Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 18.1

“பேச கூடாதது எல்லாம் பேசிட்டு இப்ப ஒக்காந்து இழுவுனா எல்லாம் சரியாகிடுமா?”

உணவை உண்ணாமல் அதை பார்த்தபடியே அமர்ந்திருக்கும் மகளை எத்தனை திட்டியும் மனம் ஆறவில்லை சீதாவிற்கு.

அன்று தேவா பேசிய வார்த்தைகளின் தாக்கத்தில் இருந்து மீளாத பைரவியை தேவா நேரமாகிறதென வீட்டிற்கு அழைக்க, மாட்டேன் என சொல்லவும் உன் விருப்பம் என அவனும் சென்றுவிட்டான்.

இதோ பத்து நாட்கள் ஆகிறது அவனும் சென்று. ஒரு முறை கூட அவனும் கைபேசியில் கூட பேசவில்லை, அவளும் பேச விரும்பவில்லை. கோவம், ஏமாற்றம், காழ்ப்புணர்ச்சி, வருத்தம், வேதனை என மனிதன் வாழ்க்கையில் சங்கடத்தை ஏற்படுத்தும் உணர்வுகள் மட்டுமே பைரவியிடம்.



Advertisement

அனைவர் முன்பும் வைத்து இருவரது அன்னையும் பேசியதை கேட்டும் அமைதியாக இருந்தான் என்றால் அந்த எண்ணம் தான் அவன் மனதிலும் இருந்ததா என்ற வருத்தம். சரி அன்று தான் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்…

அதற்கு பிறகான நாட்கள் கூட தன்னை பற்றி யோசிக்காமல் இருந்துவிட்டானா என்று மனம் விட்டு போன உணர்வு. திருமணத்திற்கு முன்பு எப்படி அறையினுள்ளே அடைந்து கிடந்தாலோ அதை விட அதிகம் ஒடுங்கிபோனாள்.

அப்படியே விடுபவன் தேவா இல்லை தான் என்ற நம்பிக்கை இருந்தாலும் இந்த இரண்டு வாரங்களில் அவன் காட்டும் ஒதுக்கம் அவ்வளவு தானா என்ற விரக்தி நிலையை கொடுத்தது.

Advertisement

“உன் அண்ணன் வார்த்தை ரெண்டு விட்டா, அது உனக்காகன்னு தெரியாத அளவா கூறுகெட்டு போன கூவ மாதிரி இருப்ப நீ?”

Advertisement

“நானும் கண்ண கண்ண பின்னால இருந்து காட்டிட்டே இருக்கேன். நிறுத்துறியா நீ? ப்பா ஆனாலும் ஒரு பொட்ட புள்ளைக்கு இம்புட்டு கோவமும் பிடிவாதமும் ஆகாது, கடைசில ஒக்கார வச்சிடுச்சுல ஒரு மூலைல” மனம் ஆரமாட்டாது தன் வாக்கில் மகளை அலசிக்கொண்டே வேலையை பார்த்தார் சீதா.

“ஊர்ல ஒரு பயலும் நீ பண்ண காரியத்துக்கு உன்ன கட்டிக்க மாட்டேன்னு நின்னப்போ கடவுளா உன் மேல பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுத்தவன் அந்த பையன்..”

அன்னையின் கூற்றில் வேதனை பன்மடங்காக இறுக்கமாக கண்களை மூடி திறந்தவள் வேதனை அந்த தாய்க்கு தெரியவில்லை போலும்.

Advertisement

“ஏன் காதலிச்சவல தான் கட்டிக்கணுமா? உன்ன கல்யாணம் பண்ணிட்டு அந்த பையன் இல்ல?”

“எப்படி ம்மா இவ்ளோ மாறுனீங்க? என் அண்ணனோட வாழ்க்கையை அழிச்சு தான் எனக்கு அந்த வாழ்க்கை அமையும்னு தெரிஞ்சிருந்தா இந்நேரம் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிருக்கவே மாட்டேன்” என்றாள் மௌனத்தை உடைத்து.

மகள் பேசியதில் கண்ணீர் பெருகிட, “வாடி, இப்பயே உன் மாமனும் பிடி குடுத்து பேச மாட்டிக்கிறான், தேவாவும் ஒரு போன் பண்ணாக தெரியல, இதுல நீ இப்டியே ஏடாகுடமா பேசி, இந்த வீட்டுலையே இருந்து காலம் எல்லாம் என் வீடுகாருக்கும், மகனுக்கும் சுமையாவே நின்னுடு”

ஒருமுறை தவறிப்போன நல்வாழ்க்கை மீண்டும் பாதாளத்தில் விழுந்திடுமோ என்ற ஆற்றாமையை யோசிக்காமல் பாதிக்கப்பட்டவளிடமே கொட்டினார்.

“செத்தாலும் சாவேனே தவற, இந்த வீட்டுக்கு பாரமா ஒரு நாளும் இருக்க மாட்டேன்… போதுமா?” வாடிக்கிடந்த மனம் வெம்பி வெடித்து சிதற, தாங்காத காயத்தோடு அறைக்குள் சென்று அடைந்துகொண்டாள் பைரவி.

பெருகி வந்த கண்ணீரை துடைத்து உடைகளை எடுத்து வைத்தவள் அன்னையிடம், “எங்க வீட்டுக்கு போறேன்” என மதுரை கிளம்பிவிட்டாள்.

வீட்டில் ஆண்களும் இல்லாமல் இருக்க சீதாவிற்கு மகளின் வாழ்க்கை சீராக வேண்டுமென அவளை தடுக்கவும் இல்லை. தனியாக திருமணத்திற்கு முன்பு வந்து சென்றவள் என்று தானே அதிக சிரத்தையும் எடுக்கவில்லை.

வேகத்தில் வந்தவள் பேருந்து நிறுத்தத்தை அடைந்ததும் திணறிப்போனாள். பாழாய்ப்போன நினைவுகள் அனைத்தும் மீண்டும் கண் முன்னே வந்து நிற்கின்றன.

இன்று கூட்டமும் அங்கு அதிகமிருக்க தங்கள் பேருந்து வந்ததும் சிலர் எதார்த்தமாக அவளை உரசி சென்றது கூட உதறலை தந்தது. பேருந்து நிலையம் செல்லும் பேருந்து சில வந்தும் கூட அதில் ஏற மனமில்லாமல் சிதைந்த நினைவுகளோடு மூலையில் ஒதுங்கி நின்றிட கோவமாக வந்தது.

எல்லாம் தேவா மேல் தான். கோவம் என்ன கோவம்? கண் மண் தெரியாத அளவிற்கு கோவம் வந்து இன்று தான் தானே அவஸ்தைப்படுகிறேன்? அவன் தங்கை நிம்மதியாக அன்னையின் கைகளுக்குள்ளும் தந்தை சகோதரனின் பாதுகாப்பிற்குள்ளும் இருக்கிறாள். தானோ வீதியில்.

கோவம் அதிகமாக அது கண்ணீராய் மாறி நின்றது. கைபேசியை எடுத்தவள் அதே கோவத்தோடு அவனுக்கு அழைக்க சில நொடிகளில் அழைப்பை ஏற்றுவிட்டான்.

எடுத்த உடனே அவனை பேசவிடவில்லை, “இப்டி பாதிலையே விட்டுட்டு போக தான் கல்யாணம் பண்ணி இவ்ளோ நம்பிக்கை குடுத்தீங்களா? உங்க தங்கச்சிக்காக நீங்க சண்டை போட்டு நினைத்து எவ்ளோ சரியோ, அதே பிடிவாதத்தை நான் வச்சு கேக்குறது தப்பா இருக்கு.

உங்க அம்மா என்ன திட்டுனப்பையும் தடுக்கல, என் அம்மா என்ன அடிச்சப்பயும் கூட நிக்கல.  எல்லார் பண்ணதும் சரி ஆனா ஒரு காதல் பிரிய கூடாதுன்னு நினைச்ச நான் தப்பு செஞ்சவ.

சரி இந்த பாவி கூட இனிமேல் நீங்க பேச வேணாம். பரிதாபப்பட்டு, இரக்கப்பட்டு அப்டி ஒன்னும் என் கூட”

“பைரவி” தேவாவின் கண்டிப்பு குரலை உதறினாள்.

“…வாழணும்னு யாருக்கும் அவசியமில்லை. உங்க இஷ்டம் போல இருங்க. போதும் நான் எல்லாருக்கும் பாரமா இருந்தது” இணைப்பை துண்டித்து கையிலிருந்த பையில் கைபேசியை திணித்தவள் அடுத்து வந்து நின்ற மணி பஸ்ஸில் ஏறிவிட்டாள்.

கண்ணில் பட்ட முதல் இருக்கையில் அமர்ந்தவள் கண்ணீர் நிற்க வழியில்லாமல் வழிந்துகொண்டே இருக்க, முகத்தை ஜன்னலோரம் திருப்பி கண்களை மூடிக்கொண்டாள்.

எதற்காக தேவாவிற்கு அழைத்தோம் என்று கூட தெரியவில்லை, தேவையில்லாததை பேசி சண்டையிட தானோ என்னவோ.

ஆனால் ஒன்று மட்டும் அவள் ஏற்க மறுத்தது உண்மை. அவன் குரலையாவது கேட்க வேண்டும் என உள் மனம் அடித்துக்கொண்டது. அது யாசகம் பெறவோ, செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கவோ இருக்கக்கூடாதென்பதிலும் உறுதியாக இருந்தாள்.

ஒரு வரி கவிதை சில சமயம் மனதிற்கு போதையூட்டுவது போல் அவன் ஒரு வார்த்தை தைரியம் ஊட்டியது. அவனே உடன் வருவது போல்.

சந்தோஷ் வேறு தொடர்ந்து அழைத்துக்கொண்டு இருக்க எடுத்தபாடில்லை, அடுத்தது குறுந்செய்தி ஒன்றை அனுப்பியிருந்தான், ‘எங்கடா இருக்க, சொல்லு அண்ணன் வர்றேன்’ என.

அதை அனைத்து வைத்துவிட்டாள். பேருந்து நிலையம் வந்ததும் இறங்கியவள் ஒரு நிழற்கூரையின் கீழ் நின்றாள் அந்த அகன்ற நிலையத்தை பார்த்தாள்.

முதலில் மதுரை சென்று தாய்மாமன் இல்லம் சென்றிடலாம் என தான் வந்தது, அதன் பிறகு அவனிடம் பேசியதில் இனி அங்கும் செல்ல இயலாது. தவித்து நின்ற தருணம் மீண்டும் எட்டிப்பார்த்த கண்ணீர் கண்ணிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்க கையிலிருந்த கைப்பை மேல் பைரவியின் இறுக்கம் கூடியது.

தடாலடியாக ஒரு கரம் அவள் கையை பற்றி இழுத்திட அன்னை சகோதரனை ஏவியிருப்பார் என பயந்தவள், “அண்ணா…” என அதிர்ந்து திரும்பிட, “திருத்தம். புருஷன்” என்ற கூரிய பார்வையோடு தேவா நின்றான்.

அவன் மனைவியை முறைத்து இழுத்து செல்ல திமிராமல் அவன் வழி நடந்தாள் பெண்ணவள். பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் வர அங்கு அவனது வாகனம் நின்றிருந்தது. அதன் அருகில் அவள் சகோதரனும்.

தேவா வந்ததே வியப்பை தந்திருக்க இருவரும் ஒன்றாக நின்றது சந்தேகத்தை தந்தது.

சகோதரியை பார்த்ததும் வாடியிருந்த முகம் சற்று தெளிச்சியடைந்தது சதோஷிர்க்கு, “பாப்பா என்ன இது பழக்கம்? யார்கிட்டயும் சொல்லாம உன்வாட்டுக்கு கெளம்பி வர்றது?”

“என்ன சுமையா நினைச்ச வீட்டுல எனக்கென்ன வேலை?”

“அம்மா சொன்னாங்களா அப்டி?” பயம் நீங்கி கோவம் இடம்பெற்றது சந்தோஷ் முகத்தில்.

“விடு சந்தோஷ், நாங்க கெளம்புறோம்” என்றான் தேவா.

“நான் உங்க கூட வரல” என்றாள் முறுக்கிக்கொண்டு.

“எங்க போவ?”

“எங்கையாவது போறேன், விட்டுட்டு போனவர் தான நீங்க… எதுக்கு புதுசா அக்கறை வருது?”

சந்தோஷ் ஏதோ பேச வர அவனை அனுப்பி வைத்து மனைவியை வலுக்கட்டாயமாக வாகனத்தினுள் திணித்தான் பொருளை போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!