Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

09. ஜீவிதா - ஜீவதாளத்தின் லயமிவளோ

ஜீவ தாளம் : 8

அத்தியாயம் : 8

ஆனந்தி அன்று முழுவதும் உற்சாகமாய் வளைய வந்தாள்! பூபாலனை அழைத்துக் கொண்டு வீட்டின் பின்புறமுள்ள பகுதிகளைப் பார்வையிட்டாள். அங்குக் காணப்பட்ட சிறிய குருவிகள் ஓடுவதைக் கண்டு, தானும் அவற்றோடு சேர்ந்து ஓடி விளையாடினாள்!

அவளது உற்சாகம் அவரையும் தொற்றிக் கொள்ள, அப்படியே நெற்கதிர்கள் விளைந்துள்ள வயல்வெளிக்கு அவளை அழைத்து வந்தார். அங்குச் செல்வா வரப்பில் நிற்பதைக் கண்டு புன்முறுவலுடன் நடந்தாள். அவன் வயலில் வேலை செய்பவர்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டு இருக்க, அவனைக் கடந்து செல்ல வழி இல்லாமல் அமைதியாக நின்றாள்.

அவனும் பின்னரே அவளைப் பார்த்துவிட்டு, “வாங்கம்மா! என்ன… தோட்டம் துறவெல்லாம் சுத்திப் பார்க்க வந்துருக்கீங்களா?” என்று விசாரித்தான்.



Advertisement

“ம்ம்…”

“எங்க ஊர் எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?”

அவள் சிறு தலையசைப்பால் தன் பதிலைச் சொன்னாள். செல்வா, பூபாலனை பார்க்க அவரும் கண் மூடித் திறந்தார்.

Advertisement

“நீங்க அதிகமா பேச மாட்டீர்களா? இல்லை பேசத் தெரியாதா?” என்று கிண்டலாகக் கேட்டான் செல்வா. அவன் எதற்காக அப்படி பேசுகிறான் என்று புரியவும், அவள் முத்துப் பற்கள் தெரிய புன்னகைத்தாள்.

Advertisement

அவன் அவளது சிரிப்பை ரசித்தபடி, “இந்த வாய் திறந்து பேசினா முத்துக்கள் உதிர்ந்துடும்னு சொல்லுவாங்களே, அது இதுதானோ!” என்றான்.

“அங்கிள்! இவங்க என்னை வேணும்னு கிண்டல் பண்ற மாதிரியில்ல?”

பூபாலன் சத்தமாக சிரித்ததும், “நான் வாய் திறந்தா மூட மாட்டேன். மூடிட்டா திறக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியாது?” என்றாள் அவளும் பதிலுக்கு.

Advertisement

“ஓஹோ… உங்களுக்குப் பேசக் கூட தெரியுமா? நானும் பேசா மடந்தைன்னு நினைச்சுட்டனே!” என்று மீண்டும் மீண்டும் சீண்டினான் செல்வா. எப்படியாவது அவள் தன்னிடம் பேசிவிட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனமுழுவதும் வியாபித்து இருந்தது. அது அவன் பேச்சிலும் வெளிப்படையாக தெரிந்தது.

“பேசினா என்ன தருவீங்க? என் தம்பிக்கு இலவசமா வைத்தியம் பார்ப்பீங்களா?”

​“அடடா! இது ஒரு மேட்டரா?”

​“நீங்க ஒரு பெரிய ‘கைராசிக்கார டாக்டர்’னு அங்கிள் சொன்னாங்க. உங்க கை பட்டதும் என் தம்பி முன்னப்போல சரியாகிருவானா?” என்று கேட்டாள்.

அவளது பேச்சில் எப்போதும் தம்பி கலந்திருப்பது கண்ட செல்வா, அவள் மனதையும் புரிந்து கொண்டான். அவளுக்கு இருப்பது அவன் மட்டுமே, அவனையே வாழ்வாதாரமாக நினைத்து வாழ்ந்து வருகிறாள். அதனால், அவனைப் பற்றியே சதா நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.

“என்ன டாக்டரு பதிலை காணும்?”

அவன் முகம் மலர, “நீங்க என்கூட கொஞ்ச நேரம் வந்தா… அதோ அந்தப் பக்கம்தான் நம்ம வைத்தியசாலை இருக்கு. அங்க போனதும் நான் சொல்லாம நீங்களே பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்” என்றான். அவள் தயங்கியவாறு பூபாலனைப் பார்த்தாள்.

அவரும், “செல்வா ரொம்ப நல்லவன்! நம்பிக்கையான ஆளும்கூட… நேத்தே அவனைப் பத்தி சொன்னேனே… போயிட்டு வாயேன்மா” என்று சொல்லிவிட்டு, தான் மட்டும் மெல்ல நழுவிவிடப் பார்த்தார். அவள் அவரையும் அழைத்தாள்.

“இல்லைம்மா, இவ்வளவு தூரம் நடந்து வர்றதுக்குள்ள மூச்சு இரைக்குது. அங்கே போயிட்டு வர ரொம்ப நேரமாகும். அத்தை மட்டும் வீட்டுல இருப்பா, நாளைக்குப் பூஜை விஷயமா கோவிலுக்கும் போய் விசாரிக்கணும். நீ நம்ம செல்வா கூடப் போயிட்டு, நல்லா சுத்திப் பார்த்து விவரம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுட்டு வா. அப்போதானே ஆதர்ஷை இங்கே கூட்டிட்டு வந்ததும் சேர்க்க முடியும்” என்றார் பூபாலன்.

அப்படியும் அவள், “நீங்களும் வாங்க அங்கிள். நாம மூணு பேருமா சேர்ந்து போயிட்டு உடனே வந்துடலாம்!” என்று செல்வாவுடன் தனியாகச் செல்வதற்குத் தயங்க, அவரும் அதைப் புரிந்து கொண்டு அவனைப் பார்த்து ஜாடையாக ஏதோ சொன்னார்.

“உங்களை நான் கடத்திட்டுப் போயிடுவேனோன்னு பயப்பட வேண்டாம். இப்படியே கொஞ்ச தூரம் நடந்தா நம்ம வைத்தியசாலை வந்துடும். அங்கே போய்ச் சுத்திப் பார்த்தா, உங்களுக்கு என்மேல இன்னும் நம்பிக்கை வரும்னு நினைக்கிறேன்!” என்றான் செல்வா.

அவன் அப்படிச் சொன்னதும் ஆனந்திக்குச் சற்று சங்கடமாகிவிட்டது. தன் மனதிற்குள் இருந்த தயக்கத்தை அவன் இவ்வளவு வெளிப்படையாக உடைப்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.

​“ச்சே… ச்சே! அப்படியெல்லாம் எதுவுமில்லை. உங்களைப் பற்றி எனக்கு அதிகமா தெரியாதுல்ல… அதான் எப்படித் தனியா வருவதுன்னு ஒரு தயக்கம்…” என்று மெதுவாகச் சொல்ல, “நியாயமான காரணம்தான்! உங்களைத் தப்புச் சொல்ல நானும் இதைச் சொல்லலை” என்றான் செல்வா.

​அவன் பேச்சில் இருந்த முதிர்ச்சியும், அவளது தயக்கத்தை மதித்த விதமும் ஆனந்திக்கு அவன் மீது நம்பிக்கையைத் தந்தது. தன் தம்பிக்காக எத்தனையோ மருத்துவர்களிடம் சென்றிருந்தாலும், இவனிடம் ஒரு வித்தியாசம் இருப்பதை அவளால் உணர முடிந்தது.

பூபாலன் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தும் விதமாக, “அம்மா ஆனந்தி! செல்வா அப்படிப்பட்ட ஆளில்லம்மா… பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இதுக்குப் பக்கத்துலதான் வைத்தியசாலை இருக்கு. அங்கே போய் பார்த்துப் பிடிச்சிருந்தா, ஆதர்ஷைக் கூட்டிட்டு வர்றப்போ எந்த ஒரு தயக்கமும் இருக்காது இல்லையா? அதனாலதான் உன்னைப் போய்ப் பார்க்கச் சொன்னேன். விருப்பம் இல்லைன்னா போக வேண்டாம்… வா நாம வேற இடத்தைப் பார்க்கலாம்!” என்று மறுக்க முடியாத காரணத்தைச் சொன்னார்.

‘தம்பி’ என்ற ஒரு வார்த்தை மட்டுமே அவளை இயக்குவதை இத்தனை நாளில் தெரிந்து வைத்திருந்த பூபாலன், எதைச் சொன்னால் சம்மதிப்பாள் என்று சரியாகக் கணித்து அந்த இடத்தைத் தொட்டார்! அவர் நினைத்தது போலவே ஆனந்தியும் சம்மதம் தெரிவித்தாள்.

“அப்போ நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வரோம்!”

செல்வா கூறியதும், “நாளைக்குக் கோயில்ல பூஜை வைக்கணும் இல்ல… அது விஷயமா ஏற்பாடுகள் எப்படி இருக்குன்னு நான் போய் ஒரு எட்டுப் பார்த்துட்டு வர்றேன். நீ அவளைக் கூப்பிட்டுப் போய் வைத்தியசாலையையும் சுத்திக் காமிச்சிட்டு, நம்ம வீட்டுல கொண்டு வந்து விட்டுடு!” என்று சொல்லி, அவனிடம் ஒப்படைத்துவிட்ட மகிழ்ச்சியில் வீட்டை நோக்கி நடந்தார்.

செல்வா முன்னே நடக்க, ஆனந்தி சுற்றுப்புறங்களில் உள்ள நெற்கதிர்களையும், தென்னைத் தோப்புகளையும் பார்வையிட்டவாறு வந்தாள்.

“ஏன் டாக்டர் சார்… உங்க வீடும் இந்தப் பக்கமாத்தான் இருக்கா?”
அவன் சிரித்த முகத்துடன், “டாக்டர் சார் எல்லாம் வேண்டாம்… செல்வா… செல்வானே கூப்பிடுங்க!” என அனுமதி கொடுத்தான்.
​“அச்சச்சோ! நீங்க எவ்வளவு பெரிய ஆளுன்னு அங்கிள் சொன்னாங்க… நான் எப்படி உங்களைப் பேர் சொல்லிக் கூப்பிடறது?” என்று அவள் தயக்கம் காட்டினாள்.
​“அட என்னங்க பெரிய ஆளு? சொல்லப்போனா உங்களைப் போல நான் ஒண்ணும் படிச்சதும் இல்லை; வெளி உலக அனுபவமும் கிடையாது. இந்தக் கிராமத்துக்குள்ளேயே முழு நேரமும் இருக்குற ஒரு கிணத்துத் தவளை நான்” என்று அவன் சிரித்துக்கொண்டே சொல்ல, ஆனந்தி உடனே அதை மறுத்துப் பேசினாள்.
​“அப்படிச் சொல்லாதீங்க டாக்டர்! வெளி உலக அனுபவம்ங்கிறது வேற, ஒருத்தரோட உயிரைக் காப்பாத்துற அறிவும் அர்ப்பணிப்பும் வேற. நீங்க பண்ற இந்தச் சேவை எத்தனையோ படிப்புக்குச் சமம்” என்றாள் உறுதியாக.
ஆனந்தியின் கண்கள் உண்மையான மரியாதையுடன் மின்னின. ​அவன் புன்னகைத்தபடி அவளை அந்த வைத்தியசாலையை நோக்கி அழைத்துச் சென்றான்.

“இந்த ஊரைப் பத்தி சொல்லுங்களேன். இங்க என்னென்ன முக்கியமான இடங்கள், கோயில்கள் இருக்கு? அப்படியே உங்க வீட்டைப் பத்தியும் சொல்லுங்க, கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்.”

அவள் இயல்பாகப் பேச்சு கொடுத்ததும் அவனும் உற்சாகமாக, “இன்னைக்கு வயல்வெளியைப் பார்த்துட்டு அப்படியே நம்ம வைத்தியசாலைக்குப் போகலாம். நாளைக்குக் கோவிலில் பூஜைகள் இருப்பதால், மாலை நேரத்துல இருந்து ராத்திரி வரைக்கும் அங்கேயே நேரம் போயிடும். மறுநாள் எங்க வீட்டுப் பக்கம் அழைச்சுட்டுப் போறேன். நீங்களே எங்க ஊரையும் எங்க வீட்டையும் நேர்ல பார்த்துத் தெரிஞ்சுக்கோங்க,” என்றான்.

அவளும் ‘சரி’ எனத் தலையாட்டினாள். “இந்தப் பக்கம் மலைப் பிரதேசம்ங்கிறதால ஏசி வச்ச மாதிரி எப்பவும் குளிராவே இருக்கும். உங்க ஊர்ல நீங்க செயற்கையா வச்சிருக்கிற ஏசி, எங்க ஊர்ல இயற்கையாவே மின்சாரம் இல்லாம கிடைக்கும். இதுக்கெல்லாம் காசு கொடுக்க வேண்டிய அவசியமே இல்லை!” என்று செல்வா சொல்ல, அவள் கலகலவெனச் சிரித்துவிட்டாள்.

இருவரும் பேசிக்கொண்டே அந்த இடங்களைச் சுற்றி வந்தனர். ஒரு சில இடங்களில் அவளால் நடக்க முடியாமல் தடுமாறியபோது, செல்வா கை கொடுத்து அவளைத் தாங்கினான். அவனது இயல்பான பேச்சும் பண்பான நடத்தையும் அவளிடம் ஒரு மெல்லிய நட்புணர்வை ஏற்படுத்த, அவன் பிடித்துள்ள கையை விடுவிக்கும் எண்ணமே இல்லாமல் அவனுடன் இணைந்து நடந்தாள் ஆனந்தி.

நீரோடையிலும் கரடுமுரடான பாதைகளிலும் அவளால் நடக்க இயலாதபோது, கனிவுடன் அவளைத் தூக்கி மறுபுறம் நிறுத்தினான் செல்வா. அந்த அக்கறை அவளுக்கு வியப்பை அளித்தது. ​‘இப்படி ஒரு மனுஷன் இருக்க முடியுமா? அறிமுகமே இல்லாத என்கிட்டயே இவ்வளவு பாசம் காட்டுபவர், கண்டிப்பா இந்த ஊர் மக்களுக்கு நல்லது செய்யத் தயங்க மாட்டார்’ என்று மனதார எண்ணினாள்.

இருவரும் அங்கிருந்து அவனது வைத்தியசாலைக்குள் நுழைந்தனர். சுற்றிலும் இருந்த பெரிய மரங்களைப் பார்த்துக்கொண்டே நடந்தவள், மக்கள் அவனைக் கண்டதும் மரியாதையுடன் வணங்குவதையும், நோயாளிகளிடம் அவன் மிகுந்த கனிவோடு பேசுவதையும் கவனித்தாள். அவன் அவளை அழைத்துச் சென்று அங்கிருந்த இடங்களைக் காண்பித்த விதத்தைக் கண்டு, ‘ஒரு உண்மையான மக்கள் தலைவனைக் கண்டுவிட்டோமோ!’ என்று வியந்து போனாள்.

மருத்துவமனையில் உள்ள ஓர் அறையில் காயங்களுடன் படுத்துக் கிடப்பவர்களைக் கண்டதும், அவள் அதிர்ந்து போய் நின்றாள். ​“என்ன ஆச்சு டாக்டர்… விபத்தா? இவங்களுக்கெல்லாம் கை, கால்ல ஏன் இவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டாள்.

அவன் முகம் கடுகடுத்தது. அந்தச் சினத்தை அவளிடம் காட்ட விரும்பாமல், தன் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாகப் பேசினான் செல்வா.

“ஆனந்தி, நம்ம ஊருக்கு அந்தப் பக்கம் இன்னொரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருக்காங்க. அவங்களுக்கு எங்களைக் கண்டாலே ஆகாது. எங்க ஊர்க்காரங்க யாராவது அவங்க வயல்வெளிப் பக்கமோ, வீட்டுப் பக்கமோ போனா போதும்… ஆள் வச்சு அடிச்சுத் துரத்திடுவாங்க. இங்கிருந்து மெயின் ரோட்டுக்கு போறதுக்கு இருந்த நேர்வழியைக் கூட அவங்க துண்டிச்சுட்டாங்க. அவங்க ஊர் பக்கம் இருக்குற கோயிலுக்கும் எங்களை விட மாட்டாங்க. நம்ம ஊர்க்காரங்களுக்கு நோய் நொடி, கஷ்டம் வந்தா ஆஸ்பத்திரிக்குப் போறதே கஷ்டமா இருக்கும்னுதான், நானே முன்வந்து இந்த வைத்தியசாலையை ஆரம்பிச்சு உதவி செஞ்சுட்டு இருக்கேன்,” என்றான் செல்வா.

​அவள் நம்ப முடியாமல் அவன் முகத்தையே பார்த்தாள். “என்ன சொல்றீங்க செல்வா? இதெல்லாம் ஏதோ சினிமாவுல வர்ற மாதிரி இருக்கு! இந்தக் காலத்துலயும் கூடவா இப்படியெல்லாம் நடக்குது? போலீஸ் ஸ்டேஷன் இருக்கே… அங்க கம்ப்ளைன்ட் கொடுத்தா அவங்க ஆக்ஷன் எடுக்க மாட்டாங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டாள்.

செல்வா கசப்புடன் சிரித்தான். “ம்ம்… எவ்வளவு நேரம்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலைய முடியும்? அவங்க கேஸ் ஃபைல் பண்ணி, சாட்சி சொல்லக் கூப்பிட்டு, எதிராளிகிட்ட பணத்தை வாங்கிட்டு இழுத்தடிக்கிறதுக்குள்ள மாசக்கணக்காகிடுது. அதையெல்லாம் நம்பிச் சும்மா இருக்க முடியாது இல்லையா? அதுலயும் சாட்சி சொல்றவனை மிரட்டுறாங்க, அடிக்கிறாங்க… ஏன், லாக்கப் மரணத்தைக்கூட ஏற்படுத்துறாங்க. நம்ம மக்களும் அதைப் பார்த்துப் பயப்படுறாங்க. என் ஜனங்களைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருக்குறதால, நான் போலீஸை முழுசா நம்புறது இல்லை” என்றான்.

செல்வாவின் முகம் இறுகிக் கிடந்தது. அவன் கூறியதைக் கேட்டதும், ‘இவ்வளவு கொடிய மனிதர்கள் இப்போதும் இருக்கிறார்களா?’ என்ற ஆச்சரியமும் அதிர்ச்சியும் அவளிடம் மேலோங்கியது!

“இதெல்லாம் செய்யுறது யாருன்னு சொல்ல முடியுமா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் ஆனந்தி.

“தலைமுறை தலைமுறையா ஒரு பெரிய பணக்கார குடும்பம் பக்கத்து ஊர்ல இருக்கு. அவங்க சொல்றதுதான் அங்கே வேதவாக்கு. மத்தவங்களை அவங்க மனுஷங்களாவே மதிக்கிறது இல்லை. நாடார், சாம்பவர், வண்ணார்னு பல சமூக மக்கள் நம்ம ஊர்ல இருக்காங்க. பழங்காலத்துல அவங்களை அடக்கி வச்சிருந்தாங்கன்னா… இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகும் அதே மாதிரி நடக்கணும்னு அவசியம் இல்லையே? அவங்க இன்னும் தங்களை மேலானவங்களாகவும், மத்தவங்களைத் தாழ்ந்தவங்களாகவும் நினைச்சுட்டு இருக்காங்க,” என்றான் செல்வா வெறுப்புடன்.

“ஓ மை காட்!!”

“ஆமா! மலை மேல இருக்குற முருகன் கோவில் திருவிழாவுக்கோ, சாமி கும்பிடவோ யாராவது போனா, அங்கிருந்து அவங்களைத் தூக்கி வீசிக் கொல்லக்கூடத் துணியுற கொடியவங்க அவங்க… ஆடு மாடு தவறி அந்தப் பக்கம் போயிட்டா கூடத் திருப்பித் தர மாட்டாங்க. அந்தப் பக்கம் யாரும் போகக் கூடாதுன்னு ஒரு எழுதப்படாத சட்டமே வச்சிருக்காங்க. அதனாலதான் நம்ம ஊருக்கு வர்றதுக்கு ஒரே ஒரு வழிப்பாதை இருக்கு. வந்த வழியிலேயேதான் திரும்பிப் போகணும்.”

“ஓ! அந்த அளவுக்குப் பயங்கரமானவங்களா? அவங்களைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா?”

“தட்டிக்கேட்டவங்க யாரும் இன்னைக்கு உயிரோட இல்லை. இப்போ இங்கே அடிபட்டுப் படுத்துக் கிடக்குறவங்களும் அந்தப் பக்கம் தெரியாமப் போனவங்களாதான் இருப்பாங்க.”

“அடக் கடவுளே! அதுக்காக இப்படியா கை கால் உடையுற அளவுக்கு அடிப்பாங்க?”

“அங்கே அண்ணன் தம்பி ரெண்டு பேர் இருக்காங்க. அவங்களை ஆட்டிப்படைக்கிறது அந்த வீட்டு மருமகன். முன்னாடி அவங்க அப்பா சொல்லுக்குப் பணிந்து ஊரே கொத்தடிமையா இருந்தது. இப்போ அந்த மருமகன் அதைவிட மோசமா நடந்துக்கிறார். அவருக்குத் துணையா ரெண்டு மச்சான்கள். ஏகப்பட்ட பணம், செல்வாக்கு, அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு… அவங்க வீட்டு வேலைக்கும் தோப்புக்கும் ஆட்கள் நிறைய இருக்காங்க. நம்ம ஊர்க்காரங்க யாரையாவது பார்த்தாலே கம்பு எடுத்துட்டு வீதியில் இறங்கிடுவாங்க. நான் கூட யாரும் அந்தப் பக்கம் போகாதீங்கன்னு சொல்லி இரும்பு வேலி போட்டிருக்கேன். ஆனாலும் சிலருக்கு இப்படி ஆபத்து நேர்ந்துடுது” என்றான் செல்வா.

அவள் புரியாமல் பார்க்க, அவன் தொடர்ந்தான், “நம்ம ஊர் மக்களோட விவசாய நிலங்களுக்குப் பக்கத்துலயே அவங்க நிலங்களும் இருக்கு. அங்கே போகக் குறுக்கு வழியைப் பயன்படுத்துவாங்க. அப்படிப் போகும்போதே மோதல் வருது. அவங்க பக்கத்துல இருந்து வர்ற தண்ணீரைக் கூடத் திறந்துவிட மாட்டாங்க. வயலுக்குத் தண்ணி பற்றாக்குறை வர்றப்போ நம்ம மக்கள் போய்க் கேட்பாங்க… இதுக்கிடையில் காதல், கல்யாணம்னு வேற ஜாதியில் ஏதாச்சும் நடந்துட்டா போதும்… ஊரே பற்றி எரியும்,” என்று சொல்லும்போதே செல்வாவின் கண்கள் ஏதோ ஒரு பழைய நினைவில் கலங்கின.

ஆனந்திக்கு இதைக் கேட்கவே பயமாக இருந்தது. ‘இவ்வளவு சுதந்திரம் கிடைத்தும் இன்னும் இப்படியொரு அராஜக வாழ்க்கையா?’ என்று அவள் மனம் கொதித்தது. அதிகாரம் படைத்தவர்கள் எளிய மக்களைத் துன்புறுத்துவதைக் கண்டு அவளுக்குச் சினம் பொங்கியது.

“ஏன் டாக்டர்… இந்தத் தொகுதி எம்.எல்.ஏ, பஞ்சாயத்துத் தலைவர்னு யாரும் இல்லையா? ஓட்டு கேட்க வர்றப்போ இதைப் பத்திப் பேசிருக்கலாமே! இல்லன்னா, நம்ம ஊர்க்காரங்க யாரையாவது தேர்தல்ல நிக்க வச்சு, அவங்க மூலமா இதையெல்லாம் தடுத்திருக்கலாமே?” என்று கேட்டாள்.

அவன் ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்தான்.

“ஊருக்குப் புதுசா வந்த நீங்களே இவ்வளவு யோசிக்கிறப்போ, இத்தனை வருஷமா இங்கேயே இருக்குற நான் யோசிக்காம இருப்பேனா? நம்ம ஆளுங்க சிலரை நான் வேட்பாளரா நிக்க வச்சிருந்தேன். ஆனா, அந்தப் பெரிய இடத்து ஆளுங்க வேட்பாளரை இரவோட இரவா வீட்டுக்குப் போய்த் தாக்கிட்டாங்க. இல்லன்னா விபத்தை உண்டாக்கி எழுந்து நடக்க முடியாம பண்ணிடுவாங்க. ஒரு சிலரை கொலை மிரட்டல் விடுத்து மனுவைத் திரும்பப் பெற வச்சுட்டாங்க” என்றான்.

“ஓ!”

“ம்ம்… இப்பதானே வந்திருக்கீங்க. கொஞ்ச நாள் இங்கேயே தங்கியிருந்து பாருங்க, அப்போ உங்களுக்கே புரியும்.”

“இவ்வளவு கொடியவங்க இருக்குற இடத்துல உங்களால் எப்படி இருக்க முடியுது?”

​அவள் கேட்ட அந்த ஒரு கேள்வி செல்வாவின் மனதிற்குள் பழைய ரணத்தைத் தட்டி எழுப்பியது. அதுவரை மென்மையாகப் பேசிக்கொண்டிருந்தவனின் கண்கள் சட்டெனச் சிவந்தன. நரம்புகள் புடைக்க முகம் இறுகி நின்ற விதம் அவளுக்குப் புரியவில்லை. ஆனாலும், அந்த மௌனத்தில் ஒரு பெரும் ஆக்ரோஷம் இருப்பதை ஆனந்தி உணர்ந்தாள்.

​நிச்சயமாக அந்த ஆட்களால் அவனும் ஏதோ ஒரு பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறான் என்பது மட்டும் அவளுக்குப் புரிந்தது. அதற்கு மேல் அவனைக் கிளறி கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து, அமைதியாக வைத்தியசாலையைச் சுற்றிப் பார்த்தாள்.

​அங்கிருந்த ஒவ்வொரு காயமும், ஒவ்வொரு தழும்பும் அந்த ஊர் மக்கள் அனுபவிக்கும் அடக்குமுறையின் சாட்சிகளாய் அவளுக்குத் தெரிந்தன. ஒரு கனத்த இதயத்துடன் அங்கிருந்து வெளியே வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!