Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 7

அத்தியாயம் : 7

சென்னையிலிருந்து தக்கலை வழியாக வந்து கொண்டிருந்த வாகனம், அழகியபாண்டியபுரத்தில் நுழைந்தது.

அவர்களின் வருகைக்காகக் காத்திருந்த ஒரு மனிதனின் இரண்டு கால்களும், வேகமாகத் திண்டின் மீதிருந்து எழுந்து நின்றன. அவனது கண்கள், முதல் முறையாகத் தங்களது சொந்த ஊருக்கு வரப்போகும் அவளைப் பார்க்க ஆவலுடன் இருந்தன!

வாகனம் வந்து அவனைக் கண்டதும், தன் வேகத்தைக் குறைத்து அடுத்த நிமிடம் நின்றது. அவன் பரபரப்பாகச் சென்று உள்ளே விழிகளைத் துழாவி அவளைத் தேட, அவளோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.



Advertisement

அவளைப் பார்த்ததும் பாச மிகுதியில் கண் கலங்கியது. உதடுகள் துடிக்க, அருகில் சென்று வாஞ்சையுடன் அவள் உச்சியில் கை வைத்தான் செல்வநாயகம்.

அவனது உணர்வுகள் சொல்லப்படாமல் மௌனமாகப் பரிமாறப்பட்டன. அவனது ஒவ்வொரு செய்கையிலும் அவள் மீதான அபரிதமான பாசம் வெளிப்பட்டது!

கண்களில் நீர் கோர்க்க, நாசி விடைத்து, தொண்டையை ஏதோ ஒன்று இறுகப் பற்றியது. பேச முடியாமல் நா தழுதழுக்க, அவளிடம் பேசும் ஆசையை அடக்க முடியாமல் இருந்தான் செல்வா.

Advertisement

முன்பக்கக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த பூபாலன் அவன் அருகில் வர, அவரது கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு நன்றியுரைத்தான்.

Advertisement

“என் கடமையை நான் செய்தேன். இதுக்கு நன்றி எல்லாம் எதுக்குப்பா?”

“அப்படிச் சொல்லாதீங்க சித்தப்பா! நீங்க செஞ்சிருப்பது சாதாரண காரியமில்லை. எங்க உயிரையே பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கீங்க!”

அவரது கைகளைப் பற்றிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு, “நீங்க செஞ்ச உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன். இனிமேல் ஜீவா இங்கிருந்து வராமல் பார்த்துக்க வேண்டியது என் கடமை!” என்றான்.

Advertisement

அவர் தலையசைத்துக்கொண்டே, “அப்பா அம்மா ரெண்டு பேரின் குடும்பத்தில் உள்ள நபர்கள் அத்தனை பேர் இருந்தும், யாரும் இல்லாத அநாதை போல் அக்காவும் தம்பியும் அமெரிக்காவில் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அன்புவின் வீட்டில் உள்ளவர்களுக்கு அவனைச் சுத்தமா பிடிக்காது. அவனை இறந்து போயிட்டதா சொல்லித் தலை முழுகிட்டாங்க. அந்த வீட்டுல உள்ள யாரும் அவன் அப்பாவின் பேச்சை மீறுவதில்லை.

இத்தனை வருஷத்தில் ஒரு நாள் கூட அவனைப் பற்றி நினைச்சுக்கூடப் பார்த்திராத அவர்களை நம்பி ஜீவாவை ஒப்படைக்கவும் மனசு வரல. பெரியவன் அன்பு வீட்டை விட்டுப் போய் இருபத்தி மூணு வருஷம் ஆகப் போகுது. அப்படி இருந்தும் யாரும் அவனைப் பற்றி ஒரு வார்த்தை பேசியோ, பார்க்க ஆசைப்பட்டோ நான் கேட்டதில்லை!

என்கிட்டேயும் இதுவரை பேசாம இருந்தவர்கள், இப்பதான் கொஞ்சமா பேசுறாங்க. அவர்களை நம்பி ஜீவாவை ஒப்படைக்கவோ, அவர்களிடம் போய் அன்புவும் அவன் மனைவியும் இறந்து போயிட்ட குடும்ப சூழ்நிலையைச் சொல்லி யாசகம் கேட்கவோ மனசு வரல.

ஆனா நீ அப்படி இல்லை. எதையும் ஆழ்ந்து யோசிச்சுச் செய்யக்கூடியவன். உன் பாதுகாப்பில் ஜீவா இருந்தா அவ வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணியதால்தான், உன்கிட்ட வந்து நடந்த விஷயத்தை எல்லாம் சொன்னேன். நீ உடனே அவளை இங்கு வரவைக்கத் தேவையான அத்தனை முயற்சிகளையும் செய்ய ஈடுபாடு காட்டியதால், நிச்சயம் நீ அவளை நல்ல விதமா பார்த்துக்குவேன்னு நம்பிக்கை வந்தது. அதனால தான் உன்னோடு சேர்ந்து நானும் கொஞ்சம் பொய் சொல்லி நடிக்க வேண்டியதாயிடுச்சு!”

அவர் கூற்றை ஆதரிப்பது போல அவன் அமைதியாக இருக்க, “நாளைக்கு ஜீவாவுக்கு இங்கு நடந்த விஷயம் எல்லாம் தெரிய வர்றப்போ என்ன ஆகும்னு எனக்கும் தெரியல. ‘ஏமாத்திட்டீங்க; பொய் சொல்லிட்டீங்க; உங்க யார் முகத்திலும் முழிக்க விரும்பல; எங்க அப்பாவை வெறுத்த யாரும் எனக்கும் வேண்டாம்’னு சொல்லிட்டுப் போயிடுவாளோன்னு பயமா இருக்கு… ஆரம்பத்தில் கோபப்பட்டு கத்தினாலும், பின்னாளில் கொஞ்சமா யோசித்துப் பார்த்தா புரிய வரும்னுதான் அவளையும் வரவழைத்து இங்கேயும் கூப்பிட்டு வந்திருக்கேன்” என்றார்.

அவன் ஏற்றுக்கொள்வது போலத் தலையசைக்க, “ஜீவாவை நீ ரொம்பவும் சாதாரணமா எடை போட்டுடாதே! அவள் நம்மை விடப் புத்திசாலி. அதோடு, நிமிஷத்துக்கு நிமிஷம் அவள் பேச்சில் அன்புதான் நிறைஞ்சுருப்பான். அவன் சொல்றதைக் கேட்டுத்தான் இத்தனை வருஷமும் நடந்ததா நிமிஷத்துக்கு நிமிஷம் சொல்லிக்கிட்டே இருப்பா. ‘எங்க அப்பாவுக்கு ஆகாத யாரும் எனக்கும் வேண்டாம்; நான் அமெரிக்காவிலேயே கடைசி வரை இருக்கப் போறேன்; என் தம்பியைத் தவிர வேறு எதுவும் தேவையில்லை’ன்னு சொல்லுவா. அப்படிப்பட்டவ, உண்மை அறிஞ்சா தாங்க மாட்டா; நம்மையும் வெறுத்து ஒதுக்கிடுவா! சென்னைக்கு வரச் சொல்லி எத்தனையோ முறை அழைப்பு விடுத்தும் வர மறுத்தவள், இப்போ எப்படியோ வரச் சம்மதித்தும் ஒரு வாரத்தில் மறுபடியும் கிளம்பி ஓடப் பார்த்தாள்.

இந்த ஊருக்கு என்ன காரணத்தை சொல்லி அவளை வர வைப்பதுன்னு தெரியாம இருந்தப்போ, கடவுளாப் பார்த்து தான் அவள் மனசை மாத்தி அனுப்பி விட்டுருக்கார். இனி இங்கிருந்து போக விடாமல் பார்த்துக்க வேண்டியது உன் சாமர்த்தியம்!

கபிலனை இங்கிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பிடலாம். அங்குள்ளதெல்லாம் அவன் பார்த்துக்குவான். சென்னையில் இருக்கக்கூடியதை நாம எல்லாருமா சேர்ந்து பார்த்துக்கலாம்” என்று தெளிவுபடுத்தினார்.

அவரது உயரிய உள்ளத்தை நினைத்து அவன் பெருமிதமாக உணர்ந்தான்.

“அப்புறம், ஜீவாவின் பெயரையும் இனிமேல் ஆனந்தின்னு கூப்பிடலாம். ஏன்னா, அதுதான் அன்புவின் அம்மா ஆனந்தவல்லியோட ஞாபகமா அவன் வச்சிருந்த பெயர். ‘ஜீவா’ங்கிறது சும்மா பெட் நேம் மாதிரிதான். அந்தப் பெயரிலேயே இந்த ஊரில் இருக்கும் வரை அவளை அழைக்கலாம். அது இன்னொரு விதத்தில் நல்லதும் கூட…” என்கவும், அவன் புரிந்தது போலத் தலையாட்டினான்.

“ஜீவாவை இங்கிருந்து எங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போகலாம். நீ கோவில் பூஜைக்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்துட்டே இல்லையா… அது முடிஞ்ச பிறகு உங்க வீட்டுக்குக் கூப்பிட்டுப் போ! எப்படியாவது அவள் மனசை மாத்தி, கொஞ்சம் கொஞ்சமா விஷயத்தைச் சொல்லிப் புரிய வைக்கலாம். அவள் மனம் மாறி இங்கேயே தங்கிட்டா எல்லா வகையிலும் நல்லது.”

“ஆமா சித்தப்பா! ஜீவா இனிமே இங்கதான் இருப்பா. அவளை யாராலும் என்கிட்ட இருந்து பிரிச்சுட்டு போக முடியாது! ஒருவேளை அவ யாருங்கிற விஷயம் இந்த ஊருக்கெல்லாம் தெரிய வர்றப்போ, அவங்க மாமன் குடும்பத்தால் ஏதாச்சும் ஆபத்து வந்தா, அவங்களை வெட்டிப் போடவும் நான் தயங்க மாட்டேன்! அவங்க வீட்டுல அப்பாவை மாதிரியே திமிர் பிடிச்ச ஒண்ணு இருக்குமே… அதுக்கும் அதே நிலைமைதான்! அப்புறம்…” என்று பேச, அவனது கேள்விக்கு அவரும் பதிலளித்தார்.

மேலும் இருவரும் சற்று நேரம் பேசிவிட்டு அவர்கள் அருகில் செல்ல, பாரதியிடம் நலம் விசாரித்தவன் தானும் அதே காரில் ஏறி அமர்ந்தான்.

வாகனம் சீரான ஓட்டத்தில் வந்து அவரது வீட்டு முன்பு நின்றது. ஜீவாவின் தோளில் கை வைத்து அழுத்திய பாரதி, ‘வரவேண்டிய இடம் வந்தாகிவிட்டது’ என்றார். அவள் கண்களைக் கசக்கிக்கொண்டு மெதுவாக ஜன்னல் வழியாக வெளியே பார்க்க, பச்சைப் பசேல் என்ற புல்வெளியும், நெடுநெடுவென்று வளர்ந்திருக்கும் மரங்களும், சுற்றிலும் தெரிந்த இயற்கை அழகுகளும், தூரத்தில் தெரிந்த மலைப்பகுதியும் அவளது விழிகளை மட்டுமல்ல, மனதையும் நிறைத்தன!

கண் இமைக்காமல் பார்த்து நின்றவள், கிராமத்து இயற்கை அழகில் மெய்மறந்து போனாள்.

அவளையே பார்த்து நின்ற மற்றவர்கள் புன்னகைக்க, “ஜீவா! வந்து வீடு எப்படி இருக்குன்னு பாரு” என்ற பாரதியின் குரலில் திரும்பிப் பார்த்து வாயைப் பிளந்தாள்!

வீட்டு முன்பகுதியில் காணப்பட்ட பூந்தோட்டமும், அதைச் சுற்றியுள்ள மாதுளை, கொய்யா, பப்பாளி, மாங்காய் மற்றும் பலாமரங்களும் அவளைப் பார்த்ததும் வரவேற்கும் விதமாகத் தலையசைத்தன.

மலையோரம் இருந்து வீசிய ஜில்லென்ற குளிர்காற்று அவள் மேனியைத் தீண்டிக் கூசச் செய்தது. துப்பட்டாவை இழுத்துத் தோளோடு போர்த்திக்கொண்டவள், “உங்க வில்லேஜ் ஸோ கூல்!” என்றாள்.

அவர்கள் சிரித்ததும், வீட்டைச் சுற்றியுள்ள இடங்களை லேசாகப் பார்த்துவிட்டு வந்து, “நீங்க ரொம்ப லக்கி அங்கிள்! இவ்வளவு அழகான இடத்தை விட்டு உங்களால் எப்படித்தான் அந்தச் சென்னையில் இருக்க முடியுதோ தெரியல” என்றாள்.

அவர் புன்சிரிப்புடன், “உங்க அப்பா கூடச் சேர்ந்து பாக்குற என் வேலை அங்கல்லவா இருக்கு? அப்புறம் எப்படி இங்கயே இருக்க முடியும்?” என்று கேட்க, “வாஸ்தவமான பேச்சு!” என்றவள் கிணுக்கிச் சிரித்தாள்.

அவர் ரசித்துக் கொண்டே, “ஆமா, வீட்டைச் சுத்தியிருக்கிற இடமெல்லாம் பார்த்துட்டு வந்தியே… பிடிச்சிருக்கா?” என்று கேட்டார் பூபாலன்.

​“ஸோ ஸ்வீட் அங்கிள்! ஆனா தனியாப் போய் பார்க்க முடியல. கூட யாராச்சும் ஒருத்தர் வந்தா பேச்சுத்துணையா இருக்கும்; முழு இடத்தையும் தைரியமா பார்த்துட்டு வரலாம்” என்று கண்ணைச் சிமிட்டினாள்.

​அவர் வாய்விட்டுச் சிரித்தவாறு, “அமெரிக்காவுல தனி ஒருத்தியா போராடி இந்த அளவுக்கு வளர்ந்து வந்த நீ, மூட்டைப் பூச்சிக்குப் பயப்படலாமா?” என்று கிண்டலடித்தார்.

​அவளும் சிரித்தவாறு, “எதிரி கண்ணுக்குத் தெரியுற மாதிரி இருந்தா சுலபமா சாய்ச்சிடலாம்; ஆனா மறைஞ்சிருந்து தாக்குறவனை கண்ணி வச்சுத்தான் பிடிக்கணும்” என்றதும், அவர் “பலே! பலே! பெரிய ஆளுதான் நீ!” என்று பாராட்டும் விதமாகச் சொன்னார்.

“வெளிநாட்டில் இருக்குறப்போ இதெல்லாம் டிவியில் மட்டுமே பார்த்திருக்கேன். அப்போ நான் ஆச்சரியப்பட்டு வியந்து போனதுண்டு. குற்றாலத்தில் உள்ள குரங்குகளின் விளையாட்டு, அருவியில் குளிப்பது, மலை மீது இருக்கும் கோவிலுக்குப் பொடி நடையாய் நடந்து போவது, இயற்கை அழகுடன் கூடிய சுற்றுலாத் தலங்கள், இங்குள்ள பிரசித்தமான கோயில்கள்… இதையெல்லாம் பார்க்கணும்னு ரொம்ப ஆசை! ஆனா எங்க டாடிக்கு பிடிக்காத எதையும் நான் மனசுல வச்சுக்கிறது இல்லை. இப்போ நான் நினைச்சது எல்லாத்தையும் பார்க்குற வாய்ப்பை ஆண்டவன் எனக்குத் தந்திருக்கிறார். இங்கிருந்து போறதுக்கு முன்னே இந்த ஊரை ஒரு வழி பண்ணிடுவேன்!” என்றாள் உற்சாகம் பொங்க…

​அவர் சிரித்ததும், “ஏன் அங்கிள், இங்கயெல்லாம் இயற்கை மருத்துவம் நிறைய உண்டு இல்லையா? அப்படிப்பட்டதுல என் தம்பியைக் கொண்டு வந்து சேர்த்தா அவன் உடம்பு சரியாகுமா?” என்று கேட்க, அதற்காகவே காத்திருந்தது போல, “ஆமா! இங்கே நிறைய இடங்கள் இருக்கு. உன்னை ஊருக்கு வர வச்சது கூட இதுக்காகவும்தான். ஆனா, நீ என் பேச்சைக் கேட்காம இங்கிருந்து ஓடுறதுலேயே இருந்ததுனால சொல்ல முடியல. இப்போதான் நீயே சொல்லிட்டியே… கூடிய சீக்கிரம் அவனையும் இங்கே கொண்டு வந்து இயற்கை வைத்தியம் செஞ்சு குணமடையச் செய்யலாம்” என்றார் பூபாலன்.

ஏற்கனவே ஆனந்தை தோற்கடித்து விட்டதாக நினைத்து மகிழ்ச்சியில் மூழ்கிய அவள் உள்ளம், இப்போது இரட்டிப்பாக உணர்ந்தது.

“அப்புறம், ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்.”

“ம்ம்… சொல்லுங்க!”

“இனிமேல் நீ உங்க அப்பா உனக்காக வச்ச நிஜப் பெயரைத்தான் உபயோகப்படுத்தணும்.”

“ஏன்?”

“ஏன்னா, அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டா அவனுக்குப் பிடிக்கும். என்கிட்ட எப்பவும் சொல்லும்போதும் ‘ஆனந்தி, ஆனந்தி!’ன்னு வாய் வலிக்கும் வரை ஓயாமல் சொல்லிக்கிட்டே இருப்பான். அந்தப் பெயரைச் சொல்லி நாம கூப்பிட்டா அவன் ஆத்மா இன்னும் சந்தோஷப்படும் இல்லையா?”

அப்பாவின் ஆத்மா மகிழ்ச்சி அடையும் என்றதும் அவள் உடனே சம்மதம் தெரிவித்துவிட்டாள். அதோடு, ‘ஜீவா’ என்பது அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த பெயர்; இங்கு இருக்கும் வரை பூபாலன் சொல்வது போல நடந்து கொள்ளலாம் என்று ஒத்துக்கொண்டாள்!

​அவளது சம்மதம் கிடைக்கப் பெற்றதும் பூபாலனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பெருகியது!

பாரதி அனைவருக்கும் காஃபி கலந்து எடுத்து வந்து அழைக்க, அப்போதுதான் தங்கள் அருகில் இன்னும் ஒருவர் இருப்பதை உணர்ந்து அவள் திரும்பிப் பார்த்தாள்.

அந்தப் புதிய மனிதனின் கண்கள் அவள் மீது நிலைத்திருக்க, அதிலிருந்த ஏதோ ஒன்று அவளைத் தடுமாற வைத்தது. ​‘ஏன் இப்படிப் பார்க்கிறார்? இந்தக் கண்களில் இருப்பது பாசமா? இல்லை… சொல்ல வந்து சொல்ல முடியாமல் தவிக்கும் ஏதோ ஒரு ஏக்கமா? யார் இவர்? எதற்காக என்னை இப்படி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்?

இருவரும் பேசாமல் பார்த்துக்கொண்டிருக்க, “அம்மா ஆனந்தி, இவர் பெயர் செல்வா… செல்வநாயகம்! நம்ம ஊர்ல பிரசித்தமான நபர். சொல்லப்போனால் இந்த ஊர் மக்களுக்கு ஏதாவது ஒண்ணுன்னா அடுத்த நிமிஷம் பறந்து வருபவர். சித்த வைத்தியத்துல மருத்துவப் பயிற்சியை முடிச்சு, இந்தக் கிராமத்துல இருக்குற மக்களுக்குத் தேவையான உதவிகளை உடனுக்குடன் செய்து தருபவர்” என்று அறிமுகப்படுத்தினார்.

​இவ்வளவு சின்ன வயதில் இத்தனை பெரிய திறமைசாலியா என்று அவள் வியந்து நோக்க, “என்னம்மா அப்படிப் பார்த்துட்டு இருக்க? செல்வா ரொம்ப நல்ல பையன். பயப்படாம தைரியமா பேசலாம். உனக்கு ஏதாவது வேணுமானாலும் கேட்கலாம். வெளியே எங்கேயாவது போகணும்னு அவன்கிட்ட சொன்னா அடுத்த நிமிஷம் கூட்டிக்கிட்டுப் போயிடுவான். இந்தக் காலத்துல நம்பிக்கையான நபர் கிடைப்பது அரிது; நீயும் ஊருக்குப் புதுசு. தெரிஞ்சவர் துணை இருப்பது நல்லது இல்லையா?” என்று, எப்படியாவது அவளை அவனுடன் பேச வைக்கும் நோக்கில் செயல்பட்டார்.

அவள் தலையசைத்ததும், “இந்தத் தம்பி வேலை பார்க்கிற சித்த வைத்தியசாலையில ஆதர்ஷைச் சேர்த்துச் சிகிச்சை அளிக்கும் விஷயமா கேட்டிருந்தேன். அவரும் சரின்னு சொன்னதால்தான் உன்னை இங்க வர்றப்போ இவர்கிட்ட பேச வச்சு, அதற்கான ஏற்பாடுகளையும் பண்ண நினைச்சிருந்தேன். உனக்குச் சரின்னா எனக்கும் சம்மதம்தான்; இல்லன்னா விட்டுடலாம்” என்றார் பூபாலன்.

​பூபாலன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசியதோடு மட்டுமல்லாமல், அது தனது தம்பியின் விஷயம் என்பதால் அவள் செல்வநாயகத்தைப் பார்த்துக் கைகுவித்து வணங்கினாள். அவனும் வணக்கம் சொல்ல, “வணக்கம்! நீங்களும் சித்த வைத்தியசாலையில் மருத்துவரா இருக்குறதைத் தெரிஞ்சுகிட்டதில் ரொம்ப மகிழ்ச்சி. என் தம்பியோட உடல்நிலையைப் பற்றிக் கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்னு பார்க்கிறேன்” என்றதும், “சொல்லுங்க” என்றான் செல்வா.

​“என் தம்பி ஆறு மாசமா சுயநினைவு இழந்த நிலையில் இருக்கான். அவனை உங்களால் சரி செய்து தர முடியுமா? என் தம்பி முன்னப்போல எனக்குக் கிடைச்சிடுவானா?” என்று கேட்டாள்.

அவள் கண்கள் கலங்கி நாசி விடைத்தது. எப்படியாவது ஆதர்ஷ் சரியாகிவிட வேண்டும் என்ற அவளது வேண்டுதல், செல்வநாயகத்தின் மூலமாக நிறைவேறிவிட வேண்டும் என்பது அவளது ஆசையாக இருந்தது!

“கவலைப்படாதீங்க மேடம்! கூடிய சீக்கிரத்துல உங்க தம்பி குணமடைஞ்சுடுவார். அவரை இங்க வரவழைச்சு, முறையான சிகிச்சை கொடுத்துப் பார்த்துக்க வேண்டியது என் கடமை!” என்று நெஞ்சில் தோன்றிய வைராக்கியத்துடன் சொன்னான்.

அந்த வார்த்தையில் இருந்த உறுதியை அவள் கவனிக்கவில்லை.

“ரொம்ப சந்தோஷம்! எவ்வளவு பணம் செலவானாலும் நான் தர்றேன். என் தம்பியை மட்டும் நீங்க சரி செய்து தந்தால் போதும்!”

அவன் சிரித்த முகத்துடன், “பணம் என்னங்க பொல்லாத பணம்… அதை எப்ப வேணா எப்படி வேணா சம்பாதிக்கலாம். ஆனா மனநிறைவு… அதை எல்லாரிடமும் பெற முடியாது. நீங்க இந்த ஊருக்கு வந்துட்டீங்க இல்ல! உங்களை ஒரு கவலையும் இல்லாம பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு. உங்க தம்பியைப் பத்தின கவலையும் இனி உங்களுக்குத் தேவையில்லை” என்றான்.

​தொடர்ந்து, “இதுவரை அவருக்குச் சிகிச்சை அளித்த சான்றிதழ், மருந்து விவரம் எல்லாம் எனக்கு வேணும். அதெல்லாம் பார்த்துட்டு அடுத்த கட்டச் சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணிடலாம்” என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினான் செல்வா.

இந்த ஊருக்கு வந்த இடத்தில் இப்படி ஒரு நன்மை பயக்கும் என்று எதிர்பாராத ஆனந்தி, அத்தனை மகிழ்ச்சி அடைந்தாள்!

சென்னையில் கோவில் பூசாரி சொன்னது போல, குலதெய்வத்திற்குப் பூஜை வழிபாடு செய்தால் தம்பி பூரணமாகக் குணமாகிவிடுவான் என்று உளமாற நம்பினாள். அதனால் அவனுக்கு நன்றி தெரிவித்து, பாரதியிடம் இருந்து வாங்கிய காஃபியை அருந்திவிட்டு மாடிப் பகுதிக்கு வந்தாள்.

எளிமையும் அழகும் கூடிய அந்த இரண்டு மாடி வீடு அவளுக்கு அத்தனை பிடித்தமாய் இருந்தது. இரண்டாவது மாடியில் வந்து நின்று பார்க்கும்போது, ஊரில் உள்ள இயற்கை எழில் அவளது கண்ணைப் பறித்தது. ‘எவ்வளவு அழகா இருக்கு! இத்தனை வருஷமா இதைப் பார்க்காம விட்டுட்டோமே! இங்கிருந்து போனதும் தம்பியைப் பார்த்து அவனோட உடல்நிலை எப்படி இருக்குன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கணும். அப்புறம் தம்பியையும் இங்க கூட்டிட்டு வந்து அவனுக்கு உடம்பு சரியாகுற வரைக்கும், நாமளும் அவன்கூட இங்கேயே இருக்கணும்’ என்று முடிவு செய்தாள்.

மாடியில் உள்ள பெரிய அறை ஒன்று அவளது உபயோகத்திற்காகக் கொடுக்கப்பட்டது. அதில் உள்ள ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும்போது, சின்னச் சின்னக் குருவிகள் அங்கும் இங்குமாக ஓடுவதும், சில்வண்டுகளின் ரீங்காரமும் செவியை நிறைத்தன.

செல்வநாயகம் சற்று நேரம் அவர்களிடம் பேசிவிட்டுச் சென்றுவிட, குளியலை முடித்து உடை மாற்றிவிட்டு வந்து, உணவை எடுத்துக்கொண்டு மாடியில் உள்ள தனது அறைக்கு வந்தாள் ஆனந்தி. தட்டில் வைத்திருந்த உணவைத் தானும் உண்டுவிட்டு, ஜன்னல் அருகில் உள்ள கிளையில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த சிறுசிறு குருவிகளுக்கும் வைத்தாள்.

முதலில் வர மறுத்த அந்தப் பறவைகள், பின்னரே யாரும் இல்லாததை அறிந்துகொண்டு, மெல்ல மெல்லத் தலைநீட்டி அதன் அருகில் சென்று, ஒற்றை ஒற்றைப் பருக்கையாக எடுத்து அலகிற்குள் கொண்டு சென்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!