Skip to content
Post Views: 4,979
பொன்னி பேசிவிட்டுச் சென்றதை முழுதாய் கிரகித்தவள் “அது மாதிரி எதுவும் செய்யட்டும் அப்புறம் இருக்கு இந்த குடும்பத்துக்கு”என்று வாய் விட்டே சொல்லியவள் ஆழியன் வேலை முடித்து வரும் போது உறங்கி இருந்தாள்.
‘கும்பகர்ணி கொஞ்ச நேரம் கூட இப்போ எல்லாம் வெய்ட் பண்ண மாட்டேங்குறா’என்று எண்ணிக் கொண்டவன் அவளை எழுப்பியே விட்டான்.
Advertisement
“என்னங்க”என்றவளை ஆழ்ந்து பார்த்தவன் “உனக்கு உடம்பு ஓகேவா”என்று கேட்டதில் பீதியடைந்தாள்.
இப்போ நல்லா இருக்குன்னு சொல்லணுமா கூடாதா… சொன்னதும் இவர் கூப்பிட்டா என்று யோசித்தபடியே அமைதி காக்க
Advertisement
Advertisement
“சரி தூங்கு”என்று எழுந்து கொண்டான்.
Advertisement
“ஓகே தான் ஆனா”என்று இழுக்கவும் தலைசாய்த்து புன்னகைத்தவன் “அதுக்காக கேட்கலைடி”என்று சொல்லி அவளின் முகத்துக்கு அருகில் சென்று “இதை சொல்லவே தயக்கமா உனக்கு.”என்றபடியே நெற்றியில் இதழ் பதித்தான். கண்களை மூடிக் கொண்டவளுக்கு பொன்னி பேசியதெல்லாம் பின் சென்றிருந்தது.
“ஒரு வாரம் பெங்களூர் போறேன். பிள்ளைங்க பத்திரம்”என்று சொல்ல சற்று மனம் சுணங்கியவள்,”என்ன திடீர்னு?”என்றாள்.
“நகைப் பெட்டி செஞ்சு தந்தேனே அந்த கஸ்டமர் தான் அங்கே ஒரு வொர்க் ஷாப் நடக்குது கலந்துக்கறீங்களானு கேட்டாரு அதான் பார்க்கலாம் னு போறேன்”என்றான்.
“ஹ்ம்ம்”என்றவள்,வேறு எதுவும் பேசுவானோ என்று பார்த்திருக்க, அவனோ “டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்”என்று தள்ளி படுத்துக் கொண்டான்.
இருவருக்கும் இடையிலான மௌனம் கலைவதற்கான அறிகுறியற்று இருக்க குழந்தை சிணுங்கி மௌனத்தை கலைத்தாள்.
நீரதி எழும் முன்பே பிள்ளையை தூக்கி இருந்தான் ஆழியன்.
“ஈரம் பண்ணிட்டீங்களா ஸ்வீட்டிமா “என்று மகளைத் தூக்கவும் நீரதி எழப் போக “தூங்குடி ரதி”என்றான் பிள்ளைக்கு துணி மாற்றியபடி.
மென் சிரிப்புடன் கண்ணை மூடியவள் அவன் வந்து படுக்கும் அரவம் கேட்டதில் அவன் பக்கம் திரும்பி பார்க்க பெரியவள் உறங்கி விட்டாளா என்று எட்டிப் பார்த்து விட்டு கனத்த மௌனம் கலையாத வண்ணம் மையிருட்டில் ஒரு மையல் பார்வையும் அதைத் தொடர்ந்து வந்த இதழணைத்த சத்தமும் சத்தமில்லா ஒரு கூடல் நடந்ததை பறைசாற்றியது.
“என்னடி ரதி”என்றவனும் “ஹ்ம்ம்”என்றவளும் தனி உலகில் இருந்தனர்.
**********
சுபாஷ் ஊருக்குச் சென்றிருந்தான். அவன் கூறி விட்டு சென்ற அறிவுரையும் தரங்கினி அம்மாவின் முணுமுணுப்புக்களும் தரங்கினியை அமுதனிடம் பேச வைத்திருந்தது.
“இந்தா பாருங்க மாமா. அண்ணன் இனிமே இங்க வரவே இல்லை னு சொல்லிட்டு போயிட்டான். அவனுக்கு அவ்வளவு வருத்தம்”என்று துவங்க
“ப்ப்ச் உங்கண்ணன் செஞ்சது மட்டும் சரியா?”என்று கடுகடுத்தவனை அவளைத் தொடுவதற்கு தடை போட்டாள்.
“ஏய் என்னடி”
“தொடாதீங்க நீங்க”என்று வெடுக்கென்று எழுந்து கொள்ள நிலஞ்சனா சிணுங்கியபடி திரும்பி படுத்தாள்.
“ஏன்டி கத்துற”என்றவன் பிள்ளையைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்து விட்டு “இப்போ உன் பிரச்சினை தான் என்ன”என்றான் சலிப்பாக.
“எதுக்கு எடுத்தாலும் உங்க தம்பிங்க ரெண்டு பேரும் அண்ணனை குத்தம் சொல்றது எனக்கு சுத்தமா பிடிக்கலை மாமா. அவன் என்ன வேணும் னா அப்படி செஞ்சான். எங்க இருந்தாலும் நியாயமா வேலை பார்க்க நினைச்சான் அதனால தான் செல்வம் பேருக்கு வந்த ஏடிஎம் கார்டை வீட்டில் கொண்டு வந்து காட்டினான். ஏன் செல்வம் செஞ்சது தப்பு இல்லையா… ஏடிஎம் கார்டுக்கு அட்ரஸ் ஏன் மில்லோடது தந்தாராம். அவ்வளவு நேர்மையான ஆளு வீட்டு அட்ரஸ் தர வேண்டியது தானே”என்று தன் அண்ணன் செய்ததற்கு நியாயம் பேசினாள் அவள்.
“ப்ப்ச் சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோனு பேசாத. போஸ்ட் மேன் நமக்கு தெரிஞ்சவர் அந்த பக்கம் வேலையா போனதால அவனுக்கு வந்த போஸ்டை அங்கேயே தந்துட்டு போக நினைச்சு தந்திருக்கிறார். எவனாவது வேலை செய்ற இடத்தோட அட்ரஸை பேங்க் பாஸ்புக்கில் தருவானா…”என்று அமுதனும் திருப்பி கேட்க
“சரி அதை விடுங்க இந்த தீபு எது சொன்னாலும் கேட்டுக்கிறவன் கல்யாணம் ஆனதும் ஆச்சு உச்சாணிக் கொம்பில் ஏறிட்ட மாதிரி எதிர்த்து பேசுறான் சண்டைக்கு நிக்கிறான்”என்று அடுத்த பஞ்சாயத்தை கூட்ட
“ஏய் அந்த இடத்தில் உங்க அண்ணனை நாங்க பேசி இருந்தாலும் அவனும் இப்படி தான் கொந்தளிச்சிருப்பான். சும்மா எல்லாத்தையும் நொட்டை சொல்லிக்கிட்டு”என்று கடுப்பாய் படுத்து விட்டான்.
“இந்த நீரா கூட”என்றதில் கோபமாய் எழுந்தவன் “தூங்கவா இல்லை விடிய விடிய உன் புலம்பலை கேட்கவா”என்று சத்தமிட்டதில் பேசாமல் படுத்துக் கொண்டாள் தரங்கினி.
அமுதனின் பொறுமையின் எல்லை அவ்வளவு தான் அதற்கு மேல் பேசினால் கடித்து குதறி விடும் அளவிற்கு பேசுவான். தேவையா அது. அவன் அப்படி இருக்கையிலே தான் இந்த ஆட்டம் ஆடுகிறாள் இன்னும் இலகுவாக இருந்தான் எனில் அவன் நிலை??
**********
மறுநாள் ஆழியன் பெங்களூர் கிளம்பி இருக்க மில்லை அமுதன் பார்த்துக் கொள்வதற்காக சென்றான்.
“இப்படியே தொழிலை பார்க்காம இதெல்லாம் என்ன செல்வம் ஊர் ஊரா சுத்தற வேலை. இந்த ஒரு தடவை தான் இதுக்கு மேல கண்ட இடத்துக்கும் அலைஞ்சுட்டு இருக்காத. ஏற்கனவே ஆர்டர் எல்லாம் பெண்டிங்கில் நிற்குது”என்று கடுகடுத்தார் தேசிகன்.
வழக்கம் போல ஒரு அமைதியான பார்வை அவனிடத்தில்.
அவனை இறுக்கிப் பிடித்தாலும் பிரச்சினை பிடிக்காவிட்டாலும் பிரச்சினை என்று யோசித்த தேசிகன் “போயிட்டு அங்க முடிஞ்சதும் கிளம்பப் பாரு”என்றார். ஒரு மௌனமான தலையாட்டுதல் அவ்வளவு தான். மனைவியை ஒரு பார்வை அதோடு கிளம்பி இருக்க தங்கள் வேலையில் மூழ்கிப் போயினர் அவன் குடும்பம்.
ஆழியன் வரும் நாளும் வந்திருக்க கிளம்பி வந்து கொண்டிருக்கிறேன் என தகவல் சொல்லிய அதே நேரத்தில் நிலா தன் பையனோடு வந்தாள்.
“நிலாக்குட்டி”வழக்கமாய் கொண்டாடுவது போல கவிநிலாவின் வரவை ஆர்பாட்டமாய் வரவேற்றனர் அவளின் பெற்றோர்.
“வா நிலா”என்ற நீரதி தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“பாப்பாவுக்கு ட்ரஸ் எடுத்து வந்தேன்”என்று நீரதியிடம் கொடுத்தாள்.
அதனைப் பிரித்து பார்த்தபடி”நல்லா இருக்கு நிலா”என்றவள் “பாப்பாவை குளிக்க வச்சதும் போட்டு விடுறேன்”என்றாள் இயல்பாய்.
சிறிது நேரம் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் உணவருந்தி விட்டு பேச்சைத் தொடர நீரதி அதற்குள் மகளை குளிப்பாட்டி நிலா வாங்கி வந்திருந்த ஆடையை பிள்ளைக்கு அணிவித்து வெளியே தூக்கி வந்தாள்.
“அடடே பேத்தி புதுத்துணி போட்டாச்சா”என்றபடி பொன்னி ஸ்வாதிகாவை வாங்கிக் கொண்டார்.
“துணி நல்லா நைஸா இருக்கு நிலாக்குட்டி”என்று தடவி பார்த்து சொல்ல
“சும்மாவா அவ மருமகளுக்கு தேடிப் புடிச்சு பார்த்து பார்த்துல்ல வாங்கி இருப்பா”என்று வளர்மதி பெருமை பேச நிலாவின் முகத்தில் அத்தனை பெருமிதம்.
உறவு முறை வைத்து பேசுகிறார்கள் என்று எண்ணிக் கொண்ட நீரதி பெரிதாக அதனை எடுத்துக் கொள்ளவில்லை. நிலாவின் மகன் “நானுக்கு பாப்பா”என்று கை நீட்டினான்.
“உனக்கு பாப்பா தூக்கணுமா”என்று அவனைக் கொஞ்சியவள் இயல்பாய் “இங்க வந்து உட்காரு அத்தை மடியில் வச்சு விடறேன்”என்றவள் அவனை அமர்த்தி பிள்ளையை அவன் மடியில் வைத்துக் காட்ட பிள்ளையோ கன்னம் கிள்ளி கொஞ்சி முத்தமிட்டான்.அதனைப் புன்சிரிப்புடன் அவள் பார்த்துக் கொண்டிருக்க வளர்மதியோ “உன் பொண்டாட்டி பாரு சமத்தா இருக்கா பாரு என்னடா நவி”என்று கெக்களிப்பாய் சிரிக்க
“அத்தை”என்று குரலை உயர்த்தி விட்டாள் நீரதி.
திடுக்கிட்டு மூவரும் பார்க்க நவ்தீப்போ “பொந்தாத்தி”என்று கைகொட்டி சிரித்தான்.
“அவன் குழந்தை அவன் கிட்ட போய் என்ன பேசறீங்க. அவன் பாருங்க அர்த்தம் தெரியாம சொல்றதை”என்று சொல்லி விட
“ஏன் சொன்னா என்ன அவனுக்கு இல்லாத உரிமையா நீ அப்படியே கூப்பிடு ராசா”என்று அவனை உற்சாகப்படுத்த நீரதி பிள்ளையை சட்டென தூக்கிக் கொண்டாள்.
நிலாவின் முகம் சுருங்கி “எதுக்கு இப்படி வெடுக்குனு புடுங்குறீங்க. இப்போ என்ன சொல்லிட்டாங்க அம்மா. அவனுக்கு தானே முதல் உரிமை.ஏன் அது என் அண்ணன் மக தானே எங்களுக்கு இல்லாத உரிமை இங்கே யாருக்கு இருக்கு”என்று இப்போதே ஸ்வாதிகாவை மகனுக்கு மனைவியாக்கி கொண்டு செல்லும் முனைப்புடன் படபடத்தாள் நிலா.
“என்ன பேசற நிலா ரெண்டு பேரும் குழந்தைங்க அவங்களை பத்தி…ப்ப்ச் என் பொண்ணு வளர்ந்து பெரியவளாகி முடிவெடுக்க வேண்டிய விஷயத்தை இப்போ பிறந்து நாலு மாசம் ஆகலை அதுக்குள்ள பேசறீங்க அதுவும் சின்ன பையன் கிட்ட என்ன பேச்சு இது”மறைக்கப் பாடுபட்டாலும் முடியாமல் முகத்தை சுளித்தே விட்டாள் நீரதி.
“பெரியவளாகியா…”என்று நக்கல் சிரிப்பு சிரித்தவள் “எதுக்கு பெரியவள் ஆகி யாரையாவது காதலிக்கிறேன்னு வந்து நின்னு எங்க குடும்ப கௌரவத்தை அசிங்கப்படுத்தவா? ஏன் வீட்டில் நடந்த ஒரு காதல் கல்யாணம் பத்தாதா? அதனால எங்க குடும்ப மானம் போய் ஏதோ எங்க அண்ணன் ஆசைப்பட்டானேன்னு உங்களை கொண்டு வந்து வச்சாங்க.உங்களால நான் பாதிக்கப்பட்டது எல்லாம் பத்தாதா…இன்னும் இந்த குடும்பம் அசிங்கப்படணுமா?”என்றவள்” பெரியவள் ஆனதும் எடுக்கிற முடிவா எப்படி உங்க வீட்டுல கட்டுனா எங்கண்ணனை தான் கட்டுவேன் னு நின்னு கல்யாணம் பண்ணி வந்தீங்களே அது மாதிரி இவளும் போகணுமா நல்ல வேளை எங்க வீட்டில் அண்ணனுக்காக சம்மதிச்சாங்க. இதுவே வேற எவனையாச்சும் நீங்க லவ் பண்ணி இருந்தா” எனும் போதே “நிலா நீ அதிகம் பேசற வாயை மூடிடு”என்று பல்லைக் கடித்தாள் நீரதி.
“என்னத்த அதிகம் பேசுறா உண்மையத்தானே சொல்றா… என் புள்ள ஆசைப்பட்டானேன்னு தான் ஒண்ணுக்குமத்த உன்னை கட்டி வைக்க சம்மதிச்சேன் இல்லாட்டா நீயெல்லாம் என் கால் தூசுக்கு ஆவியா… அப்பவே சொன்னேன் என் அண்ணன் மக இருக்காடானு கேட்டானா அவன்… என்னத்த பண்ணி மயக்குனியோ”என்று வளர்மதி இகழ்ச்சியாய் பேச நீரதிக்கு உள்ளே பொங்கிய ஆத்திரம் தலைதூக்க வாயைத் திறக்கும் முன் நிலா அடுத்ததாய் வாய்க்கு வந்ததை பேசி விட்டாள்.
” ஹ்ம்ம் வெள்ளைத்தோலு தான் காரணம் வேற என்ன இருக்கும். ஏன் மா இதை நான் இவங்க கிட்ட கேட்டதே தப்பு. ஏதோ என் அண்ணன் பொண்ணு னு ஆசையில் சொல்லிட்டேன் என் வீட்டு மருமகளா கூட்டிட்டு போகணும்னு. இப்ப தான் தோணுது அது இவங்களுக்கும் புள்ளை தானே அதான் பெரியவளாகி இவங்களை மாதிரி காதலிச்சா என்ன பண்றதுனு நினைக்கிறாங்க போல .அதுசரி உங்க புத்தி தான் உங்க மகளுக்கு வரும்னு எனக்கும் தோணல. எவனை இழுத்துக்கிட்டு “என்றதில் நிலா என்ற சத்தத்தோடு அவளைப் பேயறை அறைந்திருந்தாள் நீரதி.
அவள் அறையவும் ஆழியன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது.
அதிர்ந்த ஆழியன் “நீரதி”என்று கத்தியபடி வர பிள்ளையோடு திடுக்கிட்டு நின்றாள் நீரதி.
“எவ்வளவு தைரியம் இருந்தா என் தங்கச்சியை அடிச்சு இருப்ப?”என்றதில் அதிர்ந்தாலும் “முதல்ல அவ என்ன பேசினான்னு கேளுங்க”என்றாள் ஆத்திரமாக.
“அவ என்னவும் சொல்லி இருக்கட்டும். வீட்டுக்கு வந்தவளை அடிப்பியா நீ?”என்று உலுக்க
“நல்லா கேளுடா. என்னவோ உரிமையில் ஸ்வாதியை என் மருமகள் னு சொல்லி என் வீட்டுக்கு தான் மருமகள் ஆக்குவேன்னு ஆசையில் சொல்லிட்டா அதுக்கு நீ எப்படி சொல்லலாம் உனக்கு என்ன உரிமை இருக்குன்னு கேட்டு என் பிள்ளையை அந்த அடி அடிக்கிறா”என்று வளர்மதி அப்படியே மாற்றிப் பேச
“அத்தை இப்படி பொய் பேசாதீங்க. சின்ன பையன் கிட்ட போய் குழந்தையை பொண்டாட்டி னு சொல்லவும் தானே சொல்ல வேண்டாம்னு உங்க கிட்ட சொன்னேன் ஏன் இப்படி மாத்தி பேசறீங்க”என்று அழுத்தமாய் கேட்க, அதில் வளர்மதி தடுமாறினாலும் “ஏதோ ஆசையில் சொல்லிட்டேன். சின்னப் பையன் அவனுக்கு அது புரியவா போகுது. நீதான் பெரிய இதாட்டம் மல்லுக்கு நிக்கிற”என்று நொடிக்க ஆழியனோ “என் தங்கச்சி கிட்ட மன்னிப்பு கேளு ரதி”என்றான்.
“கேட்க முடியாது”என்று திடமாய் நின்றாள் நீரதி.
…… தொடரும்
error: Content is protected !!