யுகத்தின் தலைவன் அத்தியாயம் 10
யுகத்தின் தலைவன்
அத்தியாயம் 10
அழகான காலை, கொங்கு மண்டலத்தில் வசிப்பவர்களுக்கு ஆடி நோம்பி என்பது தூரி (ஊஞ்சள்)ஆடும் நோம்பி.பொங்கல்,தீபாவளி போன்றே ஆடி நோம்பியும்,அங்கு உள்ளவர்களுக்கு ஸ்பெசல்.
நல்ல முறுக்கு கயிறை வாங்கி வந்து வீட்டின் விட்டத்தில் கட்டி விடுவர்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதில் ஆடி மகிழ்வர்.
இதற்காக புதுத்துணி, ஊரில் உள்ள சொந்தங்களுக்கு அழைப்பு,கறி விருந்து என அந்த நாள் உற்சாகமாகவே செல்லும்.
Advertisement
அதுமட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளுக்கும் அன்று அரசு விடுமுறை விடப்படும்.அதுவும் கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பிற்குப்பின் வரும் முதல் நோம்பி விடுமுறை.
இந்தமுறை சிவராமன் வீட்டில் ஆடிநோம்பி வரவில்லை.தூரியும் கட்டவில்லை.
கங்காவிற்கு இன்னமும் உடம்பு சரியாகவில்லை.
நன்றாக இருந்து இருந்தால் பள்ளி விடுமுறைக்கு ஒரு ஆட்டம் கட்டி இருப்பாள்.
காலை ஐந்தரை மணிக்கு கங்காவின் அனத்தல் சத்தம் கேட்டுதான் லட்சுமி விழித்தார். இவளை என்ன பண்ண போறோம் என மனதில் கவலையாக நினைத்துக் கொண்டே வாசல் கூட்ட வெளியே வந்தவருக்கு இன்ப அதிர்ச்சி.
சிவராமன் வந்துவிட்டார்.
Advertisement
இரண்டு கண்களிலும் கண்ணீரோடு “எப்ப வந்தே”
Advertisement
இப்போதா இந்தா பை என தான் வாங்கி வந்த பொருட்களை கொடுத்தார். லட்சுமியின் கண்ணீரெல்லாம் அவருக்கு கவனத்தில் வரவில்லை.
கங்காக்கு இப்ப எப்புடி இருக்கு?
இன்னும் அப்படியேதான் இருக்கு.
Advertisement
வீட்டின் உள்ளே வந்தவர் சத்தமில்லாமல் கங்காவை தொட்டுப் பார்க்க நெருப்பாய் கொதித்தது.
நொடியும் தாமதிக்கவில்லை.உடனே ஹாஸ்பிடல் தூக்கிக் கொண்டு போய்விட்டார்.
இரண்டு இரும்பு கரம் தன்னை அணைத்து எடுப்பதை உணர்ந்து முதலில் பயம் பின், அப்பாவின் கதகதப்பை உணர்ந்தவள் எழுந்து கொண்டாள்.எதற்காக ஏங்கினாளோ அது தற்போது தன் கண்முன்னே
ஆனால் அந்த சந்தோசத்தை அவளால் வெளிப்படுத்தவும் முடியவில்லை பேசவும் முடியவில்லை.
கண்களில் நீரோடு அப்பாவை இரண்டு கைகளாலும் கட்டிக் கொண்டாள்.
அவளை பரிசோதித்த டாக்டர் ஒன்றும் இல்லை.இரும்பு சத்து குறைவாக உள்ளது, அதுபோக உடம்பில் ரத்தம் இல்லை. நன்றாக சாப்பிட்டு தூங்கி எழுந்தால் சரியாக விடும் என கூறி ஒரு ஊசி போட்டு, மாத்திரைகளை கொடுத்து அனுப்பினார்.
தூங்கி எழுந்த கெளசிக்கு அப்பா வந்த விஷயம் சொல்லப்பட்டது.அப்பா கங்காவை ஹாஸ்பிடல் கூட்டி போய் இருக்கிறார் என்றதும் வீட்டிற்கும் வாசலுக்கும் நடந்தாள்.
பாப்பம்மாளிடம் “அப்பா வந்துருச்சு” என சைகை மொழியில் கூற அவரிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கங்காவை எடுத்துக் கொண்டு நடந்து வந்தவரை மூவரும் ஆவலாக வரவேற்றனர்.
பாப்பம்மாள் கண்களில் நீரோடு மகனை தொட்டுப் பார்த்துக் கொண்டார்.
வீட்டிற்கு வந்தவர் கங்காவை கீழே விடவில்லை.
ஏன் லட்சுமி என்புள்ளைக்கு நீ சோறு போட்டையா இல்லையா?இப்புடி எலும்பும் தோலுமா இருக்குது.அனுப்பி வெச்ச காசு எல்லாம் உங்க அப்பன் வீட்டுக்கு அனுப்பிட்டையா?
இல்லப்பா அம்மா கங்காக்கு ரெண்டு தோசை சுட்டு தரும் ,ஆன கங்கா ஒன்னுதா சாப்புடுவா, அப்பறோம் ஒன்னொன்னை நான் எடுத்து சாப்புட்டுக்குவே என அப்பாவித்தனமாய் அம்மாவிற்கு சப்போர்ட் செய்தாள் கெளசி.
ஓ! நீ கெட்டிகாரப் புள்ளைதான் போ..என மகளை தட்டிக் கொடுத்தார்.
அத்தோடு மகள்களுக்கு ஈரல் சுத்துக்கொலுப்பு எடுத்து வந்து கொடுத்தார்.
சமையல் ஆனதும் நால்வரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். இந்த நொடிக்காக இத்தனை நாட்களாக எவ்வளவு ஏங்கி இருப்பர்.
கெளசி தன் தட்டில் இருந்த இரண்டு ஈரல்களை எடுத்து கங்கா தட்டில் போட்டாள்.
கங்கா இதை சாப்பிட்டாதா உனக்கு உடம்பு சீக்கிரமா சரியாகுமாமா அதுனாலே நீயே இதே சாப்பிடு அப்பதான் என் கூட நீ விளையாட வருவே என ஏக்கமாக கூறினாள்.
சிவராமன் வந்த விஷயம் லட்சுமி வீட்டிற்கு தெரிய அவர்கள் வந்து பார்த்துச் சென்றனர்.
இரண்டு நாட்கள் கடந்த விட்ட நிலையில் கங்கா தேறி விட்டாள்.லட்சுமி மெதுவாக எப்ப ஊருக்கு கிளம்பறே என்றார்.
இனி எல்லாம் எந்த ஊருக்கும் நான் போகுலே,உங்களுக்கு அனுப்பி வெச்ச காசு போக மீதியை சேர்த்து வெச்சு இருக்கறேன்.
அதே வெச்சு ரீடுகடை திறந்துருவே என்றார். அவர் இனி தங்களை பிரிய மாட்டார் என்ற சேதி மகிழ்ச்சியை தந்தாலும் போன தடவை மாதிரி இந்தமுறை விபரீதமாக எதுவும் நடந்துவிட கூடாது என வேண்டிக் கொண்டார்.
கெளசி,”அப்பா! கங்காக்கு இப்போதா உடம்பு சரி ஆயிடுச்சே தூரி வேணும்ப்பா.
நம்ம வீட்டுல கட்டாததுனாலே நான் அப்பிச்சி வீட்டுக்கு போய் ஆடிட்டு வந்தேன் என்றாள்.மகள் கேட்டபின் மறுப்பாரா நல்ல முறுக்கு கயிறை வாங்கி விட்டத்தில் கட்டிவிட்டார்.
சிவராமன் வீட்டிற்கு ஆடிநோம்பி வந்து விட்டது. கங்காவையும் செளசியையும் மாறி மாறி தூரி ஆட்டிவிட்டார்.
“அன்னக் கிளி நீ சிரிக்க நான் படிப்பேன் ராகம்…
வண்ணச் செண்டு வாசம் எல்லாம் நீ சிரிச்சா வீசும்..
தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு..
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு..”
என்ற பாடல் டிவியில் ஒளிபரப்பாக அதில் வரும் கோரஸ் லைனிற்கு மூவரும் சேர்ந்து பாடினர்
“ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்”
மகள்கள் இருவரும் கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
ஆடிமாதம் முடிந்து அடுத்துவரும் புதன் கிழமை சிவராமன் முன்னோர்களுக்கு படையல் இட்டு வழிபடுவது வழக்கம்.
ஏற்கனவே இருவாரம் லீவு போட்டு விட்டதால் கங்காவை இன்று பள்ளிக்கு அனுப்பிவிட்டார்.
பள்ளி தொடங்கி ஒரு மாதம் முடிந்த விட்ட நிலையிலும்,அட்மிஷன் முடிந்து விட்டது என பள்ளி தரப்பில் சொல்லபட்ட நிலையிலும் விடாப்பிடியாக நின்று கெளசியை கேஜி வகுப்பில் சேர்த்தி விட்டார்.
மதியம் இரண்டு மணியளவில் தன் தந்தைக்கும்,பெரியம்மாவிற்கும் தன் வீட்டில் படையல் போட்டு சாமி கும்பிட்டார்.பானுமதியும் ,பழனிச்சாமியும் சாமி கும்பிடும் போது மட்டும் உள்ளே வந்தனர்.அதுவரை வேறு எந்த நிகழ்விலும் சிவராமன் அவர்களை அழைக்க வில்லை.
அவர் அழைப்பார் என பானுமதியும் காலைமுதல் காத்துக்கொண்டு இருந்தார்.ஆனால் சிவராமன் அழைக்கவில்லை. மதியம் மட்டும் அண்ணனை அழைக்காமல்,நங்கை வந்து சாமி கும்பிட்டுட்டு போங்க என அண்ணியை மட்டும் அழைத்தார்.
என்ன கோபம்? என இருபேதைகளுக்கும் புரியவில்லை. இங்கு முடிந்தவுடன் லட்சுமி வீட்டிற்கும் சென்று அவர்களின் முன்னோரையும் கும்பிட்டார்.
ராதாவின் கணவர் சக்திவேல் வீட்டில் அனைவரிடமும் அன்பாக நடந்து இடம் பிடித்த நிலையில் சிவராமனின் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.இரு சகலப்பாடிகளும் இணைந்தது வீட்டிற்கு குதுகலத்தை தந்தது.
உறவுகள் ஓரிடத்தில் அமர்ந்து பேச சிரிக்க ஆரம்பிக்க,பேச்சு மெல்ல சிவராமனிடம் வந்தது.
சிவராமா நம்ம வீட்டுல பொதுவா முன்னோர்களுக்கு வீட்டுக்கு மூத்தவங்கதான் படையல் போட்டு சாமி கும்பிடனும்,உங்க அண்ணன் இருக்கையிலே நீ ஏன் கும்பிடறே என்றனர்.
இது எல்லாம் உன்வேலைதானே என லட்சுமியை ஒரு முறைமுறைத்தார். அவர் தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை போல உள்ளே எழுந்து சென்று விட்டார்.மேலும் அந்த இடத்தில் இருந்தால் அரை விழுந்துவிடும் என்று உஷாராக இடத்தை காலி செய்து விட்டார்.
ஆமா நான் இல்லைனு சொல்லுலே, போன வருஷம் நான் ஊருலே இல்லை.அப்போ எங்கண்ணன் ஏன் கும்பிடுலே? அதா இனிமே நானே கும்பிட்டுக்கற என்றார் வீராப்பாக..
இல்ல சிவராமா நீ ஊருலே இல்லாதபோது ஏன் இந்த சடங்குனு உங்க அண்ணன் நினைச்சிருப்பான் என்றார் பெரிய மாமனார்.
உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டா,நம்ம வீட்ல எப்படி முன்னோர்களுக்கு சாமி கும்பிட்டுட்டு வரோம்?இறக்கறவங்க போட்டுட்டு வந்த துணிலே கொஞ்சம் புதுசா இருக்கற துணியே,கடைசியா அவங்க உடம்பு மேலே போட்டு எடுத்து வெச்சுக்குவோம்.
ஒவ்வொரு ஆடிமாசமும் அதை துவைச்சு அவங்க போட்டோ முன்னாடி வெச்சு,அவங்களுக்கு என்ன எல்லாம் புடிக்குமோ அதையெல்லா படையல் போட்டு கும்பிடறது தானே வழக்கம். அதை இடைலே விட்டுவிட்டு செய்யலாமா?நான் இருந்தா என்ன இல்லைனா என்ன முன்னோர்களுக்கு செய்யறே கடமைய செஞ்சுதான் ஆகனும் என்றார்.
உனக்கு ரெண்டும் புள்ளைக உங்க அண்ணனுக்குதான் பையன் இருக்கான் நியாயப்படி அவன்தான் கும்பிடனும் என்றார் இவரும் விடாமல்.
ஏன் எனக்கு ரெண்டும் புள்ளைதான், அவனுக்குதான் பையன் இருக்கானு சொத்தை பூரா எங்க அண்ணனுக்கு கொடுத்தா நீங்க உங்க புள்ளைய என்கூட வாழ விடுவீங்களா? என்றார் தெனவெட்டாக..
எப்படி முன்னோர்களோட சொத்துல உரிமை கொண்டாடரமோ,அப்படியே அவங்களுக்கு செய்றே எந்த கடமையிலும் தவறக்கூடாது.வருஷம் தவறாது திதி கொடுக்கனும்.
என்னோட கடைசி மூச்சு இருக்கற வரைக்கும் நான்தான் கும்பிடுவே. எனக்கு ரெண்டும் புள்ளைகளா இருந்தா என்ன?எனக்கு அப்பறோம் என் மகள்கள் பண்ணுனா அதைவிட வேற என்ன புண்ணியம் எனக்கு வேணும் என்றார்.
இவன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது என்பதை உணர்ந்தவர். சரி சிவராமா நீ சொல்லறது கரெக்ட் தா ஆனா உன்கிட்ட சொத்து இல்லைனா கூட எங்க புள்ளை உனக்குதா,இது நாம்ம முடிவு பண்ணறது இல்லையே.
மேலே இருக்கறவே முடிவு பண்ணி இப்படி ஒரு தங்கமான மாப்பிள்ளையை எங்க புள்ளைக்கு கொடுத்து இருக்கிறான் என பட்டிமன்றம் மேலும் வளராது முடித்துவிட்டார்.
அனுபவமே சிறந்த ஆசான்.அதுபோக ஒரு அவமானம் அதைவிட சிறந்தது.நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பதை போல சிவராமன் இந்த முறை தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் பார்த்து கீழே விழுந்து விடாதவாறு,கீழே விழுந்தாலும் மேலே எழுந்து நிற்க தேவையானவற்றை முன்னேற்பாடாக செய்து விட்டு ரீடு கடையை திறந்து விட்டார்.
முதலில் ஓடுவது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும்,இழுத்து பிடித்து ஓட வைத்தார். நல்ல லாபம் வந்தது. முதல் லாப பணத்தில் இருமகள்களுக்கும் காது குத்திவிட்டார்.
காதுகுத்து நடைபெறுவதற்கு முன்பே சின்ன சண்டைகள் நடந்து முடிந்து இருந்ததால் இதில் எந்த சச்சரவும் இல்லாது அமைதியாக நடந்தது. அது மட்டுமல்ல தாய்மாமன்கள் தன் மகள்களுக்கு செய்த முதலும் கடைசியுமான சீர் இது என அங்கிருந்த சிவராமனுக்கும் லட்சுமிக்கும் தெரியவில்லை.
நாட்கள் செல்ல ராதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது.
“அம்மா இப்போ நானும் அக்கா ஆயிட்டே” என கெளசி கண்கள் ஜொலிக்க சொன்னாள்.
பின் கலாவிற்கு மாப்பிள்ளை பார்க்கப்பட்டது.பார்த்த உடனே கலாவிற்கு பிடித்து விட்டது. கலா உனக்கு சித்தப்பாவை பிடிச்சு இருக்கா? என்றாள் கங்கா
ம் என்றார். மெளனமாக.. போ கலா எனக்கு புடிக்கவே இல்ல.சித்தப்பா கருப்பா இருக்காரு. ராதா சித்தப்பா கூட கலரா இருக்காரு என சொல்ல கஸ்தூரி அப்படியே கங்கா வாயை பொத்தி சிவராமனிடம் தூக்கி வந்துவிட்டார்.
அண்ணா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடியே அவரு கருப்பா இருக்காருனு சொல்லறா என சிவராமனிடம் சொல்ல, அப்புடி எல்லா சொல்லக் கூடாது கங்கா என்றார்.
உண்மைதானேப்பா சொல்றே நம்ம கலா எவ்வளோ கலரா இருக்கா சித்தப்பா கருப்பா இருக்காரு என குறைபட்டுக் கொண்டே சொல்லே..
இன்னமும் உங்க சித்திக்கு கல்யாணமே ஆகுலே அதுக்குள்ள புடிக்கல புடிக்கலேனு சித்தப்பானு உரிமையா சொல்றே கங்கா என பெரிய அத்தை ஈஸ்வரி கண்ணத்தை இடித்தார்.
அண்ணா கங்கா பெரிசானா இப்படி ஒரு கருப்பான மாப்பிள்ளையே பாருங்க என கஸ்தூரி சொல்ல..
போ அத்தே எங்க அப்பா எல்லா எனக்கு கலரா இருக்கறே மாப்பிள்ளைதான் பாக்கும் என்றாள்.
–தலைவன் வருவான்…
