Skip to content
Post Views: 1,417
விழி தீண்டலில் திருப்திப்படுவது, இளமை ஒதுங்கும் காலத்தில் தான்.
Advertisement
பார்வைகள் தீண்ட தீண்ட ஒளியும் சிரிப்பு கண்மணி முகத்தில்.. இருளை கிழித்து வெளிச்சமிடும் சூரியனை போல் ஆதியின் சிரிப்பு. இருவரையும் பார்க்க மயில் ராவணனை தவிர்த்து அனைவருக்கும் சந்தோஷம்.
ஏறக்குறைய பத்தாண்டுகள் ஆயிற்று..கண்மணியாக இழைந்துக் குழைந்து அவனுடன் பேசி, சிரித்து.
Advertisement
Advertisement
ஆதியின் வலிகள் கூட இன்று விடுமுறை எடுத்து பறந்திருந்தது..
தாராவுக்கு ஆதியின் பழைய முகம் திரும்ப வந்ததை போல் இருந்தது. அவனை கட்டிக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டாள். திடீரென்று அங்கு சூழல் மாறியது. ஆதியின் மேல் பூத்தூவல்களாய் மின்மினி காகித துகள்கள் விழுந்தன.
Advertisement
“நீ சிந்துற கண்ணீரும்
இங்கு நிரந்தரம் இல்ல
இது புரிஞ்சிக்கிட்டாலே
இங்கு நீ தாண்டா ஆள.. எத்தனை சந்தோஷம் தினமும் கொட்டுது உன்மேல..”
அரவிந்த் கிடாரை இசைத்துக் கொண்டே, தாராவுடன் சேர்ந்து ஆதிக்காக பாடலை பாடி, அவனை சுற்றி ஆடினான். கண்மணி அவர்களையும் ஆதியையும் ஆசை தீர பார்த்தாள். ராகாவும் அங்கு வந்து சேர, அத்தனையையும் காணொலிகளாக அவள் பதிவு செய்ய ஆரம்பித்தாள்.
கொண்டாட்டம் ஆதியை பறக்க வைத்தது.
சிறிது நேரத்தில் கண்மணி உதவியுடன் எழுந்தவன்,
“என்னை பார்.. நான் கையைத்தட்ட உண்டாச்சு உலகம்.. ஹேய்.. நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்.. என் கூட சேர்ந்து கூத்தாடும் நிழலும்..” உற்சாகமாக ஆதி பாடி இடது கையால் தலைக்கு மேல் வட்டமிட்டு சுட்டிக் காட்டி ஆட, கண்மணி அவனை இடுப்போடு சேர்த்து பிடித்துக் கொண்டாள். அவளின் தாங்கலில் அவனால் நிம்மதியாக அந்த நிமிடத்தை அனுபவிக்க முடிந்தது.
ஒரு மனிதனுக்கு அவனின் சரிபாதி, அவனை முழுமையாக நம்பி தன்னை ஒப்படைத்து, அவன் கீழே விழுகையில் நிலத்தை போல் தாங்கி, பரிவு காட்டி, மகிழ்வுடன் இருந்தால் அவனால் எதை இழந்தாலும் சந்தோஷமாக வாழ முடியும்.
அப்படி தான் இருந்தான் ஆதி.
மெல்ல அவனை அமர வைத்தவளின் புடவையில் அவன் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தான். கண்மணிக்கு கூச்சமாக தான் இருந்தது. அவனை பார்த்து ஒரு சிரிப்பை சிந்த விட்டவள்,
அவனுக்காக அவனுக்கு பிடித்த காபியை கொண்டு வந்தாள். இத்தனை நாள் காபி கோப்பை மூடி திறந்து, ஏனோ தானோ என்று வரும் காபியை அவளுக்காக சகித்து ஒரு வாய் அருந்துவான்..
இன்றோ அவன் விரும்பி அருந்தும் டேவிட் ஆஃப் வகை காபியை கலந்து, சரியான சூட்டில், மூடிக்கொண்டு வந்தாள். அதை திறந்து பார்த்ததுமே அவள் மனம் காபியின் மணத்தில் தெரிந்தது.
பிள்ளைகள் பார்க்காத போது உதடு குவித்து அவளுக்கு காண்பித்தான். அவளின் விழிகளோ தாழ்ந்து அவசரம் அவசரமாக சுற்று முற்றும் பார்த்தது. மனதில் காதல் புகுந்து விட்டால் இந்த சின்ன சின்ன கள்ளத்தனங்களும் பரவசத்தை உடலெங்கும் விரிய வைக்கும்.
கண்களால் அவளை அருகில் அழைத்தான். அருகில் அமர்ந்தவுடன்,
“கண்மணி.. எவ்ளோ நாளாச்சு இல்ல. நம்ம குடும்பம் இப்படி சந்தோஷத்தை கொண்டாடி.. இதுக்கெல்லாம் காரணம் உன் முகத்தில் இருக்க இந்த சிரிப்புத்தான். ஒரு கவிதையை சமீபமா படிச்சேன்..
‘ஒரு பெண்ணின் மன்னிப்பில் தான் ஆணின் உலகம்..’ கலாப்ரியா எழுதியிருந்தார். எவ்வளவு உண்மை இல்ல.. நீ மன்னிச்ச மன்னிப்பு தான் இத்தனை நாள் நான் வாழ்ந்த கேவலமான வாழ்க்கையில் இருந்து என்னை விடுவிச்சு இருக்கு.” அவளின் கைகளை தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டான்.
“அங்கிள்.. கண்மணி அத்தை மட்டும் இல்ல.. மாளவிம்மாவும் உங்களை கண்மணி அத்தைக்காக மன்னிச்சிட்டேன்.. மறந்துட்டேன்னு சொல்ல சொன்னாங்க.. இப்போ நீங்க சொன்ன மாதிரி உங்க உலகம் சுழலட்டும்.. எப்போதும் நெஞ்சுக்குள் உல்லாலா உல்லாலா ..” ராகா சொல்லி முடித்துப்பாடி அரவிந்தின் தோளில் கைப்போட்டாள். அவன் தோளை தாழ்த்தி தாரா அருகில் போய் அமர்ந்தான். அவனைத் தவிர அனைவரும் அவர்களை வித்தியாசமாக பார்த்தனர்.
ராகா அதை அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் எப்போதும் அவன் முகத்தில் இருக்கும் அவளுக்கென்ற சினேக சிரிப்பு இப்போது இல்லை.
யமுனா வீட்டினரும் அங்கு வர, கலகலப்பில் அந்த வீடு குலுங்கியது. அன்னபூரணிக்கு இப்போது ஆதியின் அம்மா என்ற கெத்து மீண்டும் வந்து விட்டிருக்க, வேலையாட்களை விரட்டி விரட்டி ஆதிக்கு பிடித்ததெல்லாம் வாங்கி வர செய்வதும், சமைக்க செய்வதுமாக இருந்தார்.
ஒருவனை சுற்றி அந்த வீடு சுழன்றது.
அரவிந்த் சாப்பிட்டு முடித்ததும் அவனது அறைக்குள் வர, கதவின் பின்னிருந்து அவனது கழுத்தில் தன் கையை மாலையாக்கினாள் ராகா.
நெருக்கமான அந்த நொடி இருவருக்குள்ளும் படபடத்தது. அரவிந்தின் இதழுக்கு அருகில் ராகாவின் இதழ் இருந்தது. மெதுவாக அவளது கைகளை இறக்கி விட்டான் அரவிந்த்.
அவனாக போய் கட்டிலில் அமர்ந்தான். அவனருகில் உரசிக் கொண்டு ராகா அமர,
தள்ளி அமர்ந்துக் கொண்டான்.
“அரவிந்த். இப்போ எதுக்கு என் மேல் கோபம். எதாவது தப்பு பண்ணிட்டேனா” உதடு பிதுக்கி அவள் கேட்கும் போது அவனுக்குள் இருந்த பிடிவாதம் தளரத்தான் செய்தது. ஆனாலும் ஏனோ ஒதுங்கிக் கொண்டான்.
“அரவிந்த்.. உன்னை பாக்காத நாளை என்னால் நினைச்சுக் கூட பாக்க முடியாது. இதுல நீ பேசலைன்னா அது உள்ளுக்குள்ள ஒரு மாதிரி குடைஞ்சிட்டே இருக்கு. உன் முகமே சரியில்ல. ஏன் இப்படி இருக்க?. எல்லார் கூடவும் சிரிச்சுத் தானே பேசின..”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ராகா. ரொம்ப நாள் கழிச்சு மாமா, அம்மா, சித்தி, பாட்டி, தாரான்னு சந்தோஷமா இருந்தாங்க. அதுவே மனசுக்கு சந்தோஷமா இருந்துச்சு. வேற ஒன்னுமில்ல.”
“நான் சந்தோஷமா இல்லையே அரவிந்த். நீ பாக்கற பார்வைக்கும், பேசற பேச்சுக்கும் தானே உன்னை சுத்தி சுத்தி வரேன். அதையே நீ தராம அவாய்ட் பண்றன்னு எனக்கு நேரடியாவே தெரியுது. எதுவா இருந்தாலும் சொல்லு..”
“ராகா. இதே டிஸ்டன்ஸ் நமக்குள்ள இருக்கட்டும். வீயார் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அதான் நமக்கும் நல்லது. மத்தவங்களுக்கும் நல்லது.”
“ஜஸ்ட் ப்ரெண்ட்ஸா. உன் கெரியர்ல நீ நினைச்சது நடந்தா நீ என் லவ்வ அக்செப்ட் பண்ணிக்கறன்னு தானே சொன்ன. அதுக்காக நான் எவ்ளோ நாள் வேணா காத்திட்டு இருப்பேன். ஆனா நீ என்னோட ப்ரெண்டா இருப்பேன்னா அர்த்தம் புரியல..”
“நீ என்ன சின்ன குழந்தையா.. புரியாம இருக்க. நாம ப்ரெண்ட்ஸா இருப்போம்னா அதுல லவ் எங்க இருந்து வருது.?”
“அரவிந்த்.. அந்த புது பொண்ணு உன்கிட்ட பேசினதும் என்னை டீல்ல விடறியா..அவ என்னை விட பெட்டரா இருக்காளா..”
“ராகா. இனஃப். இப்படி ஏன் பேசற.. அந்த பொண்ணை இப்போதான் பாத்தேன். பொஸஸிவ்னஸ்க்கு ஒரு அளவு இருக்கு. நீ வர்க் பண்றதும் மீடியால.. இங்க எல்லாரும் எல்லார்கிட்டயும் பேசி தான் ஆகணும்னு தெரியாதா…”
“அப்போ சொல்லு. இத்தனை நாள் நீ வாயை திறந்து தான் லவ் யூன்னு சொல்லல. ஆனா என்கிட்ட நீ எப்படி நடந்துப்பேன்னு தெரியும்.. இப்போ ஒரே நாள்ல நீ எல்லாத்தையும் மாத்தினா?”
“நாம இப்படி இருந்தா தான் ரெண்டு குடும்பமும் எந்த கில்ட் ஃபீல்லும் இல்லாம நல்லபடியா இருக்க முடியும்.. ஏற்கனவே மாளவி அத்தையும் மாமாவும் எங்க குடும்பத்தால அனுபவிச்ச சிரமம் உனக்கு நல்லா தெரியும்.. ஆதி மாமாவை மாளவி அத்தை ஒரு வேளை நேர்ல பார்த்தா தர்மசங்கடமா தான் பேச முடியும்.
எங்க தாத்தாவும் உங்க தாத்தாவும் பரம எதிரி மாதிரி இருக்காங்க.. தாத்தா உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு நீலகண்டன் தாத்தாவை பழி வாங்கனும்னு நினைக்கிறார். அதனாலேயே அம்மாக்கும், அவருக்கும் சண்டை. மாமாவை அவர் கேவலமா பேசி… எப்படியோ அது ஒருவிதத்தில் நல்லதா முடிஞ்சது.. ஆனா அந்த விஷயமெல்லாம் எனக்குள்ள ரொம்ப டிஸ்டர்ப் ஆச்சு. இன்னிக்கு நான் அப்பா அம்மாவை மிஸ் பண்ணாம இருக்கேன்னா அதுக்கு காரணம் கண்மணி அம்மாவும் மாமாவும் தான்.. அவங்க சந்தோஷத்துக்கு இனிமே எந்த கஷ்டமும் வரக்கூடாது.”
“எனக்கு புரியுது அரவிந்த். ஆனா இது எல்லாம் அவங்கவங்க வாழ்க்கை. நம்ம வாழ்க்கைக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம். எங்க வீட்ல எல்லாருக்கும் உன்னை பிடிச்சு இருக்கு. உங்க வீட்லயும் அப்படித்தான் என்னை நினைக்கறாங்க. அப்புறம் ஏன் தேவையில்லாம குழப்பிக்கற. நாளைக்கு ஆதி அங்கிள் நல்லா ஆனதுக்கு அப்புறம் வெளில வந்தார்னா மாளவிம்மா, தேவா சித்தப்பா அவரை நேர்ல பார்த்தா முதல்ல ஒரு சங்கடம் வரும். ஆனா அப்புறமா அவங்க பேசத்தான் போறாங்க. நம்ம தாத்தாஸை விடு. அவங்க காலம் வேற.. நம்ம காலம் வேற. என்னமோ தமிழ் படத்துல வர மாதிரி நம்ம குடும்ப பகை.. அதனால் பிரிஞ்சிடலாம்னு சொல்றது ரிடிக்குலஸா இருக்கு”
“உனக்கு ரிடிக்குலஸா தெரியும் ராகா. உன்னை சுத்தி உன் ஃபேமிலி உன்னை இளவரசி மாதிரி பாத்துக்கிட்டாங்க. ஆனா நாங்க எப்பவும் இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்ல. தாரா பிறந்ததும் அம்மா மாமாக்கு இடையில் பேச்சு வார்த்தையே கிடையாது. அப்படியே பேசினாலும் சண்டை தான். காரணம்.. உனக்கே தெரியும். இப்போ வந்திருக்க சந்தோஷம் கடைசி வரைக்கும் வேணும்.. தாராக்காகவாவது..
மாமாவால தேவா மாமா அப்படி தொலைஞ்சு போனதும்.. மாளவி அத்தை பட்ட கஷ்டங்களை நேர்ல பார்த்தவன் நான். என்ன இருந்தாலும் மாமாவை அவங்க மன்னிச்சா கூட அவங்க மனசுல மாமாவை பாக்கறப்ப ஒரு கோபம் வரும்.
நமக்காக அவங்க விட்டுக்கொடுப்பாங்க. ஆனா போலியான அந்த சந்தோஷம் வேணாம். எல்லாரும் மனசு விட்டு பேசி சிரிச்சு.. நண்பர்களா இருப்போம்.. அது உறவா மாறனும்னா உண்மையான லவ் நம்ம ரெண்டு ஃபேமிலிக்குள்ளேயும் வரணும்.”
“ஹேய்.. அவங்க போலியா சந்தோஷமா இருந்தா தான் என்ன? நமக்காக தானே அப்படி நடிப்பாங்க. ஆனா யாரும் நம்மளை கல்யாணம் பண்ணிக்காதன்னு சொல்லையே. மோர் ஓவர்.. அம்மாவும் கண்மணி அத்தையும் டிவின்ஸ் மாதிரி. அங்கிள் அப்படி பண்ணாலும் மாளவிம்மா அதுக்காக அத்தையை வெறுத்ததே இல்ல. இப்போக்கூட கண்மணி அத்தைக்காக தான் அங்கிளை முழு மனசா மன்னிக்கறேன்னு சொன்னாங்க..”
“இந்த வித்தியாசம் தான் உனக்கு புரியல ராகா. எல்லாமே கண்மணிம்மாவுக்காக விட்டுக் கொடுக்கறாங்க. மாமாவை மன்னிக்கல. அது தூர இருக்கறப்ப ஒன்னும் தெரியாது. கிட்ட வரப்ப மனசுக்குள்ள உறுத்தும். எல்லாரும் அவங்கவங்க மனசை நமக்காக மறைச்சுட்டு வாழ்வாங்க. அந்த தர்மசங்கடம் வேண்டாம்..”
“ஓ.. அப்போ ப்ரேக் அப் பண்ணிக்கலான்னு சொல்றியா. எப்படி… கல்யாணமுமே எப்பவுமே நமக்குள்ள நடக்காதுன்னு சொல்றியா… அடுத்தவங்களுக்காக நம்ம சந்தோஷத்தை குழி தோண்டி புதைச்சுக்கலாம் இல்ல. நாம பதினஞ்சு வருஷத்துக்கு மேல ப்ரெண்ட்ஸா இருக்கோம். இதுவரை எவ்வளவோ நடந்திருக்கு. ஆனா நாம பிரியவே இல்ல.. இப்போ நீ எதுக்கோ இந்த காரணத்தை சொல்ற.. இத்தனை நாள் இல்லாம.”
“எதுக்கும் இல்ல. ரெண்டு பேமிலியும் நல்லா இருக்கட்டும்.”
“ஓ.. ஓகே.. அப்போ நீ போன்னு சொன்னதும் நான் உன் வாழ்க்கைல இருந்து போயிடனும்..”
“அப்படி சொல்லல ராகா.. ப்ரெண்ட்ஸா இருப்போம். ரிலேஷன்ஷிப் வேணா”
“அரவிந்த். என்னால உன்னை எப்பவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. நான் போய் ஆதி அங்கிள்ட்ட அத்தைட்ட நீ சொன்னதை சொல்றேன். அவங்க உனக்கு புரியல வைப்பாங்க.”
“லூசு மாதிரி பண்ணாத ராகா. அவங்க இப்போதான் நிம்மதியா இருக்காங்க. அதை கெடுத்திடாத.. உனக்கு நான் சொல்ல வரதே புரியல. முதல்ல நீ கிளம்பு. யார்ட்டயும் எதுவும் பேசாத. ப்ளீஸ்.”
அவன் கிளம்பு என்று சொன்னதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. கண்களில் அத்தனை கண்ணீரோடு அங்கிருந்து கிளம்பினாள். யாரும் அவளை பார்க்கவில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது அரவிந்திற்க்கு.
அத்தனை வலியிலும் ஓய்வாக சாய்ந்து அமர்ந்து இருந்தான் ஆதி. சிரிப்பூ பூத்திருந்தது. இல்லறம் நல்லறமாக இருக்க வாழ்க்கையில் கொஞ்சம் அறத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இப்போது அவனுக்கு புரிந்தது.
சில நேரங்களில் எதையும் பட்டவர்த்தனமாக வெளிக்காண்பிக்காமல் மனசுக்குள் அமிழ்த்தி வைப்பது நமக்கு மட்டுமல்லாமல் பிறர்க்கும் நல்லது.
கண்மணி உள்ளே வந்தாள். கைகள் கதவை தாளிட்டது. ஆதியின் மனமோ விடுதலையடைந்த பறவை போல் பறந்தது.
அவளின் சிரிப்பில் காதலை கண்டான்.
அவனது நீட்டிய கைகளுக்குள் தஞ்சமடைந்தாள் கண்மணி. தோள் தலையணையானது.
மென்மையான அவன் அணைப்பில் உருகும் நெய்யானாள்.. கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சிறு விசும்பலில் ஆதி அதிர்ந்து விட்டான்.
“கண்மணி.. என்ன சந்தோஷமான நேரத்தில இப்படி அழற.?”
“சந்தோஷத்தில் அழுகை வராதுன்னு யார் சொன்னாங்க. இது இத்தனை நாள் சேர்த்து வச்சிருந்த அழுகை.”
“சந்தோஷத்தில் கூட கண்ணீர் வரக்கூடாது உன் கண்ணில் இருந்து. இந்த அழகான கண்கள் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கட்டும்..”
“உங்க மேல இருந்த கோபமெல்லாம் எனக்குள்ள வைராக்கியத்தை வளர்த்துச்சு. அழக்கூடாது.. உங்களை எதிர்த்து நின்னு ஒவ்வொரு நாளும் கஷ்டப்படுத்தனும்னு தோணுச்சு. அழுகையையெல்லாம் அடக்கி வச்சுக்கிட்டேன். இப்போ சந்தோஷம் வரப்ப தானா அடக்கி வச்சிருந்ததெல்லாம் வெளிய வருது.. “
“ஆமாமா. அடக்கி வச்சிருந்த காதலலெல்லாம் நேத்து வெளிய வந்ததை பார்த்தேனே. அப்பாவே மிரண்டுட்டார்.”
“உங்களுக்கு கிண்டலா இருக்கா..” திரும்பி அவன் மார்பில் குத்தினாள்.
“ம்ம்.. கண்மணியே.. கண்மணியே.. கண்மணியே..” அவள் கைகளை அவன் நெஞ்சில் மீது அழுத்தி வைத்து பாடினான்.
“ம்ம்ம்..” என்றாள்.
“அழுவதேன்.. வழித்துணை நானிருக்க.. கண்மணியே… உனக்கென இருப்பேன்…
உயிரையும் கொடுப்பேன்…
உன்னை நான் பிரிந்தால்…
உனக்கு முன் இறப்பேன்”
அவன் வாயில் கைவைத்து அவள் கைமேல் இதழ்களை பதித்தாள்.
“வலிக்காமல் வாழ்க்கை இல்லை. வருங்காலம் காயம் ஆற்றும்..நிலவொளியை நம்பி மட்டும் இலை எல்லாம் வாழ்வதில்லை. மின்மினியும்
ஒளி கொடுக்கும்” கண்மணி பாட, அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“இந்த நம்பிக்கை போதும் கண்மணி.. நமக்கு அப்பா சம்பாதிச்சதெல்லாம் வேண்டாம். ரியல் எஸ்டேட்.. காபி எஸ்டேட்னு ஒழுக்கமா சம்பாதிச்சதாலே அதெல்லாம் வீணா போகாம பத்திரமா இருக்கு. அதை வச்சு என்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன். எதுனாலும் என் கூடவே இரு..”
“இப்போ தானே உனக்கென இருப்பேன்னு நீங்க சொன்னீங்க. நானும் உங்களுக்காக தான் இருப்பேன். கூடவே..” கன்னத்தில் இதழ் பதித்து சொன்னாள்.
“கொஞ்சம் இறங்கி வந்தா.. இதழ் கள் ஊறி.. இருக்கு.. அதை எடுத்துப்பேன்..” என்று அவளின் இதழ் நோக்கிப் போனான்.
உயிரோடு உயிர் சேர்ந்தது.
கிடாரின் கம்பிகளை இறுக்கமாக பிணைத்து இசையை மீட்டி பார்த்தான் அரவிந்த். அருகிலிருந்த வயலின் பெட்டியை தூக்க திரும்பினான். மதுரா அதை தூக்கி அவன் கைகளில் கொடுத்தாள். அவனுக்கென ஒரு பிரத்யேக புன்னகை. வேறு வழியில்லாமல் அரவிந்தும் லேசாக சிரித்தான்.
“என் கூட ஒரு செல்ஃபி எடுத்துக்க முடியுமா..” மதுரா கேட்டாள். இரண்டு நாட்களுக்கு முன் இருந்த பதட்டம் அவள் குரலில் இல்லை.
சுற்றிலும் பார்த்தான். வந்திருப்பவர்களில் நிறைய பெண்கள் அவனுடன் படம் எடுத்துக் கொண்டு தான் போவார்கள். அப்படி இன்றும் இருந்தார்கள். அவர்களை போல் நினைத்து மதுராவை அருகில் அழைத்தான். இருவரையும் சேர்த்து அவனே படம் எடுத்தான்.
“ஹேய்.. ராகா. லுக் தட்.. செம சீன். ஷூட் தட்..” பரபரத்தான் பஷீர். அந்த தளத்தின் ஒளிப்பதிவாளர். அங்கு நடக்கும் சிறு விஷயங்களை கூட படம்பிடித்து நிகழ்ச்சிக்கு இடையில் வரும்படி பார்த்துக் கொள்வான். ராகா அவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தாள்.
அழுந்தி இறுக்கும்போது அறுந்த வீணையின் தந்தி போல் அவளுள் ஏதோ உடைந்தது.
இயந்திரத்தனமாய் கேமிராவை ஸூம் செய்தாள். நெருக்கமாக அவர்கள் இருவரும் இருப்பதை படம் பிடித்தது அது. அவள் அந்த தருணத்தை மனதுக்குள் சேமித்து வைத்தாள். வெறுப்பு என்ற பூட்டு அதனை பூட்டியது.
error: Content is protected !!