Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உன்னைப் பார்த்த முதல் நாளே 12

அருந்ததி மதுரைக்கு வந்திருந்தாள்.  ராஜேந்திரன் அவளை வரவைத்திருந்தார் என்பது தான் சரியாக இருக்கும்.  காலையில் வந்தவள் ஏதும் பேசாமல் சென்று, கோவமாக படுத்துக் கொண்டாள் அறையில்.

ராஜேந்திரன் அவளிடம் போனில் எதுவும் சொல்லாமல், வீட்டில் விசேஷம் பூஜை செய்கிறோம்.  அதற்கு நீ கலந்து கொள்ள வேண்டும், வா என அழைத்திருந்தார் மகளை மதுரைக்கு.

போனில் சொல்ல தந்தைக்கு விருப்பமில்லை.  அதனால் மகளுக்கு நேரில் சொல்லிக் கொள்ளலாம் என அழைத்துவிட்டார்.

காலையில் வந்ததும் தான் விவரம் சொன்னார்.  இன்று மாலை உன்னை பெண் பார்க்க வருகிறார்கள் என.  அவளுக்கு சரியான கோவம் தந்தையின் செயலில்.  யாரைக் கேட்டு முடிவு செய்தார் இவர் என.  நான் அவ்வளவு தூரம் எடுத்து சொல்லியும், இவர் இஷ்டத்துக்கு பண்ணுவாரா என கோவம் வந்திருந்தது பெண்ணுக்கு.  அதில் யாரிடமும் பேசாமல் போய் அமைதியாக படுத்து விட்டாள்.



Advertisement

புவனா மகள் வந்ததிலிருந்து, அவளிடம் பேச முயன்று கொண்டிருக்கிறார்.  எதற்கும் பதிலில்லை அவளிடமிருந்து.  அழுத்தமாக வாயை மூடிக்கொண்டு படுத்திருந்தாள்.  இந்த அம்மாகூட எதுவும் சொல்லலையே என எரிச்சல் தாயின் மீது.  ஆதலால் அன்னையிடம் முகத்தைகூட காட்டாமல், தலையணையில் முகத்தை அழுந்த புதைத்திருந்தாள்.

“எழுந்து குளிச்சிட்டு சாப்பிட்டு படுத்துக்கோடா” என புவனா மகளை கெஞ்சிக் கொண்டிருந்தார்.

அவரை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவள், ஏதும் பேசாமல் திரும்பவும் படுத்துக் கொண்டாள்.

Advertisement

புவனா, “என்னடாமா…?  வந்ததிலிருந்து காபி கூட குடிக்கல நீ…” என்றார் மனத்தாங்கலாக.

Advertisement

எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் வந்தவுடன்,  முதலில் புவனா கையால் காபி குடித்துவிட்டு தான், அடுத்து பேசவே செய்வாள்.

அதற்கு ஏற்ற மாதிரி அவரும் அவள் மனம் புரிந்து, சூடாக அவளுக்கு பிடித்தமாதிரி முதல் டிகாஷனை இறக்கி, பாலை கெட்டியாக காய்ச்சி, மிதமான தித்திப்பில், ஸ்ட்ராங்காக காபி கலந்து கொடுப்பார் மகளுக்கு பிடித்த விதத்தில்.

இன்று காலை, அவள் வீட்டின் உள்ளே நுழையும் சமயம், சரியாக ராஜேந்திரன் கடைக்கு கிளம்பி தயாராக நின்றிருந்தார்.  மகளைப் பார்த்ததும் அவளுக்காகவே காத்திருந்தவர் போல, மகளிடம் இன்று மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள் என்ற தகவலை சொல்லி,  அவளை அதற்கு தயார் ஆக சொல்லி சென்றிருந்தார்.

Advertisement

இந்த அம்மாவாவது உண்மையை சொல்லியிருக்கலாம்,  இவங்களும் அப்பாவோட சேர்ந்துகிட்டு, நம்ம கிட்ட இருந்து மறைச்சிட்டாங்க இல்ல என புவனாவின் மீதும் கோவம்.  அதனால் அவரிடமும் பேசவில்லை.

அவரை முறைத்துக் கொண்டே வந்து படுத்து விட்டாள்.  புவனாவுக்கு மனதில் பயம் பிடித்தது.  ஐயோ இவள் இதுக்கே முறைக்கிறா.  இன்னும் மாப்பிள்ளை பன்னண்டாவதுதான் படிச்சிருக்கார்னு தெரிஞ்சா, என்ன சொல்ல போறாளோன்னு கிலியானது.

புவனாவும் ராஜேந்திரனிடம் சொல்லி பார்த்துவிட்டார்.  “பொறுத்து செய்யலாம்.  ஏன் அவசரம்?  நல்லா படிச்ச மாப்பிள்ளையா நம்ம பொண்ணுக்கு ஏத்த மாதிரி பார்க்கலாங்க என.

இல்லாட்டி அவள் சொன்ன மாதிரி ஒரு வருஷமாவது போகட்டும்.  அவள் தான் கொஞ்ச நாள் வேலை பார்க்கிறேன்.  அப்புறம் கல்யாணம் பேசுங்கன்னு தான சொல்லிருக்கா.  வெயிட் பண்ணவோமே என கெஞ்சிகூட பார்த்துவிட்டார் கணவரிடம்.  ம்கூம்.  ராஜேந்திரன் ஏனோ இந்த வரனில் உடும்பு பிடியாக இருந்தார்.

நமக்கென்ன இரண்டு மூனு குழந்தைகளா இருக்கு.  இவளுக்கு முடிச்சாதான், அடுத்தடுத்து பசங்களுக்கு பார்க்கனும்னு.  எதுக்கு அவசரப்படறீங்க?  நல்ல இடமா பார்த்து செய்யலாம் என தன்மையாகவும் சொல்லிப் பார்த்தார்.

ராஜேந்திரனுக்கு என்னவோ இந்த வரனை பிடித்து விட்டது.  ஒரே பிடியாக நின்று விட்டார்.  இந்த சம்மந்தத்தை முடிக்க வேண்டும் என. வீட்டில் எப்போதும் அவரது முடிவு தான் இறுதியானதாக இருக்கும்.  சில விஷயங்களில் புவனா எடுத்து சொன்னால் புரிந்து கொள்வார்.  ஆனால் மனிதருக்கு இயல்பிலேயே பிடிவாதம் அதிகம்.

புவனாவுக்கும் அதற்குமேல் ஒன்றும் பேச முடியவில்லை.  இதற்கு மேல் பேசினால் எங்கு அவருக்கு கோவம் வருமோ என விட்டு விட்டார்.

சரி பெண் பார்க்க தானே வருகிறார்கள்.  பின்பு பொறுமையாக சொன்னால் ஏற்றுக் கொள்வார் என தன்னையே சமாதானப் படுத்திக்கொண்டு மகளிடம் பேச நினைக்கிறார்.  அவளோ அவரை பார்க்ககூட மறுக்கிறாள்.

இது பெண்கள் வாங்கி வந்த வரம்போல.  ஒரு பக்கம் கணவன்.  இன்னொரு பக்கம்  பிள்ளைகள்.  மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்களே அது மாதிரி, கட்டினவனிடம் இடி வாங்கவேண்டும்.  பிள்ளைகளிடமும் மொத்து வாங்க வேண்டும்.  இப்போது புவனாவும் அதுமாதிரிதான் இருந்தார்.

ஆனாலும் அப்படியே விட்டு விட்டால் அது தாயல்லவே.  மகளை ஒரு வழியாக கெஞ்சி, கொஞ்சி சமாதானப் படுத்தி காலை உணவை சாப்பிட வைத்துவிட்டுதான், தன்னுடைய வேலையை பார்க்க சென்றார்.

புவனா பேசிய விதத்தில் அருந்ததி ஓரளவு தெளிந்திருந்தாள்.  அம்மா சொன்னது போல பொண்ணு பார்க்க தான வராங்க.  அப்புறமா அப்பாகிட்ட பேசிப் பார்க்கலாம் என்று சமாதானமாகிக் கொண்டாள்.

தந்தையின் பிடிவாதத்தை பற்றி நன்கு தெரியும் அவளுக்கு.  ஓரளவுக்கு மேல் அவரிடம் பேச முடியாது.  அவளுடைய கோவம், சண்டை, கொஞ்சல், செல்லம் எல்லாம் புவனாவிடம் மட்டுமே.

ஆதலால் நல்ல மனநிலையிலேயே தயார் ஆக ஆரம்பித்தாள்.   காலையில் சாப்பிட்டு உறங்கியவள், மதியத்திற்கு மேல் தான் எழுந்தாள். விழித்ததும்தான் பசியை உணர்ந்தாள்.

எழுந்து முகம் கழுவி வெளியே வந்தாள்.  பாரிஜாதம் மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தார்.  புவனா கிட்சனில் ஏதோ சமைத்து கொண்டிருந்தார்.  கிட்சனிலிருந்து நெய் வாசனை கமகமத்தது.  ஆஹ்… அம்மா ஏதோ ஸ்வீட் செய்யறாங்க போல என அங்கு சென்று பார்த்தாள்.

புவனா ரவா கேசரியை வானலியில் கிளறிக் கொண்டிருந்தார்.  ஒரு பக்கம் தட்டில் முந்திரி வறுத்து வைத்திருந்தார்.

“அய்… ம்மா… எனக்கு பிடிச்ச கேசரி” என அன்னையை பின்னிருந்து கட்டிக் கொண்டாள் சிரித்துக் கொண்டே.

“ஏய்.  அடுப்புல நின்னது.  உடம்பெல்லாம் ஓரே வேர்வை.  நகருடி”.

“ம்ம்… பரவாயில்லை.  நானும் இன்னும் குளிக்கலை.  நீயும் வேர்வையாயிருக்க.  இரண்டு பேரும் டச்சிங் டச்சிங்.  மேட்சாயிடுச்சு.  சேர்ந்து குளிச்சுப்போம்”.

“அடி… பேச்சைப் பாரு கழுதை” என பக்கத்தில் இருந்த கரண்டியை எடுத்து அவள் கையில் லேசாக அடித்தார்.

“ம்மா… பேச்சு பேச்சா… இருக்கனும்.  நோ வயலென்ஸ்.  இந்த வெப்பன்ஸ் எல்லாம் உன் புருஷனுக்கு தான் சொல்லிட்டேன்.  இந்த அடி, உதை, குத்து, எல்லாம் அவருக்குதான் செட்டாகும்.  என்னை விட்டுடு…” என்றாள் சிணுங்கிக்கொண்டே.

“அவரை இழுக்கலைன்னா, உனக்கு தூக்கம் வராதே…”

“ஹ்ம்  ஆமாம்.  அப்படியே உன் புருஷன இழுத்துட்டாலும்.  உனக்கெல்லாம் இன்னும் கொஞ்சம் நல்ல புருஷன் கிடைச்சிருந்தா, உன்னையெல்லாம் கையிலயே பிடிக்க முடியாது.  எப்ப வரன்னு போனார், அருவாக்கடை அய்யாசாமி…” என்றாள் கிண்டலாக.

ஹ்ம்ம்… என பெருமூச்சு விட்டவர், “ஒன்னும் சொல்லல. சீக்கிரம் வந்திருவாருன்னு தான் நினைக்கறேன்”.

“ம்மா… பசிக்குது…”

“போட்டு சாப்பிடுடா. அம்மா வேலையா இருக்கேன் இல்ல.  இன்னும் வடைக்கு உளுந்து இருக்கு கிரைன்டர்ல போடனும்.  எனக்கு வேலையிருக்கு மா.  பஜ்ஜி போடலாம்னு பார்த்தா, உங்க அப்பத்தா… என் பேத்திக்கு வடைதான பிடிக்கும்.  அவளுக்கு பிடிச்ச மாதிரியே செய்னு சொல்லிட்டாங்க”.

“அய்… குட் மம்மி” என அன்னையின் தாடையை பிடித்து கொஞ்சினாள்.

“கொஞ்சம் நீயே போட்டு சாப்பிடுடா” என்றார் முந்திரியை எடுத்து கேசரியில் போட்டு, அதன் மேலே இன்னும் கொஞ்சம் நெய் ஏலப்பொடி எல்லாம் சேர்த்து கிளறிவிட்டவாறே.

தட்டிலிருந்து கொஞ்சம் முந்திரியை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே, “போ… போ… நானே எப்பவோ தான் இங்க வரேன்.  அப்பயும் நானே போட்டு சாப்பிடனுமா…” என முறுக்கிக் கொண்டு ஹாலில் பாரிஜாதம் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.

“இவளை… சொன்னா… புரிஞ்சிக்கறாளா…” என புவனாவால் கடியதான் முடிந்தது மகளை.

தட்டில் சாதம் போட்டு, அதன் மேல் அவளுக்குப் பிடித்த சீரகக் குழம்பை ஊற்றியவர், தொட்டுக்கொள்ள என அவளுக்காக செய்து வைத்திருந்த சேனைக்கிழங்கு வறுவலையும் தட்டில் வைத்து எடுத்து வந்தார் மகளுக்கு  ஊட்டுவதற்காக.  பெரும்பாலும் இங்கு வந்தால் புவனாதான் ஊட்டி விட வேண்டும் மகளுக்கு.  அதிக செல்லம் புவனாவிடம்.

பாரிஜாதம்,  “நீ என்ன பப்பாவா.  ஏழு கழுதை வயசாகுது.  இன்னும் உனக்கு ஒருத்தர் ஊட்டனுமா…?” என்றார் கிண்டலாக.

அருந்ததி, “உனக்கு ஏன் கிழவி பொச பொசங்குது.  எங்கம்மா எனக்கு ஊட்டி விடறாங்க”.

பாரிஜாதம், “ம்ம்… நல்லா வாயடிக்க கத்து வச்சிருக்கே.  உங்கப்பன் உனக்கு மாப்பிள்ளை பார்க்கிறான்.  இன்னும் சின்ன பிள்ளையாட்டம் உங்கம்மா முந்தானிய பிடிச்சிட்டு கொஞ்சிட்டு திரியற”.

“கொஞ்சாம என்ன பண்ணுவாங்களாம்?  என் அம்மா கையால சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு தெரியுமா?  அதுக்கதான நான் இங்க வரேன்”.

“முன்னதான் படிக்க வெளியூர் போன சரி.  இப்ப ஏன் அவ்வளவு தூரத்துல போய் இருக்கனும்.  இங்கயே ஒரு வேலையை பார்த்தா ஆகாதா?”

“ம்ம்… இதோ இப்படி பேசறியே.  உன் டார்ச்சர் இல்லாம இருக்கதான் அங்க போய் தங்கி வேலை பார்க்கிறேன்” என்றாள் அவரைப் பார்த்து கண்ணடித்து கிண்டலாக சிரித்துக் கொண்டே.

பாரிஜாதம், “அடி நாயே.  யாருடி உன்னை டார்ச்சர் பண்றது.  நானா…?  என முதுகில் செல்லமாக அடித்துக் கொண்டே.

“சரி அதிருக்கட்டும் கிழவி.   இந்த தோடு எனக்கு தான.  எப்ப எனக்கு தருவ?  யாருக்கும் குடுக்க கூடாது சொல்லிட்டேன்” என அவருடைய காதில் இருந்த கம்மலை பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தாள்.

“உனக்கில்லாததா எடுத்துக்கோடி….”

“ஆமாம் இப்படி என்கிட்ட சொல்லிட்டு, அந்த சில்வண்டு வந்ததும் பேச்சு மாற கூடாது பார்த்துக்கோ.  அவள் கிட்டயும் இதே டயலாக்கை சொல்லிட்டிருக்க நீ”.

அவளது அத்தை சித்ராவின் மகளைத் தான் சில் வண்டு என சொல்கிறாள்.  சிறு வயது முதலே இருவருக்கும் பாரிஜாதம் அணிந்திருக்கும் கம்மலை வைத்து போட்டி வரும்.

பாரிஜாதம், “சரி பேசனது போதும்.  நீ இன்னும் குளிக்க கூட இல்ல.  உங்க அப்பன் வந்தான்னா வல்லுன்னு விழுவான்.  போய் குளிச்சு ரெடியாகு… ராஜாத்தி”

அருந்ததி பேசிக்கொண்டே புவனா ஊட்டியதை சாப்பிட்டு முடித்திருந்தாள்.  சரி நான் போய் குளிக்கறேன் ம்மா என எழுந்து சென்றாள் அறைக்குள்.

மாலை ஐந்து மணிக்கு மேல் வசீகரனின் வீட்டில் இருந்து அவளைப் பெண் பார்க்க வந்திருந்தனர்.  ராஜேந்திரனின் தங்கை சித்ராவும் அவரது கணவனும் முன்னமே வந்திருந்தனர்.

குளித்து வீட்டில் அணியும் உடையுடன் இருந்தவளை, சித்ரா வந்துதான் தயார் செய்தார்.

சித்ரா, “இவ்வளவு நேரமா ரெடியாகாம என்ன பண்ண?  இந்நேரம் தலையையாவது காய வச்சிருக்கலாமில்ல…” என கேட்டுக் கொண்டே அவள் தலையை ஈரம் போக துவட்டி விட்டு, சிக்கெடுத்து, அழகாக பின்னிவிட்டார்.

“முடி வளர்ந்துடுச்சு உனக்கு.  இப்பல்லாம் ஹேர் கட் பண்றதில்லையா” என்றார்.  அவள் காலேஜ் படிக்கும் போது அடிக்கடி எப்படி தோணுதோ, அதுபோல வெட்டி விட்டுக் கொள்வாள்.  பெரும்பாலும் கல்லூரியில் ஃபிரீ ஹேர் ஸ்டைல்தான் பெண்கள் எல்லோரும்.  அதுவும் கூட ஒரு காரணம் அவள் வெட்டி விட்டுக் கொண்டதுக்கு.

ஆனால் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்ததற்கு பின்பு, அருந்ததிக்கு முடியை வெட்டவே மனது வரவில்லை.  அங்கு வேலை செய்யும் ஆசிரியைகள் எல்லாம் முடியை பின்னலிட்டு நீளமாக தொங்கவிட்டு வருவதைப் பார்த்ததும், முடி வளர்க்க ஆசை வந்திருந்தது இவளுக்கு.  அந்த ஆசையில் அவளும் முடியை வளர்க்க ஆர்ம்பித்திருந்தாள்.

சித்ரா, “வேலையெல்லாம் எப்படியிருக்கு?  உனக்கு பிடிச்சிருக்கா?  மதுரையில இல்லாத ஸ்கூலா, அவ்வளவு தூரம் போய் வேலை பார்க்கனுமா?” என்றார் அவளை கிளப்பிக்கொண்டே.  அவள் சென்னையில்  வேலைக்கு சேர்ந்ததற்கு பின்பு இப்பொழுதுதான் பார்க்கிறார்.

அருந்ததி, “அது ரொம்ப பெரிய ஸ்கூல் அத்தை,  அங்க வேலை கிடைக்கறதே கஷ்டம்.  அவ்வளவு காம்படீஷன் அதுக்கு.  அங்க வேலைப் பார்த்தா நல்ல எகஸ்பீரியன்ஸ் கிடைக்கும் த்தை”.

“இங்கயும் இருக்க பெரிய ஸ்கூல்ல எல்லாம் நான் ட்ரை பண்ணேன்.  பட் கிடைக்கல.  அங்கதான் கிடைச்சது.  கிடைச்சதை மிஸ் பண்ண வேணாமேன்னு ஜாயின்ட் பண்ணிட்டேன்” என்றாள்.

சித்ரா தலையை பின்னி கொண்டிருக்கும் போதே, புவனா ஊசியில் நெருக்கமாக கோர்த்திருந்த மதுரை மல்லியைக் கொண்டு வந்து கொடுத்தார்.  கையோடே புடவை, நகைகளை அலமாரியிலிருந்து எடுத்து வெளியே வைத்தார்.

சித்ரா, “நான் கட்டிவிடவா” என்றார்.

அருந்ததி, “நானே கட்டிக்கிறேன் அத்தை” என்றாள்.

“லேட் பண்ணாதடா.  சீக்கிரம் கட்டிக்கனும்.  கட்டிட்டு கூப்பிடு.  நான் வந்து நகையை போட்டு விடறேன்.  அப்புறமா பூ வச்சிக்கலாம்.  அப்பதான் கசங்காம இருக்கும்” என்றார் புவனா.

சரி என தலையசைத்தாள்.

புடவைகட்டி, நகையெல்லாம் போட்டு, தலையில் பூ வைத்து பார்ப்பதற்கு கண்ணுக்கு நிறைவாக இருந்தாள்.

புவனா அருந்ததியைப் பார்த்து,  “ம்ம்… என் பொண்ணுக்கு கல்யாண களை வந்துடுச்சு” என அவரது கைகளால் திருஷ்டி வழித்து, மகளை ஆசையாக கட்டிக் கொண்டார்.

“அம்மா பசிக்கிற மாதிரியிருக்கு.  கொஞ்சூன்டு கேசரி குடேன்” என்றாள் கண்களை சுருக்கி கொஞ்சலாக.

“அவருக்கே சிரிப்பு வந்துவிட்டது, அவள் கேட்ட விதத்தில்.  கழுதை கேசரி வேணும்.  அத நேரிடையா கேட்க வேண்டியதுதான.  அதுக்கு எதுக்கு பசிக்குதுனு கதைவிடற…”

“ஸ்வீட் மம்மி” என்று புவனாவின் கன்னத்தைப் பிடித்து கிள்ளி முத்தம் வைத்தவள், கொஞ்சூன்டு இப்ப ஸ்பூன் போட்டு தருவியாம்.  அப்புறமா நிறைய சாப்பிடுவனாம்.  ஓகே” என்றாள் தாயிடம் குழைவாக.

“ஹா… ஹா… நீ இப்படி கேட்பன்னு தெரிஞ்சுதான் உனக்குன்னு சூடா எடுத்து வச்சிருக்கேன்.  இரு எடுத்துட்டு வரேன்” என சென்றவர் கிண்ணத்தில் கொஞ்சம் கேசரி ஸ்பூன் போட்டு எடுத்து வந்து கொடுத்தார்,

கூடவே சூடாக ஓரு டம்பளரில் காபியும் கொண்டு வந்து கொடுத்தார்.  “பொறுமையா சாப்பிடு.  மேல சிந்தாம பார்த்துக்கோ…” என சொல்லி அங்கிருந்து சென்றுவிட்டார்.

அடுத்த சிறிது நேரத்தில் வசீகரனின் வீட்டிலிருந்து பெண் பார்க்க வந்திருந்தனர்.  சரசு, ராணி, ராணியின் கணவன் அகிலன், அவர்களது மகன் சர்வேஷ், வசீகரன் என வசீகரனின் வீட்டினர் மட்டும்தான் வந்திருந்தனர்.

இங்கும் ராஜேந்திரன் யாரையும் அழைக்கவில்லை.  முதலில் நல்லபடியாக பேசி முடியட்டும்.  அதற்கப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தார்.  பாரிஜாதம்தான் அப்படி சொல்லியிருந்தார் மகனிடம்.  ராஜேந்திரனும் அதற்கு ஆமோதித்திருந்தார்.

வந்தவர்களை வாசலில் வந்து வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர் ராஜேந்திரனும், புவனாவும் இன்முகமாகவே.  ராஜேந்திரனுக்கு இந்த வரன் தகைய வேண்டும் என உள்ளம் முழுக்க ஆசை.  அது அவர் அகத்திலே தெரிந்தது.

தரகர் ராமு இத்தகவலை கூறியதிலிருந்து, சதா அதே சிந்தனைதான் அவருக்கு.  வசீகரன் ஆளும் பார்க்க நன்றாக இருப்பான்.  அவனைப் பார்த்து யாரும் இவன் பள்ளியை தாண்டினதில்லை என கூறினால் நம்பமாட்டார்கள்,  பார்க்க அவ்வளவு ஸ்மார்ட்டாக இருப்பான்.

பட்டப்படிப்புதான் இல்லையே தவிர, வேறெதுவும் அவனைப்பற்றி குறை ஏதும் சொல்ல முடியாது.  அநாவசியமாக எந்த வம்பு தும்புகளிலும் தலையிடமாட்டான்.  நல்ல உழைப்பாளி.  கைநிறைய வருமானம்.

ஒரே தொழில் இருவருக்கும்.  பிற்காலத்தில் மருமகனே கடையை பார்த்துக் கொள்ளலாம் என ராஜேந்திரன் அவருக்கு தோதாக கணக்கு போட்டுக் கொண்டிருந்தார் மனதில்.

வெளியூர் மாப்பிள்ளையாக இருந்தாலோ, வேலைக்கு செல்பவனாக இருந்தாலோ, தன் தொழிலை யாரும் எடுத்து செய்ய விரும்ப மாட்டர். அல்லும் பகலும் அயராது உழைத்து தொழிலை பெருக்கி வைத்து இருக்கிறார்.   அதனை அப்படியே விட்டுவிட மனதில்லை அவருக்கு.

ஏன்? எதற்கு?  ஒருவரை நமக்கு பிடிக்கிறது என்பதற்கு எந்த வரையறையுமே இல்லை.  அதுபோலதான் ராஜேந்திரனுக்கு வசீகரனைப் பற்றி அறிந்ததும் அவருக்கு, இவன் மாப்பிள்ளையாக வந்தால் நன்றாகயிருக்கும் என அந்த அந்த நிமிடமே பிடிக்க ஆரம்பித்துவிட்டது.  பிற்காலத்தில் மருமகனாக மட்டும் இல்லாமல், மகனாகவும் தாங்குவான் என அவர் மனம் கணக்கிட்டதுபோல.

அதற்காக அவர் வசீகரனை பற்றி விசாரிக்காமல் எல்லாம் இல்லை.  அவர் அறிந்த வகையில் நன்கு அவனைப் பற்றி விசாரித்து திருப்தியடைந்த பின்புதான் ஜாதகப் பொருத்தம் பார்க்கவே சென்றார்.

இருவருக்கும் ஜாதகப் பொருத்தம் சரியாக இருக்கிறது என தெரிந்த பின்புதான் இரு குடும்பமும் பேசி முடிவு செய்திருந்தனர் இன்றைய நிகழ்ச்சியை.

அந்த சந்தோஷம் ராஜந்திரனின் முகத்தில் நன்றாகவே தெரிந்தது.  அறிமுகப் படலம் முடிந்து எல்லோருக்கும் புவனா தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

ராஜேந்திரனுடன் வசீகரனின் பேச்சு சகஜமாகவே இருந்தது.  தொழில் முறையில் இருவரும் ஏற்கனவே பார்த்திருந்தாலும், இதுவரை நேருக்கு நேர் என எப்பொழுதும் பேசியதில்லை.

இன்று இருவரும் எந்த தயக்கமும் இல்லாமல் பேசிக் கொண்டிருந்தனர்.  அகிலனும் அவர்களது பேச்சில் கலந்து கொண்டான்.  பெரும்பாலும் ஆண்களின் பேச்சு தொழில் சார்ந்ததாகவே இருந்தது.

பெண்களும் அவர்களுக்குள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.  பூர்விகம் மற்றும் உறவு முறைகளைப் பற்றி அவர்களது பேச்சு சென்று கொண்டிருந்தது. அவர்களது உறவுக்குள் சிலரை சொல்லி, உங்களுக்கு அவங்கள தெரியுமா?  அப்படியா…?  அப்படினா…,  இவங்க உங்களுக்கு சொந்தமா? ஓஹ்…..அவங்க உங்களுக்கு உறவா, அப்படின்னா எங்களுக்கு தெரிஞ்சிருக்கனுமே, இது வரைக்கும் எந்த விசேஷத்திலும் நான் உங்களை பார்த்ததில்லையே என இப்படியாக பெண்களின் பேச்சு சுவாரஸ்யமாக நீண்டது.

ஆண்களும் தங்களது பேச்சுகளுக்கு இடையே, இவர்களது பேச்சிலும் பங்கு கொண்டனர்.  பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜேந்திரன் புவனாவைப் நிமிர்ந்து பார்த்தார்.  அவரும் அவரது பார்வையின் பொருளை புரிந்து கொண்டு எழுந்து சென்று அனைவருக்கும் பலகாரம், காபி எல்லாம் எடுத்து வந்து கொடுத்தார்.

சாப்பிட்டுக் கொண்டே திருமணத்தை பற்றியும், திருமணத்தில் மாப்பிள்ளை பெண் வீட்டாரின் பழக்க வழக்கங்களை பற்றியும் பேசினர்.  பாரிஜாதம்தான் சித்ராவுக்கு ஜாடை காட்டி போய் அருந்ததியை அழைத்து வர சொன்னார்.

அருந்ததியும் இன்முகமாகவே வந்து, எல்லோருக்கும் வணக்கம் சொல்லி,  பாரிஜாதத்தின் அருகில் அமர்ந்து கொண்டாள்.  அவளுக்கு எந்த சங்கோஜ மனப்பான்மையும் இல்லைபோல.  ஏதோ புதிதாக வீட்டில் விருந்தினர் வந்த பீல்தான் இருந்தது மனதில்.

அவள்தான் கல்யாணத்தை பற்றின நினைப்பில் இல்லையே.  ஆதலால் அவளிடம் எந்த தடுமாற்றமும் இல்லை.  சரசும், ராணியும் அவளிடம், அவளது படிப்பு வேலைப்பற்றி பேச்சு கொடுத்து பேசிய போதும் சாதாரணமாகவே பதிலளித்தாள்.

அதற்கு நேர்மாறாக வசீகரனிடம் தடுமாற்றம் வந்திருந்தது.  அருந்ததி வரும்வரை சாதாரணமாக இருந்தவன், அவள் வந்த பிறகு, அவனால் அப்படி இயல்பாக இருக்க முடியவில்லை.  அவளிருக்கும் பக்கம் கண்கள் நகரவே மறுத்து அடம் பிடித்தது.

வசீகரனின் மீதுதான் எல்லோரது பார்வையும். அகிலன் வசீகரனின் காதில் குனிந்து “மச்சான் பொண்ணை நிமிர்ந்து பாருங்க…” என்றான் கிசுகிசுப்பாக.

எல்லோரின் கவனமும் வசீகரனின் மேல் பதிந்ததால், வேறு வழியில்லாமல் நிமிர்ந்து அருந்ததியை பார்த்தான்.

வசீகரன் பார்க்கும் போது அவளும் அவனைத்தான் பார்த்தாள்.  நாமதான பொண்ணு, இவன் ஏன் இப்படி தலையை குனிஞ்சுகிட்டு வெக்கப்படறான் என அவளே நினைக்கும் அளவுக்கு வசீகரன் தடுமாற்றத்துடன் இருந்தான்.  ஆனால் எல்லாரும் அதை அவன் வெட்கப்படுவதாக எடுத்துக் கொண்டார்கள்.

அவனுக்குதானே அவனைப்பற்றி தெரியும்.  வசீகரனுக்கோ எப்பொழுதுடா அங்கிருந்து செல்வோம் என்ற நிலைதான் உள்ளம் முழுவதும்.  அருந்ததி வந்து உட்கார்ந்ததிலிருந்து அவனது மனநிலை முற்றிலும் வேறாக மாறியிருந்தது.  ஏதோ தணலுக்கு எதிரில் உட்கார்ந்திருப்பவனைப் போல தகித்துக் கொண்டிருந்தான் உள்ளுக்குள், அவளைப் பார்க்க முடியாமல்.

ஏனோ அருந்ததியைப் பார்த்த அடுத்த நொடி, நித்யாவின் நினைவு மனதுக்குள் மேலோங்கி பிராண்டத் தொடங்கியது.

ஏற்கனவே அவளுக்கு துரோகம் இழைத்து விட்டதாக துடித்துக் கொண்டிருந்தவனுக்கு, இன்னும் குற்றவுணர்ச்சி அதிமாகி, மனதை பாரமாக்கி, வலியால் அழுத்த ஆரம்பித்தது.

பத்தாததற்கு மனசாட்சி வேறு, ஒருத்தி கூட குடும்பம் நடத்தி கும்மாளம் அடிச்சுட்டு, இவளை பொண்ணு பார்க்க வந்திருக்கியா நீன்னு கேள்வி கேட்டுக் குடைந்து கொண்டிருந்தது.  அனலில் இட்ட புழுவைப் போல மனதில் துடித்துக் கொண்டிருந்தான், அந்த இடத்திற்கு பொருந்த முடியாமல்.

அருந்ததி இருக்கும் பக்கமே அவனது பார்வை செல்லவில்லை.  சரசுக்கு அருந்ததியை பிடித்திருந்தது.  அவளது இயல்பான பேச்சும், எந்த அலட்டலும் இல்லாத பாவனையும், அவரைக் கவர்ந்திருந்தது.  படித்திருக்கிறாள், நல்ல வேலையில் இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், ஒரே பெண் வேறென்ன வேண்டும் அவருக்கு.

மாப்பிள்ளை வெறும் 12 – வது தான் படித்திருக்கிறான் என தெரிந்தும் அதை பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் பெண் கொடுக்க சம்மதித்ததே அவருக்கு ஏக திருப்தி.

ஆம், மகன் மேற்கொண்டு படிக்க முடியாமல் போனது அவருக்கு வருத்தமே.  அதை இதில் ஈடுகட்டுவது போல் மருமகளாக வர இருப்பவள் படித்திருப்பது அவருக்கு சந்தோஷமே.

வசீகரனின் குடும்பம் நன்முறையிலே பேசி முடித்து கிளம்பியிருந்தனர்.  மீதி விவரங்களை தரகரிடம் சொல்லிவிடுவதாகச் சொல்லி.

அருந்ததியும் அடுத்த நாளே சென்னைக்கு கிளம்பிவிட்டாள்.  இருவீட்டாரும் எல்லாம் பேசி முடிவாகி, தங்களுக்குள்ளே திருமணத்தை உறுதி செய்திருந்தனர்.

திருமணத் தேதி மட்டும் குறிக்கவில்லை.  இரண்டு வீட்டிலும் கல்யாண வைபவத்தை விமரிசையாக செய்ய ஆசைப்பட்டதால் மண்டபம் அமைவதைப் பொறுத்து திருமண தேதி குறித்து கொள்ளலாம் என பேசி முடிவு செய்திருந்தனர்.

அஸ்வத் தான் நினைத்தது போலவே, அருந்ததியைப் பார்த்து தனது மனதில் உள்ளதை அவளிடம் கூறியிருந்தான்.

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!