Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நாதம்

ஜீவ நாதம் – 12

காதல் ராட்டினத்தில் சுற்றும் போது தான் வாழ்க்கை எப்போதும் நீள்வட்ட பாதையில் சுழன்று எங்கு தொடங்கினோமோ அங்கேயே கொண்டு வந்து விட்டு விடும் என்பது புரியும். 



Advertisement

ஆதியும் கண்மணியும் யாரோ போல் இருந்து இருவரல்ல ஒருவர் என்று நிரூபிப்பதை போல் வாழ்கிறார்கள். 

ஆனால் இருவரும் ஒருவரே என்று நினைக்கும் அளவு பற்றியிருந்த அரவிந்த், ராகாவின் இதயங்கள் இன்று சிறு விலகலில் தனித்து துடித்து இருக்கின்றன..

Advertisement

Advertisement

இதுதான் வாழ்வு..  எது நடக்கும் என்று ஒரு போதும் புரியாத வாழ்க்கை சூத்திரம். 

அரவிந்த், ராகா, மதுரா மூவருக்குள் நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை ஜெயந்தன் இந்த பத்து நாட்களில் உணர்ந்து இருந்தான். ஏனோ அது அவர்களுக்கும், இந்த படத்துக்கும் நல்லது இல்லை என்று தோன்றியது. 

Advertisement

ஆதி தன்னுடைய அலுவலகத்திலேயே முடிந்த வரை அனைத்து வேலைகளும் செய்ய ஏற்பாடு செய்து தந்திருந்தான். 

அன்று படப்படிப்பு, ஒலிப்பதிவு என்று இருபுறமும் வேலைகள் நடந்துக் கொண்டிருந்தன. 

ஜெயந்தனின் விருப்பப்படி இரவு நேர உணவு அங்கேயே முடிந்ததும், அனைவருடனும் ஒரு சிறிய வட்ட மேஜை மாநாடு போட்டிருந்தான் ஆதி. 

அரவிந்தின் கிடார் ஒலியில் பொன்நிலா இளைய நிலாவாகவும், பனி விழுந்த மலர் வனம், பூ பூத்த சோலையாகவும் மாறி அவனது இசையில் இரவு இனித்திருந்தது. 

அவன் முடிக்கும் போது ஜெயந்தன் தொடங்கினான். 

“காதல் மட்டும் இல்லைன்னா இந்த உலகம் ஜீவித்திருக்காது இல்ல..?” 

அனைவரிடையிலும் பார்வை பரிமாற்றம் நிகழ்ந்தது. 

“ஆனா அந்த காதல் தவறான நேரத்தில் வந்தா அதுவே நம் வாழ்க்கையையும் அழிச்சிடும்.” பெருமூச்சுடன் அவன் சொல்லி முடித்ததும் ஆதி அவனது தோளை தொட்டு தட்டிக் கொடுத்தான். 

“ஜெயந்தன்.. ஏன் பழசெல்லாம் பேசி திரும்ப உங்களை நீங்களே வருத்திக்கறீங்க” 

“நம்ம வாழ்க்கை இன்னொருத்தங்களுக்கு பாடமா இருந்தா நினைவுப்படுத்திக்கறதுல தப்பில்ல ஆதி. உங்களை நினைச்சு சில சமயம் யோசிச்சு பாப்பேன். எவ்ளோ அழகா, உங்களை நீங்களே ஸ்டேபிளாக்கிட்ட பின்னாடி உங்க வாழ்க்கையை  தொடங்கிக்கிட்டீங்கன்னு. ஒரு முப்பது இருக்குமா உங்களுக்கு கல்யாணம் ஆகறப்ப..? ஆனா என் வாழ்க்கை இருபத்திரெண்டுல தொடங்குச்சு.” 

ஆதி அவன் சொல்ல வருவது நிச்சயம் அரவிந்த்க்காக தான் என்பதை புரிந்துக் கொண்டான். அதற்கு மேல் ஜெயந்தனை தடுக்கவில்லை. 

“அப்பா நாடக நடிகர்.. அம்மாவும் தான். பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டாலும், பிடிக்காத வாழ்க்கையை வாழ்ந்தாங்க. பணம் ஒரு குறுக்கு கோடா அவங்களை பிரிச்சு வைச்சிருந்துச்சு. அதனாலேயே காதல் பண்ணதே தப்புங்கறதுதான்  ஒவ்வொரு சண்டையிலயும் அவங்க சொல்லிக்கற வார்த்தை. 

அதை பாத்து நான் என் வாழ்க்கைல ஒரு காதல் வந்தா அதை எந்த சூழலிலும் அசிங்கப்படுத்தற மாதிரி வாழக்கூடாதுன்னு முடிவெடுத்தேன்.. 

காலேஜ் கடைசி வருஷம். கூத்துப்பட்டறைக்கு அப்பாக்கூட அப்ப போயிட்டு இருந்தேன். அப்பா அங்க தான் கிளாஸ் எடுப்பார். ஒருநாள் எல்லாரும் வியந்து பாக்கற ஒரு டிரக்டர் அங்க வந்து இருந்தார். அவரோட புதுப்படத்துக்கு நடிகர்களை தேர்ந்தெடுக்க வந்திருந்தார். அவரோட கண்ணில் நான் பட்டேன். எனக்கு டிரக்டரா ஆக தான் ஆசை. ஆனா அவர் என்னை நடிக்க கூப்பிட்டார். 

அப்பா இது மாதிரி ஒரு சான்ஸ் வாழ்க்கைல கிடைக்காதுன்னு என்னை சம்மதிக்க வச்சார். பெரிய படம்.. பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்னு என் உயிரை கொடுத்து நடிச்சாகனும்னு அப்பா சொன்னார். 

முதல் நாள். முதன் முதல்ல அவளை பார்த்தேன். ஆராதனா. உள்ளுக்குள்ள தென்றல் இல்ல, புயலே அடிச்சுச்சு. இருபத்தோரு வயசு பொண்ணு. ஆனா நடிப்புல அவளை இருபது வயசு அனுபவம்னு சொல்ற மாதிரி இருந்தா. கூடவே அவ நல்ல பாடகியும் கூட. அந்த படத்தில அவ கண்கள் ஒருபக்கம்..  குரல் ஒரு பக்கம்னு காந்தம் மாதிரி அத்தனை பேரையும் இழுத்துச்சு.. 

நான் நடிகர்களோடவே பிறந்து வளர்ந்து இருந்தாலும், நடிப்பே வராத நீ இயக்குநராக தகுதியே இல்லடா‌ன்னு சொல்ற மாதிரி நடிச்சேன்.

அவ முன்னாடி அத்தனை டேக் வாங்கி திட்டு வாங்கிட்டு இருக்கற என்னை, அவளோட பார்வை தான் சமாதானப்படுத்தும். 

அதுக்கப்புறம் ஒவ்வொரு ஷாட் முன்னாடியும் நாங்க ரிகர்சல் பண்ண ஆரம்பிச்சோம். 

அவ எனக்கு வானத்தை காமிச்சா. நான் பறக்க கத்துக்கிட்டு இருந்தேன். அது அப்படியே காதல்வானாக மாற ஆரம்பிச்சுருச்சு. நாங்க காதல் பறவைகள் ஆனோம். படம் முடியறதுக்குள்ள படத்திலேயே தெரியற அளவு கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ்லாம் கண்டபடி ஒர்க் அவுட் ஆச்சு. இரண்டு பேரோட வயசு, அது காதல் தான்னு தீவிரமா நம்ப வச்சது. 

எனக்கு ஒரு பக்கம் கெரியர். இன்னொரு பக்கம் காதல்.. அவளுக்குன்னு குடும்பம் இல்ல.. சொந்தக்காரங்க வீட்டில் வளர்ந்தவங்கறதால, சுதந்திர பறவையா இருந்தா..அவளுக்கு வாழ்க்கையோட லட்சியமே டாப் ஒன் நடிகையா மாறனும்னு தான்.. 

எனக்கோ, கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்தி மூணு வேளை நல்ல சாப்பாடு.. அம்மாவும், அப்பாவும் வேலைக்கு போகாம இருக்கற அளவு பணம்.. இதான் தேவையா இருந்ததால, பெருசா லட்சியத்தை நோக்கி ஓடனும்னு தோணல்ல.. 

முதல் படம் வெற்றி தான். ஆனா அதை வச்சு எனக்கு உடனே அடுத்த படம் புக் ஆகல.. ஆனா ஆராதனாவுக்கு அடுத்தடுத்து நாலு படங்கள். அவளை பாக்க நான் காத்திட்டு இருக்க அளவு.. காத்திட்டே இருந்தா பணத்துக்கு எங்க போகிறது..?

முதல் பட இயக்குநர்ட்டயே உதவி இயக்குநரா சேர்ந்தேன். 

கிடைச்ச நேரத்தில் மத்த ஹீரோஸ்க்கு டப்பிங் பேசி தந்தேன். ஏன் சில விளம்பரங்களுக்கு கூட குரல் தந்தேன்.

வயிறு மொத்தமா காயலன்னாலும், மூணு பேருக்கும் சாப்பிட ஏதோ கிடைச்சது. 

அப்பத்தான், ஆராதனாக்கு ஒரு இயக்குநரோட தகராறு வந்தது. அட்ஜெஸ்ட்மெண்ட் இல்லாத நடிகை ரொம்ப நாளைக்கு ஃபீல்ட்ல நிலைச்சு நிக்க முடியாது இல்லையா.. அவ முடியாதுன்னு சொன்னதும், அவளுக்கு சைன் ஆன படங்கள் அந்த இயக்குநரால் கைநழுவி போச்சு. 

அவ உடைஞ்சு போய் இருந்தா.. ஆறுதலா நான் நின்னேன். தோள் சாய துணை இருந்தா போதும்னு, அவசரப்பட்டு கல்யாணம் பண்ணோம். 

அவளுக்கு பாதுகாப்பா நான் இருந்ததால், வேற மொழி  படங்கள்ல அவ நடிக்க ஆரம்பிச்சா. எனக்கு ஏதோ சில சின்ன படங்கள்ல ஹீரோ.. சில டப்பிங் தான் கிடைச்சது. மீதி நேரம்லாம் அவ கூட ஓடத்தான் சரியா இருந்தது. 

இனிக்க இனிக்க இருக்கற வாழ்வு, கசந்தா தானே இனிப்போட அருமை தெரியும்..

மெல்ல மெல்ல மறுபடியும் அவ எல்லா மொழிகளிலேயும் நடிக்க ஆரம்பிச்சு, நம்பர் ஒன்னா வந்தா. என்னவோ அப்பதான் அவளுக்கு எதுக்கு கல்யாணம் பண்ணோம்னு தோண ஆரம்பிச்சது. வெளிப்படையா என்னை கணவன்னு சொல்ல முடியாத நிலை. 

அவ இருக்க உயரத்துக்கு நான் வர முடியாதுன்னு நினைச்சா. தகுதி இருந்தா மட்டும் போதுமா.. அதிர்ஷ்டமும் வேணும் இல்ல. அந்த காத்து அடிச்சா, குப்பை கூட கோபுரத்து மேலே ஏறும். எனக்கு அந்த காத்து அடிக்கவும் இல்ல.. நான் பறக்கவும் இல்ல. ஆனா அவ கோபுரமாவே நின்னா.

சின்ன சின்ன சண்டைகள் உருவாக ஆரம்பிச்சது.. இருபத்தஞ்சு வயசுல, அந்த சண்டைகளை தீர்க்க தெரியல. எந்த காதலை புனிதமா நினைச்சு கொண்டாடினோமோ அதை நாங்களே திட்டி தீர்த்தோம். 

ஈகோ, இருந்தது தான் ரெண்டு பேருக்கும்.. ஆனா அவ, பிரிஞ்சு போறதுக்கு பணம் தரேன்னு சொன்னதும், அந்த அவமானத்தை தாங்க முடியல. கோபத்துல ஒன்னு ரெண்டு வார்த்தையை விட்டேன். ஆனா அது வெளியில் வேறவிதமா பரவுச்சு. எப்பவும் பணம் இல்லாதவனை தானே இந்த உலகம் குற்றவாளியா பார்க்கும். 

அப்படித்தான் எல்லா பத்திரிக்கையிலேயும் என்னை குடிகாரனா, வாழ்க்கைல தோத்தவனா, பணத்துக்காக ஆராதனாவை கல்யாணம் பண்ணி கொடுமை படுத்தறவனா பிம்பத்தை உருவாக்குச்சு. கைவசம் இருந்த எல்லா வாய்ப்பும் போச்சு. ஆராதனா திரும்பி கூட பார்க்காதது என்னை காயப்படுத்துச்சு.. அழகான மனைவி அன்பா இல்லைன்னா, அழகு கூட அருவருப்பா தான் மாறும்.

அவளை மறக்க ஆரம்பிச்சேன்.. கால் போன போக்கில் விட்டேத்தியா அலைஞ்சேன்.

அப்பத்தான் ஒரு வசந்த காத்து என் மேல் வீசினது. ஆதி ப்ரொட்யூஸ் பண்ண ஒரு படத்துல ஹீரோவா நடிக்க வாய்ப்பு வந்தது. 

எல்லாத்தையும் மறந்து, நடிப்புக்காக திரும்ப என் வாழ்க்கையை ஒப்படைச்சேன். ஒரு நாலஞ்சு படம் பண்ணேன். அந்த இயற்கைக்கே, என்னை உயரத்துக்கு கொண்டு போக விருப்பம் இல்ல.. வாழ்க்கைல திரும்ப ஒரு கோடைக்காலம்.. கூடவே அம்மாவோட இழப்பு. அப்பாவோட குடி வாழ்க்கை.. ஆராதனாவோட ஏளன பார்வை. அவளோட இரண்டாவது திருமணம். மொத்தமா என் உயிரை சிதைச்சது. 

ஆனா அதுக்குள்ள முப்பத்து ரெண்டு வயசை கடந்திருதேன். சான்ஸ் கேட்டு போய் நின்னா.. அண்ணன், தம்பி..சைட் ரோல்னு நடிக்க சொன்னாங்க. 

அதுக்கு மனசு வரல.. சில படங்களுக்கு பேரே வராம, திரைக்கதை, வசனம் எழுதினேன். படத்துல யார் பேர்லயோ வரும். ஆனா எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. படைப்பு வெளியே போகனும்.. அது என் பேர் சொல்லலன்னாலும், அதுக்கு ஒரு பேர் கிடைக்கனும்.  எனக்கும் காசு கிடைச்சது. 

தொடர்ச்சியா பத்து வருஷம், விளம்பர ஜிங்கிள்ஸ் பாடி, வசனம் எழுதி, அவ்வளவு ஏன் கார்ட்டூனுக்கு கூட குரல் குடுக்குற அளவு போச்சு. 

அப்பத்தான் எனக்குன்னு ஒரு கடமை வந்தது. அப்பா இறந்ததும், அவரோட நண்பர் ஒருத்தர் அவர் நடத்திட்டு இருந்த ஆசிரமத்தை என்கிட்ட ஒப்படைச்சார். இந்த அனாதைக்கு, அனாதைன்னு சொல்லி ஒதுக்கினவங்க சொந்தமா வந்து நின்னாங்க. அவங்களுக்காக திரும்ப கிடைக்கற வேலைலாம் ஓடி ஓடி செஞ்சேன். அப்பதான் ஒரு விஷயம் புரிஞ்சுது. நம்மகிட்ட எது இல்லைன்னாலும் நம்ம உயிரை பிடிச்சு வைக்கிறது நமக்குள்ள இருக்க திறமையும், அதுமேலான ஆசையும் தான்..

அதான்  நாற்பத்து மூணு வயசுல, ஆசிரமத்துல இருக்க சின்ன குழந்தைங்களோட எதிர்காலத்துக்கு எதாவது பணம் சேர்த்து வைக்கணும்னு தோணுச்சு…அதுக்காக தான் இப்ப ஆதிக்கிட்ட உதவி கேட்டது. என் நிலைமையை புரிஞ்சுக்க கூடிய ஒரு சரியான ஆள் அவர்தான்னு தோணுச்சு.‌ 

அவரும் என்னை ஏமாத்தல. 

இதை ஏன் சொல்றேன்னா.. நாம எடுக்கற எல்லா முடிவும் சிறந்தது இல்ல. அதுவும் வாழ்க்கைல ஒரு மெச்சூரிட்டி வராதப்ப எடுக்கற முடிவு நிச்சயமா நம்மளை நல்ல நிலைக்கு கொண்டு போகாது. 

ஆணோ பெண்ணோ, அவங்க வாழ்க்கைல ஒரு நிலைக்கு வந்ததும் காதலை கல்யாணம் வரைக்கும் கொண்டு போங்க. அது நாளைக்கு வர புயல்ல இருந்து உங்களை காப்பாத்தும். 

இந்த இயற்கை எல்லாருக்குள்ளேயும் ஒரு திறமையை வச்சு தான் படைக்குது. இந்த பிறவியில் நாம் எதுக்காக பிறந்திருக்கிறோம்னு உணர்ந்துட்டா.. நம்ம உணர்வுகள் கட்டுக்குள்ள இருக்கும். 

காதல் உடம்புக்குள்ள கண்ணாமூச்சு காமிக்கும் தான். அந்த கண நேர உணர்வுகளை நம்ம லட்சியத்துக்காக அடக்கிட்டோம்னோ பின்னாடி காதலை நாம கொண்டாடற நிலையில் இருப்போம்..இல்ல அதனால் நாம திண்டாடற நிலைமை தான் வரும்.. 

பணம் ஒரு பொருட்டே இல்லைன்னாலும், எதையும் சமாளிக்கற மனசு திடம் வேணும்னா.. முதல்ல வாழ்க்கைல நிறைய மனிதர்களை சந்திங்க.. ஒவ்வொருவர் வாழ்க்கையும் உங்களை புடம் போட்ட தங்கமா மாத்தும்..”

அமைதி நிலவிய அந்த இரவு பல விஷயங்களை அங்கிருக்கும் அத்தனை பேருக்கும் உணர்த்தியது.

“என்ன ரொம்ப போரடிச்சிட்டேனா..” ஜெயந்தன் கேட்க, ஒரு சிறிய குற்றவுணர்வோடு தலையை ஆட்டினர் அரவிந்தும், ராகா, மதுராவும். 

“காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்.. கன்னித் தமிழ் தொண்டாற்று.. அதை முன்னேற்று.. பின்பு கட்டிலில் தாலாட்டு..எனது வீடு, எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா..படிக்கத்தான் பாடலா.. படிச்சதை நெனைச்சு நாம் நடக்கத்தான்.. கேட்டுக்கோ ராசாத்தி.. தமிழ் நாடாச்சு.. இந்த நாட்டுக்கு நாமாச்சு..” 

ஜெயந்தன் பாட, மதுராக்கு கூட அதன் அர்த்தம் புரிந்தது. 

கூடவே ரிஷப்பின் நினைவும் வந்தது..யாருக்காகவோ அவன் சிந்திய ரத்தத்தின் கறை இப்போதும் அவள் கைகளில் இருப்பது போல் தோன்றியது. கண்களின் கண்ணீர் அவளது கைகளை நனைத்தது. 

 

ராகாக்கும், அரவிந்த்க்கும் கூட அவர்களின் எதிர்காலம் பற்றிய கவலை வந்தது‌.. ராகாவிற்கு நீலகண்டனும், மாளவியும் எப்போதும் சொல்வது இதுதான். வாழ்க்கை லட்சியம் தான் முதல் திருமணம். அதன்பின் தான், வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்பது. 

ஜெயந்தன் மீது ஆதிக்கு இப்போது கூடுதலான பாசம் வந்தது. ஒரு தம்பி அவனுக்கு இருந்திருந்தால் ஜெயந்தனை போல் இருந்திருப்பான் என்று அவனுக்கு தோன்றியது. 

வாழ்க்கை மேலேயே பறக்க வைத்து இருந்து நாற்பது வயதுக்கு மேல் ஒரு தோல்வி வந்தால் அந்த மனிதனை அது முழுக்க புரட்டி போடும். புடம் போடும். 

 ஆனால் ஆரம்பம் முதலே தோல்வியை சந்தித்து வந்தவனுக்கு, ஒரு சிறிய வெற்றியை கொடுத்து மீண்டும் அவனை படுகுழியில் தள்ளும் வாழ்க்கை அவனை முழுதுமாக கொன்று விடும். 

ஆதியும், ஜெயந்தனும் இது இரண்டிற்கும் உதாரணம். 

“ஜெய் சார்.. இன்னிக்கு எனக்கு வாழ்க்கையோட வேற ஒரு பரிமாணம் புரிஞ்சது. அரவிந்தை கல்யாணம் பண்றது தான் வாழ்க்கையோட சாதனைன்னு நினைச்சிட்டு இருந்தேன் .. என் காதல் தான் உண்மையானது. அது பரிசுத்தமானது. அதை அரவிந்த் ஏத்துக்கிட்டே ஆகனும்னு தான் ஒரே எண்ணம்.. ஏன்னா.. சின்ன வயசுல இருந்து நான் கேட்டது எல்லாமே  கிடைச்சது. பெருசா எதுக்கும் கஷ்டப்பட வேண்டியது இருந்தது இல்ல. விவரம் தெரியாத வயசுல சித்தி, சித்தப்பாவோட வாழ்க்கைல நடந்த விஷயம்  வீட்டை சுத்தமாக புரட்டி போட்டுச்சு. ஆனா அதை நான் பெருசா எடுத்துக்கல.. அவங்க காதல் தான் பெருசா தெரிஞ்சது. நாமளும் நமக்கு பிடிச்சவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா சந்தோஷமா இருப்போம்னு தான் தோணுச்சு..இப்ப அதையும் தாண்டி நமக்குன்னு ஒரு பொறுப்பு இருக்கனும்னு புரிஞ்சுக்கிட்டேன்.. அரவிந்த் அவன் வாழ்க்கைல சாதிக்கனும்.. அதுக்கு துணையா இருப்பேனே தவிர, அவனுக்கு பிரஷரை அதிகமாக்க மாட்டேன்.. தாங்க்யூ ஜெய் சார்..” 

ராகா பேசியது அவள்  மனதில் இருந்த வலிமையை காட்டியது. 

அப்போது தான் மதுராவின் கதையை அரவிந்த், ராகாக்கு சொன்னான். 

அவள், ரிஷப்பின் கனவை நினைவாக்க வந்தவள் என்பது தெரிந்ததும் ராகாக்கு, மதுரா மேல் இருந்த பொறாமையும், சந்தேகமும் தீர்ந்தது. 

அவளை ஒப்பிடுகையில் தான் எந்த விதத்திலும் வாழ்க்கையின் பேராட்ட விளிம்பில் கூட இல்லை என்பது புரிந்தது. மெல்ல அவளின் கைகளை தன் கைகளுடன் கோர்த்துக் கொண்டாள். அவளுக்காக தான் இருக்கிறேன் என்ற நம்பிக்கை அந்த அழுத்தத்தில் இருந்ததை மதுராவும் உணர்ந்துக் கொண்டாள். 

நட்பின் இதழ்கள் மலர்ந்து சிரித்தன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!