Skip to content
Post Views: 3,427
தன் வீட்டின் அழைப்பு மணியின் சத்தம் கேட்டு மெல்ல கண்விழித்தான் ரித்து.
கண்கள் தன் போலே அருகே இருந்த மொபைலில் நேரம் பார்த்தன.
அதி காலை ஐந்தரை மணி!
யாருடா இந்த அர்த்த ராத்திரியில் நம் வீட்டு பெல்லை அடிப்பது என்ற எரிச்சலுடனே கதவைத் திறந்தவன், ஆச்சர்யப்பட்டு கொஞ்சம் வேகமாகவே கத்தி விட்டான்!
Advertisement
“குட்டிமா.. என்ன இது இந்த நேரத்துல? எப்படி வந்த? எதுல வந்த?” அவன் குரலை உயர்த்திக் கேட்டதில் எதிர் பிளாட்டில் அந்த சிறிய வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்த எதிர் வீட்டுப் பெண் கூட இவர்களை திரும்பிப் பார்த்தார்!
அதைக் கண்டவுடன், “வா.. உள்ளே வா” என்று மானுவை அவசரமாக உள்ளே அழைத்துக் கதவை சாத்தினான் ரித்து.
அவன் கதவை சார்த்தி விட்டு திரும்புமுன் வேகமாக அவனை இறுக்கிக் கட்டிக் கொண்டாள் மானு.
Advertisement
அவள் உடல் அதிர்வதையும், அவள் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டிருப்பதையும் நன்றாகவே உணர்ந்தான் ரித்து.
Advertisement
“என்ன குட்டிமா, என்ன ஆச்சு? என்னடா? ஏன் இப்படி அழற?” அவன் வெற்று மார்பு முழுவதும் அவளின் கண்ணீரின் ஈரம்!
“ஏதாச்சும் கெட்டக் கனவு கண்டியா? அதான் இப்படி பயந்துப் போய் வந்திருக்கியா?” அவள் தலையை ஆதுரமாக தடவியப் படியே கேட்டான் ரித்து.
ஏனென்றால் இதற்கு முன்பு ஒரு முறை அவள் இது போல் கெட்ட கனவு கண்டு விட்டு, நடு சாமத்தில் அவனை வீடியோ காலில் அழைத்து அவன் நன்றாக இருப்பதை உறுதி செய்து கொண்டே மெல்ல உறங்கினாள்!
Advertisement
அதற்கே அவன் வெகு நேரம் பேசி பேசி அவளை சமாதானம் செய்ய வேண்டியிருந்தது!
இன்றும் ஏதோ அப்படி மோசமாக கனவு போல என்று நினைத்து சிரித்துக் கொண்டவனை தலை நிமிர்ந்து பார்த்தவள், அப்படியே எக்கி அவனது இதழ்களில் வேகமாக, அவளாகவே முத்தமிட்டாள்.
என்ன ஆச்சு என் குட்டிமாவிற்கு? என்று நினைத்தவனை, அவள் விடுவதாகவே இல்லை!
“ஹேய். குட்டிமா, என்னம்மா? ஏன் இவ்வளவு இமோசனல் ஆகுற?” என்று அவளின் தாடையைப் பிடித்து மென்மையாக கேட்டான்.
“தூக்கிக்கோ என்னை” என்றாள் அவள் சிறு பிள்ளையாய்!
அவன் சிரித்துக் கொண்டே அவளை தூக்கி சென்று சோபாவில் உட்கார்ந்து அவளை மடியில் அமர்த்திக் கொண்டான்.
“இப்ப சொல்லு. என்ன? ஏதாச்சும் கெட்டக் கனவா? அதுக்கு இப்படி தான் இந்த நேரத்தில் இப்படி தனியா வருவியா?
எனக்கு போன் பண்ணியிருக்கலாம்ல? நானே வந்து உன்னைப் பார்த்துருப்பேன்? ஆமா எதுல வந்த?”
“ப.. பஸ்ல..” என்றாள் அவள் மெதுவாக.
“பஸ்லயா? அதுவும் இந்த நேரத்தில்? உன் வீட்டிலிருந்து கிளம்பும் போது இன்னும் இருட்டா இருந்திருக்கும்!
பஸ் ஸ்டாப்ல தனியா நின்னுருக்கே! உனக்கு ஏதாச்சும் அறிவு இருக்கா? இப்படியா பண்ணுவ?” அவள் கொஞ்சம் கோபமாக திட்டி, அவளின் தலையில் குட்டினான்.
“வலிக்குது ரித்து.” அவள் தலையைத் தடவிக் கொண்டாள்.
சொன்ன அவளை ரித்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொள்ள, அவளோ அவனை இன்னும் இறுக்கினாள். அவன் இதுவரை அவளிடம் கண்டிராத முரட்டு அணைப்பு! ஆவேசமான முத்தங்கள்!
என்னமோ ஆச்சு என் குட்டிமாவுக்கு, நேத்துல இருந்து!
மூன்று நாட்கள் முன்னர் அவளிடம் அத்தனை முறை சொல்லி சமாதானம் செய்து விட்டு தான் அவன் பெங்களூர் சென்று இருந்தான்!
அவன் அம்மாவின் தொழில் ஒப்பந்தம் ஒன்றில், அவனின் அம்மாவிற்கு பதில் இவன் கையெழுத்து இட என்று!
அவன் அம்மா என்றைக்கும் இல்லாத திருநாளாக ஊருக்கு வந்து, வந்தவள் சும்மா இருக்காமல், அவள் அண்ணன்களோடு சேர்ந்து வயலுக்கு சென்று பார்வையிட, வயல் வரப்பில் காலை வைக்க தெரியாமல் வைத்து, வழுக்கி விழுந்து காலில் அடி!
அத்தோடு வலது கையையும் ஊன்றி இருக்க அதிலும் சிறிய எலும்பு முறிவு!
கையை அசைக்க முடியாத அளவில் மாவுக் கட்டு!
எனவே அவளுக்கு பதில் தன் மகனை ஒப்பந்தங்களில் கையெழுத்து இட அனுப்பி வைப்பதாக சொல்லி பேசி விட்டாள்.
அப்படி ஒரு ஏற்பாடு அவள் சட்ட ரீதியாக ஏற்கனவே பண்ணி இருந்திருந்தாள்.
ஆனால் அதற்கு தேவை எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை இதுவரை!
ஆனால் இப்போது வேறு வழியில்லாமல் அவள் ரித்துவை அங்கு அனுப்ப வேண்டியாகி விட்டது!
அதனால் மானுவிடம் “சீக்கிரம் வந்துடுவேன். நீ அழாம இருக்கணும். நான் தினமும் நைட் வீடியோ காலில் வருவேன். அதனால நீ காலேஜ்க்கு மட்டம் போடாம ஒழுங்கா போய் வரணும். சரியா” என்று சொல்லி தான் சென்றிருந்தான்.
முதல் நாள் வீடியோ கால் பண்ணும் போது மானுவின் முகம் ரொம்பவும் சோகமாக, அழுது அழுது கண்கள் வீங்கிய நிலையில் இருந்ததை அவன் கண்டு விட்டு தாள முடியாமல், என்னுடைய லாப்டாப்பை மறந்துட்டு வந்துட்டேன் என்று சொல்லி அவசரமாக கிளம்பி திருச்சி வந்து விட்டான் நள்ளிரவு என்றும் பாராமல்!
வந்தவுடன் அவளுக்கு மெசேஜ் போட்டான்.
அதைப் பார்த்து விட்டே விடிந்தும் விடியாமல் இங்கு வந்து நிற்கிறாள் அவனின் செல்ல குட்டிமா!
அவளோ அவனை முத்தமிட்டு முத்தமிட்டு களைத்துப் போய் வெறுமனே அவன் நெஞ்சில் தலை வைத்து அவனை இன்னமும் இறுக்கமாகவே கட்டிக் கொண்டு அவன் மடியில் அமர்ந்து இருந்தாள்.
“குட்டிமா, நல்லா விடிஞ்சுடுச்சு. அங்க உன் அம்மாவை தனியே விட்டுட்டு வந்திருக்கே. அவங்க உன்னைத் தேடிட்டு இருப்பாங்க. வா உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டுட்டு வரேன். வந்து நானும் பெங்களூர் கிளம்பனும். நேத்து வீடியோ காலில் உன் மூஞ்சியே சரியில்ல. அதான் உடனே கிளம்பி வந்தேன்.
அப்புறம் புதன்கிழமை நமக்கு ரிஜிஸ்டர் ஆபிஸில் வேலை இருக்கு. நான் அங்க உன் வீட்டுக்கு வந்து உன்னை கூட்டிட்டு வந்தா, ரொம்ப லேட் ஆகும். நீயே ஒரு ஆட்டோ பிடிச்சு நேரா வந்திடு. நான் முன்னாடி போய் மத்த ஏற்பாடு எல்லாம் பண்ணனும். லேட் பண்ணாம வந்திடணும். சரியா” என்று சொல்லிக் கொண்டே அவளை தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு அவள் வீட்டில் கொண்டு போய் விட்டான்.
வீட்டில் இறங்கிக் கொண்டு கதவைத் திறந்தவள்,
“உள்ளே வா ரித்து” என்று அவனை அழைத்தாள்.
அவன் உள்ளே வந்ததும் மீண்டும் ஒரு ஆவேசமான அணைப்பு, முரட்டு முத்தம் அவளிடமிருந்து!
ரித்து இதை எதிர்பார்க்கவில்லை!
“என்னமோ ஆச்சுடி உனக்கு!” என்று சொல்லி அதிசயித்தான்.
“ஏய்.. ஆண்ட்டி முழிச்சிக்க போறாங்க!” என்றான்.
“இல்ல அவங்க எழுந்திருக்க இன்னும் நேரம் இருக்கு. மாத்திரைப் போட்டுருக்காங்க” என்று சொல்லி அவனை விட்டவள்,
“சரி. நீ கிளம்பு ரித்து” என்றாள்.
“ம்ம். சரி. பை.” என்று சொன்னவன் அவனாக அவளை இழுத்து ஒருமுறை இதழ்களில் முத்தமிட்டு “பை” என்று மீண்டும் சொல்லி மனமே இல்லாமல் கிளம்ப.
“குட் பை” என்று மெதுவாக முணு முணுத்தாள் மானு, பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி!
அவள் சொன்னதைக் கவனிக்காதவனாக, பைக்கில் ஏறி சென்றான் ரித்து.
வேகமாக மொட்டை மாடிக்கு சென்று அவன் செல்வதை அவன் தலை மறையும் வரை கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மானு.
பைக்கில் சென்றவன் எதிரில் வந்த ஒரு சரக்கு ஏற்றி செல்லும் வேனுக்கு வழி விட்டு ஓரமாக சென்றவன், அதில் டிரைவர் சீட் அருகே அமர்ந்திருந்த மானுவின் மாமா சிவாவைக் கவனிக்க வில்லை!
அதற்குள் அவனின் அம்மாவிடம் இருந்து போன் வந்து விட்டது!
“ரித்து நீ எங்க இருக்க?”
“நான் இப்ப திருச்சி வந்துருக்கேன் ஒரு வேலையா!” என்றான்!
“டேய். உனக்கு எவ்வளவு முக்கியமான வேலை சொல்லி நான் அனுப்பி இருக்கேன்! நீ இப்படி பொறுப்பு இல்லாம இங்க திருச்சிக்கு வந்துட்டேன் சொல்லிட்டு இருக்க?”
“மம்மி. இன்னிக்கு சண்டே. எந்த மீட்டிங்கும் இல்ல.
அதுவும் இல்லாம நான் என்னோட லாப்டாப்பை மறந்துட்டு அங்க வந்துட்டேன், நீங்க பண்ணுன களேபரத்துல!
அத எடுக்க தான் வந்தேன். மிட் நைட் தான் வந்தேன். இதோ இப்போ எட்டு மணிக்கே கிளம்ப போறேன். அதுக்குள்ள ஏன் மம்மி இப்படி டென்சன் ஆகுற?”
“சரிடா சீக்கிரம் கிளம்பு!” என்றாள் அவனின் அம்மா.
கிளம்பி சென்றவனுக்கு அடுத்த நாளும் அதற்கு அடுத்த நாளும் வேலை பின்னி எடுத்தது.
அவன் அம்மாவின் மேனேஜர் கூடவே இருந்து நிறைய உதவிகள் செய்தார்!
கூடவே உபத்திரமும்!
ஆமாம், அவனை விட்டு கொஞ்சம் கூட மனுஷன் நகர்ந்தால் தானே!
இரவு பதினோரு மணியானாலும் கூட அவர் நகராமல் அவனுக்கு அவன் அம்மாவின் பிசினெஸ் பற்றிய விபரங்களை சொல்லி வகுப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார்!
அம்மாவின் விசுவாசியான அவரை அவனால் கடிந்து கொள்ளவும் முடியாமல் போய் விட்டது!
அவர் விட்ட பின், குட்டிமாவை அழைக்கலாம் என்று பார்த்தால், அவள் ஆன்லைனில் இருப்பதில்லை!
அடுத்த நாளும் இப்படியே தொடர்ந்தது!
அன்று மாலை அவளை போனில் அழைத்தான்.
போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் அல்லது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்றே வர, பாபு அண்ணாவை கேட்கலாமா என்று முதலில் நினைத்து, பின் அது சரியாக இருக்காது என்று அந்த எண்ணத்தைக் கை விட்டான்!
பின், அந்த டாகுமென்ட் ரைட்டரைப் போய் நேரில் பார்க்க சொல்லலாமா என்று கூட முதலில் நினைத்தான்.
இரு பெண்கள் மட்டுமே இருக்கும் அந்த வீட்டுக்கு சம்பந்தமில்லாத ஒரு ஆளை அனுப்பவும் யோசனையாக இருந்தது.
எனவே அந்த முயற்சியையும் கை விட்டு, விடிவதற்காக காத்திருந்தது, அவன் அம்மாவின் மானேஜருக்கு அதிகாலையிலே போன் செய்து, தான் கிளம்புவதாக சொல்லி விட்டு, ஆளை விட்டால் போதுமென்று ஓடோடி வந்தான் அவனின் குட்டிமாவைக் காண!
இன்னமும் அவளுக்கு போன் மட்டும் போகவேயில்லை!
வாட்ஸ் அப்பிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை!
“என்ன பண்றா இந்த குட்டிமா?” என்று பல்லைக் கடித்தவன்,
“இருக்குடி உனக்கு!” என்று மனதுள் திட்டியபடி, அவளிடம் அவன் ஏற்கனவே சொல்லியிருந்தபடி, அவள் ஒரு வேளை அந்த ரிஜிஸ்டர் ஆபீஸில் காத்திருக்க கூடுமென்று நினைத்து அங்கு சென்றால், அங்கும் அவள் வந்திருக்க வில்லை!
கோபம் தலைக்கேற, பைக்கை நேராக அவள் வீட்டிற்கு விட்டான்.
அங்கு சென்று பார்த்தால், வீட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது!
அதிர்ச்சியுடன், பக்கத்து வீட்டில் விசாரித்தான்.
“மானு அம்மாவுக்கு எதாச்சும் உடம்பு சரியில்லையா? வீட்டில் யாரையும் காணோம்!” என்று கேட்க, அந்த வீட்டுப் பெண்மணியோ அவளுக்கு எதுவும் தெரியாது என்றே சொல்லி விட்டாள்.
ஆனால் அந்த வீட்டில் இருந்த ஒரு சிறுவன்,
“இல்லண்ணா அவங்க வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாங்களே முந்தா நேத்தே!” என்றான்!
“டேய். சும்மா இருடா, அதெல்லாம் எங்களுக்கு ஒண்ணும் தெரியாது தம்பி” என்று அவனை அடக்கினாள் அவன் அம்மா.
“இல்லம்மா. பாமா ஆண்டி, நாங்க வேற ஊருக்கு போறோம். என் அண்ணன் வீட்டுக்கு போறோம்.
நான் ஆசை ஆசையா வளர்த்த இந்த துளசி செடிக்கு மட்டும் நீ டெய்லி கொஞ்சம் தண்ணீ ஊத்துறியா கேட்டுகிட்டாங்க!” என்றான் அந்த சிறுவன் கூடுதல் தகவலாக!
அப்போது தான் ரித்துவிற்கு நினைவு வந்தது.
குட்டிமாவின் மாமா, அவர் வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவதாக சொல்லியிருந்தது!
ஓ.. அப்ப அவளோட அத்தை சம்மதிச்சுட்டாங்க போல! அது சரி. அத என்கிட்ட சொல்லிட்டு போலாம்ல?
இந்த குட்டிமாவுக்கு கொஞ்சம் கூட புருஷன் மேல பயமே இல்லாம போய்டுச்சு!
அவள என்ன பண்றேன் பாரு! என்று அப்போது கூட பெரிதாக எதுவும் நடந்திருக்கும் என்று அவன் நினைக்க வில்லை!
அவ மாமா ஊரு எதுன்னு தெரியலையே! அன்னிக்கு அவ அப்பா இறந்த வீட்டில் வைத்து ஸௌஜன்யமாக பேசும் சூழ்நிலையிலா இருந்தோம்? அவர் பேரு, ஊரு எல்லாம் கேட்டு வச்சுக்க!
அன்னிக்கு அவன் மாமாவின் மேலும் அந்த ரமேஷின் மேலும் கொலை காண்டில் இருந்ததால் இதைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க வில்லை!
அதற்கு பெரிதாக தேவை இருப்பதாக அப்போது நினைக்கவும் இல்லையே!
ஆனால்.. இப்போது அவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியிருக்கே!
யாரிடம் கேக்குறது? வேறு வழியில்லை!
பாபு அண்ணாவைத் தான் கேட்க வேண்டும்!
போய் அவரிடம் விசாரித்தான்!
“சிவா அண்ணன் இப்போ அவர் ஊரில் இல்லை, அவரோட மாமனார் ஊரில் தான் இருக்கார். எந்த ஊருன்னு தெரியல தம்பி!” என்றார்.
“சரி அவரோட போன் நம்பராவது தாங்கண்ணா” என்று கேட்டான்.
“சாரி தம்பி. என்னோட போன் நேத்து தண்ணியில விழுந்துட்டுது.
பாருங்க நானே இந்த பட்டன் போனை தான் இப்ப வச்சுருக்கேன்!
என்னோட போனை சர்வீஸ்க்கு கொடுதுருக்கேன்ப்பா” என்று சொல்லி விட்டார்.
காலேஜில் போய் அவளோடு படிக்கும் பெண்களிடம் விசாரித்தான்.
அதில் ஒருத்தி சொன்ன தகவல் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!
“போன வெள்ளிக்கிழமை அன்னிக்கு கரஸ்பாண்டன்ட் ஆபிசில் இருந்து மானுவை அழைத்துப் போனாங்க!
யாரோ ரெண்டு மூனு பேர் வந்திருந்தாங்க. அதில் ஒரு அம்மாவும் இருந்தாங்க. கரஸ்பாண்டன்ட் ரூமில் வைத்து என்ன பேசினாங்கன்னு தெரியல!
அங்க பேசிட்டு வெளியே வந்த பின், அவங்க காரில் வைத்து தனியாக அந்த லேடி ரொம்ப நேரம் அவ கிட்ட தனியா பேசுனாங்க.
பேசிட்டு வெளியே வந்த மானு அப்படியே அதிர்ந்து போய் சோகமா தான் வெளியே வந்தா!
அப்படி என்ன பேசினாங்கன்னு தெரியல! ஆனா பாவம் மானு க்ளாஸ்க்கு வந்தும் அவ முகமே சரியில்ல!
அழுகையை கஷ்டப்பட்டு அடக்கிட்டு இருந்தா!
நாங்க என்ன என்னன்னு கேட்டும் எங்க கிட்ட அவ ஒண்ணுமே சொல்லல! கொஞ்ச நேரத்திலேயே அப்புறம் கிளாசை கட் பண்ணி விட்டு வீட்டுக்குப் போய்ட்டா! என்று சொன்னாள் அந்த வகுப்புத் தோழி!
“அவங்க பார்க்க எப்படி இருந்தாங்க?”
“கருப்பா, பெரிய மீசை வச்சுக்கிட்டு ஒருத்தர், வேஷ்டி கட்டிக்கிட்டு நாய் சங்கிலி மாதிரி பெரிய செயின், ப்ரேஸ்லெட், பெரிய பெரிய மோதிரம் எல்லாம் போட்டு இருந்தாரு!
கூட இன்னொருத்தர் பான்ட் ஷர்ட் போட்டுருந்தார் அவர் தம்பி போல!”
“அப்புறம் அந்த லேடி எப்படி இருந்தாங்க?”
“அவங்கள நான் கவனிக்கல, ஆனா ரொம்ப வேகமா நடந்து போய் காரில் உட்கார்ந்துகிட்டாங்க!”
இதெல்லாம் கேட்ட பின், அவனுக்கு எல்லாமே விளங்கி விட்டது!
எல்லாம் அவன் மாமாக்களின் வேலை தான்!
அவங்க கொஞ்ச நாளா அமைதியா இருந்தததால, தான் கொஞ்சம் அவங்க விஷயத்தில் அஜாக்கிரதையாக இருந்து விட்டதை உணர்ந்தான் ரித்து!
அப்போ அவங்க தான் குட்டிமாவை ஏதோ சொல்லி பயமுறுத்தி இங்க இருந்து அனுப்பி வச்சுருக்காங்க!
ஆனா, இது மாதிரி கூட நடக்கலாம், அப்போது எல்லாம் நீ தைரியமாக அவங்கள பேஸ் பண்ணனும். எதுவா இருந்தாலும் உன் ரித்துவை மீறி எதுவும் நடந்து விடாது! என்கிட்ட மறைக்காம சொல்லிடணும்னு படிச்சு படிச்சு சொல்லியிருந்தேனே குட்டிமா!
அப்பெல்லாம், நான் அவங்களுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன், நீ இருக்கும் போது நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்னு சொன்னவ, இன்னிக்கு இப்படி என்கிட்ட சொல்லாம கொள்ளாமல் கிளம்பி போயிருக்கா!
அப்படி என்ன சொல்லி அவளை மிரட்டி இருப்பாங்க?
சாதாரணமாக எல்லாம் அவள் பயப்படுற ஆள் இல்லையே அவள்! ஏன் இப்படி அவனை விட்டு போகணும் நினைச்சுட்டா?
ஏன்? ஏன்? கேள்விகள் அவன் மண்டையை குடைந்த போதும் நம்பிக்கையாக தான் இருந்தான்!
எங்கே போய்டுவா, என் குட்டிமா? இந்த உலகத்துல எந்த மூலையில இருந்தாலும் போய் தூக்கிட்டு வந்திடுவேன் உன் ரித்து! என்று நம்பிக்கையுடன் இருந்த அவன் நினைப்பில் மண் விழுந்தது
அடுத்து வந்த கொரானா என்னும் அரக்கனாலும், அதைத் தொடர்ந்து வந்த லாக் டவுனாலும்!
பள்ளி கல்லூரிகள் எல்லாம் விடுமுறை!
எல்லோரும் அவனின் கும்பகோணம் வீட்டில் அடைந்து விட்டிருந்தனர்!
எப்போதும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு அலைந்து கொண்டிருக்கும் அவனின் அம்மா உட்பட!
அனைவரும் வீட்டில் இருந்ததால், அவனின் கல்யாண பேச்சு தீவிரமாகியது!
மூன்று பெண்ணில் யாருடைய ஜாதகம் பொருந்துகிறது என்று பார்த்து விட்டும், அவர்களின் குடும்பத்திலிருந்து சந்நியாசம் வாங்கிக் கொண்டு அவர்களின் குலகுரு போல இருக்கும் ஒரு சாமியாரின் உத்தரவு பெற்றும் தான் ரித்துவின் கல்யாணம் என்று தீர்மானமாக சொல்லி விட்டார் சஷி பாலா, ரித்துவின் அம்மா!
அதனால், அந்த லாக்டவுன் பூராவும் அவனுக்கு நரக வேதனையாக இருந்தது! அவன் மாமா வீட்டினரின் அதிகப்படி கவனிப்பால்!
எரிச்சலை அடக்கிக் கொண்டு இருந்தவன், லாக்டவுன் முடிந்தவுடன் தன் பைக்கை எடுத்துக் கொண்டு மானுவை தேடி அலைய ஆரம்பித்தான்!
அவன் அம்மா கேட்டதற்கு நண்பர்களோடு டூர் ப்ரோக்ராம் என்றே சொல்லிக் கொண்டாலும், அவனின் நோக்கம் குட்டிமாவைத் தேடுவது தான்!
அவளின் மாமா ட்ராவல்ஸ் நடத்துகிறார் என்று மட்டும் தெரியும்! அதனால் டூரிஸ்ட் ஸ்பாட்களாக இருக்கும் ஊர்களாக தேடினான்.
ஆனால் காலுக்கு கீழே இருக்கும் பொருளைக் கவனிக்காமல் வீடு முழுவதும் பொருளைத் தேடுவது போல, இருந்தது அவனின் தேடல்!
ஏனென்றால், அவனிருக்கும் கும்பகோணத்திற்கு அருகாமை மாவட்டத்தில் இருக்கும் வைத்தீஸ்வரன் கோவிலில் தான் மானுவின் மாமா குடும்பம் இருந்தது!
ஆனால் ரித்துவின் கவனம் ஏனோ அந்த ஊரின் மேலே கடைசி வரையில் விழவே இல்லை!
தாய்க்கு தாயாய், தந்தைக்கு தந்தையாய் அவனை வளர்த்த அவன் அம்மா சஷி பாலாவிற்கு தெரியாமல் கல்யாணம் செய்து கொண்ட பாவமா?
அல்லது மானுவை அத்தனை அன்பைக் கொட்டி வளர்த்த அவளின் தந்தை அறியாமல் கல்யாணம் செய்து கொண்ட பாவமா?
அல்லது இரண்டுமா?
அந்த வைத்தீஸ்வரன் கோவிலில் வீட்டிருக்கும் முத்துகுமார சாமி என்னும் முருகக் கடவுள் அவனை சுமார் ஐந்து வருடங்கள் சுத்தலில் தான் விட்டார்!
பின் பாவம் இந்த பிள்ளைகள் என்று அவர் நினைத்தாரோ என்னமோ!
அவனின் குட்டிமா பணி புரியும் ஹாஸ்பிட்டலிலேயே அவனை அனுமதிக்கும்படி அருளினார் தினமும் மானு வணங்கும் அந்த முருகன்!
error: Content is protected !!