Skip to content
Post Views: 5,399
காதல் இன்று
நேரம் அதிகாலை ஐந்து மணி!
ஜீவா வீட்டு ஹாலில் சோபாவில் அமர்ந்து தன் லாப்டாப்பில் ஏதோ படித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா!
ஜீவா இன்னும் எழுந்திருக்க வில்லை!
Advertisement
இப்போது நினைத்தாலும் தான் இப்படி ஜீவாவின் வீட்டில் இருப்பதை நினைத்தால் அவளுக்கு ஏதோ கனவு போல தான் தோன்றுகிறது!
ஜீவாவின் அறிவுரைப்படி தான் அவள் இந்த கம்பெனிக்கு அப்ளை செய்தாள். அவளுக்கு இன்டர்வியூ மெயில் வந்தவுடனே அவனுக்கு போன் செய்தாள்.
“நல்ல ஆப்பர்சூனிட்டி மிஸ் பண்ணிடாதீங்க வெண்ணிலா!” என்றான்.
Advertisement
“சார் நான் சென்னைக்கு எல்லாம் சின்ன வயதில் வந்தது. அங்கு எனக்கு யாரையுமே தெரியாது!
Advertisement
அதான் யோசிக்கிறேன். அன்பு மாமாவையும் கூட்டிக்கொண்டு வரலாம் என்றால், வீட்டில் சந்தேகம் வந்து விடும்!
அதான் என்ன பண்றதுன்னு தெரியல” என்று இதையும் அவனிடமே கேட்டு வைத்தாள்!
“அப்ப சரி ஒண்ணு பண்ணுங்க, நீங்க நேரா என் வீட்டுக்கு வந்திடுங்க, நானோ மயுவோ இருப்போம்.
Advertisement
அங்கேயே நீங்க தங்கிட்டு அப்புறம் நீங்க இன்டர்வியூக்கு போங்க, என் வீட்டில் இருந்து பக்கம் தான் அந்த கம்பெனி இருக்கும் இடம்!”
“உங்க மயூ ஒண்ணும் சொல்ல மாட்டாங்களா?”
“அதெல்லாம் அவ ஒண்ணுமே சொல்ல மாட்டா, நீங்க அதப் பத்தி எல்லாம் கவலைப் படாதீங்க!”
சரியென்று சொல்லி விட்டு வந்தவள், கிளம்பும் போது அவனுக்கு போன் செய்தாள்.
அவன் அவனது வீட்டு லோகேசனை ஷேர் செய்து விட்டு,
“சாரி வெண்ணிலா , இங்கே மயூவுக்கும் கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ. முடிஞ்ச வரை அவ அங்க வந்திடுவா”
“இங்க நானும் வெளி வேலையா வந்தேன், அங்க வர கொஞ்சம் லேட்டாகும் மாதிரி தெரியுது!
ஒண்ணும் பிரச்சினை இல்ல, நீங்க நேரா வீட்டுக்குப் போய் வீட்டைத் திறந்து இருங்க. நல்லா ரெஸ்ட் எடுங்க. நான் நைட் வந்திடுவேன்! காலையில் உங்கள இன்டர்வியூக்கும் கூட்டிட்டுப் போறேன்! பயப்படாதீங்க!“ என்று சொன்னவன், அவன் வீட்டுக்கு எந்த ஸ்டேசனில் இறங்க வேண்டும், அவன் வீட்டு டோர் டிஜிட்டல் லாக் பின் என்ன என்பதையும் சொல்லி தான் போனை வைத்தான்.
வெண்ணிலாவும் அவன் சொன்னபடி தாம்பரம் ஸ்டேசனில் இறங்கி, வெளியே வந்து அவன் சொன்ன இடத்தில் நின்று அவன் சொன்ன லோகசனுக்கு கேப் புக் செய்தாள்.
போகும் போதே கூகுள் மேப்பில் அவனது அப்பார்ட்மெண்ட் பில்டிங்கை கூகுள் இமேஜில் பார்த்து வைத்துக் கொண்டாள்!
அங்கிருந்து அவள் இன்டர்வியூ போக இருக்கும் கம்பெனியின் பெயரைப் போட்டு டிஸ்டன்ஸ் பார்த்தாள். வெறும் பதினைந்து நிமிட பயண நேரம் தான்! ஜீவா சொன்னபடியே!
அவள் அந்த அப்பார்ட்மெண்ட்டின் என்டரன்சில் இறங்கி அப்படியே நிமிர்ந்துப் பார்த்தாள்!
தீப்பெட்டியை அடுக்கினது போல பெரிய பெரிய கட்டிடங்கள்!
பெரிய கேட்டட் கம்யூனிட்டி! மொத்தம் நான்கோ இல்லை அதற்கும் மேலோ ப்ளாக்குகள்!
அவள் இறங்கி செக்யுரிட்டியிடம் “ஏ ப்ளாக் எங்கு” என்று கேட்டு அங்கே போய் லிப்டில் ஏறி அவன் பிளாட் இருந்த ஐந்தாவது மாடிக்கு சென்று அவன் வீட்டை நம்பர் லாக் போட்டு திறந்து கொண்டு உள்ளே போனாள்!
உள்ளே நுழைந்தவள் கண்ணில் பட்டது அந்த பைபிள் வாசகம்!
“பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது”
அதை ரசித்துப் படித்து விட்டு, உள்ளே சென்றவள் அப்படியே திகைத்துப் போய் தான் விட்டாள்!
கிராமத்தில் இருக்கும் அவள் வீட்டை விடப் பெரியதாய் இருந்தது அந்த 4BHK பிளாட்! நல்ல விசாலமான ஹால்! மாடுலர் கிச்சன்!
பெரிய பால்கனி! அதில் முழுவதும் கண்ணாடி கதவு! அதிலிருந்து பார்த்தால், அந்த அப்பார்ட்மெண்ட் எவ்வளவு பெரியது என்று தெரிந்தது.
தூரத்தில் நீச்சல்குளம் வேறு!
வரும் போதே பார்த்திருந்தாள், அப்பார்ட்மெண்ட் உள்ளேயே ஒரு சிறிய டிப்பார்ட்மென்ட் ஸ்டோர் கூட இருந்தது! அப்புறம் QSR –(Quick Service Restaurant) வகை, பீசா, பர்கர் கட்லட், ஜூஸ், ஸ்முத்தி மாதிரியான உணவுப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றையும்!
சுற்றிலும் மிகப்பெரிய கார்டனும், அங்கங்கே ஸ்டோன் பெஞ்சுகளும்!
ரொம்பவே ரம்யமாக தான் இருந்தது சிட்டியில் இருந்தும் கூட அந்த சூழலும்!
அதையெல்லாம் ரசித்தபடியே தான் வந்தாள்!
இப்போது உள்ளே ஜீவாவின் வீட்டைப் பார்த்ததும் மறுபடியும் கொஞ்சம் பிரமிப்பு!
இவ்வளவு பெரிய வீட்டில் இருக்கும் மனுசனா, அங்கே அந்த கிராமத்தில் வந்து இத்தனை நாள் தங்கியது?
அவளுள் ஆச்சரியம்!
வீடு பெரியதாய் அழகாய் இருந்தாலும், நிறைய குப்பையாய் இருந்தது!
அங்கங்கே டி சர்ட்கள், சர்ட்கள்! அயர்ன் பண்ணி வாங்கி வந்த இருந்த கட்டில் இருந்து உருவியது போல ஒரு சர்ட்!
பாதி சாப்பிட்டு விட்டு வைத்து இருந்த ஸ்நாக்ஸ் பாக்கெட்கள்!
காய்ந்து போய் இருந்த காபி மக்!
திறந்து கிடந்த வாட்டர் பாட்டில்கள், தீர்ந்துப் போயிருந்த வாட்டர் பாட்டில்கள்!
அப்படியே டிப்பிக்கல் பாச்சிலர் ஹவுஸ்!
வெண்ணில்லாவின் கையால் சும்மா இருக்க முடியவில்லை!
பரப்பரத்தது!
சுற்றிலும் உள்ளவற்றை ஒழுங்குப் படுத்தி, கூட்டி சுத்தம் செய்து விட்டு உட்கார்ந்தாள்.
கொஞ்சநேரம் மொபைல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பசிப்பது போல இருந்தது!
காலையில் ஸ்டேஷனில் வைத்து அன்பு வாங்கிக் கொடுத்த டிபன்!
கீழே இருந்த அந்த கடையில் போய் ஏதாவது வாங்கி வரலாம் என்று அவள் நினைத்த போதே வாசலில் காலிங்பெல் அடித்தது!
ஜீவா தானோ என்று நினைத்தவாறு கதவைத் திறந்தால், புட் டெலிவரி ஆள்!
வெண்ணிலா பெயரை சொல்லி உணவுப் பார்சலைக் கொடுத்து விட்டுப் போயிருந்தான்!
மினி மீல்ஸ்!
உள்ளே சென்றவளின் போனில் ஜீவா தான் அழைத்து இருந்தான்.
“புட் டெலிவரி ஆச்சா, போதுமா, நல்லா சாப்பிட்டு விட்டு ரெஸ்ட் எடுங்க!”
“நீங்க எதுக்கு சார் இதெல்லாம் பண்ணிட்டு, நான் பார்த்துக்க மாட்டேனா?”
“இதிலென்ன இருக்கு வெண்ணிலா, ப்ளீஸ் நீங்க ஒண்ணும் ஹெசிடேட் பண்ணாதீங்க!” சொன்னவன் வந்தது இரவு எட்டரை மணிக்கு தான்!
கையில் உணவு பார்சல்கள்!
உள்ளே நுழைந்தவன் கொஞ்சம் திகைத்து விட்டு, “மயூவும் வந்தாச்சா?’ என்று கேட்டான்.
“இல்லியே சார்!”
“இல்ல வீடு இப்படி க்ளீனா இருக்கே, அதான் கேட்டேன்!”
வெண்ணிலா கொஞ்சம் தயங்கி விட்டு,
“நான் தான் சார் கிளீன் பண்ணினேன், என்னால் ரொம்ப நேரம் சும்மா உட்கார முடியவில்லை!”
அவன் நேர் கிச்சனுக்குள் போனான்!
அங்கும் அப்படி ஒரு சுத்தம்!
அவன் அதை கிட்டத்தட்ட ஒரு போர்க்களம் மாதிரி வைத்து விட்டு தான் போயிருந்தான்!
மயூ வந்தால் நிச்சயம் மண்டகப்படி உண்டு என்று நினைத்து வந்தவனுக்கு வெண்ணிலா அங்கும் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தாள்!
அங்கங்கே கிடந்த அழுக்குத் துணிகளும் கூட வாசிங் மெசினில் துவைக்கப்பட்டு, ஆனால் இன்னும் காய வைக்கப்படாமல் இருந்தன!
“சாரி சார், நான் வாஷின் மெசின் யூஸ் பண்ணினதில்லை!
யூ ட்யுப்பில், இந்த மெசின் பிராண்ட் நேம் போட்டு எப்படி ஆப்ரேட் பண்றதுன்னு பார்த்து வாஷ் பண்ணிட்டேன், ஆனா எங்க காயப் போடுறதுன்னு தெரியல!
இங்க எப்படி டெரஸ்ல போய் காயப் போடுறதா?”
“நீங்க எதுக்கு வெண்ணிலா, இதெல்லாம் பண்ணிட்டு?” சொன்னவன், “இங்கே டெரஸ்ல போடணும்னா முப்பது மாடி ஏறனும்!” என்று சொல்லி சிரித்தான்!
“அய்யோ!” என்றாள் வெண்ணிலா!
“இத இப்படி இந்த ஸ்டாண்டில் போட்டு இப்படி பால்கனி பக்கம் வச்சு தான் காயப் போடணும்!” என்று சொல்லி அவன் அதிலிருந்த துணிகளைக் காயப் போட்டான்!
“நான் அடிக்கடி வெளியில போறதுனால, இங்க ரெகுலரா எல்லாம் ஹவுஸ் மெயிட் வச்சுக்க முடியல! எதிர் பிளாட் மாமி வீட்டில் வேலை செய்யும் சுமதி அக்கா தான் இங்கயும் தேவைப்பட்டா வருவாங்க!”
அவர்கள் இருவரும் அவளின் இன்டர்வியூ பற்றியும் பேசினார்கள்! அவன் மேலும் சில டிப்ஸ்கள் அவளுக்கு சொல்லிக் கொடுத்தான்.
சாப்பிட்டு முடித்தவுடன் இடத்தை சுத்தம் செய்தாள் வெண்ணிலா!
மயுவிடமிருந்து போன்!
அவள் வெண்ணிலாவுடனும் பேசினாள்!
“ஜீவா சொன்னான், நீ வருவே என்று! எனக்கு இங்க கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ!
பீரியட்ஸ் ப்ராப்ளம்! கொஞ்சம் ஓவர் ப்ளோவாக இருக்கு, என்னால ட்ராவெல் பண்ண முடியல!
அதான் என்னால அங்க வர முடியல! நீ ஒண்ணும் பயப்படாத, ஜீவா கொஞ்சம் நல்ல பையன் தான்!” என்று சொல்லி சிரித்தாள்!
“அய்யோ என்ன மேடம் நீங்க.. ஜீவா சாரை சந்தேகப்பட்டால், அவர நம்பி நான் இவ்வளவு தூரம் வந்துருப்பேனா? ஹி இஸ் ஜெம் ஆப் பெர்சன்!” வெண்ணிலா சொல்ல,
“ஓ அப்படியா, நைஸ் டு ஹியர் திஸ்! சரிம்மா, நீ போய் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு! குட் நைட்” என்று போனை வைத்தாள்!
பக்கத்தில் இருந்து இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஜீவாவுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது!
தன் மேல் இவ்வளவு நம்பிக்கை, மரியாதை வைத்திருக்கும் வெண்ணிலாவைப் பார்த்து!
என்ன இருந்தாலும் ஒரு வயது பெண், அதுவும் கிராமத்துப் பெண், ரொம்பவும் கட்டுப்பாடான வீட்டில் இருந்து வந்திருக்கும் பெண் வேறு!
தன் மேல் இத்தனை நம்பிக்கை வைத்து, தன் வீட்டில் இப்படி தங்க சம்மதித்து இருப்பது அவனுக்குள் கொஞ்சம் கர்வத்தைக் கொடுத்தது!
வரும் போதாவது இங்கு மயூ இருப்பாள் என்று நினைத்து வந்திருக்கலாம்! ஆனா இப்போது இங்கு மயூவும் இல்லை என்று தெரிந்த பின்னும் கூட அவள் முகத்தில் கொஞ்சம் கூட பயமோ அவ நம்பிக்கையோ வரவேயில்லை!
உன்னை இத்தனை மதிப்பான இடத்தில் வைத்திருக்கும் பெண்ணிடம், நீயும் ரொம்பவும் கண்ணியமாகவே நடந்து கொள்ள வேண்டும்!
அவள் ஊரில் அவளுக்குத் தெரியாமல் அவளை சைட் அடித்தது மாதிரி எல்லாம் இனி கூடவே கூடாது!
ஆனாலும் இவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கே! ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விசயத்துல என்னை அப்படியே அவள் பக்கம் இழுக்கிறாளே! நான் என்ன பண்ணுவேன்!
ம்ம். அப்படியே உன் மயூவை உன் மனக்கண்ணில் நிறுத்திப் பாரு! அடுத்து என்ன பண்றதுன்னு உனக்கே புரியும் அவன் மனசாட்சி அவனைக் கிண்டல் செய்தது!
அவனும் மயூவை நினைத்துப் பார்த்தான்!
கையில் பூரிக் கட்டையுடன் வந்துப் போனாள், “கொன்னுடுவேன்” என்று பத்திரம் காட்டி!
“அய்யோ!” கண்ணைத் திறந்தான்!
அங்கே வெண்ணிலாவின் நிலையும் அது தான்!
அந்த வீட்டில் இருந்த நான்கு அறையில் ஒன்று பூட்டப்பட்டிருந்து!
அது மயூவின் தனிப்பட்ட அறையாம்! ஜீவாவே கூட அங்கு அதிகம் போக மாட்டானாம்!
மற்ற மூன்று அறைகளில் வெண்ணிலா வந்து போகலாம் ஒன்றும் பிரச்சினை இல்லை!
அவள் எதற்கு போகப் போகிறாள்?
அவளை ஒரு ரூமில் தங்கி கொள்ள சொல்லிக் காட்டி விட்டு குட் நைட் சொல்லி அவன் அறைக்குப் போய் விட்டான் ஜீவா!
இவளுக்கு தான், புது இடம் என்பதாலும், ஜீவாவைப் பற்றி நினைத்து கொண்டிருந்தாலும் தூக்கம் வரவே இல்லை!
“அய்யோ, டி வெண்ணிலா, போதும் அடக்கி வாசி! ஏதோ கிராமத்துப் பொண்ணு, நல்லா படிக்கிற பொண்ணு, பாவம் நினைச்சு ஜீவா உனக்கு ஹெல்ப் பண்ணினா, நீ என்ன தேவையில்லாத நினைப்பை எல்லாம் நினைக்கிற!
அவர் உன் குரு, வழிக்காட்டி, நலம் விரும்பி அது மட்டுமே! இதைத் தவிர வேற எதாச்சும் உன் மனசுல ஓடுச்சு தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு! ஒழுங்கா வந்த வேலைய மட்டும் பார்த்துட்டு கிளம்புற வேலையப் பாரு!
அந்த மயூ மேடம் எவ்வளவு கைண்டா பேசுனாங்க! அவங்க லைபில் குழப்பம் பண்ணுவியா நீ?” அவள் மனசாட்சி அவளை அதட்டி தூங்க வைத்தது!
மறு நாள் காலை!
குளிப்பதற்கு முன் இண்டர்வ்யூக்கு போட வேண்டிய ட்ரெஸ்சை எடுத்துப் பார்த்த வெண்ணிலா திடுக்கிட்டாள்!
இதை எப்படி கவனிக்காமல் போனோம்!
அவள் வீட்டை விட்டுக் கிளம்பிய போது, அவள் ட்ரெஸ் மற்றும் லாப்டாப் வைத்திருக்கும் இரண்டு பைகளையும் அன்புவிடம் முதல் நாளே கொடுத்து வைத்திருந்தாள். இல்லையென்றால் “சமயபுரம் கோவிலுக்கு எதுக்குடி லாப்டாப் பாகை எடுத்துட்டு போறே?” என்று வசந்தா கேட்டு விடுவார்!
அப்படியெல்லாம் முன்னேற்பாடாக இருந்தவள் தான்!
இண்டர்வ்யூக்கு போடுவதற்கு என்று, புது ட்ரெஸ் ஆன்லைனில் வாங்கி வேறு வைத்திருந்தாள்!
அந்த புது ட்ரெஸ் தான் இப்போது பாழாய்ப் போய் விட்டிருந்தது!
தாம்பரத்தில் இறங்கி அவள் கேப் வருவதற்காக காத்து இருந்த போது நல்ல மழைப் பிடித்து விட்டது!
அப்போது அவள் முனைப்பெல்லாம் லாப்டாப்பை நனைய விடாமல் காப்ப்பற்றுவதில் இருக்க, ட்ரெஸ் இருந்த பாகை நனைய விட்டிருந்தாள்!
இப்போது எடுத்துப் பார்த்தால், அந்த வெள்ளை நிற குர்தியில் அதில் செய்யப்பட்டிருந்த எம்ராய்டரி நூல்களின் சாயம் இறங்கி விட்டிருந்தது!
இதை நிச்சயம் போடவே முடியாது!
கையில் காசு இருக்கிறது! கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி எதாவது ஒரு கடையில் ஒரு புது ட்ரெஸ் வாங்கிக் கொண்டு ட்ரயல் ரூமிலேயே மாற்றிக் கொள்ளலாம்! என்று நினைத்தவள் ரூமை விட்டு வெளியே வந்தவள், ஜீவாவிடம்,
“சார், இங்க பக்கத்துல எதாச்சும் ட்ரெஸ் கடை இருக்கா?” என்று கேட்டாள்!
“ஏன், வெண்ணிலா?”
அவள், ட்ரஸ் இப்படி ஆகி விட்டது என்று சொன்னாள்!
“கடை இருக்கும், ஆனா திறக்க லேட்டாகுமே, அதுக்குள்ள உங்களுக்கு இன்டர்வியூக்கு டைம் ஆகிடுமே!” என்று சொல்லிக் கொண்டே கொஞ்சம் யோசித்தவன் எழுந்துப் போய் அவன் ரூமில் இருந்து ஒரு கவரை எடுத்து வந்தான்!
அதில் நான்கு குர்தி செட்கள்!
“இது நான் மயூவுக்கு நான் வாங்கியது! உங்களுக்கும் சூட் ஆகும்னு நினைக்கிறேன்!
கொஞ்சம் சிம்பிள் டிசைனாக இருக்கும்! மயூ அப்படி தான் போடுவா! உங்களுக்கு ஓகேன்னா, இதப் போட்டுக்கங்க!” என்று கொடுத்தான்!
வெண்ணிலா தயங்கினாள்!
“சார், அது வந்து மயூ மேடம் .. எதாச்சும் நினைச்சுக்க போறாங்க!”
“இப்படி ஒரு சிச்சுவேசன்ல, நான் இதை வச்சுகிட்டே உங்களுக்கு கொடுக்காம விட்டேன்னு தெரிஞ்சா தான் கோபப்படுவா? ப்ளீஸ் வாங்கிக்கோங்க”!
“ரொம்ப தாங்க்ஸ் சார்!”
போய் குளித்து விட்டு அந்த உடைகளைப் போட்டு வந்தாள்!
இப்போது அவளைப் பார்த்தால், கிராமத்தில் இருந்து வந்த பெண் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள்!
அப்படி இருந்தாள்!
ஏற்கனவே அழகு, அதில் இருந்த படித்தக் களை!, இப்போது சிட்டி பெண்கள் மாதிரியான உடையில் அப்படி தான் இருந்தாள்!
டிப்பிக்கல் கார்பரேட் பெண்ணின் லுக்!
ஜீவா உள்ளுக்குள் அவளை ரசிக்கவே செய்தான்!
ஆனால் அவள் முகத்தில் இன்னும் டென்சன்!
அதைக் கவனித்து விட்ட ஜீவா,
“ஏன் வெண்ணிலா இன்னுமும் டென்சனா இருக்கீங்க, முதல்ல ரிலாக்ஸ் ஆகுங்க! இங்க கொஞ்சம் வாங்க” என்று பக்கவாட்டில் இருக்கும் இன்னொரு பால்கனிக்கு கூட்டிப் போனான்!
அங்கே போனால், நிறைய ரோஜா செடிகள்! இல்லை ரோஜாக் கூட்டம்!
பூவிலே புழங்கி, மலர் விவசாயம் பண்ணும், அதை வெறும் பணப்பயிராக மட்டுமே பார்த்து வளர்ந்த வெண்ணிலாவுக்கே அவற்றைக் கண்டவுடன் ஒன்றை எடுத்து தலையில் வைத்துக் கொள்ளும் ஆசை வந்தது. அடக்கிக் கொண்டாள்!
“உங்க மயூவுக்கு ரோஜான்னா ரொம்ப பிடிக்குமா?”
“ஆமா ரொம்ப பிடிக்கும்!”
“அப்ப டெய்லி, ட்ரெஸ்க்கு மாட்ச்சா வச்சுட்டுப் போவாங்க இல்ல?”
கொஞ்சம் ஏதோ யோசித்தவன், “மயூவா, பூவா, எங்க அந்த பாப் தலையில் ஆணி அடிச்சா வச்சுக்க முடியும்?” சிரித்தபடியே சொன்னவன், “நீங்க வேணுமின்னா பறிச்சு வச்சுக்கோங்க” என்றான்!
“இல்ல வேணாம்” என்று சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அங்கேயே நின்று அவற்றைப் பார்த்து ரசித்து விட்டு, நார்மலாக வெளியே வந்தாள் வெண்ணிலா!
பின்னாலேயே வந்த ஜீவா கையில் ஒரு சிவப்பு ரோஜாவை மெள்ள கிள்ளிப் பறித்து வந்து விட்டான்!
“இந்தாங்க வெண்ணிலா வச்சுக்கோங்க” அவன் அதை நீட்டிய போது சரியாக பிளாஷ் அடித்தது!
இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தால்,
“என்ன ஜீவா அங்கிள், நீங்க இந்த புது ஆண்டிக்கு ரோஸ் கொடுத்து ப்ரபோஸ் பண்றீங்களா? நான் அதை எப்படி கேப்சர் பண்ணிட்டேன் பார்த்தீங்களா?” என்று குறும்புடன் சொல்லி, ஜீவாவின் போனை கையில் வைத்துக் கொண்டிருந்தவன எதிர் பிளாட் வாண்டு வருண்! சரியான வாலு!
அவனுக்கு பெரிய போட்டோக்ராபர் ஆக ஆசை.! எப்போது பார்த்தாலும் எதையாவது போட்டோ எடுத்துக் கொண்டே இருப்பான்!
“டேய். குடுடா என் போனை!” அவனை துரத்திப் போய் போனை வாங்கினான் ஜீவா!
“இரு உன்னை.. மயூ கிட்ட மாத்ஸ் டுயுஷன் வருவ இல்ல? அப்ப நல்லா குட்டு வைக்க சொல்றேன்!”
“நான், இனிமே மயூ ஆண்டி கிட்ட படிக்க மாட்டேனே, இனி நான் இந்த புது ஆண்டி கிட்ட தான் படிப்பேன்!”
“இல்ல.. நான், நாளைக்கு..” ஏதோ சொல்லி வெண்ணிலா மறுக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது, ஜீவா அவளையே பார்த்தான்!
நீ, இங்கியே இருந்துடேன் வெண்ணிலா என்று அவன் மனம் சொல்லியது! கூடவே டெலிட் செய்ய போன அந்த போட்டோவையும் அவன் டெலீட் பண்ண மனம் வரவில்லை!
—
மறு நாள் குரூப் டிஸ்கசன் முடிந்து, அடுத்த லெவல் இன்டர்வியூ முடிந்து வெண்ணிலா ஜீவாவுக்கு போன் செய்தாள். அதற்குள் அன்புவும் சென்னை வந்து விட்டான். அவனுக்கும் அந்த கம்பெனியின் லொகேசன் அனுப்பி இருக்க, அவனும் அங்கு வந்து சேர்ந்து அவளுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தான்.
தூரத்தில் ஜீவாவுடன் பேசி சிரித்தடி வந்து கொண்டிருக்கும் வெண்ணிலாவைப் பார்த்தான்!
அப்படியே அசந்து போய் கண் கொட்டாமல் அவர்களையே பார்த்தான்!
“என்ன பொருத்தமான ஜோடி” என்று அவன் மனம் சொல்லியது!
“நல்லவேளை, இந்த சுதா வந்து ஏதோ குட்டி கலாட்டா பண்ணி வெண்ணிலாவோடு அவனுக்கு நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்தி விட்டாள்!
நான் எல்லாம் அவளுக்குப் பொருத்தமே இல்லை!
பெரியஇடத்துப் பெண்போல இருக்கிறாள் பார்ப்பதற்கு!
வெண்ணிலா கொண்டு வந்த உடைகள் பேசனாக இருந்தாலும் அப்படியே நடுத்தர வர்க்கத்தை பிரதிபலிக்கும் உடைகள்!
ஆனால் இப்போது சிம்பிளாக இருந்தாலும் மேல்தட்டு மக்களின் உடை! மேலும் அவள் போட்டுக் கொண்டிருந்த அந்த யுவி க்ளாஸ் அவளுக்கு இன்னும் ஒரு கம்பீரத்தை, படித்த களையைக் காட்டியது!
அதுவும் கிராமத்தில் இருக்கும் போது ஜீவா வாங்கிக் கொடுத்தது தான்! அப்போது எல்லாம் அவள் போட்டுக் கொள்ளவில்லை!
இப்போது வெண்ணிலாவை கிராமத்து கஷ்டபடுகிற பின்னணியில் இருந்து வந்திருக்கும் பெண் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டார்கள் என்றே தோன்றியது அன்புவுக்கு!
error: Content is protected !!