Skip to content
Post Views: 4,791
தூறல் – 14
அஞ்சலியின் கைப்பேசிக்கு அழைப்பது இரண்டே நபர்கள்தான். ஒன்று ராதா மற்றொன்று குரு. அதிலும் இரவு 8 மணிக்கு மேல் வீடியோ காலில் அழைப்பவன் குருதான் என்பதை தெளிவாக மூளையில் பதித்திருந்தாள் அஞ்சலி.
Advertisement
அன்று மாலையில் இருந்தே அந்த குட்டி மனதுக்குள் இனம் புரியாத பரவசம். எதிர்பார்த்து காத்திருந்தவள் டிடிங் டிடிங் என்ற வீடியோகாலின் அழைப்பில் பாய்ந்து மேஜையில் இருந்த ஃபோனை எடுத்து தானே இணைப்பை ஏற்றிருந்தாள்.
எதிரில் மூக்குக் கண்ணாடியை சரி செய்தபடி பளீர் பற்கள் தெரிய சிரித்துக் கொண்டிருந்த அந்த ஆஜானுபகவான ஆண்மகனின் முகத்தைப் பார்த்தவள் மலர்ந்து ஆசையோடு அப்பா என அழைத்திருந்தாள்.
Advertisement
Advertisement
சமையலறையில் சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டிருந்த அஞ்சலி இந்த வார்த்தையில் கையில் அப்பிய மாவோடு வேகமாய் வெளியேறி வந்து அதிர்ச்சியோடு மகளையே பார்த்திருக்க எதிர்முனையில் சிரித்த நிலையில் இருந்தவனோ சிலையாகி அமர்ந்திருந்தானே.
“அப்பா…”
Advertisement
அந்த ஒற்றை வார்த்தைக்கு இந்த நொடி எத்தனை மதிப்பு.
சில ஆண்டுகளுக்கு முன் அவன் தொலைத்த வார்த்தை.
பிறந்தது முதலே அவள் சொல்லாத வார்த்தை.
“அப்பாஆஆ… குருப்பா…”
பால் பற்கள் மின்ன சிரித்தபடி இதயத்தில் இருந்து அவள் அழைக்க ஆறடி இரண்டு அங்குல உயரம் உள்ள ஆண்மகனோ அடங்காத சிலிர்ப்புடன் அசையாது அமர்ந்திருந்தான். இந்த ஒற்றை வார்த்தையை தாங்கும் சக்தி அவனது கையளவு இதயத்திற்கு இல்லாமல் போனதோ என்னவோ. படபடத்து எகிறி குதித்த இதயத்தை கட்டுப்படுத்தும் வழி தெரியாது, அகன்ற விழிகளில் தெறித்து வந்த கண்ணீரையும் அடக்க வழி அறியாது அதிர்ச்சி விலகாமல் அமர்ந்திருந்தான்.
கொட்டித் தீர்த்த கண்ணீரை அவனால் துடைக்க முடியவில்லை. அந்த யோசனையும் இல்லை. உதடுகள் நடுங்கின…இறுகிய கன்னத் தசைகள் இளகித் துடித்தன.ஹோ என இரைச்சலுடன் தீராது சீராக கொட்டும் மலையருவி போல் நிற்காமல் கொட்டித் தீர்த்த அவன் கண்ணீர் அருவி அவன் கழுத்துப் பள்ளத்தில் விழுந்து தெறித்தது.
அந்த இளம் தாமரை மொட்டை இந்த நொடியே இறுக்கி அணைத்து அந்த குட்டி தோளில் தலை புதைத்து உலகையே உலுக்கும் ஓசையுடன் சத்தமிட்டு கதறி மொத்தமாய் அழுது தீர்த்துவிட மனம் துடியாய் துடித்தது.
விடைத்து மீளும் மூக்கும், சுழிந்து மீளும் புருவமும், சுருங்கி விரியும் கண்களும் அவனது இதயப் போராட்டத்தை வடிவங்களாக வெளிப்படுத்தின.
“அப்பா… ஏன்ப்பா அழறீங்க..?”
சிரித்திருந்த அந்த குட்டி மாதுளை இதழ்கள் வேதனையோடு வளைய அவளது கண்களிலும் கண்ணீர் கசிந்திருந்தன. இரு தோள்களையும் மாறி மாறி உயர்த்தி கண்ணீர் கடலை கட்டுக்குள் கொண்டு வந்தவன் இதழ் பிரித்து புன்னகைத்தான்.
அழவில்லை என்று இருபக்கமும் தலையசைத்து சைகையால் தெரிவித்தான். பேச்சினை தொலைத்தவனுக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை.
“இங்க வாங்கப்பா…”
வார்த்தைக்கு வார்த்தை அப்பா என்று அவள் அழைக்க அழைக்க இங்கு இவனது உயிர் உலர்ந்து உதிர்ந்தது.
“வாங்கப்பா…”
சரி என்பதற்கு அடையாளமாக தலையை மட்டும் ஒரு பக்கமாக சாய்த்து நிமிர்த்தினான். பேச முடியாமல் இதழ்களை அழுந்த கடித்துக் கொண்டான்.
சவியின் வார்த்தைகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அஞ்சலி கைப்பேசியில் அவனது மாறும் முக பாவங்களை கவனித்திருக்கவில்லை. குழந்தைக்கு எதிரில் அல்லவா நின்றிருந்தாள். உணர்வுகளோடு அவன் நடத்தும் போராட்டங்களை பார்த்திருக்கவில்லை. இந்நேரம் பல நூறு வார்த்தைகளை உதிர்த்து முடித்திருப்பவன் எதுவுமே பேசாமல் இருக்க இவளது இதயம் பிசைந்து வலித்தது. தன் மகளால் பெரும் தர்ம சங்கடத்திற்கு ஆளாகி அமர்ந்திருக்கிறான் என்று எண்ணிக் கொண்டாள்.
வேகமாக ஓடிச் சென்று கைப்பேசியை சவியிடம் இருந்து வாங்கி இருந்தாள்.
“சா..சாரி… சாரி குரு… த..தப்பா நினைச்சுக்காதீங்க… நான் எதுவும் சொல்லிக் கொடுக்கல… பக்கத்து வீட்டு சசி அக்காதான் இன்னைக்கு ஏதேதோ பேசப்போய்… இவ வேற மாதிரி ஏதேதோ புரிஞ்சுக்கிட்டு… இப்போ ஏதேதோ சொல்லி உங்களை…”
முற்றுப்பெறாத வார்த்தைகளை நிறுத்தி நிறுத்தி தடுமாறினாள் அஞ்சலி.
“போனை குடுங்கம்மா… குடுங்க… அப்பாகிட்ட பேசணும்…”
கையை காலை உதறியபடி சத்தமிட்டு அழத் தொடங்கி இருந்தாள் சவி.
“வாய மூடு…”
உச்ச தொணியில் தொண்டை நரம்பு புடைக்க கண்களை உறுத்து விழித்து சவியிடம் அவள் ஓங்கிக் குரல் கொடுக்க ஒற்றை கையால் வாயை அழுந்த மூடியபடி நடுக்கத்தோடு சுவற்றோடு சரிந்து அமர்ந்து கொண்டாள் சவி.
“ஏய் அஞ்சலி என்ன பண்ற..?”
எதிர்முனையில் சத்தமிட்டான் குரு.
இது எதனையும் காதில் வாங்காமல் பட்டென இணைப்பை துண்டித்திருந்தாள் அஞ்சலி.
ஆத்திரம் குறையாமல் கோப மூச்சுகளை வெளியேற்றியபடி மகளை திரும்பிப் பார்த்தவள் நடுங்கியபடி அமர்ந்திருந்த அவளது கோலத்தில் சட்டென இதயம் இளகி இயலாமையோடு இதழ் கடித்து அழுதபடி அவளிடம் நெருங்கினாள்.
மிரட்சியோடு பார்த்த மகளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள் கதறி அழுதாள். கண்ணின் மணிபோல் இத்தனை ஆண்டுகள் காத்து வளர்த்தாலும் அந்த பிஞ்சு இதயத்தின் ஆழ்மனதில் அப்பாவின் அன்புக்காக எத்தனை ஏக்கம் பொதிந்து கிடந்தது என்பதை இந்த சில நிமிடங்களிலேயே கண்டு கொண்டாளே. அந்த கண்களில் தெரிந்த ஒளியும், வார்த்தைகளில் தெறித்த ஏக்கமும், அந்த குட்டிப் பெண்ணின் தவிப்பை தெள்ளத் தெளிவாக கூறியதே.
எனக்கும் என் மகளுக்கும் ஏன் இப்படி ஒரு நிலை..? நான்தான் பாவப்பட்டவள்… எனக்கு பிறந்த என் செல்வம் என்ன பாவம் செய்தாள்..?
“அப்பா… அப்பா…”
அன்னையின் நெஞ்சுக்குள் புதைந்தவளின் இதழ்கள் தந்தையைத்தான் தேடின.
“அவர் உன் அப்பா இல்லடா…”
அழுகையோடு சொன்னவளை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் சவி.
“அந்த அத்தை சொன்னாங்க…” உதடு பிதுக்கியபடி கேட்டாள்.
“அவங்க தெரியாம சொல்லிட்டாங்க…”
“இல்ல… இல்ல…”
ஏற்றுக்கொள்ளவே முடியாமல் இடவலமாக தலையாட்டி சத்தமிட்டு அழுதாள் சங்கவி.
மூன்று வயது குழந்தை ஏன் அப்பா பாசத்திற்கு இப்படி ஏங்கி அழுது தவிக்கிறது..? இல்லை என்ற அந்த வார்த்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் ஏன் துடித்து கதறுகிறது..? இதற்கு முன் இப்படி எல்லாம் தவித்து அழுததில்லை. தாய் அடிக்கும் போதும் மிரட்டும் போதும் அழுதிருக்கிறாள்… அது வேறு பரிமாணம்…
ஆனால் இன்றைய இந்த கண்ணீரும்..? கதறலும்…???
தாயும் மகளும் ஒருவரை ஒருவர் இறுக்கி அணைத்தபடி அழுது கொண்டிருந்தனர்.
அங்கோ குரு விடாமல் இவள் கைப்பேசிக்கு அழைத்து அழைத்து ஓய்ந்தே போனான்.
அழுகை விசும்பலாக மாறி தேம்பலாக மருவி சோர்வோடு தாயின் நெஞ்சின் மீதே உறங்கிப் போயிருந்தாள் சவி. அரைகுறையாக செய்த சமையலை அப்படியே போட்டு மகளை மடியில் போட்டபடி சுவற்றில் சாய்ந்து விட்டத்தை வெறித்தபடி ஈரம் காயாத விழிகளுடன் அசைவற்று அமர்ந்து கொண்டாள் அஞ்சலி.
எத்தனை நேரம் அப்படியே இருந்தாளோ… தன்னையும் மீறிய உறக்கம் தழுவியிருக்க மகளை அணைத்தபடி தரையிலே தன்னை மறந்து உறங்கி இருந்தாள்.
இடைவிடாத கதவு தட்டும் ஓசை… எங்கோ தூரத்தில் கனவில் கேட்பதுபோல் லயம் மாறாத விடாத ஓசை. சிரமப்பட்டு விழிகளை பிரித்தாள் அஞ்சலி. வீங்கி இருந்த கண்கள் எரிந்தன. விடிந்துவிட்டதை கூடத்தில் விழுந்த வெளிச்சம் பறைசாற்ற பட்டென எழுந்து அமர்ந்தாள்.
கதவு அதிர்ந்து கொண்டே இருக்க வேகமாக எழுந்து ஓடிச் சென்று கதவை திறந்தாள். அடுத்த நொடி புயலென வீட்டிற்குள் நுழைந்திருந்தான் குரு. ஒரு கணம் அவள் முகம் பார்த்தவன் தவிப்புடன் விழிகளை சுழற்றியபடியே உள்ளே விரைந்தான். வாடிய கொடியாக சுவற்றின் ஓரத்தில் சோர்ந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த சவியை அள்ளித் தூக்கினான்.
அவன் ஸ்பரிசமோ… வாசமோ… நேசமோ… ஆழமாக அந்த குட்டி மூளைக்குள் பதிந்து போயிருந்தன போலும். அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தை படக்கென விழிகளைத் திறந்தாள்.
பரிதவிப்புடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் திருமுகம் கண்டவள் “அப்பா…” என்று உச்சக் குரலில் அழைத்தபடி அவனை கழுத்தோடு இறுக்கி கட்டியிருந்தாள்.
நேற்றைய திரை வடிவ அழைப்பிலேயே நெகிழ்ந்து போய் கிடந்தவன் நிஜமான ஸ்பரிசத்தோடு உள்ளார்ந்து உயிரோட்டமாய் அழைத்தவளை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்திருந்தான்.
கட்டவிழத் துடிக்கும் காட்டாற்று வெள்ளத்தை எத்தனை நேரம்தான் அணை போடுவது..?
“அம்மு…”
கரகரத்த குரலோடு அழைத்தவன் சத்தம் வராமல் முதுகு குலுங்க அழத் தொடங்கி இருந்தான். இந்த நொடி இந்த அழுகை அவனுக்கு வேண்டும்… இல்லையேல் இதயம் வெடித்து சிதறிவிடும்.
உயிரற்ற தனது மகளின் உடலை கட்டி அணைத்து கதறித் தீர்த்தானே… அந்தக் கண்ணீரில் இழப்பின் துகள்கள் சிதறி விழுந்தன.
இந்த நொடி உயிருள்ள புது உறவான மகளை கட்டி அணைத்து அழுது தீர்ப்பவனின் கண்ணீரில் சிதறிய துகள்கள் அன்பின் பேரணுவாய் உருவாகி அவனை மீட்டெடுத்து நிமிர்த்திய உணர்வு தெரிந்தது.
திடகாத்திர ஆண்மகன் ஒரு குழந்தையாய் மாறி குழந்தையிடமே ஆறுதல் தேடி அழுத அழுகையை விழிகள் தெறிக்க பார்த்தபடி நின்றிருந்தாள் அஞ்சலி. அந்தக் கண்களும் கண்ணீரை கரைத்து ஊற்றிக் கொண்டிருந்தன.
நெடு நாட்களாய் நெஞ்சில் புதைத்து வைத்திருந்த தேக்கத்தை நீர்க்குமிழிகளாக மாற்றி வெளியேற்றி முடித்தவன் மூக்கை உறிஞ்சியபடி நிமிர்ந்தான். அவன் சட்டைக் காலரை இறுக்கிப் பிடித்து அவனை விட்டு விலகவே மாட்டேன் என்று அடமாய் அவனை கட்டிக் கொண்டிருந்தாள் குட்டி தேவதை.
முந்தையநாள் இரவு அவன் உருகி நின்றிருந்த வேளையில் சவியை சத்தமிட்டு மிரட்டி கத்திய அஞ்சலியின் கைப்பேசி எதேச்சையாக சவியின் புறமாகத்தான் திரும்பி இருந்தது. உடல் நடுங்கி கண்களில் நீர் மல்க வாயை அழுந்த விரல்களால் மூடிக் கொண்டு சுவற்றோடு ஒண்டிப் போய் அமர்ந்திருந்த அந்தக் கோலம் குருவினை மொத்தமாக உலுக்கியது. அதன்பின் அவன் பலமுறை அழைத்தும் அவள் அழைப்பை ஏற்கவே இல்லையே.
அடுத்த அரை மணி நேரத்தில் ராமேஸ்வரம் செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்திருந்தான் குரு. குழந்தையின் தவிப்பும், ஏக்கமும், அந்த அழுகையும், தாயின் மிரட்டலில் தடுமாறி அமர்ந்த கோலமும் அவன் இதயம் முழுக்க வியாபித்திருக்க வேறு எதைப் பற்றியும் அவன் யோசிக்கவில்லை. தன் அத்தைக்கு கூட அழைக்கவில்லை. உடனடியாக குழந்தையை நோக்கி ஓடத்தான் மனம் அலை மோதியது.
“போனை எடுக்க மாட்டேங்கிறா… கோபத்துல புள்ளைய போட்டு அடிதச்சிருப்பாளோ..? அடிக்கிறதுதான் அவளுக்கு கைவந்த கலையாச்சே… அவ ஆத்திரத்தை எல்லாம் பிள்ளைகிட்டதானே காட்டுவா… அப்படி ஏதாவது அடிச்சு பிள்ளைக்கு காயம் பண்ணி இருக்கட்டும்… அவ கைய புடிச்சு முறிச்சு விடுறேன்…”
பல்லைக் கடித்து தனக்குள் உறுமியபடிதான் அமர்ந்திருந்தான். இதோ விடிந்த விடியாத வேளையில் ஓடிவந்து அல்லி மலரை அள்ளித் தூக்கி இருந்தான்.
குழந்தையை அணைத்தபடியே எதிரில் நின்றிருந்தவளிடம் நிமிர்ந்தவனின் விழிகளில் கோபம் கொந்தளித்தது.
“புள்ளையை அடிச்சியா..?”
பற்களை நறநறத்தபடிதான் கேட்டா.ன் அவன் பார்த்த பார்வையிலும் வார்த்தையில் வெட்டி வெளிவந்த கோபத்திலும் மிரண்டு போனவள் தன்னிச்சையாய் இல்லை என்று இடவலமாய் தலையசைத்திருந்தாள்.
“அம்மா என்னை அடிக்கலப்பா… ஆனா கட்டிப்புடிச்சு அழுதுட்டே இருந்தாங்க…”
குழந்தையின் வார்த்தைகளில் அஞ்சலியை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவன் கண்கள் வீங்கி சோர்ந்து நின்றவளை இப்போதுதான் அழுத்தமாக கவனித்திருந்தான். ஒரு பெண்ணாக, தாயாக என்னவெல்லாம் அவளும் உணர்ந்திருப்பாள் தவித்திருப்பாள் யோசித்திருப்பாள் என்பது இவனுக்கு புரியாமல் போகுமா..? அவள்மேல் எழுந்த கோபம் அனைத்தும் மொத்தமாய் வடிந்திருந்தது.
“நீங்க என் அப்பாதானே…”
அவன் தாடையை பற்றி இழுத்து தன்புறமாக திருப்பி ஏக்கத்தோடு கேட்டாள் சவி.
இதயம் பாகாய் உருகி அவள் பாதத்தில் விழுந்தது. கண்கள் கனிய அவளையே பார்த்தான்.
தலை தானாக ஆம் என்று அசைந்தது.
“நீங்க என் அப்பா இல்லைன்னு அம்மா சொல்றாங்க. அது பொய்தானே…”
மீண்டும் ஆம் என்று தலையசைத்தான்.
“அம்மா ஏன் அப்படி சொன்னாங்க..?”
தொண்டையை செருமிக் கொண்டவன் “அம்மாவுக்கு அப்பாமேல கோபம்… அதனால அப்படி சொல்லிட்டாங்க…”
சொன்னவன் அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்திருந்தான்.
“இனிமே அப்படி சொல்லக் கூடாதுன்னு சொல்லுங்கப்பா…”
“ இனி சொல்லமாட்டாங்க… இந்த குரு சவிக்குட்டியோட அப்பாதான்…”
அழுத்தம் திருத்தமாக சொன்னவனின் வார்த்தைகள் எதிரில் நின்றிருந்தவள் இளகிப் போனாள். இதயத்தில் ஏதேதோ உணர்வுகள்…காரணமே புரியாமல் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இன்பமா..? துன்பமா..?
வசந்தமா..? வலியா..?
புலப்படாத உணர்வில் பொங்கிப் போய் நின்றிருந்தாள் அஞ்சலி.
“பசிக்குதுப்பா…”
குழந்தையின் வார்த்தைகளில் பதறிப் போய் எழுந்தவன் அவளை அள்ளிக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான். முதல்நாள் இரவு அரைகுறையாக போட்டது போட்டபடி கிடந்த சமையலறை அதே நிலையில் கிடந்தது. இருவருமே இரவு உணவை எடுத்திருக்க வாய்ப்பில்லை என்பது தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.
“புள்ளைய பட்டினி போட்டு நீயும் பட்டினியா கிடந்தியா..?”
உரிமையோடு கடிந்தபடியே குழந்தையோடு குளியலறை நோக்கி சென்றிருந்தான் குரு. தானே அவளுக்கு பல் துலக்கி கையோடு குளிக்கவும் வைத்து அழைத்து வர இதற்குள் பெற்ற மனம் பரிதவித்து பரபரவென அவளுக்கான காலை உணவை தயார் செய்து வைத்திருந்தது.
அவளை மடியில் அமர்த்திக் கொண்டு தானே அவளுக்கு உணவினை ஊட்டினான்.
பசியின் தாக்கமா..? தந்தை என்ற உணர்வு கொடுத்த உரிமைப் பிரளயமா..? ஆசையாக அவன் ஊட்ட ஊட்ட மறுப்பின்றி வாங்கிக் கொண்டே இருந்தாள் சங்கவி.
“அப்பா… நீங்க..?”
உணவினை ஓரமாய் வாயில் அதக்கியபடியே கேட்டாள்.
“அப்பா பல் விளக்கணும்… குளிக்கணும்… அப்புறம்தான்… நீ சாப்பிடு செல்லம்…”
இருவருக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் பாசப் போராட்டத்தை ஒரு பார்வையாளராக தள்ளி நின்று விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் அஞ்சலி.
(தொடரும்)
error: Content is protected !!