Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஜீவ நாதம்

ஜீவ நாதம் – 6

காலங்கள் கடந்து ஓடுவதை போல, காட்சிகள் பின்னோக்கி கடந்துக் கொண்டிருந்தன. 



Advertisement

“நீ  எங்க இருக்க… நீ இன்னும் போற இடத்தை சொல்லவே இல்ல..” வண்டியை செலுத்திக் கொண்டே அரவிந்த் கேட்டான்.

“யாரும் இல்லாத வனாந்தரத்தில் நான் தனியா இருக்கேன்… போற இடம் தான் தெரியல..” வெளியே பார்த்துக் கொண்டு சொன்னவளை திரும்பி பார்த்தான். 

Advertisement

Advertisement

“நீ எதாவது டிஸ்டர்ப்டா இருக்கியா.. நான் இப்போ எங்கே போகனும்னு கேட்டேன்.”

“ம்ம்.. வளசரவாக்கம்ல ஒரு ஹாஸ்டல்ல.. ஆனா நைட் இவ்வளோ லேட்டா விட மாட்டாங்க. எப்பவும் ஆனந்தி மேம் வீட்டில் இருந்துட்டு விடியக்காலைல போய்டுவேன். இப்ப இந்த நேரத்தில் அங்க போனா அவங்களுக்கு டிஸ்டர்பா இருக்கும். நீங்க என்னை ரயில்வே ஸ்டேஷன்ல விட்டுருங்க. நான் சென்ட்ரல் போய்ட்டு விடியற வரை இருந்துட்டு காலைல ஹாஸ்டல் வந்திடுவேன்.” மதுரா சாதாரணமாக சொன்னதும் அரவிந்த்க்கு அதிர்ச்சியாக இருந்தது.

Advertisement

“அது எப்படி சரியா வரும்?. நீ தான் நம்ம ஐடி கார்ட் வச்சிருக்க இல்ல.. அதை காமிச்சு வார்டன்ட்ட பெர்மிஷன் வாங்கியிருக்கலாம் இல்ல. சந்தேகப்பட்டா நீ பாடற வீடியோஸ் காமிக்கறது தானே..” 

“அதையெல்லாம் எப்பவோ காமிச்சாச்சு. ஆனா அவங்க ஒத்துக்கவே இல்ல.. அதான் இப்படி பண்றது..” 

“ம்ம்ம்.. உன் வீட்ல இருந்து யாரையுமே நான் பார்த்தது இல்லையே.. நீ தனியா தான் செட்க்கு வரியா.” 

“ஹான்.. ஆமா.. தனியா தான் சென்னை வந்தேன். அகமதாபாத் பக்கத்துல ஒரு கிராமத்தில தான் எங்க வீடு‌..

அப்பாக்கு நான் இப்படி வந்து பாடறது பிடிக்கல. அம்மா அப்பாவை எதிர்த்து பேச மாட்டாங்க. தாத்தா பெரிய பண்டிட்.. அவருக்கு இந்துஸ்தானி இசை மட்டும் தான் இசை.. அதனால் நான் வெளிய வந்துட்டேன்” 

“ஓ.. பரவால்ல உன் டீரீம்க்காக இவ்வளோ ரிஸ்க் எடுக்கிறியே.‌” 

“இல்ல.‌ அன்னிக்கு சொன்னேனே மறந்துட்டீங்களா.. இது இன்னொருத்தரோட கனவு.. அவருக்காக தான் இங்க வந்திருக்கேன்.” 

“அவர்னா.. யாரு..” 

“ரிஷப்.. ரிஷப் சவுகான். என் தாத்தாவோட சிஷ்யன்.” 

“ஓ.. பிளாஷ்பேக்கா..எனக்கு அதுலாம் கேட்க கொஞ்சம் அலர்ஜி.. ஷார்ட்டா சொன்னினா கேட்டுப்பேன்.. நாம இறங்கற வரைக்கும்..” தோளை குலுக்கி அலட்சியமாக சொன்னவனை அழுத்தமாக பார்த்தாள் மதுரா.

“இது என் வாழ்க்கை.. கதையில் வர பிளாஷ்பேக் இல்ல..” 

“ம்ம்.. சாரி..சொல்லு.” 

“பதினெட்டு வருஷம் தாத்தாக்கிட்ட சாஸ்த்ரிய சங்கீதத்தை கத்துக்க எங்க ஊர்ல தங்கி படிச்சவர் தான் ரிஷப்” 

“அவ்ளோ நாளா….உனக்கு அவர் மேல் ஒரு பிடிப்பு. அப்படித்தானே.” 

“ம்ம்.. ஆமா.” 

“காதல்.. ஹ்ம்ம்.. உனக்கு என்ன வயசு இருக்கும்?. இருபதா..அதுக்குள்ள காதல்‌” 

“இருபத்திரெண்டு ஆகுது. இது லவ் மட்டும் இல்ல. அவரோட மனசுக்கு என்னால் முடிஞ்ச அர்ப்பணிப்பு. அவர் இசைக்காக பிறந்தவர். அந்த குரல் உலகம் முழுக்க ஒலிக்கனும்னு தான் நாங்க ஆசைப்பட்டோம்… 

சாப்பாடு இல்லாம, தண்ணீர் இல்லாம பாடி பாடி,  

தவமா தவமிருந்து காப்பாத்தின பாரம்பரிய இசையை, காசுக்கு விற்காம, ஏழை எளிய மக்களுக்கும் போய் சேரணும்னு அவர் தன்னையே அரப்பணிச்சிக்கிட்டார்.. அவருக்காக நான் செய்யறது ஒன்னுமேயில்ல.“ 

“ம்ம்.. எனக்கு இன்னும் விளக்கமா சொல்லு. சரியா புரியல..” 

“தாத்தாக்கிட்ட படிக்க நிறைய பேர் இருந்தாலும், ரிஷப்பை தாத்தா அவருக்கு ஒரு வாரிசா தான் உருவாக்கினார். அதனால் நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. ஒவ்வொரு சாதகமும் உயிரை பிழிஞ்சு எடுக்கற அளவு இருக்கும். ஹிந்துஸ்தானியில் இருக்க பத்து ராகமும் பல நூறு ராகங்களை அடக்கினது. அந்த ஒவ்வொரு ஆலாப், காட் (alab and gat) கத்துக்க அத்தனை வருஷங்களை அவர் செலவிட்டார்.

புராணத்தில் படிச்சிருப்பீங்களே.. அர்ஜூன் தவம்னு. அந்த மாதிரி ரிஷப் பண்ணது இசைத்தவம். அது அசுரத்தவம். தேவர்களின் தவத்துக்கு இரங்கற தெய்வம் கூட அசுரர்கள் ஆயிரம் மடங்கு தவம் பண்ணா தான் அவங்களுக்காக இரங்குமாம்.

அப்படி எங்க தாத்தாக்கிட்ட முழுசா அந்த சங்கீதத்தை கத்துக்க அவர் நிறைய அக்னிப்பரிட்சையை தாண்டி வர வேண்டி இருந்தது.” 

“ம்ம்ம்..அவ்வளவு கட்டுப்பாடோடவா இசையை  கத்து தரணும்..

ஹிந்துஸ்தானி இசை ஜூகல்ஸ்ல கேட்டிருக்கேன். கர்நாடக சங்கீதம் மாதிரி தானே அதுவும். நாங்களும் இங்க ஏறக்குறைய பத்து வருடங்கள் கத்துக்கிட்டோம்..இசையை காலம் முழுக்க கத்துக்கிட்டே இருந்தாலும் அந்த கடலின் அளவு தெரியாது‌‌ தான்.. ஆனா நாங்க கஷ்டப்பட்டு கத்துக்காம இஷ்டப்பட்டு கத்துக்கிட்டோம்..” மாளவியும், கண்மணியும் அவன் கண்முன் வந்து சென்றனர்.

“ம்ம்ம்.. அது நாம பாடற சாதாரண இசை இல்ல.. ஏகப்பட்ட நுணுக்கங்கள். கமகங்கள்..ஸ்வரங்கள்.. ஒவ்வொரு தாட்க்கும் ஆயிரம் வித்தியாசங்கள்..” 

“ஆலாப்னா இங்க ஆலாபனை மாதிரி மெதுவா ஆரம்பிச்சு  விவரிச்சிட்டே போறது.‌‌ காட் னா…” 

“மெதுவானதுக்கு எதிர்ப்பதம் தான்.. வேகமானது. எவ்வளவுக்கெவ்வளவு மெதுவா ஒவ்வொன்னுத்தையும் கத்துக்கிறோமோ அதுவே தான் வேகமா முடிவெடுக்கவும் வைக்கும்..” 

“ரொம்ப அழகா பேசற.. நீ சின்ன வயசுலேயே இசையை கத்துக்கிட்டயா..உங்க குடும்பமே இசைக்குடும்பம் ஆச்சே..”

“இல்ல.. அவ்ளோ முற்போக்கான குடும்பமும் இல்ல.. பாகுபாடு இல்லாம ஆணையும் பெண்ணையும் பாக்கற ஊரும் இல்ல அது..” 

“வாட்..” 

“ம்ம்ம். என் அம்மா தமிழ் தான். அவங்க அகமெதாபாத்ல இருந்தாங்க. காலேஜ்ல ஒரு கல்ச்சுரல்ல பாடறப்ப அப்பா அவங்களை பார்த்திருக்கார். ரெண்டு பேருக்கும் லவ்.. ஆனா அப்பாவை கல்யாணம் பண்ணிக்க அம்மா செஞ்ச தியாகம் என்ன தெரியுமா? அவங்க குடும்பம், பாட்டு அதோட படிப்பும்..” 

“அப்படில்லாம் இன்னும் ஊர்கள் இருக்கா என்ன..அதுவும் குஜராத்ல..” 

“ம்ம்ம்.. இருக்கே.பெண்கள் பாடக் கூடாது.. படிக்க கூடாது. கணவனை தவிர எந்த ஆணிடமும் பேசக்கூடாது. இந்த சட்டங்கள் இருக்க நிறைய பகுதிகள் இதே இந்தியாவில் இன்னமும் இருக்கு..”

“படிச்ச உங்க அம்மா ஏன் இதுக்கு ஒத்துக்கனும்?. உங்கப்பாக்கு அம்மா மேல் லவ் இருந்தா இதை சரின்னு சொல்லியிருக்க மாட்டாரே.” 

“அப்பா மட்டும் அந்த ஊர்ல  வேற மாதிரியா இருந்திடுவார்?. ஆரம்பத்துல அம்மாவோட காதல், அவங்களுக்கு அதைவிட பெருசா எதுவும் இல்லன்னு நினைக்க வச்சது.. போகப்போக தான் அவங்களுக்கு நாம் ஒரு சிலந்தி வலைல சிக்கி இருக்கோம்.. அது சக்கர வியூகம்.. போக மட்டும் தான் முடியும். வர வழி தெரியாத அபிமன்யூ வாழ்க்கைன்னு புரிஞ்சது‌… ஆனா அவங்க காலத்தில் இருந்த அதே கட்டுப்பாடு எங்களுக்கும் இன்னும் தொடருது.. அதான் நாங்க வாங்கி வந்த சாபம்” 

“ஹ்ம்ம்.. அப்ப பாட்டு..கேள்வி ஞானமா..” 

“இல்ல. ரிஷப் தான் காரணம். தினமும் இசையை கத்துக்க விரும்பற அத்தனை பெண்களுக்கும் பாட்டோட படிப்பையும் சொல்லித் தந்தார். அதுவும் ரகசியமா..” 

“ஓ.. அது எப்படி சாத்தியம்..” 

“இரவு சாப்பாடு முடிஞ்சதும் ஊர் பெண்கள் அத்தனை பேரும் மலைக்கோவிலுக்கு வருவாங்க. அவங்க உலகமே அங்க தான். நாட்டுப்புற பாடல்களையும், நடனத்தையும் வயசான பெண்கள், இள வயசு பெண்களுக்கு பரம்பரை பரம்பரையா சொல்லித்தருவாங்க. அந்த பாடல்கள்ல தான் வாழ்க்கை, சமையல், பழக்க வழக்கம், குடும்ப வாழ்க்கை முதல் தாம்பத்தியம் வரை இருக்கும். மாமனார் கொடுமை, கணவனோட அவமானப்படுத்தல், அசிங்கமான உறவு முறைகள் வர எல்லாமே அங்க அந்த பாடல்கள் மூலம் சொல்லுவாங்க.. அந்த இரண்டு மணி நேரம் எந்த ஆணும் அங்க வர மாட்டாங்க..” 

‘இன்ட்ரெஸ்டிங். ஒரு ஊரே ஒன்னா இருக்கு அந்த சமயத்தில்.. ஆமா…அதென்ன மாமனார் கொடுமை..” 

“மாமியார் பெண் தானே. அவங்களும் அங்க அத்தனை கொடுமைகளை அனுபவிப்பாங்க இல்ல. அதனால் பெருசா அதெல்லாம் நடக்காது. மாமனார் கொடுமைன்னா.. அவர் மட்டுமில்ல.. அந்த குடும்ப ஆண்கள் பெண்கள் மேல் நடத்தற உடல் வன்முறை.” அவள் தலை தாழ்ந்தது. அத்தனை நேரம் கடலலை போன்ற அவள் பேச்சு மணலில் இறுகிக் கிடக்கும் கல் போன்று ஆனது.. 

வண்டியை சாலையின் ஓரமாக நிறுத்தினான் அரவிந்த். அவனுக்குள் சப்த நாடியும் அடங்கியது. நிசப்தம் மட்டுமே இருவரின் இடையில் இருந்தது. திரும்பி அவள் புறமாக அமர்ந்தான். அவள் கண்கள் அந்த வலிகளை சுமந்து இருந்தன. 

“இந்த சட்டம்.. போலீஸ்.. இதெல்லாம் உங்க ஊர்ல செல்லுபடி ஆகாதா..” 

“ம்ம். அந்த ஊர்ல இருக்க போலீஸூம் அதே ஊரின் ஆணாதான் இருப்பாங்க. பெரிய சாதியை சேர்ந்தவங்களா.. வெளியூர் ஆட்களை அங்க நிலைக்க விட மாட்டாங்க..” 

“நிஜமாவா.. இவ்வளோ அறிவியல் வளர்ந்த நாட்டில இப்படி ஒரு இடம் இருக்கிறதை நான் இப்பத்தான் கேள்விப்படறேன்” 

“ம்ம்.. அந்த நிலை மாறனும்னு நினைச்சவர் தான்.. ரிஷப்‌” 

“ம்ம்..” 

“அவர் சாதகங்கள் அந்த மலைக்கோயிலில் தான் பகல்ல நடக்கும். இரவு நேரங்கள்ல பாடமும், சங்கீதமும் யாருக்கும் தெரியாம அதே கோவிலில் தான் நடக்கும்‌” 

“ம்ம்..நல்ல விஷயம் பண்ணியிருக்கார்..” 

“ம்ம்.. படிப்பு தான் பெண்ணுக்கு விடுதலை தரும். பாட்டு அவங்களை சுயமா முன்னேற வைக்கும்னு நம்பினார்.” 

“ம்ம்..சரிதான்” 

“மருத்துவமனை கூட இல்லாம, இல்ல இல்ல.. வர விடாத ஊர்ல, பிரசவம் கூட மறு பிறப்பு தான். கத்தியிலயும், அருவாளாலையும் பெண்களோட கருவாசலையும், குழந்தையோட தொப்புள் கொடியையும் அறுத்து, அந்த புண்ணு புரையோடி போய் சாகற பெண்களும், குழந்தைகளும் இருந்த ஊர் அது. அங்க தான் ரிஷப் ரொம்ப பெரிய முயற்சி பண்ணி ஒரு சின்ன ஆரம்ப சுகாதார மையத்தை கொண்டு வந்தார். அதுவும் அவர் ரத்தன் சவுகான்னு ஒரு பெரிய பாடகரை தன் பாட்டால் ஜூகல்ல ஜெயிச்சு, பணத்துக்கு பதிலா ரத்தனோட  இன்ப்ளூயன்ஸ வச்சு கொண்டு வந்தது.” அதிர்ச்சியில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது அரவிந்த்க்கு.. நினைக்க நினைக்க எதிரில் ரத்தப்படலம் படர்ந்தது போல் இருந்தது.

“அங்க இருக்க பத்து கிராமங்கள்ல தான் பெண் கொடுத்து பெண் எடுப்பாங்க. நாங்க வெளில வரதுக்கு வாய்ப்பே இல்ல.. அந்த பத்து கிராமங்களும் இப்ப ரிஷப் கொண்டு வந்த மருத்துவமனையால் தான் பிழைச்சு கிடக்கு..” 

“கிரேட் இல்ல.. பாட்டால் எதையும் சாதிக்கலாம் இல்ல.. ஆனா அதே பாட்டை வச்சு உங்க தாத்தா சாதிக்காத விஷயம் அது..” 

“சாதிக்காதது சாதிக்காக..” 

“ம்ம்.. உன்னோட இந்த பேச்சுக்கும் காரணம் அவர் தானா..ஆங்கிலம் சரளமா வருதே..” 

“ம்ம்.. தமிழ் அம்மாவால் ரகசியமா சொல்லிக்கொடுக்க பட்டது. என் இசையும் படிப்பும் ரிஷப்பால வந்தது.” 

“ஓ. உன் சின்ன வயசுல இருந்தே இந்த விஷயம் தொடங்கினதா.. அப்ப அவர் உன்னை விட பெரியவரா இருப்பார் இல்லையா.. அப்ப காதல்..” என்று இழுத்தான்.

“காதல்னா அன்பும் இல்லையா.. கிருஷ்ணர் மேல் கோபிகைகள் கொண்டது காதலா.. அன்பா..” அவளின் கேள்விக்கு விடை சொல்ல முடியாதவன் ஆனான் அரவிந்த். அவசரப்பட்டு அவள் ‘லவ்’ என்று சொன்னதற்கு தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்ட தன்னை தானே திட்டிக் கொண்டான். 

“சாரி மதுரா.. உன்னை தப்பா நினைச்சிட்டேன்.” 

“ம்ம் பரவால்ல. இங்க இருக்க பெண்கள் எல்லா விஷயத்திலும் சுதந்திர காத்தை சுவாசிக்கறாங்க. ஆனா நாங்க காத்த மட்டும் தான் சுதந்திரமா சுவாசிச்சோம். அதனால் எங்களுக்கு வெளி உலகம்னா என்ன, பெண்கள் வெளி உலகத்தில் எப்படி வாழறாங்க, அதுக்கு படிப்பு எவ்வளவு அவசியம்னு வாழ்க்கை கல்வி முதல் கொண்டு ஆங்கிலம் வரை எங்களுக்கு அவர் சொல்லித்தந்தார்.” 

ராகாவும் மதுராவும் ஒரே வயது தான். ஆனால் அவர்களுக்கு இடையில் இருந்த வாழ்க்கை வேறுபாடுகளை பார்த்து அதிர்ச்சி அரவிந்த்க்கு. ஒருவருக்கு அத்தனையும் இயல்பாக கிடைக்கிறது. இன்னொருவருக்கு இயல்பானது கூட மறுக்கப்படுகிறது. 

“மதுரா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. இப்ப ரொம்ப நேரமாச்சு. உன்னை என்னால் தனியா ரயில்வே ஸ்டேஷன்ல விட முடியாது. எங்க வீட்டுக்கு வா.. கண்மணிம்மா உன்னை எதுவும் சொல்ல மாட்டாங்க. நாளைக்கு பேசிக்கலாம்..” 

“இல்ல.. பரவால்ல..” 

“எதுவும் பேசாத.. எங்க வீட்லயும் ஆண்களும் பெண்களும் இருக்காங்க. ஆனா எதுவும் நீ சொன்ன மாதிரி இருக்காது. நீ பயப்படாம வரலாம்..” 

“ம்ம்..” அவளின் ஒற்றை வார்த்தை என்னவோ அரவிந்த்க்கு சந்தோஷமாக இருந்தது. அவளுக்காக என்ன முடியுமோ அதை செய்ய வேண்டும் என்று தோன்றியது.. 

வீடு வரும் வரை அந்த பத்து நிமிடங்கள் அவர்கள்  எதுவும் பேசவில்லை. ஆனால் உள்ளுக்குள் இருவருக்கும், இதுவரை பேசிய பேச்சுக்களே பெரும் விவாதமாக மறுபடி ஓடிக் கொண்டு இருந்தது. நினைவின் சூடு மதுராவுக்கு‌. கேட்டு விட்ட சொற்களின் அனல் அரவிந்த்க்கு.

வீட்டிற்கு  வந்தவுடன் கண்மணியை எப்படி எழுப்புவது என்று யோசித்துக் கொண்டே மதுராவுடன் மாடி ஏறினான் அரவிந்த். இந்த ஒரு மாதமாக தான் ஆதியின் அறையில் தூங்குகிறாள் கண்மணி.

மாடி ஏறியதும் ஆச்சர்யம் அரவிந்த்க்கு. ஆதியின் அறை திறந்தே இருந்தது. ஆதி உறங்கி கொண்டிருந்தான். கண்மணி மேஜை விளக்கிற்கு அருகில் இருகைகளையும் ஊன்றி படுத்து இருந்தாள். கண்கள் விளக்கின் வெளிச்சத்தை விடாமல் பார்த்து இருந்தது. 

அரவிந்த்க்கு ஒரு பக்கம் பயம் வந்தது. ஆதிக்கும், கண்மணிக்கும் மீண்டும் எதாவது சண்டையோ என்று தோன்றியது. மெல்ல கதவை தட்டினான். நிமிர்ந்து பார்த்தாள் கண்மணி. 

அவனை நோக்கி வந்தாள். 

“அரவிந்த்.. இப்பதான் வரியா..” 

“ஆமாம்மா.. நீங்க ஏன் இன்னும் தூங்காம இருக்கீங்க. இது.. “ பின்னால் திரும்பி பார்த்தான். அவனது அகலமான முதுகுக்கு பின் மதுரா கோழியைப் போல் பதுங்கி இருந்தாள். 

அவன் சிறிது நகர்ந்ததும் அங்கிருந்த பெண்ணை பார்த்தாள் கண்மணி. 

புருவங்கள் உயர்ந்தன.

“அம்மா.. இவ மதுரா. இந்த சீசன் சிங்கர். இவங்க ஹாஸ்டல்ல லேட்டா வந்ததால அலோ பண்ணல. இவ ரயில்வே ஸ்டேஷனல் இருந்துட்டு காலைல போறேன்னா. எனக்கு தனியா விட மனசு வரல. அதான் காலைல வரைக்கும் இங்க இருக்கட்டும்னு அழைச்சிட்டு வந்தேன்.” 

“ரயில்வே ஸ்டேஷன்லயா.. எப்படிம்மா தங்குவ..” 

“அம்மா.. அவ தமிழ் பேச மாட்டா..” 

“பரவால்லயே. தமிழ் தெரியாம தமிழ் பாட்டு பாடறியா..” 

தலையை ஆட்டினாள். கண்மணிக்கு சிரிப்புடன் வியப்பு. 

“தமிழ் புரிஞ்சுக்கற.. குட்..” 

“அம்மா.. “ அரவிந்த் இழுத்தான். 

“என்ன முழிச்சிட்டு இருக்கேனே.. திரும்ப ஏதாவதுன்னு யோசிச்சியா..” 

“ம்ம்..” 

“அப்படி இல்ல. உன் மாமாவை பாக்க ரத்னா வந்திருந்தார். அவர் சொன்ன கதைக்கெல்லாம் உங்க மாமா ஓகே சொல்லி வச்சுருக்கார். அதனால் தான் என் தூக்கம் தொலைஞ்சது..” 

“வாட் ரத்னா வா..எதுக்கு மாமா அவருக்கு ஓகே சொன்னார்.?” 

“ஹ்ம்ம். அவர் நடிப்புக்கு மயங்கி அவரை திரும்ப ஆட்சிக்கு கொண்டு வரேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கார்..” 

“அம்மா.. காலைல நான் பேசறேன் அவர்ட்ட..இப்போ மதுரா..” 

“எதிர்க்க இருக்க  ரூம்ல இருக்கட்டும்.. காலைல பேசிக்கலாம்.” 

அரவிந்த் அவளை கண்மணி சொன்ன அறைக்கு அழைத்து சென்று அவளுக்கு எது எங்கிருக்கிறது என்று சொல்லி விட்டு அவன் அறைக்கு சென்றான்.

“கண்மணி.. என்ன பேச்சு சத்தம்..” ஆதி விழித்து கேட்டான்.‌

“அரவிந்த் இப்பதான் வரான். அவனோட பாடற பொண்ணு ஒன்னு வந்துச்சு. அவங்க ஹாஸ்ட்ல்ல விடலையாம். அதான் இங்க இருந்துட்டு காலைல போகட்டும்னு சொன்னான். அதான் பேசிட்டு வரேன்.. ஏன் நீங்க சத்தம் கேட்டு எழுந்திட்டீங்களா..” 

“ம்ம்.. உன் ஸ்பரிசம் இல்லாம எழுந்துட்டேன்..” என்று அவளை அணைத்துக் கொண்டான். 

“எனக்கு தூக்கமே வரல.. ரொம்ப நேரமா முழிச்சிட்டு தான் இருந்தேன். அப்ப உங்களுக்கு நான் பக்கத்துல இல்லைன்னு தெரியலையா.. டயலாக் அடிச்சி விடறது அப்படியே..” 

“தெரியுமே.. நீ கண்ணை திறந்து யோசிச்சிட்டு இருந்த. நான் உன்னை பாத்து யோசிச்சிட்டு இருந்தேன்.” 

“இது சரியா வருமா..” 

“எதும்மா. சரியா வர வைக்கிறது தானே என் வேலை.. எதையுமே..” அவளது நெற்றியில் இதழ் பதித்து அவன் மார்புடன் இறுக அணைத்தான். 

கண்மணிக்கு பயம் அதிகமாகவே இருந்தது. ரத்னா எனும் மாயப் பேய்க்கு ஆதியின் உதவி தேவைப்படுகிறதா.. இல்லை உயிர் தேவைப்படுகிறதா.. யோசித்துக் கொண்டே ஆதியை இறுக அணைத்தாள். 

“கண்மணி.. நீ வாழ்க்கைல எதையுமே என்கிட்ட கேட்டது இல்ல. முதல் முறையா ஒன்னு கேட்ட.. அப்பாவை திரும்ப பதவியில் உட்கார வைக்கணும்னா ரத்னா சொன்னதுக்கு தலையை ஆட்டனும். ஆனா அவன் ஒரு மண் குதிரை. அவனை முழுசா நம்பி அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.” 

“ஆனா அவன் உங்களுக்கு எதிரா அத்தனை ஆதாரங்களை எடுத்து வச்சானே, அப்போ இது ஒருவகையில் ப்ளாக் மெயில் தானே‌‌” 

“அவனுக்கு தெரியும் கண்மணி. அவனும் முட்டாள் இல்ல.. நானும் கேணையன் இல்லன்னு. ப்ளாக் மெயிலா தந்திருந்தா.. அதை விட அதிகமா எனக்கும் பண்ணத்தெரியும்னு. நீ பயப்படாத. நான் பாத்துக்கிறேன். இனி உன் வாய் பேசாம இருக்கணும்னா.‌” 

அவளோடு அவன் காதல் பாடம் நடத்தத் தொடங்கினான். ஆனால் அரசியல் பாடம் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!