Skip to content
Post Views: 5,942
வளர்மதி சமையலறையில் பாத்திரங்களை உருட்டும் சத்தம் உறங்கிக் கொண்டிருந்தவனுக்கு நன்றாக கேட்க அதற்கு மேல் உறங்கப் பிடிக்காமல் எழுந்து கொண்டான் ஆழியன்.
மணியும் ஆகிவிட்டிருக்க மில்லுக்கு கிளம்பினான். அன்று அமுதன் மரங்களோடு வரும் நாள் வேறு. பில் செட்டில் செய்ய வங்கியில் இருந்து பணம் எடுத்து வர வேண்டும். விரைவாக கிளம்பினால் தான் முடியும் என்று எண்ணியபடி வெளியே வந்தவன் யாரிடமும் எதுவும் பேசாமல் வாயிலுக்கு சென்று விட
Advertisement
“செல்வம் சாப்பிட்டு போ”என்று சத்தமாக அழைத்தார் வளர்மதி.
Advertisement
“வேணாம் மா நேரம் ஆச்சு அண்ணன் வேற ஃபோன் பண்ணிட்டான்”என்று சொல்லியபடியே நகர
Advertisement
“நேத்து உப்புமான்னு சலிச்சுக்கிட்டனு சோறு குழம்பு வச்சா இப்போ இப்படி சொல்ற. என்ன தான் டா நினைச்சுட்டு இருக்க. மெனக்கெட்டு உனக்காக தானே செஞ்சேன். நேத்து என்னவோ உனக்கு சோறே போட்டு நான் வளர்க்காத மாதிரி உங்க புள்ளை இல்லையா நான் நீரதி புருஷனானு என்னென்னவோ பேசின. இப்போ ஆக்கி வச்சதை திங்காம போனா என்ன அர்த்தம்”என்று நிறுத்தாமல் கத்தியவரை ஆயாசமாக பார்த்தவன் “எடுத்து வைங்க”என்று உள்ளே வந்தான்.
Advertisement
“வேணாம் ப்பா நீ போய் உன் வேலையை பாரு. அப்புறம் இதுக்கும் நேரம் ஆச்சு எல்லாம் உங்களால தான் னு பேசுவ உன் கிட்ட தான் வாய் திறந்து பேச கூட முடியறதில்லையே என்ன சொக்குப்பொடி போட்டாளோ”என்று நீட்டி முழக்கும் போதே
ஆழியனும் எரிச்சலாகி,”இப்ப உங்களுக்கு என்ன தான் மா பிரச்சினை. லேட் ஆச்சு விடுங்கன்னா அதுக்கும் பேசறீங்க.சரி சாப்பிடறேன்னு சொன்னாலும் அதுக்கும் சலிச்சுக்கிறீங்க, என்ன தான் வேணும் உங்களுக்கு?”என்றான் அலுப்பாக.
வளர்மதி உணவை எடுத்து வைத்தவர் “நான் எதுவும் வாயைத் திறக்கலை சாமி ஏதாச்சும் பேசினா தான் எதுத்து பேச ஒரு மருமவ ஊமைக்கொட்டானாட்டம் பேசாம சாதிக்க ஒரு மருமவன்னு எடுத்து வச்சிருக்கேனே”என்று பவ்யாவையும் நீரதியையும் பற்றி குறை பேச
இன்னும் வாயைத் திறந்தால் ஏதாவது ஏட்டிக்குப் போட்டியாக பேசுவார் என்று எண்ணியவன் அமைதியாக உண்டு விட்டு வெளியேறி விட்டான். போட்டு வைத்த சாப்பாட்டில் உப்பும் இல்லை உரைப்பும் இல்லை அதை பேசி இன்னும் ஏன் வாங்கிக் கட்டிக் கொள்வானேன் என்று கிளம்பி விட்டான்.
மரமில் வேலைகளை விரைந்து முடித்தவன் தந்தையிடம் இரண்டு நாட்கள் மில்லைப் பார்த்துக் கொள்ளும்படி கூற அவரோ ஏன் எதற்கு என்று கேட்டார்.
“ரதியோட அண்ணன் குடும்பத்துடன் வந்திருக்கார் ப்பா என்னையும் பார்க்க கேட்டாங்க நான் தான் வேலை முடிச்சுட்டு வர்றேன் னு சொல்லி இருந்தேன்”என்றான்.
“ஏன் செல்வம் சொல்றேன்னு கோவிச்சுக்காத. மருமக மாசமா இருக்கறதால தான் நான் அது ஊருக்கு போனதை பெருசா எடுத்துக்கலை. அவங்க அண்ணன் வீட்டுக்கு வந்தவன் நம்ம தீபுவுக்கு கல்யாணம் ஆகி இருக்கே … அதுக்கு சீர் செய்யணும் னு தெரியாதா இல்லை எதுவும் செய்ய மனசில்லையா.”என்றார் வெடுக்கென்று.
ஆழியன் ஆழ்ந்து பார்த்தவன் “இப்போ நான் என்ன செய்யணும் ப்பா”என்றான்.
“நீராவை வரச்சொல்லி சொல்லிடு. இங்கே வேலை அதிகம் சீசன் டைம் இன்னொரு தடவை பார்க்கலாம்னு சொல்லிடு அவ்வளவு தான்”என்றார் தீர்க்கமாக.
ஒரு நிமிடம் மௌனம் காத்தவன் “சரிங்கப்பா சொல்லிடுறேன். எதுவும் பிரச்சினை இல்லை.”என்று கூறி விட்டு பின்னர் “ஸ்வரு என்னைத் தான் கூப்பிட சொல்லி இருக்கா. நான் என் பொண்ணு கிட்ட காம்ப்ரமைஸ் பண்ண முடியாது ப்பா அதனால இந்த டைம் போயிட்டு வர்றேன்”என்றவன் அவரின் பதிலை எதிர்பார்க்காமல் சென்று விட்டான்.
அன்று முழுவதும் நீரதியின் பிறந்த வீட்டோடு தங்கி ஊர் சுற்றி காட்டி விட்டு மாலை நேரம் ஆன பிறகு கிளம்பியவன் தன் மனைவி மகளோடு வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தான்.
இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது நீரதிக்கு. அதே சமயம் பவ்யாவுமே நற்செய்தி கூறி இருந்தாள். மருத்துவமனையில் பரிசோதித்து கருவுற்றிருக்கிறாள் என்று மருத்துவர் உறுதியாக கூறிய பின்னர் அவளை சொந்தங்கள் எல்லாம் தீபனின் வீட்டில் கொண்டு வந்து விட்டுச் சென்றனர்.
வளர்மதியை தான் கையில் பிடிக்க முடியவில்லை.
“கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல தங்கிடுச்சு பாருங்களேன். எவ்வளவு அதிர்ஷ்டம் இது. என் பேரப் புள்ளை அதிர்ஷ்டகாரன்”என்றெல்லாம் பொன்னியிடம் பேசிக் கொண்டு சந்தோஷிக்க நீரதி அமைதியாக கணவனுக்கு உணவை பரிமாறியவள்”ஸ்வரு கூட ஒரே மாசத்துல தரிச்சுட்டா இல்லங்க”என்றதும் சட்டென்று நிமிர்ந்து பார்த்த ஆழியன் “ஹ்ம்ம்”என்றான்.
‘ஏன் இப்போ இந்த மருமகளை கேட்க வேண்டியது தானே. இது ஒரு மாசம் தானா இல்லை கல்யாணத்துக்கு முன்னமே’என்று மனதில் தோன்றிய கசப்பை சட்டென்று உதறியவள் ‘இவங்களுக்காக பவியை பத்தி அப்படி யோசிக்காத நீரு’என்று தன்னைத் தானே அதட்டி வைத்தாள்.
“இதுக்கு தான் இவ்வளவு அவசரக் கல்யாணம் போல. அவன் தான் ஆம்பளை இவளுக்கு எங்க போச்சு புத்தி. ச்சீ இந்த மாதிரி பொம்பளை எல்லாம் என்ன சொல்றது”
” கருமம் சொந்தக்காரங்க முன்னாடி தலை காட்ட முடியலை. இப்போ தான் தெரியுது ஏன் மூத்தவனுக்கு செய்யாம இளையவனுக்கு சீக்கிரம் முடிச்சீங்கன்னு அந்த மேலத்தெரு பரிமளா நக்கலா கேட்டுட்டு போறா… இதெல்லாம் தேவையா நம்ம குடும்பத்துக்கு. ஊர் மத்தியில் மானத்தை வாங்கிட்டான்”என்று வளர்மதியும் பொன்னியும் நீரதி கருவுற்ற நேரத்தில் பேசிய பேச்சுக்களும் திட்டுக்களும் எண்ணிலடங்காதவை.
நீரதிக்கு இதெல்லாம் கேட்க வேண்டும் ஆனால் அவளை நேரடியாக பேசிடக் கூடாது என்றே இத்தனையும் பேசினர் வதந்தி போல.
மனம் வெம்பியது தான் நீரதிக்கு. பிள்ளையே வேண்டாம் கலைத்து விடலாமா என்று நொடியில் தோன்றிய சிந்தனையை அருவெறுப்பாக ஒதுக்கி தன் பிள்ளை என்ன தவறு செய்தது இந்த பூமியைக் காணாமல் அழிந்து போக இவர்கள் பேசினால் இதுவெல்லாம் உண்மை என்று ஆகிவிடுமா என் மனதிற்கு தெரியும் நான் தூய்மையான பெண் என்று வேறு யார்க்கும் விளக்கம் தர வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டதற்கு காரணம் அன்பே வடிவாக நின்ற ஆழியனும் தான். தன் மீது கொள்ளையாய் நேசம் கொண்டிருப்பவனுக்கு ஏமாற்றத்தை எப்படி பரிசளிக்க என்று தன் புகுந்த வீட்டினர் பேசியதை கணக்கில் கொள்ளாமல் தன் வேலையைப் பார்த்தாள் நீரதி. ஆனால் அதை எல்லாம் இப்போது யோசிக்கும் போது வெறுப்பாக இருந்தது நீரதிக்கு. என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள் என்று தோன்ற வழக்கமான அமைதியை தத்தெடுத்து தன் போக்கில் இருந்தாள்.
************
பவ்யாவிற்கு கவனிப்பே பலமாக இருந்தது வளர்மதியின் வீட்டில். தலைபிரசவம் என்று அவளை தலையில் தூக்கி வைத்து கரகாட்டம் ஆடாத குறை தான் அங்கே. நெல்லுக்கு இறைத்த நீர் சிறிது புல்லுக்கும் பாய்வது போல் பவ்யாவிற்கு கிடைத்த கவனிப்பில் சிறிது நீரதிக்கும் கிடைத்தது.
தாளிப்பு வாசனையும் அசைவ வாசனையும் ஒவ்வாமையை ஏற்படுத்த இரண்டு மருமகளுமே சமையற்கட்டில் இருந்து தற்காலிகமாக விடுமுறை எடுக்க விளைவு சமையலறை தரங்கினியின் வசம் சென்றது.
ஆடத் தெரியாதவள் தெருக்கோணல் என்று நொடித்தது போல தரங்கினியும் சமையலில் சொதப்பி சமையலறையில் எந்த பொருளும் ஒழுங்காக இல்லை சுத்தமாக இல்லை என்று குறைபாட்டு படித்தாள்.
சமையல் ருசிக்க மளிகைப் பொருட்கள் இடம் மாறாமல் இருந்தால் ருசி வந்து விடுமா என்ன ஆட்டோ ஓட வேண்டும் என்றால் கண்ணாடியை நேர் செய் என்பது போல இருந்தது தரங்கினியின் நடவடிக்கைகள்.
இரண்டு நாட்கள் தரங்கினியின் சமையலை உண்ட பவ்யா “இதை எல்லாம் என்னால் சாப்பிடவே முடியலை. ஒண்ணு கொண்டு வந்து எங்க வீட்டில் என்னை விடுங்க இல்லாட்டா இங்கே ஒரு குக் சமையலுக்கு வைங்க”என்று தீபனிடம் நச்சரிக்க துவங்கி இருக்க அவனோ அம்மா ஒப்புக் கொள்ளவே மாட்டார்கள் என்று பிடி கொடுக்காமல் பேசிட பொறுத்து பொறுத்து பார்த்தவள் தன் பெற்றோரை வரச் சொல்லி விட்டாள்.
“தரு அக்காவுக்கு, சமைக்கவும் தெரியலேம்மா. சமைச்சு வச்சாலும் முணு முணுன்னு ஏதாவது சொல்லி பேசிட்டே இருக்காங்க. உப்பு உரைப்பு ஏதாவது இல்லனு சொல்லிட்டா மறுநாள் சமைக்கவே மாட்டேன்னு பிடிவாதம் பண்றாங்க. எனக்கு விடியகாலையிலும் வாந்தி வந்திடுது. அதனால ரொம்ப பசிக்குது. நீரு அக்கா தான் மூக்கை பொத்திட்டு சமைச்சு தர்றாங்க. நீங்க வந்து பேசுங்க”என்று தன் பெற்றோரிடம் புலம்பித் தவிக்க, அவர்களோ பவியின் அப்பத்தாவுடன் நேரே வீட்டிற்கே வந்து விட்டனர்.
‘இவ்வளவு பெரிய வீடு வசதி பணம் எல்லாம் இருக்கு ஒரு சமையல்காரி வைக்க இவங்களுக்கு என்ன கஷ்டம்?,அதுவும் இரண்டு பெண்கள் வயிற்றுப் பிள்ளையோடு, ஒருத்தி கைப்பிள்ளையோடு இருக்கிறாள் எனும் போது இதைக் கூட செய்ய மாட்டார்களா’என்ற கோபம் அவர்களுக்கு
அவர்கள் சென்ற போது வளர்மதி தான் சமைத்திருந்தார்.
அப்பத்தா ஒளித்து மறைத்து எல்லாம் பேசவில்லை நேரடியாகவே,”இந்தாருத்தா, என் பேத்தி நல்ல வளமா வசதியா வாழ்ந்தவ, அவளை இங்க கொடுக்கவே எனக்கு மனம் ஒப்பல. ஆனாலும் பையன் நல்ல பையன் என்றதால நான் கொடுக்க சம்மதித்தேன். அவ இப்ப மாசமா இருக்கா ஆசைப்பட்டதை சாப்பிட இப்பதான் தோணும், அது கூட செஞ்சு தரமுடியாட்டி என்னத்துக்கு நீங்க? ஒன்னு சமையல் சமையலுக்கு ஆள் வைங்க, இல்லையா என் பேத்தி பிள்ள பெத்து வர்ற வரைக்கும் எங்க வீட்ல இருக்கட்டும். நாங்க அவளுக்கு சவட்டண பண்ணிக்கிறோம் என்ன சொல்றீங்க? ரெண்டுல ஒன்னு சொல்லுங்க. இல்லையா நாங்க சமைக்க ஆள் வைக்கிறோம் சம்பளமும் கொடுத்துக்கிறோம் அவங்க இங்க சமைச்சு என் பேத்திக்கு குடுக்கட்டும் “என்றார்.
வளர்மதியோ அப்பத்தா இப்படி நேரடியாக பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
“என்னம்மா இப்படி சொல்லிட்டீங்க எங்க மருமகள்களுக்கு நாங்க பாக்காம யார் பார்க்கிறது?, பவி எங்ககிட்ட சொல்லி இருந்தா நாங்களே வேற ஆள் சமைக்க வைத்திருப்போமே?!, தரு நல்லா சமைக்கிறா என்று தான் நாங்க வந்து அவளையே சமைக்க சொன்னோம் அந்த டேஸ்ட் பவிக்கு புடிக்கல போல. ஆனா எங்க மருமகள் நல்லா சமைப்பா”என்று தரங்கினியையும் விட்டுத் தராமல் பேச
“சரிதான் இதெல்லாம் நீயே கவனத்துல பார்த்து இருக்கணும் பவி உடனே எடுத்ததும் எதுவும் சொல்லல. ஒரு வாரமா புலம்பிட்டு தான் இருக்கா அதுக்கு அப்புறம் தான் நானும் வர வேண்டியது தான் போச்சு. சமையலுக்கு ஒரு ஆளை சீக்கிரம் புடிங்க இல்லையா நானே பார்த்து வைக்கிறேன்”என்றார்.
“இன்னும் ரெண்டு நாளையில் நாங்க சமைக்க ஆள் கூப்பிட்டுகிறோம்”என்றதும் பவ்யாவை அதுவரைக்கும் ஊருக்கு அழைத்துச் செல்வதாக சொல்லி விட, நீரதிக்கு ஏக்கமாய் போனது தனக்கு இப்படி ஒரு உறவு இல்லையே என்று.
…… தொடரும்
error: Content is protected !!