Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

டிங் டாங் காதல்

டிங் டாங் – 23.1

முகத்தில் சில ஈர துளிகள் பட சட்டென கண் விழித்தவன் கண்ணை கசக்கியபடி சுற்றி பார்த்த பொழுது, ஈரத் தலையுடன் கண்ணாடி முன்பு நின்று நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்ட மனைவி தான் அழகாய் காட்சியளித்தாள். கடந்த ஆறு மாத காலமாக இந்த காட்சிக்காக பல நாள் கார்த்தியின் மனம் ஏங்கியதுண்டு.

“எந்திரிச்சிட்டீங்களா?” ஆமாம் என்றவன் பல் துலக்கி வந்த பொழுது,

“உள்ளே சீயக்காய் வச்சிருக்கேன், சும்மா அத சாஸ்திரத்துக்கு தலைல வச்சிட்டு ஷாம்பு போட்டுக்கோங்க” என குளியலறையினுள் இருந்த தன்னுடைய துணிகளை எடுத்துக்கொண்டே கூறினாள்.

புரியவில்லை என முழித்தவனிடம் மீண்டும், “இல்லங்க சீயக்காய் போட்டு தான் குளிக்கணுமாம் இன்னைக்கு, அதான் உங்களுக்கு அதுல குளிக்க கஷ்டமா இருக்கும்ல நீங்க கொஞ்சம் மட்டும் தலைக்கு தடவிட்டு…”



Advertisement

தன்னுடைய கையை கொண்டு அவள் வாயை அடைந்தவன், “குட் மார்னிங் பொண்டாட்டி” என்றபடியே குனிந்து அவள் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்து, “புடவை கட்டலயா?” என கேள்வி எழுப்பினான் சோகமாக.

“இல்ல நீங்க குளிச்சிட்டு வரதுக்குள்ள மாத்திடுவேன்” சரியென கார்த்தி சென்று குளித்து வர, வைஷ்ணவி வயலட் நிற பட்டுடுத்தி கைகளில் தங்க வளையங்கள் ஆட, தன்னுடைய நீண்ட கூந்தலை இன்னும் உலர்த்தும் பணியிலிருந்தாள் வைஷ்ணவி.

முகத்தில் என்றும் இருப்பதை விட இன்று பொலிவு அதிகமிருந்தது, அதை மேலும் அழகாக்க, நெற்றி வகுடில் செந்நிறமாய் குடும்பம் அவளை தன்னவள் என கார்த்திக்கு நினைவூட்ட உள்ளுக்குள் சொல்ல முடியாத மகிழ்ச்சி கார்த்திக்கு.

Advertisement

தன்னை அதிகம் நேசிக்கும் பெண், அதிகம் நம்பும் பெண் மனைவியாய் கிடைக்க எந்த ஆணுக்கு தான் கர்வம் எழாமல் இருக்கும்? “வைஷ்ணவி” என கட்டிலின் நுனியில் அமர்த்தவாக்கில் கார்த்தி அழைக்கவும்,

Advertisement

ஈர துண்டை கட்டிலில் போட்டு அவன் முகம் பார்த்தாள். அவள் போட்ட துண்டை எடுத்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் விரித்துவிட்டு, “தலையை துவட்டி விடுறியா?”

குழந்தை போல் கேட்டவனிடம் சிரிப்போடு வந்தவள் வேறு ஒரு புது துண்டை எடுத்து மின்விசிறியின் வேகத்தை இன்னும் அதிகரித்து அவனை நெருங்கி நின்று கார்த்தியின் தலையை உலர்த்தும் பணியில் இறங்கினாள்.

அவள் துவட்டுவதில் கண்களை மூடி இருந்தவன் நேரத்தை பார்க்க கண்ணை திறந்த பொழுது மனைவியின் பளிச்சென மின்னும் இடை கண்ணில் பட, அதை கவனிப்பதே தன்னுடைய தலையாய கடமை என எண்ணி புடவை தலைப்பை விளக்கி அவள் இடையோடு வளைத்து மனைவியின் நெஞ்சில் சாய்ந்துகொண்டான்.

Advertisement

பெண்மையின் அங்கங்களில் முகம் புதைக்க்க, கார்த்தியின் கைகளோ அவள் இடையில் கூச்சமூட்டிக்கொண்டிருந்தது.

“கார்த்திக்…” வெட்கத்தில் சிவந்த மனையாட்டி அவனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவன் முகத்தை பிடித்து தன்னை விட்டு விளக்கி வைத்து, “அம்மா கீழ வர சொன்னாங்க” நெளிந்தாள் அவனுடைய நெருக்கத்தில்.

“நீ கார்த்திக் சொல்றது எவ்ளோ கிக்க்கா இருக்கு தெரியுமா? மணி ஏழு தானே வைஷ்ணவி ஆகுது… இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வரும்னு சொல்லேன்”

நின்றிருந்தவளை தன்னுடைய மடிக்கு இடம் மாற்றி கழுத்தில் முகத்தை புதைத்தான், “வாசமா இருக்க டா” கிரக்கமான அவன் குரல் அவளையும் கிறுக்காக்கியது.

தொல்லை தரும் அவன் தாடியோடு சேர்ந்து அவன் மீசையும், இதழ்களும் வைஷ்ணவியை தன் வசம் இழக்க செய்ய, அவன் இதழ்களோ அவள் கழுத்தில் மொத்தமாய் கோலம் போட்டு, மெல்ல முகத்திற்கு பயணித்து இதழ்களில் வந்து நின்றது.

தன்னுடைய சீண்டலில் உடல் எல்லாம் சிவந்து மூச்சு வாங்க தன் கைவளைவில் இருக்கும் மனைவியை ரசித்த கார்த்தி, “ஒரே ஒரு லிப்லாக் குடு வைஷ்ணவி” என்றான் வேண்டுதலாக.

வெட்கத்தோடு தலையை மாட்டேன் என ஆட்டியவள் அவன் மார்பில் கை வைத்து, “சொந்தகாரங்க எல்லாம் வர ஆரமிச்சிடுவாங்க ப்ளீஸ் வாங்க ப்பா போகலாம்” பேச்சை மாற்றிட மனைவி இதழ்களை சுருக்கி கெஞ்ச, அது அவன் முடிவை இன்னும் உறுதியாக்கியது.

“முடியவே முடியாது. முத்தம் குடு விடுறேன்” டீல் பேசியவன் நாடியை பிடித்து,

“என் கடலைமிட்டாய்ல, சமையல் மாஸ்டர்ல, என் சிடுமூஞ்சில” என கெஞ்சினாள்.

அவள் கையை தட்டிவிட்டு சிரித்தவன், “டேய் வைஷ்ணவி நீ என்ன கெஞ்சல, திட்டுற தெரியுதா?”

“ம்ம்ம் எதுவோ ப்ளீஸ் விடுங்க” எவ்வளவு விலக பார்த்தாலும் அவன் பிடி அதை போலவே இறுகவும் செய்தது.

“கண்டிப்பா மாட்டேன், என்கிட்டே ப்ரபோஸ் பண்ண அடுத்த நாளே டபுள் மீனிங்ல பேசுன பொண்ணு தானே நீ? இப்போ எங்க போச்சு உன் தைரியம் எல்லாம்?”

அவளோ வெட்கத்தை கட்டுப்படுத்தி, “ம்ம்ம் அது… அது காக்க தூக்கிட்டு பொய்டுச்சு” என்கவும் சத்தமாக சிரித்த கார்த்தி,

“நீ என்ன பண்ணுவியோ தெரியாது, எனக்கு இப்போ நீயா ஒரு முத்தம் குடுக்கணும். இல்லனா நைட் ஆனாலும் உன்ன விட மாட்டேன்” என்றான் உறுதியாக.

“கார்த்திக்…” சிணுங்களோடே, “அப்றம் அத்தைக்கு கால் பண்ணி சொல்லிடுவேன்” அவனை மிரட்டினாள்.

“உன் மாமனாருக்கு நீ கால் பண்ணி சொன்னாலும், நான் அசர மாட்டேன்” – அவன்

“நீங்க கொடும படுத்துறீங்கன்னு சொல்லுவேன்” – அவள்

“முத்தம் கேக்குறதெல்லாம் கொடுமையா ப்பா-னு கேப்பேன்” என்றான் கள்ள சிரிப்போடு.

அவன் பேச்சில் அதிர்ந்தவள் அவன் வாயிலேயே இரண்டு போடு போட்டு, “என்ன உங்களுக்கு சேட்டை அதிகமாகிடுச்சு, இப்டி எல்லாம் பேச மாட்டீங்களே. என்னோட அப்பாவி கார்த்திக் எங்க போனார்?” கோவமாக அவனிடம் முறையிட்டாள்.

“பொண்டாட்டிகிட்ட இனிமேல் நல்லவன் வரவே மாட்டான்…” என கூறி சிரிக்க, அவன் மீசையை பிடித்து வைஷ்ணவி ஆட்ட அவள் கையை பிடித்து கடித்து வைத்தான்,

“பேசி பேசியே டைம் வேஸ்ட் பண்ணாத டா. லேட்டா ஆக ஆக உனக்கு தான் சேதாரம் அதிகமாவும்” எனவும் சில நொடி யோசித்தவள், “சரி அப்போ நீங்க கண்ண மூடிக்கோங்க நான் குடுக்குறேன்”

அவனும் சரி என்று கண்ணை மூட, கணவன் மேல் நம்பிக்கை இல்லாமல் தன்னுடைய கையை வைத்து அவன் கண்ணை மூடியவள், சில நொடிகள் தைரியத்தை வரவழைத்து அவனோடு நெருங்கி பட்டும் படாமலும் அவன் இதழ்கள் மேல் மெல்லிய ஒத்தடம் கொடுத்தவள் உடனே விலக எத்தனித்த நேரம்,

அவள் நோக்கம் புரிந்தவன் அவள் தாடையை பற்றி அந்த ரோஜா இதழ்களை வன்மையாய் சிறை செய்தவன் தன்னுடைய ஆசை தீர மனைவியை இம்சித்தே அவள் மூச்சிற்கு கடினப்படுவதை பார்த்தே விட்டான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அவனை பார்த்து முறைத்தவள், அவன் சிரிப்பில் வெட்கப்பட்டு அவன் கழுத்தோடு கட்டிக்கொண்டு வெட்கத்தை மறைத்தாள், “நீங்க ரொம்ப சேட்டை பண்ணுறீங்க” மகிழ்ச்சியோடு குற்றப்பத்திரிகை வாசித்தவள் இவள் ஒருத்தியாக தான் இருக்கும்.

தானே அவன் அணைப்பிலிருந்து வெளி வந்து உடையை சரி செய்த பிறகு, சிகப்பு நிற சட்டை, பட்டு வேஷ்டி கட்டி தயாரான கணவனை பார்த்ததும் முதல் நாள் அவனை பார்த்த நினைவு தான் வைஷ்ணவிக்கு.

முக மலர்ச்சியோடு கீழே இருவரும் வர, வைஷ்ணவி அன்னையோடு வம்பு இழுக்க சென்றிட, காலை உணவை பார்வையிட சென்றுவிட்டான் கார்த்தி.

காலை, மதியம் இரண்டு நேரமும் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் தலைமுழுகு உணவு இருவீட்டாரின் சார்பில் தயாரிக்க மொத்த ஏற்பாடும் கார்த்தியின் வீட்டில் இருக்கும் காலியிடத்தில் தான் நடந்தது.

ஏற்கனவே தந்தை, மாமனார், சித்தார்த் என அனைவரும் அங்கிருக்க, தானும் சென்ற கார்த்தி உணவினை ருசி பார்த்து திருத்தங்கள் கூற, “விடு தம்பி ஒரு நாள் ரெஸ்ட் எடு” என்றார் சுப்பிரமணி.

“இருக்கட்டும் ப்பா… நம்ம வீடு கல்யாணத்த பத்தி பேசுறாங்களோ இல்லையோ, நம்ம சாப்பாட பத்தி எல்லாரும் பேசணும், வயிறு நிறைஞ்சா மனசு நிறைஞ்சு ஆசீர்வாதம் பண்ணுவாங்க” என்றவனிடம் அதற்கு மேலும் எதுவும் பேச இயலாமல் போனது தந்தைக்கு.

வைஷ்ணவியின் தந்தைக்கோ இதை விட பொறுப்பான மருமகனை தானே தேடியிருந்தாலும் கிடைத்திருக்காது என தான் தோன்றியது. மொத்தமாக குடும்பமே சந்தோஷத்தில் மிதந்தது.

வேலைகள் அனைத்தையும் முடித்து சிறிது இளைப்பாற தந்தை, மாமனாரை கார்த்தி அனுப்பி வைக்க, சித்தார்த் கார்த்தியுடன் இருப்பதாக கூறிவிட்டான்.

பொதுவான பேச்சுகளுக்கு இடையே, “ஏன் மச்சான் யாரையாவது லவ் பண்றிங்களா?” திடீரென கார்த்தி கேட்டதும் சித்தார்த் முகம் அதிர்ச்சியடைந்து.

“அப்டி… அப்டிலாம் இல்லங்க மாப்பிள்ளை” சமாளிப்பது கார்த்திக்கு தெளிவாக தெரிந்தது.

“ஓ சரிங்க மச்சான். உங்க வீட்டுல லவ் மேரேஜ்க்கு பிரச்சனை இல்ல அதுனால பயப்புடாதிங்க அப்டி எதுவும் லவ் இருந்தா. மீறி பிரச்சனை வந்தா நான் இருக்கேன்” மாப்பிள்ளையின் ஆறுதலில் சிரித்தவன் சரி என்னும் வகையில் தலையை ஆட்டி வைத்தான். அடுத்த சில நிமிடங்களில் பந்தி வேலை துவங்கியது.

கார்த்தி வீட்டின் மாடியிலே பந்தி வேலை துவங்க, மொத்த குடும்பமும் நிற்க நேரமில்லாமல் சுழன்றது. காலை சிலர் மட்டுமே வர, மதியம் தான் அவர்கள் எதிர் பார்த்த மக்கள் அனைவரும் வந்தனர். மஹாலக்ஷ்மியின் அண்ணி முறையில் ஒருவர், “சாப்பாடு ருசி பயங்கரம் மாப்பிள்ளை” என அவனிடம் பாராட்ட, அவர் அருகில் நின்றிருந்த மஹாலக்ஷ்மியின் அண்ணன், “பின்ன மாப்பிள்ளை கை வச்சு ஏதாவது சரியில்லாம போயிருக்கா” என மருமகனை பாராட்ட வெறுமனே சிரித்துவைத்தான் கார்த்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!