Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

சொல்லி விடு வெள்ளி நிலவே

சொல்லி விடு வெள்ளி நிலவே – 3

மானு லீவ் முடிந்து டுயுட்டிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள்.

மார்னிங் ஷிப்ட்.  பாமா அவளுக்காக சமைத்துக் கொண்டிருந்தார்.

ரித்துக் குட்டி இன்னும் எழ வில்லை.

அவள் அப்பா மனீஷ் நேற்றிரவே வந்து விட்டான். அவன் அவளை பள்ளிக்கு கிளப்பி விட்டு விடுவான். அப்பாவும் மகளும் இன்னமும் எழுந்திருக்க வில்லை.



Advertisement

“ம்மா. சாப்பாடு ரெடியா?, எனக்கு டயமாச்சு.” என்று உள்ளே குரல் கொடுக்க,

“இந்தா எடுத்துக்கோ. காலைல சாப்பிட சேமியா உப்புமா வச்சுருக்கேன். மறக்காம சாப்பிடு. சூடா தான் இருக்கும்.

இன்னும் ஒரு மணி நேரத்துக்கு. ஆறிப் போச்சும்மா, அதான் சப்பிடலன்னு சொல்லாத!” என்று சொல்லி விட்டே டிபன் பாக்சை அவளிடம் கொடுத்தார் பாமா.

Advertisement

ஹாஸ்பிட்டல் லோகோ பொறித்த, பேபி பிங்க் கலர் பான்ட் சர்ட் தான் அவளின் யூனிபார்ம்!

Advertisement

அதை அவள் வீட்டிலேயே அணிந்து கொண்டே சென்று விடுவாள்.

கையில் வாட்சை கட்டியபடி “என்னை சொல்லிட்டு நீ சாப்பிடாம இருந்திடாதே, ஒழுங்கா சாப்பிட்டுட்டு மாத்திரை போட்டுக்கணும், ஓகேயா?”  என்று சொல்லி,

அவர் கொடுத்த பாகை வாங்கி வண்டியில் மாட்டி விட்டு தன் ஸ்கூட்டியை கிளப்பினாள் மானு.

Advertisement

அவள் வீட்டில் இருந்து அரைமணி நேர பயணம் அவள் வேலை செய்யும் ஹாஸ்பிட்டல்.

வேண்டுமென்று தான் கொஞ்சம் தூரமாக இருக்கிறார்கள்.

தேவையில்லாமல் பாமாவையோ, அவள் குடும்பத்தையோ கூட வேலை பார்ப்பவர்களின்  விமர்சனத்திற்கு  ஆளாக்க விரும்பாமல்!

யாரையும் இது வரை வீட்டிற்கு அழைத்து வந்ததில்லை.

இவளும் யார் வீட்டு விசேஷத்திற்கும் பெரும்பாலும் போவதில்லை.

அதே சமயம் எல்லோரிடமும் நட்பாகவும் பழகினாள். ஆனால் அவளே வரையறுத்துக் கொண்ட ஒரு எல்லையுடன்!

கூட வேலை பார்ப்பவர்களோடு சாப்பாடு சேர் செய்வதுண்டு.

ஆபத்து காலத்தில் பண உதவி கூட செய்வதுண்டு தான்.

ஆனால் யாரிடமும் குடும்ப விவகாரங்கள் பற்றி பேச மாட்டாள். அவர்களே பேச வந்தாலும் புன்னகையுடன் தவிர்த்து விடுவாள்.

அவர்களும் அந்த எல்லையிலேயே நின்றார்கள். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது!

ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்க்கு  அவள் நெருக்கம் என்ற ஒரு இமேஜ்!

ஹாஸ்பிட்டல் ஓனர் மனீஷ்க்கு ஒரு வகையில் சொந்தம் தான்!

அந்த தொடர்பில் தான் அவன் அவளை நர்சிங் பயிற்சிக்கும் அதன் பின்னர் வேலைக்கும் ஏற்பாடு செய்ததே!

சேரும் போது அதை நடத்தும் டாக்டர் அர்ச்சனாவிடம் அவள் தன்னைப் பற்றிய  எதையும் ஒளிக்காது சொல்லி விட்டே சேர்ந்திருந்தாள்.

அது அவருக்குப் பிடித்துப் போய் விட்டது!

ட்ரைனிங்கின் போதும் சரி, அது முடிந்து பின் வேலையில் சேர்ந்து பின்னும் சரி அவளின் நேர்மை, உழைப்பு, வேலையில் அவளுக்கு இருந்த டெடிகேசன் எல்லாமும் சேர்ந்து அர்ச்சனாவின் குட் புக்கில் இடம் பெற செய்து இருந்தது!

முதலில் தலைமை ஹாஸ்பிட்டலில் தான் அவள் வேலைக்கு சேர்ந்தாள்.

பின் புறநகர கிளை ஒன்றும் அதன் நிர்வாகம் திறந்த போது, மானு அதற்கு அனுப்பப் பட்டு விட்டாள்.

சிறிய கிளை என்பதால், இங்கு தன் வேலைகளோடு, நிர்வாகத்திலும் அவள் உதவி செய்து கொண்டிருந்தாள்.

அட்மின் ஆபிசர் என்று ஒருவர் இருந்தாலும் கூட,  அவருடன் இணைந்து அவள் செய்து கொண்டிருக்கும் நிர்வாக பங்களிப்பும் அதிகம்!

அதிலும் இங்கு இருக்கும் கைனகாலஜிஸ்ட் சாதனாவிற்கு மானு இல்லையென்றால் கஷ்டம்!

“மானுவை யார் வேற வார்டுக்கு  டுயுட்டி போட்டது?

அவளை மாதிரி பீட்டல் மானிடர்(Fetal Monitor- குழந்தையின் இதய துடிப்பு மற்றும் நலனை கண்காணிப்பது) யார் பண்றா இங்க?

அவ இருந்தா நான் நம்பி விட்டுட்டு, அடுத்த கேசை பார்ப்பேன்!

அவ்வளவு டெடிகேசன் இருக்கும் ஒரு உயிரை இந்த உலகத்துல சேபா (Safe) கொண்டு வருவதுல!

அவ இல்லன்னா எனக்கு கொஞ்சம் கஷ்டம்! ப்ளீஸ் அவள வேற எந்த வார்டுக்கும் அனுப்பாதீங்க!” என்பார்!

பீடியாட்ரிசியன் டாக்டரோ, “வாக்ஸின் இன்வெண்டரி சரியா பார்த்துப்பா, பொறுப்பா இருந்து ஹெல்ப் பண்ணுவா.

லோட் பண்ணுன அப்புறம், டைம் டிலே பண்ணாம  போட்டு விட அசிஸ்ட் பண்ணுவா.

அவ வேணும் என் வார்டுக்கு”  என்று கேட்பதும் உண்டு!

இப்படி டாக்டர்ஸ்க்கும் மேனேஜ்மென்ட்டுக்கும் வேண்டப்பட்ட ஆளாக இருப்பதால், மற்றவர்கள் ஒரு மரியாதை எல்லையுடனே இருந்தார்கள் எம்.எம். சிஸ்டரிடம்!

எம்.மானசா என்பதன் சுருக்கம்! வெறும் எம் எம் அல்ல! திருமதி எம்.எம்!

மானசா மணி சந்திரன் என்பதன் சுருக்கம் எம்.எம்.!

ஆனால், இங்கு உள்ளவர்கள் அதை மானசா மனீஷ் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!

மனீஷை அவள் கணவன் என்றே நினைத்துக் கொண்டு!

அவ்வபோது அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல, குழந்தை ரிதன்யாவுடன் வரும் மனீஷ், அங்கு ரிசப்சனில் அவளுக்காக காத்திருப்பான்.

ரிதன்யாவும் அவளை “மானும்மா” என்றே அழைப்பதால், அவளை மானுவின் குழந்தை என்றே நினைத்துக் கொண்டார்கள்.

அதற்கேற்றார் போல் மானுவைப் போலவே,  சிரிக்கும் போது அவளுக்கும் இரண்டு கன்னங்களிலும் குழி விழும்!

யாராவது  அவளிடம்  பேரைக் கேட்டாலும் கூட ரொம்ப தெளிவாக எம்.எம். ரிதன்யா என்றே சொல்லுவாள்!

மாலா மனீஷ் ரிதன்யா என்பதை! ஆனால் கேட்பவர்களோ மானசா மனீஷ் ரிதன்யா என்றே புரிந்து கொள்வர்!

அவள் குடியிருக்கும் பகுதி ஆட்களுக்கு நன்கு தெரியும், அவள் அத்தை தான் என்று!

ஆனால் இங்கு கூட வேலை செய்பவர்கள் தான் இப்படி நினைத்துக் கொண்டார்கள்!

மேலும் அறிய அவள் தான் சந்தர்ப்பமே கொடுப்பதில்லையே!

வீட்டின் அக்கம் பக்கம் இருப்பவர்கள் மனீஷை ரித்துப்பா என்றே அழைப்பார்கள்.

இங்கேயும் மனீஷ் காத்திருப்பதை அவளிடம் தெரிவிக்க வேண்டியிருந்தால், “எம்.எம், அங்கே  ரித்துப்பா ரொம்ப நேரமா உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார், சீக்கிரம் போ என்றோ, அங்க உன் பொண்ணு கத்து கத்துன்னு கத்திட்டு இருக்கு, மானும்மா மானும்மான்னு.

அதான் உனக்கு டுயூட்டி முடிஞ்சிடுச்சு இல்ல, போ கிளம்பு சீக்கிரம்” என்றோ ஆயாக்கள் சொல்லுவதுண்டு!

ஆரம்பத்தில் இதை பெரிதாக எண்ணவில்லை மானுவும்!

பின் இவர்கள் இப்படி தவறாக நினைத்துக்கொண்டு இருப்பதை அறிந்து அதிர்ந்தவள், இதைப்பற்றி வீட்டில் மனிஷ் – மாலாவுடன் சொன்ன போது, மாலா தான் சொன்னாள்.

“இத இப்படியே விட்டுடு மானு, அவங்க அப்படியே நினைச்சுட்டு போகட்டும். நான் தப்பா நினைச்சா தானே உனக்கு பிரச்சினை!

இப்படி இருக்கிறது தான் உனக்கும் சேப்! யாரும் உன்கிட்ட தப்பா நெருங்கவோ, இல்ல அலையன்ஸ் கொண்டு வரவோ மாட்டாங்க!”

கொஞ்சம் யோசித்த மானு, “நீ சொல்றதும் சரி தான் மாலுக்கா, அப்படியே நினைச்சுட்டு இருக்கட்டும்” என்று சொல்லி விட்டாள்!

சொன்ன அவள், மாலு ஏன் அப்படி சொன்னாள், உண்மையில் மானுவின் வெல்விஸராக இருக்கும் அவள்,

இப்படி அடுத்தவள் புருசனோடு இணைத்துப் பேசப்பட்டால், மானுவின் எதிர்கால திருமண வாழ்க்கை, பாதிக்கப் படாதா என்றெல்லாம் கூட யோசிக்காமலா இப்படி சொல்லி இருப்பாள் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை!

ஆனால் மாலு நன்கு யோசித்து விட்டு தான் இப்படி சொல்லியிருந்தாள்.

ஏனென்றால் மாலுவுக்கும் மனீஷ்க்கும் மானுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விட்டிருந்தது தெரிந்தே இருந்தது!

ஒரு நாள் பாமாவின் ஹெல்த் இன்சூரன்ஸ் சம்பந்தமாக அவரின் ஆதார் போன்ற ஆவணங்கள் அவசரமாக  தேவைப்பட,  அப்போது மானு வீட்டில் இல்லை.

பாமாவிடம் சொல்லி எடுத்து தர சொல்ல வேண்டியதாகி விட்டது!

அவருக்கு சரியாக எடுத்து தர முடியவில்லை.

மானு போனில் விவரம் சொன்ன போதும் பீரோவை முழுவதும் குடைந்து தேடியும் அவரால் எடுக்க முடியாமல் போகவே,

“இருக்கிற எல்லா பைல்களையும் கொண்டு வாங்கம்மா, நான் பார்த்து எடுத்துக்கிறேன்” என்று மாலு சொல்லி விட,

பாமா கொண்டு வந்த கொடுத்த டாகுமென்ட்களோடு கூடவே இருந்தது மானஸா ரித்தீஷ் போட்டோக்களுடன் கூடிய அந்த மேரேஜ் சர்டிபிகேட்!

அதைக் கண்ட மாலு அதிர்ந்து தான் போனாள்.

மானுவின் பதினெட்டரை வயதில் பதிவு செய்யப்பட்டிருந்தது அது!

மாலுவும் மனீஷும் அவளுக்கு அறிமுகம் ஆகுமுன்னே நடந்து விட்டிருந்த பதிவுத் திருமணம்!

பாமாவின் முன்பு எதையும் காட்டிக் கொள்ளாது, அதை தன் மொபைலில் ஒரு போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டவள்,

பாமாவின் டாகுமெண்ட்களை எடுத்துக் கொண்டு, பைலை மூடி அவரிடம் கொடுத்து “இருந்த மாதிரியே பத்திரமாக வைத்து விடுங்கம்மா” என்று சொல்லி வெளியே வந்து விட்டாள்!

மனீஷிடம் இதை உடனே போன் போட்டு சொன்னாள்.

அவன் உடனே வீட்டுக்கு வந்து போனில் இருந்ததைப் பார்த்து விட்டு,

“மாலும்மா, மானு இத நம்ம கிட்ட கூட இத்தனை நாளா சொல்லாம இருக்கான்னா, அதுக்கு ஏதோ ஸ்ட்ராங்கான  ரீசன் இருக்கணும்.

அநேகமா இது பாமா அம்மாக்கு கூட தெரிஞ்சு இருக்காது தான் போல!

அதனால நாமும் இத தெரிஞ்சிட்ட மாதிரி காட்டிக்க வேணாம்!

 அவளா எப்ப சொல்றாளோ அப்ப சொல்லட்டும்.

ஆனா இதுக்காக நீ அவளை தள்ளி நிறுத்தி எல்லாம் வச்சுடக் கூடாது!

அவ அவளைப் பெத்த அம்மாவுக்கு கூட தெரியாம வச்சுருக்கானா, நிச்சயம் காரணம் இருக்கும்.

 அந்த பையனைப் பார்த்தா பெரிய இடத்துப் பையன் மாதிரி வேறே இருக்கு, அவளுக்கு எதாச்சும் பிரச்சினை இருக்கும் போல!

 அது தான் ஒதுங்கி இருக்கா!” என்று சொல்லி விட்டான்.

இருவரும் அமைதியாக ஆனால் அவளுக்கு இன்று வரை ஆதரவாகவே இருந்து வருகிறார்கள்!

மானுவுக்கு இந்த வகையில் அதிர்ஷ்டம் தான்! எந்த சூழ்நிலையிலும் தவறாக நினைக்காத, அவள் நலத்தை மட்டுமே எண்ணும் நல்ல நட்பு!

“எம்.எம் வர்றீங்களா நாம சாப்பிடலாம். இப்ப தான் ஆர்த்தோ  டாக்டர் அக்பர் சார் ரவுண்ட்ஸ் முடிஞ்சு போனார்” என்றபடி வந்தாள் சிஸ்டர் சுஜி.

“ம்ம். இதோ வந்துட்டேன்” என்றபடி அவளுடன் சாப்பிட சென்றாள் மானு.

சாப்பிடும் போது சுஜி சொன்னாள்.

“இன்னிக்கு எனக்கு சந்த்ராஷ்டமம் எம் எம்.

வழக்கமா காலையிலேயே வீட்டிலேயே ஏதாச்சும் நடக்கும்.

தண்ணீர் மோட்டார் ரிப்பேர், வண்டி பங்க்ச்சர், ரோட் ட்ராபிக் இப்படி.

இன்னிக்குன்னு பார்த்து எல்லாம் நல்லா போச்சு!

அடடே பரவாயில்லையேன்னு நினச்சு சந்தோசமா டுயூட்டி வந்தேன்.

வந்தா, புதுசா அட்மிட் ஆகியிருக்கிற ஒரு பையனால அக்பர் டாக்டர் கிட்ட நல்லா அர்ச்சனை கிடைச்சாச்சு!” என்றாள் சலிப்புடன் சிரித்தபடி!

“ஏன் என்னாச்சு?”

“அதுவா! அந்த பையன் ஒரு ஷை டைப் போல. பைக் ஆக்சிடன்ட். ஏதோ குழந்தை குறுக்கே ஓடி வந்துச்சாம்.

இவன் அது மேலே மோதாம இருக்க வண்டியைத் திருப்பி, இவன் ஸ்கிட் ஆகிட்டான்.

ரைட் ஹாண்டில் ஒரு பிராக்சர். காலிலும் சரியான அடி! நல்ல வேளையா பேஸ்ல(Face) ஒன்னும் அடிபடல!

பையன் கொஞ்சம் பெரிய இடம் போல, ஆனா அவன் வீட்டில் இருந்து இன்னுமும் யாருமே அட்டெண்டர் வரல!

இவன் பிரெண்ட்ஸ் கூட ஏற்காடு ட்ரிப் வந்திருப்பான் போல!

கூட ஒரே சின்ன பசங்க கூட்டம்! அவனுங்கள வெளிய அனுப்பவே  முடியல!

இவன் ஏதோ பைக் ட்ராவலராம்.

பேமஸ் யூடுயுபராம்!

நாம என்னத்த கண்டோம்! நான் போனில் ராசி பலனும் சமையலும் தான் பார்ப்பேன்! நீங்க சிஸ்டர்?”

“நானும் தான்!” என்றாள் சிரித்தபடி மானு!

“அது சரி உங்கள எதுக்கு அக்பர் சார் திட்டினார்?”

“அந்த பையன் யாரையுமே ஸ்பன்ஜிங்( நோயாளி உடம்பை துடைத்து சுத்தமாக வைத்திருப்பது) கொடுக்க விடவே மாட்டேங்கிறான்.

ஆயாம்மாவையும் விட மாட்டேங்கிறான், மேல் ஸ்டாப் யாரையும் கூட விட மாட்டேங்கிறான்.

இதில அக்பர் சார் ரவுண்ட்ஸ் வந்து பார்த்துட்டு ஒரே கத்தா கத்திட்டுப் போயிட்டாரு, இத கூட பண்ண மாட்டீங்களான்னு” சுஜி புலம்பினாள்.

டாக்டர் அக்பர் ஒரு சிடுமூஞ்சி என்றே விமர்சிக்கப்படுபவர்!

ஆனால் உண்மையில் அவர் ஒரு ஸ்ட்ரைட் பார்வர்டான ஆள்!

டிசிபிளின் அதிகம் எதிர்பார்ப்பவர். அது குறையும் போது அவருக்கு பயங்கரமாக கோபம் வந்து விடும்!

மானு இது வரை ஒரு முறை கூட அவரிடம் திட்டு வாங்கியதில்லை.

அவளிடம் சிரித்துப் பேசாவிட்டாலும் அவள் மீது அவருக்கு மரியாதை உண்டு என்பதை அவள் அறிவாள்.

ஆனால் எல்லாரும் அப்படி இருப்பதில்லையே!

ஆனால், இன்று அந்த பையன் கோஆபரேட் பண்ணாததுக்கு சுஜி என்ன பண்ணுவாள் என்றே அவளுக்கும் தோன்ற, “சரி நான் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லி,

அவளின் டுயுட்டி முடிந்து கிளம்பும் போது அவன் இருக்கும் வார்டிற்கு சென்று நர்ஸ்கள் இருக்கும் அறைக்குள் சென்று விசாரித்தாள்.

“எங்க.. எம்.எம். இன்னும் அவன் வீட்டில் இருந்து ஒருத்தர் கூட இன்னமும் வர வில்லை.

யாரோ ஒரு ஆள் அவங்க மேனேஜராம்!

அந்த ஆள் வந்து பணம் மட்டும் கட்டிட்டு வெளியே போயிட்டு வரேன், பார்த்துக்கங்கன்னு சொல்லிட்டுப் போய்ட்டார்!

கூட இருந்த பொடிப் பசங்கள நான் தான் அனுப்பி வச்சுட்டேன்.

என்ன பணம் இருந்து என்ன பிரயோஜனம்?

கூட  ஒருத்தர் கூட இல்ல.

இதில அவன் என்னமோ பெரிய ஸ்ரீ ராமச்சந்திரன் மாதிரி, அவனை யாரும் தொட்டு துடைச்சி விட மாட்டேன்கிறான்! அத்தனை தூக்கத்திலும்!

இவனால நான் திட்டு வாங்கினது தான் மிச்சம்!”

சுஜி மறுபடியும் புலம்ப ஆரம்பித்தாள்!

“இருங்க சிஸ்டர், நான் வேணுமின்னா ட்ரை பண்றேன்” என்று சொல்லி அவன் ரூமை அடைந்தவள், மருந்துகளின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ரித்தீஸை கண்டாள்.

“ரித்தூ..” அதிர்ச்சியில் அவளை அறியாமல் கொஞ்சம் வேகமாகவே கத்தி விட்டாள்!

நல்ல வேளையாக ஏ.சி. அறை என்பதால் பெரிதாக வெளியே கேட்கவில்லை!

யாருக்காக அனு தினமும் அந்த முருகனை வேண்டிக் கொண்டே எழுவாளோ, யாரின் நலம் வேண்டியே துடிக்க துடிக்க இதயத்தை அறுத்து வெளியே போட்டது போன்ற வலியுடன் விலகி ஓடி வந்தாளோ அவனை இப்படி இந்த சூழ்நிலையில் எதிர்பார்க்க வில்லை அவள்!

வலது கையில் எலும்பு முறிவு! காலிலும் நல்ல காயம்!

இப்படி உடல் முழுவதும் காயங்களோடும் கட்டுகளோடும் அவனைப் பார்க்க அவளுக்கு மனம் துடித்தது!

ஒரு முறை அவன் காலில் பைக் சைலன்சர் சுட்டு புண்ணாகி விட்ட போது, அதைக் கூட தாங்கிக் கொள்ள  முடியாமல் கதறி தீர்த்தவள் அவள்!

கன்னத்தில் ஒரு சிறு வெட்டுக் காயம் அவன் ஷேவ் பண்ணும் போது ஏற்பட்டு ரத்தம் வந்ததைக் கண்டே கண்ணீர் விடுத்தவள் அவள்!

இப்போது இத்தனைக் காயங்களுடன் அவனைக் கண்டதும் துடித்துப் போய் விட்டாள்.

மெல்ல அருகில் சென்று அவன் தலை வருடிக் கொடுத்தாள், பொங்கி வந்த அழுகையை அடக்கிய படி!

அப்போது உள்ளே வந்தாள் சுஜி.

கண்ணீருடன் மானுவைப் பார்த்தவள், கொஞ்சம் குழம்பி, முகத்தில் கேள்வியோடு நோக்க, “என் சொந்தக்காரன் தான் இவன். பெயர் ரித்தீஷ்.

ஆனா இப்ப கொஞ்ச நாளா பேசுறது இல்ல!

ஆனால் இவ்வளவு இஞ்சுரியோட பார்த்தவுடன் ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்லி சமாளித்தாள் மானு.

உள்ளுக்குள் “நானே அவனுக்கு சொந்தம்! அவனுக்கு மட்டுமே மட்டும்” என்று நினைத்துக் கொண்டாள்.

“அப்ப, எம்.எம். நீங்க கொஞ்சம் அவர் கிட்ட பேசி, கொஞ்சம் கோ ஆபரேட் பண்ண சொல்லுங்க ப்ளீஸ்.”

“இப்ப எழுப்ப வேண்டாம், நானே ஸ்பன்ஜிங் கொடுத்துட்டுப் போறேன்.”

சுஜி வெளியேற, மானு ரித்துவை நெருங்கினாள். அவனை விட்டு வரும் போது இருந்த மாதிரி சின்னப் பையன்  போல இல்லாமல், முழுக்க முழுக்க நன்கு வளர்ந்த ஆண் மகனாக இருந்தான் ரித்து.

உடலைத் துடைத்து விட ஆரம்பித்தவள், அதிர்ந்தாள்.

உடல் முழுக்க சின்னதும் பெரிதுமாக ஏகப்பட்ட தையல் தழும்புகள்!

அடிக்கடி இப்படி வண்டியில் போய் விழுந்து எழுவான் போல!

அவளுக்கு அவன் வீட்டினர் மேல் பயங்கர கோபம் வந்தது!

இப்படியா ஒருத்தர் கூட இன்னமும் வராமல் இருப்பது? என்ன தான்

இவன் அடிக்கடி இப்படி செய்வான் என்றாலும் கூட மனம் பதைக்காமலா போகும்?

அவன் அம்மாவுக்கு?

முக்கியமாக அவனின்.. அவனின்..  மனைவிக்கு?

எங்கே தான் இருக்கிறாள் அவள்?

அப்படி என்ன முக்கிய வேலை? ஏன் இன்னமும் வந்து பார்க்க வில்லை?

ஒரு வேளை குழந்தை பிறந்திருக்குமோ? அது தான் வர முடியவில்லையோ?

முதல் குழந்தையா? அல்லது இரண்டாவது பிரசவமாக இருக்குமோ?

மனம் ஜெட் வேகத்தில் யோசித்துக் கொண்டிருந்தது மானுவுக்கு.

அந்த யோசனையில், யாரையுமே தொட்டு துடைக்க விடாதவன் அவளை மட்டும் அனுமதித்தது பற்றி அவள் கவனிக்க வில்லை!

அனிச்சை செயலாக இருந்தது அவளின் பணி!

துடைத்து முடித்தவள், அவன் நெற்றியில் மெதுவாக இதழ் பதித்தாள்.

அவனிடம் தூக்கத்தில் கூட சின்ன சலனம்.

அவன் உதடுகளோ மெதுவாக முணுமுணுத்தன. “குட்டிம்மா.”

அதைக் கேட்ட மானு கொஞ்சம் அதிர்ந்து அவனை உற்று நோக்கினாள்.

அவனோ இன்னமும் கண் திறக்க வில்லை.  தூக்கத்தில் தான் இருந்தான்!

அவனை விட்டு விலகிவள், ரூமை மெதுவாக சாத்தி விட்டு சுஜியிடம் அவசரமாக சொல்லிக் கொண்டு கிளம்பி விட்டாள் ஓட்டமும் நடையுமாக!

அவன் கண்ணிலோ அவன் குடும்பத்தார் கண்ணிலோ பட்டு விடக் கூடாது. இனி அவன் டிஸ்சார்ஜ் ஆகும் வரை, இந்த பக்கம் கூட  வரக் கூடாது என்று முடிவெடுத்தபடி!

ஆனால் மறுநாளும் அவனை சென்று பார்க்க தான் போகிறாள், அவன் அவளைக் கண்டுக் கொள்ள தான் போகிறான் என்பதை அறியவில்லை அவள்!

சொல்லி விடு வெள்ளி நிலவே .. தொடரும். சொல்லுவாளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!