ஜீவ தாளம் : 26
அத்தியாயம் : 26
இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்பது தெரியாமல், தன் அம்மாவின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு தாய்மாமன் உறவை இத்தனை நாளும் வெறுத்து ஒதுக்கிவிட்டோமே… தப்பு செய்யாத ஒரு மனிதனுக்கு எல்லாரும் சேர்ந்து தண்டனை அளித்துவிட்டோமே… இப்படிப்பட்ட பாவிகளின் வயிற்றில் பிறந்துவிட்டோமே என்று அவன் கண்கலங்கினான். அருகில் இருந்த ஆனந்தியோ, கண்களில் நீர் வழிய தன் தந்தையை நினைத்து வேதனையில் மூழ்கினாள்.
“என் மகன் உயிருக்குயிரா நேசிச்ச பெண்ணைத் திருமணம் செய்யணும்ன்ற முடிவுல, சொந்த அப்பாவையே எதிர்த்து நின்னான். அவரோட பேச்சைக் கேட்க மறுத்து, இந்த வீட்டை விட்டுப் போகவும் துணிஞ்சான். எண்ணிலடங்கா சொத்துகளுக்கு அதிபதியா இருந்து, தன் அப்பா ஆளுற இடத்துல அமர்ந்து ஆட்சி புரிய வேண்டியவன் அவன்! அப்படிப்பட்டவன், படிப்புக்காக வெளியூர்ல இருந்ததைச் சாதகமா பயன்படுத்தி, என் கணவரோட மூளையை மழுங்கச் செய்தது உன் அப்பா!
தன் கணவரோட பேச்சுக்குக் கட்டுப்பட்டு, உடன்பிறந்தவனுக்குத் தெரியாமலேயே நாத்தனாரைத் திருமணத்துக்குப் பேசி முடிச்சா உன் அம்மா! கட்டிய மனைவி, பெத்தப் புள்ளையைக் கணக்கில்கொள்ளாம, மத்தவங்களுக்குக் கொடுத்த வாக்குக்காக என் மகனை வற்புறுத்தி, வீட்டுல இத்தனைப் பிரச்சனைகள் உருவாகக் காரணமா இருந்தது என் கணவர்! இப்படி அவர்களாகவே முடிவெடுத்து, அவர்களாகவே எல்லாப் பிரச்சனையும் உருவாக்கி, அவர்களாகவே ஒரு முடிவும் எடுத்துட்டாங்க…
Advertisement
இதனால பாதிக்கப்பட்டது நானும் என் மகனும் தான். எங்களைப் பார்த்தா உனக்குத் தப்பு செஞ்சவங்க மாதிரியா தெரியுது? இந்த ரெண்டு ஊருக்கும் இடையில இருக்கிற இத்தனைப் பிணக்குகளுக்கு நாங்களா காரணம்?” என்று அவர் ஆவேசமாகக் கேட்க, ஆனந்திக்குத் தெரியாத உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வந்தன.
அப்படியானால், தன் பாட்டியால்தான் அப்பாவின் திருமணமே நடந்திருக்கிறது! அப்பா அம்மாவின் அளவற்ற பாசத்திற்கும் நேசத்திற்கும் பின்னால் பாட்டியின் பாசமும் நன்றிக்கடனும் தான் மறைந்து இருக்கிறது. ‘இப்படிப்பட்ட பாட்டியை ஆரம்ப நாட்களில் தவறாக நினைத்துவிட்டோமே!’ என்று அவள் மனம் வருந்தினாள். ஆனந்த் பலத்த அதிர்ச்சியில் வாய் திறக்க முடியாமல் நின்றான்.
“அன்னைக்கு என் பிள்ளை ஆசைப்பட்டதால, என் கணவருக்குக் கூடத் தெரியாம ஒரு வாழ்க்கையை நான் அமைச்சுக்கொடுத்தேன். அந்த வாழ்க்கை அவனுக்கு நிரந்தரமா நிலைக்கணும்னு, இந்த ஊர்ப்பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி அனுப்பினேன். என் பிள்ளையைப் பார்க்கணும்ன்ற ஏக்கத்துல எத்தனையோ நாள் நான் துடிச்சப்போ கூட, என் ஆசையை விட அவன் உயிர் முக்கியம்னு இன்னைக்கு வரை அவனை இந்த ஊருக்குள்ள வர விடாம தடுத்துட்டு இருக்கேன். இப்ப நீ ‘விரும்புறேன்’னு சொல்றியே… இதை உங்க அம்மாகிட்ட போய் சொல்லிப் பாரு. உன் அம்மாவுக்குத் தன் கணவரோட பேச்சை மீறி நடக்குற தைரியம் இருக்குதா? தன் ஒரே மகனோட ஆசையை நிறைவேத்தத் துணிவாளான்னு அப்போ தெரியும்!”
Advertisement
இப்படியெல்லாம் நடந்திருக்கும் என்று துளியும் எதிர்பாராத ஆனந்த், அதிர்ச்சியில் சிலையாக நின்றான். பேரனின் முகத்தைப் பார்த்த ஆனந்தவல்லிக்கு அதற்கு மேல் பேசத் தெம்பில்லை. அவர் உடல் தளர்ந்து ஆடிக்கொண்டிருந்தது. ஆனந்தி தன் கண்ணீரைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் ஓடிச் சென்று பாட்டிக்குத் தண்ணீர் கொடுத்துப் பருக வைத்தாள்.
“போதும் பாட்டியம்மா… உணர்ச்சிவசப்படாதீங்க! உண்மையிலேயே உங்க மகன் கொடுத்து வச்சவர். இப்படி ஒரு தாயின் வயித்துல பிறந்ததும், உங்க கையால ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கிட்டதும் அவர் செஞ்ச புண்ணியம்!” என்று மனதாரச் சொன்னாள்.
Advertisement
அவர் தலையசைத்ததும், அவரை மெல்லப் படுக்கையில் உறங்க வைத்தவள், ஆனந்தைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த கேள்வியும், அழுத்தமும் அவனை நிலை குலைய வைத்தது. ‘இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழத்தான் என்னையும் காதல் வலையில் விழ வைக்க பார்க்கிறாயா? தன்னைச் சுற்றி நடப்பதை தெரிந்து கொள்ளாத முட்டாள். அப்பாவின் சொல்லுக்கு அடிபணிந்து நடப்பவன்; உனக்கெல்லாம் காதல் ஒரு கேடா?’ என்று பார்வையால் கேட்டு, அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றாள்.
பலத்த அடி வாங்கிய உணர்வுடன் தன் அறைக்கு வந்த ஆனந்த், ‘உண்மையை ஆராயத் தவறி, தன் சொந்தத் தாய்மாமனையே இத்தனை காலம் விலக்கி வைத்துவிட்டோமே!’ என்று மனம் வெம்பினான். ‘தனக்கு உரிமையில்லாத ஓர் இடத்தில் இத்தனை வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோமே!’ என்று கவலையில் மூழ்கினான். ‘இப்படிப்பட்ட பெற்றோருக்குப் பிள்ளையாகப் பிறந்துவிட்டோமே!’ என்று வேதனையில் துடித்தான்.
அவன் மாமா இந்த வீட்டை விட்டு வெளியேறும்போது அவனுக்கு ஆறு வயது இருக்கலாம். வீட்டில் சண்டைகள் நடந்தது ஓரளவுக்குத் தெரியுமே தவிர, பாட்டி சொன்ன ரகசியங்கள் எதுவுமே அவனுக்குத் தெரியாது. அம்மாவிடம் மாமாவைப் பற்றி கேட்கும்போதெல்லாம், அவள் பிரதீபாவை மட்டுமே முன்னிறுத்திப் பேசியிருக்கிறாள்.
Advertisement
உடன்பிறந்தவனுக்காக ஒரு வார்த்தை கூடப் பேசவோ, அவனது ஆசைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவோ அவள் நினைக்கவில்லை.
‘அண்ணன் இந்த வீட்டை விட்டுச் சென்றுவிட்டான், இத்தனைப் பிரச்சனைகள் நடந்து வருகின்றன என்று தெரிந்தும் அவரால் எப்படி இவ்வளவு சுயநலமாக இருக்க முடிந்தது? பணமும் வசதியான வாழ்க்கையும் மட்டுமே போதும் என்று நினைத்துவிட்டாரா? அல்லது கணவரை எதிர்த்துப் பேசத் துணிவில்லாமல் அமைதியாகிவிட்டாரா?’ அவன் மனம் ரணமாகித் தவித்தது. யாரையும் எதிர்கொள்ளும் மனநிலை இல்லாமல் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான்.
சிறு வயது முதலே அவன் தந்தை அவனிடம் சொல்லி வளர்த்தது இதுதான். ‘இந்த வீட்டிலிருந்துதான் படிக்கவும், தொழில் செய்யவும் வேண்டும். இது நமக்குச் சொந்தமான வீடு. உன் மாமன்கள் இருவரும் நம் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள்; அவர்கள் நம்மை மீறி என்றும் செயல்பட மாட்டார்கள். உன் பெரிய மாமனைப் போல நீயும் தறுதலையாகப் போய் உன் வாழ்க்கையை அழித்து விடக்கூடாது!’
அன்று அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரியாவிட்டாலும், பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் இரு ஊர்களுக்கும் இடையே நடந்த மோதல்கள், தன் தந்தையின் ஆதிக்கப்போக்கு எனப் பல சம்பவங்கள் அவன் மனதை அழுத்தின. ‘இது தனக்கு உரிமையில்லாத வீடு’ என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றத் தொடங்கியது. அதனால்தான், தன் தந்தையைப் போல இங்கேயே முடங்கிக் கிடக்காமல், உடன் பிறவா சகோதரர்களாக பழகிய அந்த மூன்று சிறுவர்களின் உரிமையைப் பறிக்கக் கூடாது என்று முடிவெடுத்தான். தனக்கெனச் சொந்தமாக ஒரு தொழிலை உருவாக்கத் திட்டமிட்டு, தனது கல்லூரி நண்பனான கபிலன் சென்னையில் அவனது தந்தையுடன் இருப்பதை அறிந்து, தானும் அங்கு சென்று தொழில் செய்ய உதவி கேட்டான்.
முதலில் அவர்கள் மறுக்கவே செய்தனர். ராஜேந்திரனைப் பற்றிப் பூபாலனுக்கு முழுமையாகத் தெரியும். நாளைக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அவர் மகனைத் தாங்கள்தான் இழுத்து வந்துவிட்டதாகப் பழிச்சொல் வந்துவிடுமோ என அஞ்சினர்.
ஆனால், ஆனந்த் யாருடைய அழுத்தத்திற்கும் பணியாமல், சொந்த உழைப்பால் தொழிலைத் தொடங்கித் திறம்பட நடத்தி வருகிறான். எல்லாவற்றையும் நேர்மையாகச் செய்து வந்தவனுக்கு, தன் குடும்பம் இழைத்த துரோகம் தெரிந்த நொடியிலிருந்து மன நிம்மதி அற்றுப்போனது.
அதிலும் ஆனந்தியின் கேள்விகள் மீண்டும் மீண்டும் மனதிற்குள் வந்து அவனைப் புழுவாக துடிக்க செய்தது. இளவரசி மகனைத் தேடி வந்து கதவைத் தட்டியும் அவன் திறக்கவே இல்லை. சிறுவர்கள் மூவரும் வந்து “அத்தான்… அத்தான்…” என்று அழைத்தும் அவன் எட்டிப் பார்க்கவில்லை. காலை உணவைத் தவிர்த்தவன், மதிய உணவிற்கும் வரவில்லை. எப்போதும் கலகலப்பாக இருக்கும் அந்த வீடு, இன்று அமைதியின் பிடியில் சிக்கியிருந்தது.
நேற்று வெளியே சென்ற இடத்தில் தாங்கள் சொன்னதால்தான், அத்தான் அக்காவிடம் அவளைத் திருமணம் செய்துகொள்ளும் விஷயமாகப் பேசினார். ஒருவேளை அந்த நேரத்தில் அக்கா எதுவும் கடுமையாகப் பேசிவிட்டாரோ, அதனால்தான் அத்தான் அறையை விட்டு வெளியே வராமலும் உண்ணாமலும் இருக்கிறாரோ என்று நினைத்த நகுலன், அம்மாவிடம் சென்று கூறியபடி அழுதுகொண்டிருக்க, அது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரியவந்தது.
அனைத்தையும் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆனந்திக்கு, நேற்றே இந்த வீட்டிலிருந்து சென்றுவிடலாம் எனத் தோன்றிய எண்ணம் இப்போது வலுப்பெற்றது. அத்தையின் பரிதவிப்பு, தங்கையின் கவலைக்கோடுகள், உண்மையை அறிந்த கொந்தளிப்பு, வீட்டில் உள்ளவர்களின் வருத்தம், ஆனந்தின் நேசம், அடுத்தது என்னவாகுமோ என்ற பதற்றம் என அனைத்தும் அவளைச் சூழ்ந்துகொண்டன. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற வந்து, இத்தனை வருடங்களாக ஒற்றுமையுடன் வசித்து வந்த குடும்பத்தில் தன்னால் பிரச்சனைகள் உருவாகிவிடக் கூடாது என்பதால், அதற்கு மேலும் தாமதிக்காமல் தனது அறைக்குள் சென்று உடைகளை எடுத்துப் பெட்டியில் அடுக்கினாள்!”
அவளது நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்த அபிநயா எவ்வளவு முயன்றும் அவளைத் தடுக்க முடியாமல் அத்தானிடம் சொல்வதற்கு விரைந்தாள். நகுலன் தனது பாட்டியை தேடி ஓடினான் …
ஆனந்தி இந்த ஊருக்குப் புதிது என்பதுடன் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது தெரிந்ததால், தனியாக விமான நிலையத்திற்கு செல்வதற்குத் தெரியாமல் செல்வாவை தொடர்பு கொண்டு பேசினாள். அவன் எவ்வளவோ சொல்லியும் கேட்க மறுக்க, வேண்டுமானால் சில நாட்கள் வந்து தங்கள் வீட்டில் தங்குமாறு அழைத்தான். அவள் எதற்கும் சம்மதிக்க மறுக்கவே, அவன் மூலம் தகவல் கபிலனுக்குச் சென்றது. அடுத்த நிமிடம் அவன் அழைப்பு விடுத்துவிட, அவள் எடுக்காமல் அமைதியாக இருந்து கொண்டாள். மீண்டும் மீண்டும் அவன் அழைத்துக் கொண்டும், செய்தி வழியாகப் பல தகவல்களை அனுப்பிவிடவும், சலிப்புடன் அவனது அழைப்பை ஏற்றவள், இங்கு நடக்கும் அனைத்தையும் தெரியப்படுத்தினாள்.
“எனக்கு இங்கு நடப்பதெல்லாம் முன்னமே தெரியும்! உனக்குத்தான் உன்னைப் பற்றியும் உன்னைச் சுற்றி நடப்பதைப் பற்றியும் தெரியாது!”
அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவள் திகைத்து விழிக்க, “உங்க அப்பா தன் காதலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்! ஆனா அவர் பொண்ணான நீ, உன் மனசை யாருமே நுழைய முடியாதபடி வச்சிருக்கியே! இங்கிருந்து போனதுக்கு அப்புறம் அவனை மறந்துட்டு, உன்னால மட்டும் நிம்மதியா இருக்க முடியுமா? எதுக்காக இப்படிப் பிடிவாதம் பிடிச்சு உன் வாழ்க்கையை நீயே அழிச்சுக்கப் பார்க்கிற?” என்று கேட்டான்.
மனம் இறுகிப் போய் இருக்கும் நேரத்தில் வேறு எதுவும் நினைவு வராது. மனதில் துளி அளவு நிம்மதி இல்லாத நேரத்தில் உள்ளிருக்கும் காதலும் முழுமை பெறாது! அப்படித்தான் ஆனந்தியும்! அவள் மனதில் என்ன இருக்கிறது என்று அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவளைப் பற்றி முழுவதுமாக அறிந்திருந்த கபிலன், அவளுக்கு உள்ளே மறைந்திருக்கும் காதலை மெல்லத் தூண்டிவிட்டு அவர்கள் இருவரையும் ஒன்று சேர்க்க முயற்சித்தான்.
“எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுக்குப் போறேன் அமெரிக்காவுக்குப் போறேன்னு சொல்லிட்டு இருக்கியே, அப்படி அங்கே போனதும் உன்னை வரவேற்க யார் இருக்கா? நீ போன அடுத்த நிமிஷம் அவனும் அங்குதான் வந்து நிப்பான். ஏன்னா, அவன் மனசு முழுக்க நீதான் இருக்க! உன் மனசுலயும் அவன்தான் நிலைச்சிருக்கான்!”
அவளது விழிகள் அங்கும் இங்குமாக அலைமோத, “அன்னைக்கு நீ என்கிட்ட பேசிய வார்த்தைகள் எதையும் நான் மறக்கல. அவனை நீ விரும்பிடுவியோன்னு பயந்துதான் கோபக்காரி மாதிரி நடந்துக்கிட்ட! இப்பவும் அதே தப்பைத்தான் செய்ற… அவன் உன்னைப் பார்த்த நிமிஷத்திலிருந்து இப்ப வரைக்கும் உயிரா விரும்புறான்! நீ இல்லாம அவனால் வாழ முடியாது, வாழவும் மாட்டான்! ஆனால் உனக்கு உங்க அப்பா குடும்பத்தைத் தவிர வேற எதுவும் தெரியாது!” என்று வெடித்தான்.
அவளது கண்ணிலிருந்து கண்ணீராக வடிந்தது! இதழ்களைக் கடித்துத் தன்னை அடக்க முயன்றாள் ஆனந்தி.
“நீ இப்போ அவனை விரும்புவதை யார் வெறுக்கப்போறா? அப்படியே வெறுக்கும் விதமா இருந்தாலும் அவங்க அப்பாதானே செய்வார்! செய்யட்டுமே, அப்பத்தானே அவரோட நிஜமுகம் ஆனந்துக்கும் தெரியவரும். அதை விட்டுட்டு சதா அவனைக் கவலைப்பட வச்சுட்டு இருக்க! அவன் எவ்வளவு நல்லவன்னு உனக்குத் தெரியாதா?” என்றவன், முதன்முதலாக இருவருக்கும் இடையில் நடந்த சந்திப்பிலிருந்து இதுவரை உள்ள அனைத்தையும் தெளிவுபடுத்தினான்.
அதன்பிறகுதான் அவளுக்கும் புரிந்தது; எதனால் அவன் தன் மீது கோபப்பட்டு நடந்துகொண்டான், இப்போது ஏன் இவ்வளவு பாசமாக இருக்கிறான் என்று! கண்கள் இரண்டிலும் நிரம்பிய கண்ணீர், அவனைக் காயப்படுத்திவிட்டதை நினைத்து வடிந்துகொண்டிருந்தது.
“நீதான் அவனோட சொந்தத் தாய் மாமன் மகள்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் உன்னை விட்டு விலகியிருப்பானா? செல்வாவை மாதிரி அவனும் அமைதியான ஆளுன்னு நினைச்சிருக்கியா? நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்து சந்தோஷமா இருக்கணும்னுதான் நாங்க அத்தனை பேரும் ஆசைப்படுறோம். நீ மனசுல இருக்கிற கசப்பான சம்பவங்களை மறந்து அவனோடு சேர்ந்து சந்தோஷமா இருக்கப் பாரு! மறுபடியும் ஒருமுறை அமெரிக்காவைப் பத்தி பேசினா, அடுத்த நிமிஷம் ஆனந்துகிட்ட உன்னைப் பத்தி சொல்லிக் கொடுத்துடுவேன்! உனக்கு வேணா உன் வாழ்க்கை மீது அக்கறை இல்லாம இருக்கலாம், எனக்கு இருக்கு!”
அவள் பதில் கூறாமல் இருப்பதைத் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொண்டு இன்னும் இன்னும் பேசினான். அடுத்த நிமிடம் அவனது அழைப்பு ஆனந்திற்குச் சென்றது. அவன் அழைப்பை ஏற்காமல் இருக்க, மீண்டும் மீண்டும் அழைப்பு விடுத்துச் சோர்ந்து போனான்.
பூபாலனும் கபிலன் மூலம் விஷயத்தைத் தெரிந்துகொண்டு அழைத்துப் பேசினார்.
“செல்வாவின் பொறுப்பில் உன்னை விட்டுச் செல்ல நினைச்சது தப்புதான். ஆனா ஆனந்த் விஷயத்தில் நாங்க யாரும் உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டோம். நீ யாருன்னு தெரியாமலேயே உன்னை மனதார விரும்புபவன் அவன்! நீ அவனைக் கட்டிக்கிட்டு அதே வீட்டுல சந்தோஷமா இருந்தா, உங்க அப்பாவும் அம்மாவும் சொர்க்கத்தில் நிம்மதியா இருப்பாங்க. நாளைக்கு ஒருநாள் நீதான் இந்த வீட்டுக்கு வந்துட்டுப் போனதுன்னு உங்க பாட்டிக்குத் தெரியவந்தாலும் அவங்களால் தாங்க முடியுமா? இல்லை உன் குடும்பத்தில் உள்ளவர்கள்தான் தாங்குவார்களா?” என்று உண்மை நிலையை எடுத்துச் சொல்லி அவளைச் சரிப்படுத்த முயன்றார்.
எல்லோரும் சொல்வது அவளுக்குப் புரிந்தாலும் அபிநயாவை நினைத்துதான் கவலையாக இருந்தது. அதேநேரம், அவள் மனதிலேயே என்ன இருக்கிறது என்றும் அவளுக்குத் தெரியவில்லை.
“கொஞ்சம் நல்லா யோசிச்சு முடிவு பண்ணும்மா! இது உன் வாழ்க்கையின் முக்கியமான கட்டம் என்பதை மறந்துடாதே!”
பெற்றவராய் பூபாலன் அவளது வாழ்க்கை நல்ல முறையில் அமைய வேண்டும் என்பதற்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஆனாலும் திருமணம் செய்துகொண்டு வாழப்போகிறவள் ஆனந்தி என்பதால், அவளைக் கட்டாயப்படுத்தவும் முடியவில்லை.
அப்பாவும் மகனும் தனது நல்லதிற்காகத்தான் இவ்வளவு தூரம் பேசுகிறார்கள் என்று தெரிந்ததால், பெட்டியைத் தூக்கிக் கட்டிலில் போட்டுவிட்டுத் தரையில் அமர்ந்துவிட்டாள் ஆனந்தி! மனதில் ஆயிரம் எண்ணங்கள் புகுந்து ஆட்டிப்படைத்தன.
தலையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, ‘எதற்காக அமெரிக்காவை விட்டு இங்கு வந்தோம்? இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? மறுபடியும் ஏன் அங்கு செல்ல முடியாமல் தவிக்கிறோம்?’ என்று மனப்புழுக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
அப்போது நகுலன் வந்து அழுதுகொண்டே பேசினான். “நீங்க எங்ககூடவே கடைசி வரை இருக்கணும்னு ஆசையில்தான் அத்தானிடம் உங்களைக் கல்யாணம் பண்ணச் சொன்னோம்! அதுக்காக எங்களை விட்டுப் போயிடாதீங்க அக்கா. நாங்க எல்லாரும் பாவம் இல்லையா? அத்தான் காலையிலிருந்து சாப்பிடாம இருக்காங்க, பாட்டிக்கு நீங்க போறதை அறிஞ்சதும் மூச்சடைப்பு அதிகமாகி பிரஷர் கூடிப்போயிடுச்சு… டாக்டர் வந்து செக் அப் பண்ணிட்டு ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணணும்னு சொல்லிட்டு இருக்காங்க!” என்று சொல்ல, அவள் பதறியடித்து ஓடினாள்.
ஏற்கனவே உடல் நலிந்த நிலையில் இருந்தவருக்குப் பேரனிடம் பேசிய விஷயங்கள் மனதை அழுத்த, அதிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்துப் போனார். அதிலும், தான் கூறிய வார்த்தைகளுக்குப் பயந்துதான் ஆனந்தி புறப்பட்டுவிட்டதாக நினைத்து அதிக அளவிலான மன அழுத்தத்திற்குத் தள்ளப்பட்டார். மூச்சு சீரற்று இயங்கியதால், உடனே அருகில் உள்ள குடும்ப மருத்துவரை வரவழைத்துப் பரிசோதித்தார்கள். தன்னால்தான் இப்படியாகிவிட்டது என்று ஆனந்தி மனமுடைந்து போயிருக்க, அவரோ மெல்லக் கண்களைத் திறந்து பார்த்து அவளது கைகளைப் பற்றிக்கொண்டார்.
கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் அவரது மனக் கவலைகளைத் தெரியப்படுத்தியது. ‘நீயும் என்னை விட்டுப் போயிடுவியா? நீ ஒருத்தியாவது என் கூடவே இருந்து என் மகனைப் போல அக்கறையா பார்த்துப்பேன்னு நினைச்சேனே…’ என்ற ஏக்கத்துடன் கூடிய அந்தப் பார்வை ஆனந்தியை என்னவோ செய்தது. வாய் திறந்து பதில் சொல்ல முடியாமல் அவள் திகைத்து நிற்க, மருத்துவர் அவருக்கு அளித்த சிகிச்சையின் பலனாக ஆனந்தவல்லி மெல்ல ஆழ்ந்த நித்திரைக்குச் சென்றார்.
பாட்டி உறங்குவதைப் பார்த்துக்கொண்டே நின்ற ஆனந்தி, மருத்துவர் கிளம்பும்போது, “அவங்க உடல்நிலை ரொம்பவும் பலவீனமா இருக்கு. இனி அவங்க அதிர்ச்சியாகும் விதமா எதுவும் சொல்ல வேண்டாம். யாராவது ஒருத்தர் கூடவே இருந்து பார்த்துக்கோங்க… இல்லைன்னா உடனே ஆஸ்பிட்டலில் அட்மிட் பண்ணிடுங்க” என்று சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நின்றாள்.
அனைவரின் கவலை படிந்த முகத்தையும், பாட்டியின் இப்போதைய உடல்நிலையையும் நினைத்து மன வருத்தத்தில் மூழ்கிய ஆனந்தி, மற்றவர்களின் ஊடுருவும் பார்வையை எதிர்கொள்ளத் துணிவின்றி, யாரிடமும் பேசத் திராணி இல்லாமல் மெல்ல நழுவி வீட்டின் பின்புறமாகச் சென்றுவிட்டாள்.
நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவள் மனதைப் பிசைந்தன. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டிருந்தது. யாருக்காக அழுகிறோம்? எதற்காக அழுகிறோம் என்று தெரியாமல் அவள் அழுதுகொண்டே இருந்தாள். செவியில் கபிலன் பேசிய வார்த்தைகள் ஓடின. ஆனந்தைப் பார்த்த நாள் முதல் இப்போது நடந்த சம்பவங்கள் வரை நினைவுகூர்ந்தவளுக்கு, அவனது நேசமும் அவள் மீதான பாசமும் புரியவந்தது. அத்துடன் அவனைப் பார்த்த நாள் முதல் சரியாக உறக்கமற்று தவித்ததும், அவன் நினைவுகளில் மூழ்கியதும், அவனை விட்டு விலகியிருக்கக் கோபத்தை முகமூடியாக அணிந்ததும் ஞாபகத்திற்கு வந்தது!
இந்த வீட்டிற்கு வந்த பிறகும், அவனுக்கு உணவு பரிமாறும் போதும், அவனிடம் பேசும் போதும், அவனது நெருக்கத்தில் நிலைதடுமாறிய போதும் அவளுக்கு வெறுப்பு எதுவும் ஏற்படவில்லை. மாறாக, நடுக்கமும் கூச்சமும் மட்டுமே தோன்றியது. தனது சொந்த அத்தை மகன், ‘அத்தான்’ என்ற உறவுமுறை அவளுக்குள் ஒருவித பாசத்தைச் சுரந்தது. எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து, அவன் தன் மனதில் ஆழமாகப் புதைந்து இருப்பதைத் தெரியாமலேயே அவனைக் காயப்படுத்திவிட்டோமே என்று உடைந்து அழுதாள்!
வெகுநேரமாக அழுதுகொண்டே இருக்கும் அக்காவின் மனதைப் பூரணமாகப் புரிந்துகொண்ட தங்கை அபிநயா, “உங்க மேல உண்மையான நேசத்தைக் கொட்டி இருப்பவரை கடினமான வார்த்தையால தாக்கிக் காயப்படுத்திட்டு, இப்ப வந்து நீங்களும் கண்ணீர் வடிச்சிட்டு இருக்கீங்களே! இதைவிட அத்தான் கிட்ட உங்க மனசைச் சொல்லலாம் இல்லையா? பாவம், அவரும் நிம்மதி இல்லாம கஷ்டப்படுறார். பழையதெல்லாம் மறந்துட்டு அத்தானைக் கல்யாணம் செஞ்சுட்டு இதே வீட்டுல நீங்க எங்களோட இருக்கணும்னு ஆசைப்படுறேன் அக்கா.
எனக்கும் அத்தானுக்கும் இடையில கல்யாணத்துக்குப் பேசி இருப்பதை நீங்க காரணமா நினைக்க வேண்டாம். அதுவும் மாமாதான் ஆரம்பிச்சு விட்டாங்க. அவரை எதிர்த்துப் பேச முடியாம வீட்டுல எல்லாரும் சம்மதம் தெரிவிச்சாங்க. அத்தான் வேலை காரணமாச் சென்னைக்குப் போக, படிப்பு காரணமா நான் இங்க இருக்கேன். எங்க பெரியப்பாவோட மகள்தான் நீங்கன்னு எனக்கும் தெரியும்! வீட்டுல வேற யாருக்கும் தெரிஞ்சா பிரச்சனையாகிடும்னு பயந்துதான் சொல்லாம மறைச்சு வச்சிருக்கேன்… நம்ம அத்தானை நீங்களே கல்யாணம் செஞ்சுட்டு எங்களோடு சேர்ந்து இருக்கணும்னு ஆசைப்படுறேன். உங்க கல்யாணத்துக்கு நம்ம பெரியப்பா, பெரியம்மா, தம்பி எல்லாரையும் வரவழைச்சு முன்ன மாதிரி சந்தோஷமா இருக்கலாம்!” என்றாள்.
அப்பாவையும் அம்மாவையும் பற்றிச் சொன்னதும், அவளது கண்களிலிருந்து அடக்க முடியாமல் கண்ணீர் பாய்ந்தது. அதை அபிநயா, அத்தானின் மீதான பாசம் என்று நினைத்துவிட்டாள்.
“இப்படியே எவ்வளவு நேரம் வெளியே நின்னுட்டு இருப்பீங்க? மாலை நேரம் ஆனாலே இந்தப் பக்கம் காட்டு விலங்குகள் உலாவ ஆரம்பிச்சிடும். வாங்க நாம வீட்டுக்குள்ள போகலாம். அத்தான் இன்னும் சாப்பிடாம இருக்கார். போய் கூப்பிட்டு வாங்க!”
தங்கைக்கு அவனைத் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிந்தாலும், அவனிடம் சென்று பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. அவனைப் பார்த்துப் பேசும்போது திருமணத்திற்கும் சம்மதித்தாக வேண்டும். பாட்டி கூறிய வார்த்தைகளில் அவன் முகம் அதிர்ந்து போனதையும், தனது வார்த்தைகளை ஏற்று அவமானத்துடன் சென்றதையும் நினைக்கும்போது மனதிற்குள் இனம் புரியாத வேதனை சூழ்ந்தது.
ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவனைத் தானும் கஷ்டப்படுத்திவிட்டோமே என்று அவனுக்காக கவலைப்பட்டாள். காலை முதல் இவ்வளவு நேரமாகியும் உணவருந்தாமல் இருக்கிறானே, தான் இங்கிருந்து சென்றுவிட்டால் அவனது நிலை என்னவாகும் என்று அஞ்சினாள். அவனை ஏமாற்றிக்கொண்டு இத்தனை நாள் இந்த வீட்டில் இருந்ததை அறிந்தால் தன்னை என்ன சொல்வானோ என்று கலக்கமுற்றாள். மனம் ஒரு நிலைக்கு வராமல் நிம்மதி இழந்து தவித்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று தெரியாமல் உள்ளம் தள்ளாடியது!
