Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒற்றை ஜன்னல்

ஒற்றை ஜன்னல் – 6

“ஏதாவது பிரச்சனையா துளசி? நேத்து  நீ போனே எடுக்கல  கொஞ்சம் பயந்துட்டேன்”  என்றான் தமிழ்.

 

 



Advertisement

“அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்றவள்  அவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சில நொடிகள் தயங்கினாள்,  வெளியூரில் இருக்கிறான் அதோடு தன்னை வைத்துப் பிரச்சனை நடந்திருக்கிறது இது எங்குச் சென்று முடியும் என்ற பயம் மனதை வாட்டியது.

 

Advertisement

 

Advertisement

‘உண்மையிலே கல்யாணம் நின்றுவிடுமா? அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன சொல்லுவார்கள் தன் மீது தவறே இல்லையென்றாலும் தான் சொல்லுவதை விடப் பெரியம்மா சொல்வதையே தாய் அதிகம் நம்புவார், கல்யாணம் நின்றுவிட்டால் அதன் பிறகு என்ன என்ன பிரச்சனைகள் எல்லாம் வரும் என்று மண்டை குழம்பியது.

 

Advertisement

 

“துளசி… துளசி…” என்றவன் தொடர் அழைப்பில் “ஹா”  சொல்லுங்க என்றாள்.

 

 

“என்னாச்சு துளசி என்ன பிரச்சனை நான் வரணுமா” என்க.

 

 

தலையில் தட்டிக்கொண்டவள் “ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்றாள்.

 

 

“என்னன்னு சொல்லு துளசி… நான் பேசுற பத்து வார்த்தைக்கு நீ ரெண்டு வார்த்தை பதில் சொல்லுவ ஆனா எங்க வெக்கபடுற எங்க தடுமாறுற எங்க பதட்டப்படுறன்னு  எனக்குத் தெரியும், இவ்ளோ நேரமா உன்கிட்ட பயம் மட்டும்தான் தெரியுது… பக்கத்துல கூட இல்ல என்னனு சொல்லுடி பயமா இருக்கு” என்றவன் குரலில் துளசிக்கு நெஞ்சை அடைத்தது.

 

 

‘என்னவென்று சொல்லுவேன்’ குரலைச் சரிசெய்தவள் “ப்ரியா அக்காவுக்கும் ரவி மாமாவுக்கும் பிரச்சனை… அடிக்கடி நடக்குற மாதிரி சின்ன சண்டைன்னு நினைச்சோம் ஆனா இந்தத் தடவை கொஞ்சம் பெருசு அவங்க வீட்டிலயிருந்து மல்லிகா அம்மாவும் அப்பாவும் வந்து பேசினாங்க ஆனா சரியாகல அவங்களும் கோவிச்சுட்டு போய்ட்டாங்க” என்றாள்.

 

 

“மல்லிமாவும் அப்பாவும் ரொம்ப நல்லமாதிரி துளசி ரவி அண்ணனும் எந்த விஷயத்தையும் சீரியஸா எடுத்துக்க மாட்டார் ரொம்ப பிரெண்ட்லி அவங்களே கோப படுற அளவு என்ன பிரச்சனை” என்று கேட்டான் தமிழ்.

 

 

துளசி அமைதியாகிவிட்டாள், விஷயம் எதோ பெரிசு என்று தோன்றியது தமிழுக்கு அதிகம் கேட்டு அவளைக் கஷ்டப்படுத்தாமல் “சரி விடு நீ டென்சன் ஆகாத நான் இன்னும் ஒரு வாரத்துல வந்திடுவேன் எதா இருந்தாலும் பாத்துக்கலாம், நீ எதையும் மனசில ஏத்திக்காத சரியா” என்றான்.

 

 

அவளிடம் பதில் இல்லாமல் போக “துளசி சரியா” என்றான் மீண்டும்.

 

“ஹ்ம்ம் சரி” என்றாள் ஆனால் உள்ளுக்குள் ஏதோ தவறாக நடக்க போவதாகச் சொல்லமுடியா பயம் சுழற்றியடித்தது.

 

 

ப்ரேமும் ஆனந்தியும் அன்று மாலையே ரவிநந்தன் வீட்டுக்குப் பேசச் சென்றனர் “இதுக்கு மேல என்ன பண்ண சொல்லறீங்க பிரேம் நானும் எவ்ளோ இறங்கி போய்ட்டேன் தினம் தினம் பிரச்சனை, நீங்கச் சொல்லுங்க உங்க தங்கச்சியை பத்தி உங்களுக்குத் தெரியும்ல அவ குணம் தெரியும்ல உங்களுக்கு இப்படியொரு வெய்ப் கிடைச்சா எப்படி இருக்கும்”.

 

 

“தினம் தினம் வீட்டுக்கு ஏண்டா போறோம்னு நினைக்க வெக்குற பொண்டாட்டி அமைஞ்சா வாழ்க்கை நரகம் பிரேம், இது சரியா வராது” என்று தீர்மானமாகச் சொன்னான் ரவிநந்தன்.

 

 

“அம்மா நீங்களாவது கொஞ்சம் சொல்லுங்க” என்றான் பிரேம் மல்லிகாவிடம்.

 

 

“இல்ல தம்பி என் பையன் நிம்மதி எனக்கு முக்கியம், இப்போ நிச்சயம் மட்டுந்தான் முடிஞ்சிருக்கு இதுவே கல்யாணத்துக்கு அப்புறம்னா ரெண்டு பேரோட வாழ்க்கையும் வீனா போகும் வேண்டாம் தம்பி” என்றுவிட்டார் முடிவாக.

 

 

அதற்குமேல் பேச எதுவுமில்லை திரும்பி வந்துவிட்டார்கள், பிரேமுக்கு அவ்வளவு கோபம் “அவ்ளோ அசிங்கமா போச்சு உங்க பொண்ணை கட்டுனா அவருக்கு நிம்மதியே இருக்காதாம், மொத்தத்துல பொண்ணையா பெத்து வெச்சிருக்கீங்கன்னு கேக்குறாங்க” என்று கத்தினான்.

 

 

அவன் கையைப் பிடித்துத் தடுத்த ஆனந்தி “அத்த நீங்கக் கொஞ்சம் சொல்லுங்க இவ்ளோ கோபம் நல்லதுக்கில்ல கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போனா என்ன ப்ரியா” என்றாள் நாத்தனாரிடம்.

 

 

“என் அண்ணன் நீங்கச் சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டுற மாதிரி ரவியும் இருந்தா நான் ஏன் கோபப்பட போறேன்” என்றாள் ப்ரியா அப்பொழுதும்.

 

 

“ஏய்…” என்று அவளை அடிக்கப் பாய்ந்தான் பிரேம்.

 

 

“என்னங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்று அவனைப் பிடித்து இழுத்த ஆனந்தி “அத்த நாங்க கிளம்புறோம் நீங்கப் பாருங்க” என்றதோடு கணவனை இழுத்துக்கொண்டு சென்றாள்.

 

 

போகும்போது கத்திக்கொண்டே சென்றான் பிரேம் “எப்படியோ போங்க என்னமோ செஞ்சு தொலைங்க அது முடிஞ்சிடுச்சு அம்மாவும் பொண்ணும் நிம்மதியா இருங்க” என்று.

 

 

தங்கள் வீட்டில் இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று ஜெயந்தி கனவிலும் நினைக்கவில்லை, ஊரில் அனைவரையும் குற்றம் சொல்லி நடந்துவிட்டு இப்பொழுது தன் மகளுக்கே இப்படி என்றால் மற்றவர்கள் கேட்கும் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்ற தடுமாற்றம் வேறு தாக்கியது.

 

 

அனைவரும் அவர் அவர் யோசனையில் இருக்க அலுவலக உபயோகத்திற்கு வைத்திருந்த அலைபேசியை  எடுத்துக்கொண்டு பிரியா மாடிக்குச் சென்றதை அவர்கள் கவனிக்கவில்லை.

 

 

ப்ரியாவின் ஈகோ மட்டுமே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் அவளைச் சுற்றி அவள் மட்டுமே திலங்க வேண்டும், அது  வெளியிலானாலும் வீட்டிலானாலும்… இங்குத் தேவை இல்லாமல் துளசியை அவளின் எதிராளியாக நினைக்கவேண்டிய அவசியமே இல்லை.

 

 

 

அவரவருக்கான தனித்தண்மை ஒன்று அனைவரிடமும் உண்டு அதை நாம்  நல்லவிதமாக வெளிப்படுத்தினால் போதும் அதை அவள் செய்யவில்லை, சிறுவயதிலிருந்தே நிறத்தைச் சொல்லி மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவள் துளசி அவளின் கண்களுக்கு ப்ரியதர்ஷனி பேரழகி.

 

 

தன்னை அவள் ஒருபோதும் யாருடனும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை அப்படி ஒன்று அவளுக்குத் தெரியவும் தெரியாது,  ப்ரியா    ரவி  தன்னிடம் கெஞ்ச வேண்டும் என்று எதிர்பார்த்தாள் தன்னை அவன் மிஸ் செய்ய விரும்பமாட்டான் மீண்டும் தன் பின்னே வருவான் என்று நினைத்தாள்.

 

 

அது நடக்கவில்லை  தன்னை கேவலமாகப் பேசி அவளை உயர்த்தி பேசியதால் ப்ரியாவின் கோபம் முழுதும் இப்பொழுது துளசியின் மீது அலைபேசியை  எடுத்துச் சென்றவள் தமிழ்ச்செல்வனின் தாய் கற்பகத்தை அழைத்தாள்.

 

 

“தமிழ்ச்செல்வன் அம்மா தானே” என்றவள் கேள்விக்கு “ஆமா நீங்க யாரு” என்றார் அவர்.

 

 

“நான் யாரா இருந்தா என்ன,  பையனுக்கு வேற பொண்ணே கிடைக்கலையா இப்படி ஒழுக்கங்கெட்டவளை பார்த்திருக்கீங்க” என்க.

 

“ஏய் பார்த்துப் பேசு  யாரை பத்தி தப்பா பேசுற” என்றார் அவர்.

 

 

“அதுசரி உங்களையும் இப்படித்தான் மயக்கி வெச்சிருக்காளா, அவ ஓழுக்கத்தால தான் அவளோட பெரியம்மா பொண்ணு கல்யாணமே நின்னு போச்சு” என்றாள் ப்ரியா.

 

 

“நீ யாரை பத்தி பேசுற” என்றார் கற்பகம்  இப்பொழுது குரலைத் தழைத்து.

 

 

“உங்க பையன் தமிழ்செல்வனுக்கு பார்த்த துளசியை பத்திதான், அவ பெரியம்மா பொண்ணுக்கு நிச்சயம் பண்ணியிருந்த மாப்பிளை கூட இவ ஒருநாள் புல்லா இருந்திட்டு  வந்திருக்கா அதப்பத்தி கேட்டுப் பிரச்சனை பெருசாயி அந்தப் பொண்ணு கல்யாணம் வேணாம்னு நிறுத்திடுச்சு”.

 

 

“சந்தேகம் இருந்தா துளசியோட பெரியம்மாக்கு போன் போட்டுக் கேளுங்க அப்படியே உங்க சம்மந்திகிட்ட கேளுங்க எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சாதிப்பாங்க” என்று பத்தவைத்தவள் அழைப்பைத் துண்டித்துவிட்டு திரும்ப வாயில் கைவைத்து நின்றிருந்தார் ஜெயந்தி.

 

 

“என்னடி பண்ற இருக்குற பிரச்னைலாம் பத்தாதா ஏண்டி இப்படி பண்ற, ஐயோ இன்னும் எண்ணலாம் பிரச்னை வரபோவுதோ” என்று பதறினார் ஜெயந்தி.

 

 

அதற்குள் கீழே அவரின் அலைபேசி அடிக்கத் தொடங்கியது இரண்டுமுறை அடித்து ஓய்ந்தும் மனைவி வராததால் மேலே வந்தார் ராகவன்.

 

 

“ஜெயந்தி இந்தா உன் போன் அடிச்சிட்டே இருக்கு பாரு” என்று அவரிடம் கொடுக்க அழைத்தது கற்பகம், ஜெயந்தி  மகளைப் பதட்டமாகப் பார்க்க “பேசு” என்று கண் காண்பித்தவள் “நான் சொன்னதை தாண்டி வேற எதுவும் பேசாத” என்றாள்.

 

 

“சரி” என்று தலை அசைத்தவர் அதை அமர்த்தி “ஹலோ” என்க.

 

“நான் கற்பகம் பேசுறேன் தமிழ்ச்செல்வன் அம்மா” என்றார் அவர்.

 

“சொல்லுங்க” என்ற ஜெயந்திக்கு இன்னும் மூச்சே சீராகவில்லை “உங்க பொண்ணு கல்யாணம் நின்னுபோச்சா அதுக்கு துளசிதான் காரணமா” என்றவரின் குரலில் மிதமிஞ்சிய கோபம்.

 

 

 

“யார் காரணமா இருந்தா என்ன? என் பொண்ணு  வாழ்க்கை போச்சே… அவளைச் சொல்லித்தான் பிரச்சனை ஆரம்பிச்சுது அது எங்கேயோ போய் முடிஞ்சிடுச்சு, நீங்க உங்க பையன் கல்யாணத்தை நல்லபடியா நடத்துங்க” என்ற ஜெயந்தி அழைப்பைத் துண்டித்துவிட்டு சுவரில் சாய்ந்து அமர்ந்துவிட்டார்.

 

 

செய்வது தவறு என்று தெரிந்தாலும் மகளின் நிம்மதி மட்டுமே இப்பொழுது முக்கியம் என்று தோன்றியது அடுத்த அழைப்பே சந்தாவுக்குத்தான் சென்றது கர்ப்பகத்திடமிருந்து.

 

 

“என் மகனுக்கு உன் பொண்ணு வேண்டாம்” என்றார் எடுத்தவுடன்.

 

 

“என்ன பேசுறீங்க என்ன பிரச்சனை” என்றார் சாந்த்தா.

 

 

“உங்க  அக்கா பொண்ணு கல்யாணம் நின்னு போனது உங்களுக்குத் தெரியாது?” என்றார் கேள்வியாக.

 

 

“யார்!… ப்ரியா கல்யாணமா? உங்களுக்கு யார் சொன்னது அப்படிலாம் இல்ல அப்படி ஏதாவது இருந்திருந்தா என்கிட்டே சொல்லாம எப்படி இருப்பாங்க” என்றவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

“அப்போ அவங்க சொன்னது உண்மைதான் தெரியாத மாதிரி நீ நடிப்பன்னு சொன்னாங்க ரொம்ப நல்லா நடிக்கிற, அக்காவுக்குப் பாத்தா மாப்பிளை கூட ஒரு நாள் பூரா தங்கச்சிக்கு என்ன வேலை, அதைக் கேட்டதுக்கு கல்யாணத்தையே நிறுத்தியிருக்கான் அந்தப் பையன்”.

 

 

“உன் பொண்ணு ஆளை மயக்குறதுல பெரிய ஆளுதான் போல, கல்யாணத்துக்கு முன்னாடியே என் பையன் கையாள மூக்குத்தி வாங்கிக்கிட்டவ தான, நான் கூடக் கேட்டேன் ஏன் தம்பி இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் செய்யலாமேன்னு, துளசிக்கு அழகா இருக்கும்மா அவளுக்கும் மூக்கு குத்த பிடிச்சிருக்குன்னு சொன்னான்”.

 

 

“சரி பையன் ஆசைப்படுறான்னேன்னு நானும் பெருசா எடுத்துக்கல இப்போ யோசிச்சிச்சா கொஞ்சம் கொஞ்சமா புரியுது இப்போவே துளசி துளசின்னு சுத்துற என் மகன் அவ தாலி கட்டி உரிமையா வந்துட்டா என்னைக்கூட மறந்துடுவான் போல, இதுக்குமேல பேச ஒண்ணுமில்ல இனிமே உன் பொண்ணு என் பையன்கூட பேசக் கூடாது மானம் ரோஷம் இருக்குறவங்களா இருந்தா பொண்ணை அடக்கிவை” என்றவர் பேசிவைக்க.

 

 

சாந்தா காளி அவதாரம் எடுத்தார் முதலில் அக்காவிற்கு அழைத்தவர் ‘என்ன பிரச்சனை’ என்று கேட்டு ‘ஏன் சொல்லவில்லை’ என்று சண்டை பிடித்து “அப்படியே இருந்தாலும் துளசி அந்தமாதிரி இல்லன்னு உங்களுக்குத் தெரியாதா அவளைப் பத்தி நீயே அந்தப் பொம்பளைகிட்ட தப்பா சொன்னியா” என்றார் அக்காவிடம்.

 

 

“பட்டணத்துக்கு வந்ததும் அவ பழக்கவழக்கம் மாறும்னு நான் என்ன கனவா கண்டேன்” என்றார் ஜெயந்தி.

 

 

அன்றிரவே சென்னைக்கு புறப்பட்டுவிட்டார் சாந்த்தா, மூன்று நாட்களாக  விஜயகுமார் மிகவும் உடல் நலம் குன்றி இருக்கிறார் அந்தக் கவலையோடு இதுவும் சேர்ந்துகொண்டது, பார்கவியிடம் தந்தையின் பொறுப்பை ஒப்படைத்தவர் வீட்டிற்கு அருகில் இருப்பவர்களிடமும் சொல்லிவிட்டு அக்காவின் வீடு வந்தார்.

 

 

 

முதலில் துளசிக்கு நாலு அறை விழுந்தது “நான் ஒண்ணுமே பன்னலமா” என்றாள் தேம்பிக்கொண்டே.

 

 

“படிச்சு படிச்சு சொன்னேன் அந்தப் பையன்கிட்ட பாக்க வரக்கூடாதுன்னு சொல்லுன்னு என் பேச்சைக் கேட்டியா, அவனேதான் பாக்க வந்தான் ஆனா இப்போ யார் பேர் கேட்டுப் போச்சு, பொம்பளையா அவ என்ன பேச்சு பேசுறா அவகிட்டலாம் ஏசுவாங்கணும்னு எனக்குத் தலை எழுத்தா”.

 

 

“மூணு பொட்ட பிள்ளையைப் பெத்து இன்னைக்கு வரைக்கும் ஒருத்தர் கைநீட்டி பேசியதில்லை, இன்னைக்கு பாத்தியா… தப்பு என் மேலதான் கல்யாணம் முடிவானதும் உன்னைக் கையேடு கூட்டிட்டு போயிருக்கணும் உன் அப்பா பேச்சைக் கேட்டு விட்டுட்டு போனதுதான் நான் செஞ்ச தப்பு” என்றவர் அக்காவைத் திரும்பிப் பார்த்து.

 

 

“உன்கிட்டயிருந்து இதை நான் எதிர்பார்க்கல எப்படிப்பட்ட பழியை என் பொண்ணு மேல அந்தப் பொம்பள சொல்றா நீயும் அதுக்கு ஆமாம் போடற மாதிரி பேசியிருக்க,  நான் வயிறெரிஞ்சு சொல்றேன் எவ என் பொண்ணை பத்தி இப்படியொரு பொய்யைச் சொன்னாலோ அவ நல்லாவே வாழமாட்டா” என்றார் ஆத்திரத்தோடு.

 

துளசியிடம் “போதும் நீ வேலை பாத்து கிழிச்சது கிளம்பு” என்றார் அவசரமாக.

 

 

ஆனந்தியுடன் அங்கு வந்த பிரேம் “சித்தி நீங்களாவது நான் சொல்றதை கேளுங்க, தமிழ் ஊர்ல இல்லாதப்போ நீங்க இப்படி பண்றது சரியில்ல அவங்க அம்மா பேசினத்துக்கு அவர் என்ன பண்ணுவார், ரொம்ப நல்ல பையன்  சித்தி துளசியோட மனசையும் பாருங்க சித்தி நாமதானே இவர்தான் மாப்பிளைனு சொன்னோம்”.

 

 

“அவ ஆசைப்பட்ட அப்புறம் வந்து இல்லனு சொன்னா என்ன அர்த்தம் அவ எந்தத் தப்பும் செய்யல யாரோ வேணும்னே இப்படி எல்லாம் தமிழ் அம்மாகிட்ட சொல்லியிருக்காங்க, நாம பேசிப் புரியவைக்கலாம்  இல்ல தமிழ் வந்ததும் அவரே பேசுவாரு கொஞ்சம் பொறுமையா இருங்க” என்றான்.

 

 

சாந்தா எதையும் கேட்க்கும் நிலையில் இல்லை “அது முடிஞ்சு போய்டுச்சு பேச இனி ஒண்ணுமில்ல” என்றவர் ஜெயந்தியிடம் “இனிமே துளசியால் உங்க வீட்டில எந்தப் பிரச்னையும் வராது ப்ரியாவுக்கு கல்யாணம் முடிவானா சொல்லு வரேன்” என்றவர் மகளை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

 

 

 

துளசியின் போனில் இருந்த சிம்மை எடுத்து உடைத்து வெளியில் தூக்கி எறிந்தார் சாந்தா “இந்த ஊருக்கு வந்ததையே மறந்துடு, எங்களை மீறி ஏதாவது செய்யணும்னு நினைச்ச எங்க அத்தனை பேர் சாவுக்கும் நீ காரணமாயிடுவ” என்று அவளை ஆழ்ந்து பார்க்க அவளிடம் எந்த எதிர்வினையுமில்லை.

 

 

விழிகள் மட்டும் இருளை வெறித்திருக்க அசைவின்றி அமர்ந்திருந்தாள் துளசி,  இந்தக் கல்யாணம் நடக்காது என்ற நொடியிலே துளசியின் மனம் மரித்திருந்தது சற்று முன் வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து பிடுங்கி எறியப்பட்டு தண்டவாளத்தில் சிதறி விழுந்த மூக்குத்தியை போல அவள் மனம் சில்லு சில்லாகச் சிதறியிருந்தது.

 

 

காஜனூர் வந்து சேர்ந்த மறுநாளே உறவுகள் விசாரிக்க வந்துவிட்டனர் ரகசியங்கள் மட்டும் வேகமாகக் கசிந்துவிடுகிறது “ஏன் சாந்தா கல்யாணம் நின்னு போச்சா” என்ற கேள்விகள் துளசி மனதில் மீண்டும் மீண்டும் அமிலத்தை ஊற்றியது.

 

 

“இல்லை நிக்காது அவர் வருவார் கண்டிப்பா வருவார்…

 

ஒருவேளை வரலைன்னா…

 

இல்ல வருவார்…

 

எப்படி சொல்ற, அவர் அம்மாதான் உன்னை இவ்ளோ கேவலமா பேசியிருக்காங்க அப்படியேதான் அவங்க பிள்ளைகிட்டயும் சொல்லுவாங்க அவரும் அதை நம்பிட்டா…

 

 

இல்ல அதெல்லாம் நம்ப மாட்டார் அவருக்கு என்னைத் தெரியும்” என்று மனசாட்சியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள்.

 

 

உணவு இறங்கவில்லை உறக்கம் விழிகளைத் தழுவவில்லை, ஒரு நாள் அழைப்பை ஏற்கவில்லை என்றே அப்படி கலங்கினாரே மூன்று நாட்கள் ஆகிறது பேசியே என்ன என்று தெரியாமல் எப்படியெல்லாம் கலக்குவார் என்று இவள் கலங்கி நின்றாள்.

 

 

சுற்றம் நட்புச் சொந்தம் அனைவரையும் தன்னுடைய பேச்சு சாமர்த்தியத்தால் பொய்யை உண்மை என்று நம்ப வைத்துவிட்டார் சாந்தா.

 

 

“கல்யாணம் நெருங்குற நேரத்துல இன்னும் இன்னும்னு புடுங்க பாக்குது அந்த அம்மா, இருபது பவன் போதாதாம் கூடப் பத்து போடணுமாம் அதோட வீட்டை இப்போவே வித்து துளசியோட பங்கைக் குடுக்கணுமாம் இவளுக்குக் கீழே இருக்குறவளை நாங்க என்ன செய்ய வயசான நாங்க இந்தப் பிள்ளையையும்  கூட்டிட்டு  எங்க போக”.

 

 

“வீட்டை இப்போவே குடுத்தா கைடைசி காலத்துல நாங்க எங்க தலை சாய்க்க, நானும் பேசிப்பாத்தேன் சரியா வரல இப்போவே இப்படி பண்ற பொம்பளை கழுத்துல தாலி ஏறுனா எண்ணலாம் பண்ணும்… அந்தப் பணப்பேய்க்கு  இவளைக் கட்டிக்குடுத்துட்டு தினம்  தினம் நாம சாவணும் அதான் வேண்டாம்னு விட்டுட்டோம்” என்க ‘சரிதான்’என்று தலையாட்டிச் சென்றது கூட்டம்.

 

 

 

விஜயகுமாரின் சொந்தங்களுக்கு அதிலும் ஒரு அற்ப சந்தோசம் “பாத்தியா நம்ம யாரையும் கலந்து பேசாம அவ அக்கா வீட்டோட மாப்பிள்ளை பாத்து அங்கேயே பேசி முடிச்சுட்டு நமக்குத் தகவல் மட்டும் சொன்னா, இப்போ அது இல்லன்னு ஆயிடுச்சு…”

 

 

“நாலு பெரிய மனுஷங்களை கலந்துக்கிட்டு செஞ்சாதானே நல்லது எது கெட்டது எதுன்னு தெரியும்” என்று வம்பு பேசிச் சென்றனர்.

 

 

ஒருத்தியின் உணர்வுகள் கொன்று புதைக்கப் பட்டு நடைப்பிணமாக இருப்பதை பற்றி  யாரும் கவலைப்படவில்லை, வருவானா என்று வாயிலைப் பார்த்து அவள் காத்திருப்பதை பற்றி யாரும் கவலைப்படவில்லை.

 

 

அதற்க்கு அடுத்தநாளே தோட்டத்திற்கு சென்ற விஜயகுமார் தலை சுற்றி விழுந்திருந்தார், மருத்துவமனையில் தங்களை திட்டிக்கொண்டிருந்த மருத்துவரைப் புரியாமல் பார்த்தனர் வீட்டினர்.

 

 

“ஏம்மா ரெண்டுவருஷமா ஹார்ட் ப்ராப்லம் இருக்கு நானும் சொல்லிப் பாத்துட்டேன் ஆப்ரேஷன் பண்ண ஒத்துக்கவேயில்ல இப்போ பக்கவாதம்… ஒரு பக்கம் செயல் இழந்துடுச்சு” என்று சொல்லிச்செல்ல எந்தத் துன்பம் பெரிது என்று தெரியாமல் அப்படியே சுவற்றில் சாய்ந்து கீழேயே அமர்ந்துவிட்டாள் துளசி.

 

 

பத்து நாட்கள் மருத்துவமனை வாசம் முடிந்து வீட்டிற்கு வந்தவர் விழிகள் எப்பொழுதும் மகளைச் சுற்றியே இருக்க அவளின் திருமணம்பற்றிய கவலை என்பதை உணர்ந்துகொண்ட சாந்தா இந்த முறை கணவனின் சொந்தத்திடம் உதவி கேட்டு நின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!