ஜீவ தாளம் : 6
அத்தியாயம் : 6
நட்சத்திர விடுதியில் பார்ட்டி களைகட்டிக் கொண்டிருக்க… தோகை மயிலெனத் தன் புடவைத் தலைப்பைக் கையில் தவழ விட்டு, ஒற்றைப் பின்னோடு ரவிக்கையை இணைத்து, உயரமான அந்த உடல்வாகு ‘ஹீல்ஸ்’ காலணிகளின் துணையுடன் அத்தனை கம்பீரமாகத் தெரிந்தது!
அவளைக் கண்ட மாத்திரத்தில், ஆனந்தின் மனதிற்குள் புகுந்த ஏதோ ஒரு புது மாற்றம் அவனை நிலைகுலையச் செய்தது. அவளது அசையாத பார்வையும், எதற்கும் கலங்காத அந்த அமைதியான தோற்றமும் அவனுக்குள் பெரும் சலனத்தை உருவாக்கியது. இத்தனை காலமும் கோபத்தையே முகமாகக் கொண்டிருந்தவன், இன்று அவளது அந்தத் தோற்றத்தைக் கண்டதும் அதை முற்றிலும் மறந்துவிட்டவன் போலச் சிலையாக நின்றான்!
இருவரின் தளராத பார்வையும் கபிலனின் கண்ணில் விழுந்து அவனைத் திடுக்கிட வைத்தது. ‘இது என்னடா புது விவகாரமா இருக்கு? இத்தனை நாளும் முட்டிக்கிட்டு இருந்த ரெண்டும் இப்படி ஒண்ணை ஒண்ணு சைட் அடிச்சுட்டு இருக்கு… இதைத் தான் மோதலுக்குப் பின் வரும் காதல் என்பார்களோ?’ என்று நினைக்க, பூபாலனின் கண்ணிலும் அந்தக் காட்சி விழுந்து மனதில் ஏதேதோ எண்ணங்களை உருவாக்கியது. ஆனாலும், வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர் தொழில் விஷயமாகப் பேசியவாறு இருக்க, அதை அறியாமல் அவர்கள் இருவரும் மௌன பரிபாஷணையில் ஈடுபட்டு இருந்தார்கள். அந்த மயக்கமான சூழலைக் கலைப்பது போல, கார்களின் ஹார்ன் சத்தமும் நண்பர்களின் வருகையும் சட்டென்று அவனது கவனத்தைத் திசைதிருப்பின.
Advertisement
ஜீவாவும் தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அந்த இடத்தை விட்டு அகன்றாள். பூபாலன் அவளைத் தன் அருகில் அழைத்து, அங்கே நின்றுகொண்டிருந்த நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களின் புன்னகைக்குத் தன் மலர்ந்த முகத்தால் பதிலளித்த ஜீவா, அவர்கள் விடுத்த கேள்விகளுக்கும் தயக்கமின்றிப் பதில் கூறினாள்.
நண்பர்களிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்த ஆனந்த், எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தபோது அவனது கண்கள் அதிர்ச்சியில் நிலைத்தன. அங்கே அவன் கண்ட காட்சி, அவனது இதயத்துடிப்பையே ஒரு கணம் நிறுத்தியது! ஏனெனில், அவள் பூபாலனின் மிக அருகில் நின்று, மலர்ச்சியுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள். பூபாலன் கேட்கும் கேள்விகளுக்கு அவள் அத்தனை அன்யோன்யமாகப் பதிலளிப்பதும், அவர்களுக்கு இடையே நிலவும் அந்த இயல்பான நெருக்கமும், அவர்களின் நீண்ட கால அறிமுகத்தை உரக்கப் பறைசாற்றின.
‘எப்படி இவளை அவருக்குத் தெரியும்? அவருக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ ஆனந்தின் உள்ளம் கேள்விகளால் அலைபாயத் தொடங்கியது. கேள்விகள் பலவாக மனதிற்குள் உருவெடுத்து நின்றாலும், அதற்கான விடைகள் மட்டும் அவனுக்குப் பிடிபடவில்லை. உண்மையை உடனே அறிந்துகொள்ளும் வேட்கை மேலிட, தன் நண்பன் கபிலன் எங்கே இருக்கிறான் என்று தேடினான். அங்கே, கபிலனும் ஜீவாவின் அருகில் நின்றுகொண்டு, தொழில் ரீதியான அறிமுகமுள்ளவர்களிடம் மரியாதை நிமித்தம் பேசிக்கொண்டிருந்தான்.
Advertisement
மூவரும் ஒரே குடும்பத்தினர் போல அத்தனை இணக்கமாகப் பேசிக்கொண்டிருக்க, ஆனந்தின் மனதில் மின்னலெனத் தோன்றிய ஒரு எண்ணம், ‘ஒருவேளை அப்படி இருக்குமோ?’ என்ற சந்தேக விதையைத் தூவியது. அந்த உண்மையை உடனே தெரிந்துகொள்ளாமல் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, நண்பனிடம் பேசுவது போன்ற பாவனையில் அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்து சென்றான்.
Advertisement
ஜீவாவின் அருகில் நின்றிருந்த பூபாலன், மலர்ந்த முகத்துடன் அவளைத் தன் ‘மருமகள்’ என்று ஆனந்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்த வார்த்தை அவர்களுக்கு இடையிலான உறவைத் தெளிவுபடுத்தினாலும், ஆனந்தின் மனதிற்குள் ஏதோ ஒரு நெருடல் தோன்றி அதை ஏற்க மறுத்தது. அந்த உணர்வு எதனால் என்று அவனுக்குப் புரியவில்லை.
அவள் ‘அங்கிள்’ என்று பூபாலனிடம் உரிமையுடன் பேசுவதும், கபிலனின் தோளில் தட்டி ஏதோ கூறுவதும், அவனை முற்றிலுமாக உதாசினப்படுத்துவது போல இருந்தது. இதைக் கண்ட ஆனந்தின் உள்ளமும் உடலும் ஒருசேர இறுகின!
‘அவளைத் தான் தனது நண்பனுக்குத் திருமணம் செய்து வைக்கப் போகிறார்களா?’ என்ற கேள்வி அவனுள் எழுந்து பெரும் போராட்டத்தையே நடத்தியது.
Advertisement
அந்த வினாடியே அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கில் கபிலனை நெருங்கியவன், “வா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்!” என்றான். அத்தனை நேரமும் மனதிற்குள் பயத்தை மறைத்துக்கொண்டு சிரித்த முகமாக இருந்த கபிலன், அவ்வப்போது ஆனந்தின் முகமாற்றங்களைக் கவனித்து அவனது மனநிலையை அளவிட்டுக் கொண்டிருந்தான்.
அப்பாவின் முன்னே எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தைரியசாலி போலக் கபிலன் நடித்தாலும், ஆனந்த் இப்போது அழைத்தபோது ‘முடியாது’ என்று சொல்ல முடியாமல் திணறினான்.
“இப்ப வரலை… கொன்னுடுவேன்!” ஆனந்தின் கட்டளைக் குரல் செவியோரம் ஒலிக்க, ‘இந்த ராட்சஷன் இன்னைக்கு என்னை ஒரு வழியாக்காம விட மாட்டான் போலிருக்கே!’ என்று உதடுகளைப் பிதுக்கினான் கபிலன்.
ஆனந்த், அவன் முதுகில் ஒரு போடு போட்டு, வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றான்.
‘எப்படியெல்லாம் தப்பியோடப் பார்த்தும் விடாமல் வந்துட்டானே! இன்னைக்கு என்னவெல்லாம் செய்யப் போறானோ? டாடி… ப்ளீஸ் ஹெல்ப் மீ…’ என்று கபிலன் மனதிற்குள் எழுப்பிய அபயக் குரல், பூபாலனுக்குக் கேட்காவிட்டாலும் அருகில் இருந்த ஆனந்திற்கு நன்றாகவே கேட்டது.
“என்னடா மாப்பு… உங்க அப்பாவை உதவிக்கு அழைக்கிறியா?” என்று ஆனந்த் மெல்லக் கேட்க, கபிலன் பார்வையில் தெரிந்த பயமே அவனைக் காட்டிக் கொடுத்தது.
“மவனே! நான் கேட்கிறதுக்கு இப்ப ஒழுங்கா பதில் சொல்லலை… தோலை உரிச்சுத் தொங்க விட்டுருவேன், ஜாக்கிரதை!” என்று மிரட்டினான் ஆனந்த்.
‘ஏதும் அறியாத ஒரு பச்சை மண்ணை இப்படிப் போட்டுப் படுத்துறாங்களே… இந்த அநியாயத்தைக் கேட்க யாருமே இல்லையா!’ என்று அவன் புலம்ப… “ஏன் இல்லை? அதான் நான் இருக்கேனே… உன் உயிர்த் தோழன் ஆனந்த்!” என்றான் அவன்.
“நீ உயிர்த் தோழன் இல்லைடா… என் உயிரைப் பறிக்கிற தோழன்!” என்று கபிலன் முணுமுணுத்தான்.
“ம்ப்ச்… அப்படியெல்லாம் சொல்லப்படாது. ஆமாம்… இந்தப் பார்ட்டிக்கு வர்றப்போ உன் ‘ஆளையும்’ கூட்டிட்டு வரச் சொன்னேனே, எங்கே அவங்க?” என்று ஆனந்த் கேட்க, கபிலன் மிரட்சியுடன் எச்சிலை விழுங்கினான்.
“அடச் சொல்லுடா! ஏன் வாயை மூடிட்டு இருக்கே? அவங்களைப் பார்க்கும் ஆசையில் தானே கேட்கிறேன்” என்று விடாமல் கேட்க, ‘இல்லாத பெண்ணை எங்கிருந்து அழைத்து வருவது?’ என்று கபிலன் தனக்குள் முனகினான்.
“கேட்கல… கொஞ்சம் சத்தமாச் சொல்லு?” என ஆனந்த் செவியை அவன் அருகில் கொண்டு போக, கபிலனோ வாயை ஜிப் போட்டது போல மூடிக்கொண்டான்.
“அப்போ உன் ஆளு வரலையா? சரி… அப்படின்னா, உங்க அப்பா பக்கத்துல நிக்கிற அந்தப் பொண்ணு யாரு?” என மெல்ல ஜீவாவைப் பற்றிய பேச்சிற்கு மாறினான் ஆனந்த்.
‘ஆஹா… இதுக்குத்தான் என்னைப் பிடிச்சு இழுத்துட்டு வந்தியா?’ என்று கபிலன் மனதுக்குள் முணுமுணுக்க, “அந்தப் பொண்ணு யாருடா மச்சான்? உங்க ஆபீஸ்ல புதுசா சேர்ந்தவளா? இல்லை தொழில் ரீதியா வந்திருப்பவரின் வாரிசா? எதுக்காக அவளைப் பார்த்து உங்க அப்பா ‘மருமகள்’ என்கிறார்?” என ஆனந்த் விடாமல் துளைத்தெடுத்தான்.
‘இவனிடம் வந்து இப்படித் தனியாக மாட்டிக்கொண்டோமே!’ என்று அவன் நொந்து கொள்ள, “ஒழுங்கு மரியாதையா பதில் சொல்லு. இல்லைன்னா இன்னைக்குப் பூரா உன்னை விட மாட்டேன்!” என மிரட்டினான் ஆனந்த்.
தப்பிக்க வழி தெரியாமல் கபிலன் தலையாட்ட, “அவளை உனக்கு எப்படித் தெரியும்? யார் அழைப்பின் பேரில் இங்கே வந்திருக்கா? உனக்கும் அவளை முன்பே தெரியுமா?” என்ற கேள்விக்கு, ‘ஆமாம்’ என்று மட்டும் கபிலன் தலையசைத்தான்.
“ஓஹோ… அவளைப் பற்றித் தெரியுமா? பேஷ்… பேஷ்! சொல்லு சொல்லு! அது யாரு? ஊர் பெயர் என்ன?” என்று ஆனந்த் ஆர்வமாக விசாரிக்க, கபிலனோ அவனை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “ஆமாம்! அவளைப் பற்றியே ரொம்ப நேரமா கேட்கிறாயே, உனக்கு முன்பே தெரியுமா?” என்று திருப்பிக் கேட்டான்.
“தெரியாமலா இத்தனை நேரமா கேட்கிறேன்? அன்னைக்கு ஒரு நாள் என் போனைத் தட்டிவிட்டு, பார்க்கும்போதெல்லாம் சண்டை போட்ட அந்தத் திமிர் பிடிச்ச பொண்ணைப் பத்திச் சொன்னேனே… அது இவள்தான்! தப்பித்தவறி உங்க அப்பா சொன்னார்னு அவளைக் கல்யாணம் பண்ணச் சம்மதிச்சுடாதே!” என்றான் ஆனந்த் வேகமாக.
இவன் இன்று ஏதோ ஒரு விபரீதத்தை விலைக்கு வாங்காமல் போகமாட்டான் என்று புரிந்த கபிலன், ‘பார்ட்டிங்கிற பேர்ல மனுஷனை ஜோலி முடிக்கப் பார்க்கிறான்… நீ நடத்து’ என்பது போலக் கையசைக்க… ஆனந்த் தொடர்ந்தான்.
“அந்தப் பொண்ணு ஒரு திமிர் பிடிச்சவ! யார்கிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாத ராட்சசி! கோபம் வந்துட்டா பக்கத்துல இருக்கிறவங்க யாருன்னு கூடப் பார்க்காம பேய் மாதிரி கத்துவா! இவளைக் கட்டிக்கிட்டா நீ ஆயுசுக்கும் கஷ்டப்படணும். அதனால உங்க அப்பா மனசுல அப்படி ஏதாச்சும் எண்ணமிருந்தா, இப்பவே அதை விட்டுடச் சொல்லு!” என்று எதற்காகச் சொல்கிறோம் என்றே தெரியாமல் படபடத்தான்.
ஜீவாவுக்கு இது கேட்டுவிட்டால் இந்த இடமே ரணகளமாகி விடுமே என்ற பயத்தில் கபிலன் கண்களை உருட்டினான்.
“நீயெல்லாம் அவளுக்குக் கொஞ்சம் கூட ‘ஒர்த்’ இல்லைடா! என்னையே அவள் அந்தப் பாடு படுத்தினா, நீ அவளுக்கு ரொம்பச் சாதாரணம். உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு அக்கறையில்தான் சொல்றேன். உங்க அப்பாவிடம் பேசி வேற நல்ல பொண்ணா பாரு. இல்லைன்னா நானே அவரிடம் எல்லாத்தையும் சொல்லிடுவேன்!”
அவனது அறிவுரை எதற்காக? அவளை அவனிடம் இருந்து விலக்குவதற்காகவா? அல்லது தான் பார்த்த பெண்ணைத் தனது நண்பனுக்குத் திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற உதறலாலா?
ஆனந்த் என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தும் கபிலன் மௌனமாக இருக்கவே, “இந்தப் புள்ள பூச்சிக்கு போய் அந்த முரட்டு ராணியா? வாய்ப்பே இல்லை! என்னை மாதிரி ஒருத்தன் கிடைச்சா தான் அவளோட திமிரை அடக்க முடியும்!” என்று அனுதாபப்படுவது போலச் சொன்னான் ஆனந்த்.
‘அடேய்! எனக்காகப் பரிதாபப்படுற மாதிரி உனக்கு அவள் வேணும்னு பேசுறியா? அந்த ராட்சக்ஷியும், இந்த ராட்சக்ஷனும் சேர்ந்தா உலகம் தாங்குமோ இல்லையோ… ஆளை விடுங்கடா! அவளுக்கு மட்டும் இதெல்லாம் தெரிஞ்சது, உன் நிலைமை படு மோசமாகப் போகுது. தேவையில்லாமல் பேசி விபரீதத்தைத் தேடிக்காதே!’ என மனதுக்குள் அலறினான் கபிலன்.
ஆனந்த் இன்னும் ஜீவாவைப் பற்றித் தாக்கிப் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பின்புறம் வந்து நின்ற அவள், கோவைப் பழமாய்ச் சிவந்த கண்களுடன் அக்னி தேவியின் மறு உருவமாகக் காட்சியளித்தாள்! பேச்சு சுவாரசியத்தில் அவர்கள் கவனிக்கத் தவற, அவளோ ஆனந்த் பேசிய அனைத்தையும் கேட்டுச் சினத்துடன் நின்றாள்.
தன்னைப் பற்றி இத்தனை தரக்குறைவான எண்ணமா? அவள் உள்ளம் மீண்டும் ‘சண்டிராணியாக’ மாறியது. கபிலன் அவனைத் தடுக்க முயற்சிக்க, அப்போதுதான் பின்புறம் நின்ற ஜீவாவை இருவரும் கண்டனர்.
கபிலன் அலறி அடித்துக்கொண்டு ஓட முயல, ஜீவாவின் கைவிரல்கள் அவனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டன. ‘போச்சு… எல்லாம் போச்சு! அப்பவே சொன்னேன், இவன் கேட்டானா?’ என கபிலன் மனதுக்குள் நொந்து கொண்டான்.
ஜீவாவின் கண்களில் தெறித்த அக்னி வீச்சு ஆனந்தைச் சுட்டெரித்தது. அவள் அங்கே இருப்பாள் என்று எதிர்பாராத ஆனந்தின் நா ஒரு நிமிடம் செயலிழந்தாலும், அவனது விழிகளில் பிடிவாதம் குறையவில்லை. அவள் என்ன சொல்லப்போகிறாள் என்று தெரிந்தும், எதற்கும் துணிந்தவனாக ‘விடாக்கண்டனாக’ நின்றான் ஆனந்த்.
அவளோ அவனை அடியோடு அலட்சியப்படுத்திவிட்டு, கபிலனைத் தன் பக்கம் இழுத்தாள். அவன் முகத்தில் தெரிந்த தவிப்பைக் கண்டு மென்மையாகப் புன்னகைத்தவள், அவனது கலைந்த கேசத்தைச் சீர் செய்து, கசங்கிய சட்டை காலரையும் நிமிர்த்திவிட்டாள்.
பின் அவன் கையைப் பற்றிக்கொண்டு, “கபில்… இவர் யாருன்னு மாமா சொன்னாங்க. ஆனா, நீங்க எனக்கு அறிமுகப்படுத்தவே இல்லையே!” என்று வினவினாள்.
கபிலனுக்கு மூளை நரம்புகள் மரத்துப் போயின. பதில் சொல்லத் தெரியாமல் திகைத்து நின்றவனைப் பார்த்து, “என்ன ஆச்சு கபில்? ஏன் மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி இருக்கீங்க? மாமா அங்கே நம்ம கல்யாணத்தைப் பத்திப் பேசிட்டு இருக்காங்க. இன்னும் பதினைஞ்சு நாள்ல முகூர்த்தம் வைக்கப்போறதா சொன்னாங்க. அந்தச் சந்தோஷமான செய்தியை உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தா, இப்படி மலைச்சுப் போய் நிக்கிறீங்களே!” என்று செல்லமாகச் சிணுங்கினாள்.
அவனது திகைப்பைக் கண்டுகொள்ளாமல், “போங்க கபில்… உங்க மேல எனக்குக் கோபம். ஏதோ பார்ட்டிக்குத் தான் போறோம்னு கூட்டிட்டு வந்து, இப்போ நம்ம கல்யாணத்தையே பேசி முடிச்சுட்டீங்க… ஐ அம் ஸோ ஹேப்பி!” என்று அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்தாள்.
ஆனந்தின் உள்ளம் பற்றி எரிந்தது! காரணமறியாத அந்த ஆத்திரம் அவனது நிதானத்தைப் பறித்தது.
“ரொம்ப நேரம் இங்கேயே நின்னா மாமா தேடுவாங்க, வாங்க போகலாம். அத்தையிடமும் இந்தச் செய்தியைச் சொல்லிச் சந்தோஷப்படலாம். அப்புறம் கல்யாணப் புடவை, நகைன்னு ஏகப்பட்ட வேலை இருக்கு…” என்று ஆனந்தை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றாள் ஜீவா. இடையில் கபிலனின் கன்னத்தைக் கிள்ளியும், கொஞ்சியும் ஆனந்தின் பொறுமையைச் சோதித்தாள்.
“நம்ம கல்யாணத்துக்கு இந்தச் சாரையும் இன்வைட் பண்ணனும் கபில். எனக்கு இவரை ரொம்ப பிடிச்சிருக்கு. ஸோ ஹேண்ட்சம்!” என்று சொல்லி இறுதியில் அவனுக்குள் நெருப்பையும் ஏற்றி விட்டு, கபிலனின் கையோடு கை கோர்த்து நடந்தாள்.
கபிலனின் உள்ளம் நடுங்கியது. தான் ஒன்று நினைக்க, இப்போது வேறு விதமாய் நடப்பது கண்டு மூளை ஸ்தம்பித்துப் போனது. ஆனந்தின் முகமாற்றமும் அமைதியும் அவனுக்குத் தவறாகப்பட்டது. ‘அப்பா அறிந்தால் என்ன பதில் சொல்வது?’ என்று தெரியாமல் இதயம் தாறுமாறாகத் துடித்தது.
எதேச்சையாக நடந்தது என்றாலும், இருவர் மனதிலும் இருக்கும் அளவுகடந்த கோபம் எதையும் தவறாக நடக்க வைத்துவிடக் கூடாது என்று அவன் வெம்பினான்.
ஆனந்த், செல்லும் இருவரையும் வெறித்துப் பார்த்தபடி நிற்க… அன்ன நடையுடன் ஒயிலாகச் சென்று, மயிலாகத் தலையைத் திருப்பி அவனை ஏளனமாகப் பார்த்த ஜீவா, ‘உன்னால் மட்டும்தான் என்னைக் காயப்படுத்த முடியுமா? பதிலுக்குப் பதில் தர எனக்குத் தெரியாதா?’ என்று கண்ணசைவில் கேட்டு, ஓர் அலட்சியப் புன்னகையைப் பரிசளித்தாள்.
அவளது அந்தச் செய்கை அவனை இன்னும் சீண்டிவிட, ‘கல்யாணமா! எப்படி உனக்கு அவனோடு நடக்குது? எங்கே இருந்து நீ அவனைக் கட்டிக்கிறேன்னு நான் பார்க்கிறேன்!’ என்று அவன் முணுமுணுத்தான்.
‘உன்னால் என்னை எதுவுமே செய்ய முடியாது. கபிலனை என் கைக்குள்ளே வைத்து, அவன் காதலி எனும் போர்வையில் மறைந்து, உன்னைத் தோற்கடித்துக் காட்டுகிறேனா இல்லையா பார்!’ என்று சவாலிட்டாள் ஜீவா.
‘உனக்கும் அவனுக்கும் திருமணம் நடந்தால்தானே பார்ப்பதற்கு! இப்போது பேசிய அனைத்திற்கும் சேர்த்து உனக்கு நான் பதிலடி தராமல் விடமாட்டேன்!’ என்று ஆனந்தும் தனக்குள் சபதமெடுத்தான்.
அவள் நேராக மாமாவிடம் சென்று பேசிவிட்டு, மூவரும் உணவை முடித்த பின்னர் அவர்களின் காருக்குச் சென்று அமர்ந்தாள். ஓட்டுநர் வாகனத்தைச் சீரான வேகத்தில் செலுத்த, அந்த வாகனம் மதில் சுவரைத் தாண்டி வெளியே போகும் வரை அங்கேயே நின்று பார்த்த ஆனந்தின் மூளை, தீவிரமான யோசனையில் மூழ்கியது.
என்றைக்கும் இல்லாத மகிழ்ச்சியுடன் இன்று ஜீவா காணப்பட்டாள். அவளது அந்தத் திடீர் முகமாற்றமும், வெளிப்படுத்திய சந்தோஷமும் அங்கிருந்த அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதேபோல் அவள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்பட்டனர்.
