Skip to content
Post Views: 1,044
காலையில் இருந்து மதியம் வரை மாலினியுடன் ஷாப்பிங் சென்று வந்தது, சனாவின் மனதில் புன்னகையை வரவழைத்து இருந்தது. அது அவளுடைய முகத்திற்கு எல்லையற்ற வனப்பை தந்திருந்தது.
அதே முகமலர்ச்சியுடன் தன் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தவளைப் பார்த்த அமலாவின் உள்ளத்தில் மகிழ்ச்சி உண்டாகவில்லை.
‘இன்றும் அந்த பெண்ணிற்கு செலவு செய்துவிட்டு வருகின்றாளா!.’ என்ற எண்ணம் அவர் அகத்தில் உண்டாகி முகம் சுருங்கும்படி செய்தது.
வரவேற்பு அறையில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தவர், “சனா! இன்று மீட்டிங் ஒன்று இருந்ததே! அங்கு செல்லாமல் என்ன செய்து கொண்டிருந்தாய்?.” என்று உணர்ச்சியினால் கம்மிய குரலில் கேட்டுக் கொண்டே எழுந்தார்.
Advertisement
“மாலியுடன் ஷாப்பிங் சென்றேன் அம்மா. நாளை அவளுக்கு நிச்சயதார்த்தம் அல்லவா!.” என்றதும் தான் தாமதம் அமலாவின் கோபம் எல்லையைக் கடக்க ஆரம்பித்தது.
“அவள் விஷேசத்திற்கு நீ ஏன்டி அவளுடன் சென்றாய்?. ஏன் அவளுக்கு யாரும் இல்லையாக்கும்?.” என்று நொடித்துக் கொண்டார்.
அவ்வளவு சீக்கிரத்தில் கோபம் கொள்பவர் அல்ல அமலா. அவரிடம் எப்போதும் சாந்தம் நிறைந்திருக்கும். அதனால் தான் அவள் மாலினியுடன் பழகும்போது கூட அவர் ஒன்றும் கூறாமல் இருந்தார்.
Advertisement
‘தன் மகள் ஒன்றும் விவரம் தெரியாதவள் இல்லையே! அனைத்தையும் அவள் பார்த்துக்கொள்வாள்.’ என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.
Advertisement
ஆனால் ஒவ்வொரு தடவையும், தன் மகள் மாலினிக்கு அதிகமாக செலவு செய்துகொண்டிருக்க, அவளை கடுமையாக கண்டித்தார்.
ஆனால் சனாவோ, “இதில் என்னம்மா இருக்கு?. இதே மாலினி நீ பெற்ற மகளாய் இருந்தால், இதுபோல் பேசுவாயா?.” என்று கூறி அவள் வாயை அடைத்துவிடுவாள்.
ஆனால் அவரோ விடாமல், “அந்த பெண் வேண்டும் என்றே இது போல் செய்வது போல் உள்ளது சனா.” என்று கூற.
Advertisement
அவளோ, “அவள் எப்படியும் செய்யட்டும். மாலியை என்னுடன் பிறந்தவளாக தான் நான் பார்க்கின்றேன்.” என்றதும், அடுத்து அமலா எதுவும் பேசவில்லை.
“அம்மா!” என்றபடியே அவரை ஒருபக்கமாக அணைத்து, அவரது தோளில் சாய்ந்தவள், “இன்று ஒரு நாள் மட்டும் தான்.” என்றாள் கொஞ்சியபடியே.
“ஆனால் மீட்டிங்…” என்று எதுவோ சொல்லப் போனவரை பேசவிடாமல், “அம்மா! அந்த மீட்டிங் கான்சலாகி விட்டதாக என் பிஏ கூறினார். அதனால் தான் நான் ஷாப்பிங் சென்றேன்.” என்றதும் தான் அவர் மனது அமைதியானது.
ஆனால் இன்னொரு மனஅழுத்தம் புதியதாக உருவாகி அவர் மனதை அரிக்க துவங்கியது.
சனா அவளது அறைக்கு செல்வதைப் பார்த்து, ‘சனாவிற்கும் வேகமாக மணமுடிக்க வேண்டும்.’ என்று தன் மனதினுள் நினைத்துக்கொண்டார்.
அதுவரை இவர்களது சம்பாஷணைகளை கேட்டுக்கொண்டிருந்த அமலாவின் தாய் ஆண்டாள், செல்லும் சனாவையே பார்த்துக் கொண்டிருந்த அமலாவின் அருகே வந்தவர், “உன் மகளை விட சிறிய பெண்ணிற்கு எல்லாம் திருமணம் ஆகப்போகின்றது. ஆனால் நீயோ ஒன்றும் செய்யாமல் இப்படி வருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றாய்!.” என்றார் கடுமையாக.
அவருக்கும், ‘திருமணமே தன் வாழ்க்கையில் கிடையாது.’ என்று சொல்லும் தன் பேத்தியை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது.
தன் தாயின் முகத்தை ஏறிட்ட அமலா, “என்னை என்னம்மா செய்ய சொல்கின்றீர்கள்?. என் வாழ்வில் ஏற்பட்ட துயரத்தைக் கண்டு, அவள் இப்படி எல்லாம் பேசுகின்றாள்!.” என்றார் கோபமான குரலில்.
“நாம் பேசுகின்ற விதத்தில் பேசினாள் அவள் கண்டிப்பாக ஒத்துக்கொள்வாள். நாம் முதலில் வரன் பார்க்க ஆரம்பிக்கலாம். அதற்கு முன் அவளது ஜாதகத்தை ஜோசியரிடம் காட்டி வரலாம்.” என்று யோசனை கூறினார் ஆண்டாள்.
‘தன் தாயின் கூற்றுப்படி முயற்சி செய்யலாம்.’ என்ற யோசனைகளுக்கு தாவினார் அமலா.
கடல் போல் விரிந்து கிடக்கும் தனது வீட்டில், நீச்சல் குளத்திற்கு மிக அருகில் நான்கு அழகு தூண்கள் கம்பீரமாக நிற்க, அதில் வெற்றிலை கொடிகள் படர்ந்து கிடக்க, நடுவே இருந்த அழகிய வேலைப்பாடு கொண்ட பியானோவை வாசித்துக் கொண்டிருந்தான் சக்ரா.
அவனது இசைக்கு, தூண்களில் இருக்கும் சிற்பமும் உயிர்பெற்று அவனது இசைக்கு மயங்கி நிற்பதைப் போன்ற அருவம், அவன் கண்களுக்கு தோன்றியதும் சிரித்துக் கொண்டான்.
அப்போது எதிர்பாராத விதமாக, அவனைப் பின்னிருந்து அணைத்தாள் மாலினி.
அதில் சட்டென்று அவனது காரட் போன்ற விரல்கள் இசைப்பதை நிறுத்தியது.
“என்னாச்சி சக்ரா! ஏன் நிறுத்திவிட்டாய்!. உன் இசையை கேட்க ஓடோடி வந்த என்னை இப்படி ஏமாற்றிவிட்டாயே!.” என்றாள் விளையாட்டாக.
படாரென்று, தன் முழு உயரத்திற்கு எழுந்து தன் மீதிருந்த அவளது கையை தட்டிவிட்டவன், “நான் என்ன செய்ய சொன்னால் நீ என்ன செய்து கொண்டிருக்கின்றாய்?.” என்றான் கோபமாக.
அப்போது தான் திரும்பி நின்றவனைப் பார்த்தவளின் முகத்தில் பயம் சூழ ஆரம்பித்தது.
கோபத்தில் அவனது உதடுகள் துடித்தன, புருவங்கள் மேலேறின. கண்களில் இருந்து மின்னல் கிளம்பி மாலினியை அருவமாய் தாக்கின. அதைப் பார்த்து நடுங்கியவள், “சக்ரா! நான்…” என்று எதுவோ சொல் வருவதற்குள்.
“போதும். நீ எதுவும் பேச வேண்டாம்.” என்று சீறியவன், தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, “இனி நீயாக எதுவும் செய்யக்கூடாது. நான் அனைத்தையும் பார்த்துக்கொள்வேன்.” என்றான் உரும்பலாக.
அவளும் தலையாட்டி பொம்மையைப் போல தன் தலையை தலையை ஆட்டிக் கொண்டவள், அங்கிருந்து நகரப்போனாள்.
பின் சக்ரா என்ன நினைத்தானோ, “மாலினி! கொஞ்சம் நில்.” என்றான் வெளியே செல்லப்போனவளைப் பார்த்து.
‘அச்சோ! அடுத்து என்ன சொல்லி திட்டப்போகின்றாரோ!.’ என்று மனதில் நினைத்து பயந்தபடியே, அவனைப் பார்த்து திரும்பினாள்.
அவளைப் பார்த்தவன், “சனாவிற்கு இது தெரியுமா?.” என்று கேட்டான்.
“இல்லை.” என்று தன் தலையை ஆட்டியவள், “அக்காவிற்கு தெரியாது சக்ரா. தெரிந்தால் தாத்தாவிடம் கூறிவிடுவார்.” என்றாள் தலையைக் குனிந்தபடி.
“சரி போ! ஆனால் ஜாக்கிரதை. என்னை மீறி நீ எதுவும் செய்யக்கூடாது.” என்று கூறி அவளை அனுப்பி வைத்தான்.
அங்கே பக்கவாட்டுப்பக்கமாக இருந்த தன் அறைக்குள் சென்றவன், அங்கிருந்து பால்கனி சென்றான்.
விசாலமாக இருந்த அந்த பால்கனியில் உள்ள பளிங்கு கல் மேடையில் அமர்ந்தவனின் கண்கள், விண்மீன் வைரங்கள் பதித்த வானவீதியை ரசனையாக பார்த்துக்கொண்டிருந்தது.
ஆனால் அந்த அழகை அவன் சனாவுடன் தொடர்பு படுத்தவும் தவறவில்லை.
அவனுடைய உள்ளத்தில் சனாவின் மீது பிரேமை பொங்கிக்கொண்டிருந்தது.
அவளுடைய திவ்விய முகத்தைப் பார்க்கும் போதெல்லாம், அவனுடைய மனது எதுவோ செய்து, அவன் அகத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கியது.
அப்போதெல்லாம் ஓடி சென்று அவள் அணைப்பில் இருந்து கொள்ள மாட்டோமா! என்ற ஆவல் அவனுள் எழுந்தது. ஆனால் அது முடியாமல் போகவே, அவனது ஆசைகள் அனைத்தும் கோபமாக மாறியது.
அந்த கோபமே சனாவை பார்க்கும் நேரம் எல்லாம் அவளை வசைபாடியது. ஆனால் எல்லாம் சில காலம் மட்டுமே!. இப்போது தான் சனாவுடன் சேர நேரம் வந்துவிட்டதாகவே அவன் கருதினான். அதனால் வந்தது தான் அவன் காதல் கொண்ட ரசனைப் பார்வை.
அவளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தவன், தன்னை அறியாமலையே தன் அலைபேசி மூலம் அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
தன் அலைபேசி மூலம் சமூகவலைதளத்தில் உலாவிக்கொண்டு இருந்த சனா, பதியாத எண்ணில் இருந்து அழைப்பு வரவே, அதை எடுத்து காதில் வைத்தாள்.
ஆனால் அந்தப்பக்கம் எதுவும் பேசாமல், வெறும் மென்மையான விசில் சத்தம் கேட்கவே குழம்பினாள் பெண்ணவள்.
“ஹலோ! யார் பேசுறது?.” என்றாள் கடினமான குரலில்.
உடனே மாயவலையில் இருந்து விடுபட்டவன் போல, தன் சத்தத்தை நிறுத்தியவன், “நான் தான் சனா…” என்று அவன் வாயில் இருந்து உதிர்த்த வார்த்தைகளைக் கேட்டதும், அது யார் என்று உணர்ந்து கொண்டவளின் மனது கடினமானது.
இருந்தும் தன்னை சமாளித்துக் கொண்டவள், “நாளை உனக்கு முக்கியமான நாள் அல்லவா! அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் சக்ரா…” என்றாள் அவன் பெயரில் அழுத்தத்தைக் கூட்டி.
அவனும் மிக சாதரணமாக, “பரவாயில்லையே! நான் யார் என்று என் குரல் மூலமே கண்டுபிடித்துவிட்டாய்!.” என்று குதுகலமாய் பேச ஆரம்பித்தவன், “உன் வாழ்த்துக்கு நன்றி சனா…” என்றான் மென்மையாக.
அந்த மென்மைக்கு மயங்காதவள், “இப்போது எதற்காக எனக்கு அழைத்தாய்?.” என்றாள் அழுத்தமாய்.
“நாளை என் நிச்சயதார்த்த விழாவிற்கு உன்னை அழைக்க மறந்துவிட்டேன். அதற்கு தான் அழைத்தேன்.” என்றவன் முகத்தில் லேசாகப் புன்னகை அரும்பியது.
“சொல்லிவிட்டாய் அல்லவா!. நான் வைக்கின்றேன்.” என்று முகத்தில் அடித்ததைப் போல கூறியவள், அவன் அடுத்த வார்த்தைகள் பேச வருவதற்குள் அலைபேசியை அணைத்திருந்தாள்.
அதில் சக்ராவின் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது. இருந்தும் தன் தோள்களை குலுக்கிவிட்டு, படுக்க சென்றான். ஆனால் படுத்தவனுக்கு உறக்கம் வராமல் சனாவின் எழில் முகமே அவன் கண் முன் தோன்றியது.
ஒரு தலை காதலுக்கு, புது வார்த்தைகளைக் கொடுத்து, காதல் என்ற புது வார்த்தைகளை சொல்ல, இதோ சக்ரா, தயாராகிவிட்டான்.
இங்கே தூக்கம் வராமல் தன் படுக்கையிலையே உருண்டு கொண்டிருந்த சனா, எதுவோ நியாபகம் வந்தவளாக, வேகமாக எழுந்து தன் அலமாரிக்கதவைத் திறந்து, அதில் இருந்து எதையோ எடுத்து பார்த்துவிட்டு, திரும்பவும் அதை உள்ளே வைத்து கதவை மூடியவளின் அஞ்சன விழி கண்களில் கண்ணீர் பொங்கியது.
மறுநாள் காலை விடிந்ததும், அமலாவை கூட்டிக்கொண்டு ஜோசியரைப் பார்க்க சென்றார் ஆண்டாள்.
இருவரையும் பார்த்த ஜோதிடர், “சொல்லுங்கள் அம்மா… திருமண தடையா?.” என்றார் பளிச்சென்று.
அதுவே அவர் சரக்குள்ளவர் என்று சொல்லாமல் சொல்ல, “அதே தான்…” என்றபடி சொன்ன ஆண்டாள், சனாவின் ஜாதகத்தை எடுத்து ஜோதிடர் கையில் கொடுத்தார்.
பின் ஜோசியரோ, சனாவின் ஜாதகத்தை தீவிரமாக ஆராய்ந்தவர், தன் முகத்தில் தோன்றிய குழப்பத்துடன் தன் முன்னால் இருக்கும் இருவரையும் பார்த்தார்.
அவரின் பார்வை பொருள் உணர்ந்த ஆண்டாள், எதுவோ ஆபத்தோ என்றோ பயந்து போய், “ஜாதகத்தில் எதுவும் பிரச்சனை உள்ளதா ஐயா!.” என்றார்.
ஜோதிடர் பார்க்க, ஆண்டாள் கேட்க, கொஞ்சம் போல பகீர் என்று தான் இருந்தது அமலாவிற்கு.
அமலாவிற்கு ஜோதிடம், ஜாதகம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தாலும் தன் மகளின் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும், ஏதவாது பரிகாரம் என்றாலும் செய்துவிடலாம், என்ற நம்பிக்கையில் வந்தார்.
“ஐயா! ஏதாவது சிக்கலா?. அப்படி என்றால் பரிகாரம் இருக்குமே!” என்று அமலா கேட்க.
ஜோதிடர் அடுத்து சொல்லிய வார்த்தைகள், அமலாவையும் ஆண்டாளையும் ஒரு உலுக்கு உலுக்கியது.
ஆம் இருவரையும் பார்த்தவர், “திருமணமான ஜாதகத்தில், திருமணத்தடை உள்ளது என்று கூறுகின்றீர்கள்!.” என்றார் வித்தியாசமான பார்வையில்.
இருவரும் விக்கித்துப் போய் அவரைப் பார்க்க, “ஆமாம் அம்மா… இந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அப்படி தான் கட்டம் சொல்கின்றது.” என்றவர் பேச்சில் அழுத்தம்.
error: Content is protected !!