Skip to content
Post Views: 890
மறுநாள் காலை ஒவ்வொருவருக்கும் எந்த அதிசயத்தை வைத்திருக்கின்றது என்று தெரியாமல் விடிந்தது.
சிவாவைத் தவிர உணவு மேஜையில் அனைவரும் அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்தனர்.
வேதாவோ சக்ராவின் மீது கோபத்தில் இருந்தார். தன் தாயின் முகத்தைப் பார்த்தே அவரின் கோபத்தைக் கண்டு கொண்டவன் எதுவும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தான். இங்கே வேதாவிற்கு தான் பொறுமை போய்க் கொண்டிருந்தது.
உடனே தன் அமைதியைக் கலைத்தவர், “நிச்சயதார்த்தம் வேண்டாம். நேரடியாகவே திருமணத்தை அடுத்த மாதம் வைத்துக் கொள்ளலாம்.” என்று பொத்தம் பொதுவாய் கூறினார்.
Advertisement
அதற்கும் சக்ராவிடம் எந்த ஒரு மாறுபாடும் இல்லாமல், உணவை உண்ணுவதிலையே கவனமாக இருந்தான்.
வேதாவின் பேச்சைக் கேட்டு நிமிர்ந்த சுந்தர், சக்ராவைப் பார்த்து, “உன் அம்மா ஏதோ சொல்கின்றாள்…. நீ என்ன முடிவு எடுத்திருக்கின்றாய் சக்ரா?.” என்று வினாவினார்.
“எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை அப்பா.” என்றான் ஒற்றை வாக்கியத்தில்.
Advertisement
அதைக்கேட்ட வேதா கோபமாக கத்த அராம்பித்தார். “எதை மனதில் வைத்துக் கொண்டு நீ இப்படி பேசுகின்றாய் சக்ரா…” என்க.
Advertisement
சுந்தரோ, “நீ அமைதியாக இரு வேதா. நான் பேசிக் கொள்கின்றேன்.” என்ற சுந்தர் சக்ராவைப் பார்த்து, “உன்னை கேட்டு தானே முதலில் இதை எல்லாம் ஏற்பாடு செய்தோம். இப்போது வந்து எதற்காக அப்படி பேசுகின்றாய் சக்ரா…. இதில் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் அடங்கி இருக்கின்றது.”
“சாரி அப்பா… எனக்கு வேறு வழி தெரியவில்லை. மாலினி ஒருவனை விரும்புகின்றாள்.” என்றதும் அவன் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியானது.
இருக்கையில் இருந்து கோபத்தோடு எழுந்த வேதா, “அவளுக்கு எவ்வளவு தைரியம்…. அவளுடன் சுத்துகின்றாள் அல்லவா…. அவள் சேர்க்கை தான் சரியில்லை…” என்று சனாவை மறைமுகமாக தாக்கி பேசினார்.
Advertisement
அது சக்ராவிற்கு புரியாமல் இல்லை. “அம்மா! இது சனாவிற்கே தெரியாது. அவள் வீட்டை விட்டு செல்ல நான் தான் ஏற்பாடு செய்தேன். ஆனால் சனா தான் அவளை திரும்பவும் அழைத்துவந்தாள்.” என்றான்.
எப்படியாவது தன் தாயின் முன் சனாவின் நல்ல குணத்தை நிரூபித்து விட வேண்டும் என்ற உத்வேகத்தில் பேசினான்.
வேண்டாத பொண்டாட்டி கைபட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பதனைப் போல பேச ஆரம்பித்தார் வேதா.
“அப்போ வேறு ஒருவனுடன் ஓடிப்போனவளை, உன் தலையில் கட்ட பார்த்தாளா?” என்றான் பல்லைக் கடித்தபடி.
தன் தலையில் கைவைத்துக் கொண்டவன், “அவளை அவனுடன் அனுப்பியதே நான் தான் அம்மா…” என்று சொல்லும்போதே கோபமாக அங்கிருந்து சென்றுவிட்டார் வேதா.
அவராலும் இதை என்ன செய்துவிட முடியும். தனக்கு மிகவும் பிடித்த அண்ணன் மகள் இவ்வாறு செய்தது அதிர்ச்சியாக இருந்தது. ‘உடனே இதைப் பற்றி உமாவிடம் பேசவேண்டும்.’ என்ற நினைப்புடன் சென்றார்.
“நீ ஏன்டா அவள் காதல் விவகாரத்தில் தலையிடுகின்றாய்?. இப்போது பார் உன் அம்மா உன் மீது கோபமாக செல்கின்றாள்.” என்று கேள்வி எழுப்பினார் சுந்தர்.
“மாமாவும் அத்தையும் இதற்கு கண்டிப்பாக ஒத்துக்கொள்ளமாட்டார்கள். ஏதவாது செய்து அவளை என் தலையில் தான் கட்ட பார்ப்பார்கள். அதனால் தான் அவளுக்கு உதவி செய்தேன் அப்பா..” என்று சொல்லிவிட்டு சாப்பிட அராம்பித்தான்.
“அப்போ உன் திருமணம்…” என்று அவர் சொல்லும்போதே, “இப்போதைக்கு அதைப் பற்றிய யோசனை எனக்கு இல்லை அப்பா…” என்று கூறி அதற்கு தற்சமயம் முற்றுப்புள்ளி வைத்தான்.
சுந்தரும் உண்டுவிட்டு சென்றதும் தான் சிவா கீழே இறங்கி வந்தான். கீழே நடந்த களோபரம் எதுவும் தெரியாமல் கொட்டாவி விட்டபடியே வந்தவனைப் பார்த்து சக்ரா முறைத்தான்.
அவன் முறைப்பது எதுவும் அவன் கவனத்தில் இல்லை. அவன் இறங்கி வருவதைப் பார்த்து, “இப்போது தான் உனக்கு விடிந்ததா சிவா?.” என்று அழுத்தமான குரலில் கேட்டான்.
“ஹி… ஹி… நேற்று இரவு சரியான தூக்கம் இல்லைடா அண்ணா.” என்று சொல்லிக் கொண்டே அவன் அருகே வந்து அமர்ந்தான்.
“இன்று முக்கியமான டெண்டர் ஏலம் உள்ளது.” என்று சொல்லிக் கொண்டே தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான் சக்ரா.
“ம்… எனக்கும் தெரியும். நான் சீக்கிரமாக வந்துவிடுவேன்.” என்று சிவா கூற.
அவனை நிமிர்ந்து பார்த்தவன், “நீ அங்கே வர தேவையில்லை. அதை நானே பார்த்துக்கொள்வேன்.”
‘அப்பாடா…’ என்று அவன் பெருமூச்சு விடுவதற்குள், “உனக்கு வேறு ஒரு வேலை வைத்திருக்கின்றேன்.” என்றான் சக்ரா.
அவன் என்னவென்று என்பது போல் பார்க்க, தன் அலைபேசியில் பதிவு செய்திருந்த ஒரு புகைப்படத்தைக் காட்டி, “இந்த படத்தில் உள்ள வாகனத்தைப் பற்றி எனக்கு முழு விபரமும் வரவேண்டும்.” என்றான் ஒரு மாதிரியான குரலில்.
தன் அண்ணனின் குரல் வேறு பாட்டை உணர்ந்தவனாக , தன் விளையாட்டை கைவிட்டு, “என்னாச்சி அண்ணா? எதுவும் பிரச்சனையா?.” என்று சிவா கேட்க.
“ஆம்.” என்று தன் தலையை ஆட்டியவன், “பிரச்சனை தான். இந்த லாரி மூலம் சனாவைக் கொல்ல யாரோ திட்டம் தீட்டி இருக்கின்றனர். நேற்று சனா இரண்டு முறை தப்பி பிழைத்திருக்கின்றாள்.” என்றான் கண்களில் கனல் தெறிக்க.
அவன் மொழி கேட்டு அதிர்ந்து விழித்த சிவா, புகைப்படத்தில் இருந்த லாரியை கூர்ந்து கவனித்து, “சரி அண்ணா!. ஆனால் சனாவை கொல்லும் அளவுக்கு, அவளுக்கு யார் எதிரியாக இருக்கப்போகின்றனர்?. ஒருவேளை அத்தையின் தொழிலில் இடையூறு செய்யும் யாராவதாக இருப்பார்களா?.” என்று வினாவ.
அதற்கு பெருமூச்சு ஒன்றை விட்டவன், “அதை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும். இந்த படத்தை உனக்கு அனுப்பிகின்றேன். நான் எஸ்பியிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். நீ பார்த்துக்கொள்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் சக்ரா.
செல்லும் அண்ணனையே பார்த்தவன், “காதல் கதையில் கிரைம் சீனா? இண்டரஸ்டிங்!.” என்று சொல்லிகொண்டே, சக்ரா அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்தான்.
அதை ஜூம் செய்து பார்த்தவன், “நம்பர் ப்ளேட் இல்லாத வண்டி…. சரி பார்ப்போம்…” என்றவன் தன் அலைபேசியை சட்டைப்பையில் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.
************************************
இரவு முழுவதும் சரியாக உறக்கம் இல்லாமல் நேரம் கழித்தே விழித்திருந்தாள் சனா. நேற்று சக்ரா பேசியதிலையே அவள் மனம் சுற்றிவந்தது.
அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த அமலா, அவள் அருகே வந்து, “நேற்று உன்னிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டேன். அம்மாவை மன்னித்துவிடுடா…” என்று சொல்லி அவள் தலையைத் தடவி, நெற்றியில் முத்தம் ஒன்றை வைத்தார்.
“அப்படி இல்லை அம்மா! என் மீதும் தவறு இருக்கின்றது.” என்று சொல்லி தன் தலை குனிந்தாள்.
அவளின் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தியவர், “என் பொண்ணு எப்பவும் தலை குனியக்கூடாது, என்று தான் நான் விரும்புகின்றேன் சனா.” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
பின், “எனக்கு இப்போதே அவசரமாக டெல்லி செல்லவேண்டியது உள்ளது சனா. இன்று ஒரு திருமணவீடு உள்ளது. எனக்கு பதிலாக அதை நீ அட்டென்ட் செய்யவேண்டும். பார்த்துக்கொள்.” என்று கூறிவிடைபெற்றார்.
பின் குளித்து கிளம்பி, மாந்தளீர் நிறத்தில் காஞ்சி பட்டு உடுத்தி அதற்கு தோதாக ரூபி செட்டையும் அணிந்து கொண்டாள். அம்மன் விக்கிரகம் போல் கீழே இறங்கி வந்தவளைப் பார்த்து ஆண்டாள் அசந்து தான் போனார்.
“என் ராசாத்தி….” என்று அவளை நெட்டி முறித்தவர், அவளின் தலையில், அவளுக்கு மிகவும் பிடித்த செண்பகப்பூவை சூடினார்.
தொழில் துறையில் இருக்கும் ஒருவரது திருமணதிற்கு தான் வந்திருந்தாள் சனா. தொழில் துறையில் அனைவரும் அவளுக்கு பழக்கம் என்பதால், திருமணவீட்டினர் அனைவரும், அவளை அன்புடன் உபசரித்தனர்.
முன் வரிசையில் சென்று அமர்ந்தவள், தன் முன் நீட்டப்பட்ட மாங்கள்யத்தை, தொட்டு கும்பிட்டாள்.
அதைப் பார்த்த உடனே அவளுக்கு சக்ராவின் நியாபகம் தான் வந்தது. ‘என் வாழ்வில் திருமணம் என்பது ஒரே ஒரு முறை மட்டும் தான்.’ என்று அவன் சொன்னவார்த்தைகள், அவள் காதில் இன்னும் அருவமாய் கேட்டுக்கொண்டே இருந்தது. சேலையின் உள்ளே தன் நடுநெஞ்சில் வீற்றிருக்கும் தாலிக் கொடியை, வெளியே தன் சேலையுடன் சேர்த்து பற்றிக்கொண்டாள்.
சக்ராவின் நினைப்பைக் கலைப்பது போல, இரண்டு பெரிய இடத்துப் பெண்மணிகள் பேசுவதும் அவள் காதில் விழுந்தது.
“அக்கா! இது தேவி நிறுவனர் அருணகிரியின் பேத்தி தானே!.” என்று ஒருவர் ஆச்சரியமாக கேட்க.
இன்னொருவரோ, “ஆமாங்க அக்கா. அவரின் முதல் பேத்தி தான். இந்த பெண்ணோட தங்கைக்கு திருமணம் ஆகப்போகின்றது. ஆனால் இவளுக்கோ திருமணத்தைப் பற்றி கூட இன்னும் பேசாமல் இருக்கின்றனர்.” என்று கூற, மறுபுறம் இருந்தவர் ஆச்சரியப்பட்டார்.
“இதற்கு ஏன் அக்கா ஆச்சரியப்படுகின்றீர்கள்? பெண்களை அதிகம் படிக்க வைத்தால் இப்படி தான் ஆகும். நானெல்லாம் என் மகளுக்கு மூன்று வருடம் கல்லூரி படிப்பை முடித்ததும், திருமணத்தை முடித்துவிடுவேன்.” என்றார் பெருமை மிகு குரலில்.
“நீங்கள் சொல்வதும் சரி தான் அக்கா… வேலைக்குப் போகும் பெண்களுக்கு எல்லாம் ஒரு வித தலைக்கனம் இருக்கும். அதனால் தானே இவள் அப்பா இவள் அம்மாவைப் பிரிந்து வேறு ஒருவளை திருமணம் செய்துகொண்டார்.” என்று சொல்லி இருவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.
அதை எல்லாம் கேட்டவளின் உள்ளம் உலைக்களமாக கொதிக்க ஆரம்பித்தது, ‘இவர்கள் எல்லாம் என்ன மாதிரியான ஆட்கள். தன்னைத்தானே உயர்ந்த மக்கள் என்று கூறிக்கொண்டு திரியும் இவர்களுக்கு, பொது இடத்தில் மற்றவர் கேட்கும் பொருட்டு குறை பேசுவது அசிங்கமாக தெரியவில்லையா?.’ என்று நினைத்தவள், தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து விருட்டென்று எழுந்தாள்.
தன்னைப் பேசியவர்கள் முன்பு சென்று நின்றதும், சனாவைப் பார்த்த அவர்கள் முகத்தில் பயம் இல்லை. மாறாக தெனாவெட்டாகவே இருந்தனர்.
பொதுவாக இது போன்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் இது போல் நடப்பது சகஜமான ஒன்றே. பொழுது போகாமல் ஒரண்டை இழுக்கவே சிலர் இதுபோல் இருப்பர்.
‘முகத்திற்கு முன்னால் ஒன்று பேசிவிட்டு, பின்னால் சென்று புறம் பேசுவர். இது எந்த காலத்திற்கும் மாறாத ஒன்று. பேசுபவர் பேசிக்கொண்டே தான் இருப்பர். அதை எல்லாம் நீ கண்டிகொள்ள கூடாது.’ என்று முன்பு பள்ளியில் ஒரு பையனுடன் தகராறாகிப் போக, அப்போது அமலா சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தாள்.
இரண்டு பெண்மணிகளையும் பார்த்து, “நல்லா இருக்கீங்களா ஆண்ட்டி?.” என்று இருவரையும் பார்த்து நலம் விசாரித்தாள்.
அவ்வளவு நேரம் அவளைப் பற்றி புறம் பேசியவர்கள், வாயெல்லாம் பல்லாக இளித்துக்கொண்டு, “நாங்க நல்லா இருக்கோம்மா…. வீட்ல அம்மா பாட்டி எல்லாம் சௌக்கியமா?.” என்று சம்பிரதாய விசாரிப்புகள் நடைபெற்றது.
error: Content is protected !!