Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 21

அத்தியாயம் : 21

அன்புச்செல்வன் எம்.சி.ஏ படிப்பை முடித்துவிட்டு, சொந்த ஊரிலேயே தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனும் ஆசையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊர் திரும்பிக் கொண்டிருந்தான்.

வெளியூரில் நண்பர்களுடன் இணைந்து வேலை பார்க்க வேண்டும் என்பது அவன் ஆசையாக இருந்தாலும், அதற்கு அப்பா சம்மதிக்கவில்லை. தன் மீது அளவற்ற பாசம் வைத்திருந்த தாயோ, மகனைப் பார்க்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். அவர் காட்டிய அந்த அன்பை உணர்ந்திருந்ததால், அன்புச்செல்வன் தனது முடிவை மாற்றி, சொந்த ஊரிலேயே தொழிற்சாலை நிறுவும் முடிவுக்கு வந்தான்.

நண்பர்கள் சென்னையில் தொழிலைத் தொடங்க, அவர்களுடன் இணைந்து இங்கிருந்தே செயல்பட வேண்டும் என்பது அவனது திட்டமாக இருந்தது. அதன்படி அதிகாலை நேரத்தில் வந்து கொண்டிருக்கும்போது, திடீரென கார் நின்றுவிட்டது. ஓட்டுநர் இறங்கிச் சென்று பார்த்துவிட்டு வந்து, ரேடியேட்டரில் தண்ணீர் தீர்ந்துவிட்டதாகச் சொன்னான்.



Advertisement

வீடு அருகில் வந்து விட்டதால் வெளியே பார்த்துக் கொண்டிருந்த அன்புச்செல்வன், “இதையெல்லாம் முன்னாடியே பார்த்துச் சரி பண்றது இல்லையா? இப்போ நேரம் அஞ்சு மணி. இந்த நேரத்துல போய் யார் வீட்டுல தண்ணீர் கேட்க முடியும்?” என்று சொல்ல, “நிறைய தண்ணி ஊத்திதான் வச்சிருந்தேன் ஐயா. ரொம்ப நேரமா வண்டி ஓடுனதுல சூடாகி குறைஞ்சு போயிருக்கும் போல.” என்றான் ஓட்டுநர்.

“சரி, சரி! பக்கத்துல எங்கயாவது தண்ணி கிடைக்குமான்னு பாரு.”

ஓட்டுநர் உடனே கேனை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள வீடுகளில் எங்காவது விளக்கு எரிகிறதா என்று பார்த்தான்.

Advertisement

அப்போது அவர்கள் நின்ற இடத்திற்குப் பக்கத்தில் இருந்த ஒரு வீட்டின் வெளிப்பக்க விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது. அன்புச்செல்வன் ஓட்டுநரைப் பார்க்க, அவனும் புரிந்து கொண்டு அந்த வீட்டை நோக்கிச் சென்றான். அங்கே ஒரு இளம்பெண், வீட்டிற்கு முன்புறம் பெருக்கிச் சுத்தம் செய்து, சாணம் தெளித்து கோலமிட்டுக் கொண்டிருந்தாள்.

Advertisement

அன்புச்செல்வன் அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கை ஜாடையில் கூறினான். அவள் கோலத்தைப் போட்டு முடித்துவிட்டு வீட்டிற்குள் செல்ல எத்தனிக்க, “அம்மா!” என்று அழைத்தான் ஓட்டுநர்.

​’இந்த நேரத்தில் யார் இங்கே வந்து அழைப்பது?’ என்று அவள் அச்சத்துடன் திரும்பிப் பார்த்தாள். அதிகாலை வேளையில் குளிரையும் பொருட்படுத்தாமல் குளித்து முடித்து, கூந்தலை டவ்வலுக்குள் அடக்கி, நெற்றியில் விபூதியுடன், புதிதாகத் துலக்கிய வெங்கலக் குத்துவிளக்கைப் போலச் சுடர்விட்ட அந்தப் பெண்ணை அன்புச்செல்வன் வியப்புடன் பார்த்தான்.

​அதே சமயம், இதற்கு முன்பு பார்த்திராத அந்தப் புது மனிதர்களைக் கண்டு அந்தப் பெண் பயந்துபோய் வீட்டிற்குள் செல்ல முயல, ஓட்டுநர் பதற்றமில்லாமல் பேசினான். “எங்களைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியமில்லைம்மா; நாங்க பக்கத்து ஊர்க்காரங்கதான். சென்னையிலிருந்து வந்துட்டு இருக்கப்போ எஞ்சின் சூடாகித் தண்ணீர் தீர்ந்து போயிடுச்சு. இந்தக் கேன் நிறையத் தண்ணீர் தந்தால் ரொம்ப உதவியா இருக்கும்” என்று பணிவுடன் சொன்னான்.

Advertisement

‘இவ்வளவுதானா? இதற்காகவா இப்படிப் பயந்தோம்’ என எண்ணியபடி, அந்தக் கேனை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் அதில் நிறையத் தண்ணீர் எடுத்து வந்து வெளிவாசலில் வைத்துவிட்டு, சுவரோரம் மறைந்து நின்றாள்.

இதை எல்லாம் அன்புச்செல்வன் காரிலிருந்தே பார்த்துக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் கார் தயாராகி அங்கிருந்து புறப்படத் தயாரானது. ஆபத்து நேரத்தில் தெய்வமாக வந்து உதவிய அந்தப் பெண்ணிற்கு நன்றி தெரிவித்து, ஐநூறு ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு வருமாறு ஓட்டுநரிடம் சொன்னான் அன்புச்செல்வன்.

“ஒரு கேன் தண்ணிக்கு ஐநூறு ரூபாயா? இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி! ஒரு நன்றி மட்டும் சொல்லிட்டு வர்றேன்” என்றான் ஓட்டுநர்.

அவன் சிரித்த முகத்துடன், “நேரம் காலம் பார்க்காம உதவி செய்ததற்கான கைம்மாறுதான் இந்தப் பணம். வேறு எந்தக் காரணமும் இல்லை” எனச் சொல்ல, “அதுக்கு ஐநூறா?” என்று ஓட்டுநர் முணுமுணுத்தான்.

“நான் சொல்றதைச் செய்யத்தான் உனக்குச் சம்பளம் தர்றேன். தேவையில்லாம பேசினா எனக்குப் பிடிக்காதுன்னு தெரியும் இல்லை?” என்று அன்புச்செல்வன் கண்டிப்புடன் சொன்னார்.

அடுத்த நிமிடம் அவன் பணத்தைப் பெற்றுக்கொண்டு அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான். ‘மகராசி கொடுத்து வச்சவ… ஒரு கேன் தண்ணி தந்துட்டு ஐநூறு ரூபா வாங்கப்போறா. நாமும் கூடவே இருக்கோமே, நமக்கோ அஞ்சு பைசா தேறாது’ என்று மனதிற்குள் புலம்பினான்.

மறுபடியும் அந்தப் பெண்ணின் அருகில் சென்று நன்றி தெரிவித்து அந்தப் பணத்தைக் கொடுக்க, அவளோ, “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் பிறந்த நாம, தவிச்ச வாய்க்குத் தண்ணி கொடுத்துப் பழக்கப்பட்டவங்க. இதுக்கெல்லாம் காசு வாங்கினா நம்மைப் படைத்த ஆண்டவர் கூட மன்னிக்க மாட்டார். நீங்களே இதைத் திரும்ப எடுத்துட்டுப் போயிடுங்க” என்று உறுதியாகச் சொல்லிவிட்டுத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டாள்.

அன்புச்செல்வன் அதை ஆச்சரியத்துடன் நோக்கினான். ‘இந்தக் காலத்திலும் பணத்திற்கு அடிமையாகாத மனிதர்கள் இருக்கிறார்களே!’ என்று வியந்தவன், ஓட்டுநர் வந்து அமர்ந்ததும் அந்தப் பணத்தை அவனையே வைத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, காரைக் கிளப்பச் சொன்னான்.

ஏற்கனவே வர வேண்டிய நேரம் தாண்டிவிட்டதால், வீட்டிற்கு வந்ததும் தாயைப் பார்க்கும் ஆசையுடன் விரைந்தான். நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கே மகன் வருவான் என்று எதிர்பார்த்துத் தாயார் ஆனந்தவல்லி காத்திருந்தார். மகன் வராததால் சோஃபாவிலேயே அமர்ந்திருந்தவர் அப்படியே உறங்கிப் போனார். வீட்டுக்கதவு பூட்டப்படாமல் சார்த்தி வைக்கப்பட்டிருந்தது. மகன் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற எதிர்பார்ப்பும், திருடன் யாரும் உள்ளே வரமாட்டார்கள் என்கிற நம்பிக்கையும் கதவை அடைக்கச் செய்யவில்லை.

அன்புச்செல்வன் கதவைத் திறந்து உள்ளே வந்து, சோஃபாவில் சாய்ந்திருக்கும் அம்மாவைப் பார்த்ததும் வேகமாக அருகே சென்று, “அம்மா!” என்று அழைத்தான்.

அந்தப் பரிச்சயமான குரல் கேட்டதும், தூக்கக்கலக்கத்திலும் ‘மகன் வந்துவிட்டான்’ என்ற உணர்வில் படபடவெனக் கண்களைத் திறந்து கொண்டு எழ முயன்றார் ஆனந்தவல்லி.

ஆனால் இரவு சரியாக உறங்காததால் தலை சுற்ற, அவர் லேசாகத் தள்ளாடினார். அம்மாவை இரு கைகளிலும் பற்றிக்கொண்டு மறுபடியும் சோஃபாவில் அமர வைத்த அன்புச்செல்வன், “உங்ககிட்ட எத்தனை முறை சொன்னாலும் கேட்க மாட்டீங்களா? இப்படித்தான் ராத்திரி தூங்காமலும், சரியா ஓய்வு எடுக்காமலும் உடம்பை வருத்திக்கிறதா? நம்ம ஆரோக்கியத்தை நாமதானே பார்த்துக்கணும். இல்லைன்னா, நோய் வந்து உடனே தொத்திக்கும். நேத்து நைட்டு சாப்பிட்டீங்களா இல்லையா?” என்று செல்லமாக மிரட்டும் தொனியில் கேட்டான்.

மகனின் அக்கறையான வார்த்தையில் மனம் மகிழ்ந்தாலும், எங்கே ‘இல்லை’ என்று சொன்னால் மகன் கோபப்படுவானோ என்று பயந்து வாய் திறக்காமல் இருக்க, “நான் தான் வர லேட் ஆகும்னு சொன்னேனே! பிறகும் நீங்க ஏன் இவ்வளவு நேரமாகியும் சாப்பிடாம இருக்கணும்? கொஞ்சம் கூட உடம்பு மேல உங்களுக்கு அக்கறை இல்லை. நோய் வந்து படுக்கையில் விழுறப்போ தெரியும்” என்று கண்டிப்புடன் உரைத்தான்.

அவர் மகனின் கன்னத்தை கைகளில் பற்றிக் கொண்டு, “உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு அன்பு. உன்னைப் பாக்காம என்னால இருக்க முடியல. நீ ராத்திரி வருவேன் சொன்னதால் உனக்காக சூடு சூடா சாப்பாடு எல்லாம் செய்ய சொல்லிட்டு உன் கூடவே சேர்ந்து சாப்பிடலாம்னு காத்திருந்தேன். நீ இப்படி காலையில வருவேன்னு எனக்குத் தெரியாது இல்லையா?” என்று தயங்கியபடி சொல்ல, அவன் சிரித்த முகத்துடன் “நான் உங்களை விட்டு எங்கே அம்மா போயிடப் போறேன்? உங்களுக்காக தானே என் லட்சியத்தை கூட விட்டுக் கொடுத்துட்டு இதே ஊரில் தொழிற்சாலை அமைக்க வந்து இருக்கேன்” என்றான்.

அந்தத் தாய்க்கு அத்தனை சந்தோஷமாக இருந்தது. தனக்காக மகன் நண்பர்களுடன் சேர்ந்து அமைக்க இருந்த தொழிலையே விட்டு வந்திருக்கிறான் என்றால், தனது கணவர் சொன்னபோது கூட அமைதியாக இருந்தவன் தனது ஒற்றை வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கிறான் என்றால், அவனுக்கு தன் மீது எத்தனைப் பாசம் இருக்க வேண்டும். தாயவளின் கண்கள் இரண்டும் நீரால் நிரம்ப, “எனக்கு உங்களைத் தவிர இந்த உலகத்துல வேற எதுவும் பெரிசு இல்லைம்மா. சொல்லப்போனா அப்பாவோட கண்டிப்பு பிடிக்காமதான் சென்னையிலேயே தங்கிடலாம்னு பார்த்தேன். ஆனா நீங்க அழுததும் பேசியதும் மனசை ரொம்பவும் கஷ்டப்படுத்திருச்சு. அதான் என் முடிவை மாத்திக்கிட்டேன். இனி உங்களை விட்டுட்டு எங்கேயும் போக மாட்டேன்” என்றான்.

மகனை அணைத்த ஆனந்தவல்லி சற்று நேரம் அருகில் அமர்ந்து பேசிவிட்டு, மகனுக்கு காலை உணவு தயார் செய்ய எழுந்து சென்றார். அவனும் மாடிக்குச் சென்று தன்னுடைய சாதனங்களை அங்கு வைத்துவிட்டு, காலை கடன்களை முடித்துவிட்டு கீழே வந்தான்.

மார்க்கண்டேயன் தன் மகனைப் பார்த்ததும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தார். வசதி வாய்ப்புகள் நிறைந்த வீட்டில் பிறந்துவிட்டு எதுவுமே இல்லாதவன் போல படிப்பு வேலை சென்னை வாழ்க்கை என்று ஓடுகிறானே என்ற கோபம் அவருக்கு. மகனுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டும் எனும் எண்ணமும், விரைவிலேயே திருமணத்தை முடித்து கூடவே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசையும், அவரது ஒற்றை வார்த்தையால் தடைபட்டு போன கோபம் இன்னும் அவரை விட்டு அகலாமல் இருந்தது.

அவர் அருகில் சென்று நலம் விசாரித்துவிட்டு தனது வேலை விஷயமாக அப்பாவிடம் பேசியவன், அம்மாவிடம் சென்று அவர் கையால் தயாரித்த உணவை உண்டுவிட்டு, “ஆறு மாசமா நாக்கு செத்துப் போயிடுச்சு. என் அம்மாவோட கைப்பக்குவத்திற்கு ஈடு இணை வேறு யாரும் இல்லை” என்று வாயார புகழ்ந்தான். அந்த வார்த்தையில் தாயவள் நெகிழ்ந்துப் போய் காணப்பட்டாள். தம்பிகள் இருவரும் அவனைக் கண்டதும் ஓடி வந்து அருகில் அமர, அவர்களின் நலன் படிப்பு என்று பேச்சு நகர்ந்தது.

அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கண்டேயன், “அன்புவுக்கு நான் கல்யாணம் செய்து வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். அவன்கிட்ட பேசி சம்மதம் வாங்கிச் சொல்லு” என்றார் தனது மனைவியிடம்.

வந்து ஒரு நாள் கூட ஆகவில்லை, அதற்குள் திருமணம் என்று கூறுகிறாரே! மகன் இதற்கு என்ன சொல்வானோ என்று அச்சப்பட்டாலும், கணவர் சொன்னதை மகனிடம் சொல்லாமலும் அவரால் இருக்க முடியவில்லை.

​ஆனந்தவல்லி சொன்னதைக் கேட்ட கணத்திலிருந்தே அன்புச்செல்வனின் மனதில், அதிகாலையில் பார்த்த அந்தப் பெண்ணின் முகம் வந்து போனது. பூரண சந்திரனாக ஜொலித்த அவளது முகமும், பணத்தைக் கொடுத்தபோது அவள் கூறிய தீர்க்கமான வார்த்தைகளும் அவன் செவியோரம் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தன.

“என்ன அன்பு, அப்பா கேக்குறாங்களே நீ எதுவும் சொல்லாம இருக்க?”

கண்களைத் தட்டி மீண்டவன், “அம்மா இப்பதான் படிப்பு முடிச்சுட்டு வந்து இருக்கேன். புது தொழிற்சாலை அமைப்பதற்கான பில்டிங் கட்டணும். பிறகு வேலைக்கு தேவையான சாதனங்களை வாங்கி வைக்கணும். ஆட்களைத் தேர்வு செய்யணும்னு ஏகப்பட்டது இருக்கு. இந்த நிலையில் என்னால கல்யாணத்தை நினைச்சுப் பார்க்க முடியாது” என்றான்.

உடனே மார்க்கண்டேயன், “இதுக்கு தான் இவனை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்க கூடாது. சொந்த ஊரிலேயே இருக்கட்டும்னு சொன்னேன். ஒரு வார்த்தை கேட்காம மகன் ஆசைப்பட்டான்னு அனுப்பி வச்சே இல்லை… இனி அவதிப்பட்டு தான் ஆகணும்” என்று கோபத்துடன் அங்கிருந்து சென்று விட்டார்.

இரண்டு ஆண்களுக்கு பிறகு பிறந்த வாரிசான இளவரசி, அவர்களின் ஊரைச் சார்ந்த ராஜேந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு அதே வீட்டில் அப்பாவின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு வசித்து வருகிறாள். சொந்த மகன் தான் சொல்ல சொல்ல கேட்காமல் சென்னைக்குச் சென்றுவிட, தனது பேச்சை மீறாமல் கேட்டு நடந்து வரும் மருமகன் ராஜேந்திரன் மீது மிகுந்த மரியாதை அவருக்கு இருந்தது. அவரது தங்கை பிரதீபாவை மகன் அன்புச்செல்வனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாட்டை தான் இன்று வெளிப்படுத்தி இருந்தார்.

மகன் இப்படி முகத்திற்கு நேராகச் சொல்லிவிட்டுச் செல்லவும், மார்க்கண்டேயன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றார். அவர்கள் இருவரின் பேச்சையும் கேட்டிருந்த ராஜேந்திரன், தனது திருமணத்தின்போது மாமனாரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு வீட்டோடு மாப்பிள்ளையாக வருவதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தார். இதை அறிந்த அவரது ஒரே தங்கை பிரதீபா, தங்களை விட்டுப் போகக் கூடாது என்று அடம் பிடிக்கவே, அந்த வீட்டு மூத்த வாரிசாகிய அன்புச்செல்வனைத் திருமணம் செய்தால் தன்னுடனே வந்து அங்கேயே நிரந்தரமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தைகள் கூறினார். அதை உண்மை என்று நம்பிய பிரதீபாவும், அன்புச்செல்வன் மீதான ஆசைகளை மனதில் வளரவிட்டாள்.

அவளுக்குத் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்க்கும்போது வேண்டாம் என்று மறுத்துவிட்டு, அன்புச்செல்வனுக்கு அவளைத் திருமணம் செய்து வைத்தால் தன்னைப் போலவே அவளும் ஒரு வசதியான வாழ்க்கை வாழ்வாள் என்றும்; தன் மாமனாரின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இந்த ஊர் மக்கள், இப்போது தனக்குக் கொடுக்கும் மரியாதையைக் கடைசி வரை தருவார்கள், மைத்துனர்கள் மூவரும் தன்னை எதிர்த்துப் பேசாமல் கீழ்ப்படிந்து நடப்பார்கள் என்றும் ஆசைப்பட்டு, அன்புச்செல்வன் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும்போதே மாமனாரிடம் தன் தங்கையின் திருமணத்தைப் பற்றிப் பேசினார்.

மார்க்கண்டேயன் ஏற்கனவே பிரதீபாவை பலமுறை பார்த்திருக்கிறார்; அவளது அடக்கமும் எளிமையான தோற்றமும் பிடித்திருந்தது மட்டுமில்லாமல், மருமகனிடம் மறுத்துக் கூற மனம் வராமலும், குடும்ப ஒற்றுமை குலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் யாரிடமும் விவாதிக்காமல் அன்றே சம்மதம் தெரிவித்திருந்தார்.

அதனால், இப்போது திருமணம் வேண்டாம் என்று அன்புச்செல்வன் சொன்னதும், ராஜேந்திரன் அவசரப்பட நினைக்கவில்லை. அன்புவின் ஆசைப்படியே அவன் ஒரு பெரிய தொழிற்சாலை அமைத்து நல்ல நிலைக்கு வந்தால், தன் தங்கையின் வாழ்வு இன்னும் சிறப்பாக அமையும் என்று எண்ணி அமைதியாக இருந்து கொண்டார்.

மார்க்கண்டேயன் இதை எப்படி மருமகனிடம் தெரிவிப்பது என்று தயங்க, “அதனால் என்ன மாமா, நம்ம அன்பு அத்தான் நல்ல விஷயமா தானே சொல்லி இருக்கார். செய்து முடிக்கட்டும் அதுக்கு பிறகு பார்த்துக்கலாம்” என்று பெருந்தன்மையாக சொல்வது போல மாமனாரின் மனதில் இன்னும் ஒரு படி உயரத்திற்கு சென்றார்.

அதன்பிறகான நாட்கள், தொழிற்சாலை அமைப்பது மற்றும் நண்பர்களிடம் ஆலோசிப்பது என அன்புச்செல்வன் முழு நேரமும் சுறுசுறுப்பாக இருக்க, ராஜேந்திரனோ தன் தங்கையை அன்புச்செல்வனுக்குத் திருமணம் செய்து வைப்பதில் உறுதியாக இருந்தார்.

அன்புச்செல்வன் அன்றொரு நாள் பார்த்த அந்தப் பெயர் தெரியாத பெண்ணின் ஞாபகத்திலேயே இருக்க, அவளை மீண்டும் காணச் சென்றான். அவளோ இவனைக் கண்டாலே ஓடிச் சென்று மறைந்துகொண்டாள். அவளது அந்தப் பிடிவாதம் தந்த ஈர்ப்பு, நாளாக நாளாக ஒரு பிடிப்பாக மாறி, பின் காதலாக உருவெடுத்தது.

​வெள்ளிக்கிழமை மாலை வேளையில் அவள் கோயிலுக்கு வருவதைத் தெரிந்துகொண்டு, அந்த நாளுக்காகக் காத்திருக்கத் தொடங்கினான். அபிராமியிடம் பேசும் ஆசையில் ஒவ்வொரு முறையும் அங்கே சென்று திரும்புபவன், தன் காதலை அவளுக்கு எப்படித் தெரியப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாற்றம் அடைந்தான்.

வீட்டில் அப்பா தனக்காக ஏற்கனவே ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருப்பது தெரியாமல், அன்புச்செல்வனோ தான் விரும்பிய பெண்ணையே எப்படியாவது அம்மாவிடம் சொல்லி, அப்பாவின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று தீவிரமாக இருந்தான். அவளைப் பற்றிய முழு விபரங்களையும் சேகரித்து வருமாறு தனது ஓட்டுநரையும் ரகசியமாக அனுப்பி வைத்தான்.

​ஓட்டுநர் மூலம் அந்தப் பெண் வேறு சமூகத்தைச் சார்ந்தவள் என்ற தகவல் கிடைத்ததும், ‘இந்தத் திருமணத்திற்கு அப்பா சம்மதிப்பாரா?’ என்ற சந்தேகம் அன்புவின் மனதிற்குள் ஒரு நிமிடம் எழுந்தது. ஆனால், அடுத்த கணமே அந்தத் தயக்கத்தைத் தூசாகத் தட்டிவிட்டு, அம்மாவிடம் சென்று தன் மனதில் இருப்பதைத் தெரியப்படுத்தினான்.

​அதிர்ந்து போய் மகனை நோக்கிய ஆனந்தவல்லி, “அப்பா உனக்கு வேற இடத்துல கல்யாணம் பேசி முடிக்கணும்னு ஆசைப்படுறார். இந்த நேரத்துல வந்து நீ என்னப்பா இப்படி சொல்லிட்டு இருக்க?” என்று பதற்றத்துடன் கேட்டார்.

அவனோ, அவளை முதல் முறையாகப் பார்த்ததையும் அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களையும் கோர்த்து சொல்ல, மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் தடுமாறினார்.

வீட்டில் அன்புச்செல்வனுக்கு பிரதீபாவை திருமணத்திற்குப் பேசியிருப்பது ஆனந்தவல்லி அறிந்த விஷயம். மகன் வேலையில் தீவிரமாக மூழ்கி இருப்பதோடு இப்போது திருமணம் செய்ய மாட்டேன் என்றதால் மட்டுமே, அதைப் பற்றி அவர்கள் யாரும் சொல்லாமல் இருந்தார்கள். மார்க்கண்டேயன் எத்தனையோ முறை அவரிடம் சொல்ல வந்தபோது கூட, அந்தப் பேச்சை எடுத்தாலே அன்புச்செல்வன் தடுத்து விடுவதால் இன்று வரைக்கும் பிரதீபாவை பற்றி சொல்ல முடியவில்லை.

இப்போது என்ன செய்வது என்று அவர் தடுமாற, “நீங்களும் அவளை ஒரு முறை பார்த்தா உங்களுக்கும் பிடிக்கும் அம்மா. என்கூட வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்து பார்க்குறீங்களா?” என்றான்.

​அவரோ ஒருபுறம் கணவரின் முடிவை எதிர்க்க முடியாமலும், மறுபுறம் மகனின் ஆசையை நிராசையாக்க முடியாமலும் தர்மசங்கடத்தில் ஆழ்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!