Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 29

அத்தியாயம் : 29

திருமணப் பத்திரிகை வீட்டில் உள்ளவர்களிடம் காண்பிக்கப்பட்டு, உறவினர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது! ஆனந்தவல்லி பத்திரிகையைக் கண்டதும் பெரும் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். அவரிடம் நடந்ததை ஆனந்த் சொல்ல, “பெத்த பிள்ளையின் வாழ்க்கையை விட வீம்பும் பிடிவாதமும்தான் பெருசாப் போயிடுச்சா? அன்னைக்கு என் மகன் விஷயத்துல செஞ்ச அதே தப்பத்தான் இப்பவும் செய்ய நினைக்கிறான். இதனால பாதிக்கப்படப் போறது அவனோட வாரிசுதான்னு கூடவா இவனுக்குப் புரியல? ஆனா, என்னால நடந்த எதையும் மறக்க முடியாது!

என் மகனோட தலையெழுத்தைத்தான் மாத்தி எழுத முடியல… அதுக்காகப் பேரனோட வாழ்க்கையும் அழியறதை என்னால வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க முடியாது. என் மகளோட வாழ்க்கை பாதிப்படைஞ்சுடக் கூடாதுன்னுதான் இத்தனை நாளும் வாயை மூடிக்கிட்டு இருந்தேன். இனியும் நான் அப்படியே இருந்தா ராஜேந்திரனின் திமிர் கட்டுக்கடங்காம போயிடும். எப்படியாவது இவனோட அடாவடித்தனத்துக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்!” என்று தீர்மானித்தார்.

​ஆனந்த் பாட்டியின் முகச்சிவப்பு, வேகமாக வெளியேறி செல்லும் மூச்சைக் கண்டு அவரது மனதைப் புரிந்தது போல சமாதானப்படுத்திவிட்டு, சிவச்சந்திரன் மற்றும் அறிவழகன் இருவரிடமும் தனது திட்டம் குறித்துத் தெரியப்படுத்தினான். அப்பாவுக்கு மட்டுமல்ல, வீட்டில் உள்ள வேறு யாருக்கும் சந்தேகம் வராதவாறு நடந்து கொள்ளுமாறு வலியுறுத்தினான். பூபாலனிடம் சொல்லி ஆனந்தி வீட்டாரை இங்கு வரவழைக்க நினைத்தான்.



Advertisement

​கபிலனிடம் பேசிவிட்டு அவரைத் தொடர்பு கொண்டு இங்கு நடப்பவற்றைத் தெரியப்படுத்தினான். அவரும் ஊரில் நடக்கும் அனைத்தையும் அவள் மூலமாக அறிந்திருந்தாலும், இதற்கு மேலும் ஆனந்தி யார் எனும் ரகசியத்தை மறைத்து வைப்பது சரியாக இருக்காது என்பதால் அவளிடம் பேச முயன்றார்.

என்னதான் இயல்பாக இருப்பது போல் காட்டிக்கொண்டாலும், அனைவர் மனதிலும் ஒரு பயப்பந்து சுழன்றது! அபிநயா நிம்மதி இழந்து தவித்தாள். ஆனந்திக்கோ மாமாவின் நடவடிக்கைகள் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தின. ‘அன்றொரு நாள் அடக்குமுறையைக் கையாண்டார் என்றால், இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவர் ஏன் இன்னும் மிருகமாகவே நடந்து கொள்கிறார்? வீட்டில் உள்ளவர்கள் அவருக்குத் தரும் மரியாதைக்குக் கொஞ்சமும் தகுதியில்லாமல் இருக்கிறாரே!’ என்று மனதிற்குள் கொதித்தாள்.

அவளுக்கு விடுமுறை முடிந்து வெளிநாட்டிற்குச் செல்ல வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருந்தது. திருமண நாளும் அதே நேரத்தில் வைத்திருப்பதால் தனது வழக்கறிஞர், ஆடிட்டர், செயலாளர் அனைவரையும் கைப்பேசியில் அழைத்து, அங்குள்ள நிலவரம் பற்றிக் கேட்டறிந்தாள். ‘தன்னுடைய விசாவின் காலத்தை நீட்டிக்க முடியுமா? இன்னும் ஒரு பதினைந்து நாட்களுக்குப் பிறகு அங்கு வருவதற்கான வழிவகை செய்ய முடியுமா?’ என்று விசாரித்து, தம்பியின் உடல்நிலை குறித்துப் பேசினாள்.

Advertisement

​பூபாலனிடமும் நடந்ததைத் தெரிவித்து, அவரையும் அப்பா ஸ்தானத்திலிருந்து தனது திருமணத்தை நடத்தித் தருமாறு அழைத்தாள். பூபாலன் கண்டிப்பாக வருவதாக வாக்களித்து, அவளைக் கவனமாக இருக்குமாறு எச்சரித்தார்!

Advertisement

நாட்கள் கரைந்தன. ஆனந்த், அபிநயாவின் அறைக்குச் சென்று அவளிடம் நடக்கப் போவதைத் தெளிவுபடுத்தி, ‘கவலைப்பட வேண்டாம்’ என்று ஆறுதல் சொன்னான். அவளோ சதா செல்வாவின் ஞாபகத்திலேயே மூழ்கிக் கிடந்தாள். அவன் கால் விரலில் கட்டி வைத்திருந்த பஞ்சையும், அவன் தொட்டுச் சிகிச்சை அளித்த தன் காலையும் பார்த்துப் பார்த்து ஏக்கத்தில் இளைத்துப் போனாள்! அவள் முகத்தில் காணப்பட்ட அதிகப்படியான சோகம் பயத்தால் வந்தது என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், அது காதல் ஏக்கம் என்பது அவளது கண்கள் நிலைத்திருக்கும் இடத்தைப் பார்த்தே ஆனந்துக்குத் தெரிந்துவிட்டது!

​தங்களுக்குத் தெரியாமல் அவளது வாழ்க்கையில் மறைக்கப்பட்ட அத்தியாயம் இருப்பதை உணர்ந்து கொண்டவன், அதை ஆனந்தியின் மூலமாகத் தெரிந்து கொள்ள முயன்றான். அவள் யாரிடமும் சொல்லாமல் ஏக்கத்துடன் இருப்பதிலேயே, ‘வெளியே சொன்னாலும் பலன் இருக்காது; அப்பா ராஜேந்திரன் அறிந்தால் மீண்டும் ஒரு விபரீதம் நடந்து, இரண்டு ஊர்களுக்கு இடையில் உள்ள பிரச்சனை இன்னும் பெரியதாகிவிடும்’ என்று அஞ்சுவது அவனுக்குப் புரிந்தது.

அதற்காக இப்படியே பயந்து பயந்து நடந்தால் எப்போது இந்த ஊர் மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும்? முதலில் செல்வாவிடம் பேசி அவன் மனதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்னர், எந்தக் குடும்பத்தில் உள்ள பெண்ணை மாமா விரும்பினார் என்பதற்காக அத்தனை பிரச்சனைகளை உருவாக்கி அவர்கள் குடும்பத்தை அழித்தார்களோ, அதே குடும்பத்தில் பிறந்த செல்வாவுக்கும் அபிநயாவிற்கும் அவர் கண் முன்பே திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று தீர்மானித்தான்! அதனால், ஆனந்தியிடம் விஷயத்தைத் தெரிவித்து, செல்வாவைச் சந்திக்கச் சென்றான் ஆனந்த்.

Advertisement

​வீட்டில் எல்லாமே சுமூகமாகச் செல்வது போலத் தோன்றினாலும், மகன் தனக்குத் தெரியாமல் எதையும் செய்து விடக்கூடாது என்பதில் ராஜேந்திரன் குறியாக இருந்தார். கடைசி நேரத்தில் அன்புச்செல்வனைப் போல ஆனந்தியை அழைத்துக் கொண்டு எங்கேயும் சென்று விடக்கூடாது என்பதால், மனைவி இளவரசியை அழைத்து ஆனந்தியை இந்த வீட்டிலிருந்து அப்புறப்படுத்தச் சொன்னார்.

​இளவரசி அதற்குத் தயங்கி மறுப்புத் தெரிவிக்க, “அபிநயா நமக்கு மருமகளா வரணும். என் தங்கைக்கு ஏற்பட்ட நிலை உன் அண்ணன் மகளுக்கும் வரக் கூடாதுன்னு நினைச்சா, உடனே அவளை இந்த வீட்டை விட்டுப் போகச் சொல்லு!” என்று எச்சரித்தார்.

ராஜேந்திரனின் வார்த்தைகள் இளவரசியை அதிரச் செய்தது. ​அவளுக்கும் அதே பயம் இருந்தாலும், வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரை அவர்களின் விருப்பம் இல்லாமல் வெளியேற்றுவது தர்மமல்ல என்று மறுக்க முயன்றாள். ஆனால், அன்றைய நாளில் நடந்த கசப்பான சம்பவங்களை ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லித் தன் கோபத்தைக் கொட்டிய ராஜேந்திரன், அங்கிருந்து விறுவிறுவெனச் சென்றுவிட்டார். வேறு வழியில்லாமல், கனத்த இதயத்துடன் ஆனந்தியின் அறைக்குச் சென்ற இளவரசி, அவளது கையைப் பற்றிக் கொண்டு அழுதாள்.

‘எதற்காக அத்தை தன்னருகில் வந்து இப்படிச் செய்ய வேண்டும்?’ என்று அவள் பார்க்க, “என்னை மன்னிச்சுடுமா! என் கணவரை மீறி நடக்கும் தைரியம் எனக்கு இல்லை. இந்த வீட்டுல உள்ளவர்கள் இதேபோலக் கடைசி வரை ஒற்றுமையா, சந்தோஷமா வாழணும்னு நான் ஆசைப்படுறேன். அபிநயாவை என் மகனுக்குக் கல்யாணம் செய்து வைக்கணும்னு முன்னமே பேசி முடிவு பண்ணிட்டாங்க. அந்தப் பெண் மனசுல என்ன இருக்குன்னு தெரியல… அவள் முகமும் எப்பவும் வாடிப்போய் எதையோ நினைச்சுக் கவலைப்படுற மாதிரியே இருக்குது. நாளைக்கு ஒரு நாள் என் நாத்தனாருக்கு வந்த நிலை அவளுக்கும் வந்துடாம, நீதான் எப்படியாவது அவள் வாழ்க்கையைக் காப்பாத்தணும்!” என்றார்.

​ஆனந்தி சிரித்த முகத்துடன் தலையசைக்க… “அன்னைக்கு ஒரு நாள் நான் செய்த தப்பு, இன்னைக்கு என் பிள்ளையின் வாழ்க்கையையும் பாதிச்சிடக் கூடாதுன்னு பயமா இருக்கு! எங்க அண்ணனுக்கு என் நாத்தனாரைப் பேசி முடிச்சிருந்தாங்க. அது வீட்டுல உள்ள எல்லாருக்கும் தெரிஞ்சு சம்மதம்னு சொல்லியிருந்ததால், அந்தப் பொண்ணும் மனசளவில் நிறைய ஆசையை வளர்த்திருந்தா… எங்க அம்மாவும் அண்ணனும் இது விஷயமா பேசியிருப்பாங்க, அப்பா சம்மதிச்சிருப்பாங்கன்னு நான் நினைச்சிருந்தேன்.

எங்க அண்ணன் வேறொரு பெண்ணை விரும்புவது ஆரம்பத்துல எனக்குத் தெரியாது. அப்புறமா பிரதீபா அவர் மீது வச்சிருந்த அளவுக்கு அதிகமான பாசம் புரிஞ்சதாலும்… ‘வீட்டுல பிரச்சனைகள் வரும் விதமாய் எதுக்காக வேறு சாதிப் பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படணும்? அவளை விடப் பிரதீபா எந்த வகையிலும் தாழ்ந்தவள் இல்லை’னுதான் நினைக்க வச்சது. எங்க அப்பாவோ, ‘அவன் அப்படித்தான் சொல்லுவான்! அதுக்காக வேறு சாதிப் பெண்ணை நம்ம வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்தா… நம்ம சாதிக்காரனே காறித் துப்புவான்! எல்லாம் போகப் போக சரியாகிடும்’னு சொன்னார்.

எனக்கு யாருக்காகவும் பேச முடியாத நிலை. ஆனா அண்ணன் என் வாழ்க்கை, குடும்ப கௌரவம் எதையும் நினைச்சுப் பார்க்காம, தன் வாழ்க்கைதான் பெருசுன்னு சுயநலமா நடந்ததால் நாங்களும் அவரை அப்படியே விட்டுட்டோம். ஒவ்வொரு வீட்டுக்கும் உயிரிழப்பு வந்தால் மட்டும்தான் அதன் மதிப்பும், செய்த தவறுகளும் தெரியுமே தவிர, அதுவரைக்கும் யாரும் எதையும் புரிஞ்சுக்க மாட்டாங்க!

​அபிநயாவும் பாவம்! ஆனந்துக்குத்தான் அவளைக் கல்யாணம் செய்து வைக்கணும்னு இரண்டு வருஷத்துக்கு முன்னமே பேசி வச்சிருக்காங்க. அந்தப் பெண்ணும் ஒரு தப்பான முடிவை எடுத்திடக் கூடாதுன்னு என் உள்ளம் கிடந்து அடிக்குது! மனம் நிம்மதி இழந்து தவிக்குது. உன் காலில் விழுந்து கேட்கிறேன்… நீ இந்த வீட்டை விட்டுப் போயிடு! உன்னால் இந்த வீட்டில் மீண்டும் ஒரு மரணம் நிகழ வேண்டாம்!” என்று சொல்லி, ஆனந்தியின் காலில் விழுந்துவிட்டார் அத்தை இளவரசி.

அத்தையின் நடவடிக்கைகள் சுயநலமாக இருந்தாலும், ஆனந்திக்கு அவரைத் தவறாக நினைக்கத் தோன்றவில்லை. அதேநேரம், அபிநயாவின் வாழ்க்கையைச் சீரமைக்கும் பொறுப்பும் அவளுக்கு இருந்ததால் அத்தையிடம் எதையும் காட்டாமல், ஆனந்த் அவளிடம் சொல்லிச் சென்றபடி தங்கையைக் கவனித்து வந்தாள். அவளிடம் பேசி விஷயத்தை அறிய முயல, அவளோ வாய் திறக்காமல் இருந்தாள். அவளது மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ள முடியாமல் ஆனந்தி அவதிப்பட, அந்த நேரத்தில் தங்கப்பாண்டியிடம் அபிநயா பேசுவதும், அவள் செல்வாவை விரும்புவதும் தெரியவந்தது.

​தங்கையின் கண்ணீருக்கான காரணம் தெரிந்ததும், அதை ஆனந்திடம் தெரியப்படுத்தி அவள் விருப்பம் போல் வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று உறுதியாக நினைத்திருக்க, செல்வாவிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்தவன், ஆனந்தியைக் கையோடு அழைத்துச் சென்று இறுகக் கட்டிக்கொண்டான்.

பேச்சு வராமல் நா தள்ளாட, அவனது உடல் நடுக்கத்துடன் காணப்பட்டது. ‘என்னாயிற்று? எதற்காக இப்படி நடந்து கொள்கிறான்?’ என்று அவள் பார்க்க… அவன் எதுவுமே பேசாமல், அவள் தலையில் நாடியைப் பதித்துத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டிருந்தான்.

​“என்ன ஆயிற்று?”

​எதுவும் சொல்லத் தோன்றாமல் அவன் அவளுக்குள்ளே புதைவது போல் இருக்க… அவனிட்ட முத்தச் சந்தங்கள் காதல் கோட்டையைத் திறந்தன! ‘ஒருவேளை இளவரசி அத்தை தன்னிடம் பேசிய விஷயத்தை அறிந்துவிட்டானா? அல்லது தான் யார் என்ற உண்மை அவனுக்குத் தெரிந்துவிட்டதா?’

​“என்ன ஆனந்த்? ஏன் எதுவுமே பேசாம இருக்கீங்க?”
​முன்பெல்லாம் இவள்தான் ஊமையாக இருந்து அவனைக் கடுப்பேற்றுவாள். இப்போது அவன் அப்படிச் செய்யவும், அவன் முகத்தைத் தன் கைகளில் ஏந்தி இரு கண்களையும் கூர்ந்து நோக்கினாள். அதில் தெரிந்த பரவசமும் நேசமும், அவனுக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்பதை அறிவுறுத்தியது!

இதற்கு மேலும் மறைக்க வேண்டாம் என்று நினைத்து, “நான் உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கல ஆனந்த். விஷயம் வெளியே தெரிஞ்சா பாட்டிக்கு ஆபத்தாகிடும்னு பயந்துதான் சொல்ல முடியாம இருந்தேன். ஆனாலும், கல்யாணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட எப்படியாவது சொல்லிடணும்னு நினைச்சேன். அதுக்குள்ள உங்களுக்குத் தெரிஞ்சிருச்சா?” என்றாள். அவன் ‘ஆமாம்’ என்பது போல் தலையாட்டினான்.

​“அமெரிக்காவை விட்டு இங்கு வரமாட்டேன்னு எவ்வளவோ அடம் பிடிச்சும், பூபாலன் அங்கிள்தான் என்னை இங்குத் திட்டம் போட்டு வரவச்சுட்டாங்க. அங்கிருந்து வந்த நேரமும், மனதில் இருந்த அதிகப்படியான பாதிப்பும்தான் உங்களையும் காயப்படுத்தித் தள்ளி நிறுத்திடுச்சு. செல்வா…” என்றவள், தான் இங்கு வந்ததிலிருந்து நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னாள்.

​“அபிநயா ரொம்ப நல்லவள் ஆனந்த்! அவள் வாழ்க்கை எந்தக் காரணத்தைக் கொண்டும் அழிஞ்சிடக் கூடாது. மாமாவுக்குத் தெரிஞ்சா கண்டிப்பா நடக்க விடமாட்டார்” என்றாள் கவலையுடன்.

​அவன் தலையசைத்தபடியே, தான் செல்வாவைப் பார்க்கச் சென்ற இடத்தில் பேசியது குறித்துச் சொன்னான். ‘அத்தை, மாமாவைத் திருமணத்திற்கு வரவழைக்க வேண்டும்… அவர்களின் முகவரி தர முடியுமா?’ என்று அவன் கேட்டபோதுதான், எல்லா உண்மைகளும் தெரியவந்ததாகக் கூறினான்.

​அவள் மௌனமாக இருக்க, “அத்தை, மாமாவையும் பறிகொடுத்து… தம்பியும் நோயாளியா மாறிய பிறகும், இத்தனை மன உறுதியோடு நீ எப்படித்தான் இருந்தாயோ! என்னால் அப்படி இருக்க முடியுமான்னு தெரியல…” என்று சொல்லும்போதே ஆனந்தின் குரல் கம்மியது.

ஆனந்தைச் சமாதானப்படுத்தியவள், “இந்த வீடு, சொத்து எல்லாத்தையும் நம்ம ரெண்டு சித்தப்பா பசங்களுக்கும் கொடுத்துட்டு, நாம சென்னைக்கே போயிடலாம் ஆனந்த். அவர்கள் வாழ்க்கையிலாவது எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லா இருக்கட்டும்” என்றாள் உறுதியாக.

“அப்போ உனக்கு எதுவும் வேண்டாமா?” என்று அவன் வியப்புடன் கேட்க, ​“எனக்கும் என் தம்பிக்கும் நீங்க இருக்கீங்க. நமக்குத் தேவையானதைச் செய்து தர அப்பாவின் உழைப்பால் உருவான நிறுவனங்கள் இருக்கு. இங்கு இருப்பதை எல்லாம் தம்பிகள் மூவரும், தங்கை அபிநயாவும் எடுத்துக்கட்டும்” என்றாள் ஆனந்தி.

​காற்றுக்குக் கூட இடைவெளி இல்லாமல் அவளை இறுகத் தழுவியவன், “ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவனை மேலும் காயப்படுத்த வேண்டாம்னுதான், மாமாவைப் பற்றிச் சொல்லாம இருந்தியா?” என வினவ, அவள் “ஆமாம்” என்பது போல் தலையாட்டினாள்.

​தொடர்ந்து, அத்தை இளவரசி தன்னிடம் வந்து பேசியது குறித்தும், நடக்கப்போகும் திருமணத்தில் செல்வாவின் குடும்பத்தார் வரும்போது உருவாகப்போகும் சிக்கல்களைப் பற்றியும் ஆலோசித்தாள்.

​தன் அம்மாவின் மீது ஏற்கனவே இருந்த கோபம் இப்போது அவனுக்குள் எரிமலையாய்ப் பெருகியது. ‘பெற்ற பிள்ளையின் மீது சிறிதளவு கூடப் பாசமில்லாமல் இப்படி ஒரு பெற்றோர் இருக்க முடியுமா? உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்!’ என்று மனதிற்குள் கறுவினான் ஆனந்த்.

அப்பா சொல்லாமல் அம்மா வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அவன் உணர்ந்தான். அதனால், ஆனந்தியை இனிமேலும் தனியாக இருக்க விட வேண்டாம் என்று கருதி, அவளது பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், பாட்டியின் மனதைத் திடப்படுத்தி இருவருக்கும் இடையில் பாசத்தை அதிகமாக்கும் எண்ணத்துடனும் அவளை அவர் வசம் ஒப்படைத்தான்.

அன்று முதல் பாட்டி ஆனந்தவல்லியின் அறையிலேயே முழு நேரமும் அவள் இருக்க… ராஜேந்திரனின் கண்ணில் ஆனந்தி படுவது குறைந்து போனது! தன் மனைவி சென்று பேசியதால் அவள் பயந்துவிட்டதாக அவர் நினைத்துக் கொண்டார். ஜவுளி முதல் நகைகள் வரை அனைத்தும் வீட்டிற்கு வந்துவிட, திருமண வேலைகள் வேகம் எடுத்தன!

திருமணத்திற்கு முந்தைய நாள், விருந்தினர் வருகையால் வீடே களைகட்டியது. அபிநயா மணப்பெண் அலங்காரத்தில் அமர வைக்கப்பட்டிருந்தாள். ஏற்கனவே அங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நபர்கள், அங்கு நடப்பதைக் கண்காணித்து ராஜேந்திரனுக்கு விபரங்களைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஆனந்தி பாட்டியின் அறையிலேயே இருக்க… அபிநயா என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத பயத்தில் மூழ்கி இருந்தாள்.

இரவு நேரத்தில் பூபாலனின் குடும்பம் வந்து சேர்ந்தது. அத்தையும் மாமாவையும் கண்டதும் ஓடிச் சென்று அழைத்து வந்த ஆனந்தி, அவர்களிடம் இன்முகமாக பேசிக் கொண்டிருந்தாள்.

கபிலனுக்கு இங்கு வந்து நிறைய நாட்கள் தங்கும் சூழல் இல்லை. ஆனாலும், நாளை காலையில் வந்துவிட்டு மாலையில் செல்வதாகச் சொல்லி இருந்தான். இரு சித்தப்பாவின் வீட்டில் உள்ள உறவினர்கள் வந்து வீட்டை நிறைத்திருந்தனர். ராஜேந்திரனின் அப்பா வழி மற்றும் அம்மா வழி உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

வீட்டு நபர்கள் அனைவரின் இதயத்துடிப்பை ஆயிரம் மடங்கு அதிகரிக்கச் செய்து, மறுநாளும் மெல்ல மெல்லப் புலர்ந்தது!

காலை நேரம்… அபிநயாவின் அறைக்குள் செல்லும்போது, கண்களில் நீர் வழிய எதையோ பறிகொடுத்தது போல் அவள் அமர்ந்திருக்கும் தோற்றம், பார்த்துக் கொண்டிருந்த ஆனந்தியை உலுக்கியது. தங்கையின் தோளில் கைவைத்து இதமாக அழுத்த, “பயமா இருக்கு அக்கா!” என்று அவள் வெடித்து அழுதாள்.

“உன் விருப்பத்தை மீறி எதுவும் நடக்காது. எங்க மேல உனக்கு நம்பிக்கை இல்லையா?”

“இல்லை அக்கா! மாமா எதையும் தப்பாச் செய்திடுவாரோன்னு என்னால நிம்மதியா இருக்க முடியல. நீங்க யாருன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே பெரிய பிரச்சனை வரவும் வாய்ப்பிருக்கு. அத்தான் வேற என்ன செய்யப் போறாங்களோ தெரியல!”

‘இதற்கு மட்டும்தான் உனது கவலையா?’ என்பது போல் ஆனந்தி அவளைப் பார்க்க… தன் மனதில் இருப்பதைச் சொல்வதற்கான சூழ்நிலை இது இல்லை என்று அபிநயா எண்ணிக் கொண்டாள். இரண்டு ஊரும் ஒன்றாகிவிட்டால், அதன் பிறகு தனது திருமணம் நடப்பதற்கு எந்தத் தடையும் வராது என்பதை, கடந்த சில நாட்களாக ஆனந்தியிடம் பேசியதில் அபிநயா தெரிந்து கொண்டிருந்தாள். அதனால், அதைப்பற்றி அவள் இப்போது நினைக்கவில்லை. அக்காவுக்கும் அத்தானுக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது; பாட்டியின் நிலை என்னவாகுமோ என்ற பயம்தான் அவளை வாட்டியது!

நகுலன், ஆனந்தியை ஒட்டிக்கொண்டு திரிவதையே வழக்கமாக வைத்திருந்தான். கண்ணன், அம்மாவின் மடியை விட்டு இறங்காமல் அவளிடமே தஞ்சம் புகுந்தான். சிவா, யாரிடம் சென்று மனதில் இருப்பதைக் கேட்பது என்று தெரியாமல், அப்பா அம்மாவிடம் வீட்டில் நடப்பவை பற்றிச் சொல்லிச் சொல்லி மனம் வருந்தினான்.

இப்படி வீட்டில் உள்ளவர்களின் நிம்மதியைச் சிதைத்து, ஓர் அராஜக வாழ்க்கையை நடத்தி வந்த ராஜேந்திரன்… மகனுக்கும் அபிநயாவிற்கும் திருமணம் நடந்தால்தான் கடைசி வரை அதே வீட்டில் இருந்துகொண்டு அதிகாரம் செலுத்த முடியும்; ஆனந்த் வேறு பெண்ணை மணந்து சென்றால், இத்தனை காலமும் மாமனார் அளித்த மரியாதையும், அனுபவித்து வந்த செல்வாக்கும் பறிபோய்விடும் என்று மனதை இறுக்கமாக வைத்துக்கொண்டு பிடிவாதமாக இருந்தார்.

மணப்பெண் கோலத்தில் அபிநயா அலங்கரிக்கப்பட… அதே ஊரில் உள்ள அவர்களின் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் மளமளவென நடைபெற்றன!

ஆனந்தி பாட்டியின் அருகில் நின்றுகொள்ள… பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்த ஆனந்த், பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றான். தொடர்ந்து தன் இரு மாமன் அத்தையின் பாதங்களையும் பணிந்து வணங்கியவன், நேராக மேடையில் சென்று அமர்ந்தான். அவனைச் சுற்றித் தம்பிகள் மூவரும் நின்றுகொள்ள, அந்த நேரம் செல்வா தன் குடும்பத்துடன் அங்கு வந்து சேர்ந்தான்.

​அவனைக் கண்டதும் ராஜேந்திரனின் முகம் மாறியது! ‘இவனை எதற்காக இங்கு வரவைத்தான்?’ என்ற கோபத்தில் அவர் அங்கு வர… “இவர்கள் நம்ம அத்தையின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எனக்கு நட்பு ரீதியில் அறிமுகமானவர்கள். அன்றொரு நாள் நம் குடும்பத்திற்கு உதவி புரிந்தவர். என் நண்பராகக் கல்யாணத்தில் கலந்துக்க வந்திருக்கார்” என்றான் ஆனந்த்.

​மகன் கூறுவதை நம்ப மாட்டேன் என்பது போல அவர் பார்க்க… அவரைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், செல்வாவின் செவியருகில் சென்று எதையோ சொல்லிச் சிரித்துப் பேசியபடி இருந்தான் ஆனந்த்!

​தனக்குத் தெரியாமல் ஏதாவது விபரீதத் திட்டம் தீட்டுகிறானா? இவர்கள் வந்திருக்கிறார்கள் என்றால் வேறு யாரெல்லாம் வரக்கூடும்? என அவரது மூளை பலவாறாகக் கணக்குப் போட்டது. அடியாட்களை எச்சரிக்கையாக இருக்குமாறு சைகை செய்தார். ஆனால், கடைசி வரை சந்தேகப்படும்படியாக வேறு யாரும் அங்கு வரவே இல்லை.

புரோகிதர் மந்திரங்களை உச்சரிக்க, அபிநயா பெற்றோரின் பாதம் பணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டாள். அவள் மேடையில் அமர்ந்ததும், மணமக்கள் இருவரும் எல்லோரையும் பார்த்துக் கைகூப்பி வணங்கினார்கள். அந்தத் திக் திக் காட்சியைத் திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வீட்டில் உள்ளவர்களுக்கு, வயிற்றில் புளியைக் கரைப்பது போல் இருந்தது!

​முகூர்த்த நேரம் நெருங்கியது. புரோகிதர் வளர்த்திருந்த ஓம குண்டத்தின் புகை மேடையைச் சூழ்ந்து கண்களை மறைக்க… ‘கெட்டி மேளம்! கெட்டி மேளம்!’ என்ற சத்தம் மேடையெங்கும் முழங்கியது!

​அந்தச் சமயம் ஆனந்தின் நண்பர்கள் கைகளில் வைத்திருந்த பார்ட்டி பாப்பர்களைச் சுழற்ற, ‘டப் டப்’ என்ற சத்தத்துடன் ஜிகினா தாள்களும் வண்ணப் பூக்களும் பூமாரியாகத் தூவின. மற்றொரு புறம் ஸ்னோ ஸ்ப்ரேக்கள் பனித் தூறலாய்ப் பொழிய, கேமராமேன்கள் முன்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். ஆனந்தின் வீட்டில் உள்ளவர்கள் இருபுறமும் சூழ்ந்து ராஜேந்திரனைப் பின்னுக்குத் தள்ளிவிட… அடுத்த நொடி, அபிநயாவின் கழுத்தில் செல்வா தாலி கட்டியிருந்தான்!

​புகையும் கூட்டமும் விலகிய பிறகுதான் விஷயம் ராஜேந்திரனின் கண்ணில் விழுந்தது. அதிர்ச்சியில் கொதித்தெழுந்து வந்தவரை ஆனந்த் தடுத்து மறித்தான். அவன் கையில் இருந்த தாலி இன்னும் கட்டப்படாமல் இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!