்தார் அமலா.

அவரைப் பார்த்ததும், அவள் நடையில் சிறிது பதற்றம். சனா வருவதைப் பார்த்து, வேகமாக அவள் அருகே வந்தவர், “என்னாச்சி! ஏன் நடந்து வருகின்றாய்? உன் வண்டி எங்கே?.” என்று அடுத்தடுத்த கேள்விகளை அவள் முன்னே வைத்தார்.

“அது…. பஞ்சர் அம்மா.” என்று பொய் சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

ஏற்கனவே மதியம் அவள் பேசியதைக் கேட்டு, பயந்துபோய் இருந்தவரை, மேலும் பயப்பட வைக்க அவளுக்கு விருப்பம் இல்லை.

அதுவும் உண்மையைக் கூறினால், சக்ரா போல் அவளுக்கு பாதுகாப்பு எல்லாம் தரமாட்டார். நீ எங்கும் செல்லவேண்டாம் என்று அனைத்திற்கும் தடைபோட்டு, அவளை எங்கையாவது வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்துவிடுவார்.

“இது தான் நீ வரும் நேரமா?.” என்று வள்ளென்று விழுந்தார்.

தன் அன்னையின் முகத்தில் இருக்கும் அதிகப்படியான கோபத்தைக் கண்டவள், “அம்மா! இது நான் எப்போதும் வரும் நேரம் தானே!.” என்று புரியாமல் வினாவ.

“அந்த வீட்டில் நடந்ததை எல்லாம் நான் கேள்விப்பட்டேன். சக்ரா உன் கையில் மோதிரத்தை போட்டதும், உன்னை அனைவரும் பழித்ததும் எனக்கு தெரியும்.” என்று சொல்லி முகத்தை திருப்பினார்.

‘அதற்குள் செய்தி வந்துவிட்டதா!. முதலில் அந்த ஸ்பை யார் என்று கண்டுபிடிக்க வேண்டும்.’ என்று மனதில் நினைத்து, பெருமூச்சு ஒன்றை விட்டவள், “அது ஒரு சின்ன விபத்து மட்டும் தான் அம்மா.”

“சின்ன விபத்தோ… பெரிய விபத்தோ…. உன் போக்கும் சரி இல்லை. சிறுவயதில் உன் தாத்தா சொன்ன கட்டுக்கதைகளை எல்லாம் கேட்டு, இல்லாத ஒரு பொருளை நீ தேடிக்கொண்டிருக்கின்றாய். உரிமை அது இதுவென்று பேசிக்கொண்டு, இனி நீ அந்த வீட்டிற்கு சென்றால், உன் அம்மாவை நீ மறந்துவிட வேண்டியது தான்.” என்றதும் அதிர்ந்துவிட்டாள் சனா.

“அம்மா!.” என்று அவள் கண்கள் வெறிக்க.

“ஆம். நான் சொன்னதை கண்டிப்பாக செய்வேன் சனா. உன்னை நினைத்து பெருமையாக உணரும் என்னை, சிறுமை அடைய வைத்துவிடாதே!.” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

உள்ளே தன் அறைக்குள் சென்றவளுக்கு, மனதே சரியில்லை. அவள் சிந்தனை எல்லாம், அவள் அன்னையின் பேச்சையே சுற்றி வந்தது.

‘சிறுவயதில் நான் கண்டது சுதர்சன சக்கரத்தை தானே!. பின் ஏன் அது போல ஒன்றும் இல்லை என்று அம்மா சொல்கின்றார்.’ என்று யோசித்தவளின் நினைவடுக்குகளில், எதையோ தேடி தோற்றாள்.

பின் தன் அலைமாரியைத் திறந்து, கழுத்து சங்கிலி ஒன்றை தன் கைகளில் எடுத்துப் பார்த்தாள். மாலினியிடம் இருந்தது போலவே அச்சு அசலாக இன்னொரு சங்கிலி அவளிடம் இருந்தது.

‘சக்தி என்ற சொல்லே ஒரு வித மாயை தான். அது கிடைக்க வேண்டும் என்று மனித மனங்கள் நினைக்கும். ஆனால் அது எப்போதும் அனுபவப்பட்ட பிறகு தான் திருந்தும். அதில் மாட்டிய மனிதன், அது ஆட்டிவைக்கும் படி தான் ஆடுவான். அது அவன் அழிவுக்கான முன்னுரை மட்டும் தான்.’ என்று என்றோ ஒருநாள் அவள் தாத்தா சொன்னதும் அவளின் நியாபகத்திற்கு வந்தது.

ஒருமனது வேண்டாம் என்று கூற, அவளின் இன்னொரு மனதோ, ‘அது உனக்கு சேரவேண்டியது தானே!. நீ ஒன்றும் அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படவில்லையே!.’ என்று எடுத்துக் கூற.

இடதுபக்க மூளைக்கும், வலது பக்க மூளைக்கும் இடையே சிக்கிகொண்டவள், சிந்தனையை கலைக்க வேண்டும் என்றே, அவளது அலைபேசி அடித்தது.

அந்த நேரத்தில் தன்னை அழைப்பது சக்ராவாகத் தான் இருக்கும் என்று அதைப் பார்க்காமலையே உணர்ந்து கொண்டவள், அதை எடுத்து தன் காதில் வைத்து, “நீ சொல்வதை எல்லாம் கேட்கின்றேன். எனக்கு அந்த சாவியை மட்டும் தந்துவிடு…” என்றாள் தெளிவான குரலில்.

ஆம் அவள் சுதர்சன சக்கரத்தை அடைவதில் தீவிரமாக இருந்தாள். யாரும் அறியாமல் தன்னை ஒருவன் திருமணம் செய்துவிட்டான். அவன் கட்டிய தாலி தன் கழுத்தில் தொங்குகின்றது. தன் வாழ்வில் திருமணமே வேண்டாம் என்ற கோட்பாட்டில் இருந்த தான், தாலியை சுமந்து கொண்டு இருக்கின்றோம். அடுத்து என்ன செய்வது?. என்ற கேள்விகள் எல்லாம் அவளுக்கு வரவில்லை. மாறாக அவள் உரிமையை நிலை நாட்டுவதில் உறுதியாக இருந்தாள்.

*******************

“ஒரு தலை காதலுக்கு ஒரு புதிய சூத்திரத்தை கண்டுபிடித்திருக்கும், சக்ராவின் ஒரு தலை காதல் ஜெயிக்குமா?. சனாவின் மனதில் என்ன தான் இருக்கின்றது?. அதை இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம் நண்பர்களே!.” என்று தன் யூடியூப் பக்கத்தில் பேசி முடித்தான் சிவா.

பின், “என்ன! என் டாலியை இன்னும் காணும்.” என்று ஒருவரின் கருத்திற்காக காத்திருந்தான்.

அவன் போடும் மொக்கை பதிவுகளை எல்லாம் பார்த்து லைக்ஸ் செய்துவிட்டு, கருத்துப்பெட்டியில் கருத்தையும் பதிவு செய்யும் ஒரே பெண் தான் டாலி.

அவள் யார் என்பது எல்லாம் இவனுக்கு தெரியாது. அவன் வீடியோக்களுக்கு எல்லாம் வெறும் பத்து முதல் இருபது வரை மட்டுமே பார்வையாளர்கள் இருப்பார்கள். ஆனால் அவன் போடும் அனைத்து பதிவிற்கும் ஒரு லைக் மற்றும் ஒரு கமெண்ட் டாலி புண்ணியத்தால் கிடைக்கும். அவனுக்கு இருக்கும் ஒரே சப்ஸ்க்ரைபரும் அவளே.

ஒரு மணிநேரம் ஆகிவிட்டது. அதன் பிறகு தான் டாலி வந்தாள். ‘இது உங்கள் புதிய கதையா சிவா?. உங்கள் வீட்டில் புதையல் மறைந்திருப்பதாய் ஒரு வீடியோ போட்டீர்களே! அதன் தொடர்ச்சி எங்கே?.’என்று கருத்துப் பெட்டியில் வந்திருந்தது.

(சனாவை யார் கொல்ல நினைக்கின்றனர்?. அந்த சுதர்சன சக்கரத்தில் என்ன தான் இருக்கின்றது?. உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்!.

கதை வேகமாக செல்கின்றதா? இல்லை மெதுவாக செல்கின்றதா?. உங்களுக்கு பிடித்திருக்கின்றதா?. போன்ற கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள். நன்றி.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!