Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தம் – 15.1

“சக்கர சீனி எங்க இருக்கு?” சமையலறையிலிருந்து தேவா குரல் கொடுத்தான்.

“என்கிட்ட கேக்குறீங்க? உங்களுக்கு தானே எல்லாம் தெரியும், நீங்களே தேடி எடுத்துக்கோங்க” படுக்கையறையிலிருந்து கார சாரமான பதில் வந்தது.

“எங்கன்னு தானேடி கேட்டேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ கோவம்?” தணிவாய் கேட்டான் அறை வாசலில் நின்றபடி.

“ஓ எனக்கு அப்போ கோவப்பட கூட உரிமை இல்ல, அமைதியா நீங்க என்ன சொன்னாலும் செய்யணும். இல்ல… இல்ல… அத தான நான் செஞ்சிட்டு இருக்கேன்ல?” பட்டாசாய் பொரிந்தவள் இதோடு நான்காவது முறையாக சிகையை சரியாக பின்ன முயன்றும் பலன் இல்லாமல் போனது.



Advertisement

“சரி நீ போகாத” என்றான் தேவா சிரிப்பை அடக்கி.

அவனை முறைத்தவள், “ரொம்ப பண்றீங்க நீங்க. போ போ-னு மண்டைய கழுவி விட்டு இப்ப ஒன்னுமே தெரியாத மாதிரி போகாத-னு சொன்னா என்ன அர்த்தமாம்?” என்றாள்.

இன்று பைரவியை அலுவலகத்தில் சென்று விட தான் இந்த ஆர்ப்பாட்டம். அன்று கணவன் எவ்வளவோ எடுத்து சொல்லியும் இன்னும் அவளால் அதனை ஏற்க முடியவில்லை. எத்தனை மனிதர்கள் அங்கிருப்பார்கள்..

Advertisement

அனைவரிடமும் சகஜமாக பேச வேண்டும். புதிதாக சேர்த்திருப்பதால் சந்தேகம் கேட்பதிலிருந்து அவர்களோடு இணைந்து வேலை செய்வது, சைட் விசிட் செய்து வருவது என எல்லா வேலைகளும் கூட்டாகவே செய்ய வேண்டுமே!

Advertisement

பயம் தான் பைரவியின் மனம் மொத்தமும். அந்த பயத்தை எப்படி சரிசெய்வதென தெரியாமல் தான் கணவனிடம் கோவத்தை காட்டி குறைக்கும் முயற்சியில் உள்ளாள்.

இங்கு அதுவும் இல்லாமல் போனது, அவள் விதியே!

“கடைசில உன் இஷ்டம்னு நான் சொல்லிட்டேனே சக்கரை” கட்டிலில் அமர்ந்து மனைவியின் பின்னழகை ரசிக்கும் ரசிகனாக மாறி நின்றான்.

Advertisement

என்ன ஒரு ஏமாற்றம் தான், தலை முதல் கால் வரை மொத்தமாக மூடி அவன் கண்களுக்கு விருந்தே படைக்கமாட்டாள்.

“எப்படி தான் இப்டி கொக்கி போட்டு பேசுறத பழகுனீங்களோ தெரியல ஆனந்த்” தலையை அசைத்து கண்களை சுருக்கி கண்ணாடி வழியாக தனக்கு பின்னால் இருந்த கணவனிடம் வினவினாள்.

சிரித்தான் அதற்கும், இந்த முறையும் பின்னல் சரியாக வராமல் போக கைகள் வலியில் தளர்ந்தது.

முகம் சுருங்கி நிதானம் இல்லாமல் தவிக்கும் மனைவி கை பிடித்து தனக்கு அருகில் இழுத்த தேவா அவளை தன்னுடைய மடியில் அமர்த்திக்கொண்டான்.

கண்கள் அகல விரித்து எழ முயன்றவளை இடையோடு இறுக்கமாக பிடித்து அமர்த்திக்கொண்டு, “நேத்து நைட் இப்டி கட்டிபுடிச்சு தான் படுத்திருந்தோம், இப்போ மட்டும் ஏன் இந்த தயக்கம்?” கேள்வி கேட்டான்.

நேற்று இரவு நிரஞ்சனிடம் பேசிவிட்டு வந்த தேவாவின் முகம் இருளடைந்து காணப்பட்டது. அவனுக்காக காத்திருந்த பைரவி தேவாவின் முக மாற்றத்தை கவனித்து என்ன என்று கேட்டும் பதிலே வரவில்லை.

“இப்ப ஊருக்கு கிளம்புறேன்-னு சொன்னான். நான் தான் நாளைக்கு போக சொல்லிட்டு வந்தேன்” அவன் பொய் தான் கூறுகிறான் என புரிந்து மேலும் கேட்கவில்லை பைரவி.

சில நிமிடங்களுக்கு முன்னர் ஆசையாக அணைப்பதற்கு அனுமதி கேட்டவன் இப்பொழுது ஏன் தயங்குகிறான் என யோசித்து, அவனுக்கு பதில் தானே அவன் வேலையே செய்யலானாள் பெண்.

விட்டத்தை பார்த்து யோசனையோடு கண்கள் மூடியிருந்தவன் கண்மணிகள் அலைப்பாய்ந்து அவன் உறங்கவில்லை என காட்ட, அவனோடு ஒட்டி சென்று படுத்தவள் அவன் நெஞ்சத்தை மஞ்சமாகிக்கொண்டாள்.

சட்டென உறக்கத்திலிருந்து எழுந்தது போல் கண் விழித்த தேவா அவள் முகம் பார்க்க, அந்த கண்களில் அவன் நிலையை பார்த்து பயம் தெரிந்தது.

“ஒண்ணுமில்லடா” அவளை நோக்கி திரும்பி அவள் இடையோடு கைகளை அழுத்தமாக பதித்து சிரித்தான்.

தன்னுடைய அணைப்பின் உறுதி பைரவியின் மனதை பெரிதும் சோதித்தது அவன் அறியவில்லை. எச்சில் விழுங்கி அவதிப்படும் தேகத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவள் வேதனை உணர்ந்து தேவா கையை எடுக்க, அவன் கையை பிடித்து மீண்டும் தன் இடுப்பில் சுற்றிப்போட்டாள்.

“மூவ் ஆன் ஆகணும்-னு ஆசைப்படுறேன் ஆனந்த்” இருளில் ஒளிசிற்பமாய் மிளிர்ந்தவள் வார்த்தைகள் அவனுக்குள்ளும் தாக்கத்தை ஏற்படுத்த மறுவார்த்தை பேசாமல் கை அணைப்பில் வைத்தே உறக்கத்தை தழுவினான்.

நேற்று எந்த தைரியத்தில் அவனிடம் நெருங்கி நின்றோம் என்றே தெரியாவில்லை. விசித்திரமாக இருந்தது.

“ஆனந்த்…” கன்னங்களை நனைத்த அவன் சூடான மூச்சுக்காற்று அவஸ்தையாய் இருந்தது.

“ம்ம்ம் சொல்லு சக்கரை” தேவா சாதுவாக தான் இருந்தான்.

அவளுக்கு உணர்ச்சிகள் பேயாட்டம் போட்டது. சற்று முன்னர் தோன்றிய பயம், குழப்பம் கூட இருந்த இடம் தெரியாமல் ஓடியது. தேடி பிடித்து அதனை மீண்டும் அழைத்துவந்து, “கண்டிப்பா நான் போகணுமா” பாவமாக கேட்டாள்.

“இந்த தாஜா வாங்குற வேலை எல்லாம் வேணாம். டைம் இன்னும் இருக்கு, வேணும்னா கொஞ்சம் நேரம் கழிச்சு கிளம்பலாம்”

உதட்டை சுளித்து, “எவ்ளோ பெரிய கரிசனம் என் மேல!”

“கரிசனம் மட்டுமா?!” விஷமமாக தேவா சிரிக்க அவன் பேசுவதன் அர்த்தம் புரிந்து கன்னத்தை கிள்ளினாள்.

வலியே இல்லை என்றாலும் கத்தினான், “நான் கிள்ளுனது உங்களுக்கு வலிக்கிதா?” அவள் இதழ்களில் சிறிதளவே போட்டிருந்த உதட்டு சாயத்தை விறல் கொண்டு தொட்டவன் அதை தன்னுடைய கன்னத்தில் அவள் கடித்த இடத்தில் தேய்த்தான்.

“இல்லையா பின்ன, பாரு சிவந்திருக்கும்”

தேவா பேசியதில் பைரவி சத்தமாக சிரித்தவள் அவனே எதிர்பாராமல் அவன் கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்து, “அட ஆமா சிவந்துருக்கு” தானும் இணைந்து நாடகமாடினாள் அவனோடு.

தேவானந்த் முகம் எல்லாம் பிரகாசமான புன்னகை மனைவியின் முன்னேற்றத்தில்.

வியர்வை துளிகள் கூட அழகாய் இருக்குமோ என்ற ஐயம் அவள் நெற்றியின் மேல் பூத்திருந்த நீரினை பார்த்து தோன்றியது. கலைந்த அவள் குழல் அழகு வாரி படிந்து இழுத்த சிகையில் வருமா?

சுருங்கி நிற்கும் அவள் தோல் கூட தங்கள் வருங்காலத்தை சொல்லுதோ! இவ்வாறான அர்த்தமற்ற சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்தி அன்பென்னும் ஆழ்கடலில் நித்தம் முக்குளித்து மூழ்கிட தவறி போகிறான்.

“இப்டி எல்லாம் பண்ணா அப்றம் நான் கண்ட்ரோல் இல்லாம” கணநேரம் நிதானித்து, “கடிச்சு வச்சிடுவேன்” என மாற்றிக்கொண்டான்.

வெட்கம் வந்து பைரவியை தின்றுவிட, “கெளம்பலாமா?” என்றாள்.

மாட்டேன் என தலையை தலையை ஆட்டி, “ஏன் சக்கரை நீ சேலை கட்ட மாட்டிக்கிற?” என்றான்.

“இது தான் ஆனந்த் வசதியா இருக்கும்” என்றாள் அவள்.

“எனக்கு வசதியா இல்லையே” ஏக்கத்தை அவன் முகத்தோடு சேர்த்து அவன் கைகளும் அவள் இடையோடு தெரிவித்தது.

உடலே சிவந்து சூடானது பைரவிக்கு, அவன் கழுத்தோடு முகத்தை புதைத்து கண்களை மூடிக்கொள்ள, சங்கு போல் மிளிரிய கழுத்தில் பேசி தீராத காலத்தில் காதல் வார்க்கும் ஆசைசண்டையில் அவன் மீசை முடி உரசும் மென்வருடல் முத்தம் ஒன்று போதாதா அவளிற்கு!

வார்த்தைகள் தராத உணர்வுகளில் தத்தளித்தவள் மனதில் காதல் மொழிகள் பல இருந்தும் நேற்றிலிருந்து மனதை அரித்த அந்த கேள்வியை கேட்டாள், “ஏன்… ஏன் அ.. ஆனந்த் உங்க மாமா பொண்ணு மேல உங்களுக்கு லவ் வரல?”

இந்த பேச்சு இப்பொழுது தேவை தானா? அவனே அவள் தயக்கம் அறிந்து திக்கி திணறி நெருங்கி கழுத்து முத்தம் வரை முன்னேறியிருக்கும் நேரத்தில் இது போன்ற அனாவசிய பேச்சுகள் நிச்சயம் அவசியமா? அடுத்த அச்சாரம் அவன் பதிக்கும் முன்னே அவனுக்கு இடையூறாய் மனைவி கை மறைக்க,

“சொல்லுங்க” என்றாள்.

இதழ்கள் இல்லை என்றாள் என்ன, என் மூச்சு காற்று போதுமே உன்னை உசுப்பிவிட என நினைத்தான் போலும், மூச்சு காற்றை வைத்தே சீண்டினான், அதே சமயம் மனைவிக்கும் பதில் வந்தது,

“தெரியல சக்கரை, அவ-னு இல்ல, நிவி மேல கூட அந்த பீல் வரல” கழுத்தை தானே மறைக்கிறாய் என்றெண்ணியவன் கழுத்தை விடுத்தது காதோரம் முன்னேறினான்,

“ஆனா நீ-னு வந்துட்டா மனசு தன்னைப்போல ஆரவாரம் பண்ணுது” தன்னுடைய கைகளுக்கே துரோகம் செய்து அவன் இதழ்கள் பயணிக்க வசதியாய் கழுத்தை வளைத்து பாதை கொடுத்தாள்.

தன்னுடைய தொடுகைக்கு இசைந்துகொடுக்கும் பெண்ணின் நிலையை அறிந்து அகம் மகிழிந்தவன் இதற்கு மேல் முன்னேறினால் தன்னிலை மறவேனோ என்ற அச்சத்தில் கரையின்றி தவித்தான்.

வந்த பாதையிலே சென்று அவள் காதில், “காளைகளை பாக்கணும்னு சொன்ன பாக்கலாமா?” இருவரின் வழித்தடத்தையும் மூடினான்.

மயக்கத்திலிருந்து விடுபட்டது போல் மூச்சு தேவாவிடமிருந்து பிரிந்தவள் முகம் செவ்வானமாய் இருந்தது.

 தன்னுடைய முகத்தை பார்த்து மந்தகாச புன்னகை சிந்தும் அவன் அகத்தை பார்க்க வெட்கப்பட்டு பைரவி எழுந்துகொள்ள, அவளை விடாமல் பிடித்திக்கொண்டான் தேவா.

“ரொம்ப அழகா இருக்கடி சக்கரை. ஆசை மனசு மொத்தமும் பொங்கி நிக்கிது. உன்ன முழுசா நான் தெரிஞ்சுக்கணும்” உடலை மட்டுமே அவன் குறிக்கவில்லை, அவள் மனதையும் சேர்ந்து தான் கணவன் கூறுகிறான் என புரிந்தாள்.

ஆதரவை தேடி அவன் கழுத்து வளைவில் மீண்டும் புதைந்தவள் கணங்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்தது. மனைவியை இறுக்கமாக தன்னோடு அணைத்துக்கொண்டு தேவா அவள் மனதின் பாரம் தீரும் வரை விட்டான்.

வேதனை தீரும் விஷயமா அவள் வாழ்க்கையில் நடந்தது? உடலை விட்டு உயிரே சென்றதல்லவா? இப்பொழுது பார்க்கையில் அந்த வேதனை குறைந்தது போல் இருந்தது. மாயையாக இருக்குமோ!

‘உன்னை மடி ஏந்தி இருப்பவன் தயவால்’ என மூளை அடித்து சொன்னது.

அது தான் நிஜமும் கூட, இவன் ஒருவன் இல்லை என்றால் இந்நேரம் கடிகாரத்தை வெறித்து நான்கு சுவர்களுக்குள் மட்டுமே அடங்கிக்கிடந்திருப்பாள்.

மகிழ்ச்சி மாண்டு, அழுத்தம், விரக்தி தான் சுவாசிக்கும் காற்றாய் மாறியிருக்கும்.

இனிக்க வைத்துவிட்டான் அவள் வாழ்வை. இதில் என்னை வேறு சக்கரை என்கிறான் என சிரிப்பும் வர, அழுகையை தாண்டி உடல் குலுங்கி சிரித்தாள்.

“ஏய் என்னடி அழுகுறியா இல்ல சிரிக்கிறியா நீ?”

சந்தேகமாய் மனைவி முகத்தை பார்க்க தலை சாய்த்து தேவா கீழ் குனிந்து பார்க்க, அவனை பார்த்து மெல்ல தலை உயர்த்தி சிரித்தவள், நீண்டு நிற்கும் அவன் நாசி வசமாய் குறுகுறுக்க நன்றாக வலிக்கும்படியாக கடித்துவிட்டாள்.

“அடியேய் சக்கரை…” அவள் கன்னத்தை பிடிக்க தேவா கைகளை சற்று தளர்த்திய நேரம் சிட்டாய் பறந்தாள், “வண்டிய எடுங்க, வந்து காளைகள பொறுமையா பாத்துக்குறேன்”

என கூறி குளியறைக்குள் முகம் கழுவ சென்றிட கண்ணாடி முன் சென்று மூக்கில் தெரிந்த மனைவியின் பல் தடத்தை முகத்தை திருப்பி திருப்பி பார்த்தான். சிவந்து போய் இரண்டு பற்களின் தடம் தெரிந்தது. விரலை வைத்து தடவி தடவி பார்த்தான், செல்வேனா என்றது.

“என்னடி பண்ணி வச்சிருக்க? போகாது போலயே. வெளிய யாரவது கேட்டா என்ன பண்றது?”

குளியறையிலிருந்து வந்தவள், “பைரவன் கடிச்சிட்டானு சொல்லுங்க” என்றாள் மென்னகையோடு.

அதுவும் சரியாக பட, சட்டையை எடுத்து அணிந்தவன் காரை உயிர்ப்பித்து காத்திருக்க கண்கள் சுருங்க தேவாவை முறைத்தவள் அமைதியாக அமர்ந்திருக்க மதுரையில் உள்ள அலுவலகம் செல்லும் வர மனைவியிடமிருந்து அமைதியே வந்தது.

அலுவலக வாயிலை அடைந்ததும் தேவா அவளை பார்க்க கலக்கம் தான் இருந்தது அவளிடம்.

“இங்க அவார்ட் குடுப்பாங்களானு தெரியல, ஆனா செயின் வந்துரும் நினைக்கிறன்” என்றான்.

“உங்களுக்கு செயின் தான் முக்கியமா, நான் முக்கியம் இல்லையா?” கேள்வி கேட்டாள் தேவாவிடம்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நகத்தை அவள் கைகளிடமிருந்து விடுதலை கொடுத்தவன், அதே கையை பற்றி அவள் விரலில் சுற்றம் பார்க்காமல் முத்தம் கொடுத்து கண்ணடித்தவன்,

“இல்லை” என்க பைரவி அவன் கையில் அடி ஒன்றை கொடுத்து கோவமாக கதவை திறந்து கீழே இறங்கினாள்.

 இறங்கி அவனிடம் கோவமாக திரும்பி, “வீட்டுக்கு கூட்டிட்டு போறப்போ நான் இந்த வண்டில வர மாட்டேன். வண்டில தான் வருவேன்” என சென்றுவிட்டாள்.

‘இப்ப இவ என்ன சொன்னா?’ புரியாமல் விழித்த தேவா மீண்டும் தங்கள் கிராமத்திற்கு சென்று முதலில் போனது ஆச்சியின் வீட்டிற்கு தான். நிரஞ்சனை பார்க்க.

“அந்த பையன் காலைல சாப்பிட உடனே கெளம்பிட்டானே ய்யா” என்றார் அவன் ஆச்சி.

அவனை திட்டிக்கொண்டே குணாவை தேடி போனான், அவளோ நண்பனிடம் திருமண பத்திரிகையை எடுத்து நீட்டினான். பஞ்சாயத்தில் வைத்து பேசிய பிறகு செந்தில் வீட்டிற்கு சென்றனர் தேவா ஆச்சி, தாத்தா மற்றும் குணாவின் குடும்பம் திருமணத்தை பற்றி பேச.

“போன தடயம் கூட மறையால, அதுக்குள்ள என்னால என்னோட வாழ்க்கையை பத்தி யோசிச்சு கூட பாக்க முடியாது ஆச்சி, மன்னிச்சிடுங்க” என செந்திலின் மகள், கீர்த்தனா திட்டவட்டமாக மறுக்க, மகளின் எதிர்காலம் கருதி அவள் அன்னை பிடிவாதமாக மகளை சம்மதிக்க வைத்தார்.

இதில் கீர்த்தனாவிற்கு கோவம் இப்பொழுது வரை இருக்க தான் செய்கிறது.

“என்னடா அதுக்குள்ள பாத்திரிகையே அடிச்சிட்ட? மாப்பிள்ளை இவ்ளோ வேகம் ஆகாதுடா” என்றவாறே திருமண அழைப்பிதழை பிரித்து தேவா பார்த்துக்கொண்டிருந்த நேரம் சரியாக வெற்றியும் வந்திருந்தான். அழைத்தது தேவா தான்.

“சிம்பிள்ளா அடிப்ப-னு நினைச்சேன் நண்பா, பரவால்ல நல்லாவே செஞ்சிட” நண்பனை மெச்சுதலாய் பார்த்தான் தேவா.

“எல்லாம் அவளுக்காக தான் மாப்பிள்ளை. சிம்பிளா தான் அடிச்சு அவகிட்ட காட்ட போனேன், ‘டிவோர்ஸ் ஆனவ-னு தான இவ்ளோ சிம்பிளா பத்திரிகை அடிச்சியா’னு கேக்குறா. மனசு நொறுங்கிடுச்சு தெரியுமா?” விவரித்தவன் முகம் வேதனையை காட்டியது.

“அதான் சொத்து பத்த வித்தாவது எல்லாம் ஆடம்பரமான பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றான் குணா.

“விடுடா, அந்த பிள்ளை இன்னும் அவளோட முதல் வாழ்க்கைல இருந்தே வெளிய வந்துருக்காது, இப்போ அடுத்த இடியா அவ அப்பா போனது-னு அவளுக்கும் வருத்தம் இருக்க தானே செய்யும்?” நண்பனுக்கு புரிய வைக்க முனைந்தான் வெற்றி.

“அவ அப்பா போனது வருத்தம் தான் இல்லனு சொல்லல. அவ கல்யாணத்துக்கு முன்னாடியே அவளை பாத்து லவ் சொன்னப்போ கூட இதே மாதிரி தான் என்ன மதிக்காம போனா, அவளுக்கு என்ன புடிக்கலையோன்னு தோணுது பங்கு. அவசரப்படுறேனோ?” திக்கு திசை தெரியாமல் நண்பர்களை பார்த்து கேட்டான்.

“என்னடா இப்புடி பேசுற?” வெற்றி அவனுக்கு மேல் பயந்தான்.

“அப்டிலாம் இல்ல குணா, அந்த புள்ள அவளோட அப்பா இருந்தப்போவே வர்ற நல்ல நல்ல இடத்தை எல்லாம் கழிச்சது. அப்பா பேச்சையே கேக்காதவ, அவளோட அம்மா சொன்ன ஒரே வார்த்தைல உன்ன எப்படி கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்குவா? யோசி” என்றான் தேவா.

“பஞ்சாயத்துல பேசியாச்சேடா, அதுனால சொல்லுக்கும்” என்றான் குண சோர்வாக.

“பஞ்சாயத்துல நீயும் நானும் பேசுனா சரியா வருமா? ஏன் அதே பஞ்சாயத்தை கூடி யாரை கேட்டு முடிவு பண்ணலாம்னு அந்த புள்ள கேக்காதா? இல்ல கேக்க தான் அவளுக்கு தைரியம் இல்லனு நினைக்கிறியா?”

 தேவா கேட்கவும் தான் குணாவும் அதை யோசித்தான். ஒருமுறை செந்தில் அவளை திருமணம் செய்துகொள் இல்லை என்றால் வீட்டை விட்டு செல் என பணித்த பொழுது பெட்டியை தூக்கி நடந்தவள் அவள்.

மகளை வற்புறுத்த வேண்டாமென அவரே மீண்டும் அழைத்து வந்தார். தந்தையிடம் காட்டிய பிடிவாதம் இன்னமும் அவளுள் இல்லாமலா போய்விடும் என அப்பொழுது தான் யோசிக்கலானான்.

“ஆமா தேவா” என்றான் குணாவும்.

“கோவத்துல, வருத்தத்துல இருக்கா. கல்யாணம் ஆனதும் பொறுமையா நீயே சரி பண்ணிடு” தேவா கூறவும் சரி என்றான்.

“சரி நீ ஏன்டா வர சொன்ன?” வெற்றி தேவாவிடம் திரும்பினான்.

“நிரஞ்சன் நைட் வந்து ஒரு விசியம் சொன்னான் மாப்பிள்ளை, அது ஒரு மாதிரி மனசு உருத்திக்கிட்டே இருக்கு” என்றான்.

“என்ன?” வெற்றி குணா இருவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

சுற்றி திரும்பி பார்த்த தேவா எவரும் இல்லை என உறுதி செய்த பின்னர், “செந்தில் அண்ணன் இறந்தது கொலையா இருக்குமோனு சொல்றான்”

திடுக்கிட்டு அதிர்ந்த குணா, “தேவா…” வார்த்தைகள் உருவாக மறுத்து போனது.

“என்ன மாப்பிள்ளை சொல்ற” வெற்றியும் வியந்தான்.

“ஆமாடா, கணக்கு பிள்ளையோட பொண்ணுக்கும் கால்ல கொடி சுத்தி தான் மாட்டுச்சு, செந்தில் அண்ணே கால்ல கொடி இல்ல ஆனா மாட்டிக்கிடந்ததுக்கான தடயம் இருந்தது. அன்னைக்கும் பிள்ளையை மீட்டு கொண்டு வர காசு கேட்டாங்க, இன்னைக்கும்  இவருக்கும் அதே தான் சொல்லிருக்காங்க” நிரஞ்சன் கூறியதை தேவா கூறவும் தான் அவர்களும் அந்த கோணத்தில் யோசித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!