Skip to content
Post Views: 4,956
“இவன் வேற.. ரொம்ப கூவுறான், நிலைமை கை மீறி போய்டப் போகுது!” என்று உள்ளுக்குள் பதறிய வினய், “டேய் .. சும்மா இரேண்டா”, என்று சொல்ல,
“இல்லண்ணே, இப்ப பாரு, இந்த டவுன்காரன் எப்படி பேக் ஆகுறான்னு..” என்று வினயின் காதில் மெல்ல சொல்லி விட்டு,
“சொல்லு.. நீ தான் ரொம்ப நல்லவனாமே, வெண்ணிலாவை நீ கட்டிக்கிறியா?” என்று ஜீவாவைப் பார்த்து எக்களிப்புடன் கேட்டான், அந்த அல்லக்கை!
“ம்ம். கண்டிப்பா நான் வெண்ணிலாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்.
Advertisement
“எங்க அம்மாவை வரச்சொல்லி முறைப்படி பொண்ணு கேட்டு, நிச்சயம் பண்ணி, நல்லபடியா நடக்கும் எங்க கல்யாணம்.
நீ இப்ப இடத்தைக் காலிப் பண்ணு, நான் வெண்ணிலாவோட பேரன்ட்ஸ் கிட்ட பேசிக்கிறேன், சும்மா இங்க நின்னு அவ மானத்தை ஏலம் விடற வேலை எல்லாம் இங்க வேணாம்” ஜீவா குரலை உயர்த்தினான்.
“டேய்.. சொன்னேனே கேட்டியா, அவன் ஏற்கனவே அவளை லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்கான்.
Advertisement
இப்ப நாமளே அவனுக்கு எடுத்துக் கொடுத்துருக்கோம், உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு..” வினய் கோபத்தில் பல்லைக்கடித்தவாறு அவனின் எடுபிடியின் காதை கடித்தான்.
Advertisement
“நானும் இந்த ட்விஸ்ட்ட எதிர்பார்க்கல, அவனையும் நம்மள மாதிரி நினைச்சுட்டேன், ஒண்ணும் கெட்டுப் போகல.. இப்ப பாரு..” என்று சொல்லி விட்டு..
“இந்த முறைப்படி, கிறைப்படி சால்ஜாப்பு எல்லாம் இங்க வேணாம். ஆன் த ஸ்பாட், நீ வெண்ணிலாவைக் கல்யாணம் பண்ணிக்கிறியா இல்லையா பதில் சொல்லு”
“ஜீவா சார், இவனுங்க கிடக்கான்ங்க, நீங்க இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணாதீங்க, நான் பார்த்துகிறேன்” என்றாள் வெண்ணிலா.
Advertisement
“ஆமா சார்.. நீங்க சும்மா இருங்க.. உங்க அம்மாவுக்கு நீங்க ஒரே பிள்ளை.. உங்க கல்யாணத்தைப் பத்தி ஆயிரம் கனவு இருக்கும் மயூம்மாவுக்கு” என்றான் அன்புவும்.
“ஆமா.. ஜீவா சார். மயூம்மாவுக்கு எல்லாமே நீங்க தான், உங்க கல்யாணம் அவங்க இல்லாம எப்படி. நீ ஒத்துக்காதீங்க” என்றாள் வெண்ணிலா மறுபடியும்.
“அது எப்படி.. ஒண்ணு அவன் கல்யாணம் பண்ணனும், இல்ல.. இப்பவே வினாயகத்தோட அவளுக்கு கல்யாணம் நடக்கணும். இது நடக்கலைன்னா என்ன உயிரோடவே பார்க்க முடியாது.. “ என்று அருணும் பதிலுக்கு எகிறினார்.
எப்படியும் அந்த டவுன்காரன் இதுக்கு சம்மதிக்க மாட்டான், வெண்ணிலா கல்யாணம் வினாயகத்தோடு நடந்து விட்டால் போதும் என்ற கணக்கு அவருக்கு!
“நிலா, இந்த ப்ளாக் மெயிலுக்கெல்லாம் நீ பயப்படாதே, சும்மா பூச்சாண்டி காட்டுறாரு அப்பா” என்றாள் வளர்மதி.
“நீ சும்மாயிரு, வளரு.. உன் லூஸு அப்பன் எதாச்சும் செஞ்சாலும் செஞ்சுப்புடுவான், அப்புறம் காலத்துக்கும் நிலாவுக்கு உறுத்தலாகவே இருக்கும். இரு.. பேசி சரிப் பண்ணலாம்.” என்று அவள் காதில் சொன்னான் நட்ராஜ்.
“எப்படிங்க.. நீங்க எது சொன்னாலும் காது கொடுத்து கூட கேக்க மாட்டேன்றாரே!” வளர்மதி சலிப்புடன் சொன்னாள்.
“முதல்ல இந்த விநாயகத்தை சீனில் இருந்து விரட்டணும் முதல்ல.. அதுக்கு வழியைப் பாரு..” என்றான் நட்ராஜ்.
“மாமா நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, இப்படி கழுத்தைப் பிடிச்சு கேக்குற மாதிரி எல்லாம் ஒருத்தவங்கள நிர்பந்திக்கக் கூடாது, அதுவும் இது கல்யாணம். ஆயிரங்காலத்துப் பயிர்.” என்று செல்வம் ஆரம்பிக்க..
“எனக்கு எந்த புடலங்காய் விளக்கமும் தேவையில்ல. ஒண்ணு அவ கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்குள்ள நுழையணும்.. இல்ல.. அப்படியே வந்த வழியே போய்ட சொல்லு.
எனக்கு அவ பொண்ணே இல்லைன்னு தலை முழுகிடறேன்.” என்றார் வெட்டி வீம்புடன் அருண்.
“நிலா, அதான் அப்பாவே சொல்லிட்டாரு, நீ சென்னைக்கு கிளம்பு, மத்தத அப்புறம் பேசிக்கலாம்”. என்றாள் வளர்மதி கோபமாக.
“இல்லக்கா, அப்பா..” வெண்ணிலா தயங்க.
“ஓ கிளம்பிடுவாளா.. கிளம்பட்டும், அப்படி அவ கிளம்பி போன பின்னே, இந்த அப்பனை உயிரோடுப் பார்க்க முடியாது, இப்பவே நல்லா பார்த்துட்டு போக சொல்லு” என்றார் அந்த லூஸு கிழவன்!
இத்தனையையும் அதிர்ச்சியுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வசந்தாவுக்கு, இப்போது தான் கணவர் ரொம்ப ஓவரா போகிற மாதிரி தோணலாகிற்று!
“ஏங்க. அது தான் நம்ம பொண்ணு மாப்பிள்ளைங்க, அன்பு அப்படின்னு இத்தனைப் பேர் சொல்றாங்க.
அவங்க சொல்றதையும் கூட கொஞ்சம் காது கொடுத்து தான் கேளுங்களேன்” என்ற அவருக்கு, மதி அவள் தவம் இருந்து பெறப் போகும் குழந்தை மேலேயே சத்தியம் பண்ண தயாரானப் பின், அவர்கள் சொல்வது உண்மைதான் போல என்றே தோன்றியது!
“என்ன நீயும் உன் பொண்ணுங்க பக்கம் சாஞ்சிட்டியா, உனக்கு கட்டினப் புருஷன் மானம் மரியாதை முக்கியமா படல?” அவளிடமும் சீறினார் அருண்.
“இப்ப என்ன மானம் கெட்டுப் போச்சாம் இவருக்கு.. உங்க கிட்ட சொல்லாம அவ வெளியூருக்கு வேலைக்குப் போனது தவிர அவ ஒரு குத்தமும் செய்யல.
சொல்லிட்டுப் போயிருந்தா, நீங்க அவளை அப்படியே விட்டுடுவீங்க பாரு..” வளர்மதிக்கு கோபம் உச்சிக்கு ஏறியது!
நட்ராஜ் தடுக்க தடுக்க. அவள் கோபத்துடன் பேச ஆரம்பித்தாள்!
“நானும் சொல்லக் கூடாது.. சொல்லக் கூடாதுன்னு தான் இத்தனை நாள் பொறுத்துப் போய் இருந்தேன்.
மானம் போச்சு மரியாதை போச்சுன்னு இப்படி குதிக்கிறாரே, என்னிக்காவது, பொம்பளைங்க உழைப்புல உடம்பை வளர்க்கிறோம்னு ரோசப்பட்டு இருக்கீங்களா?
உங்க மொத ரெண்டு பொண்ணுங்க கல்யாணத்துக்கு ஒரு துரும்பையாச்சும் இப்படி நகர்த்துருப்பீங்க?
கடைசி நிமிசம் வரை கூட காசை பொறட்ட அம்மாவும் நிலாவும் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா..?
சும்மா உக்கார்ந்து வெட்டி நியாயம் ஜம்பம் பேசினது தவிர உருப்படியா நீங்க எதாச்சும் செஞ்சுருப்பீங்களா உங்க வாழ்க்கையில..?
பொண்ணுங்க வாழ்க்கைக்குன்னு நீங்க ஒண்ணுமே செய்யலைனா கூட நிலாவோ இல்ல நாங்களோ, இல்ல அம்மாவோ ஒரு நாள் உங்கள மரியாதைக் குறைவா நடத்தி இருப்போமா, சொல்லுங்க?” வளர்மதி ஒருவாறு இத்தனை வருட மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.
“அம்மா, இத்தனை நாள் நீ மவுனமா அவர் இஷ்டப்படி வாழ்ந்து இருக்கலாம், எனக்கு புரியுது.. மூணு பொம்பள பிள்ளைங்கள வச்சுருக்கோம், அதுங்க கல்யாணம்னு வரும் போது அப்பன்காரன்னு ஒருத்தன் சபையில வந்து நிக்கணும்னு தான் நீ பொறுமையா இருந்திருப்ப..
அப்பா உயிரோட இல்லன்னா பரவாயில்ல. இருந்தும் வரலைன்னா, இந்த சமூகம் அந்த அம்மாக்காரியையும் அந்த பொண்ணுங்களையும், அவங்க மேலே தப்பே இல்லாத போது கூட எப்படி விமர்சிக்கும்னு தெரியும்மா.
இப்படி எங்களுக்காக தானே அம்மா, நீ பொறுமையாக இருந்தே, இப்ப உன் பொண்ணோட வாழ்க்கையே நாசமாகப் போகுது. அந்த வினாயகத்தோட கல்யாணம் நடந்தா.. அவனைப் பத்தி நல்லா தெரிஞ்சே நீ இப்படி அமைதியா இருக்கிறது சரியில்லம்மா” வசந்தாவைப் பார்த்து சொன்னாள் வான்மதி!
இத்தனை நேரம் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த வசந்தா,
“எப்போ என் பொண்ணு அவ வயித்துப் புள்ளை மேலேயே சத்தியம் செய்ய துணிஞ்சாளோ, அப்பவே நான் புரிஞ்சுகிட்டேன், என் பொண்ணு மேல எந்த தப்பும் இருக்காதுன்னு. நிலா என்னை மன்னிச்சுடுடி.. நானும் உன்னைத் தப்பா பேசிட்டேன்.” என்று வசந்தா கண் கலங்கிட,
அய்யோ என்ன எல்லாரும் ஒன்று கூடிடுவாங்க போலேயே என்று பதட்டப்பட்டான் வினய்!
அவனை தன் முட்டாள்தனமான மூர்க்கத்தனமான செயலால் நிம்மதி பெருமூச்சு விட செய்து விட்டார் அருண்!
அருணை நோக்கி “ஏங்க.. நீங்களும் நம்ம பொண்ணுங்கள நம்புங்க.
நாம அப்படியா வளர்த்துருக்கோம் அவங்கள, பேசாம நிலாவை வீட்டுக்குள்ள கூப்பிடுங்க. இந்த விநாயகத்தை அனுப்பிடுங்க.” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சட்டென்று அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் அந்த பெரிய தோட்டத்துக் கிணற்றில் குதித்தே விட்டார் அருண்!
அவருக்கு நீச்சல் வேறு தெரியாது! அய்யோ என்று பதறிப் போய் கத்தினார்கள் அனைவரும்!
அன்பு. செல்வம் நட்ராஜ் மூவரும் கிணற்றில் குதித்து மூழ்கிக் கொண்டிருந்த அவரைக் காப்பாற்றி மேலே கொண்டு வந்தார்கள்!
“ஏங்க இப்படி செஞ்சீங்க, இப்ப கூட உங்களுக்கு புரியலையா.. நீங்க செய்றது தப்புன்னு?”
“தப்பு தான்..நானே என் பொண்ணு மேலே தப்பா பழி சொன்ன பிறகு அவளுக்கு எப்படி இனி கல்யாணம் ஆகும்?” அருண் நொந்த படி சொன்னார்.
“நீங்க செத்துப் போய்ட்டா, எல்லாம் சரியாகிடும்மா?” இப்பவும் வளர்மதிக்கு கோபம் தான் வந்தது! அது நியாயமான கோபமே!
“இப்ப என்ன தான் சொல்ல வர்றீங்க?” வசந்தாவுக்கே இப்போது கோபம் வந்தது அருண் மேல்!
“என் பொண்ணுக்கு கல்யாணம் நடக்கணும் இப்பவே..” மீண்டும் அதிலேயே வந்து நின்றார் அருண்!
“யோவ்.. உன்னை.. அப்பன்னு கூட பார்க்க மாட்டேன்” வளர் பல்லைக் கடித்தாள்.
“இப்ப என்னப்பா . உங்களுக்கு என் கல்யாணம் நடக்கணும் அவ்வளவு தானே? சரி நான் பண்ணிக்கிறேன். அந்த விநாயகத்தையே பண்ணிக்கிறேன் போதுமா?” என்றாள் ஒரு முடிவுடன் வெண்ணிலா!
“முட்டாள்..முட்டாள்.. படிச்ச முட்டாள்” என்று அடிக்கவே வந்து விட்டாள் வளர்!
“இமோசனல் இடியட்..” ஜீவாவும் கத்தினான்!
“இவ்வளவு இடியட்டா நீ?” கோபமாக அவளை நோக்கி வந்தான்.
“நான் தான் மயூவோட வந்து முறைப்படி பொண்ணு கேக்க சொல்றேன் சொன்னேன் இல்ல அப்புறம் எதுக்கு இப்படி பேசுற?” ஜீவாவும் கோபமானான்.
“இல்ல ஜீவா சார்..எங்கப்பா, எப்ப எந்த முடிவை எப்படி எடுப்பாருன்னு சொல்ல முடியாது.
இவர நம்ப முடியாது. எப்பவும் காவல் காக்கவும் முடியாது. இப்ப அவருக்கு தேவை என்னோட கல்யாணம் நடக்கிறது!
தப்பே செஞ்சாலும் அவர் என்னோட அப்பா! அவர என்னால வெறுக்க முடியாது. எப்படியும் போகட்டும்னு விடவும் முடியாது சார்! ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க” என்றாள் வெண்ணிலா!
“உனக்கு உன் அப்பா பெரிசா இருக்கலாம், ஆனா எனக்கு நீ முக்கியம்! உன் வாழ்க்கை முக்கியம்! என் கண் முன்னே இப்படி உன்னோட வாழ்க்கை வீணா போறதை பாத்துட்டு இருக்க முடியாது” என்றான் ஜீவா.
“என்ன ஆளாளுக்கு என் அண்ணனைக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை வீணா போய்டும் வீணாப் போய்டும்னு சொல்றீங்க? எங்க அண்ணனுக்கு என்ன குறைச்சல்?” விநாயகத்தின் அல்லக்கை இப்போது இடையிட்டான்!
“ம்ம்.. யோக்கியாம்சம்! யோக்கியம்..அது தான் குறைச்சல்!” வளர் பல்லைக் கடிக்க.
“அப்ப இந்த யோக்கிய சுந்தரத்தைக் கல்யாணம் பண்ண சொல்லுங்க.. இப்பவே.. இந்த ஊருக்குப் போய்..நாட்டுக்குப் போய் இந்த கதையெல்லாம் வேணாம்” என்று அவன் சவால் விட்டான்.
எப்படியும் ஜீவா ஒத்துக்க மாட்டான் என்ற நினைப்பில்!
“கல்யாணம் பண்ணிக்கிறேன். அதுவும் இப்பவே.. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்க” என்றான் ஜீவா தீர்மானமாக!
அவனால் எப்படி அவன் வெண்ணிலாவை விட்டுக் கொடுக்க முடியும்? அதுவும் இந்த கயவனோடு! மனதுக்குள் வலிக்க தான் செய்தது மயூவை நினைத்து!
எத்தனையோ துயரங்கள், கஷ்டங்கள், சவால்கள், போராட்டங்கள்!
அத்தனையையும் எவ்வளவு போராடி கடந்தாள் வித்யா மயூரி!
ராகவ் இறந்த பின் ஒரு நல்லதுக்கு கூட போக வில்லை அவள்!
குலதெய்வம் கோவிலுக்குக் கூட!
கல்யாணம் என்று ஒன்றிற்கு அவள் போவதாக இருந்தால் அது மித்துவின் கல்யாணம் தான்!
குலதெய்வம் கோவிலுக்கு போவதாக இருந்தால், அது அவனின் முஹூர்த்தப் பத்திரிக்கையை வைத்து வழிப்பட தான் என்று இவ்வளவு வருடம் ஒரு விரதம் போல இருந்தாள் வித்யா!
அவளைப் பொறுத்தவரை அவ்வளவு போராடி, வாழ்க்கையோடு போரிட்டு ஜெயித்த அவளின் வாழ்க்கையில் ஒரு பட்டாபிஷேகம் தான் அவளின் மித்துவின் கல்யாணம்!
இப்படி இருக்கும் போது, விதியின் தீர்மானமோ வேறு மாதிரி இருந்தது!
அவளின் ஜீவனான ஜீவமித்திரனின் திருமணம் அவள் இல்லாமல் நடக்க அது வழி வகுத்தது!
ஜீவா கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னவுடன், அடுத்து நடக்க வேண்டியதைப் பார்க்க வேண்டியதாயிற்று நட்ராஜ், செல்வம் மற்றும் அன்பு மூவரும்!
அன்புவின் வீட்டில் தங்கிக் கொண்டான் ஜீவா!
அவனிடம் தயங்கியபடி வந்தாள் வான்மதி!
“ஜீவா சார். உங்க ஆதார் ஐடி அட்ரெஸ் ப்ரூப் எல்லாம் கொடுங்க. கோவில்ல கேக்கிறாங்க”
ஒன்றும் சொல்லாமல் அவற்றை எடுத்துக் கொடுத்தான் ஜீவா!
அவன் நண்பன் கல்யாணத்தில் துணை மாப்பிள்ளையாக அவன் அணிய வாங்கி வைத்திருந்த பட்டு வேஷ்டி சட்டை இப்போது அவனின் திருமண உடையாயிற்று!
என்ன அது மயூவின் செலக்சன் என்பது ஒன்றே திருப்தி!
அதே போல தான் வெண்ணிலாவுக்கும்!
அவள் மதியின் வளைகாப்பிற்கு என்று வாங்கி வந்த பட்டுப்புடவை!
கூடவே மதியால் இப்போது தைக்க முடியாது என்றே அவள் வாங்கி வந்திருந்த பொருத்தமான ரெடிமேட் ப்ளவுஸ்! அதுவும் கூட மயூவின் செலக்சன் தான்!
அதை அணிந்து கொண்டு இருவரும் மயூவிடம் மானசீகமாக மன்னிப்பு வேண்டி, ஆசியும் வேண்டி, அந்த வயலூர் முருகன் கோவிலில் வைத்து அவள் கழுத்தில் தாலிக் கட்டினான் ஜீவா!
பின்னால் கோவில் ரெக்கார்ட்களில் அவர்கள் திருமணம் பதிவு செய்யப்பட்டது!
சரியாக தாலி கட்டி முடித்த அடுத்த நிமிடம் மயூவிடமிருந்து போன்!
“என்ன கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?” அவள் ஜீவாவின் நண்பன் கல்யாணத்தைப் பற்றி கேட்டாள்!
“ம்ம்.நல்லபடியா முடிஞ்சது, நீ இருந்து ஆசிர்வாதம் பண்ணாத குறை தான்!” என்றான் ஜீவா அழுகையை அடக்கியபடி!
“மணமக்களுக்கு என் மனமார்ந்த ஆசிகள்! வாழ்த்துக்கள்! “மயூ சிரித்தபடி சொன்னாள்! “நீயே இத அவன் கிட்ட சொல்லிடு!”
“சரிம்மா..” என்றான் ஜீவா!
“என்னடா இது புதுசா.. அம்மான்னு எல்லாம் கூப்பிடறே?” மயூ சிரிக்க,
“சும்மா தான்! அப்படி கூப்பிடனும்னு தோணுச்சு!” என்றான் ஜீவா!
அருகில் நின்று கொண்டிருந்த வெண்ணிலாவோ தாங்க முடியாத குற்ற உணர்ச்சியில் இருந்தாள்!
ஜீவாவின் கல்யாணம் குறித்த மயூவின் கனவுகளை அவளும் நன்றாகவே அறிவாள்!
எப்படி எப்படியோ நடக்க வேண்டிய ஜீவாவின் திருமணம் இப்படி நடந்து விட்டதே!
அவளும் அவளைக் காதலித்தாள் என்றாலும் கூட, அவனோடயே கல்யாணமும் ஆகி விட்டதை எண்ணி அவளால் சந்தோசமாக முடியவில்லை!
ஏதோ உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணி விட்ட எண்ணம்! அவளை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது!
மயூவுக்கு தெரிந்து, அவள் சம்மதத்துடன் நடந்து இருந்தால் அது வேறு!
ஆனால் இப்படி அவளுக்கே தெரியாமல்.. வெண்ணிலாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை!
அங்கே ஜீவாவும் வெளிப்படையாக அழ வில்லை என்றாலும் உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருந்தான்!
எப்படி மயூவிடம் இதை சொல்லுவது! அவளால் இந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா? வாழ்க்கையில் அவளுக்கென்று இருக்கும் ஒரே சந்தோசத்தையும் கெடுத்தாயிற்று!
ஆனால் நிலா! அவளையும் அப்படியே விட்டு விட முடியாதே! விட்டு விட்டு வந்தாலும் மயூ நிச்சயம் கோபப்பட தான் செய்வாள்!
என் செல்ல அம்மா, உன் மித்துவைப் புரிஞ்சுப்பன்னு நினைக்கிறேன் என்று நினைத்துக் கொண்டான் ஜீவா!
அன்று இரவு அவர்களுக்கு இப்படியே கழிந்து விட மறுநாளே சென்னை கிளம்பி விட்டார்கள் இருவரும்!
போகும் போது வளர்மதி, தனியே வெண்ணிலாவைக் கூப்பிட்டு பேசினாள்.
“என்னால இப்ப கூட நீ செஞ்சிருக்கிறத மன்னிக்கவே முடியல. போயும் போயும் உன் உதவாக்கரை அப்பா மேலே நீ வச்சுருக்க பாசத்துக்கு, மயூம்மாவின் கனவில் மண்ணை அள்ளிப் போட்டுட்ட!
அவ்வளவு ஓர்த்தா உன் அப்பன்! தன் வாழ்க்கையையே ஒரு போராட்டமா நடத்தி, கஷ்டப் பட்டு வளர்த்து ஆளாக்கின ஒரு தாயின் கனவு அது!
அதைப் போய் கெடுத்திட்ட நீ!
ஜீவா சாரை அந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்ட! அவர் பாவம் உன் வாழ்க்கை வீணாப் போய்டும்னு அவர் அம்மாவுக்கு அநியாயம் செய்துட்டு இப்ப குற்ற உணர்ச்சியில தவிக்கிறார்!
இனி ஒண்ணும் செய்ய முடியாது, இது தான் விதி போல!
ஆனா ஒண்ணு, இப்படிப்பட்ட ஜீவா சாருக்கு நீ பொண்டாட்டியா மட்டுமில்ல, காலுக்கு செருப்பா கூட இருக்கலாம்! பார்த்து அனுசரிச்சு நடந்துக்கோ” என்று சொல்லி அனுப்பினாள்.
இது வெண்ணிலாவின் குற்ற உணர்ச்சியை மேலும் அதிகப்படுத்தி, மயும்மாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்ற பயத்தை, துக்கத்தை ஏற்படுத்தி அவளை அழுத வண்ணமே பயணம் செய்ய வைத்தது!
வரும் போது தூக்கத்தில் அவன் மேல் சாய்ந்து கொண்டு காரில் பயணித்த வெண்ணிலா, இப்போது திரும்பிப் போகும் போது குற்ற உணர்ச்சி தந்த துக்கத்தில் அழுதப்படியே ஜீவாவின் மேல் சாய்ந்து பயணம் செய்தாள்!
அவளை தோளோடு ஆதரவாக அணைத்தப் படி சென்றான் ஜீவா!
மயூ என்ன சொல்வாள்?
error: Content is protected !!