Skip to content
Post Views: 2,963
அத்தியாயம் 3
வெற்றிவேல் செழியன் தன் வீட்டிற்கு வந்ததும் வேண்டா வெறுப்பாய் உறவுகளுக்காய் சில சடங்குகளை செய்தவன், தனியே கனிகாவை சந்திக்க முயற்சி செய்ய வெற்றிகரமாய் அதை முறியடித்து கொண்டிருந்தார் சந்திரா.
அதை கண்டு கொண்ட உறவுகள், அவரை போலவே சந்தேகமாய் பார்த்ததோடு, நமுட்டு சிரிப்பை உதிர்த்து அவனை கேலி செய்து வம்பிழுக்க ஆரம்பித்தது.
அதில் கடுப்பானவனுக்கு ‘இதுங்க வேற..!’ என தனது விதியை நொந்து கொள்வதை தவிர வேறு வழியின்றி போனது.
Advertisement
‘வெற்றி இப்போ சைலண்ட்டா இரு. நைட் எப்படியும் அவ உன்னோட ரூமுக்கு தனியா வந்து தானே ஆகனும்.
அப்போ மொத்தமா பார்த்துக்கோ..’ என தனக்குள் முடிவு செய்தவன் அதன் பின் அமைதியாய் அமர்ந்துவிட்டான் ஹாலில்.
மாலை கடந்து இரவு உணவை முடித்துக்கொண்ட உறவுகள் அவரவர் இல்லத்திற்கு கிளம்ப வெற்றி எதிர்பார்த்த தனிமை கிடைத்தே விட்டது.
Advertisement
தனது இரையை எதிர்பார்த்திருக்கும் சிங்கம் போல தனது அறையின் பால்கனியில் நின்றிருந்தவனின் உள்ளமோ உலையாய் கொதித்திருந்தது.
Advertisement
‘ஒரு போலீஸ்காரனையே ஏமாத்தி இருக்க இல்லே..? உன்ன எப்படி சும்மா விட..?’ என மேலும் மேலும் தனது கோபத்திற்கு தூபம் போட்டு கொண்டிருந்தான் வெற்றிவேல் செழியன்.
அவனின் கோபம் பற்றி அறியாத கனிகாவை, செந்தமிழ் அவளின் விருப்பம் போல மிகவும் எளிமையான புடவையில் மெலிதான சிறு நெக்லஸ் மட்டுமே அணிவித்து அலங்காரம் செய்து கொண்டிருந்தார் சற்று பயத்தோடே..
காலையில் வெற்றிவேலின் முகத்தில் இருந்த கனிவு காணாமல் போய்.. அதில் உண்டாகியிருந்த இறுக்கம் ஏற்கனவே பயத்தோடு இருந்தவருள் பெரும் கலவரத்தையே உண்டாக்கி இருந்தது. அதனால் விளைந்த பயமே அது.
Advertisement
ஆனால் அதை பற்றிய சிறு அச்சமும் இன்றி சந்தோஷமாக வலைய வரும் சந்திராவையும் கனிகாவையும் கண்டு, ‘நாம தான் அதிகமா யோசிக்கிறோமோ..?’ என்ற எண்ணமும் தோன்றாமல் இல்லை அவருக்கு.
‘என்ன ஆனாலும் சரி. என் மகள் வாழ்க்கை நல்லவிதமாக இருந்தால் போதும்..’ என்ற வேண்டுதலோடு அவரே மகளோடு நின்று கொண்டார் அவளை அலங்கரிக்கவென.
கனிகா எளிமையாய் தயாராகி முடிக்கும் நேரம் ஒரு கையில் பால் சொம்பும், மறுகரத்தில் ஒரு பெரிய பெட்டியோடு உள்ளே நுழைந்தார் சந்திரா.
எளிமையான அலங்காரத்திலேயே தேவதை என நின்றிருந்த மருமகளை கண்டு மலர்ந்து சிரித்தவர்,
“அண்ணி.. இதுல இருக்கற நகையெல்லாம் கனிம்மாக்கு போட்டுவிடுங்க..” என கொடுக்க,
அதை திறந்ததும் மொத்தமாய் குவிந்திருந்த நகைகளை கண்டவள், “என்ன அத்தம்மா.. இவ்வளவு ஜூவல்ஸ்..?” என அதிர்ந்து போய் கேட்க,
“கனிம்மா.. அதுல எங்க பரம்பரை நகையோட எனக்கு வரப்போற மருமகளுக்காகவே நா பாத்து பாத்து வாங்கி வச்ச எல்லாம் இருக்கு.
அத எல்லாம் போட்டு உன்ன அலங்காரம் பண்ணி பார்த்தா நீ எப்படி இருப்ப தெரியுமா..? அப்படியே கோவில் உற்சவ சிலை மாதிரியே இருப்பே.. அதான் கொண்டு வந்தேன்.
என்ன அண்ணி மசமசன்னு நிற்கறீங்க. எடுத்து போடுங்க..” என சொன்னவர்,
அவரே அதை எடுத்து கனிகாவிற்கு அணிவிக்க வர பதறி விலகி நின்ற கனிகா,
“அத்தம்மா.. உங்களுக்கு பத்து மாசத்துல பேரனோ, பேத்தியோ வேணாமா..?” என சம்மந்தமே இல்லாத ஒரு கேள்வியை திடீரென கேட்க,
அவள் கேட்பதில் உள்ள அர்த்தம் விளங்கா விட்டாலும், “என்னடாம்மா.. இப்படி கேட்கறே..? அதுக்கு தானே தவமா தவங்கிடக்கிறேன்..” என்றவரை பார்த்தவள்,
“நீங்க கொண்டு வந்தது எல்லாத்தையும் மாட்டிட்டு போனா அதை கழட்டவே விடிஞ்சிடும்.
அப்புறம் எங்க மத்தது நடக்கறது..?
அது நடந்தா தானே நா பத்து மாசத்துல புள்ள பெத்து உங்க கையில கொடுக்க முடியும்..” என பெருமூச்சோடு முகத்தை சீரியஸ்ஸாக வைத்தபடி கனிகா சொல்ல,
கேட்ட இரு அம்மாக்களும் அதிர்ந்து வாய் மீது விரல் வைத்து நின்றனர் அவள் கொடுத்த விளக்கத்தில்.
அவர்களின் அதிர்ச்சியை கருத்தில் கொள்ளாமல், “என்ன மசமசன்னு நிக்கறீங்க.
போங்க, போய் சூடா பாதம், பிஸ்தா எல்லாம் போட்டு நல்லா சுண்ட காய்ச்சின பால கொண்டு வந்தீங்களே அத முதல்ல எடுத்து கொடுங்க.
மாமா அவரோட ரூமுக்கு போய் எவ்வளவு நேரமாச்சு..!
எவ்வளவு நேரம் தான் அவரும் தனியா காத்துட்டு இருப்பாரு. இதெல்லாம் நான் தான் சொல்லனுமா..?” என கேட்டவளிடம் வேகமாய் பால் செம்பை சந்திரா எடுத்து கொடுக்க அதை புன்னகையோடு வாங்கி கொண்டவள்,
“அத்தம்மா, போயிட்டு புள்ளையோட வர்றேன்..” என்றதும்,
“என்னதூ….!!” என சத்தமாக அவர் அலற,
“ச்ச.. ச்ச.. டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு அத்தம்மா. புள்ளைக்கு அஸ்திவாரம் போட்டுட்டு வர்றேன். வாழ்த்தி அனுப்புங்க..” என சொல்லி அவரின் காலை தொட்டு வணங்கியவள், ஹாயாக வெற்றிவேலின் அறைக்கு செல்ல மாடியேறினாள்.
கனியின் தாய் செந்தமிழுக்கோ, ‘இவ பாட்டுக்கு இப்படி கொஞ்சம் கூட கூச்சம், நாச்சம் பார்க்காம பேசறாளே..
அண்ணி இவ பத்தியும், நம்ம வளர்ப்ப பத்தியும் என்ன நினைப்பாங்களோ..?’ என பயத்தோடும் தடுமாற்றத்தோடும் சந்திரம்மாவை பார்க்க, அவரோ அப்படியே அகமகிழ்ந்து போய் நின்றிருந்தார்.
அவரின் முகத்திலிருந்து கனிகா பேசியதை அவர் தவறாக நினைக்கவில்லை என்பது புரிந்த போதும்,
“அண்ணி, அவ ஏதோ விளையாட்டா பேசறா.. சின்ன புள்ள..” என தடுமாற்றத்தோடு விளக்க முயன்ற தமிழிடம்,
ஒரு கை நீட்டி பேச்சை தடை செய்த சந்திரா, “கனிகாவ பத்தி எனக்கு தெரியும் அண்ணி. அவ ஒரு விளையாட்டு புள்ள, குறும்புக்காரி. ஆனா கள்ளம் கபடம் அறியாதவ.
அவளுக்கு அந்த நகையை போடாம தவிர்க்கனும். பணம் காசுக்கு மயங்கி எனக்கே எனக்குன்னு சுயநலமா இருக்கற உலகத்துல.. அதை கொடுத்தாலும் வேண்டாமுன்னு, என் மனசும் நோகாம இருக்க வேணுமுன்னே அப்படி பேசிட்டு போறான்னு புரியாத ஆளா நா..
கடைசியா அவ பேசினது கூட என்னோட சந்தோஷத்துக்காகவும், திருப்திக்காகவும் தான்னு எனக்கு நல்லாவே புரியும்.
போங்க, போய் நீங்களும் தூங்குங்க. நேத்தும் சரியான தூக்கம் இல்ல.
நாளைக்கு காலைல வேலை வேற நிறைய இருக்கு..” என்றவர் செந்தமிழை அவர்களுக்கான அறைக்கு அனுப்பிவிட்டு தங்களின் அறைக்குள் சென்றவர் மனதிலேயே
‘எல்லாம் நாங்க ஆசப்பட்ட மாதிரி நல்லபடியாக நடக்கனும் ஆண்டவா..’ என்ற வேண்டுதலோடு உறங்க துவங்கினார்.
கீழே பெரியவர்கள் இருவரிடமும் விளையாட்டாய் சொல்லி விட்டு கெத்தாக மாடி வரை வந்து விட்ட போதும், அந்த நாளுக்கான இயல்பான படபடப்பும், பயமும், கூடவே கொஞ்சம் வெக்கமும் (அது அவளுக்கு இருக்கா கேட்க கூடாது) வர தயக்கத்தோடு வெற்றிவேலின் அறையின் முன் நின்றிருந்தாள்.
சில நிமிடம் அங்கேயே நின்று தன்னை சீர்படுத்தி கொண்டவள் கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டி வெற்றிவேல் செழியனை தேட அறையில் அவன் இருப்பது போல இல்லை.
அதில் இன்னும் கொஞ்சம் துணிவு வந்திட தைரியமாய் உள்ளே வந்தவள், “எங்க போயிருக்கும் இந்த கஞ்சி சட்டை..?” என மெல்ல மெத்தை இருந்த பக்கம் நகர்ந்த படி முணுமுணுத்தாள்.
கனிகா உள்ளே வருவதை பால்கனியிலிருந்து பார்த்திருந்த வெற்றி அங்கிருந்து உள்ளே வரவும் அவள் அதை சொல்லவும் சரியாய் இருந்தது.
நிசப்தம் மட்டுமே நிறைந்திருந்த இடத்தில் அவளின் அந்த மெல்லிய முனுமுனுப்பே நன்றாக கேட்டுவிட,
“என்னடீ சொன்ன..?” என தனது முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்று கேட்டவனின் குரலில் பதட்டத்தோடு திரும்பி கனிகா தனக்கு பின்னால் பார்க்க,
மிரட்டலான பார்வையோடு அவளை பார்த்தபடி நின்றிருந்தான் வெற்றிவேல் செழியன்.
அவன் நின்ற தோரணையை கண்ட கனிகா, ‘நிறம் மட்டும் கொஞ்சம் கூட இருந்தா.. அப்படியே கருப்பன்னசாமி தான்..!’ என தீவிர சிந்தனையில் அவன் முகம் பார்த்திருக்க,
ஏற்கனவே கடுப்பில் இருந்தவன் அவளின் இமை தட்டா பார்வையில் மேலும் கடுப்பாக அவள் முகத்திற்கு நேராக சொடுக்கிட தூக்கத்திலிருந்து விழிப்பது போல விழித்தாள் கனிகா.
error: Content is protected !!