Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 28

அத்தியாயம் : 28

இரு ஊர்களுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டதால் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நின்று போயிருக்க, பள்ளி கல்லூரிக்குச் செல்லும் இடத்திலும் இதே நிலை நீடித்து வந்தது. இரு கிராமங்களிலும் உள்ள பெற்றோரும் தங்களது வாரிசுகளிடம் ஒன்றுக்குப் பத்து முறை சொல்லித்தான் வெளியே அனுப்பி வைப்பது வழக்கம். அப்படித்தான் அபிநயாவின் பெற்றோரும், பக்கத்து ஊரைச் சார்ந்த நபர்களும் கூட கூறியிருந்தார்கள்.

​அந்த நேரத்தில் ஒரே கல்லூரியில் படிக்கச் சென்றிருந்த மாணவிகள் எதிரும் புதிருமாகக் காட்சியளிக்க, அங்கேயும் யாரும் அவளிடம் பேச முன்வரவில்லை. ‘இங்கு கூட அனைவரும் இப்படி நடந்து கொள்கிறார்களே!’ என்று அபிநயா வருத்தப்பட, ‘அவளது மாமாவும், அப்பாவும், சித்தப்பாவும் தான் எல்லாவற்றிற்கும் காரணம்! காவலர்களுக்குப் பணம் கொடுத்துக் கை பொம்மையாகப் பாவித்துச் செயல்படுகிறார்கள்!’ என்று அந்தப் பெண்கள் குற்றம் சுமத்தினார்கள். இவள் பலமுறை அவர்களால் அவமானப்படுவாள். வீட்டில் வந்து அப்பா அம்மாவிடம் குமுறலாய் தன் மனதை வெளிப்படுத்துவாள்.

​அப்படி ஒரு சமயம் கல்லூரிக்குச் சென்று விட்டு வரும் வழியில் நடந்தபோது தான், செல்வா இடையிட்டு அந்தப் பெண்களைத் திட்டினான். “வளர்ந்து வர்ற சமூகத்துக்கு இடையில ஜாதி மதம் பேதம் பார்த்துப் பழகுறதும், மூர்க்கத்தனமா முட்டாள்தனமாப் பேசுறதும் கண்டிக்கத்தக்கது! இனிமே அந்தப் பெண்ணைப் பத்தி ஏதாவது சொன்னதா கேள்விப்பட்டா, உங்களைச் சும்மா விடமாட்டேன்!” என்று எச்சரித்தான்.



Advertisement

தினமும் காரில் செல்லும் வழக்கமுடைய அபிநயா, அன்று கார் வரச் சற்றுத் தாமதம் ஆனதால் பேருந்து நிறுத்தத்திற்கு வந்திருந்தாள். அந்த நேரத்தில் தான் சக மாணவியர் குத்திக் குத்திப் பேசுவது கண்டு அவள் கண்கலங்க, செல்வாவின் அறிமுகமும் தலையீடும் இவளுக்குக் கிடைத்தது!

​அவனது நல்ல மனதும், பாரபட்சம் பார்க்காமல் நடந்து கொண்ட விதமும் அவளைக் கவர்ந்தது. அவனுக்கு ஒரு நன்றி கூடத் தெரிவிக்காமல் வந்து விட்டோமே! என்று நினைத்தவள், மறுநாள் கல்லூரிக்கு வந்தபோதும் மாணவிகள் இவளைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொண்டு இருப்பது கண்டு கவலையில் மூழ்கினாள்.

​நேற்று நடந்த சம்பவம் அவர்களின் பேச்சில் அடிபட்டது. அப்போதுதான் செல்வநாயகம் ஒரு வைத்தியர் என்று தெரிய வந்தது! அவன் மீது மதிப்பும் மரியாதையும் உயர்ந்தது. அதிலிருந்து அவனிடம் பேசுவதற்காகவும் நன்றி தெரிவிப்பதற்காகவும் எத்தனையோ முறை அவள் முயற்சிக்க, அது எதுவும் நடக்காமல் போனது.

Advertisement

​தனது வீட்டிற்குப் பக்கத்திலுள்ள பகுதிகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டதால், அவளால் எங்கும் செல்ல முடியவில்லை. மாமா ராஜேந்திரனின் குணம் தெரிந்ததால், தனியாகப் போகவும் அவளுக்குப் பயமாக இருந்தது. அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஓடிச் சென்று அன்றைய உதவிக்கு அவள் நன்றி தெரிவிக்க, அவன் அதைச் சிறு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டான்.

Advertisement

​”ஊர்ல நடக்கிற விஷயத்தைக் காலேஜ் வரைக்கும் கொண்டு போக வேண்டிய அவசியமில்லை. மறுபடியும் அவங்க இதுமாதிரி ஏதாவது சொன்னா என்கிட்ட சொல்லிடுங்க. நீங்களும் இதைப் பெருசு பண்ணாம விட்ருங்க” என்றான் செல்வா.
அவள் மட்டும் இதை வீட்டில் தெரியப்படுத்தியிருந்தால் இதற்குள் ஒரு பெரிய கலவரமே உருவாகியிருக்கும்! அது தெரிந்ததால்தான் அபிநயாவும் யாரிடமும் சொல்லாமல் இருந்தாள். அபிநயாவின் இந்தப் பண்பு புரிந்ததால்தான், செல்வாவும் நிதானமாகப் பேசினான்.

அவள் தலையசைத்து நன்றி தெரிவித்து அங்கிருந்து சென்றுவிட, அதன் பிறகு இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. அந்த ஊருக்கு நாயகனாக வலம் வரும் செல்வா, அவள் மனதிலும் அழுத்தமாகத் தடம் பதித்தான்! வீட்டில் ஆனந்துடன் அவளுக்குத் திருமணத்திற்குப் பேச, தனது படிப்பைக் காரணமாக்கி இரண்டு வருடத்தைத் தள்ளிப் போட்டிருந்தாள். சொல்லப் போனால் பெரியப்பா மகள் ஆனந்திக்கும் இவளுக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம் இருக்கலாம்.

​இந்நிலையில் ஆனந்தி அந்த ஊருக்கு வருகை தர, அப்போதே இவளுக்கு விஷயம் தெரியவந்தது. இவளது கார் ஓட்டுநராக முன்பு இருந்தது தங்கப்பாண்டி. செல்வாவிடம் இவள் சென்று நன்றி தெரிவித்தது, பெண்கள் திட்டியது எல்லாமே தங்கப்பாண்டிக்குத் தெரியும். அதனால்தான் ஆனந்தியைப் பற்றி அவனிடம் கேட்டபோது, பூபாலனின் உறவினராக வந்து சுபாவின் வீட்டாருடன் நெருக்கமாகப் பழகி ஊர் சுற்றிப் பார்த்தவளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வந்து அவளிடம் கூறினான்.

Advertisement

​செல்வா அவளுடன் பேசுவதையும், சிரிப்பதையும் கண்டு, அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தவித்தாள் அபிநயா. எந்த ஒரு பெண்ணிடமும் அளவுக்கு அதிகமாகப் பேசாதவன் அவளிடம் இந்த அளவிற்கு உரையாடுகிறான் என்றால், அவர்களுக்கு இடையில் ஏதோ நெருக்கமான உறவுமுறை இருப்பதாகச் சந்தேகித்தாள்! அவளது புகைப்பட வீடியோ பதிவுகளைப் பார்த்த போதுதான், ஆனந்தி யார் என்ற விஷயம் அவளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவளிடம் எப்படிச் சென்று பேசி நட்பு பாராட்டுவது என்று தெரியாமல் இருக்க, அவளே தங்கள் வீட்டிற்கு வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை அபிநயா. ஆயிற்று, எல்லாமே நடந்து முடிந்தாயிற்று!

அக்காவை அத்தான் தன் விருப்பப்படியே திருமணம் செய்து கொள்ள அனைவரும் சம்மதித்தாயிற்று. ஆனால் செல்வநாயகத்தை எப்படித் தொடர்பு கொண்டு அவனிடம் பேசுவது என்று தெரியாமல் தவித்தது அபிநயா மட்டும்தான். இன்றைக்கு அவன் வருவான், இப்படியெல்லாம் நடக்கும் என்று அவளும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை!

பல நாட்களுக்குப் பிறகு அவனது சிரிப்பையும், “நல்லா இருக்கீங்களா? வீட்டுல எல்லாரும் சௌக்கியமா? படிப்பு எல்லாம் எப்படிப் போகுது?” என்று ரொம்பவும் சாதாரணமாகப் பேசியபோது, எப்படித் தன் உள்ளக்கிடக்கையை அவனிடம் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் தயங்கினாள்! அத்தானுக்கு அக்கா மீது இருக்கும் பாசம், அவன் அவளைக் கிண்டல் செய்வது, இருவருக்கும் சென்னையில் வசிக்கும் நாட்களில் உள்ள பழக்கம்… எல்லாமே அவளுக்குத் தெரிந்திருந்ததால், ‘தன்னை மணக்கப் போகிறவனும் இதேபோல பாசத்துடன் நடந்து கொள்வானா?’ என்ற ஏக்கம் அவளுக்குள் இருந்தது. இன்று அவனைப் பார்த்ததும் அது அதிகப்படியாக மாறிவிட்டதால், கண் வழியாகவும் கைகள் மூலமும் அவனுக்குத் தெரியப்படுத்துகிறாள்!

​ஆனந்த், “கவனமா பார்த்து வந்திருக்க வேண்டாமா? காயம்பட்ட இடம் ரொம்ப வலிக்குதா?” என்று அபிநயாவிடம் அக்கறையுடன் கேட்டு அவள் பதிலையும் பெற்றுக்கொண்டான். பின் ஆனந்தியிடம் திரும்பி, “நீ ஏன் கோயிலுக்கு வரப்போறத என்கிட்ட சொல்லலை? காலையிலேயே சொல்லியிருந்தா நானே பத்திரமா அழைச்சுட்டு வந்திருப்பேனே!” என்றான்.

​அவள் எப்படிச் சொல்வாள்? தான் வந்ததே அவனுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கும்போது, சொல்லிக்கொண்டா வர முடியும்?

​மனதிற்குள் நினைத்ததை மறைத்துக்கொண்டு, “நீங்க முக்கியமான வேலை விஷயமா வெளியே போறதா சொன்னீங்க, அதான் தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லலை. இனிமேல் சொல்லாம போகமாட்டேன்!” என்றாள் சமத்தாக.

அவன் சரி என்று எழுந்து, செல்வாவைப் பார்த்து நன்றி தெரிவித்துக் கைக்குலுக்கினான். அவன் யார் என்பது ஆனந்திற்கும் தெரியும்! அபிராமி அத்தையின் அண்ணன் மகன்; தனது அப்பாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவன்! அன்று அடித்துப் போட்டு நெருப்பைப் பற்ற வைத்ததில், அத்தையின் அப்பாவும் அம்மாவும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட, செல்வநாயகத்தின் அப்பா தனது ஊர் தலைவர் உறவினர்களை அழைத்துச் சென்று நியாயம் கேட்டதில், அவரது உடலிலும் காயம் ஏற்பட்டு சில வருடத்தில் உயிரையும் விட்டிருந்தார்!

​முந்தைய செயலை நினைத்ததும் நாசி விடைத்தது! பேச முடியாமல் ஏதோ ஒன்று தொண்டையை இறுகப் பற்றியது!

​ஆனந்தின் நிலை சங்கடப்படுத்த, ஆனந்தி அவனது கையைப் பற்றி அழுத்தினாள். அதில் அவன் தொண்டையைச் செருமித் தன்னை மீட்டுக் கொள்ள, “ரொம்ப நன்றி! நாங்க வரோம்” என்று விடைபெற்றுக் காருக்கு வந்தான்.

​அவர்கள் மூவரும் வீட்டிற்குச் சென்றுவிட, செல்வாவின் முகம் மட்டும் கண்ணீருடன் தன்னையே ஏக்கமாகப் பார்த்துச் செல்லும் பெண்ணைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது!

​வீட்டிற்கு வந்த மகளைக் கண்ட அம்பிகா பதறிவிட, ஆனந்தி நடந்த விஷயத்தை அவளிடம் தெரிவித்து அமைதிப்படுத்தினாள். பின்னர், அபிநயாவை அவளிடம் ஒப்படைத்துவிட்டு, ஆனந்தியை அழைத்துக்கொண்டு தனது அறைக்கு வந்தான் ஆனந்த்! மறுக்காமல் தன் பின்னே வந்தவளை, கதவைச் சாற்றிவிட்டு இறுக அணைத்து முத்தமிட்டான்!

“வீட்டுல எல்லாரும் இருக்கப்போ இப்படித்தான் செய்வதா? அவங்க என்ன நினைப்பாங்க?” என்று சிணுங்கினாள் ஆனந்தி.

​“அவங்க என்ன நினைச்சாலும் எனக்குக் கவலையில்லை! ஒரு சந்தோஷமான விஷயத்தை உன்கிட்ட சொல்லும் ஆசையில் ஓடி வந்தேன், உன்னைக் காணோம்! அதான் தேடி வந்தேன்!”

​செவியோரம் உதட்டால் உரசியவன், சற்று நேரம் அவளிடம் இழைந்து குழைந்து தனக்குத் தேவைப்பட்டதை எடுத்துக் கொண்டான்!

​அவள், “நீங்க ரொம்ப முரடு!” என்றதும் சிரித்துக் கொண்டே, “அது உனக்கு இப்பதான் தெரியுமா?” என்க… “அப்ப முரட்டு பீஸு; இப்ப ரொமான்ஸ்ல தெறிக்க விடுறீங்க!” என்றாள் ஆனந்தி.

​அவன் சத்தமாக நகைத்துக்கொண்டு, “ம்ம்… கல்யாணத்துக்குப் பிறகு பாரேன்!” என்று கண் சிமிட்ட, எத்தனை நேசம் மனதில் நிலைத்திருந்தால் இப்படி நடப்பான் என நினைத்து, அத்தானின் மார்பில் சாய்ந்து கொண்டாள் ஆனந்தி.

​“மாமா ஆசைப்பட்டுக் கட்டிய அந்தக் கட்டிடம் அப்படியே பயனில்லாமப் போயிருச்சு… நமக்குத் தெரிஞ்ச எஞ்சினியரைப் பார்த்து அதைச் சரி பண்ற விஷயமாத்தான் வெளியே போயிருந்தேன். மொத்தப் பணத்தையும் கொடுத்துட்டா போதும், அவரே எல்லாத்தையும் சரி பண்ணிக் கொடுத்துடுவார்! அப்புறம்… நடக்கப்போற நம்ம கல்யாணத்துக்கு மாமாவோட குடும்பத்தை வரவைக்கப் போறேன். அந்தத் தொழிற்சாலை, இந்த வீடுகள்னு இத்தனை வருஷமா எங்க அப்பா பார்த்துக்கிட்ட எல்லாப் பொறுப்புகளையும் அவரிடமே ஒப்படைச்சுட்டு, உன்னோட சென்னைக்கு வந்து நிம்மதியா வாழப்போறேன்! அவர் எங்க பாட்டிக்குச் செஞ்ச தப்புக்குத் தண்டனையா அவரோட ஒரே மகனான என்னை இனி அவர்களுக்கு இல்லாமச் செய்யப்போறேன்!”

​அவள் கண்கலங்க அவனை இறுக அணைத்துக் கொண்டாள். நா தழுதழுக்கப் பேச்சு வர மறுத்தது; அவனும் அதே போன்றதொரு உணர்ச்சிப் பிழம்பாகத்தான் நின்றிருந்தான்!
​“உன்னை மட்டும் நான் அப்பவே பார்க்காமலிருந்து, என் பெற்றோரோட சுயநலம் மட்டும் எனக்குத் தெரிஞ்சிருந்தா… இந்த உயிரையே மாய்த்துக்கிட்டு அவர்களை அநாதையாத் தெருவுல அலைய விட்டிருப்பேன்! ஆனா, என் உயிர், உடல், ஆத்மான்னு என்னோட அன்பு, பாசம் எல்லாம் உனக்குச் சொந்தமாகிட்டதால, என்னை அவர்களுக்கு இல்லாமச் செஞ்சு, அவங்களை மட்டும் தண்டிக்கப் போறேன்!”

​ஆனந்த் இந்த அளவிற்கு மனமுடைந்து போயிருப்பான், அவள் மீது உயிர் நேசத்தை வைத்திருப்பான் என்று தெரியாமல் கலங்கிய ஆனந்தி, அவனை இறுக்கமாக அணைத்து அவன் மனதைச் சாந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் விதமாக, அவனது உதட்டருகில் தனது அதரங்களைக் கொண்டு செல்ல… அதை அப்படியே கவ்விச் சுவைத்தான் ஆனந்த்!

​இரவு நேரம் வீட்டிற்கு வந்த ராஜேந்திரன், அனைவரின் முகத்திலும் இருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு, “என்ன விசேஷம்? வீட்டுல உள்ள எல்லார் முகமும் பூரிப்பா இருக்கு?” என்றார்.

​“அது ஒண்ணும் இல்ல. பசங்க வெளியே போயிட்டு வந்தாங்க; அதைப் பற்றிப் பேசிச் சிரிச்சிட்டு இருந்தாங்க!” என்று மூத்தவர் சிவச்சந்திரன் பேச்சை மாற்றும் விதமாகச் சொல்ல, “அப்படியா? ரொம்ப சந்தோஷம்!” என்றதோடு அவர் நிறுத்திக் கொண்டார். தன்னைக் கண்டும் நிமிர்ந்து கூடப் பார்க்காமலும், அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் எழுந்து சென்ற மகனை யோசனையுடன் பார்த்தார். பெயரளவில் உணவைக் கொறித்துவிட்டுத் தனது அறைக்குள் சென்றவர், மனைவியிடம், “என்ன விஷயம்?” என்று கேட்க, இளவரசிக்குப் பதில் சொல்ல முடியாமல் நா திக்கியது!

மகன் புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் பெண்ணிடம் பழகுவதும், அவள் பின்னே அலைவதும் ராஜேந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தனது திட்டத்திற்கு மாறாக எதுவும் நடந்துவிடக் கூடாது என்று நினைத்தவர், அவளை இங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு, அபிநயாவுக்கும் ஆனந்திற்கும் திருமண ஏற்பாட்டைச் செய்ய நினைத்தார்! அதற்குள்ளாக வீட்டில் என்ன நடந்தது என்று தெரியாததால்தான் இப்படிக் கேட்கிறார்.

‘யாரோ ஒருத்தியை மணந்து, எங்கேயோ ஒரு இடத்திற்கு எதற்குப் போக வேண்டும்? அதைவிடப் பிரதீபாவை மணந்தால், இந்தப் பிரச்சனைகள் எதுவுமே இல்லாமல் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாக இருக்கலாம்; நாத்தனார் பற்றிய கவலை இல்லாமல் இதே வீட்டில் சந்தோஷமாக வாழலாம்’ என்று நினைத்தாள் இளவரசி. அப்பாவின் ஆதரவும், கணவரின் அன்பும் இருக்கையில் அவள் வேறு எதையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. ஆனால், இப்போது பெற்ற மகன் விஷயத்தில் அப்படி இருக்க முடியவில்லை! அவன் முகத்தில் தெரியும் சந்தோஷம் அவளுக்கு நிம்மதி அளித்தாலும், தன் கணவனுக்குத் தெரிந்தால் விபரீதமாக ஏதேனும் நடந்துவிடுமோ என்ற பயமே அவளை இயல்பாக இருக்க விடவில்லை.

​“ஆமாம்… அந்தப் பூபாலனோட உறவினர் பெண் எப்போ இந்த வீட்டை விட்டுக் கிளம்புறாளாம்?”

​இளவரசி திகைத்து நோக்க, “வந்த வேலையை முடிச்சுட்டா கிளம்புவது இயல்புதானே! நீ ஏன் முழிக்கிறே?” என்று அதட்டினார்.

இல்லை என்று அவள் தலையசைக்க, “உன் அண்ணன் மகளுக்குப் படிப்பு முடியப்போகுது இல்லையா? கல்யாண விஷயமா ஏதாவது சொன்னானா?” என்று அடுத்த கேள்வியை வீச, பதில் கூற முடியாமல் அரண்டு போனாள் இளவரசி!

​“என்னடி? கேட்கக் கேட்கப் பதில் சொல்லாம இருக்க? உங்க அண்ணன் என்ன சொன்னான்? அந்தப் பொண்ணு எப்ப கிளம்புது?”

​“தெ… தெரியாது! நான் அதை எப்படி அவகிட்ட போய்க் கேட்க முடியும்? அபி இன்னும் படிக்கணும்னு சதா சொல்லிட்டு இருக்கா. அவளையும் என்னால…”

​“ஓ… உனக்கு எதுவும் தெரியாது! உன் அண்ணனிடமும் கேட்கல! ம்ம்…” என்றவர், “அந்தப் பொண்ணைப் பார்த்தா எனக்குச் சரியா படல. உன் மகன் நடந்துக்கும் முறையும் எனக்குப் பிடிக்கல. பெத்த தகப்பன்னு ஒரு மரியாதையும் தராம நடந்துக்கிறான்! நாளைக்கு உன் பெரிய அண்ணனை மாதிரி நடந்து என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுடாம… பிறகு உன்னையும் சேர்த்து விடமாட்டேன்!” என்று எச்சரித்தார்.

​தொண்டையில் பயப்பந்து சுழல, பேச்சு வராமல் அவள் தடுமாற, “நாளைக்கே இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன்!” என்றார் ராஜேந்திரன். அதோடு மட்டுமல்லாமல், அந்த வீட்டில் உள்ள தனக்கு வேண்டப்பட்ட நபர்கள் மூலம் அங்கு நடந்தவற்றை விசாரித்துத் தெரிந்துகொண்டு, இதற்கு மேலும் தாமதித்தால் மகன் கை மீறிப் போய்விட வாய்ப்புள்ளது என்று கருதினார்.

அன்புச்செல்வனைப் போல் இவனும் தவறாக நடந்துவிடக் கூடாது என்பதற்காக, மகனைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், ஆனந்தியை விலக்கி நிறுத்தவும், மகனது திருமணம் மட்டுமே சரியான வழியாக இருக்கும் என்று நினைத்தார். உடனே தனக்கு வேண்டப்பட்ட ஜோதிடரைக் கைப்பேசியில் அழைத்து, மகனது திருமணத்தை நடத்த ஒரு நல்ல நாள் குறித்து அனுப்புமாறு சொன்னார். அவரும் சற்று நேரத்தில் அனுப்பிவிட, வீட்டில் உள்ள யாரிடமும் கலந்தாலோசிக்காமல் அடுத்த நிமிடமே அந்த முடிவிற்கு வந்தார்!

காலை நேரம் உணவை முடித்துவிட்டு அனைவரும் அமர்ந்து பேசியவாறு இருக்க, மூத்த மைத்துனனின் அருகில் சென்று அமர்ந்தவர், காகிதத்தால் பொதிந்து வைத்திருந்ததை நீட்டி, “இது சரியா இருக்கா பாரு, ஏதாவது மாத்தணும் என்றாலும் குறிச்சுக் கொடு,” என்றார்.

​அவர் என்ன ஏதென்று தெரியாமல் அதைப் பிரித்துப் பார்த்து அதிர்ந்து போக… ஆனந்த் என்ன நடக்கிறது என்று புரியாமல் அவர்களைக் கூர்மையாக நோக்கினான்!

​“உன் மகள் படிப்பை முடிக்கப் போறா; என் மகனும் வேலையைக் காரணமாக்கிச் சதா நேரமும் சென்னையிலேயே முடங்கிக் கிடக்கிறான். அவங்களுக்கு ஏற்கனவே நம்ம எல்லார் முன்னாடியும் கல்யாணத்துக்குப் பேசி முடிச்சதுதான். அவன் மறுபடியும் இங்கிருந்து கிளம்பிட்டாத் திரும்பி வர ரொம்ப நாளாகலாம். அதான் இந்த இடைப்பட்ட நாட்களிலேயே கல்யாணத்தை நடத்திடலாம்னு யோசிச்சு நம்ம குடும்ப ஜோதிடரிடம் பேசினேன். அவரும் இந்த மாசத்துல பண்ணலன்னா, இன்னும் ஒரு மாசத்துக்கு நல்ல முகூர்த்த நாள் இல்லைன்னு சொல்லிட்டார். அதனால அவர் குறிச்சுத் தந்ததை நமக்கு வேண்டிய பத்திரிகை அச்சடிக்கும் இடத்துக்கு அனுப்பிக் கொடுத்து, சில மாதிரிகளை அனுப்பித் தரச் சொன்னேன். அது தயாராகிடுச்சு போல… அனுப்பி வச்சுருக்காங்க. நீயும், உன் தம்பியும், மனைவிகளும் இதைப் பார்த்துட்டுச் சொல்லுங்க.”

செய்வது முரட்டுத்தனமான நடவடிக்கையாக இருந்தாலும், அனைவர் முன்பும் இத்தனை சாந்தமாகச் சொல்லும்போது அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேச அங்கு இருப்பவர்களால் முடியவில்லை.

​“நேரத்துக்குச் சாப்பிடாம மெலிஞ்சு ஐயமா போயிருக்கான் ஆனந்த். அவனுக்குக் காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டா நிம்மதியா இருக்கலாம். அபிநயா படிக்க ஆசைப்பட்டாலும் அப்புறமா படிக்கட்டும், நான் என்ன வேணாம்னா சொல்லப் போறேன்?”

​மறுப்புத் தெரிவிக்க முடியாத அளவிற்கு அவரது வார்த்தைகள் இருக்க, இதுவரை அத்தானை எதிர்த்து ஒரு வார்த்தை பேசியிராத சிவசந்திரன், அடுத்த கணமே தலையசைத்தார்!

வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியுடன் நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க, சிறு பிள்ளைகள் மாமாவின் அதிகாரத் தொனியில் பயந்துபோய் அத்தானை அணைத்துக்கொண்டார்கள். மூவரையும் சமாதானப்படுத்திவிட்டு மாமாவின் கையிலிருந்த திருமணப் பத்திரிகையை வாங்கிப் புரட்டினான் ஆனந்த்.

இன்னும் பத்து நாட்களே இருப்பதைக் கண்டவன், ‘தங்களது விஷயம் அப்பாவுக்குத் தெரிந்துவிட்டது; அதனால்தான் இப்படி அவசரப்படுகிறார்’ என்பதைப் புரிந்து கொண்டான். எப்படி தனது சாதூர்யமான பேச்சினால், தாத்தாவையும் மாமன்மார்களையும் இத்தனை வருடங்களாகத் தனது கட்டுக்குள் வைத்திருந்தாரோ, அவரைப்போலவே நடந்து அவர் குறித்த அதே முகூர்த்த தேதியில் தனது திருமணத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தான் ஆனந்த்! அதனால் அவனும் முகத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டு வராமல் இயல்பாக இருந்து கொண்டான். ஆனால், பாவம்… வீட்டில் உள்ளவர்கள் தான் அவர்களைப் பார்த்து குழம்பிப் போய்விட்டார்கள்.

மகன் தனக்கு அடிபணிந்து நிற்பதாக எண்ணிய ராஜேந்திரன், “உன்கிட்ட பேசணும்; ரூமுக்கு வந்துட்டுப் போ!” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். மற்றவர்களைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு, அவர் பின்னாடியே சென்றான் ஆனந்த்.

“நீ நடந்துக்கும் முறை கொஞ்சமும் சரியா படலை! உன் வாழ்க்கை நல்ல முறையில் அமையணும்னு நான் என்னவெல்லாம் செய்றேன். நீயானால் தேவையில்லாத வேலையில் ஈடுபட்டு என் நிம்மதியைக் கெடுக்கப் பார்க்குறே?”

அவன் புரியாமல் பார்த்ததும், “யார்கிட்ட கேட்டுட்டு, கிடப்பில் போட்டிருந்த தொழிற்சாலையை மறுபடியும் புனரமைக்கும் வேலையில் இறங்கின? அந்தப் பக்கமே போகக் கூடாதுன்னு உங்க தாத்தா சொல்லியிருக்கார்! நமக்கு இருக்கும் சொத்து வசதியைப் பார்த்துக்கவே நேரம் போதாது; இதுல எதுக்குக் கண்ட விஷயத்திலும் தலையிடுற?” என்று சத்தமிட்டார்.

ஆனந்த் மிகவும் இயல்பாக, “அது ஒண்ணும் இல்லை அப்பா! லட்சக்கணக்கான பணத்தைப் போட்டு அன்னைக்கு உருவாக்கின கட்டிடம் அப்படியே வீணாய்ப் போகாமச் சரி பண்ணி, சென்னையில இருக்கிற பிசினஸையெல்லாம் இங்கேயே மாத்திட்டு, உங்க ஆசைப்படி நம்ம வீட்டிலேயே இருக்கலாம்னுதான் இதெல்லாம் ஏற்பாடு பண்ணினேன்!” என்று சொல்ல…

“இங்கிருக்கிறதைப் பார்க்கவே ஆள் இல்லை; இதுல எதுக்குப் புதுசா அதெல்லாம் செய்யணும்? அந்த இடத்தை மொத்தமா இடிச்சுத் தள்ளிட்டு, வேற ஏதாவது பண்ணலாம்னு பார்க்கிறேன்!” என்று ராஜேந்திரன் கோபமாகப் பேச, ஆனந்த் தன் மனக்கொதிப்பை வெளிக்காட்டாமல் இருக்கப் பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!