Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 15

வாசல் பெருக்கிக் கொண்டு இருந்தாள் மதுரா.

அவள் அம்மா வானதிக்கு இப்போதெல்லாம் காலையில் எழுந்து இது மாதிரி எல்லாம் வேலை செய்ய முடியவில்லை!

அப்படியே செய்ய வந்தாலும் மதுரா விடுவதில்லை.

வாசலைப் பெருக்கி விட்டு, பசுவின் சாணத்தை பக்கெட் நீரில் கரைத்து எடுத்து வந்து தெளிக்க துவங்கினாள்.



Advertisement

கண்களோ வழக்கம் போலவே பக்கத்து வீட்டை ஏக்கத்துடன் பார்த்தது!

அது இப்போதும் பூட்டப்பட்டு இருந்தது!

ரேவந்தின் மாமாக்கள் இருவருக்குமே பெண் குழந்தைகள் தாம்!

Advertisement

அவர்கள் ரேவந்தை விட சில வயது மூத்தவர்கள்.

Advertisement

அவர்களில் ஒருவளை பெங்களூரிலும் ஒருவளை ஹைதராபாத்திலும் மணமுடித்துக் கொடுத்திருக்க,

வீட்டுப் பெரியவர்கள் இருவரும் ஒரு சேர இறந்து விட்ட பின்,

அந்த வீட்டில் வாட்டிய வெறுமை தாங்காமல் மாமன்கள் இருவரும் பெண்கள் வீட்டுக்கு அடிக்கடி போக தொடங்கினார்கள்.

Advertisement

முதலில் போக வர இருந்தவர்கள் பின், அவர்களின் மருமகன்கள் அடிக்கடி  வெளிநாடு போவதால் பேரக் குழந்தைகளைக் கவனிக்கவென்று அங்கேயே தங்கி விட தொடங்கி இருந்தார்கள்.

இங்கு இருந்த அவர்களின் நிலங்களையும் தோப்புகளையும் குத்தகைக்கு விட்டு விட்டு,

அந்த மொத்த விலை பூக்கடையையும் லீசுக்கு விட்டு விட்டு வெளியூரிலேயே இருந்து கொண்டார்கள்.

கோவில் கட்டளை, ஊர்த் திருவிழா என்றால் வருவார்கள்.

ஏகாதசிக்கு,  பாட்டி தாத்தா திதிக்கு வந்து போவார்கள்!

மற்றபடி அந்த வீட்டில் எப்போதும் பூட்டு தான் தொங்கிக் கொண்டு இருக்கும்!

இன்று அந்த வீட்டை பார்த்தவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தன!

சட்டென்று ஒரு சந்தோசம் உள்ளின்று பீறிட்டு கிளம்பியது!

ஹ.. என்று ஒரு முறை சந்தோஷ பெருமூச்சு வந்தது!

காரணம் அந்த வீட்டின் முன் நின்று இருந்த கார்கள்!

குறிப்பாக ஸ்ரீமதி அத்தையின் கார்!

கூடவே வாசலில் ரேவந்த்தின் ஷூக்கள்!

உடனே உள்ளே ஓடி போய் விளக்குமாறு பக்கெட்டை வைத்து விட்டு கொல்லைப்புற மாமரத்தின் கீழ் நின்று பக்கத்து வீட்டு மாடியை பார்த்தாள்!

ம்ஹும்! எப்போதும் அங்கு நின்று உடற்பயிற்சி செய்யும் அவனைக் காணோம்!

ஏமாற்றத்துடன் வீட்டில் உள்ளே போனவளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தன!

அவசர அவசரமாக வேலைகளை முடித்து பள்ளிக்கு கிளம்பினாள்!

இனியா,  தானே அவள் தலையைப் பின்னிக் கொண்டு கிளம்பி விட, லக்கிக்கு ஜடை போட்டு விட்டு மதிய உணவு கட்டிக் கொண்டு,

“அம்மா.. மத்தியானம் சூடா சாதம் மட்டும் நீ வச்சுக்கோ.

குக்கரிலேயே வை. வெளியே விறகு அடுப்பில் வடிச்சுக்கிறேன்னு போய் புகையில நிக்காத.

பிரசாதம் எல்லாம் மணி அக்கா போட்டுக் கொடுக்கும்.

இனிமே அக்கா இங்கயே தான் இருக்க போவுதாம்.

காலேஜ் மெஸ் வேலையை விட்டுடுச்சாம்.

அதனால நீ நல்லா கட்டில்ல படுத்து ரெஸ்ட் எடு” என்று பலதும் சொல்லி,

பலதும் கைக்கு தோதாக எடுத்து வைத்து விட்டு அவசரமாக அவள் வெளியே வந்தாள்.

பக்கத்து வீட்டில் நின்றிருந்த கார்களைக் காணோம்.

ரெங்கநாதரை சேவிக்க போய் விட்டார்களாம்.

இன்னும் இரண்டு நாட்கள் இங்கேயே தான் இருக்க போகிறார்கள்.

 ஏதோ சொத்து கிரயம் பண்ணிக் கொடுக்க வந்திருக்கிறார்கள் ஸ்ரீமதியும் ரேவந்தும் என்ற விஷயத்தை

அவர்கள் வீட்டில் வேலை செய்யும் அக்கா மூலம் அறிந்து கொண்டாள் மதுரா.

சரி.. இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல. பார்க்கலாம் என்று அவள் இருக்க,

ஸ்ரீமதியும் ரேவந்தும் அவள் பள்ளி சென்றிருந்த நேரமே அவள் வீட்டுக்கு வந்து வானதியையும் மதுராம்பாளையும் பார்த்து விட்டு சென்றிருந்தனர்!

பள்ளி விட்டு வீடு வந்து இதைக் கேட்டவளுக்கு அழுகையே வந்து விட்டது!

பாத்ரூமில் போய் ஒரு மூச்சு அழுது விட்டு முகம் கழுவி வந்தாள்.

அடுத்த நாள் சமயபுரம் தேர்த் திருவிழா!

வழக்கம் போல அந்த சிறிய கிராமம் தாங்க முடியாத அளவு கூட்டம்!

ஒரே நெரிசல்!

மதுரா அவள் அம்மா வானதி சீக்கிரம் குணமாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டு விரதம் இருந்து,

 தன் கூட இரண்டு கிராமத்து பெண்கள் துணையோடு வீட்டில் இருந்து நடைப் பயணமாக சமயபுரம் சென்றிருந்தாள்.

அம்மனை தரிசித்துவிட்டு, தேர் வடத்தை மட்டும் தொட்டுக் கும்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினார்கள்.

போகும் போது நடந்தே செல்பவர்கள் வரும் போது பஸ்ஸில் ஊர் திரும்புவர்.

அப்படி அவள் பஸ்ஸில் ஏறி படிக்கு பக்கத்தில் இருக்கும் சீட்டில் அமர்ந்து இருக்க, திமு திமுவென்று கூட்டம் வந்து பஸ்ஸில் ஏறியது!

அதில் ஒரு பெண் கையில் குழந்தையுடன் ஏற, அவளுக்கு தன் இருக்கையைவிட்டு விட்டு அந்த சீட்டின் இடைவெளியிலேயே திரும்பி நின்றுக் கொண்டு வந்தாள்.

பஸ் சிறிது தூரம் சென்று ஊருக்கு வெளியே ஒரு நிறுத்தத்தில் நிற்க மேலும் சில இளைஞர்கள் அதில் ஏறி படியில் நின்று பயணித்தார்கள்.

ஒரு திருப்பத்தில் பஸ் கொஞ்சம் வேகமாகவே திரும்பியிருக்க,

படியில் தொங்கிக் கொண்டு வந்த இளைஞர்களில் ஒருவன்,

சீட் இடைவெளியில் திரும்பி நின்றுக் கொண்டிருந்த மதுராவின் தோளில் கை வைத்து,

நன்கு பின் செய்யப்பட்டு இருந்த துப்பாட்டவை பிடித்து இழுத்து கிட்டத்தட்ட தொங்கினான்!

துப்பாட்டவை அவன் விட்டு விட்டால், நிச்சயம் அவனுக்கு பிடிமானம் எதுவில்லாமல் கீழே விழுந்து அடிப்பட்டு விடும் அபாயம்!

அவனின் ஒரு கை பஸ் கம்பியைப் பிடித்து இருந்தாலும் அது வலுவாக பிடித்துக் கொள்ள அங்கு இடமில்லை!

எனவே அவன் கைக்குக் கிடைத்த அவளின் தோள் துப்பட்டாவைப் பற்றிக் கொண்டு தொங்கினான்!

எவனோ ஒருவன் துப்பாட்டாவைப் பற்றி இழுப்பது உணர்ந்த மதுரா சீற்றத்துடன் திரும்பியவள் அதிர்ந்தாள்!

அவள் துப்பாட்டாவைப் பற்றி இழுத்து தொங்கிக்கொண்டு வந்தவன் அவளின் ஊட்டி!

அவளுக்கு பதறியது!

அவள் தோள் மேல் இருந்த அவனின் கையை அவளும் நன்றாக பிடித்துக் கொண்டாள்!

அவன் கனம் தாங்காமல் குத்தப்பட்டிருந்த அந்த பின் வாயைப் பிளந்து அதன் கூரான ஊசி

அவள் தோளை நன்றாக அழுத்தி உள்ளே போய் ஆழமாக கீறத் தொடங்கி இருந்தது!

அவளுக்கு வலி பொறுக்க முடியவில்லை!

ஆனாலும் அவன் கையை எடுத்து விடவும் இல்லை!

அப்படி செய்தால் நிச்சயம் அவன் கீழே தான் விழுவான்!

எனவே அந்த வளைவு திரும்பும் வரை பொறுத்துக் கொண்டிருந்தாள்.

ரத்தமே வரத் தொடங்கி அவள் போட்டிருந்த மாரியம்மன் மஞ்சள் வண்ண சுடிதாரின் தோள் பாகம் சிவப்பாகிக் கொண்டிருந்தது!

இந்த நிலையில் பஸ் சென்று கொண்டிருக்க திடீரென்று

ஒரு முட்டாள் இரு சக்கரப்பயணி,

நோ என்ரியில் எதிரே எதிர்பாராமல் வந்து தொலைக்க, சடன் ப்ரேக் போட்டார் டிரைவர்.

அவ்வளவு தான் ஏற்கனவே ஆழமாக குத்திக் கொண்டு இருந்த அந்த பின் இன்னமும் ஆழமாக அவள் தோளை கிழித்துக்கொண்டு அவள் துப்பட்டாவும் கிழிந்து ரேவந்த் கையோடு வந்து விட

கீழே விழப் போனவனை யாரோ பிடித்துக்கொண்டு காப்பாற்றி விட்டார்கள்!

அவன் தப்பித்து விட்டான்!

ஆனால் மதுராவுக்கு தோள் பட்டையில் ஆழமாக காயம்!

ரத்தம் வழிந்து கொண்டு இருக்க, அவளை அவசரமாக ஒரு ஆட்டோவை வழிமறித்து ஸ்ரீரங்கம் ஜி.ஹெச் கொண்டு போய் விட்டார்கள்!

ரேவந்தையும் வேறு ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு போய் விட்டார்கள் அவன் நண்பர்கள்!

அவர்கள் தான் ரேவந்த்தை பிடிவாதமாக சமயபுரம் அழைத்து வந்தார்கள்!

மாமாவின் பைக்கை எடுத்தவனை தடுத்து, பைக்கில் எல்லாம் போனால் கும்பலில் பைக்கை அப்படியே போட்டு விட்டு தான் வர முடியும்!

 நாம பஸ்ஸில் போய் வரலாம் என்று அழைத்து வந்திருந்தார்கள் அவர்கள்!

அவர்களுக்கு ஃபுட் போர்ட் பயணம் பழக்கமாக இருக்க,

பழக்கம் இல்லாத ரேவந்த் தடுமாறி பஸ்ஸில் நின்று இருந்த யாரோ ஒரு பெண்ணின் துப்பாட்டவைப் பற்றி விட்டான் பேலன்ஸ் பண்ண!

உடனே தன் செய்கையை உணர்ந்து பதறி அவன் கையை எடுக்க முயல, அந்த பெண்ணோ அவன் கையை அழுந்த பிடித்துக் கொண்டாள் இவன் விழுந்து விடாமல் இருக்க!

அவ்வளவு பதட்டத்திலும் அந்த பெண் யாரென்று பார்க்க,

அது ஸ்வீட்டி!

அவளுக்கு வலிக்கும் என்று அவன் கையை மீண்டும் எடுக்க முயல அவள் விட வில்லை!

வலியைப் பொறுத்துக் கொண்டு அவனையும் விடாமல் இருந்தாள் ஸ்வீட்டி!

சரி.. வளைவு திரும்பியவுடன் கையை எடுத்துக் கொண்டு விடலாம் என்று அவன் இருக்க, சடன் ப்ரேக் போடப்பட்டு இன்னும் காயம் அவளுக்கு!

குற்ற உணர்ச்சியில் அவன் தவித்துக் கொண்டு இருக்க, வீட்டில் அவனைக் கட்டி வைத்து அடிக்காத குறையாக திட்டு விழுந்தது ஸ்ரீமதியிடம்!

“அண்ணே..அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு விசாரிங்க. யாருன்னு பாருங்க.

ட்ரீட்மென்ட் செலவை நாம பார்த்துக்கலாம்! பொம்பள பிள்ளை பாவம் நமக்கு வேண்டாம்!” என்றாள் அவள்.

“அது நம்ம ஸ்வீட்டி தாம்மா. ஜிஹெச் கூட்டிட்டுப் போய் இருக்காங்க” என்றான் அவன்.

“இப்ப வீட்டுக்கு வந்துட்டாங்க” என்றான்  அவன் நண்பன் ஒருவன்!

“பேசாதீங்கடா.. எல்லாம் உங்களால தான்” அவனைத் திட்டினார் ரேவந்தின் மாமா!

“ஏண்டா.. ஊருக்கு வர்றப்ப எல்லாம் ஏதாச்சும் ரத்தக் காயம் உண்டு பண்ணுவியா அவளுக்கு?” மேலும் அவனைத் திட்டி விட்டு மதுராவைக் அவள் வீடு சென்றாள் ஸ்ரீமதி!

ரேவந்தையும் கூட்டிக் கொண்டு!

ஆனால் பாவம் மதுரா.

அவர்கள் இருவரும் அவளைப் பார்க்க வந்திருந்த நேரம் மருந்தின் உதவியால் தூங்கிக் கொண்டிருந்தாள்!

வானதி அவளை எழுப்ப முயல, வேண்டாம் என்று தடுத்து விட்டு கையில் இருந்த பழங்களை மட்டும் கொடுத்து விட்டு கிளம்பி விட்டார்கள் இருவரும்!

மறுநாள் காலை கண் விழித்த மதுராவுக்கு ஒரே ஏமாற்றம்!

அதுவும் அவர்கள் இருவரும் சென்னைக்கு போய் விட்ட செய்தி கேட்டவுடன் ஓ வென்று கதறி அழத் தோன்றியது!

ஆனால் அழவில்லை!

அத்தனை அழுகையையும் முழுங்கி விட்டு அடுத்த இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவள் ஜிஹெச் போய் விட்டு,

அப்படியே பக்கத்தில் ரிஜிஸ்டர் அலுவலகம் அருகில் இருந்த ஒரு ஜெராக்ஸ் கடையில் வேலை செய்யும் அவள் தோழியைக் பார்க்க சென்றாள்.

அப்போது அந்த தோழி,

“ஏய்.. மதுரா.. வா வா.. உன் காயம் சரி ஆகிடுச்சா?” என்று கேட்டவள், “ஏய்.. ஒரு ஹெல்ப்பு டி. உங்க வீட்டுக்கு பக்கத்து வீடு தானே அந்த செல்வம் மாமா வீடு.

அவங்க வீட்டுல கொஞ்ச நாள் முன்னாடி ஒரு ரெஜிஸ்ட்ரேசன் பண்ண வந்தாங்க.

அப்படி வந்தப்போ அவங்க வீட்டுப் பையனோட ஓட்டர் ஐடி ஜெராக்ஸ் எடுத்துட்டு திரும்ப வாங்கிக்காம போய்ட்டாங்க.

 நீ கொஞ்சம் அவங்க வீட்டில் கொடுத்துடறியா?” என்று கேட்டாள்.

“ம்ம்”. என்று சொல்லி வாங்கி வைத்துக் கொண்ட மதுராவால் அதை உரியவனிடம் கொடுக்க முடியாமலே போய்,

கடைசியில் அது,

அவன் தேர்வு செய்த பட்டுப்பாவாடை, அவனது ஜெர்கின், அவனுடன் போன சினிமா டிக்கெட், அவன் வாங்கி தந்த சாக்லேட் டப்பா, அவன் கிறுக்கிப் போட்ட காகிதங்கள், அவன் கையால் எழுதப்பட்ட கோவில் டொனேசன் ரசீது, அவன் தின்று போட்ட பிஸ்தா தோல்கள், சாக்லேட் பேப்பர்கள், அவன் எடுத்த அந்த போட்டோ இவை மாதிரியான அரிய பெரிய பொக்கிஷங்கள் லிஸ்டில் சேர்ந்து விட்டிருந்தது அவனின் அந்த தேர்தல் அடையாள அட்டை!

அன்று அவள் அழவில்லை தான்!

ஆனால் வெகு சீக்கிரமே அழ வைத்தது விதி!

அவள் தாய் வானதியின் மறைவுக்கு!

சின்ன கோடுக்கு பக்கத்தில் வேறு ஒரு பெரிய கோடுப் போட்டு அதை சின்னதாக்குவது போல, அவளின் இந்த பிரிவுத் துயரைப் போக்க பெரிய பிரிவுத் துயரைத் தந்து!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!