18-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,070
ஷோபா குமரனின் உன்
பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 18-2
.
Advertisement
சூரியன் தலையை வெளியே நீட்டும் முன்னமே உஷ்ணம் ரகுவை எழுப்பியது. அன்றைய மிக மிக நீளமான பொழுதைக் கழிப்பதற்குள் ரகு நொந்தே போனான். தாத்தாவோடு தோட்டம் செல்ல மறுத்தான். தோழர்கள் வந்து சென்றனர். இவன் ஒருவரோடும் எங்கும் செல்லவில்லை. “பேபி இல்லாம போர் அடிக்குது பாட்டி” என அலுத்துக் கொண்டவன், வீட்டையும் பாட்டியையும் சுற்றி வந்தான்.
“இன்னும் எங்க பாட்டி அவ?” என வாசலுக்கும் வீட்டுக்குமாக நடை பயின்றவனைப் பார்த்தவருக்குள் யோசனை ஓடியது. ‘இப்படி இவளைத் தேடுபவன், எப்படி இவளைப் பார்க்காது சென்னையில் நாள்களைக் கடத்தினான்?’ என்பது பிரதானக் கேள்வி. இந்த நாளுக்காக அவன் வருடம் முழுவதும் காத்திருப்பது அவனுக்குத் தானே தெரியும்.
Advertisement
Advertisement
கடிகாரத்தைப் பார்த்தவர், “இன்னைக்கு உன் பேபியோட பிறந்த நாள்” என ஆரம்பிக்கவும், “தெரியும் தெரியும்” என எரிந்து விழுந்தான். பின்னே… அவனுக்குத் தெரியாதா அவளின் பிறந்த நாள்? அதற்குத் தானே அழுது ஆர்ப்பாட்டம் செய்து வந்திருக்கிறான்.
“இருடா… இவன் வேற அவசரத்துக்குப் பிறந்தவன்! ரெண்டு மணிக்கு கிளம்பியாச்சுன்னு ஃபோன் போட்டா. நேரா வீட்டுக்கு வரலியாம். பிறந்த நாளுக்கு, சாயங்காலம் மலைக்கோட்டை கோயிலுக்கு போயிட்டு, ஏழு மணிக்கா வீட்டுக்கு வரதா சொல்லியிருந்தாங்க கண்ணு. இப்போ கோவிலுக்கு வந்திருப்பாங்க…. உன் பேபி, உச்சி பிள்ளையார பார்த்துட்டு இன்னும் ரெண்டு மணி நேரத்துல வந்துடுவா” என்றதும், “நானும் போறேன், அவங்களோடயே வீட்டுக்கு வரேன்” என்றவன் அவளுக்கு வாங்கி வந்த பார்சலோடு நேரே சென்றது அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் மலைக்கோட்டை கோயிலுக்குத் தான்.
Advertisement
தனியே விடமாட்டேன் எனக் கூடவே வந்த மகிழுந்து ஓட்டுநரிடம், “தாத்தா நீங்க கஷ்டப்பட்டு மேல வரவேண்டாம். நான் வர வரைக்கும் இங்கேயே இருங்க. ஐயா மேல இல்லாட்டா உடனே வந்திடுவேன்” என்றவன் ஓட்டம் பிடித்தான்.
உச்சி பிள்ளையாரை பார்க்க நானூற்றுக்கும் மேற்பட்ட படிகள் ஏறவேண்டும். ஓட்டமும் நடையுமாகச் சென்றவனை ஏமாற்றாமல் அங்கு தான் அவள் அமர்ந்திருந்தாள். கடைசியாக உச்சி பிள்ளையாரை காண ஏறவேண்டிய படிகளில் ஏறாது அருகே இருக்கும் மலைச் சரிவில் அவளின் அப்பாவோடு அமர்ந்து திருச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
மூச்சு வாங்க, “பேபி” என்றவனைப் பார்த்தவளுக்குப் பேச்சே வரவில்லை. “ல்ல்ல்…ல்ல்லகு” என்றாள் கண்கள் மின்ன. ரகரம் நன்கு வரும். ஆனாலும் அவன் ‘லகு’ தான் அவளுக்கு.
“என்ன பா… பொறுமையா வரதுக்கென்ன?” என வந்தவனை அருகே அமர்த்தி, முதுகை வருடி… நீர் பருக கொடுத்தார் அவன் ஐயா.
அவன் மூச்சு வாங்குவது பொறுக்காது, “சரி சரி… மூச்சு வாங்கிறது நிக்கட்டும். பொறுமை பொறுமை என மகன் முதுகைத் தட்டிக் கொடுத்தார். ஐந்து வயதில் எத்தனை இரவுகள் அவனைத் தோளில் போட்டு உறங்க வைத்திருப்பார். இன்று வளர்ந்து நிற்கிறான், வாஞ்சையோடு மகனைப் பார்த்தார்.
“எ…எ…எப்போ வந்த லகு?” அவள் திக்கித் தடுமாறிக் கேட்க, “நேத்தே வந்துட்டேன். நீ தான் இல்ல. இந்தா உன் பர்த்டேக்கு.” என அந்த நீள பரிசு பொருளை நீட்ட, கண்கள் விரிய, “இஇங்கயே க்கொண்டு வவந்துட்டியா ல்லகு?” எனச் சிரித்துக்கொண்டே வாங்கிக் கொண்டாள்.
நீளமான டப்பாவிற்குள் அழகான புல்லாங்குழல் வீற்றிருந்தது. சிறுமி அதை மெல்லத் தொட்டுப் பார்த்தாள். கண்கள் பளிச்சிட அவனைப் பார்த்துச் சிரித்தாள். போதுமே ரகுவிற்கு… அவனும் சிரித்தான்.
“அஅஅஅப்ப்பா…” என அப்பாவிடம் அதை நீட்டினாள். மகள் சில மாதங்களாகப் பக்கத்து வீட்டு மாமியிடம் புல்லாங்குழல் கற்றுக் கொண்டிருக்கிறாள். “ரொம்ப அழகா இருக்கு ரகு” என்றவர் அதை இப்படியும் அப்படியுமாக ஆராய்ந்தார்.
“அம்மா பாட்டுப் பாட… என் பொண்ணு அந்தப் பாட்டுக்கு வாசிப்பா” என மகளின் தலையை வருடி விட்டார். மகளும் பாடுவாள் என்றுதான் நினைத்தார். ஆனால் பேசவே சிரமப்படும் மகளிடம் அதை எப்படி எதிர்பார்க்க முடியும்? ஆனால் முயன்றிருந்தால் முடியும் என அவருக்குத் தெரியாது போனது.
“கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்
கோபாலன் குழலைக் கேட்டு
நாலுபடி பால் கறக்குது இராமாரி…”
அவள் வாசிக்க அப்பா கண்களை மூடி அமர்ந்து கொண்டனர். அப்படி ஒன்றும் அருமையான வாசிப்பு இல்லை என்றாலும் அவள் அப்பாவிற்கும், ரகுவிற்கும் அது இனிமையான இசை தான். சென்ற முறை ரகு வந்திருந்த வேளை, இவளிடமிருந்த விசிலை வருண் பிடுங்கி ஓடிவிட, அழ ஆரம்பித்தவளை, “அழாத பேபி” எனச் சமாதானப்படுத்தி, அவசரத்திற்கு வீட்டிற்கு வெளியே நின்றிருந்த பப்பாளி இலையின் தண்டில் துவாரங்கள் இட்டு, ஒரு பக்க ஓட்டையை நெகிழி தாள் கொண்டு மூடி, “இது புல்லாங்குழல். அழாம வாசி பேபி,” என நீட்டி நின்றான்.
அவனை முறைத்து நின்றவளுக்கு வாசித்தும் காட்டினான். அப்படி எல்லாம் தேவ கானம் வரவில்லை என்றாலும் குழலுக்குள் சென்ற காற்று, துவாரம் வழியே ஏதோ ஒரு சத்தத்தை எழுப்பிக் கொண்டு வந்தது.
“அண்ணா எனக்கு” எனச் சின்னவன் ஓடி வரவும், “ல்..ல்..லகு எனக்கு” என்று சிணுங்கியவளின் கைக்கு இடம் பெயர்ந்தது பப்பாளி தண்டு புல்லாங்குழல். தலைக்கு டவல் கொண்டு முண்டாசு கட்டி, கழுத்தில் பிளாஸ்டிக் பூமாலை ஒன்றை அணிவித்து “நீ தான் கிருஷணன் இப்போ. வாசி” என அவன் ஊக்குவிக்க, அன்று வந்தது பெண்ணிற்குப் புல்லாங்குழல் ஆசை.
அன்று முழுவதுமே பல நீளத்தில் பல ஓட்டைகளுடன் பல புல்லாங்குழல்கள் உதயமாவதும் உடைவதுமாகவே சென்றது. என்ன… அந்தச் சின்ன பப்பாளி செடி மொட்டையாகிப் போனது தான் சோகம்.
ரகுவை பார்த்துக் கொண்டே சில வரிகளை அவள் வாசிக்க, அவனும் அவள் வாசிப்பை மின்னும் கண்களும், விரிந்த இதழ்களுமாகப் பார்த்து அமர்ந்திருந்தான்.
காற்றில் மிதந்து வந்த அந்த இசையோடு அன்றைய சூரிய அஸ்தமனத்தைக் குடும்பமாக நால்வரும் மலை உச்சியிலிருந்து கண்டு களித்தனர். மெல்ல மெல்ல வானம் இருளை பூசிக்கொள்ள ஆரம்பித்தது. ஆயிரம்… லட்சம் மின்சார விளக்குகளின் உபயத்தால் திருச்சி ஒளி பெற்று ஜொலித்தது.
அப்பாவும் மகளும் புல்லாங்குழல் ஆராய்ச்சியில் இறங்கிவிட எதிரிதே தெரிந்த திருச்சியை வெறித்தான் ரகு. யோசனையும், ஒளி மங்கிய முகமுமாக அமர்ந்திருந்தவன் தலையை சந்திரிகா கோதிவிட்டார். “அம்மா” என்றவன் குரல் கரகரத்தது. “கஷ்மீர் எல்லைக்கு நீ போக நேர்ந்தாலும், நான் உன் அம்மா… நீ என் ரகு. அதுல எந்த மாற்றமும் வராது. எங்க இருந்தாலும், உன் கடமைய ஒழுங்கா செய்யணும். உன் சந்தோஷமும், உன் ஆரோகியமும் தான் எங்களோட நிம்மதி.” என்றவரை திரும்பிப் பார்த்தான்.
“தெரியும்… உன் பாட்டி சொன்னாங்க. எனக்கு வருத்தம் இல்லன்னு பொய் சொல்ல மாட்டேன். ஆனா இது உனக்கான பாதை. எத்தனப் பேருக்கு இப்படி புது இடம், புது வாழ்க்கை, புது எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்குது? இந்த பயணம், புதிய நட்பு, சிந்தனை, படிப்புன்னு பல கதவ உனக்குக் காட்டும். ஒரு பயணத்தோட அழகே அது கொடுக்கிற அனுபவம் தான். பல இடங்கள பாரு… வாழ்க்கைய அனுபவி… மாற்றத்த எதிர்த்து நிக்காத. குடும்பத்தோட சுமுகமா போக கத்துக்கோ.”
“ம்ம்ம்”
“டீன் ஏஜ்ல… உடம்புல நிறைய ஹார்மோன்ஸ் மாறும். என் வாழ்க்கை என் இஷ்டம்ன்னு வாழ தோணும். உன் சிந்தனைய நீ தான் ஒருமுக படுத்தணும். இது என் வாழ்க்கை… ஒழுக்கமும், படிப்பும் எனக்கு முக்கியம்ன்னு நினைச்சு, பொறுப்பா படிச்சு நல்ல எதிர்காலத்துக்கு வழிவகுக்கணும். எதுனாலும் உன் கையில ரகு. புரியுதா?”
“ஒழுங்கா படிப்பேன் மா. தப்பான பழக்கம் எதுவும் பழக மாட்டேன் மா.” என்றான் ஒளிர்ந்து கொண்டிருக்கும் திருச்சியை பார்த்தவாரே.
சின்னவனின் முகம் பார்த்த சந்திரிகாவிற்கு துடித்தது. எத்தனை ஏக்கம் அதில்! தன்னோடு வைத்துக் கொள்ள மனம் ஆசை கொண்டாலும் முடியாத தன் நிலையை வெறுக்க மட்டுமே முடிந்தது. ‘எனக்குப் பிறந்திருக்கக் கூடாதா இவன்’ என எண்ணாது இருக்க முடியவில்லை அவரால்.
“ரகு…” என்றார் அவன் கரம் பற்றி.
“ம்மா?” என்றவனும் அவர் கரத்தை அழுந்த பிடித்துக் கொண்டான்.
“டீன் ஏஜ்ல புது இடம்… பழக்கப்படாத ஆட்கள், புது ஸ்கூல்… எல்லாமே பழக ரொம்ப கஷ்டம். இல்லாததை நினைச்சு துவண்டுடாத. இருக்கத நினைச்சு, கொஞ்ச நாள் இழுத்துபிடிச்சா… பழகிடுவ. சரியா? ஏதாவது காரணத்தால… உன்னால அங்க இருக்க முடியலனா, உனக்கு நான் இங்க இருக்கேன்னு நினைவுல வச்சுக்கோ. ஒரு போன் கால் டிஸ்டன்ஸ்ல தான் நாங்க இருக்கோம்ன்னு மறந்துடாத.”
“ம்ம்ம் மா” என்றவனுக்குள் ஏதோ ஒரு திடம் பரவியது.
பிள்ளைகள் இருவரும் வளவளக்க ஆரம்பித்தனர். “கிளம்பலாம் பிள்ளைங்களா” என அமர்ந்திருந்த பாறையை விட்டு இறங்கி நின்று கொண்டாலும் செல்ல மனமில்லை ஒருவருக்கும். நட்சத்திர வானமும், அதற்குச் சற்றும் குறையா அழகுடன் தங்கள் முன் பரந்து விரிந்திருந்த ஜொலிக்கும் திருச்சியும் காணக் காண திகட்டவில்லையே. அதை விட்டுச் செல்ல எப்படி மனம் வரும்?
“ல்..ல்…லகு பாரு… முமுமூன்றாம் பிறை” என இருள் வானில் கீற்றாய் தெரிந்த சந்திரனைக் காட்டினாள் பெண். ரசிக்கும் வயதில்லை என்பதாலோ என்னவோ அதைப் பார்த்த சிறுவனுக்கு அப்படி ஒன்றும் அந்தப் பிறை நிலா அழகாகத் தோன்றவில்லை.
“கண்டிப்பா வரலாம் பேபி” என்றான், அது அவள் ஆசை என்பதால் மட்டுமே.
“சத்தியமா?”
சத்தியத்தை அவன் காப்பாற்றப் போவதில்லை எனத் தெரியாதவனாய், “சத்தியமா பௌர்ணமிக்கு வரலாம்” என்றான் நீட்டியிருந்த அவள் உள்ளங்கைக்குள் கையை பதித்து.
“ந்நீ சென்னைக்கு ப்ப்போகிறதுக்கு முன்ன வரலாமா?” என்று ஆவலாக அவன் முகம் பார்க்க, அவன் குட்டி தோழியின் ஆசையை நிறைவேற்ற முடியாததை எண்ணி அவன் அமைதி காக்க, பதில் வேண்டி ஆவலோடு அவன் முகம் பார்த்தே நின்றிருந்தாள் பெண். அவனிடம் எந்தப் பதிலும் இல்லை. அவள் கேட்டு அவன் பதில் கூறாது இருக்க மாட்டானே. என்னவாம்?
வந்த அன்றே அவளை அழ வைக்க வேண்டாம் என்று தான் நினைத்தான். ஆனால், “ல்ல்ல் ல் ல்லகு” என்ற அவளின் திக்கலான அழைப்புக்குத் திரும்பியவன், “அப்பாக்கு டெல்லிக்கு டிரான்ஸ்ஃபர் ஆகியிருக்கு. இந்த மாச கடைசில சென்னைய விட்டு கிளம்பணும் பேபி. நான் இன்னும் பத்து நாள் தான் இங்க இருப்பேன். இனி அடுத்த டிசம்பரோ… மே மாசமோ தான். இப்போ மாதிரி கிடைக்கிற லீவுக்கு எல்லாம் வர முடியாது பேபி. கண்டிப்பா அடுத்த மே மாச பௌர்ணமிக்கு வரலாம் பேபி” என்று போட்டு உடைத்தான்.
அவனையே நம்பாத பார்வை பார்த்தவளை எப்படிச் சமாதானம் செய்வது எனத் தெரியாது, “வந்து போவேன் பேபி. பேசு பேபி…. ஏதாவது சொல்லு பேபி” என்றான் தவிப்பாய்.
பத்து வயது பெண்ணால் அவன் கூற வருவதைப் புரிந்து கொள்ள முடியாத என்ன? ரகு என்ற அத்தியாயம் அவள் வாழ்வில் முடிந்தே போனதோ? மனம் தாளவில்லை சின்னவளுக்கு. எந்தப் பதிலும் கொடுக்காது ஓடிச் சென்று அம்மாவின் வயிற்றைக் கட்டிக்கொண்டு அவரில் புதைத்தாள் சிறுமி.
பிரிவும் அதை அடுத்த சேர்க்கையும் ரகுவிற்கும் தாராவிற்கும் பழகிப் போனது என்றாலும், வரப்போகும் இந்தப் பிரிவு?