Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 16.2

“நல்ல புள்ள தான் மகாமா… ரெண்டு குடும்பத்துக்கும் ஒத்து வருமா?”

“அவங்க வீடு அப்டி எல்லாம் இல்லங்க. எதார்த்தமான மனுசங்க. குறை சொல்றதுக்கு ஒண்ணுமே இல்ல. சீர் சனத்தை பத்தி யோசிக்கிறீங்கனா அந்த பயமும் தேவையில்லை. அவரும் டீச்சர் தானே ஒரே பொம்பள புள்ள செய்யாம இருக்க மாட்டாங்க” பக்குவமாக எடுத்துரைத்தார் மஹாலக்ஷ்மி.

“ச்சீ ச்சீ அதெல்லாம் யோசிக்கல ம்மா… பொண்ணு நம்ப குடும்பத்துக்கு ஒத்து வருமா? அம்மா இருக்காங்க, சுபத்ரா இருக்கா, ஒரே ஆம்பள புள்ள. மொத்த குடும்ப பொறுப்பும் அவகிட்ட தான் போகும். அதெல்லாம் தாங்கிடுமா, ஏத்துக்குமா… எல்லாமே இருக்குல்ல? விளையாட்டு குணம் தான் அதிகம் அந்த பொண்ணுக்கு, ஒரு குடும்ப பொறுப்ப பாத்துக்குறது ஒன்னும் அவ்ளோ ஈஸியானது இல்ல ம்மா” குடும்ப தலைவராய் தன் நிலையிலிருந்து யோசித்தும் தவறாக படவில்லை.

“முன்ன பின்ன தெரியாத பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தாலும் இதெல்லாம் யோசிக்க தான செய்விங்க… ஆனா வைஷ்ணவி நம்ம கண்ணு முன்னாடி இருக்க பொண்ணுங்க. குறும்பு இருக்கும், அதே நேரம் பொறுப்பும் நாளடைவுல வந்துடும். நம்ம சுபி கூட நல்லா தான் பேசுது, அத்தைகிட்ட சரிக்கு சரி நின்னு வாயாடுது. அவங்கள புடிக்கலைனா இந்நேரம் யாரும் அவங்ககிட்ட பேச கூட மாட்டாங்க. அத்தைக்கும் அவளை புடிக்கும்” என்றவர் மேலும்,



Advertisement

“ஒருத்தருக்கு பொறுப்பு இல்ல இல்லனு சொல்லி அவங்களோட திறமையை வெளி காட்டுறதுக்கு நாம இடமே குடுக்குறது இல்லங்க”

“அத டெஸ்ட் பண்ண என் பையன் வாழ்க்கை தான் கெடைச்சதா மகா?” – சுப்பிரமணி

“எங்க வேலைக்கு போனா நமக்கு ஒரு வேலை குடுத்து அத பொறுப்பா பாத்துக்க சொல்லிடுவாங்களோனு பயந்து வீட்டுக்குலையே பதுங்கி இருக்க உங்க பொண்ணும் அதே மாதிரி தான் இருக்காங்க. உங்க பொண்ணுக்கு ஒரு நியாயம் அந்த பொண்ணுக்கு ஒரு நியாயமா? ஏன் என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? வைஷ்ணவிய என் காலம் முடியிறதுக்குள்ள என்னால பொறுப்பான மருமகளா மாத்த முடியும்”

Advertisement

மனைவியின் உறுதியில் சற்றே மனம் இறங்கி வந்தார் சுப்பிரமணி ஆனாலும், “கார்த்தி என்ன நினைக்கிறானோ தெரியலையே மா. அவன் முடிவு தானே இதுல ரொம்ப முக்கியம்?”

Advertisement

“உங்க பையன் உங்கள மீறி மறுத்து பேச மாட்டான்ங்க” மருமகள் மகனிடம் பேசியதை எல்லாம் சூசகமாக மறைத்துவிட்டார் மஹாலக்ஷ்மி.

பெருமூச்சு விட்டு, “சரி மகா, எதுக்கும் அவங்க வீட்டுல ஒரு வார்த்தை இன்னைக்கு சாய்ந்தரம் பேசிட்டு கார்த்திக்கிட்ட பேசலாம்” என மனைவியின் கையை எடுத்து ஆராய்ந்தார் காயத்தை.

ஏங்க… நாம ஏன் நாமளா வைஷ்ணவியை பொண்ணு கேட்டு போற மாதிரி போக கூடாது?”

Advertisement

கணவன் கேள்வியாய் தன்னை பார்க்கவும், “இல்ல என்ன தான் இருந்தாலும் நம்ம வீட்டுக்கு மருமகளா வர போற பொண்ணு. அவளே வந்து இப்டி எல்லாம் பேசுனது தெரிஞ்சா ஒருத்தர் மாதிரி ஒருத்தர் ஈஸியா எடுத்துக்க மாட்டாங்க, அவ மனசு நோகுறே மாதிரி பேசுனா கஷ்டம் நம்ம எல்லாருக்கும் தான். அதான் அத்தைக்கு கூட தெரிய வேணாம்”

மனைவி சொல்வதிலும் நியாயம் இருக்க, “என் மகா சொன்னா நான் கேக்காம இருப்பேனா” என சிரிப்போடு சம்மதம் தெரிவித்த கணவரை பார்த்து தலை குனிந்து புன்னகைத்தார் மஹாலக்ஷ்மி.

“என்ன இன்னைக்கு ஸ்கூல் இல்லையா போன ஒரு மணி நேரத்துலையே வந்துட்டீங்க?”

“இருக்கு ம்மா… கொஞ்சம் தலை வலி இருந்தது அதான் லீவு போட்டு வந்தேன். வந்தது கூட ஒரு விதத்துல நல்லதா போச்சு. எத நெனச்சு தலை வலி வந்ததோ அந்த பிரச்சனையே சரியாகிடுச்சு. அம்மாகிட்ட நானே பேசுறேன் கோவில்ல இருந்து வந்ததும்”

மனைவியின் கையை வருடியவர், “ரொம்ப வலிக்கித்தாடி? எதுக்கும் ஒரு டி.டி இன்ஜெக்ஷன் போட்டுட்டு வரலாமா?”

அந்த தம்பதி இதுவரை ஒருவரை பார்த்து ஒருவர் அவர்கள் உணர்வுக்கு பெயர் இட்டதில்லை, ஆனால் தாம்பத்தியத்தின் அழகு கணவனின் அன்பு பார்வையில் மொத்தமாய் கொட்டிக்கிடக்கும், மனைவியின் அக்கரையில் கணவன் எழவே முடியாமல் தினம் தினம் ஆழத்திற்கு சென்றிருந்தார்.

சிரிப்போடு, “இதெல்லாம் ஒரு காயமா? சரியாகிடும், விடுங்க” கணவனை சமாதானம் செய்து மருமகளிடம் இன்ப செய்தியை பகிருந்தவர் மாலை அவள் வீட்டிற்கு வருவதாக வாக்கையும் கொடுத்து அவளை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.

மாலை மணி ஐந்து தாண்டி இருந்த நேரம் உறக்கத்திலிருந்து உடல் முழுதும் வேர்க்க எழுந்த வைஷ்ணவி முகத்தை கூட கழுவாமல் அரக்க பறக்க அறையை விட்டு வெளியில் வந்து கார்த்தியின் அறையை பார்த்துக்கொண்டே படிகளில் இறங்கியவள் நேராக சென்றது அவன் இல்லத்திற்கு தான்.

அப்பொழுது தான் வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த மஹாலக்ஷ்மி அவளின் கோலம் கண்டு பயந்தேவிட்டார், “என்னடா இப்டி வேர்த்துருக்கு?” சேலை முந்தானை கொண்டு அவள் முகத்தில் படர்ந்திருந்த வியர்வையை துடைத்தவரின் கையை பிடித்து நிறுத்தினாள்.

“அத்தை உங்க பையன்னுக்கு கால் பண்ணுங்க. எப்படி இருக்காங்கனு கேளுங்க”

“காலைல தான்டா பேசுனான். நல்லா இருக்கான். நீ ஏன் இவ்ளோ பதட்டத்தோட இருக்க?” அப்பட்டமான அதிர்ச்சி அவளிடம்.

இந்த வைஷ்ணவியை இதுவரை அவர் பார்த்ததே இல்லை. “என… எனக்கு கெட்ட கனவு த்தை. ஏதோ இறந்தவங்கள… ப்ச்… ப்ளீஸ் த்தை எனக்காக அவர்கிட்ட பேசுங்க” விட்டால் அழுதுவிடுவாள் என்னும் அளவிற்கு முகம் வாடி கண்கள் எல்லாம் சிவந்திருந்தது.

அவள் கூறிய கனவை கேட்டவருக்கு கூட உள்ளம் பதறியது, “சரி இரு” என்றவர் கணவரிடம் மகனுக்கு வாட்ஸ்ஆப் மூலம் அழைத்து தர கூற மனைவியின் பதட்டத்தை பார்த்து அவரும் பின் வந்தார்.

நல்ல வேலையாக அவன் காலை, மாலை மட்டுமே வேலை பார்ப்பதாக இருக்க இந்நேரம் அங்கு புதிதாய் கிடைத்த நண்பர்களுடன் பேசி மகிழ்ச்சிருந்தவன் அன்னை அழைத்ததும் உடனே அதே சிரிப்போடு அழைப்பை ஏற்றான்.

மஹாலக்ஷ்மி ஸ்பீக்கரில் போட்டிருக்க, “சொல்லுங்க ம்மா” அவன் குரலில் இருந்த சிரிப்பே அவனின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் கூற வைஷ்ணவி கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர் கண்ணிலிருந்து தப்பி ஓடியது நிம்மதியில்.

அவள் கண்ட கனவு அப்படி.

கட்டிடம் நடக்கும் இடமாக தான் தெரிந்தது, அங்கிருந்து கருகிய நிலையில் ஒரு உடலை ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றுவது போலவும் அங்கு தான் நின்று கண்ணீரோடு பார்ப்பது போலவும் தெரிய, அவனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்ற பயம் உள்ளத்தில் தொற்றிக்கொள்ள பயத்துடனே வந்தது. இப்பொழுது அவன் குரல், அதுவும் சிரிப்போடு கேட்கவும் தான் நிம்மதியாக இருந்தது.

“ஒன்னுமில்ல ப்பா. சாப்டியான்னு கேக்க தான் கூப்ட்டேன்”

“இப்போ தான் ம்மா சாப்பிட்டு முடிச்சு வந்தேன்” – கார்த்தி

“உனக்கு அங்க ஒன்னும் சிரமம் இல்லையே ப்பா. நீ நல்லா தானே இருக்க” – மஹாலக்ஷ்மி

“எனக்கென்ன மா நல்லா இருக்கேன். ஏன் ஒரு மாதிரி பேசுறீங்க?” சந்தேகமாய் அவன் கேட்க அவரோ வைஷ்ணவியை தான் பார்த்தார். அதே நேரத்தில் சுப்பிரமணிக்கு கைபேசியில் அழைப்பு வர அங்கிருந்து அகன்றார்.

“சமைக்கிறப்ப பாத்து சமைக்க சொல்லுங்க த்தை” மெதுவாக வைஷ்ணவி கூற, அவளுடைய அமைதியான கலங்கிய குரல் ஸ்பீக்கர் உபயத்தினால் அங்கிருந்தவனுக்கு தெளிவாக கேட்டது.

“தேவையில்லாம எதையும் யோசிக்க வேணாம். நான் நல்லா தான் இருக்கேன், என்ன சுத்தி அம்பது பேர் இருப்பாங்க. கவலைபட ஒன்னும் இல்ல. புரிஞ்சுதா?” வார்த்தைக்கு நூறு ம்மா போடும் அவன் நா இதை சொல்லும் பொழுது வெறுமையாக சொல்ல வைஷ்ணவிக்கு தெளிவாக புரிந்துபோனது அவன் தன்னிடம் தான் பேசுகிறான் என்று தலையை சிறிதாக ஆட்டிவைத்தாள்.

“ம்மா நைட் கால் பண்றேன் மா…” என்றவன் இணைப்பை துண்டித்த நேரம் சுப்பிரமணி கலக்கத்துடன் அங்கு வந்து நின்றார்.

“என்னங்க?” என்றார் மஹாலக்ஷ்மி பதட்டத்துடன்.

“கார்த்தி ஹோட்டல் கட்டுர சைட்ல ஏதோ போலீஸ் ரைடாம். ரெண்டு பாடிய தோண்டி எடுத்திருக்காங்க” குண்டை தலையில் தூக்கிப்போட்ட கணவரின் கையிலேயே மயங்கி சரிந்தார் மஹாலக்ஷ்மி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!