Skip to content
Post Views: 2,699
பூவிடைப் பனித்துளிகள்
அத்தியாயம் 8
ஆனால், பரணியின் மனதில் உண்டான அதே கேள்விகளும் எண்ணங்களும் திவ்யாவிற்கும் தோன்றியிருந்தன. திவ்யா வகுப்பின் வாசலில் சில நிமிடம் நின்றாள் தான். ஆனால், வகுப்பைக் கடக்கும் வேறு பேராசிரியர்களும் மாணவர்களும், ஒருவிதமாக அவளைப் பார்ப்பதாகத் தோன்ற அவளுக்கு அங்கே நிற்கப் பிடிக்கவில்லை. வழக்கமாக வகுப்பில் இருந்து மாணவர்களை அவ்வளவு எளிதில் எந்த பேராசிரியரும் வகுப்பை விட்டு அனுப்பமாட்டார்கள்.
சேட்டை செய்தாலும், ஏன் பாட வேளையில் உணவு உட்கொள்ளும் மாணவர்களைக் கூட எழுந்து நிற்கவைத்து திட்டி இருக்கையில் அமரவைத்து விடுவார்களே அன்றி, வெளியே அனுப்புவது அரிது. அதிலும் திவ்யாவிற்கு இது முதல் முறை.
Advertisement
அங்கே நிற்கப் பிடிக்காமல், மெல்ல சென்று லைப்ரரியின் வாயில் படிகளில் அமர்ந்தாள். தன் மஞ்சள் பூக்களால் பூமியை மூட எத்தனித்த ஒரு மரம் காற்றில் மெல்ல அசைந்தாட, மர நிழலின் குளுமையில் திவ்யாவின் மனம் சாந்தமாயிற்று.
பரணியைப் பற்றித் தான் அவளும் சிந்தித்துக் கொண்டிருந்தாள். அவன் கண்களைச் சந்தித்தபோது, அவளுக்குள் எழுந்த உணர்வலைகள் புதிது. நெஞ்சின் படபடப்பை அடக்கி, இதழில் புன்னகை சிந்திவிடாமல் அவன் முகம் பார்க்க அவள் பெரிதும் சிரமப்பட்டாள். எங்கே வெட்கப்பட்டு, தலை கவிழ்ந்து விடுவாளோ என்று நிறைய அச்சம் கொண்டாள்.
‘உன் மனசு எனக்கு புரியுது பரணி. உன் முகத்தைப் பார்க்காம நான் நிக்கறதை உன்னால தாங்க முடியலை. ஆனா, நான் பார்த்தேன்னா, உன்னால தாங்க முடியாது. அதான் உன்னைப் பார்க்காம வேற எங்கையோ பார்த்துட்டு அமைதியா இருந்துடுறேன். இது உனக்கு புரியலை. என் முகத்தை தவிர வேற எங்கையுமே உன் கண்ணு போகலை. நீ எப்படி க்ளாஸ் எடுப்ப பரணி? உனக்குத் தான் அசிங்கமா போய்டும். என் மனசோட கண்ட்ரோல் என்கிட்ட இருக்கு பரணி. கொஞ்சம் தடுமாறினாலும், என் அறிவு சொல்றதை என் மனசு கேட்கும்.’ என்று ஆழ்ந்த பெருமூச்சோடு எண்ணிக் கொண்டாள் திவ்யா.
Advertisement
யாருமற்ற அந்த ஏகாந்த மதிய வேளையில் அவள் மனம் பலவிதமாக எண்ணங்கள் கொண்டது. ‘பரணிய நீ விரும்புறயா திவி? அவன் பார்க்கறப்போ உன் மனசில தோன்றும் சந்தோஷமும் சின்ன சிரிப்பும், அவன் மனசில நினைக்கிறதை நீ புரிஞ்சுகுக்கற விதமும், எல்லாமே அவன்கிட்ட உன் மனசு போய்டுச்சுன்னு உனக்கு காட்டுது திவி.’ என்று உள்மனதின் ஆசைகளை மெல்ல வெளியே கொணர்ந்து அசைபோட்டது.
Advertisement
அவள் உள்ளம் சொன்ன விஷயங்களை திவ்யாவும் மறுக்கவில்லை. தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதில் என்ன பயன் என்ற புரிதல் கொண்டிருந்த திவ்யா, அடுத்து என்னவென்றே யோசித்தாள். ‘இப்போ மூனாவது வருஷம் தான். இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு. காலேஜ் முடிக்கிறப்போ வேலை கிடைக்கணும். அப்பா, அம்மாவை சந்தோஷப்படுத்தணும்னு கனவு இருக்கு. இவனை காதலிக்கிறதால இதெல்லாம் தடைபடுமா? முழுக்க ஒன்னுமில்லாம ஆகிடாது தான். ஆனா அவனும் காலேஜ்ல வேலை பார்க்கிறான். என்னதான் சூப்பர் சீனியரா இருந்தாலும் இப்போ அவன் ஸ்டாஃப்.
ஒரு லெக்சரர், ஸ்டூடெண்டை விரும்புறது வெளிய தெரிஞ்சா கண்டிப்பா அவனுக்கு வேலை போய்டும். அதுவுமில்லாம, இப்போதைக்கு அவன் பார்க்கிறதும் லேசா சிரிக்கிறதும், இதோ இன்னைக்கு மாதிரி நான் பார்க்காததை நினைச்சு உரிமையா கோபப்பட்டதும் பிடிச்சிருக்குதான்னாலும், இதை மேல வளர்த்துறது சரியா படலை.
என்னோட கனவுகள், வேலை இதெல்லாம் தடைபடும். வீட்டுல லவ் மேரேஜ்லாம் ஒத்துக்கமாட்டாங்க. ரொம்ப கஷ்டப்படணும். எல்லாரையும் சேர்ந்து கஷ்டப்பட வைக்கணும். பரணிக்கு வேலை போயிடும். அப்பா என் மேல வச்சிருக்க நம்பிக்கை ஸ்பாயில் ஆகிடும். அக்கா வீட்டுல அவளுக்கு அவமானமா இருக்கும். இப்படி நிறைய சிக்கல் இருக்கு. சோ, இந்த விஷயம் நடந்தா எல்லாரும் கஷ்டப்படணும், பரணி உட்பட. அதனால இதை பெருசா வளரவிடக் கூடாது திவி.’ என்று அழகாய் ஆராய்ந்து அமைதியாக முடிவெடுத்திருந்தாள்.
Advertisement
பரணியைப் பார்க்கக் கூடாது, அவன் மனதில் இந்த எண்ணத்தை வளரவிடக் கூடாது என்று நினைத்தபோதே, அவள் நெஞ்சம் வலித்தது. ஆனாலும் தன் மனதை தன் அறிவின் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்திய திவ்யா, ‘அவனுக்கு வேலை போய்டும். டிசிப்ளினரி ஆக்ஷன் எடுப்பாங்க. என்னால அவமானம் தான் மிஞ்சும்.’ என்ற எண்ணத்தை வலுவாக மனதில் பதித்துக் கொண்டாள்.
இதற்குள், மதிய இடைவேளைக்கான மணி அடிக்கத் துவங்க, மாணவர்கள் மெஸ் நோக்கி நகரத் துவங்கியிருந்தனர். இவள் தோழிகள் நர்மதாவும் கீர்த்தனாவும், இவளைத் தேடிக் கொண்டு லைப்ரரி நோக்கி வந்திருக்க, இவள் அமர்ந்திருந்த படியில் இருந்து எழுந்து அவர்களிடம் சென்றாள்.
“ஆர் யூ ஓகேடி?” என்று பாசமாக வினவிய நர்மதாவைப் பார்த்து மையமாகப் புன்னகைத்தாள்.
“சாருக்கு இன்னைக்கு என்னவோ ஆகிடுச்சுடி. இப்படிலாம் யூஸ்வலா அவர் கோபப்பட்டதே இல்லை. ஏன், உன் மேல அவருக்கு அவ்வளோ கோபம் வந்துச்சோ?” என்றாள் கீர்த்தனா.
“விடு கீர், அமாவாசை வேற நெருங்குதில்ல. அதனால மூளை குழம்பியிருக்கும்.” என்று சமாளித்தாள் திவ்யா.
“சார் உன்னை வெளிய அனுப்பினது நினைச்சு ஃபீல் பண்ணார்டி. நீ போனதுக்கு அப்புறம் அவர் க்ளாஸே எடுக்கலை. புக்கை ரீட் பண்ண சொல்லிட்டு அமைதியா நின்னுகிட்டார். அடிக்கடி வாசல் பக்கமா வேற பார்த்துட்டே இருந்தார்.” என்றாள் நர்மதா.
பரணியின் நடவடிக்கையில் தெரிந்த வித்தியாசமும் அவன் படபடப்பும், அப்பட்டமாக வெளியே அனைவருக்கும் புரியும்படி இருந்திருக்கிறது. தனக்காக தவித்தானே என்ற எண்ணம் மனதை மெழுகாக உருக்கத் துவங்க, சில நொடி சஞ்சலம் கொண்ட போதும், மீண்டும் தன் முடிவை உறுதியாக்கிக் கொண்டாள்.
“நீ ஒரு சாரி சொல்லியிருக்கலாம் திவ்யா. அப்படி என்ன ஒரு ஈகோ உனக்கு?” என்று சடைத்துக் கொண்டாள் நர்மதா.
“சாரி சொன்னா மட்டும்? அப்படியே சரிம்மா உட்காருன்னு சொல்லியிருப்பாராக்கும் உங்க சார்? விடுடி நர்மு, அவளே டென்ஷன்ல இருக்கா. திரும்பத் திரும்ப அதையே பேசிகிட்டு.” என்று நர்மதாவின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள் கீர்த்தனா.
பேசிக் கொண்டே மூவரும் மெஸ்ஸிற்கு வந்துவிட்டிருக்க, இவர்கள் மெஸ்ஸில் கை கழுவ நின்றிருந்த சமயம், பரணியும் கை கழுவ அங்கே வந்தான்.
பரணியைக் கண்டதும், “குட் நூன் சார்!” என்று நர்மதா படபடப்புடன் முகமன் கூற, அதை தலையசைத்து ஏற்றுக் கொண்டவன் பார்வை திவ்யாவிடமே நிலைத்தது. அவன் என்னவோ சொல்ல எத்தனிப்பதும் தடுமாறுவதும் தெரிந்து, திவ்யா தலையைத் தூக்காமல் அங்கிருந்து வேகவேகமாக அகன்றாள்.
‘எங்கே அவனைப் பார்த்தால், அவனாக வலுவில் வந்து அவளிடம் சாரி சொல்லிவிடப் போகிறானோ?’ என்ற அச்சம் பிடித்துக் கொண்டது.
‘ஏதோ சொல்ல வந்து சொல்ல முடியாம தடுமாறுறான். இவளுக முன்னாடி சாரி கீரின்னு உளறி வைக்கப் போறான். இவளுக க்ளாஸ்ல எல்லார்கிட்டயும் சொல்லிட்டா, என் பேரு அவ்வளோ தான். இவளுக ஓட்டியே சாவடிக்கறது மட்டுமில்லாம, ரெண்டு பேர் இமேஜும் டேமேஜ் ஆகிடும்.’ என்று யோசித்த திவ்யா, அவன் பேசுவதற்கு வாய்ப்பளிக்காமல், வேகமாக அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.
திட்டு வாங்கிய அவளை விடவும், அவளைத் திட்டிவிட்ட பரணியின் நிலைமை தான் படுமோசமாக இருந்தது. வகுப்பை விட்டு திவ்யா சென்றுவிட, அதற்கு மேல் பாடம் நடத்தும் மனநிலை அவனுக்கு கிஞ்சித்தும் இல்லாமல் போக, “எல்லாரும் இந்த கான்செப்டை ரீட் பண்ணுங்க.” என்று கூறிவிட்டு அமைதியாகிப் போனான்.
கைகளைக் கட்டிக் கொண்டு முன்னும் பின்னும் வகுப்பில் நடக்கலானான். தான் செய்தது தவறு என்று மனதில் நன்றாக உறைத்தது. ‘அந்த பொண்ணு உன்னைப் பார்க்கலைன்னா உனக்கு இவ்வளோ கோபம் வரணுமாடா? சின்ன பொண்ணுடா அவ, உனக்கு அவளை பிடிச்சிருக்குன்னா, அவளுக்கும் உன்னைப் பிடிக்கணுமா என்ன? நீ பார்த்தா அவ உன்னை பார்க்கணுமா? பொறுக்கி மாதிரி பிஹேவ் பண்ணியிருக்கடா நீ. அந்த பொண்ணு உன்னை என்னன்னு நினைப்பா? மத்த ஸ்டூடெண்ட்ஸ் என்னன்னு நினைப்பாங்க?
தேவையில்லாம நீயும் டென்ஷன் ஆகி, அந்த பொண்ணையும் திட்டி வெளிய அனுப்பியிருக்க. பாவம், நல்லா படிக்கற பொண்ணு வேற. சாரி கேளு பரணி, இல்லைன்னா உன்னால நிம்மதியா தூங்கவே முடியாதுடா.’ என்று அவன் மனம் பலமாக அவனைத் திட்டியிருந்தது. தான் செய்தது தவறு என்று பரணிக்கும் புரிந்து போக, திவ்யாவை அடுத்த முறை பார்க்கும்போது அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று மனம் சொன்னது.
அன்றைய மதியமே உணவை முடித்துக் கொண்டு மெஸ்ஸில் கை கழுவ நின்றிருக்க, அவனுக்கு முன்னால் நின்றிருந்த திவ்யாவைக் கண்டதும், எந்த இடமென்றும் யோசிக்காமல் மன்னிப்பு கேட்க எண்ணம் கொண்டான். ஆனால் அவளோ, இவன் அருகே இருந்து சட்டென நகர்ந்து, தலையைத் தூக்காமல் வேகமாக சென்று விட்டிருந்தாள்.
அவள் பார்வை எவ்வளவு தாக்குதல் நடத்தியதோ அதை விடவும், திவ்யாவின் மெளனம் அவனை அதிகமாக அலைக்கழித்தது. அவள் பின்னூடே செல் என்று கட்டளையிட்ட மனதைக் கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டான்.
அன்றைக்கு காலையில் இருந்த இனிய மனநிலை வடிந்து விட்டிருக்க, அங்கே நிசப்தம் குடிகொண்டது.
மாலையில் கல்லூரி முடிந்து ஆடவர் விடுதி நோக்கி நடக்கும் தருவாயில், சக்திவேல் இவனுடன் சேர்ந்து கொண்டான். ஆனால் அவனாக எதுவும் பேசாது பரணியுடன் நடக்கலானான். சக்திவேலின் மெளனம் கூட பரணியைச் சுட்டது.
“ரொம்ப திட்டிட்டேன் இல்லடா?” என்று அவனாகவே சக்திவேலிடம் வினவினான்.
“ம்ம்ம், ஆமாண்ணா.” என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான் சக்தி. அது மேலும் சங்கடம் கொடுத்தது.
“என்னன்னே தெரியலைடா, டக்குன்னு கோபப்பட்டுட்டேன்.”
“விடுங்க ண்ணா, இதைவிட கோவமாலாம் எவ்ளோவோ ப்ரொஃபசர்ஸ் பேசறாங்க. தண்டம், எரும மேய்க்கத் தான் லாயக்கு, உருப்பட மாட்டன்னு சாபம் குடுக்கற மாதிரி கூட பேசியிருக்காங்க.”
“இல்லடா… அந்த பொண்ணை நான் வெளிய போக சொல்லியிருக்க கூடாது. ஆன்சர் சொல்லாத பசங்களையே ரெண்டு வார்த்தை திட்டிட்டு உட்கார சொல்லிடுவேன். என்னாச்சுன்னு எனக்கே தெரியலைடா. நான் நடத்துறதை கவனிக்காம திமிரா உட்கார்ந்திருந்த மாதிரி இருந்துச்சு. கேட்ட கேள்விக்கும் தெனாவெட்டா பதில் சொன்னா. அதனால கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.” என்று முழுவதுமாக மனதை மறைத்து, தன் மீது தவறில்லை என்பது போலவே பேசலானான்.
“சரி விடுங்க ண்ணா. அந்த பொண்ணே இவ்ளோ ஃபீல் பண்ணாது. நீங்க ஏன் இவ்ளோ யோசிக்கிறீங்க? லூசா விடுங்க.” என்று சமாதானமாகப் பேசினான் சக்தி. ஆனாலும் பரணிக்குத் தான் நெஞ்சு ஆறவில்லை. ‘ஐய்யகோ! சரியான காரணமில்லாமல் திட்டிட்டேனே…’ என்று மனம் கிடந்து அடித்துக் கொண்டது.
“டேய் சக்தி, நான் வேணா நாளைக்கு அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லிடவா? ஏதோ டென்ஷனை உன் மேல காட்டிட்டேன்னு சொல்லி மன்னிப்பு கேட்டுட்டுறேன்டா.” என்று பரணி புலம்ப, அவனை விசித்திரமாகப் பார்த்தான் சக்திவேல்.
“ண்ணா, நீங்க ஸ்டாஃப்னு அடிக்கடி மறந்துடுறீங்க. சீனியர் பையன்ங்கிற நினைப்புலையே சுத்திட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். எந்த லெக்சரராவது ஸ்டூடெண்ட் கிட்ட சாரி கேட்கணும்னு நினைப்பாங்களா? சும்மா இருங்க ண்ணா, காமெடி பண்ணாதீங்க.” என்றான் சக்திவேல். ஆனால் பரணியின் பேச்சில் சிரிப்பும் விளையாட்டுத்தனமும் இல்லை என்று புரிய, சக்தி மெளனமானான்.
அமைதியாக உடன் நடந்த சக்தி சில நிமிடங்கள் கழித்து, “ண்ணா, நிஜமாவே அவகிட்ட சாரி கேட்கணும்னு நினைக்குறீங்களா?” என்று வினவினான். பரணி, ஆமாம் என்று திடமாக தலையசைக்க, அவனை ஆச்சரியத்துடன் ஏறிட்ட சக்திவேல், “அண்ணா, நீங்க சாரி கேட்கணும்னு அவசியம் இல்ல. ஆனா, உங்களுக்கு சாரி கேட்டா நிம்மதியா இருக்கும்னு தோனுது போல.” என்று கூற, இதற்கும் பரணி ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“அப்போ நான் சொல்லற மாதிரி கேளுங்க. க்ளாஸ்லலாம் சாரி சொல்லாதீங்க. யாராவது பார்த்தா ரெண்டு பேருக்கும் வம்பு. அவ நம்பர் இருக்குல்ல, பேசாம கால் பண்ணி பேசிடுங்க. அதான் பெஸ்ட்.”
“இல்லடா, நேர்ல சொல்லணும்டா. ஃபோன்ல சொல்லக் கூடாது, தப்பு. அவ மனசை சங்கடப்படுத்திட்டேன். ஃபோன்ல சொன்னா அவ என்ன நினைக்கிறானு தெரிஞ்சுக்க முடியாது. எனக்கு நிம்மதியாவும் இருக்காது.”
“அப்படி சொல்றீங்களா? சரி, ஒரு நிமிஷம் இருங்கண்ணா.” என்று சொல்லிய சக்தி, தன் கைப்பேசியை எடுத்துக் கொண்டு அவனிடமிருந்து சற்றே விலகிச் சென்றான். திவ்யாவிடம் தான் பேசுகிறான் என்று பரணிக்கு விளங்கிற்று.
மறுமுனையில் திவ்யா என்ன பேசினாளோ? பரணி தன் முகத்தில் படர்ந்திருந்த ஆர்வத்தை மறைக்க முற்படாமல் சக்திவேலைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ண்ணா ஆறு முப்பதுக்கு ஸ்டேஷனரி ஸ்டோர்கிட்ட வர சொல்லியிருக்கேன். வந்துருவா, நேர்ல பேசிக்கலாம்.” என்று பெரிய மனித தோரணையில் கூறினான். கைக்கடிகாரத்தில் மணி ஐந்து என்று காட்டியது.
‘ஏன், இப்பவே வருவதற்கு என்னவாம்? அதென்ன ஆறு முப்பது என்று நல்ல நேரம் பார்த்து வருவது?’ என்று சிறிய உறுத்தல் தோன்றினாலும், போதையூட்டும் அவள் விழிகளை சந்திக்க தயாரானான் பரணி.
சொன்னது போலவே ஆறு முப்பது மணிக்கு திவ்யா விடுதியில் இருந்து புறப்பட்டாள். அணிந்திருந்த இரவு உடையைக் கலைந்து சுடிதார் அணிந்த திவ்யாவிடம் “ஏ! எங்கடி போற?” என்று நர்மதா வினவ, “ஸ்டேஷனரி வரைக்கும் போயிட்டு வர்றேன். ஒரு ஜெராக்ஸ் எடுக்கணும்.” என்று சொல்ல,
அவள், ‘இரு, நானும் வர்றேன்.’ என்று கிளம்பும் முன்னர், அவசரமாக அறையில் இருந்து வெளிப்பட்டுவிட்டாள்.
பேரிரைச்சல் போட்ட மனதை கைகளை வைத்து ஆற்றிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த திவ்யா, ‘சக்திவேலை விட்டு கால் பண்ண சொல்லியிருக்கணுமா என்ன? அவன் நாளைக்கு க்ளாஸ் முழுக்க சொல்லிடுவானே? சொன்னா சொல்லட்டுமே… என்கிட்ட நேர்ல சாரி சொல்லணும்னு தானே வர சொல்லியிருக்காங்க. ஸ்டூடெண்கிட்ட சாரி கேட்டார்ங்கிற விஷயம் வெளிய தெரிஞ்சா அவரோட மானம்தான் போகும்.’ என்று நீரோடையாக மனதை தெளிவுபடுத்திக் கொண்டு விடுதியை விட்டு வெளிப்பட்டாள்.
அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை, இந்த நீரோடை மனது, சிறிது நேரத்தில் காட்டாற்று வெள்ளமென மாறி ஆர்ப்பரிக்கப் போகிறதென்று. யாரின் கவனத்தையும் அதிகம் கவராத வண்ணம் கல்லூரியின் கேம்பஸின் உள்ளேயே அமைந்திருந்த ஸ்டேஷனரி கடைக்கு வந்தாள்.
error: Content is protected !!