Skip to content
Post Views: 3,226
ஒற்றை குயிலின் சோகம் கூட இன்னிசையாகத்தான் ஒலிக்கிறது.
Advertisement
ஜோடிக்குயிலுக்கோ அந்த ஜீவ நாதத்தை உணரும் விருப்பம் தானில்லை. இருந்திருந்தால் இரண்டும் சேர்ந்து பாடும்போது அது ஒரு மோகனராகமாக ஊற்றெடுத்து இருக்கும்.
ஆதித்யாவின் கண்கள் ஜன்னல் வழி வெட்ட வெளியை பார்த்துக் கொண்டு இருந்தன. மேகங்களற்ற வானம் அவனின் சலனங்களுடன் கூடிய மனதிற்கு எதிர்ப்பதமாக இருந்தது.
Advertisement
Advertisement
கடந்த காலங்கள் எல்லாம் காட்சிபிழையாகி விடாதா? – அவனின் ஏக்க எதிர்ப்பார்ப்பிற்கு பதில் சொல்ல காலத்திற்கும் விருப்பமில்லை.
இரண்டு வருடங்கள் இந்த அறைக்குள்ளேயே கழிந்து விட்டது.
Advertisement
மருத்துவமனை வாசம் அவனை சுற்றியே இருந்த, நினைவுகள் மட்டுமே துணையாய் நிறைந்த நரக நாட்கள்.
என்ன அவனை சுற்றிலும் கொஞ்சம் காதல்.. நிறைய பாசம் நிறைந்திருந்தது. அதில் தான் பிழைத்துக் கிடந்தான்.
எழ முடியாது படுக்கையில் கிடந்தவனை பார்க்கும் போது, கண்மணியின் கண்கள் காதலில் துடித்து அவனை பார்வையால் தழுவிக் கொள்ளும். ‘அழுத்தக்காரி’ அவன் மனம் உச்சரிக்கும் மந்திரம்.. அவன் நினைப்பது போல அழுந்தி உதட்டை கடித்து, மடித்து அவள் காதலை இதயத்துக்குள் கடத்திக் கொள்வாள்.
அரவிந்த் தான் அத்தனை கோபத்தையும் எங்கே தூக்கி எறிந்தான் என்று தெரியவில்லை. அவனது வேலைக்கான நேரம் தவிர, மீதி நேரம் ஆதியே கதியாக கிடந்தான்.
தாரா.. பார்த்து பார்த்து கண் குளிர வேண்டிய வயதில் இருந்தாள். ஆதி கண்மூடி கிடக்கும் நேரமெல்லாம் அவளின் கண்ணீர் துளிகள் ஆதியின் கண்களின் மேல் பட்டுத் தெறிக்கும்.
நினைவற்று கிடந்த பதினான்கு நாட்களில் அவன் இதயத்தை தட்டி தட்டி எழுப்பிய உணர்ச்சி உளிகள் அது. அதில் எழுந்தவன் ஒரு வருடமாக நடக்காத பிணம் போல் கிடந்து தவித்தான். அடுத்த ஒரு வருடம் அந்த அறைக்குள்ளேயே தான் உணவு, நடை, தூக்கம்.
“பாஸிங் க்ளவுட்ஸ்” அவன் கண்முன் வானத்தில் கடந்து செல்ல ஆரம்பித்தது. “பாஸ்ட் ஹேஸ் பாஸ்டு ஆதி” மனசாட்சி கடிகார குருவி போல எட்டிப்பார்த்து சொன்னது.
தனிக்காட்டு ராஜாவான ஆதி, இப்போது தனியே தனக்குள் ராஜாவாக இருந்தான்.
மயில் ராவணனுக்கு ஆதி இப்போது வேண்டாத சுமை. அவனால் தான் நாம் இந்த நிலைக்கு வந்தோம் என்ற நன்றியுணர்ச்சி அற்ற தந்தை.
கண்ணீர் குரலால் மட்டுமே ஆதியை தாலாட்டும் அன்னையாக மாறிப்போன அன்னபூரணி.
யமுனா எப்போதாவது வருவாள். அவளால் ஆதியை இந்த நிலையில் பார்ப்பதற்கு தாளாது. அவனின் கைகளை பிடித்துக் கொண்டு அவனையே பார்த்தபடி இருப்பாள். எதுவும் பேசாமல் எழுந்து சென்று விடுவாள்.
அவனும் எதுவும் பேச மாட்டான். ஆனால் ஏனோ ஸ்வாதியை யமுனா வடிவில் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்வான்.
மொத்தமாக ஆடி அடங்குவதற்குள் வாழ்க்கை எப்போதும் ஒரு வாய்ப்பு தரும். ஒரு வருடமோ, இரு வருடமோ
ஒரு இடைவெளி விட்டு கையில் இருந்த அனைத்தையும் பறித்து காண்பிக்கும் விதியின் விளையாட்டு அது. அதில் முழித்துக் கொள்பவன் பிழைத்துக் கொள்வான். அப்போதும் ஆடுபவன் சுவடற்று போவான். ஆதி தப்பி பிழைத்தவன்.
ஐம்பதை நெருங்கிக் கொள்ளும் ஆணிற்கு குடும்பத்தை பற்றிய பதைபதைப்பு மட்டுமே இருக்கும். அது தான் ஆதியை நெருப்பில் சுட்டு தங்கமாக பதப்படுத்தி ஆபரணமாக்கி தந்தது.
‘இனி நான்.. ஆதித்யா ராவணன்.
இல்லை. ஆதித்யா. எந்த பின்னொட்டும் இல்லை.
முன் வாழ்க்கை இருண்ட காலம். என்னையே நான் புதைத்துக் கொண்ட பிரளய காலம்.
நிகழ்காலத்தில் நிகழப்போவது தான் என் குடும்பத்துக்கு எதிர்காலம்.’
மெல்ல கதவு திறந்தது. வாடைக்காற்று அவன் முகத்தில் அறைந்தது.
அவன் திரும்புவதற்குள், அவன் கைகளை இரு கைகள் பிடித்தன. அரவிந்தும்.. தாராவும். இருவரையும் இடது தோளில் சாய்த்துக் கொண்டான்.
அவர்களின் கைகள் அவனது வலது தோளின் காயக்கட்டுக்களை வருடியது.
“தாராக்குட்டி.. அப்பாவோட இந்த கையில் நீ திரும்ப தொங்கலாம். இன்னும் ஒரே மாசத்தில் அப்பா எப்படி மாறறேன்னு பாரு.” கதவை திறந்து உள்ளே வந்த கண்மணியின் காதில் சரியாக அந்த வார்த்தைகள் ஒலித்தது.
அவளின் பார்வை ஊசி முனையாக எப்போதும் போல் அவனது நெஞ்சத்தில் தைத்தது.
“பழையபடி நான் ராஜான்னு திமிர் பிடிச்சு திரிய வேணாம்னு சொல்லு அரவிந்த்”
“அரவிந்த். மாமா பழைய ஆதியா வரப்போறதில்ல. ஆதித்யாவா வரப்போறேன். சில சமயம் அந்த பழைய திமிர் தேவைப்படும். தோத்த இடத்தில் ஜெயிச்சு காமிக்க எழுந்து நிக்கனும் இல்ல. அதுவும் தன்னந்தனியா.. உன் அம்மாட்ட சொல்லு.”
“ஆதித்யாவா வந்தாலும் வாழ்க்கையில் வாங்கின அடியை நினைச்சுக்க சொல்லு அரவிந்த். அதே திமிர்ல யார் குடியையாவது கெடுக்க போனார்னா, கடவுளே நினைச்சாலும் அவரை காப்பாத்த முடியாது. பாவ கணக்கை இன்னும் ஏத்திக்க வேணான்னு சொல்லு.”
அரவிந்த்க்கு இது பழகிவிட்டது. தாரா மூவரையும் மாறி மாறி பார்த்தாள். பதின் வயதை நெருங்க போகும் போது வரும் குழப்பத்தோடு இந்த குழப்பங்களும்.
தாராவை மீண்டும் தன் கையால் அணைத்துக் கொண்டான் ஆதி. அவளை பார்த்து ஒன்றுமில்லை என்று தலையை ஆட்டி நாக்கை துருத்தி காண்பித்தான்.
அவளுக்கு சிரிப்பு வந்தது. அரவிந்தும் லேசாக சிரித்ததும் கண்மணிக்கு கோபம் வந்தது.
எடுத்து வந்த சாப்பாடு தட்டை நங்கென்று வைத்தாள்.
“ஒருத்தன் பண்ண தப்புக்கு மனசார எப்போ மன்னிப்பு கேட்கறானோ அப்போவே அவன் மன்னிக்கப்படறான். இது உங்க அம்மா கும்பிடற கடவுள் சொன்னது இல்ல. போற போக்கில ஒரு மனுஷன் சொல்லி அந்த ஆதியை குழித்தோண்டி புதைச்சுட்டு போய்ட்டான். இப்போ எழுதறது புது அத்தியாயம். கடந்த கால தவறுகளை சரி பண்ணிக்க போறவனோட கதை..”
“அரவிந்த் வா. உனக்கு டைம் ஆச்சு. கிளம்பு. ஏய் வாலு. நீயும் போ. அண்ணன் உன்னை டிராப் பண்ணுவான்.” அவனை ஒரு பொருட்டாக கூட கண்மணி நினைக்கவில்லை.. பிள்ளைகளை கிளப்பி விட்டு அவளும் இசைப்பள்ளிக்கு தயாராகப் போனாள்..
“கண்மணி.. ப்ளீஸ். இப்போவாச்சும் என்னை நம்பு. சத்தியமா அந்த பழைய ஆதி இல்ல நான். எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடு..”
“வாய்ப்பு கொடுத்து ஒரு முறை என் வாழ்க்கை பலியானது போதும். இன்னொரு முறை நானே என் தலையை கொடுக்க தயாரா இல்ல. என் பிள்ளைகளுக்கு அம்மா வேணும். பேசி, கொஞ்சி, கெஞ்சி, அடிச்சாவது நல்லபடியா வளர்க்கற நல்ல தாயா இருக்கனும் நான்.”
நகர்ந்து போனவளை எட்டி கையை பிடித்தான். அவளுக்கு சர்வ நரம்புகளிலும் புதிதாய் ரத்தம் பாய்ந்தது. கையை அவள் உதறவில்லை என்றதே பெரிய ஆறுதலாக இருந்தது ஆதிக்கு.
மீண்டும் அவளை அவனை நோக்கி இழுத்தான். அவனது வலது கை சுரீரென்று வலித்தது. தாங்காமல் ‘அம்மா’ என்று அலறினான். அடுத்த கால் நொடியில் கண்மணி திரும்பினாள். மெல்ல அவள் கையில் இருந்து அவன் கையை விடுவித்தாள்.
“இப்ப என்ன நிரூபிக்க ட்ரை பண்றீங்க?. அடுத்த சான்ஸ் வாழ்க்கை உங்களுக்கு கொடுத்திருக்கு. அதை பிள்ளைகளுக்காக வாழப்பாருங்க. என்னை விட்டுங்க. இட்லி வச்சிருக்கேன். சாப்பிடுங்க.” என்றவள் கிளம்பி கதவருகில் சென்றவள் மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தாள். ஆதிக்கு வடக்கில் இருந்து தென்றல் வீசியது.
அவள் அருகில் வர வர, நெஞ்சின் துடிதுடிப்பு அதிகமாகி அவளுடன் அளவளாவ ஆசைப்பட்டது.
அவனது வலப்புறம் இருந்த தட்டை எடுத்து சுற்றி வந்து இடப்புறம் வைத்து விட்டு கிளம்பினாள். ஆதிக்கு அவனின் அவசர காதலை நினைத்து வெட்கம் வந்தது.
‘இவளாவது அவ்ளோ சீக்கிரம் என்னை மன்னிக்கறதாவது. ஆதி பொண்டாட்டின்னு சொல்லி சொல்லி மாத்தினேன் இல்ல, அதான் அப்படியே இருக்கா.. இந்த திமிர் தான் கண்மணி உன்னை எதுக்காகவும் விட்டுக் கொடுக்க கூடாதுன்னு தோணுது.’
விரலிடுக்குகளில் கை நழுவிப்போன ப்ரியங்கள் அதுவாக கைசேருவதில்லை.
உதிர்ந்த முத்துக்களை ஒன்று சேர்க்கும் லாவகமும் வேண்டும். பொறுமையும் வேண்டும்.
அவன் வாழ்வை எப்படி ஒன்றாம் அத்தியாயம் என்று தொடங்க விரும்பினானோ, அது போல அவனது கடல் போன்ற காதலில் அவளை மெல்ல மெல்ல மூழ்க வைக்க விரும்பினான்.
தொலைக்காட்சி தான் அவனுடைய தற்போதைய நண்பன். ஏதோ பழைய பாடல்.. நண்பனுக்காக உருகி பாடினார் நடிகர்.
‘உயிர் காப்பான் தோழன்..’ கேட்டுப் பெருமூச்சு விட்டான் ஆதி.
‘கூடவே இருந்து உயிரை எடுக்கத் துணிபவனும் நண்பன் தான்’ மனசாட்சி எதிரில் அமர்ந்து சொன்னது.
‘யாரையாச்சும் நாம மன்னிச்சா நமக்கும் மன்னிப்பு கிடைக்கும்னு என் நண்பன் சொன்னான்.’ அதனிடம் ஆதி மறுத்து சொன்னான்.
‘நீ மன்னிச்சியா.. அவன் மன்னிச்சானா..?’ இந்தியா மட்டும் இல்லை உலகமே தெரிந்துக் கொள்ள விரும்புகிறது என்பதை போல் உரத்துக் கேட்டது அவன் மனம்.
அதற்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்தடுத்த சேனல்களை மாற்றினான் ஆதி.
சலனப்படம் என்று சும்மாவா சொன்னார்கள். தொலைக்காட்சியில் மாளவியின் கச்சேரி. பூசி மெழுகிய சிலை போல் முன்பை விட அதிக அழகாய் தெரிந்தாள். ஆனால் கோபத்திற்கு பதில் ஒரு மெல்லிய சிரிப்பு வந்தது.
‘மாள்வி.. மன்னிப்புன்னு ஒரு வார்த்தையை கேட்கறது ரொம்ப குறைச்சலா தான் தெரியுது…. எனக்கு புரியல.. ஏன் என் கண்ல பட்ட.? உன்னை விட ஆயிரம் மடங்கு அழகானவங்களை என் வாழ்க்கைல சந்திச்சும் எதுக்காக உன்னை தேடி ஓடி வந்தேன்? நீ என்னை விட்டு தூரமா போயும் எதுக்காக நீ என் மனசை சலனப்படுத்தின? அதோட விளைவுகள் பாத்தியா.. ஜெயில் தண்டனை மாதிரி.. கம்பிதான் இல்லை. இரண்டு வருஷம் கிட்ட ஆகப்போகுது. நீ தேவா கூட சந்தோஷமா இருக்க கூடாதுன்னு நான் அவனை அனுப்பினேன். இப்போ நானே..ஹ்ம்ம்..
பாஸ்ட் ஹேஸ் பாஸ்டு மாள்வி. நீ எதிரியா நின்னு பாடம் சொன்ன. தேவா நண்பனா நின்னு பாடம் சொன்னான். அந்த பாடங்களை முழு மனசோட ஏத்துக்கிட்டேன். இனி நீங்க என்னை வேற மாதிரி நிச்சயம் பாப்பீங்க..”
மாளவிக்கு கேட்குமா கேட்காதா என்று யோசிக்கவில்லை. சொல்ல நினைத்ததை சொல்லி விட்டான்.
தொலைக்காட்சியை அணைத்ததும், அடுத்து தான் என்னவாக இந்த உலகிற்கு தெரியப்போகிறோம் என்ற யோசனை வந்து அமர்ந்துக் கொண்டது.
இரண்டு வருடங்களில் அரசியலில் மாற்றங்கள். அவசரம் அவசரமாக உயிரை எடுத்து பதவிக்கு வந்தவர்களை ஏதோ ஒரு ஊழல் காரணத்தை சொல்லி நீதமன்றம் ஏற வைத்தது எதிர்க்கட்சி. பதவி போய் ரத்னா வலுவிழந்து நின்றான்.
ஆதியில்லாத ரத்னா நூலறுந்த பட்டம். உயர பறக்க ஆசைப்பட்டு நண்பனை துச்சமாக எண்ணிய ரத்னா ஒன்றும் இல்லாமல் போனான். நம்பிக்கை இழந்து அவர்களின் கட்சியினரே அந்த ஆட்சியை கவிழ்த்தனர். தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த கட்சி எதிர்க்கட்சியிடம் தோற்றது.
எதிர்க்கட்சியின் பெரிய பகை ஆதி மற்றும் ரத்னா. அவர்கள் அதை மனதில் வைத்தே இருவரின் தொழிலையும் குடைந்து எடுத்திருந்தார்கள்.. ஆனால் பண இழப்பை பற்றி ஆதி கவலைப்படவில்லை.
இரண்டு வருடங்களில் மீண்டும் தேர்தல் வரப்போகிறது. ஆதி அத்தனையையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு தான் இருந்தான்.
தொழிலற்று போனவன் தேசம் விட்டு எங்கேயாவது வேலைக்கு போக வேண்டும் அல்லது தன் நிலை தாழ்வது பார்க்க முடியாது கோழையாக உயிரை விட வேண்டும் என்பது தான் பரவலாக இருக்கும் விதி. அப்படித்தான் ஊர், உலகம் எதிர்ப்பார்க்கிறது.
கல் இடறி விழும் குதிரை அடுத்த நொடியில் எழுந்து நிற்கும். ஆதி அடிப்பட்ட குதிரை. அடிமாட்டின் அளவு போகாத இன்னும் தெம்பு இருக்கும் குதிரை.
‘விழுந்தவன் எழ வேண்டும்’ – அடிப்பட்ட பின் வந்த ஞானம் விடாத தவம் போல் உள்ளுக்குள் ஓடிக் கொண்டு இருந்தது.
ஏனோ உலகமே பகையாகி நிற்பது போன்ற பிரமை. எங்கு எதிலிருந்து மீண்டும் தொடங்குவது..? அங்கீகரிக்குமா, அவமானப்படுத்துமா.. இந்த உலகம்..?
யோசித்தான்.. இடது கன்னத்தை தாங்கி நின்றது இடது கை. எதிரில் அவன் பார்வை போனது..
கடலலைகளில் தத்தளிக்கும் படகு.. ஒரே ஒரு துடுப்பில் ஜீவனை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான் ஒருவன். எதிர்நீச்சல் போட தெம்பில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை. வாழ்வோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
அதன் அருகில் இருக்கும் இன்னொரு புகைப்படம். கண்மணி அவனுடன் காதல் பொங்க தோளில் சாய்ந்து நிமிர்ந்து பார்க்கும் படம்.
ஆதியின் கண்களில் போலி காதல்.
கண்மணியின் கண்களில் அத்தனை நம்பிக்கை சுமந்த ஆத்மார்த்த காதல்.
அந்த மனிதனின் கையில் இருக்கும் துடுப்பு போல தான் ஆதிக்கு கண்மணி.
வன்முறை மட்டுமே பழகியிருந்த அவன் வாழ்க்கையில் மென் மலராய் வந்தவள் அவள்..
மெதுவாய் புரண்டு புரண்டு வரும் பெண் கடல் அலை அவள். ஆக்ரோஷமாய் அவளை அணைத்து தாகம் தீர்க்கும் ஆண் கடல் அவன்.
தன் கோபம், இயலாமை, பகை, எரிச்சல் என்று அத்தனை உணர்ச்சிகளுக்கும் வடிகாலாய் இத்தனை வருஷங்களாய் அவன் தேர்ந்தெடுத்தது அவள் உடலைத் தான்.
அந்த நாட்களை நினைத்துப் பார்த்தான் ஆதி. அவன் மனமே அவனை காரித்துப்பியது.
காசிற்கு வாங்கிய பூவை கசக்கி எறிந்தே பழகிப்போனவனுக்கு, தோட்டத்து செடி கண்மணி என்று புரியவில்லை.
ஆனால் எவ்வளவு அன்பிருந்தால் அத்தனை மூர்க்கத்தனத்தையும் அவள் காதல் என்று நம்பி அவனின் மேல் ஆசை வைத்திருப்பாள்.
மோகங்களால் ஆள வேண்டியவளை கோபங்களால் ஆண்டு இருக்கிறான்.
“கண்மணி.. உன்னை காயம் செய்து நான் என்னடி சாதித்து விடப்போகிறேன்.
தெளிந்த சிந்தையில் இப்போது பரிபூரணமாக உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்.
இந்தா எந்த பிறவியிலாவது
என்னைப் பெற்றுக் கொள்.
கையிலோ.. கருவிலோ.”
யாத்திரியின் கவிதை நினைவுக்கு வந்தது.
“இவ்வளவு அதிகாரமாக கேட்க கூட எனக்கு தகுதியில்லை கண்மணி.. யாசகம் பெறுபவன் ஆணையிடலாமா. கெஞ்சி தானே கேட்க வேண்டும். நீ ஆணையிடு.. உன் கால் விரலில் ஒரு மருதாணி தீற்றலை போல் பதிந்து கிடப்பேன். இந்த பிறவியிலேயே என்னை மன்னித்து விடு. இப்போதைய தேவை அனல் அடங்கும் காமம் இல்லை. நெஞ்சம் இறுக்கும் காதல்.. தழுவிக் கிடக்க உன் தேகம் போதும். என்னை நிரூபிக்க அது தேவை இல்லை.
வாழ்ந்தாக வேண்டும்.. நீயே அந்த வாழ்க்கையாக இரு.. கண்மணி..”
அவனின் புலம்பல் கண்மணியின் இதயத்தை எட்டியிருக்கும் போல. அவளுக்கு புரை ஏறியது.
ஆதியின் கைகள் அவளை வாழ்க்கையில் முதன் முறையாக மென்மையாக பிடித்தது காலையில் தான்.
அவனை இழுத்து நெஞ்சில் அணைக்க வேண்டும் என்று படபடத்ததை எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் சொல்வாள்.
ஆனால் காதலை மீறி துரோகம் தான் கண்முண் நின்றது. மாளவிக்காக தன்னை திருமணம் செய்ததும் அதை மறைத்ததும் எவ்வளவு பெரிய துரோகம்.
அதை விட போலியாய் எத்தனை அன்பு.. எத்தனை காதல்.. எத்தனை ஆசை. கள்வெறியில் தன்னுடல் மீது நிகழ்த்திய காதலாட்டங்கள். நினைக்க நினைக்க காதலூறிய மனம் வெறுப்பூறியது.
கண்மணி கானல் நீரென ஆதியின் காதலை நினைத்தாள்.
ஆதியோ அவன் மனதில் அவளே ஜீவ ஊற்று என்று அவளை நினைவால் தழுவினான்.
error: Content is protected !!