Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 16

அத்தியாயம் : 16

மகனைக் கண்டதும் இளவரசியின் முகம் மலர்ந்துபோனது! ஊரில் உள்ள ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் குத்தகைக்கு எடுத்தது போலக் காணப்பட்டாள். ஆதுரமாக அவனை நோக்கி, “வாப்பா ஆனந்த்! எப்படி இருக்க? நேரத்துக்குச் சாப்பிடுறியா? எத்தனை நாள் விடுமுறையில் வந்திருக்க?” என்று பரபரப்புடன் வினவினாள்.

“நான் நல்லா இருக்கேன்மா. நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”

“ஆமாம்பா! உன்னைப் பார்க்க முடியலையேங்ற வருத்தத்தை தவிர, எங்களுக்கு வேறு எதுவும் இல்லை.”



Advertisement

அவன் சிரித்த முகத்துடன் கையில் இருந்ததைக் கீழே வைத்துவிட்டு, “எனக்கும் வேலையைப் பார்க்கணும் இல்லையா அம்மா? சும்மாவே எங்கேயும் இருக்க முடியாதுல்ல!” என்க,

“இவ்வளவு பெரிய வீடு, சொத்து, வசதிகள் இருந்தும், எதுக்காக எதுவுமே இல்லாதது போல எங்கேயோ போய் வேலை செய்து கஷ்டப்படணும்? நீ இங்க இல்லாததும், அப்பாவின் பேச்சைக் கேட்காததும் அவர்களுக்குக் கோபம்! அதை அப்பப்ப என்கிட்ட கொட்டவும் தவறுவதில்லை” என்று மகனிடம் குறைபட்டாள் இளவரசி.

​அவன் அம்மாவின் தோளில் கை போட்டவாறு, “அம்மா! என்னதான் நீங்க சொன்னாலும் இதெல்லாம் நமக்கு மட்டும் சொந்தமானது இல்லையே! இரண்டு மாமாவின் பசங்களுக்கும் உரிமையானது. அவனுங்க இப்போ சின்னப் பசங்களா இருக்காங்க. நாளைக்குப் பெரியவனா வளர்ந்து வந்த பிறகு, இதிலெல்லாம் பங்கெடுக்கும் உரிமை அவங்களுக்குத்தான் முதலில் உண்டு. அந்த நேரம் நான் என்ன செய்யறது?” என்று கேட்டான்.

Advertisement

​“நீ ஏன்பா அப்படி எல்லாம் நினைக்கிற? நம்ம வீட்டுல அப்படி யாரும் பாரபட்சம் பார்த்துப் பழகும் ஆட்கள் இல்லை!”

Advertisement

​“எனக்கு அப்படித் தோணுச்சுமா. அப்பாவிடம் சொன்னா இதெல்லாம் கேட்க மாட்டார். நீங்களும் சொன்னா கேட்க மாட்டீங்க. எல்லாருமே அப்படித்தான்… அதனால்தான் நான் என்னோட வழியைத் தேர்ந்தெடுத்துத் தனியா போயிட்டேன்! இப்ப பாருங்க… எனக்குன்னு சொந்தமா ஒரு தொழில், கை நிறையச் சம்பளம், யாருக்கும் அடங்காம கண்ணியமா, நிறைவான ஒரு வாழ்க்கை! நாளைக்கு யாரும் என்னை ஒரு வார்த்தை சொல்ல முடியாது, இல்லையா?” என்று கேட்க, அந்தத் தாயால் மறுப்புக் கூற முடியவில்லை.

‘இந்த வயதிலும் தன் மகன் எவ்வளவு புத்திக்கூர்மையுடன் செயல்படுகிறான்! ஆனால், தன் கணவர் அப்படி இல்லையே! இப்படிப்பட்ட சுயபுத்தியுடைய மகனை அல்லவா குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்!’

“அம்மா! அப்பாவும் சித்தப்பா ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம தொழிலைப் பார்த்துட்டு இருக்காங்க. அதுவே அவர்களுக்குத் தாராளமா போதும். இதுல நான் வெறும் தலையாட்டி பொம்மையா எத்தனை நாளைக்கு இருக்க முடியும்?” என்று கேட்க, மகன் கூறியது புரியாமல் இல்லை. ஆனாலும் மனம்தான் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

Advertisement

“சரி, அதை விடு! எத்தனை நாள் விடுமுறையில் வந்திருக்க ஆனந்த்?”

“ஒரு வாரம்!”

“வெறும் ஒரு வாரம் தானா?”

“அம்மா! அதுக்கே எனக்கு இப்போ முடியல. நீங்க அவசரமா வரணும்னு சொன்னதால்தான் வந்தேன். இல்லை இந்தப் பக்கமே எட்டிப் பார்த்திருக்க மாட்டேன்! இடையில் நடந்த பார்ட்டியில் நிறையப் பெரிய பிரமுகர்களுடன் எனக்குப் பழக்கம் கிடைச்சிருக்கு. அவர்களுடன் சேர்ந்து புதிய தொழில் செய்யவும் டீல் ஆரம்பிச்சிருக்கேன். பரபரப்பா இயங்கிக்கிட்டு இருக்கும் நேரத்துல நீங்க கூப்பிட்டீங்க. வேறு ஏதாவது காரணத்தைச் சொல்லியிருந்தா நிச்சயம் வந்திருக்க மாட்டேன். தாத்தாவுக்கு ஆண்டு என்றதால் மட்டுமே புறப்பட்டு வந்தேன்.”

​மகனின் வார்த்தையில் தாயின் முகம் வாடிப்போனது. அதை மாற்றும் பொருட்டு, “ஆமாம்! நம்ம வீட்டுல உள்ள வாண்டுகள் எல்லாம் எங்க? நான் வருவது தெரிஞ்சும் அதுக்குள்ள தூங்கப் போயிட்டாங்களா? கொஞ்சம் கூட பாசமே இல்லையே!” என்று விசாரித்தான்.

இளவரசி பரிவுடன் மகனை நோக்கி, “நேரம் என்ன ஆகுது பார்த்தியா? பத்து மணிக்கு மேல ஆயிடுச்சு! அவங்க இவ்வளவு நேரம் என்னைக்காவது முழிச்சிருப்பாங்களா? நாளைக்கு விசேஷம்னு எல்லாரும் வேலை செய்துகிட்டு இருந்ததைப் பார்த்து, அந்த வாண்டுகளும் அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டே இருந்தாங்க. இப்பத் தூங்கினால்தான் காலையில் சீக்கிரம் எழும்ப முடியும்னு அத்தனை பேரும் உள்ள போனதும், அதுகளும் படுக்கப் போயிட்டாங்க. நீயும் அவ்வளவு தூரத்தில இருந்து வந்தது உடம்புக்குக் களைப்பா இருக்குமே! சாப்பிட்டுப் போய் அறையில் ரெஸ்ட் எடு, காலையில் பேசலாம்” என்றாள்.

அவன் அப்பாவை பற்றிக் கேட்டுத் தெரிந்து கொண்டு. அவரது கேள்விகளுக்கும் பதிலளிக்க, வந்தவுடனே அவன் திருமணத்தைக் குறித்துப் பேசினால் நாளைக்கு விஷேசம் முடிந்ததும் கிளம்பி சென்று விடுவான் என்று தெரிந்ததால், அதைப் பற்றிப் பேசாமல், நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் மகனுக்கு உணவு பரிமாறச் சென்றாள்.

“நீங்க சாப்பிட்டீங்களா அம்மா?”

“இன்னும் இல்லப்பா.”

“நான்தான் உங்களை நேரத்துக்குச் சாப்பிடச் சொல்லியிருக்கேன்ல! எதுக்கு இப்படித் தாமதமா இருந்து உடம்பை வருத்துறீங்க?”

“நீ வர்றதா சொன்னதால், உன் கூடவே சேர்ந்து சாப்பிடலாம்னு காத்திருந்தேன்ப்பா…”

அவன் அதற்குப் பிறகு எதுவும் சொல்லாமல், சட்டையின் பட்டன்களைத் தளர்த்திவிட்டு, முகத்தையும் கையையும் சுத்தம் செய்து வந்து நாற்காலியில் அமர்ந்தான். அந்த அறை முழுவதும் முன்பை விட மிகச் சுத்தமாக இருந்தது; வீட்டின் மற்ற அறைகளிலும் கூட மாற்றங்கள் தெரிந்தன. நாளைக்கு விசேஷம் என்பதால் சுத்தம் செய்து மாற்றி வைத்திருப்பதாக நினைத்துக்கொண்டான் ஆனந்த்.

அம்மாவையும் உண்ண வைத்துத் தானும் உண்டு முடித்தவன், தனது சாதனங்களுடன் மாடிக்கு வந்தான். அப்பாவை அவரது அறையில் போய்ப் பார்த்துவிட்டு, உடையை மாற்றிக்கொண்டு படுக்கையில் சரிந்தான். நீண்ட தூரப் பயணம் மற்றும் காலை முதலே ஓய்வில்லாமல் பார்த்த வேலைகளால் ஏற்பட்ட உடல் சோர்வு, மெல்ல அவனை நித்திரையில் ஆழ்த்தியது.

காலை நேரம் அழகுற விடிந்தது. வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் பூஜையை முடித்துவிட்டுப் பின்னர் சமாதிக்குச் செல்வது வழக்கம் என்பதால், வீட்டுப் பெண்கள் அனைவரும் குளியலை முடித்துவிட்டுப் புடவையில் கீழே வந்திருந்தனர். ஆனந்தியும் குளியலை முடித்து, தன் நீண்ட கூந்தலைப் பால்கனியில் நின்றபடி உலரவிட்டுக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் உறக்கம் கலைந்து எழுந்து வந்த ஆனந்த், இடுப்பைத் தாண்டி வளர்ந்திருக்கும் கூந்தலுடன், குனிந்து தலைமுடியைச் சுத்தம் செய்துகொண்டிருக்கும் அந்தப் பெண்ணைக் கண்டான்! ‘இது யாராக இருக்கும்?’ என்று வியந்தவன், ‘நிச்சயம் அபிநயாவாக இருக்க வாய்ப்பில்லை; ஒருவேளை அத்தையின் உறவினர்கள் யாராவது வந்திருக்கலாம்’ என்று எண்ணியபடி, தானும் அறைக்குள் சென்று குளியலை முடித்துக் கீழே வந்தான்.

அப்போது ஓடிவந்த நகுலன், “அத்தான்!” என்று உற்சாகமாகக் கூவி அவனை அணைத்துக்கொண்டான்.

“என்னடா… எப்படி இருக்க? நான் வர்றதாச் சொன்ன பிறகும் கொஞ்ச நேரம் கூட வெயிட் பண்ணாம தூங்கப் போயிட்டியே!” என்று வாஞ்சையுடன் கேட்டான் ஆனந்த்.

“போங்க அத்தான்! காலையில் எழும்பின நேரத்துல இருந்து ராத்திரி வரைக்கும் நாங்க தூங்கவே செய்யாம அவ்வளவு ஜாலியா இருந்தோம் தெரியுமா? அப்பெல்லாம் நீங்க வராம இருந்துட்டு, நாங்க தூங்கப் போன பிறகுதானே வந்தீங்க? அப்படியே கண்ணு சொக்கிருச்சு… அதான் தூங்கிட்டோம்!” என்று நகுலன் செல்லமாகச் சலித்துக்கொண்டான்.

அவன் சொன்ன விதத்தைக் கேட்டு ஆனந்த் சிரித்தான். “அத்தான், எங்ககூடச் சேர்ந்து நிறைய நாள் இருப்பீங்கல்ல?”

“இல்லடா… ஒரு வாரம் லீவுலதான் வந்திருக்கேன். அடுத்த வாரம் போகணும், நிறைய வேலை இருக்கு.”

“நீங்க எப்பவுமே இப்படித்தான் சொல்லிட்டே இருக்கீங்க! நீங்க இல்லாம இந்த வீட்டுல இருக்கவே போர் அடிக்குது அத்தான்.”

“ஓஹோ… உனக்குப் போர் அடிக்குதுங்கிறதுக்காக நான் இங்கேயே இருக்க முடியுமாடா? சரி, படிப்பு எல்லாம் எப்படிப் போகுது? எக்ஸாம் எப்ப வரும்னு ஸ்கூல்ல சொல்லியிருக்காங்க? உன் தம்பியைக் காணோமே?” என்று விசாரித்தான்.

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே கண்ணனும் சிவனேஷும் வந்து அவர்களுடன் ஒட்டிக்கொள்ள, பேச்சு சுவாரசியமாக நகர்ந்தது. அந்த நேரம், மெரூன் நிறத்தில் மெல்லிய ஜரிகையிட்ட காட்டன் புடவை அணிந்து, படிக்கட்டுகளில் கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தாள் ஆனந்தி!

அவள் யாரென்று தெரியாமல் அவன் பார்த்தபடி இருக்க, அவளைக் கண்டதும் சிறுவர்கள் அவளை நோக்கி ஓட முயன்றனர்.

“டேய்… நில்லுங்கடா! அது யாருடா? அவங்களைப் பார்த்ததும் என்னைக் கண்டுக்காம ஓடுறீங்க…” என்று அவன் குரல் எழுப்ப, ​“எங்க ஆனந்தி அக்கா!” என்றான் நகுலன் உற்சாகமாக.

‘என்ன… ஆனந்தியா? என் பெயரையே திருப்பிப் போட்ட மாதிரி இருக்கே!’ என்று நினைத்தவன், அவனது உறவினராக இருக்கக்கூடும் என எண்ணி, “டேய்… எனக்கும் ஒரு கப் காஃபி கொண்டு வரச் சொல்லுங்கடா” என்றான்.

“உங்களுக்கு வேணுமா? நீங்களும் எங்ககூடவே வாங்க! இல்லன்னா அபி அக்கா கொண்டு வருவாங்க” என்றான் சிவா.

அவன் புன்னகையுடன் அவர்களை நோக்கி நடக்க, அபிநயா முதல் முறையாகப் புடவை அணிந்து, கண்ணாடியில் தன்னைச் சரிபார்த்துக்கொண்டு வெளியே வந்தாள். அத்தானைக் கண்டதும் அவளுக்கு லேசாக முகம் சிவந்தது!

ஏனெனில், அவனது கிண்டல் அந்த அளவிற்கு இருக்கும்; சும்மாவே விடமாட்டான், இப்போது மட்டும் விட்டுவிடுவானா என்ன? அவள் நினைத்தது போலவே, அடுத்த நொடியே அருகில் சென்றுவிட்டான் ஆனந்த்.

“அடடா! காலையிலேயே கண்ணுக்குக் குளிர்ச்சியா காட்சி தருவது யாரு? ‘எனக்குப் புடவை எல்லாம் கட்டத் தெரியாது, நான் எப்பவும் சுடிதார்லதான் இருப்பேன்’னு சொன்னவரா இவர்? ஆமாம்… எப்ப கல்யாணச் சாப்பாடு போடப் போறே?” என்று வம்புக்கு இழுத்தான்.

அவள் சிணுங்கியவாறு, “இப்படி எல்லாம் கிண்டல் பண்ணினா, எங்க அம்மாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்!” என்க,

“தயவுசெய்து அந்தத் தப்பை மட்டும் பண்ணிடாத தாயே! அடுத்த நிமிஷம் உன்னைப் பிடிச்சு என் கழுத்துல மாட்டி விட்டுடுவாங்க. அப்புறம், நான்தான் காலத்துக்கும் உன்னைத் தூக்கிட்டு அங்கேயும் இங்கேயுமா அலையணும்” என்று முகத்தைச் சோகமாக வைத்துக்கொண்டு சொன்னான்.

அவள் முறைத்துக்கொண்டு, “அத்தான்…” என்க, அவன் தன் மார்புப் பகுதியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, “எனக்கு இருப்பதோ சின்ன இதயம்; அதுல அதிர்ச்சியைத் தரும் விதமா அடிக்கடி ‘அத்தான்’னு கூப்பிட்டு இப்படிப் பார்க்காதே!” என்று தத்ரூபமாக நடித்தான்.

அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் முதுகில் ஓங்கி ஓர் அடி வைத்தாள்!

“அச்சோ! அந்த ராட்சக்ஷியை விட இவ மோசமா இருப்பா போல இருக்கே…” என்று அவன் முனக, “யார் அந்த தேவதை? யாரந்த தேவதை?” என்று அபிநயா கண்ணைச் சிமிட்டிக்கொண்டு கேட்டாள்.

அவன் சட்டென வாயை மூடிக்கொள்ள, “இப்பச் சொல்லலைன்னா அம்மாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்!” என்று அவள் மிரட்டினாள்.

“அது ஒண்ணுமில்ல… நீ இப்ப புடவையில் பார்க்க எவ்வளவு அழகா, அடக்கமா இருக்கே! ஆனா, நம்ம ஆபீஸ்ல நடந்த பார்ட்டிக்கு ஒரு ராட்சக்ஷி வந்திருந்தா. அவளுக்கு அடக்கம், அமைதின்னா என்னன்னே தெரியாது! வேற யார்கிட்டயாவது போயிருந்தா கூடக் கண்டுக்காம விட்டிருப்பாங்க. ஆனா நான் யாரு, எப்படிப்பட்டவன்னு தெரியாம என்கிட்டயே மோதப் பார்த்தா விடுவேனா? நல்லா வச்சுச் செஞ்சுட்டேன்! என்னைக் கண்ட பயத்துல அவள் ஊரை விட்டே தலைதெறிக்க ஓடிட்டா!” என்று பெருமிதமாகச் சொன்னான். இன்னும் சற்று நேரத்தில் தான் வசமாக மாட்டப்போவதை அறியாமல்!

அவள் சத்தமாகச் சிரித்துவிட்டு, “அப்போ இத்தனை நாளா ஊருக்கு வராம, சென்னையில இருந்து வேலை பார்க்கிறதா நாடகமாடி அந்த ராட்சக்ஷியைத் தான் சைட் அடிச்சிட்டு இருந்தீங்களா?” என்று கேட்டாள் அபிநயா.

அவன், “ச்சே… ச்சே! எனக்கு வேற வேலையில்லை. பெண்ணா அவள்? பிசாசு! எப்பப் பாரு கத்திக்கிட்டே இருப்பா. அவள் உன் பக்கத்துல கூட வர முடியாது” என்று வசனம் பேசினான். “இனிமேல் என்னைக்காவது மாட்டட்டும்… அப்ப இருக்கு பாரு!” என்று கெத்து காட்ட முயன்றான்.

அபிநயா சத்தமாகச் சிரித்துவிட, ‘அத்தான் காஃபி கேட்டாங்க’ என்று நகுலன் சொன்னதால், அவனுக்கும் அபிநயாவும் அங்கு நிற்பதைக் கண்டதால் இருவருக்கும் சேர்த்துக் காஃபி எடுத்துக்கொண்டு வந்தாள் ஆனந்தி. அவனது பேச்சைக் கேட்டு நிஜமாகவே ‘ராட்சக்ஷி’ அவதாரம் எடுத்து அவள் பின்னால் வந்து நின்றது தெரியாமல், அவன் அபிநயாவின் படிப்பு மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டிருந்தான்.

அவர்களைத் தொல்லை செய்ய விரும்பாமல் ஆனந்தி திரும்பி நடக்க, அதற்குள் அவளைப் பார்த்துவிட்ட அபிநயா, “ஆனந்தி அக்கா!” என்று அழைத்தாள்.

விருப்பமில்லாமல் அவர்களை நோக்கி நடந்த ஆனந்தி, அவன் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் காஃபி கோப்பையை நீட்டினாள்.

அவன் பேய் அறைந்தது போல உறைந்துபோய் நிற்க, “இவங்க பெயர் ஆனந்தி! பூபாலன் சித்தப்பாவோட உறவினர். மலை சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரை எழுத நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. இவங்க வந்ததுல இருந்து நம்ம வீடே கலகலப்பா மாறிடுச்சு! இந்தச் சில்வண்டுகள் மூணும் சதா இவங்களுக்குச் சேவகன் மாதிரி பின்னாடியே திரிவானுங்க” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள் அபிநயா.

அவன் அசைவற்றுப் போயிருக்க, ஆனந்தி அங்கிருந்து நகர முயன்றாள்.

“ஆனந்தி அக்கா! இவங்கதான் எங்க அத்தை மகன் ஆனந்த் அத்தான். நேத்து ராத்திரி நாம தூங்கப் போன பிறகுதான் வந்து சேர்ந்தாங்க” என்று பரஸ்பரம் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். ஆனால், அவர்கள் இருவரும் மருந்துக்குக்கூடச் சிரிக்கவோ, பேசவோ, ஒருவரை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவோ செய்யாமல் இருக்கவும், அபிநயாவுக்குள் குறுகுறுத்தது.

‘சற்று நேரத்திற்கு முன்பு அத்தான் சொன்ன அந்த ‘ராட்சக்ஷி’, இந்த அக்காதானோ?’ என்று சந்தேகம் முளைவிட்டது. ஏனென்றால், அவளும் சென்னையிலிருந்துதானே வந்திருக்கிறாள்!

இருவரின் முகத்தையும் பார்த்ததும் நடந்ததை யூகித்துக்கொண்ட அபிநயா, சிரிப்பை அடக்க முடியாமல் மெல்ல அங்கிருந்து நழுவிவிட்டாள்.

ஆனந்தியின் முகம் இறுகிப்போயிருந்தது. ‘அன்றொரு நாள் கபிலனிடம் என்னைப் பற்றித் தப்பாகச் சொன்னதுபோல, இப்போதும் அபிநயாவிடம் சொல்கிறானே!’ என்று அவளுக்குள் சினம் பொங்கியது. ‘அந்த முட்டாள் கபிலன், இவன்தான் அபிநயாவின் அத்தானாக இங்கு வரப்போகிறான் என்று ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் ஏமாற்றி விட்டானே!’ என்ற கோபம் தலைக்கேறியது. இப்போது மட்டும் கபிலன் கையில் கிடைத்தால், அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடும் வெறி உருவானது ஆனந்திக்கு!

​அதே சமயம், எத்தனையோ முறை கபிலனிடம் கேட்டும் அவள் இருக்கும் இடத்தைப் பற்றிச் சொல்ல மறுத்தவன், ‘அவ படிப்பு இன்னும் முடியலன்னு வெளியூருக்குப் போயிட்டா; ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவளை இனித் தொடர்பு கொள்வது சிரமம்’ என்று காரணங்களை அடுக்கி, அவளது கைப்பேசி எண்ணையும் தர மறுத்துத் தன்னை ஏமாற்றிவிட்டானே கபிலன் என்று ஆனந்தும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தான்!

​‘அடப்பாவி! அப்பவே வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லியிருந்தா, நான் இப்போ கமுக்கமா வந்துட்டுப் போயிருப்பேனே! கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் செய்துட்டானே… அடேய் கபிலா! உன்னை என்ன செய்கிறேன் பாருடா!’ என்று மனதிற்குள் நண்பனைத் திட்டினான் ஆனந்த்.

அவள் அவனிடம் பேச விரும்பாமலும், அங்கே நிற்கத் தோன்றாமலும் அங்கிருந்து விலகி நடக்க, “ஒரு நிமிஷம்!” என்ற அவனது குரல் அவளைத் தடுத்து நிறுத்தியது.

ஆனந்த் தனது சொந்த அத்தானாக இருப்பான் என்று அறியாமல், பார்த்த முதல் நாளிலிருந்தே அவனிடம் சண்டையிட்டு வந்தவள் ஆனந்தி. ‘இனி வரும் நாட்களிலும் கோப முகத்திரையை அணிந்து அவனை எட்டவே நிறுத்திவிட வேண்டும்; அவன் என்ன பேசினாலும் கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும்; முக்கியமாகத் தனிமையில் அவனிடம் சிக்கிக்கொள்ளக் கூடாது’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.

அதனால், இப்போது அவன் அழைத்ததும் முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் காட்டாமல், ‘என்ன?’ என்பது போல அலட்சியமாக நோக்கினாள். அவன் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தான். இருவரின் விழிகளிலும் இருந்த கோபமும், அதிர்வும், தவிப்பும் அவர்கள் மனதில் இருப்பதை வெளிப்படுத்தின!

அவன் பதில் கூறாமல் தன்னையே பார்த்து நிற்பதைக் கண்டு, அவளது பொறுமை பறிபோனது. ஆனந்தி அங்கிருந்து விலகிச் செல்ல நினைக்க, “ஆமாம்! உன்னைக் கட்டிக்கப்போறவன் என்னவோ நீ வெளியூருக்குப் போய் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறதா சொன்னான். நீயானால் எங்க வீட்டுல வந்து என் முன்னாடி நின்னுட்டு இருக்கே? இங்கே என்ன பாடம் படிக்கப் போறே? காதல் பாடமா?” என்று அவன் வழக்கமான குறும்பை எடுத்து விட, தன்னை இப்படி இவனிடம் மாட்டிவிட்ட கபிலனை நினைத்து அவள் முகம் எள்ளும் கொள்ளுமாக வெடித்தது!

அவன் அதை ரசித்துக்கொண்டே, அவள் தந்த சூடான காஃபியை அருந்தினான். அவன் முன்பு நிற்கப் பிடிக்காமல் அவள் நகர முயன்றாள்.

“உன் பெயர் ஆனந்தியா? ஆச்சரியமா இருக்கே! அப்படியே ‘ஆனந்த்’ ஆகிய என்னை, ‘ஆனந்தி’ உன்னில் காணலாமா? இல்லை… உன்னில் என்னை உணரலாமா? பெயர்ப் பொருத்தம் பிரமாதம்!” என்று மறுபடியும் அவளை வம்புக்கு இழுத்தான்.

அவள் கண்களை இறுக மூடித் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயற்சி செய்ய, “இன்னைக்கு மௌன விரதம் எதுவும் இருக்கியா ஆனந்தி?” என்றான் மறுபடியும் ஆனந்த்.

அவளது சுண்டு விரல் உயர்ந்து, ‘வேண்டாம்… என்னைச் சீண்டாதே!’ என்பது போல எச்சரிக்க, அவள் தொடர்ந்து பேசாமல் மௌனமாக இருப்பதைக்கண்டு, “பேச மாட்டாயா ஆனந்தி? ஒருவேளை அகமும் புறமும் சிவக்கக் கோபமாக மட்டும்தான் உனக்குப் பேசத் தெரியுமோ?” என்றான் குறும்பு மின்னும் விழிகளுடன்.

​அவள் சலிப்புடன் திரும்பிக்கொள்ள, ஆனந்தியின் செவியருகில் நெருங்கி வந்தவன், “என்கிட்ட சவால் விட்டு வந்தியே… அதுல முடிஞ்சா ஜெயிச்சுப் பார்! நீ என் வீட்டுலதான் இருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சிருந்தா, அப்பவே இந்த ஆனந்த் உனக்காக வந்திருப்பான். ஐ மீன்… அன்றைய பேச்சுக்குப் பதில் தர!” என்று மெல்லிய குரலில் சீண்டினான்.

​தொடர்ந்து அவளது கண்கள் நிலைகுத்த, “நீ இங்கிருந்து போகும் முன், நானும் தந்து… உன்கிட்டயும் பெறாமல் விடமாட்டேன்!” என்று இருபொருள் படும்படி அர்த்தமாகப் பேசினான். அவளோ, அவன் எதற்காக இப்படிப் பேசுகிறான், எதைத் தந்து எதைப் பெறத் துடிக்கிறான் என்று புரியாமல் தடுமாற்றம் அடைந்தாள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!