Skip to content
Post Views: 2,978
“நீ ஏன் என்னை விட்டுட்டுப் போனேன்னு சொல்லல.. அப்புறம்..” என்று குழந்தையை நோக்கி கத்தியைக் காட்டி மானுவை மிரட்டினான் ரித்து.
அவனை உற்றுப் பார்த்த மானு, உடனே எழுந்து சென்று ஓரமாக போட்டிருந்த அந்த சிறிய டேபிளில் இருந்த அவளது ஹான்ட் பாகைத் திறந்து, “இதில் தானே வச்சேன்” என்றபடி அதைத் தேடி எடுத்தாள்.
அது வட்டமாக இருந்த ஒரு பாக்கெட்! அதில் இருந்தது இலந்தவடை!
அதைப் பிரித்து, அதில் கொஞ்சம் கிள்ளியெடுத்து சிறிய உருண்டையாக உருட்டினாள். பின் அதை எடுத்து ரித்து அருகில் சென்று, அவன் கண்ணுக்கு கீழே ஒட்டினாள்!
Advertisement
“ம்ம். இப்ப தான் வில்லன் கெட்டப் சரியாக இருக்கு! இப்ப மறுபடி சொல்லு, நான் ஒரு போட்டோ எடுத்துக்கிறேன்!” என்றாள் கிண்டலாக சிரித்தபடி!
“ஏய்.. நான் சீரியாசாக தான் பேசுறேன்! நீ மட்டும் இப்ப உண்மைய சொல்லல, நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது!”
“ம்ம். என்ன பண்ணுவ? குத்திடுவியா? அப்ப குத்து. நானும் பாக்குறேன்!
Advertisement
ஷ். ப்பா! ஏன்னா டேஸ்ட்! இந்த இலந்த வடை!” மீண்டும் தன் ஆட்காட்டி விரலால் பாக்கெட்டில் இருந்த அந்த இலந்த வடையை வழித்து சாப்பிட்டு நாக்கை சப்புக் கொட்டினாள் மானு.
Advertisement
“சூப்பரா இருக்கு! இது நைன்ட்டீஸ் கிட்ஸ் ஸ்நாக்ஸ்ன்னு சொல்லி ரேவதியம்மா தான் கொடுத்தாங்க! நீயும் சாப்பிடு” என்று அவன் முன்னே நீட்டினாள்.
அவள் கையைத் தட்டி விட்டு, கத்தியையும் கீழே போட்டு விட்டு கோபத்துடன் அந்த அறையின் ஜன்னலோரம் போய் அதன் கதவைத் திறந்து கொண்டு வெளியே மவுனமாக வேடிக்கைப் பார்த்தான் ரித்து.
அவன் பின்னே சென்று , “ரித்து இந்த அளவு வயலன்ஸ் எல்லாம் உனக்கு வராது! அதுவும் ஒரு குழந்தை கிட்ட! என் ரித்துவை எனக்கு தெரியும்! அவனால ஒரு ஈ எறும்புக்குக் கூட கெடுதல் பண்ண முடியாது!”
Advertisement
அவன் இன்னமும் மவுனமாகவே இருக்க, மானு அவனை பின்னால் இருந்து கொண்டு அணைத்துக் கொண்டாள்.
“ப்ளீஸ் ரித்து, என்னை ஒன்னும் கேக்காதே!
அதான் நான் இப்ப உன் கூட தானே இருக்கேன்! இந்த நிமிஷம் நாம ரெண்டு பேரும் ஒண்ணா தானே இருக்கோம்!
சந்தோசமா இருக்கோம்!
ப்ளீஸ் அதை நல்லா அனுபவி! இந்த நிமிசத்தை நல்லா அனுபவி ரித்து!
பழசை ஏன் இன்னும் நினைச்சுட்டு இருக்க? ப்ளீஸ் ரித்து.” அவன் முகத்தை தன் புறம் திருப்பினாள்.
கோபத்திலும், எப்படி கேட்டாலும் சொல்ல மாட்டேங்கிறாளே என்கிற ஆற்றாமையிலும் அவன் கண்கள் சிவந்து, மூக்கு விடைத்துக் கொண்டு கண்களில் கண்ணீர் கூட எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது!
“அஞ்சு வருஷம்! நாய் மாதிரி ஊர் ஊரா உன்னைத் தேடி அலைஞ்சேன்! பயித்தியக்காரன் மாதிரி!
என்னை நல்லா புரிஞ்சுட்டுருக்கேன்னு சொல்ற உன்னால எப்படி என்கிட்ட ஒரு வார்த்தைக் கூட சொல்லாம உன்னால போக முடிஞ்சது?
நீ போனப்புறம் நான் என்னாவேன்னு கொஞ்சமாச்சும் நினைச்சுப் பார்த்தியா?” என்று குரல் உடைந்து சொல்லியவன் வேகமாக போய் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.
அவன் பின்னேயே வந்து, அவன் முகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் மானு!
“தப்பு தான் ரித்து! ஆனா அன்னிக்கு நான் இருந்த சூழ்நிலை அப்படி!”
“அப்படி என்ன டேஸ் சூழ்நிலை? என் சூழ்நிலையை நினைச்சியா? என்னைப் பத்தி கொஞ்சமாச்சும் நினைச்சியா?” அவன் கோபத்துடன் அவளைத் தள்ளி விட, அவளோ மீண்டும் அவனை தன்னோடு இறுக்கிக் கொண்டு மெல்லிய குரலில் பாடினாள்.
“உன்னை நான் அறிவேன்! என்னையன்றி யாரறிவார்?
கண்ணில் நீர் வழிந்தால், என்னையன்றி யார் துடைப்பார்?”
அவளது அந்த இறுக்கமான அணைப்பில் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தான் ரித்து.
அவளை தன் பக்கம் இழுத்து முத்தமிட்டான்.
“இலந்தவடை டேஸ்ட் நல்லா இருக்கு!” என்றான் முழுவதும் நார்மல் மூடுக்கு மாறியவனாய்!
பின் அவளின் மடியில் படுத்துக் கொண்டான் அவள் வயிற்றோடு தன் முகத்தை அழுத்திக் கொண்டு!
“ப்ளீஸ் குட்டிமா, நான் இப்படியே கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக்கிறேன்” என்றவனின் தலையைக் கோதி விட்டாள் மானு.
இவர்களின் இப்போதைய நிலை, ரித்து திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியே மொட்டை மாடியில் காயப்போட்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டு, கீழே இறங்கிக் கொண்டிருந்த ரேவதியம்மாவின் கண்களில் விழுந்ததை அவர்கள் அறியவில்லை!
பார்த்து விட்ட ரேவதியம்மாவிற்கோ மண்டை நிறைய குழப்பம்!
என்ன இது இப்படி இருக்காங்க ரெண்டு பேரும்!
அந்த பொண்ணு கல்யாணம் ஆன பொண்ணுல்ல?
அந்த குழந்தை இவளை அம்மான்னு கூப்பிடுது! காலையில இவள பைக்கில கொண்டு வந்து விட்டவனை பை டாடின்னு சொல்லுச்சு!
ஆனா இந்த பொண்ணு மடியில ரித்து தம்பி! என்ன நடக்குது இங்க?
எனக்கு தெரிஞ்சு ரித்து தம்பி அப்படியாப்பட்ட பையன் இல்ல! அடுத்தவன் பொண்டாட்டியோட தொடுப்பு வச்சுக்கிற அளவு!
இந்த பொண்ணைப் பார்த்தாலும் தப்பா தெரியல! என்ன நடக்குது இங்க?
இப்ப பார்த்தத பானு அம்மாகிட்ட சொல்லலாமா வேண்டாமா?
இப்ப மட்டுமில்ல, ரித்து தம்பிக்கு அந்த பொண்ணு சாப்பாடு ஊட்டி விடறப்ப, ஏதோ பேசண்டுக்கு உதவுற மாதிரி இல்லையே!
ரொம்ப அந்நியோன்னியமா இல்ல இருந்துச்சு.
அதுவும் இல்லாம சாப்பிட்டு முடிச்சுட்டு வாய் துடைக்க அவ முந்தானையை ரித்து தம்பி உரிமையா எடுத்துச்சே!
அப்பவே எனக்கு கொஞ்சம் சந்தேகமா தான் இருந்துச்சு.
பானு அம்மா அதை கவனிக்கல! நான் மட்டும் தானே அத பார்த்தேன்!
இப்ப என்ன பண்றது? சொல்லலாமா வேண்டாமா என்று அவர் குழப்பத்துடன் கீழே சென்றார்.
—
அடுத்த இரண்டு நாளில் டாக்டரிடம் ரிவ்யூ சென்றார்கள்.
அவனை பரிசோதித்த டாக்டர், அவனது கை கட்டுக்களை பிரித்து விட்டு விட்டார். “இன்னும் கொஞ்ச நாள் கைக்கு ஹெவியா மூவ்மென்ட் கொடுக்காம இருங்க. சரியாகிடும். நீங்க கண்ரோலா இருந்தா இந்த ஷோல்டர் பெல்ட் கூட ரொம்ப தேவையில்ல” என்றார்.
“இல்ல சார். நான் போட்டுட்டே இருக்கேன்” என்று சொல்லி போட்டுக் கொண்டு வீடு திரும்பினார்கள்.
வீடு வந்ததும், அவனிடம் விசாரித்த பானுவிடம்,
“கட்டைப் பிரிச்சாச்சு. ஆனா கொஞ்ச நாள் கேர்புல்லா இருக்க சொல்லியிருக்காங்க ஆண்ட்டி.
நான் வேணுமின்னா இவங்கள அனுப்பி விட்டுடட்டுமா?” என்று ரொம்ப நல்லவன் போல மானுவைக் காட்டி கேட்டான் ரித்து.
“இல்லடா. உன் அம்மா சீக்கிரமே வந்துடுவா. அது வரைக்கும் இவங்க இருக்கட்டும்.
உன்னை எல்லாம் நம்பி விட முடியாது. திரும்ப கையில் அடிப்பட்டுட்டு வந்து நிப்ப!
முழுசா சரியாகட்டும். நாளை மறுநாள் உன் அம்மா வரேன்னு சொல்லியிருக்கா.
அவ ப்ளைட்ல ஆன்போர்ட் ஆகுற வரை அது நிச்சயம் இல்ல! ஆனா அவ வந்தப்புறம் இவங்க போனா போதும்” என்றார் பானு.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் ரித்துக் கண்ணா என்று உள்ளுக்குள் குதூகலித்தான் ரித்து. மானுவைப் பார்த்து குறும்பாக கண்ணடித்தான்!
மானு முகத்தில் ஏதோ சிந்தனை!
அறைக்குள் சென்றார்கள்.
அவன் தன் ஷோல்டர் பெல்ட்டை அவிழ்த்துப் போட்டு விட்டு, வேகமாக சென்று மானுவை கட்டிக் கொண்டான் இரு கைகளால்!
“அப்பா.. இப்படி என் பொண்டாட்டியைக் கட்டிப் பிடிச்சு எத்தனை வருசம் ஆச்சு” என்றபடி!
“போய் குளிச்சுட்டு வா ரித்து” என்றாள் மானு.
“ஏன் மேடம் என்ன செய்ய போறீங்க? வாடி.. வந்து உன் புருஷனைக் குளிப்பாட்டி விடு” என்று சொல்லி அவளையும் உள்ளே அழைத்து சென்று,
குளித்து முடிப்பதற்குள் ஏகப்பட்ட சில்மிஷங்கள் பண்ணி, அவளைப் பாடாய்ப் படுத்திவிட்டான் அவளின் அன்பு கணவன்!
ஒரு வழியாக குளித்து முடித்து இடுப்பில் டவல் கட்டிக்கொண்டு ஈரத்தலையுடன் வெளியே வந்தவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் மானு.
“என்னடி இப்படி பார்க்குற?”
“என் புருசனை நான் சைட் அடிச்சுட்டு இருக்கேன்” என்றவள் அவன் அருகே வந்து அவளாகவே கட்டிக் கொண்டாள்!
“ஹேய். என்னடா அதிசயம் நடக்குது இங்க? குட்டிமா அவளா வந்து கட்டிக்கிறா!”
“ஆமா குட்டிமாவுக்கு இன்னிக்கு மூடு வந்துடுச்சு கசமுசா பண்ண!” என்றாள் அவனை முத்தமிட்ட படி!
“டேய். ரித்து என்னடா நடக்குது இங்க? அய்யோ பெருமாளே! நான் என்னன்னு சொல்லுவேன்? எப்படி சொல்லுவேன்?” அவன் பொய்யாக புலம்பினான்.
திடீரென்று அவன் மண்டைக்குள் ஒரு எச்சரிக்கை மணியும் அடித்தது!
இந்த குட்டிமா போன முறை அவனை விட்டுட்டுப் போனப்பவும் கூட இதே மாதிரி தான் அவளாக வந்து கட்டிப் பிடித்தாள்!
கண்டபடி முத்தமிட்டாள். ரொம்ப அன்யூசுவலா முரட்டுத் தனமாக நடந்துகிட்டா! இன்னிக்கும் அப்படி ஏதாச்சும் ஐடியா வச்சுருக்காளா? அப்ப திரும்பவும் என்னை விட்டுட்டு போக ப்ளான் பண்றாளா?
அவனுள் கேள்விகள் எழ,
“ஏய். குட்டிமா, உள்ளுக்குள்ள வேற ஏதாச்சும் ப்ளான் ஓடுதா? திரும்பவும் என்னை விட்டுட்டு போலாம்னு ஏதாச்சும் எண்ணம் இருந்தா அத அடியோட அழிச்சுடு! அன்னிக்கு ஏமாந்த மாதிரி இன்னிக்கும் நான் ஏமாற மாட்டேன்!”
“உன் கற்பனைக்கு அளவே இல்லையா ரித்து? அன்னிக்கு ரித்துக் குட்டிய நம்ம பொண்ணுன்னு நினைச்சேன்ன்னு சொன்னியே அத மாதிரி!”
“அப்படி இல்ல குட்டிமா! என் பயம் எனக்கு!”
“நான் உனக்கு வாக்குக் கொடுத்தேன்ல, உனக்கு கை சரியான பிறகு, எல்லாத்துக்கும் ஓகேன்னு! அதான் நான் இப்ப ரெடின்னு சொல்றேன்!”
“ரெடின்னு சொல்லிட்டு, அப்படியே நிக்குறியே? ம்ம். இதே என் பழைய குட்டிமாவா இருந்திருந்தா, இப்படியா நின்னுட்டு இருப்பா?” அவன் பொய்யாக பெருமூச்சு விட்டான்.
“ஹேய். அதையே சொல்லி சொல்லி இன்னும் எத்தனை வருஷம் கிண்டல் பண்ணுவ?”
“அப்ப சரி. வா.” அவளை இழுத்தான் ரித்து.
“ரெடின்னு சொன்னேன். அதுக்கு இப்பவேவா? அதெல்லாம் ராத்திரி தான்!”
“நீ தான் எட்டு மணியானா வீட்டுக்கு கிளம்பிடுவியே?”
“அதெல்லாம் இன்னிக்கு போக மாட்டேன். இங்கேயே தங்கிடுறேன். பானு அம்மாவை தூங்க வச்சுட்டு வரேன். அது வரை நீ கேப் (Cab) கிடைக்கல கிடைக்கலன்னு சொல்லிட்டு டிலே பண்ணிட்டு இரு!”
“அடே அப்பா பிளானிங் எல்லாம் சூப்பரா போடுற குட்டிமா” என்று மனைவியாய் பாராட்டினான் ரித்து.
மாலை, எதிர்வீட்டில் கொடுத்தார்கள் என்று ஒரு சிறு கூடை நிறைய ஜாதிமல்லிப்பூவை கொண்டு வந்தார் ரேவதியம்மா.
“அதைக் கட்டி, குட்டிமாவுக்கு கொடுங்க ரேவதியம்மா”
“நீங்களே கொடுங்க” என்று சொல்லி பானுவிடமே கொடுத்தார் ரேவதியம்மா.
வாங்கி தலை நிறைய வைத்துக் கொண்டாள் மானு.
மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ரித்து உள்ளுக்குள் சந்தோசித்தான்!
இரவு உணவு முடித்து, கிச்சனை சுத்தம் செய்து விட்டு, ரேவதியம்மா கிளம்பி விட்டிருக்க, மானுவுக்கு புக் பண்ணியிருந்த கேப் இன்னுமும் வந்திருக்கவில்லையாம்(?!)
திரும்ப திரும்ப போன் அடித்து திட்டிக் கொண்டிருந்தான் ரித்து.
“என்னங்க ட்ராபிக்ல மாட்டிட்டு இருக்கேன் இருக்கேன்னு ரொம்ப நேரமா சொல்லிட்டு இருக்கீங்க! லேடிஸ் போகனும். நேரமா போக வேண்டாமா? இப்படி பண்றீங்களே” என்றெல்லாம் வெறும் போனில் யாரையோ வலுவாக திட்டிக் கொண்டிருந்தான் ரித்து!
கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு, “கேப் வந்தா நீ கிளம்பும்மா. எனக்கு தூக்கம் வருது” என்று பானு அறைக்குள் சென்றுவிட,
“சரி” என்று சொன்ன மானுவை தள்ளிக் கொண்டு அவன் அறைக்குள் சென்றான் ரித்து.
அவனுக்கு தான் அளித்த வாக்கின் படி நடந்து கொள்ள அவன் அறைக்குள் சென்றாள் மானு,
——
சஷி பாலாவின் வேலையோ அவரே எதிர்பாரா வண்ணம் சீக்கிரமே முடிந்து விட்டது. நாளை மறுநாள் வருகிறேன் என்று சொல்லியிருந்தவர், அன்று மாலையே டெல்லியை விட்டு கிளம்பி விட்டார்.
விடியற்காலை பெங்களுர் வந்து விட்டவர், அங்கிருந்து சேலத்திற்கு காரில் கிளம்பினார்.
தன் வருகையைப் பற்றி தெரிவிக்க எண்ணி ரித்துவை போனில் அழைத்தார்.
அவன் போன் சைலெண்டில்! அவன் தான் தன் குட்டிமாவோடு வேறு உலகத்தில் இருக்கிறானே!
பானுவிற்கு அழைத்தார். பானுவோ மாத்திரைகளின் வீரியத்தில் ஆழ்ந்த உறக்கத்தில்!
இருவருக்கும் மெசேஜ் போட்டு தெரியப்படுத்தினார். ஆனால் இருவருமே பார்த்திருக்கவில்லை!
—–
மானு கண் விழித்தாள். தன்னை அணைத்துக் கொண்டிருந்த ரித்துவின் கைகளை மெல்ல விலக்கி விட்டு எழுந்தவள், அருகில் இருந்த ரித்துவின் போனை எடுத்தாள் மணி பார்க்கவென்று.
அதில் இருந்த சஷிபாலாவின் மெசேஜ் கண்ணில் பட்டது.
வேகமாக எழுந்தவள், பாத்ரூம் சென்று முகம் கழுவி விட்டு வந்து தன் உடைகளை சரி செய்து விட்டு, தலையை சீவி பின்னல் இட்டுக் கொண்டு, ரித்துவின் அருகில் வந்தாள்.
வந்தவள் கண்கள் கலங்கியிருக்க, அவன் நெற்றியில் முத்தமிட்டு “பை ரித்து” என்றாள்.
பின் தன் பொருட்களை எடுத்து பாகில் வைத்துக் கொள்ள தொடங்கினாள். எல்லாவற்றையும் வைத்து விட்டு போனை தேடினாள். எங்க இருக்கு என்று தேடிக் கொண்டிருந்த போது,
“உன் போன் தானே தேடுற? அது இங்க இருக்கு” என்றபடி அறை வாசலில் நின்றுக் கொண்டிருந்தான் ரித்து. அவன் கையில் அவளது போன்!
அவனைக் கண்டதும் அதிர்ந்து போனாள் மானு.
“நீ எப்ப எழுந்த ரித்து?”
“அது இருக்கட்டும். மேடம் இப்ப எங்க இவ்வளவு அவசரமா ரெடி ஆகிட்டு இருக்கீங்க?”
“அது.. வந்து.. நான் டுயுட்டிக்கு போகணும். இன்னிக்கு. லீவ் முடிஞ்சு போச்சு” என்றாள் திக்கி தடுமாறியப்படி!
“ஆமா உன் குரல் ஏன் இப்படி நடுங்குது? நான் உன்னை வேலையை விட்டுட்டு தானே வர சொன்னேன்! லீவு போட்டுட்டு இல்லையே?”
“அது எப்படி முடியும்? நான் இல்லன்னா ரித்துக்குட்டி பாவம்! அவ அம்மா வேற கூட இல்ல, அது தான்!”
“அந்த வெண்ணையெல்லாம் எனக்கும் தெரியும்! எல்லா ஏற்பாடும் நான் பண்ணிட்டேன்.
அவங்க நம்ம கூட திருச்சி வரப் போறாங்க. மாலு சிஷ்டருக்கு கூட ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்துடுச்சு. தெரியுமா உனக்கு? இப்ப எனக்கு தெரிய வேண்டியது எல்லாம் நீ ஏன் மறுபடி என்னை விட்டு பிரிஞ்சு போகணும்னு நினைக்கிற?
நான் என்ன வெறும் உடம்பு சுகத்துக்காக உன்னை இங்க கொண்டு வந்து வச்சுருக்கேன்னு நினைச்சுட்டியா? அஞ்சு வருஷம் உன்னைப் பிரிஞ்சு இருந்தும் ஒருத்தியக் கூட நிமிர்ந்து பார்க்கல நான்! என்னை என்னன்னு நினைச்சே?”
“ச்சே.ச்சே நான் அப்படியெல்லாம் ஒரு நாளும் உன்னை நினைக்கவே மாட்டேன் ரித்து!”
“அப்புறம் என்னத்துக்கு எனக்கு தெரியாம கிளம்ப நினைச்ச? நீயா வந்து நெருங்கினப்பவே எனக்குள்ள அலாரம் அடிச்சுட்டுது! ஏன்னா அஞ்சு வருஷம் முன்னாடியும் நீ இப்படி தான் பண்ணின!
சொல்லு. யார் உன்னை என்னை விட்டு போக சொன்னா? யாருக்கு பயந்து நீ இப்படி ஓடி ஒளிஞ்சுட்டு இருக்க? என்னைத் தாண்டி ஒருத்தன் உன்கிட்ட வர முடியுமா சொல்லு!”
அவளிடம் மவுனம்!
மவுனம். மவுனம். மவுனம் மட்டுமே பதிலாக.
வெறியானான் ரித்து.
அப்படி என்ன தான் காரணம்? எப்படி கேட்டும் சொல்லாத அளவுக்கு?
“வாய திறந்து பதில் சொல்லு குட்டிமா? யார் உன்னை என்ன சொன்னாங்க?”
ம்ஹும். அவளிடம் பதில் இல்லை.
பொறுமை இழந்தான் ரித்து.
ஓங்கி ஒரு அறை விட்டான்.
“சொல்லு”
கன்னத்தைத் தடவிக் கொண்டாளே தவிர பதில் இல்லை!
நிதானம் இழந்தான் ரித்து!
மீண்டும் ஒரு அறை மிக வலுவாய்!
நிலை தடுமாறி கீழே விழுந்தாள் மானு. மூலையில் இருந்த கார்னர் டேபிள் பித்தளை பிளவர் வாஸ் கீழே விழுந்து சத்தமிட்டது!
மானுவின் உதடு கிழிந்து வாயோரம் ரத்தம் எட்டிப் பார்த்தது!
மாடியில் சத்தம் கேட்டு, அதற்குள் வேலைக்கு வந்து விட்டு, பானுவிற்கு காபி போட்டுக் கொண்டிருந்த ரேவதியம்மா வெளியே வந்து மேலே எட்டிப் பார்த்து விட்டு வேகமாக சென்று பானுவை எழுப்பி விஷயத்தை சொன்னார்.
“அப்போ, குட்டிமா, ராத்திரி வீட்டுக்கே போகலியா? என்ன நடக்குது இங்க?” பானு கலவரமானார்.
கொஞ்சம் தயங்கி விட்டு ரேவதியம்மா, ரித்துவையும் மானுவையும் தான் கண்ட கோலம் பற்றி சொல்லியே விட்டார்.
அதைக் கேட்டு அதிர்ந்து போனார் பானு!
ரித்துவா இப்படி? அவருக்குள் பேரதிர்ச்சி!
அவர் வேகமாக போனை எடுத்தார். போனில் சஷியின் மெசேஜைக் கண்டவர், அவரை அழைத்தார்.
“சஷி எங்க வந்திட்டு இருக்க?” என்று கேட்டவர், இங்கு நடப்பதை அப்படியே பதட்டமாக சொல்லி தொடங்கி விட்டார்.
கேட்ட சஷி, “இல்ல என் ரித்து அப்படியெல்லாம் செய்ய மாட்டான். எந்த பொண்ணுக்கிட்டயும் தப்பா நடக்க மாட்டான். அதுவும் கல்யாணம் ஆன ஒரு பொண்ணோட அபேர் கண்டிப்பா வச்சுக்க மாட்டான்! நான் அவனை அப்படி வளர்க்கல!”
“எனக்கும் அது தெரியுமே சஷி. ஆனா இங்க நடக்கிறத பார்த்தா எனக்கு ஒண்ணுமே புரியல! நீ சீக்கிரம் வா!”
“பக்கத்துல வந்துட்டேன். இன்னும் ஒரு பத்து நிமிசத்துல அங்க இருப்பேன்”.
பானு பதட்டத்துடன் பேசி போனை வைத்தவர், அதே பதட்டத்துடனேயே மாடியை நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். அவரால் மாடியேறி செல்லவும் முடியவில்லை!
ரேவதியம்மாவோ வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்!
மேலே இன்னமும் ரித்து கழுத்து நரம்பு புடைக்க கத்திக் கொண்டிருந்தான்.
“ஏற்கனவே சொல்லாம விட்டுட்டுப் போய் தான் நான் அஞ்சு வருசமா பயித்தியக்காரன் மாதிரி உன்னைத் தேடி ஊர் ஊரா சுத்திட்டு இருந்தேன்.
இப்போ அந்த கடவுளா பார்த்து, உன்னை என் கண்ணில் பட வச்சுருக்கார். திரும்பவும் உன்னை இழந்தா, என்னை விட முட்டாள் யாரும் இருக்க முடியாது!
சொல்லு குட்டிமா, அப்படி யார் சொல்லி என்னை விட்டு விலக நினைக்கிற?
இல்ல இந்த சினிமாவுல சொல்ற மாதிரி உனக்கு எதாச்சும் காப்பாத்த முடியாத நோய் இருக்கா?
சொல்லு. குட்டிமா, உலகத்துல எந்த மூலைக்கும் உன்னைக் கூட்டிட்டுப் போய் ட்ரீட்மென்ட் எடுக்கிறேன்! ப்ளீஸ் குட்டிமா என்னை விட்டுட்டு போகணும்னு மட்டும் நினைக்காதே!”
இப்போது மட்டும் கொஞ்சம் வாயைத் திறந்தாள் மானு.
“நீ நினைக்கிற மாதிரியெல்லாம் ஒண்ணுமில்ல. நான் ஹெல்த்தியா தான் இருக்கேன்!”
“அப்புறம் என்னத்துக்கு இப்படி பண்ற குட்டிமா, உன் ரித்து பாவம்னு நினைக்கவே மாட்டியா?
நீ மட்டும் இன்னிக்கு என்னையை விட்டு போய்ட்டா, நான் உயிரோட இருப்பேன்னு மட்டும் நினைச்சுடாத!”
“வலிக்குது ரித்து. ப்ளீஸ் இப்படி பேசாதே!”
“அப்ப சொல்லு.
சொல்ல மாட்டல்ல!
சொல்லவே வேணாம்! நானே உன்னைக் கொன்னுடறேன். கொன்னுட்டு நானும் செத்துப் போறேன்” என்று சொல்லி அவள் கழுத்தை நெறிக்க போன போது,
“நிறுத்துடா!
அவளை விடு! இப்ப உனக்கு என்ன தெரியணும்?
யாரு சொல்லி அவ உன்னை விட்டுப் போனான்னு தானே!
நான் தான் சொன்னேன்!
அவக்கிட்ட என் பையனை விட்டு விலகிப் போன்னு போதுமா?” என்று அவன் பின்னால் நின்று கத்தினார் சஷி பாலா!
ரித்துவும் மானுவும் அதிர்ந்து திரும்பி பார்த்தார்கள்!
“நீயா மம்மி ? நீயா?’ வார்த்தைகள் வாயில் தடுமாறின ரித்துவுக்கு.
கண்கள் நிறைய கண்ணீருடன் சஷி பாலாவை நோக்கி வந்தவன், அவர் முகத்தை உற்றுப் பார்த்து விட்டு, மீண்டும் உதடு பிதுக்கி அழுதவாறு கேட்டான்.
“ஏன் சித்தி இப்படி பண்ணின?”
கேட்ட சஷி பாலாவுக்கு காலுக்கு கீழே பூமி இரண்டாக பிளந்தது போல இருந்தது!
error: Content is protected !!