Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நாதம்

ஜீவ நாதம் – 13

நாட்கள் ஓடிக் கொண்டிருக்க ஏறக்குறைய ஆதிக்கும், ஜெயந்தனுக்கும் திருப்தியாகவே படம் வந்துக் கொண்டிருந்தது. 



Advertisement

படத்தை பற்றி அவ்வளவாக செய்திகள் வெளியில் வரவில்லையென்பதே ரத்னாக்கு ஆச்சர்யமான விஷயம். ஆதி படம் என்றால் பணம் நீராக செலவு செய்யப்பட்டு, வெளியாவதற்குள் ஒரு பரபரப்பை கொடுக்கும். எதிர்க்கட்சி அமைச்சர் விளம்பரப்படுத்தியும், நாளிதழ்களில் படம் பற்றி ஒன்றும் வரவில்லை. 

அன்று காலையிலேயே ஆதியை பார்க்க நேராக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விட்டான் ரத்னா. 

Advertisement

Advertisement

“ரத்னா.. என்ன திடீர்னு இங்கேயே வந்துட்ட.. கால் பண்ணியிருந்தா நானே வந்திருப்பனே..” என்றான் ஆதி. 

சுற்றுமுற்றும் பெரிய ஏற்பாடுகளின்றி நடந்துக் கொண்டிருக்கும் படப்பிடிப்பை பார்த்துக் கொண்டே ஆதியிடம்,

Advertisement

“ஆதி.. நிஜமாவே இங்க ஷூட்டிங் நடக்குதா என்ன? ஆளுங்களும் ரொம்ப கம்மியா இருக்காங்க. எந்த நியூஸூம் வெளிய வரலை.. வழக்கமா இந்நேரம் நீ எடுக்கற படத்தை பத்தி அலசி ஆராய்ஞ்சு பேசியிருப்பாங்க. என்ன நடக்குது?” 

ஆச்சர்யமாக அவன் கேட்டதும், 

“பட்ஜெட் ரொம்ப கம்மி ரத்னா. அதனால் தான் இங்கேயே செட் போட்டு, ரெக்கார்டிங், எடிட்டிங்க்னு எல்லாம் ஒரே இடத்தில் பண்றோம். படம் வெளியாகற வரைக்கும் ஒரு சஸ்பென்ஸ் மெயின்ட்டைன் ஆகட்டும்னு தான் வெளிய ஒரு ந்யூஸூம் கொடுக்கல. படம் வரப்ப பாத்துக்கலாம்.” 

“என்னவோ எனக்கே சஸ்பென்ஸா தான் இருக்கு. என்ன கதை.. யார் நடிக்கறான்னு. ஜெயந்தன் பேர் தவிர ஒன்னும் தெரியல..நானும் படம் பாத்து தான் தெரிஞ்சுக்கணும் போல..சரி.. நான் வந்த விஷயத்தை சொல்றேன்.. இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம தேர்தலுக்காக ஒரு பெரிய மாநாடு நடத்தறோம். காம்பெயின் தொடங்கி ஆறு மாசத்துல தேர்தலுக்கு ரெடியாகனும். என்ன திட்டம் வச்சிருக்க.? எதிர்க்கட்சிக்கு தேர்தலுக்கு முன்னாடியே அவங்க தோல்வி கன்பார்ம் ஆகனும். பெரிய வித்தியாசத்தில நாம ஜெயிக்கனும்.” 

“அதுக்கென்ன.. ஜெயிச்சிடலாம்…. பெரிய்ய வித்தியாசத்திலேயே ஜெயிச்சிடலாம். மாநாட்டுக்கே  இல்ல.. மொத்த தமிழ்நாட்டுக்கே ஒரு பெரிய சர்ப்ரைஸ் தந்திடுவோம். அதுலேயே மக்கள் யாருக்கு ஓட்டு போடனும்னு முடிவு பண்ணிருவாங்க. நீ கவலையேப்படாம தேர்தல் வேலைகளை கவனி..” என்று அவன் தோளை தட்டிக் கொடுத்தான்.

“என்ன தான் ப்ளான்னு சொன்னீன்னா நான் கொஞ்சம் மூச்சு விட்டுக்குவேன். பயம் நெஞ்சில் அடைக்குது.. இந்த முறையும் நாம பதவிக்கு வரலைன்னா, மக்கள் சுத்தமா நம்மளை மறந்திடுவாங்க.” 

“அட, வாழ்க்கை முழுக்க நம்மளை மறக்காம இருக்கற மாதிரி பண்ணிருவோம்.. சாலிட்டா பதினஞ்சு வருஷம் நம்ம ஆட்சி தான்.” 

“என்னவோ சொல்ற. போன முறை பெரியப்பா இறந்ததால அவர் இடத்துக்கு நாம வந்திட்டோம். இந்த முறை எதிர்க்கட்சி இன்னும் பலமா இருக்காங்க. நம்ம கூட்டணியில் இருந்து வெளிய போக பாக்கற கட்சிங்களை இழுத்துப் பிடிக்கவே நேரம் சரியாருக்கு. இதுல மக்களுக்கு இலவசமா என்ன தரலாம், கட்சி கொள்கை அறிவிப்பு, தேர்தல வாக்குறுதின்னு நான் ஒருபக்கம் கட்சி ஆளுங்களோட பேசிட்டு இருக்கேன். நீயும் கொஞ்சம் அப்பப்ப ஆஃபிஸ் பக்கம் வா.. மத்த ஸ்டேட்,  வெளிநாட்டுல ட்ரெண்ட் என்ன போய்ட்டிருக்குன்னு சொன்னின்னா அதையும் சேர்த்துக்கலாம்.” 

“ரத்னா.. முதல்ல மக்களை பிச்சைக்காரங்களா நினைக்கறதை நிறுத்தற வழியை பாரு. இலவசம்னா அது கல்வியும், மருத்துவமும் தான் இருக்கனும். அதை முதல்ல கட்சி கொள்கையா கடைப்பிடி. அப்பத்தான் மக்கள் மனசுல நிரந்தரமா இடம் கிடைக்கும்.” 

“இலவசம் இல்லாம யாரும் ஓட்டு போட மாட்டாங்க ஆதி. தூண்டில் புழு இருந்தா தான் சின்ன மீன் மாட்டும். இங்க திமிங்கலத்தையே இல்ல இழுக்க வேண்டியிருக்கு..”

“ஹ்ம்ம்.. சரி நீ உன் வழியில் யோசிச்சு செய்.. நானும் எதாவது தோணறப்ப சொல்றேன்.” 

ரத்னா ஏதோ அரை மனதாக கிளம்பினான். 

ஆதிக்கு மலையை கட்டி இழுப்பது போல் இருந்தது. வந்தாலும் மலைதான், போனாலும் மலைதான். தலைமுடிதான் என்று இதை எந்த விதத்திலும் விட்டுவிட முடியாது.. 

யோசித்துக் கொண்டே பாடல் ஒத்திகை நடைபெறும் இடத்துக்கு வந்தான்.

“ரெக்கார்டர் ப்ளூட், மாண்டலின், சாக்ஸஃபோன்னு, சிதார்னு… ஹோ காட்.. அரவிந்த்.. நீ ப்யூஷன் மியூசிக்ல இவ்ளோ இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ்ல முயற்சி செஞ்சிருக்க.. நிச்சயமா எங்களுக்குலாம் கிடைக்கற பேரை விட, உனக்கு நிறைய பேர் கிடைக்க போகுது பாரு..” 

“ரொம்ப புகழாதீங்க ஜெய் சார். உங்களுக்காக ஒரு நாயகன் உதயமாகிறான்.. மாதிரி ஒரு பாட்டு டிரை பண்றேன்..அது வந்தா தான் எனக்கு திருப்தியாவே இருக்கும்.. என்ன இருந்தாலும் ராஜா, ராஜாதான் இல்ல..அவர் மாதிரி… இல்ல இல்ல .. அவர் பண்ணதில் கோடியில் ஒரு பங்கு நான் செஞ்சுட்டா கூட நீங்க புகழ்றதை ஏத்துப்பேன்..” 

“இங்க பாரு.. வானத்துல இருக்க நிலா ஒன்னே ஒன்னு தான்னு நம்மளை நம்ப வச்சிருக்காங்க. ஆனா நம்ம சோலார் சிஸ்டத்திலேயே ஒவ்வொரு கிரகத்துக்கும் அத்தனை நிலாக்கள் இருக்கும். அது தவிர கோடி கேலக்ஸிக்கள் இருக்கு. அதில் எத்தனை எத்தனை நிலாக்கள்.. அது நம்ம கண்ணுக்கு தெரியறதில்ல.. அதனால் தான் ஒரே நிலாவை பாத்து பிரமிச்சிட்டு இருக்கோம்.. ஆனா அந்த ஒரு நிலா இல்லைன்னா நிலான்னா என்னன்னே தெரியாம போய்டும். அதுக்கு  அர்த்தமில்லாமயும் போய்டும் இல்ல.. அது மாதிரி தான் இசைக்கு அவர் தான் ராஜா.. ஆனா அவர் அளவுக்கு நீ வரமுடியாதுன்னு நினைக்காத.. முயற்சி செஞ்சிட்டு இரு.. நிச்சயம் நிலாக்கு பக்கத்தில் இன்னொரு குட்டி நிலா உதயமாகிற நாளும் வரலாம்..” 

“புரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு.. நீங்க நிஜமா உலகநாயகன் ஃபேன்தான்னு ஒத்துக்கறேன்..ஜெய்” என்றபடி ஆதி அருகில் வந்தான்.

அரவிந்தும்.. ஜெயந்தனும் சிரித்தபடி அவனை பார்க்க.. ராகா, அரவிந்தை தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டு இருந்தாள்.. 

மதுரா, சிதார் கம்பிகளின் இடையில் தன் விரல்களை மெல்ல மோத விட்டாள்.. 

ஜோக் ராகம், சிதாரில் ஒரு புத்துணர்வோடு வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக பாய்ந்தது..

சட்டென எங்கிருந்தோ பறந்து வரும் பட்டாம்பூச்சியை கைகளுக்குள் பொத்துவதை போல் அந்த ராகத்தை பிடித்தான் அரவிந்த். மனதுக்குள் ஸ்வரங்கள் ஓடத்துவங்கின. கண்களை மூடியிருந்தவன், வார்த்தைகளை ராகத்திற்கு போட்டு பார்த்தான். உடனே துள்ளிக் குதித்தான்.

“மதுரா.. தாங்க்யூ.. எதோ ஒரு இடம் பிடிபடாம, மனசுக்குள்ள ஓடிட்டே இருந்துச்சு. இந்த சிட்டுவேஷனுக்கு எது சரியா வரும்னு யோசிச்சிட்டே இருந்தேன். இதான் கரெக்டா.. இருக்கும்.. நான் தான் இங்க எல்லாத்தையும் மாத்த வந்தேன்னு ஒருத்தன் கர்வமா சொல்றான்னா.. அப்ப இந்த ராகத்துல வரப்பாட்டு அதை ப்ரூவ் பண்ணும்..” 

சொல்லும்போதே அவனது கண்கள் மின்ன, மதுராவுக்கு இதயம் மெல்ல நெளிந்து குழைந்தது.. ஆனாலும் ராகாவின் மேல் அவள் பார்வை படிந்து, அரவிந்துக்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாக தந்து விட்டு சிதாரை சாய்த்து வைத்தாள். 

“ஒரு பாட்டு, ராகத்துக்காக காத்திட்டு இருந்திருக்கு.. தாளம் அதை உருவாக்கி 

தந்துருச்சு.. இப்ப இந்த ராகத்தில் அழகான பல்லவி உருவானா போதும்.. அரவிந்த்.. அசத்து.‌..” என்றான் ஜெயந்தன். 

ராகா எழுந்து வந்து மதுராவின் தோளை லேசாக அணைத்து விடுவித்தாள். 

கண்மணி அந்நேரத்தில் அங்கு உள்ளே நுழைய, ஆதி வைத்த கண் வாங்காமல் அவளை பார்த்தான். 

இளம் மஞ்சள் ஆர்கன்சாவில், மெல்லிய ஆரஞ்சு நிற பூக்கள் வாரியிறைத்திருந்த அந்த புடவையில் அவள் ஒரு வன தேவதையாக தெரிந்தாள். அடர் பச்சையில் கோர்த்திருந்த மணிகள்,  கழுத்தில் அழகான பச்சைக்கொடி சுற்றியது போல் இருந்தது. 

“ஹ்ம்ம்..” என்ற அவனின் பெருமூச்சு அனைவருக்கும் கேட்க, அங்கே ரகசிய சிரிப்பொலி ஒன்று எழுந்து அடங்கியது. 

கண்மணி சுற்றிலும் பார்த்துவிட்டு, ஆதியை முறைத்துக் கொண்டே அருகில் வந்தாள். யாருக்கும் தெரியாமல், அவனது இடுப்பில் கிள்ளினாள். 

‘ஆ’வென்று அவன் கத்த, அவனது கையை அழுத்தி பிடித்தாள் கண்மணி.. 

“அரவிந்த்… உங்க மாமாவுக்காக போற போக்குல நீ ஒரு ஐட்டம் சாங் வைக்கனும் போல இருக்கு..” 

ஜெயந்தன் சொல்ல..அரவிந்த் ஆதியை பார்த்து சிரித்தான். 

“ஐட்டம் சாங்னா, சும்மாவா. பல படங்கள் அதை நம்பித்தான் ஓடிருக்கு ஜெய்.” என்றான் ஆதி. 

“ஆமா ஆதி.. அதனால்தான்  சில்க்கை பிடிக்கும்னு சொன்னா, இந்த சமுதாயம் அவங்களுக்கு மரியாதையே தரதில்ல, அவங்களை பிடிக்கும்னு சீன் போடறீங்களான்னு கேட்கிறாங்க..” 

“சமுதாயம்னா வேறயா.. நாமதான். சிலர் அவங்களை அசிங்கமா பேசினா, நாம அமைதியா போகனுமா என்ன? நமக்கு பிடிச்சிருந்தா, பிடிச்சிருக்குன்னு சொல்ல வேண்டியது தான். அந்த பொண்ணு கண்ணுக்கு தமிழ்நாட்டை இல்ல.. உலகத்தையே எழுதித்தரலாம்..” எங்கேயோ பார்த்துக் கொண்டு அவன் சொல்ல, கண்மணி அவனை அடிக்க அருகில் எதாவது கிடைக்குமா என்று தேடினாள். 

மறுபடி அங்கு சிரிப்பலை ஒன்று எழுந்து அடங்கியது..

****

“வசந்தம் பாடி வர, வைகை ஓடி வர, இளமை தேடி வர, இனிமை கூடி வர, ஆராதனை செய்யட்டுமா..நீரோடையில் நீந்தட்டுமா..” 

மெல்லிய ஒலியில் பாடல் ஒலித்திட, மேஜை மேல் தலை கவிழ்ந்து கண்களை மூடியபடி இருந்தான் ஜெயந்தன்.

அவன் தோள் மேல், பூப்போன்ற மெல்லிய கைகள் ஊர்ந்து அவனது கழுத்தில் கோலம் போட்டபடி இருந்தன. காதுகளில் அவள் விரல்கள், வீணையின் நரம்புகளை இழுத்து விடுவதை போல் வருடின. 

சிலிர்த்த உடலும், திடுக்கிடும் மனமும், ஜெயந்தனை உள்ளிருந்து உலுக்கின. 

மல்லிகை மலர் வாசம் அவனது நாசியை அழுத்தியது. காற்றில் ஆடும் நாணல் போல், அவனது கைகள், அவனது கழுத்தை சுற்றிலும் தடவி அவளை தன் முன் இழுக்க முயன்று தோற்றன. 

எப்பொழுதும் கானல் நீர் தேடி ஓடி களைத்து விழும் மானைப் போல் இதே கனவு.. இதே தேடல்.. அவன் ஒவ்வொரு முறையும் தோற்று விழித்தான்.  

“ராகமும் கீதமும் சேர்ந்திட

அசைந்திடும் பாதம்..

நாணம் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம்..

விழி அதன் வாசலில்

எழுதிடும் கோலங்கள்

புரியாததோ புதிரானதோ..” 

பாடல் அவன் மனதை படித்து ஒப்பித்தது. 

விழிகளில் நீரோடு, நிமிர்ந்து பார்த்தான். 

ஆராதனாவின் புகைப்படம் அவனது எதிரில் இருந்தது. 

“நிஜமாவே நீ இன்னமும் உன்னை ஹீரோவா தான் நினைக்கிறியா ஜெய். சீரோன்னு உன்னை முத்திரை குத்தி பத்திரிக்கையில் கிழிக்கறாங்க. எந்த நம்பிக்கையை வச்சு என் முன்னாடி வந்து, எல்லாத்தையும் மறந்துட்டு சேர்ந்து வாழலாம்னு கூப்பிடற?” 

“சினிமால தானே நான் ஜெயிக்கல ஆரா.. நம்ம லைஃப்ல நான் உனக்கு அதே பழைய ஜெய் தானே. நமக்குள்ள வர வாக்குவாதம்லாம், சாதாரணமா எல்லா வீட்லயும் நடக்கிறது தான்..அதை ஏன் பெரிசு படுத்தற. சண்டையும், சமாதானத்தில  முடியத்தானே செய்யுது.” 

“ஹ்ம்ம்.. அது இளமை இருக்கற வரைதான். உன் சமாதானம்லாம் காமத்தை வச்சுத்தானே.. அது யார்ட்ட வேணா கிடைக்கும்.” 

அவள் கன்னத்தை நோக்கி சென்ற கையை கஷ்டப்படுத்தி அடக்கிக் கொண்டான். 

“ஆரா.. ப்ளீஸ்.. தயவு செஞ்சு காதலை கொச்சப்படுத்தாத. நான் அந்த உணர்வை எப்பவும் மதிக்கனும்னு நினைக்கிறேன். இவ்வளவு நீ பேசியும் உன்கிட்ட நான் கெஞ்சிட்டு நிக்கறது அந்த காதலால் தான்.” 

“அதை தவிர உன்கிட்ட என்ன இருக்கு ஜெய். நாளைக்கே என் மார்க்கெட் போச்சுன்னா, இதே வசதியான லைஃப் நினைச்சு பாக்க முடியுமா.. நாம தேர்ட்டீஸ்க்கிட்ட இருக்கோம்..‌ இப்ப கூட வாழ்க்கைல செட்டில் ஆகலைன்னா, மீதி உள்ள வாழ்க்கை இதை விட கேவலமா இருக்கும்.” 

“நல்ல சாப்பாடு, இருக்க வீடு, நம்ம குழந்தைகளுக்கு ஒரு கௌரவமான வாழ்க்கை இதை கூட நம்மளால தர முடியாதுன்னு நினைக்கிறியா..ஆரா?” 

“எப்படி நீ பண்ற மாதிரி, கார்ட்டூனுக்கு குரல் கொடுத்து, விளம்பரத்துக்கு பாடி, சீரியல்ல அம்மாவா நடிச்சு நானும் உன் கூட கழைக்கூத்தாடி மாதிரி வித்தை காமிச்சு நம்ம பசங்களுக்கு ஒரு வாழ்க்கையை கொடுக்கணும்னு நினைக்கிறியா..?”

“பணம் தான்னு எல்லாம்னு சொல்றியா..? அதே பணத்தை கழுத்து வரைக்கும் வச்சிட்டு, உண்மையான காதலுக்கு ஏங்கற எத்தனையோ பேரை எனக்கு தெரியும் ஆரா..” 

“பணம்.. பதவி இல்லைன்னா நம்மளை நாய் கூட நிமிர்ந்து பார்க்காது. நீ சொல்றியே அந்த காதல் கூட பணம் இருந்தா தான் தாராளமா வரும். ஏன் உங்க அப்பா, அம்மா தினமும் அடிச்சிப்பாங்களே.. அதே பணம் இல்லைன்னு தானே‌..அவங்கக்கிட்ட ஆரம்பத்துல இருந்த அந்த காதல் எங்க போச்சு..?” 

“பணத்தை வச்சு எந்த மனுஷனோட பேரும் நிலைச்சு நின்னதில்லை. பெரிய பணக்காரனை கூட அவன் செத்து நாலஞ்சு நாள் தான் பெருமையா பேசுவாங்க‌. ஆனா அதே காதலுக்காக உயிரையே தந்தவங்களுக்கு உலகம் உள்ள வரைக்கும் பேர் இருக்கும்..” 

“இதெல்லாம் எதாவது படத்துக்கு டையலாக் எழுத தான் நல்லா இருக்கும். அப்படி எழுதி நீ சம்பாதிக்கற நாலஞ்சு பைசாவும் விடியறதுக்குள்ள கரைஞ்சு போய்டும்.” 

“ஆரா.. உனக்கு பணம் தானே தேவை. நான் சம்பாதிக்கிறேன்.. தேவைக்கு அதிகமாவே சம்பாதிக்கறேன்.எனக்கு கொஞ்சம் டைம் கொடு.” 

“எவ்வளவோ டைம் கொடுத்தாச்சு ஜெய். இனி உனக்கு யாரு ஹீரோவா சான்ஸ் கொடுப்பாங்கன்னு நினைக்கிற.. எத்தனை பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் நீ கொடுத்திருக்க..? நாலு டப்பா படத்தை கொடுத்திட்டு கனவு காண்றியே, அது பகல் கனவுதான்னு உனக்கு புரியலையா.. உனக்கு பின்னாடி வந்தவங்க கூட எத்தனையோ படங்கள்ல நடிச்சிட்டு போய்ட்டாங்க. இங்க பாரு.. நாம பிரியறதுதான் நம்ம ரெண்டு பேருக்கு நல்லது. உன்னால் தலைகீழ நின்னாலும் நம்பர் ஒன் ஹீரோவா வர முடியாது. உன்னை என் ஹஸ்பெண்ட்னு சொன்னா, என்னை புக் பண்ண வரவன் கூட யோசிக்கிறான். எனக்கு ஒரு நல்ல ஆஃபர் வரப்ப அதை உன்னை காரணம் வச்சு என்னால் இழக்க முடியாது..” 

“எது ஆரா..? அந்த தெலுங்கு ஹீரோ உனக்கு ஆஃபர் தரேன்னு சொன்னானா? அதைத்தான் பக்கம் பக்கமா கிசு கிசு எழுதறாங்களே..!”

“ஹ்ம்ம்.. புரிஞ்சா சரிதான்.” என்று கழுத்தை தடவிக் கொண்டு அவனை ஒரு புழுவைப் போல் பார்த்தாள் ஆரா.. 

பல்லைக்கடித்துக் கொண்டு அவள் எதிரில் நின்றான் ஜெய்.

“ஆரா.. நீ என் மனைவி. அது உனக்கு ஞாபகம் இருக்கா..அவன் கூட போறேன்னு என்கிட்டயே சொல்ற..அசிங்கமாவே இல்லையா உனக்கு.?” 

“ஜெய். இங்க பாரு. இத்தனை வருஷத்துல உனக்காக என் அழகை வீணாக்கினது தான் மிச்சம். இப்ப அதுக்கு பெரிய இடம், நிறைய பணம், வானம் அளவுக்கு புகழ்னு காத்திட்டு இருக்கு. அதை விடச் சொல்லாத.. உனக்கு நான் போனா, என்ன இழப்பு இருக்குமோ, அதுக்கு ஒரு விலை போட்டு வாங்கிக்க.. வேணும்னா விவாகரத்துக்கு அப்புறம் என்ன மாதிரி ஒரு அழகான, பணம் இருக்க பொண்ணு கிடைச்சா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிக்க.. மீதியிருக்க வாழ்க்கையை அவ பாத்துப் பா.. ஏன்னா நீ ஒரு பொலி காளை.. அதுக்கு மட்டும் தான் லாயக்கு நீ.. புரியுதா..?” 

“ஆரா” என்று கத்தி, அடக்க முடியாத கோபத்தில் ஜெயந்தன் அவளை அறைந்திருக்க, அழுத கண்களோடு, சிவந்த கன்னங்களோடு, அலங்கோலமாக  வெளியே ஓடி வந்தவளை படம் பிடித்தன அங்கிருந்த ஊடகங்கள். 

அவள் தங்கியிருந்த நட்சத்திர விடுதியில் தான் அந்த சம்பவம் நிகழ்ந்திருந்தது. 

அன்று பட்ட அசிங்கத்தின் வடு ஜெயந்தனை, இன்றும் விடாது துரத்துகிறது. 

“ஆரா.. இத்தனை வருஷத்திலேயும் உன் மேல் நான் வச்ச காதல் உண்மையா தான் இருக்கு.. இன்னும் நீ சொன்ன மாதிரி பொலி காளையா இல்லாம, எந்த பொண்ணையும் நினைச்சுக் கூட பாக்காம தான் வாழ்றேன். 

ஆனா எந்த பணம், பதவி நீ இல்லைன்னு சொன்னியோ அது சீக்கிரமே என்னை தேடி வரும்.. இன்னிக்கு நீ சாதாரண பொண்ணுதான். ஆனா இன்னிக்கும் நான் நடிகனா, இயக்குநரா தான் இருக்கேன். கூடிய சீக்கிரம் உன்னை பாக்கறேன்..பை..” என்று அவளின் முகத்தை பார்த்து சொல்லிவிட்டு புகைப்படத்தை கவிழ்த்து வைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!