Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 6

“இந்தா ஒழுங்கா பணத்தை கட்டுற வழியைப் பாரு.  என்னை ஏமாத்தனும்னு நினைச்சே, நான் பொல்லாதவளாயிடுவேன் பார்த்துக்கோ.  என்னைப் பத்தி தெரியுமில்ல.  என்கிட்டயே உன் கோக்குமாக்கு தனத்தையெல்லாம் காட்டுவியா…?  நல்லா வந்திரும் வாயில.  என்ன நினைச்ச என்னைப் பத்தி?  என் பொறுமைய சோதிக்கற வேலை வச்சுக்காத”.

“எப்பவும் ஒரே மாதிரி இருக்கமாட்டேன்.  சொல்லிட்டேன் பார்த்துக்கோ.  மருவாதையா காசை எண்ணி வச்சிட்டு அடுத்த சோலிய பாரு.  என்னை இழுக்கடிக்கனும்னு நினைச்ச… அவ்வளவுதான் சொல்லிட்டேன்” என ஆங்காரமாக தெரு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார் சரசு.

“இல்ல க்கா.  அப்படிலாம் இல்ல.  உன்னை ஏமாத்தனும்னு நினைப்பேனா.  எதிர்பார்த்த எடத்துலயிருந்து இன்னும் பணம் வரல க்கா.  வந்திருந்தா இந்நேரம் கொடுத்திருப்பேன்”.

“அதனாலதான் பணம் கொடுக்க லேட் ஆகுது.  வந்ததும் கொண்டாந்து கொடுத்துடறேன் க்கா…” என்றாள் சுமதி.



Advertisement

“எவ்வளவு நாளா இதே வார்த்தைய சொல்லிட்டிருப்ப நீ?  கேட்கறவ கேனச்சியா இருந்தா கேப்பையில நெய் வடியும்னு சொல்வீங்களே.  ஒழுங்கு மரியாதையா காச எடுத்துவை” என்றார் சரசு காட்டமாக.

சுமதி கையைப் பிசைந்துகொண்டு அழாதகுறையாக… “நிஜமாத்தான் க்கா சொல்றேன்.  இன்னும் இரண்டு மூனு நாள் பொறுத்துக்கோ க்கா.  பணம் வந்துடும்.  உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா…?  வந்ததும் முதல்ல உனக்குதான் கொடுக்கனும்னு நினைச்சிட்டிருக்கேன்.  நம்புக்கா” என்றாள்.

“பணத்தை வாங்கும்போது மட்டும் அத இத சொல்லி, கையை காலை பிடிச்சு வாங்கறது.  அப்புறம் உன்கிட்டயிருந்து நான் வசூல் பண்ண நாயா… பேயா… அலையனுமா…?  நீ லேட் பண்ற ஒரொரு நாளைக்கும் வட்டி என்னாச்சு.  உன்னை மாதிரிதான அடுத்தவங்களும்.  சீட்டை எடுத்தவங்க சும்மா விடுவாங்களா…?  பணம் தர லேட்டானா நிக்க வச்சு கேள்வி கேட்க மாட்டாங்க”.

Advertisement

“எல்லாரையும் சரிசமமாதான நான் பார்க்கனும்.  நீ மட்டும் ஒசத்தியா…?  அப்படியிருந்தா இத்தனை வருஷம் தொழில் பண்ண முடியுமா… உங்ககிட்ட எல்லாம்?  நியாயமா நடக்கறதாலதான என்னைத் தேடி வந்து சீட்டு கட்டறீங்க”.

Advertisement

“சீட்ட தள்ளி பணம் எடுக்கற வரைக்கும் இருக்கற ஆர்வம், பணம் எடுத்ததுக்கு அப்புறம் அதை திருப்பி கட்டறதுல இருக்க மாட்டேன்னுது”.

“ஐயோ… அப்படிலாம் சொல்லாதக்கா.  இத்தனை வருஷமா உன்கிட்ட சீட்டு போட்டுட்டிருக்கேனே.  எப்பயாவது இதுமாதிரி ஆயிருக்கா…?  இல்ல உன்னை ஏமாத்திதான் இருக்கனா…?  இந்த ஒரு தடவை பணம் கட்ட கொஞ்சம் நாள்தள்ளி போயிடுச்சு.  கட்டிடறேன் க்கா”.

“என் பொண்ணுக்கு தலை தீபாவளின்னு, கொஞ்சம் சீர் செஞ்சதுல கையில இருந்த பணமெல்லாம் காலியாயிடுச்சு.  இல்லனா சொன்ன தேதிக்கு கட்டியிருப்பேன்.  இனி இதுமாதிரி நடக்காம பார்த்துக்கறேன்.  இந்த இரு முறை மட்டும் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணு க்கா…” என்றாள் சுமதி பாவமாக.

Advertisement

“பணத்தை கேட்கறதுக்கு உன்னை தேடி உன் வீட்டுக்கு வரப்ப எல்லாம், நீ வீட்ல இல்ல.  வெளிய போயிருக்கேன்னு சொல்றாங்க.  இத்தனை தடவை நம்மளை தேடி அலையறாங்களேன்னு ஒரு தடவையாவது வந்து பதில் சொன்னியா நீ…?  உன்னை தேடி அலையறதுதான் என் பொழப்பா…?  எனக்கு வேற வேலை இல்லையா….?”

“வரப்ப எல்லாம் உன் பையனோ பொண்ணோதான் பதில் சொல்றாங்க.  எப்ப வந்தாலும், வீட்ல அம்மா இல்ல.  வெளிய போயிட்டாங்க.  கடைக்கு போயிருக்காங்க.  வேலைக்கு போயிருக்காங்கன்னு”.

“உன்பசங்க உன்கிட்ட சொல்லாமயா இருப்பாங்க நான் வந்ததபத்தி.  ஒருவாட்டியாவது மதிச்சி வந்தியா… நீ?  உன்கிட்டயிருந்து பணத்தை வாங்கறதுக்குள்ள என் தாவு தீர்ந்திடும்போல”.

“வீட்லயிருந்துட்டே ஏமாத்துவியோ…?  இல்ல நிஜமாதான் வெளிய போயிருந்தியோ….?  அந்த கடவளுக்குதான் வெளிச்சம்.  என்னை ஏமாத்தனும்னு நினைச்சவங்க எல்லாம்…” என அவர் ஏதோ சொல்ல வருவதற்குள் சுமதி பதறிபோய் “க்கா… க்கா… எதுவும் தப்பா சொல்லாத” என சரசின் கையைப் பிடித்து தடுத்துவிட்டாள்.

“இன்னும் இரண்டு மூனு நாள்ல பணத்தை செட்டில் பண்ணிடறேன்.  உன் வாயால எதுவும் சொல்லாத.  நெசமாவே எனக்கு கஷ்டந்தான்.  பொய்யெல்லாம் சொல்லல.  கடனா கேட்ட எடத்துல பணம் சாயல.  இல்லனா, கண்டிப்பா இந்நேரம் கட்டியிருப்பேன்.  கொஞ்சம் மனசு வைக்கா.  இத்தனை வருஷமா என்னை பார்க்கற.   நம்ப மாட்டியா…?” என்றார் சுமதி கெஞ்சலாக.

“ம்ம்… பார்க்கறேன்.  சொன்னமாதிரி வார்த்த மாறாம சீக்கிரம் பணத்தை கட்டற வழிய பாரு.  கிளம்பு கிளம்பு, எனக்கு வேலையிருக்கு” என விரட்டினார் சரசு.

அப்பாடி, விட்டா போதும் என சுமதி அங்கிருந்து விழுந்தடித்து கொண்டு ஓடிவிட்டாள்.  சுமதி வேகமாக செல்லுவதைப் பார்த்துக்கொண்டே வசீகரன் வீட்டினுள் நுழைந்தான்.  சரசு இறுதியாக பேசிய வாக்கியத்தை காதில் வாங்கிக்கொண்டுதான் வந்தான்.

இந்தம்மாவுக்கு இதே வேலையா போச்சு.  தெனம் ஒரு பஞ்சாயத்து.  இதெல்லாம் வேணாம் விட்டுடுன்னாலும் கேட்காது என்ற சலிப்புதான் உள்ளுக்குள் வசீகரனுக்கு

வசீகரனும் அவனது தங்கை ராணியும் அறியாப் பருவத்தில் இருக்கும் போதே அவனது தந்தை இறைவனடி சேர்ந்திருந்தார்.  வீடு மட்டும் சொந்தமாக இருந்தது.  மற்றபடி எந்த நிலையான வருமானமும் இல்லை.

சொந்த பந்தங்கள் இருந்தும் ஆதரவற்ற நிலைதான் அவர்களுக்கு.  தன் உழைப்பை கொண்டுதான் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் வீட்டின் வாசலிலே இட்லிகடை வைத்து, குடும்பத்தை காப்பாத்தி, பிள்ளைகளை வளர்த்தார் சரசு.

பள்ளி பருவத்தில் இருக்கும்போதே வசீகரன் ஓய்வு நேரங்களில் சிறு சிறு வேலைகளுக்கு செல்வான்.  அவன் பார்க்காத வேலையே இல்லை எனகூட சொல்லாம்.  மளிகைகடை, ஹோட்டல், காய்கறி மார்கெட்டில் லோட் ஏற்றி இறக்குவது என எல்லா வேலைகளும் அவனுக்கு அத்துபடி.  சமயத்தில் மீன் மார்கெட்டில்கூட வேலை பார்த்திருக்கிறான்.

மார்கெட்டில் வேலை செய்தால் வருமானம் அதிகம் கொடுப்பார்கள் அவனுக்கு.  ஆதலால் அங்குதான் விடுமுறை தினங்களில் இருப்பான்.  காய்கறிகளை தரம் வாரியாக பிரிப்பது, கடைகளுக்கு லோட் வண்டியிலேயே சென்று டெலிவரி செய்வது என இரவு பகல் பாராது உழைப்பான்.  சாப்பாடு தூக்கம் எல்லாம் அங்கேதான் அவனுக்கு.  மொத்தத்தில் கடுமையான உழைப்பாளி.

அவன் கூட படித்த மற்ற பிள்ளைகள் போல விளையாடுவது, ஊர் சுற்றுவது, நண்பர்களோட சேர்ந்து என்ஜாய் செய்வது எதுவும் அவனுக்கு தெரியாது.  அப்படியொன்று இருப்பதாகவே கருத்தில் கொள்ளமாட்டான்.  அவனுக்கு தெரிந்தது எல்லாம் வேலை செய்ய வேண்டும்.  வருமானம் ஈட்ட வேண்டும்.  உண்ணும் உறங்கும் நேரத்தை தவிர மற்ற நேரமெல்லாம் வேலைதான் அவனுக்கு பிரதானமாக இருந்தது.  அவனது அம்மா குடும்பத்துக்காக படும் கஷ்டங்களை கண்கூடாக நேரில் பார்த்து வளர்ந்தவன்.

இளமையிலேயே கணவரை இழந்து, கையில் பிள்ளைகளுடன் சில கீழ்தரமான ஆண் சமூகத்தினரிடையே, சரசு பட்ட அல்லல்களை எல்லாம் நேரில் பார்த்திருக்கிறான்.

அதுவே நித்யாவை அவன் நெருங்குவதற்கும் காரணமாக இருந்தது.  சிறிய வயதிலேயே வாழ்வையும் தொலைத்து, தாயையும் இழந்து தனிமையில் அல்லாடுபவளை அரவணைத்து பாதுகாக்க மனம் உந்தியது அவனை.  அதுவே காலப்போக்கில் தடம்மாறிப்போனது.

பள்ளிப்படிப்பை முடித்தவன் மேற்கொண்டு படிக்காமல் வேலைக்கு சென்றுவிட்டான்.  சரசு அவனை படிக்க சொல்லி வற்புறுத்தியும் அவன் கேட்கவில்லை.  எப்படியாவது அன்னையையும், தங்கையையும் காத்திட வேண்டும் என்ற எண்ணம் மட்டும்தான் அவன் மனதில் குடி கொண்டிருந்தது.  அதற்காக முழுமூச்சாக அயராது உழைக்க ஆரம்பித்தான்.

அவனது ஓயாத கடும் உழைப்பினால்தான் படிப்படியாக முன்னேறி, இன்று மார்கெட்டில்  பேர்சொல்லும்படி தனக்கென்று சொந்தமாக தொழில் செய்யும் அளவுக்கு உயர்ந்திருந்தான்.

தொழிலில் மட்டுமல்ல, ஊரிலும், உறவிலும் கூட அவனுக்கு நல்ல பெயர்தான்.  குடும்பத்தினரின் மீதான பாசம் அன்பு எல்லாம் மனதில்தான்.  வெளியில் காட்ட மாட்டான்.  காட்டவும் தெரியாது.  அவனை இயல்பாக உணர வைத்தது நித்யா ஒருத்திதான்.  அவளிடம் மட்டும்தான் அவன் அவனாக இருக்க முயல்வது.

இவன் வருமானத்தில்தான் தங்கையை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்தான்.  அவள் படித்து முடித்ததும், நல்ல வருமானத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் மாப்பிள்ளையாக பார்த்து,  அவர்கள் கேட்டதைவிட அதிகமாகவே சீர் செய்து அவளை திருமணமும் செய்து கொடுத்திருந்தான்.

தாயைப்போல் பிள்ளை நூலைப் போல் சேலை என்பதுபோல சரசைப்போல் ராணிக்கும் கொஞ்சம் வாய் துடுக்கு அதிகம்.  இருந்தாலும் அண்ணன் என்றால் பயமும் உண்டு.  அன்னை மகள் இருவருக்குமே வசீகரன் என்றால் மரியாதைகலந்த பயம் உண்டு.

சரசு இட்லிகடை வைத்த காலத்திலிருந்தே அவருக்கு பழக்கான பெண்களிடையே, அக்கம் பக்கத்தினரிடையே, தெரிந்தவர்களிடையே என சிறிய அளவில் சீட்டு பிடிக்க ஆரம்பித்தவர், இன்று இலட்சங்களில் சீட்டு பிடிக்கும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.

ஒரு குடும்பத்தில் ஆண் துணை இல்லையென்றால் பெண்களுக்கு என்ன மாதிரியான அவலங்கள் ஏற்படுமோ, அது அத்தனையும் அவர் அனுபவித்திருந்தார் அவரது வாழ்க்கையில்.

அதிலிருந்து தன்னை தற்காத்துக்கொள்ளவே அவர் அணிந்து கொண்ட முகமூடிதான், இந்த சிடுசிடுப்பு, கத்தல், கூச்சல், சத்தம், பேச்சு எல்லாம்.  ஒரு கட்டத்தில் அவருக்கு இது எல்லாம் சேர்ந்து வாயாடி, பஜாரி என பட்டப்பெயர்களையும் வாங்கித் தந்திருந்தது.

அதைப்பற்றியெல்லாம் அவர் வருந்தியதேயில்லை.  அவரைப் பொறுத்தவரை நேர்மையாக, கௌரவமாக வாழவேண்டும்.  அதுவே அவருக்கு போதுமானதாக இருந்தது.  இவரைப் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ ராணியும் இவரைப் போலவே வளர்ந்திருந்தாள்.

உள்ளே நுழைந்த வசீகரன் சரசைப் பார்த்து “ஏம்மா…?  காலையிலேயே உன் பஞ்சாயத்த ஆரம்பிச்சிட்டியா…?  வீட்டுக்குள்ள நுழைய முடியுதா…?  எப்ப பாரு சத்தம் கூச்சல் ச்ச….” என்றான் சலிப்பாக.

“ம்ம்….  வாப்பா.  போனா போன இடம்.  வந்தா வந்த இடம்னு இருந்தா… உருப்படும்” என முனகினார் சரசு.

வசீகரன் சரசுக்கு ஏதும் பதில் சொல்லாமல் அவன் அறையில் புகுந்துகொண்டான்.

சரசு மகன் அறைக்குள் செல்வதையே பார்த்து நின்றிருந்தார்.  சில மாதங்களாகவே மகன் போக்கில் ஏற்பட்ட மாற்றத்தை பார்த்து சரசுக்குள் பயப்பந்து உருண்டு கொண்டிருந்தது.

தகப்பனில்லாமல் வளர்ந்த பிள்ளை.  தானாகவே தன்னை உருப்போட்டு வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பவன்.  ஆதலால் ஒரளவுக்கு மேல் அவனிடம் அவராலும் பேச இயலவில்லை.  தாயின் மனம் கண்டதையும் நினைத்து தவித்துக்கொண்டிருந்தது கடந்த மாதங்களாக.  தலைக்கு மேல் வளர்ந்து நிற்பவனிடம் என்னவென்று விசாரிப்பது?  எதற்கென்று புத்தி சொல்வது என தடுமாறிப் பார்த்துக் கொண்டிருந்தார்.

சில மாதங்களாக வசீகரனின் போக்கில் உண்டான மாற்றத்தை தாய் அறிந்துதான் இருந்தார்.  தோளுக்கு மேல் வளர்ந்து நிற்பவனிடம் அதட்டியும் பேச முடியவில்லை.  ஆனால் ஏதோ மகனிடம் சரியில்லை என்பது மட்டும் அவரால் உணர முடிந்தது.  தாய் அறியாத சூலும் உண்டோ…?

பெருமூச்சை இழுத்து விட்டவர், “இவனுக்கு ஒரு கால்கட்ட போட்டுட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்” என முனகிக்கொண்டே சமையலறைக்குள் சென்றார்.

அறைக்குள் இருந்தவனுக்கும் சரசின் முனகல் சத்தம் கேட்டது.  உள்ளுக்குள் அவரை ஏமாற்றுவதை நினைத்து குற்றவுணர்வு அதிகமானது.  இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கறது.  பேசாம அம்மாகிட்ட சொல்லிடலாமா என மனத்தின் ஓரத்தில் எண்ணம் உதித்தாலும், அவரிடம் வெளிப்டையாக என்னவென சொல்வது என தயக்கமும் பயமும் ஒருங்கே வந்து அவனை தடுத்தது.

தந்தையை இழந்த நேரத்தில் தாய் பட்ட வேதனைகளை எல்லாம் நேரிலேயே பார்த்திருக்கிறான்.  தங்களைக் காப்பாற்ற அவர் பட்ட கஷ்டமெல்லாம் அவனுக்கும் தெரிந்ததுதானே.

கணவரை இழந்தவுடன் அவரை மறுமணம் செய்துகொள்ள சொல்லி கட்டாயப்படுத்திய சொந்தங்களுக்கிடையில் பிள்ளைகளை முன்னிறுத்தியே, பிள்ளைகளுக்காக மட்டுமே இத்தனை ஆண்டு காலம் அவர்களுக்காகவே வாழ்ந்தவர்.  வாழ்ந்து கொண்டிருப்பவர்.

அவரிடம் போய் என்னவென்று நித்யாவைப் பற்றி சொல்வது.  அவனுக்கே அதைப்பற்றின உறுத்தல் உள்ளுக்குள் இருக்கும்போது அன்னையிடம் என்ன என விளக்குவான் அவர்கள் உறவைப்பற்றி.

பெயரில்லாத பந்தம்.  அது சரியா தவறா என தெரியாது.  அவளுடைய பாதுகாப்புக்கு என ஆரம்பித்து உணர்வுகளின் வலையில் சிக்கியிருந்தான்.  ஒன்று மட்டும் உறுதி.  விருப்பத்துடனே தன்னை அவளுடன் பிணைத்திருந்தான்.  காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

சரசு திருமணத்தை பற்றி பேச வாயெடுக்கும் போதெல்லாம் அதைப்பற்றின ஆர்வமெதுவும் காட்டாதிருந்தான்.  இன்னும் சொல்லப்போனால் அந்த வயதுக்குரிய உணர்வுகளோ ஆசைகளோ இல்லாதிருந்தவன், நித்யாவிடம் தன்னையே தொலைத்திருந்தான்.

நித்யா அவனைக் கொள்ளைக் கொண்டது எங்கு எப்போது எப்படி என எல்லாம் அவனால் ஆராய முடியவில்லை.  கிட்டதட்ட நித்யாவுக்கும் இவன்நிலைதான்.  தாங்கள் செய்வது தவறு என இருவரும் அறிந்ததே. அதிலிருந்து மீள மனமுமில்லை.

வசீகரனுக்கு நன்றாகவே தெரியும்.  அவனது அன்னைக்கு தெரிந்தால் நித்யாவைப் பற்றின விஷயம் தெரிந்தால், அவரை எதிர்கொள்ள முடியாது என்று.

நிஜமாக தூங்குகிறவனை எழுப்பிவிடலாம்.  தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்ப முடியாது என சொல்வதில்லையா…?  அதுபோல தப்பு என தெரிந்தும் செய்கிறவர்களை யார் திருத்த முடியும்?

குளித்துவிட்டு வந்தவன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தலையைத் துவட்டிக்கொண்டே சுவற்றில் மாட்டியிருந்த ஆளுயர கண்ணாடியின் முன் நின்றான்.

வேட்டி சட்டையை அணிந்துகொண்டு தலையை வாரியவன், மீசையை விரலினால் நிவிவிடும் போது உதட்டில் தானாகவே புன்னகை மிளிர்ந்தது.  எப்பவும் அவளுக்கு இந்த மீசை மேலதான் கண்ணு என கண்ணாடியில் தெரிந்த தனது மீசையை இப்படியும் அப்படியும் சுருட்டிவிட்டு சிரித்துக்கொண்டான்.

அடச்ச… என்ன இது காலையிலே நினைப்பு எங்க போகுது என தலையை உதறி அறையை விட்டு வெளியே வந்தான்.

வசீகரனின் வீடு அவனது தாத்தா காலத்தில் கட்டியது.  பெரிய வீடும்கூட.  முத்தம், தாழ்வாரம், சமையல்கூடம், என விஸ்தாரமாகவே இருக்கும்.

வீட்டின் பின்பக்கம் இருந்த காலியிடத்தில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வைத்திருந்தனர்.  முன்பக்கமும் இடம் இருந்தது.  அதில் பூச்செடிகளை நட்டு வைத்திருந்தார் சரசு.

ராணியின் கல்யாணத்திற்கு பிறகு வசீகரன் வீட்டினை பழமை மாறாமல் செப்பனிட்டு இந்த காலத்திற்கு ஏற்றவாறு வசதிகள் கொண்டமாதிரி மாற்றியிருந்தான்.

தங்கையின் திருமணத்திற்கு முன்னே அன்னையை இட்லி கடையெல்லாம் போதும் என விட்டுவிட சொல்லியிருந்தான்,  அவருக்கும் முன்போல் உழைக்க முடியாததால் மகனின் எண்ணத்திற்கு ஏற்ப இட்லி கடை போடுவதை நிறுத்தியிருந்தார்.

மகனது வருமானம் இருந்தாலும் அவரும் மகளுக்காக என நகை, பண்ட பாத்திரங்களை சேர்த்து வைத்திருந்தார்.  ஆதலால் தைரியமாகவே விட்டிருந்தார்.  சரசு ஆசைப்பட்டபடி எல்லாரும் அசந்துபோகும்படிதான் தங்கையின் திருமணத்தை ஊர் மெச்ச நடத்தியிருந்தான் வசீகரன்.

அதிலேயே மகனை நினைத்து சரசு உச்சி குளிர்ந்திருந்தார்.  தங்களை இதுநாள்வரை துச்சமென நினைத்த உறவுகள் மத்தியில் எல்லோரும் ஆச்சர்யப்படும்படி மகளின் திருமணத்தை நடத்திக்காட்டிவிட்டானே என மகனை நினைத்து பெருமையும்கூட அவருக்கு.

அதன் பிறகு வசீகரனது விருப்பத்தில் பேரில் வீட்டை மாற்றி அமைத்திருந்தான்.  சரசுக்கு அவர் கணவனோடு சேர்ந்த வாழ்ந்த வீடல்லவா.  ஆதலால் அவரின் எண்ணம் புரிந்தவனாக தேவையான வசதிகளை மட்டும் உட்புகுத்தி மாற்றி அமைத்திருந்தான் வீட்டை இடிக்காமல்.

முன்புபோல் இல்லாமல் கிட்சனையும் புதுமையாக மாற்றி, அவனுக்கு, சரசுக்கு, தங்கை வந்து போனால் தங்குவதற்கு என தனி தனியாக அட்டாச்ட் பாத்ரூமுடன் கூடிய அறைகளாக மாற்றிக் கொண்டான்.  அது இல்லாமல் ஹாலை இரண்டாக பிரித்து அதிலேயே சாப்பாட்டு மேஜை போடுவதுபோல அமைத்திருந்தான்.  ஹாலிலேயே இருந்த பூஜை மாடத்தை மாற்றி கிட்சனுக்கு எதிரில் சின்னதாக பூஜை அறை ஒன்றை எழுப்பியிருந்தான்.  வீட்டின் முன்பக்கம் இருந்த தோட்டத்தை சீர் செய்து கார் நிறுத்துவதற்கும்  வழிவகை செய்திருந்தான்.  இப்படி வசீகரன் அன்னையின் மனசும் கோணாமல், தனக்கும் பிடித்தமாதிரி வீட்டை சீர் செய்து அழகு படுத்தியிருந்தான்.

சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டே வந்து சாப்பாட்டு மேஜையில் உட்கார்ந்தான்.  சரசு மகனுக்காக சுடச்சுட இட்லி வேக வைத்து, முந்தின நாள் வைத்த சாம்பாரை சூடு செய்து, இட்லி பொடியுடன் எடுத்து வந்து பறிமாறினார்.  கூடவே காலையில் செய்த மசால்[பருப்பு] வடையும் இருந்தது தட்டில்.  மகனுக்கு பிடிக்கும் என அவனுக்காக கொஞ்சமாக ஊற வைத்து மிக்சியில் அரைத்து செய்திருந்தார்.

தட்டில் இருந்த வடையைக் பார்த்ததும் வசீகரனுக்கு முகம் மலர்ந்தது.  சரசின் சமையல் என்றால் அத்துணை பிடிக்கும் வசீகரனுக்கு.  அதுவும் இந்த மசால்வடை என்றால் உயிர் அவனுக்கு.

இட்லி கடை வைத்திருந்த காலத்தில் இருந்தே இந்த வடை என்றால் அலாதி பிரியம் வசீகரனுக்கு.

பருப்பை மசிந்தும் மசியாத பதத்தில் அரைத்தெடுத்து அவர் சுடும் வடை மொறு மொறு என அத்தனை ருசியாக இருக்கும்

இட்லி கடை வைத்திருக்கும்போதே சரசின் இட்லிக்கும், இந்த வடைக்குமே தனி வாடிக்கையாளர்கள் உண்டு.  இவரது கைப் பக்குவத்திற்கே கஸ்டமர்ஸ் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு இவரை சமைத்து தரச் சொல்லி வாங்கிச் செல்வர்.

வசீகரன் பூ மாதிரி மெத்தென இருந்த இட்லியை சாம்பாரில் தோய்த்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.  கூடவே மசால்வடையும் உள்ளே இறங்கிக் கொண்டிருந்தது.

சரசு பக்கத்திலே நின்று அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.  இதெல்லாம் எப்போதாவது நடப்பதுதான்.

“என்ன ம்மா…?  என்னையே பார்த்திட்டிருக்க.  சாப்பிடறத கண்ணு வைக்காத” என்றான் கிண்டலாக தாயிடம் சிரித்துக்கொண்டே.

மகன் தன்னைக் கண்டு கொண்டதும், “ம்க்கும்… வச்சுட்டாலும்…” என நொடித்துக் கொண்டார்.

அதற்கும் சிரித்தவன்,  “ஏன் ம்மா…?  காலையிலே சண்டை போடற மாதிரி இவ்வளவு சத்தம் போடற…?” என்றான்.

“என்ன பண்ண சொல்ற…?  தன்மையா பேசுனா…, தலையில ஏறி உட்கார்ந்து, மொளகா அரைச்சிடறாங்க”.

ஆடற மாட்டை ஆடிதான் கரக்கனும்.  பாடற மாட்ட பாடிதான் கரக்கனும்னு சும்மாவா சொன்னாங்க.  இப்படி பேசலனா.. காசு வராது.  அதோட மதிக்கவும் மாட்டாங்க”.

“இதோ காலையில வந்துட்டு போனாளே சுமதி, அவள் வீட்டுக்கு ஒரு வாரமா நடையா நடக்கறேன்.  எட்டிப் பார்த்தாளா…?  இல்ல மதிச்சு பதிலாவது சொன்னாளா…?  எதுவும் இல்லை”.

“எப்பப் போனாலும் ஒன்னு ஆள் வீட்டுல இல்லன்னுடுவாங்க.  இல்ல வீடு பூட்டியிருக்கும்.  இந்த  ஒரு வாரமா நடையா நடந்து என் கால் தேய்ஞ்சதுதான் மிச்சம்.  அதான் இன்னைக்கு காலையிலே அவளை பிடிக்கனும்னு அவள் வீட்டுக்கு போய் சத்தம் போட்டுட்டு வந்தேன்”.

“இத்தனை நாளா எனக்கு டிமிக்கி கொடுத்தவ, வீட்டுக்கு போய் சத்தம் போட்டதும், உடனே தேடி வந்துட்டா இல்ல.  பொறுமைய பார்த்தா பணம் வருமா…?”

“அதுக்குதான் இதெல்லாம் வேணாம் விட்டுடுன்னு சொல்றேன்.  கேட்க மாட்டேன்ற…”

“ஆடி ஓடி பரபரன்னு வேலை பார்த்துட்டு இருந்தவள சும்மாயிருன்னா முடியுமாயா…?  ஏதோ என்னால முடிஞ்சத செய்யறேன்.  இன்னைக்கு நேத்தா சீட்டு பிடிக்க ஆரம்பிச்சேன்.  சரியா… நேர்மையா பண்றதாலதான தேடி வந்து கட்டுறாங்க.  முடியற வரைக்கும் செய்ய போறேன்”.

அவனுக்கும் தெரியும் சரசைப் பற்றி.  இதற்குமேல் அவரை கட்டுப்படுத்த முடியாது.  இட்லி கடையைகூட அவனுக்காகதான் விட்டிருந்தார்.  ஆதலால் அவன் வாய் திறக்கவில்லை.  சாப்பிட்டு முடித்தவன் கை கழுவிக்கொண்டு, “சரிம்மா நான் கடைக்கு கிளம்பறேன்” என கிளம்பியிருந்தான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!