Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 02

தாய்மொழி 02

“என்ன தமிழ் முகமெல்லாம் ஒரே மத்தாப்பு வெடிக்குது? என்ன விஷயம்?” மாதவியின் கேள்வியில் முகம் இன்னுமே விகசிக்க தமிழ் பெரிதாகப் புன்னகைத்தாளே தவிர அவள் புறம் திரும்பவும் இல்லை. அவளுக்குப் பதில் சொல்லவும்  இல்லை.



Advertisement

அலட்சியம் என்று இல்லை. சில  சமயங்களில் சுற்றி இருக்கும் எதுவும் நம்மை தொல்லை செய்யாத ஏகாந்தம் வேண்டும் என்று மனம் ஆசை கொள்ளும் அல்லவா? அப்படி ஒரு நிலையில் இருந்தாள் அவள்.

வாய் திறந்து பேசும் அதிர்வில் கூட, தன் மென் உணர்வுகளின் ரிதம் அறுந்து விடுமோ என்பது போல், பேருந்தின்  ஜன்னல் கம்பியில் தலை சாய்த்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தாள்.

Advertisement

Advertisement

“என்னடி இவ கேள்வி கேட்டா அந்தப் பக்கம் பார்த்து சிரிச்சிட்டுப் பேசாம வர்றா?” முன் இருக்கையில் அமர்ந்து வந்த அனுபமாவிடம் கேட்டாள் மாதவி.

“அதெல்லாம் அப்படித்தான். அடுத்த ஒரு மாசத்துக்கு அம்மணி கண்ணுல,  கருத்துல எல்லாம் நம்ம ஏறவே மாட்டோம்”

Advertisement

“ஏனாம்?”

“ஹ்ம்ம்.. நாளைக்கு குவைத்ல இருந்து அவ அயித்தான் வராருடி.  ஏர்போர்ட்லயே ஒரு டூயட் பிளான் பண்ணி, நாளைக்கு வேலைக்கு லீவ் சொல்லிட்டு, மனசுக்குள்ள அதுக்கு ஒத்திகை பார்த்துட்டு வரவகிட்ட கேள்வி கேட்டா பதில் கிடைக்காது. உனக்கு பல்புதான் கிடைக்கும்”

“ஓஹ்! அதான் சங்கதியா? ஆமா நாலு வருஷம் கழிச்சு வர உங்க அவுருக்கு என்ன கிஃப்ட் வாங்கி வச்சிருக்க?” கனவில் மிதந்தவளின் தோளில் இடித்து மாதவி கேட்க,

“நாலு வருஷம் இல்ல… நாலு வருஷம் அஞ்சு மாசம் இருபத்து மூணு நாள்…” என்று தமிழ் அவளைத் திருத்தி சொல்ல, மாதவி அவள் கணக்கில் வாயைப் பிளந்தவள்,

“இந்த மணித்தியாலம், நிமிசம், செக்கண்ட் இதெல்லாம் ஞாபகம் வச்சிருக்கியா? இல்ல கணக்கு பார்த்து சொல்ல நேரம் எடுக்குமா?” என்றாள் கேலியாக.

அதற்கு தமிழ் எதுவும் சொல்லாது அமைதியாக வர, அனுபமா எட்டித் தன் கைப்பையால் மாதவி தலையில் அடித்தவள்,

“உன் புருஷன் உன்னை விட்டுட்டு, வேலைக்குனு ஒரு நாள் பக்கத்து ஊர்ல

தங்கினதுக்கு, அடுத்த நாள் முழுக்க உம்முன்னு அலைஞ்சவ நீ,  உனக்கு அவ தவிப்பு கேலியா இருக்கா?” என்றாள் சிறு கண்டிப்புடன்.

அவள் அப்படி சொல்லவும் மாதவி,  “தமிழ், என்னை மன்னிச்சிரு டி. நான்  உன்னைக் காயப்படுத்தணும்னு கேலி பண்ணல. சும்மாதான்டி சொன்னேன்.” தமிழின் கையைப் பற்றிக் கொண்டு  முகத்தை சுருக்கி மன்னிப்பு வேண்ட…

தமிழ், “ப்ச்..” என்று அனுவைக் கண்டிப்பாய் பார்த்தவள் மாதிவியிடம்,

“ஏ.. அவ தான் சொல்றான்னா நீ ஏன்டி மன்னிப்புலாம் கேட்டுட்டிருக்க? நான் ஒன்னும் நீ சொன்னதுக்கு வருத்தப்படல. இப்போ நீ நிஜமாவே என்னைக் காயப்படுத்தினாக் கூட,  அதைக் கேட்டு வருத்தப்பட அனு சொன்ன மாதிரி நானும் என் சிந்தனையும் இங்க இல்ல. அதனால நீ கொஞ்ச நேரம் என்னைத் தொல்லை பண்ணாம வா, போதும்” என்று விட்டு தொடர்ந்து தன் கனவில் சஞ்சரிக்க ஏதுவாக ஜன்னலின் கம்பியை பஞ்சணையாக மாற்றிக் கொண்டாள்.

அதன் பிறகு அவளை யாரும் தொல்லை செய்யவில்லை.

மூவரும் திருப்பூரில் ஒரு பிரபலமான ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிக்  கொண்டிருக்கையில்தான் இந்தப் பேச்சு வார்த்தை நடந்தது.

அடுத்தடுத்து வந்த நிறுத்தங்களில் அவள் தோழிகள் எல்லோரும் அவளிடம் சொல்லி விட்டு இறங்கிவிட, தமிழும் அவள் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கி தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

வீடு வரையுள்ள ஐந்து நிமிட நடை பயணத்தை மீண்டும் எழுந்த அவள் நாயகனின் நினைவுகளுடன் கடக்க முனைந்தாள்.

பதினாறின் பருவத்தில் அவளுள் படர்ந்த காதல், பருவக்கோளாறு என்ற பதத்துள் அடங்காது பக்குவப்பட்ட காதலாய் இன்றும் நிலைத்து நிற்பதில் அவளை விட அவளவனின் பங்கு அதிகம்.

அவன் பாட்டில் தன் வேலையுண்டு தானுண்டு என்று இருந்தவனை நோக்கி முதலில் பார்வை அம்புகளை எய்தவள் இவள்தான்.

முதலில் அந்த ஈர்ப்பு விசையில் இருந்து ஒதுங்கிப் போனவனும் ஒருகட்டத்தில் விரும்பியே அவள் விழியீர்ப்பு விசையில் வீழ்ந்து தொலைந்து போனான் அவனும்.

ஆனால், அவளுக்கும் சேர்த்து தான் யோசிக்க வேண்டிய தன் கடமையுணர்ந்து கண்ணியமாய் காதல் செய்தான்.

“உன் எதிர்காலம் நான், என் எதிர்காலம் நீ..” அவளுக்கு அவன் கொடுத்த இந்த வாக்குறுதியும் நம்பிக்கையும் மட்டும்தான் அவன் காதலுக்கு அச்சாரம்.

அதை விடுத்து அவளோடு ஊர் சுற்றியதும் இல்லை, கட்டிக்கொண்டு ஹார்மோன்களின் தூண்டுதலின் பேரில் கல்மிஷம் செய்ததும் இல்லை.

சொல்லப் போனால் அதற்கு அவனுக்கு நேரமும் வாய்க்கவில்லை.

அவளிடம் தன் காதலை ஒப்புக் கொடுத்த ஆறு மாதத்தில் குவைத்தில் வேலை கிடைக்க, தன் காதலிடம் ஆழமான நம்பிக்கை விதையை ஊன்றி விட்டு பறந்து சென்று விட்டிருந்தான்.

பதினாறின் இறுதியில் இருந்தவளுக்கு காதலன் பிரிவு மனதைக் கனக்கத்தான் செய்தது. இத்தனைக்கும் அதுநாள் வரையிலும் வீட்டில் இருந்து பள்ளி செல்லும் இடைவெளியில் பத்து நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில்தான் அவனைக் கண்ணால் பார்ப்பாள்.

இனி அது கூட இன்றி, அவன்  கண்காணா தூரத்திலும் அவள் கண்கள் அவன் நின்ற, நடந்த தடங்களில் அவன் பாதச் சுவடுகளைத் தேடியும் அலைவதான வாழ்க்கை என்று முதல் மூன்று வருடங்கள் மிகவும் சோர்ந்து போனவள், மூன்று வருடங்கள் முடிவில் பார்த்தி தங்கையின் திருமணத்துக்கு வந்துவிட்டுப் போன பின் வெகுவாகத் தெளிந்து விட்டிருந்தாள்.

காரணம் தங்கையின் திருமணம் முடிந்த கையோடே பார்த்தி, இரு வீட்டாரிடமும் தங்கள் காதலை வெளிப்படுத்தியவன், இறுதி வரை இதில் இருவரும் உறுதியாக இருப்போம் என்று அவளுக்கும் சேர்த்து அவனே முடிவை சொல்லிவிட்டிருந்தான்.

அவர்கள் காதல் சிறு சிறு சலசலப்புகளுக்கு உள்ளானாலும், மறுத்துக் கூற வலுவான காரணங்கள் இல்லாததால் இருபுறமும் அமைதி காத்தனர், தமிழின் தந்தை ஒருவரைத் தவிர.

இரு பக்கத்தினருக்கு இடையிலும் சாதி, மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாததோடு இரு வீட்டு தந்தைகளுக்கும் இடையில் உள்ள ஒற்றுமையும் மற்றவர்களை சற்று நிதானிக்கச் செய்தது.

ஒற்றுமை என்றால் பாலிய சிநேகிதத்தால் வந்தது என்று அர்த்தமில்லை. இருவரும் டாஸ்மாக் சிநேகிதர்கள். குடிப்பதை தவிர குடும்பத்துக்கு என்று சிறு துரும்பையும் நகர்த்தத் துப்பற்ற குடும்பத் தலைவர்கள்.

இதில் செல்வநாயகத்துக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் ஆனந்தன், இரண்டாவது தமிழிசை.

ஆனந்தன் முட்டி மோதி அரசு கல்லூரியில் இளங்கலை வணிகக் கல்வியை முடித்தவன், சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கணக்காளனாகப் பணியில் சேர்ந்திருந்தான்.

அவன் தலையெடுத்த பின் அவன் குடும்பத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். இப்படி அவர்கள் குடும்பத்தின் நிலையைக் கூட ஓரளவு சகித்துக் கொள்ள முடியும்.

ஆனால் பாரத்தியின் வீட்டின் நிலை  சொல்லில் மாளாது. குடும்பப் பொறுப்பை மறந்த குடும்பத் தலைவன் தர்மரத்தினம், குடும்பக்  கட்டுப்பாட்டையும் மறந்தவராக அடுக்கடுக்காய் நான்கு பிள்ளைகளைப் பெற்றுப் போட்டுவிட்டார்.

மூத்தவன் வரதன், இரண்டாவது மகள் நிர்மலா, மூன்றாவது பார்த்திபன், நான்காவதாக நிரஞ்சனா. இவர்களோடு தாய் பர்வதம் என்று மொத்தமாக ஆறு உருப்படிகள் குடும்பத்தில்.

பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும் வரைக்கும் அரசு பள்ளியும், ரேஷன் அரிசியும் என்று இரு குடும்பமும் அரை வயிறும் கால் வயிறுமாக ஓடிக் கொண்டிருந்த காலத்தில், ஆனந்தன் போலவே தங்கள் வீட்டைத் தாங்குவான் மூத்தவன் என்று பர்வதம் கணவனிடம் பொய்த்த நம்பிக்கையை மகன் தருவானா என்று காத்திருந்த நேரம், அவனும் பாலிடெக்னிக் முடித்தவன், எலக்ட்ரீஸியனாக வேலைக்கு சேர்ந்து அவரின் வயிற்றில் பாலை வார்த்தான்.

அவனின் வருமானம் கொடுத்த தைரியத்தில் கடனை உடனை வாங்கி மூத்த மகளின் திருமணத்தை முடித்து வைத்தார் பர்வதம். நிர்மலாவின் கணவன் ராஜேஷ் குணத்தில் நிறைவானவன் ஆகையால், இவர்கள் நிலை புரிந்து சீர் என்று பெரிதாக எதையும் கேட்கவில்லை.

அதனால் இவர்களால் இயன்றதைக் கொடுத்து, இதர செலவுகளுடன் இவர்கள் குடும்பம் தப்பியது. இப்படியே சென்றால் கூட வாழ்க்கை இன்பம் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரம்தான், நிர்மலாவின் திருமணம் முடிந்து இரண்டு வருடங்கள் முடிய,  அவள் திருமணத்துக்கு வாங்கிய  கடனில் பாதி மீதம் இருக்கும் நிலையில், திடீரென வரதன் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வந்து நின்றான்.

அவர்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்தார்களாம், அதனால் ஓடி வந்து விட்டார்களாம்.

பர்வதம் மகனின் திருமணக் கோலத்தைக் கண்டு மகிழ்வதற்குப் பதில் விக்கித்துப் போய் நின்றிருந்தார்.

அடுத்தடுத்த நாட்கள் எல்லாம் இனி இந்தக் குடும்பத்தின் நிலை என்ன என்ற சிந்தனை ஒன்றே அவரின் மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

காரணம், வரதனின் மனைவி சித்ரா  குடும்ப அரசியலின் அத்தனை சரத்துக்களையும் கரைத்துக் குடித்தவளாக இருந்தாள்.

ஒற்றை அறையைக் கொண்ட வீட்டின் அந்த ஒற்றை அறையையும் தம்பதிகள் எடுத்துக் கொள்ள, வயதுப்  பெண்ணோடு மற்ற நால்வரும் கூடத்தையே உபயோகிக்க வேண்டிய நிலை.

இதில் நிரஞ்சனா குளித்தால் உடை மாற்றக் கொள்ள என்று அவர்களின் அறைக்கு சென்றே ஆக வேண்டும் என்ற சங்கடமான நிலை வேறு. அந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்துக்குள் எவ்வாறான சலசலப்புகள் எழும் என்று யாவரும் அறிவரே. அது இங்கேயும் எழுந்தது.

அதனால், பர்வதம் ஒரு முடிவு எடுத்தவராக, வரதனை எல்லோரும் தங்கும்படியாக, குறைந்தது இரண்டு படுக்கை அறைகளுடன் கூடிய ஒரு வீட்டை வாடகைக்குப் பார்க்க சொன்னார்.

மூத்தமகன், மருமகளோடு தாங்களும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும் என்று எண்ணித்தான் அவர் அப்படி சொன்னது.

ஆனால் நடந்ததோ வேறு. ஒரு படுக்கையறையுடன் கூடிய, சிறிய வீடே வாடகைக்கு கிடைத்தது என்று சொன்ன வரதன், எங்களால்தானே சிரமம், நாங்கள் சென்று விடுகிறோம் என்று  மனைவியுடன் தனிக் குடித்தனம் சென்று விட்டான்.

இதற்குப் பின்னால் சித்ராவின் சித்து விளையாட்டு இல்லாமல் இருக்காது என்று பர்வதத்துக்குப் புரிந்தாலும் அதைத் தாண்டிய குடும்ப பொருளாதார சிக்கல்கள் அவர் கண் முன்னே பூதாகாரமாக வந்து நின்றன.

அவர் அச்சம் சரியே என்பதுபோல் அடுத்தடுத்த மாதங்களில் வட்டி கேட்டு, வீட்டு வாசலில் வந்து நிற்போரின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது.

வரதனைக் கேட்டபோது, “தனிக்குடித்தனம், வீட்டு வாடகை, குடும்ப செலவுகள் என்று தன் வருமானம் தனக்கே போதவில்லை, தானே கடன் வாங்கித் தான் பாதி மாதத்தை ஓட்டுகிறேன்” என கையை விரித்து விட்டான்.

பர்வதம் முற்றிலும் நிலை குலைந்து போனார். கணவன் மாறி, மகன் மாறி வாழ்வாதாரத்துக்கு கையேந்தி நிற்கும் பெண்களின் நிலை இருக்கிறதே, அதுதான் இருப்பதிலே கொடூரமான  சாபம்.

சிலர் தொடர்ந்து பட்ட அடிகளிலிருந்து பாடம் கற்று, கூலி வேலைக்கு சென்றென்றாலும் குடும்ப  சுமையைத் தன் தோள்களில் தாங்கி நிற்பர்.

பர்வதம் அந்த வகையறா இல்லை ஆதலால் அடுத்து அவர் பார்வை இறைஞ்சலாய் விழுந்தது என்னவோ பார்த்த்தியின் மேல்தான். பரிதாபம் என்னவென்றால் அப்போது அவனுக்கு வயது வெறும் பதினைந்து.

பத்தாவது முடித்து விட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்தவன், குடும்பநிலையை கருத்தில் கொண்டு உடன் தொழில் தேவையை உணர்ந்து, தமையனின் வழியில் பாலிடெக்னிக் படிப்பையே தொடரலாம் என எண்ணியிருந்தவன் எண்ணம் எல்லாம் செயலாக்கம் பெறாமலேயே நீர்த்துப் போனது.

அடுத்து என்ன பொதி சுமக்கத் தயாரானவன், தமிழின் அண்ணன் சிபாரிசில் அவன் வேலை செய்யும் சூப்பர் மார்க்கெட்டிலே வேலைக்கு சேர்ந்திருக்க பர்வதத்துக்குத் தற்காலிகமாக ஒரு ஆசுவாசம் கிடைத்தது.

இப்படியே இரண்டு வருடங்கள் கைக்கும் வாய்க்கும் கடனுக்கும் மத்தியில் வாழ்க்கை நரகமாய் கழிய, அந்தக் குடும்பத்துக்கு அடுத்த இடியாய் வந்து விழுந்தது ரத்தினத்தின் மரணம்.

குடி போதையில் தன் நண்பரின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று விபத்தாகி சம்பவ இடத்திலேயே உயிரை விட்டிருந்தார் புண்ணியவான்.

மீண்டும் அந்தக் குடும்பத்தில் ஒரு அசாதாரண நிலை. இத்தனை நாள் பிரயோஜனம் இல்லாவிட்டாலும் அப்பா என்ற பெயருக்கு இருந்த உறவின் இழப்பை அவரின் பிள்ளைகளால் தாங்க முடியாது போனது. பர்வதத்தையும் கணவரின் இழப்பு பெரிதும் பாதித்து விட்டிருந்தது.

ஆனால் பதினாறாம் நாள் காரியம் முடிந்த அடுத்த நாள்தான், கணவன் இறப்புக்கு பின்னும் தங்களுக்கு சுமையேற்றி சென்றிருப்பதைப் புரிந்த பர்வதம் மனம் நொடிந்து போனார்.

ரத்தினத்துக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்து, அவர் உயிர் பறிபோகக் காரணமாக இருந்த அவரின் குடிகார நண்பர் சிதிலமடைந்த தன் வண்டிக்குப் பதில் புது வண்டி வைத்தாலே ஆகிற்று என்று நிற்க, வேறு வழியின்றி தருகிறோம் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்து அப்போதைக்குப் பிரச்சனையை முடித்தாகிற்று.

நிரந்தரமாக முடிக்க வேண்டும் என்றால், பார்த்தி இருபத்து நான்கு மணி நேரமும் உழைத்தால் கூட போதாது என்ற நிலை.

அண்ணன் என்று இருப்பவனும்  தகப்பனின் இறப்பிற்கு இரு சொட்டுக் கண்ணீரை சிந்தினானே தவிர, ஒரு சில்லறையைக் கூட வெளியே சிந்தவில்லை.

நிர்மலாவிடமும் எதையும் எதிர்பார்க்க முடியாது என்கையில், கையில் இருந்த சொற்ப பணமாகட்டும் கடன் வாங்கிய பணத்துக்கான பொறுப்பாகட்டும் மொத்தத்துக்கும் பார்த்தியே உரிமையாளனாகிப் போனான்.

இப்போது இந்த வண்டி செலவும் கண் முன் வந்து நிற்க, பதினெட்டு வயதே பூரணமாகி நின்றவன் செய்வதறியாது திகைத்து நின்றான்.

அவன் வயதுக்குரிய ரசனைகள், சந்தோஷங்கள் அனைத்தையும் புதைத்து, மாடாக உழைத்தாலும் எதுவும் மாறாது என்றால் அவன் உழைப்புக்கு இங்கே என்னதான் மரியாதை?

பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்காவது துறவறம் போய் விடலாமா  என்ற சிந்தனையே வந்து விட்டது அவனுக்கு. ஆனால் தாயினதும் தங்கையினதும் முகங்கள் கண்ணுக்குள் நின்று அவனைக் கட்டிப்போட்டது.

ஒன்றை மட்டும் புரிந்து கொண்டு விட்டான், இங்கிருந்து கொண்டு தன்னால் தன் குடும்பத்தை வளமாக வாழ வைக்க முடியாது என்று.

சிறு முதல் இருந்தால் கூட எதுவும் தொழில் தொடங்கி முன்னேறலாம் என்ற நம்பிக்கை இருக்கும்.

இங்கே கழுத்தை சுற்றிக் கடன் இருக்க,  அதை வைத்துக் கொண்டு என்ன செய்து முன்னேற? இருக்கும் ஒண்டிக் குடித்தனத்தின் பத்திரமும் வட்டிக்காரனின் அலமாரியில் பத்திரமாகத் தூங்கியது. அதற்கு வட்டி கட்டிக்கட்டி வட்டிக்காரன் குடும்பத்தை வளர்த்து விட்டதுதான் மிச்சம்.

அதனால் வேறு நல்ல வழியைத் தேடி அலைந்தவனுக்கு சூப்பர் மார்க்கெட்டின் முதலாளி மூலம் கிடைத்ததுதான் இந்த குவைத் செல்லும் வாய்ப்பு.

முதலாளிக்கு நம்பிக்கையான முகவர் மூலம் வேலைக்கு செல்வதனால் மோசடி குறித்த எந்த அச்சமும் இல்லை.

ஆனால் கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கு ஓட்டுநர்கள் தேவை என்ற பட்சத்தில் அவன் வயதுதான் பிரச்சனையாக இருந்தது. ஹெவி வெஹிக்கிள் லைசன்ஸ் எடுப்பதற்கு குறைந்தது இருபது வயதாவது ஆக வேண்டும்.

சரி வேறு ஏதாவது மத்திய கிழக்கு  நாடுகளுக்கு, வேறு வேலைக்கு செல்வோம் என்றால் அப்படி வேலைக்கு எடுக்கும் ஏஜென்சியிடம் நம்பகத்தன்மையை எதிர்பார்க்க முடியாது.

இதுவே முதலாளியின் சொந்தக்காரர் முகவராக இருக்கும் தைரியத்திலும்,  அங்கு செல்லத் தேவையான தொகையை முதலாளி கடனாகக் கொடுக்க முன்வரவும்தான், இதைப் பற்றி யோசிக்கவே செய்தான்.

இல்லையென்றால் எங்கும் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விட்டு, இன்னொரு அடியிலிருந்து மீண்டு வர அவனால் முடியாது.

அதனால் புத்திசாலியாக சிந்தித்தவன், இன்னும் இரு வருடங்கள் தானே? பல்லைக் கடித்துக் கொண்டு இங்கேயே சமாளித்தால், அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சூப்பர் மார்க்கெட்டிலேயே பகல் வேலையோடு சேர்த்து இரவு நேரக் காவலாளி வேலையையும் பார்க்கத் தொடங்கி விட்டான்.

அந்நேரத்தில்தான் வரதனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. சித்ரா வீட்டில் அப்போது வரை அவர்களை ஏற்கவில்லை ஆதலால், பிரசவம் பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்ற சாக்கோடு மீண்டும் இவர்களுடன் வந்து ஒட்டிக் கொண்டது வரதனின் குடும்பம்.

அதிலும் சித்ராவின் அரசியல் இருக்கத்தான் செய்தது. அதுதான் பார்த்தி குடும்பத்தின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு விட்டானே! இனியும் ஏன் தாங்கள் தனியாக வாடகைக்கு என்று அழ வேண்டும் என்று இங்கேயே வந்து விட்டிருந்தாள்.

பார்த்தியும் தான் இல்லாத நேரங்களில்  தாய்க்கும் தங்கைக்கும் பாதுகாப்பு வேண்டுமே என்று அவர்களின் வரவைக் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை.

தங்கையின் தனியான உபயோகத்துக்கு என்று வீட்டின் பின்புறத்தில் பத்துக்குப் பத்தில் சிறிதாக ஒரு தகரக் கொட்டகையை அமைத்துக் கொடுத்து விட்டு அமைதியாகி விட்டான்.

நிரஞ்சனா ஆரம்பத்தில் இருந்தே வீட்டு நிலையைப் பார்த்து வளர்ந்தவள் ஆதலால், சின்ன வயதிலேயே மிகவும் பக்குவப்பட்டவளாக நடந்து கொள்வாள்.

மற்றைய இரண்டு சகோதரர்களிலும்  பார்க்க, தங்களுக்காக அதிகம் சிலுவை சுமந்த சின்ன அண்ணனின் மேல்தான் அவளுக்குப் பாசம் அதிகம்.

பார்த்தி, தமிழின் காதல்  மற்றவர்களுக்குத் தெரியும் முன்னேயே அவளுக்கு லேசுபாசாய் தெரியும் என்றாலும் வெளியே காட்டிக்  கொள்ளவில்லை.

தன் அண்ணனுக்கு கிடைத்த ஒரே ஒரு சந்தோஷம் அதுதான் என்கையில், தமிழை அண்ணியாக ஏற்க அவளுக்கு மனப்பூர்வ சம்மதமே.

அத்தோடு உடன் படிக்கும் தோழியாக  தமிழை அவள் நன்கு அறிவாள்.  அவளைப் பிடிக்கவும் செய்யும்,

பெரும்பாலும் நிரஞ்சனா, தமிழ் இருவரும் இணைந்து பள்ளி செல்லும் நேரங்களில்தான், தமிழ் மற்றும் பார்த்தி இருவரின் மௌனப் பார்வைகள் போர் முழக்கம் செய்வது எல்லாம்.

ஆனால், அப்போதெல்லாம் நிரஞ்சனாவுக்கு இவர்களின் காதல் விவகாரம் தெரிந்திருக்கவில்லை.

பார்த்தி வேலைக்கென்று  வெளிநாட்டுக்கு சென்ற பின்னர்,  சாதாரணமாக விசாரிக்கிறேன் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக தமையனைப் பற்றி தமிழிடமிருந்து வந்த விசாரிப்புக் கேள்விகளில்தான் இருவரையும் ஊன்றிக் கிரகித்து அவர்கள் காதலைக் கண்டறிந்து கொண்டாள் அவள்.

இப்படி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க நிரஞ்சனா, தமிழ் இருவரும் பிளஸ் டூ  எக்ஸாம் முடித்து இருந்தனர். ரிசல்ட் வந்ததும் நிரஞ்சனா அரசு கல்லூரியில் பிஏ படிப்பில் சேர்ந்து கொள்ள தமிழைப் படிக்குமாறு அவள் தாயும் தமையனும் எவ்வளவு வற்புறுத்தியும் முடியாது என்று ஒரேயடியாக நின்று விட்டாள்.

இந்த விஷயம் பார்த்தியின் காதுக்கும் சென்றதுதான். ஆனால் அவனால் அப்போது அவளுக்காக எதுவும் செய்ய முடியாத நிலை. அன்று தமிழ் என்பவள் செல்வநாயகத்தின் மகள். இவனின் காதலி என்று கூட வெளியில் யாருக்கும் தெரியாது.

அப்படி இருக்கையில், ‘நீ படி! நான் இருக்கிறேன்!!’ என்று சொல்வது எல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத விடயம். ஏன் தமிழே கூட அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டாள்.

அவள் இந்த முடிவை எடுப்பதற்கு ஏதாவது உறுதியான காரணங்கள் இருக்கும் என்று தனக்கு சமாதானம் சொல்லிக் கொண்ட பார்த்தி, அவள் இழந்ததற்கும் சேர்த்து எதிர்காலத்தில் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குள் உறுதி பூண்டதோடு அதைக் கடந்து விட்டான்.

தமிழ் படிக்க மாட்டேன் என்று சொன்னவள், அடுத்து கார்மெண்ட்ஸில் தொழில் பயிலுனராக சேர்ந்து தேர்ச்சி அடைந்து வேலையில் இணைந்து கொள்ள,  இங்கே பார்த்தியும் ஓய்வு என்ற ஒன்றை மறந்து கிடைக்கும் பகுதிநேர வேலைகளை எல்லாம் மறுக்காது ஒப்புக் கொண்டு, தன் அயராத உழைப்பால் கடனை ஒருபுறம் அடைத்து வந்தவன், பத்திரத்தை மீட்டு வீட்டையும் கொஞ்சம் விஸ்தாரமாக இன்னும் இரண்டு அறைகள் சேர்ந்ததாக மாற்றிக் கட்டினான்.

அந்தக் கான்டிராக்டை ஊரில் தனக்கு மிகுந்த நம்பிக்கையுள்ள நண்பன் ஒருவனிடம் கொடுத்தவன், கணக்கு வழக்குகளைத் தானே தொலைபேசி வழி கேட்டு, நேராக அவரின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி விடுவான். தன் அண்ணனைக் கூட இடையில் வர விடவில்லை.

அவனின் இந்த விதமான விரைவான வளர்ச்சியைக் கண்டு, அவனைச் சேர்ந்தவர்கள் எல்லாம் களிப்புற்றிருக்க, தமிழ் மட்டும் ஒருவித அலைப்புறுதலோடே அலைவாள்.

அவன் தப்பான வழியில் எல்லாம்  பணம் சம்பாதிக்க மாட்டான் என்பது அவளுக்கு சர்வ நிச்சயம். ஏனோ அப்படி ஒரு கண்மூடித் தனமான நம்பிக்கை அவன் மீது.

அவள் கவலை எல்லாம், அவன் அங்கு தன்னை மிகவும்  வருத்திக் கொள்கிறானோ என்பதாகத்தான் இருக்கும்.

உழைக்கிறேன் என்று உடம்பை வருத்தி எதையும் இழுத்துக் கொள்வானோ? அப்படி ஏதும் நோவு என்றால் கூட அவன் அருகில் இருந்து பார்த்துக் கொள்ள யாரும் இல்லையே என்றெல்லாம் தனக்குள் உழலுபவள், தவாறது தினமும் அவனுக்காய் இறைவனைத் தொழுவாள்.

அவள் வேண்டுதல் எல்லாம் அவன் ஒருவனுக்காக மட்டுமே என்று ஆகிப் போனது.

இப்படிப் போய்க் கொண்டிருந்த காலத்தில்தான் மீண்டும் ஒரு சுழல் நிரஞ்சனாவின் ஜாதகத்தின் வடிவில் வந்து நின்றது. அவள் ஜாதகத்தில்  செவ்வாய் தோஷம் என்றும் இந்த வருடத்துக்குள் திருமணம் முடிக்காவிட்டால் இனி அடுத்த பத்து வருடம் கழித்துத்தான் திருமணம் நடக்கும் என்று ஜோசியர் சொல்லிவிட, பர்வதம் பயந்துவிட்டார்.

அவருக்கு பலரும் பலவாறு சமாதானம் சொல்லியும் கேளாமல், அவர் தன் பிடியிலேயே நிற்க, இறுதியாக மொத்தக் குடும்பமும் அவர்களுக்குத் தெரிந்த இடத்தில் நிரஞ்சனாவுக்கு அவசர அவசரமாக வரன் தேட ஆரம்பித்தது.

இறுதியாக நிர்மலாவின் கணவன் ராஜேஷின் தூரத்து சொந்தத்தில் உள்ள சித்தப்பா பையன் என்று தருணின் செவ்வாய் தோஷ ஜாதகம் நிரஞ்சனாவின் ஜாதகத்தோடு பொருந்தி வர, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

பார்த்தி அதுவரை உழைத்தது எல்லாம் முன்னிருந்த கடனுக்கும் வீட்டின் மறு உருவாக்கத்துக்கும் என்று கரைந்து விட்டிருக்க, திடீரென முடிவு செய்யப்பட்ட திருமணத்துக்கு மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை. ஆனால் அது அவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை.

முன்னர் சொன்னது போல் நேர்மையாக அவன் எல்லாக் கடன்களையும் அழித்து விட்டதால், இப்போது அவனை நம்பி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கடன் கொடுக்கத் தயாராக இருந்தனர் வட்டிக்காரர்கள். அவர்களுக்குத் தான் வட்டி வந்து கொண்டிருக்குமே!

தன் கடுமையான உழைப்பை நம்பிய பார்த்தியும் கடன் வாங்க எல்லாம் யோசிக்கவில்லை. தங்கைக்கு கஞ்சத்தனம் பார்க்காமல் தாராளமாகவே எல்லாம் செய்தான்.

தங்கையின் திருமணத்துக்கு ஒருமாத விடுமுறையில் வீடு வந்தவனுக்கு இருந்த ஒரே ஒரு குறை, தமிழுடன் இரண்டு நிமிடங்கள் சேர்ந்தது போல் கூட பேச முடியாமல் தள்ளி நிற்க வேண்டியிருந்ததுதான்.

அவளின் வயது, பிறரிடம்  வெளிப்படுத்தப்படாத தங்களின் காதல் என்று மூன்றரை வருடங்கள் மௌனமாக மனதில் வளர்ந்து நின்ற காதல், ஊருக்கு வந்து அவளைப் பார்த்ததும் அதிகம் எதிர்பார்க்காவிட்டாலும் உரிமையுடன் ஓரிரு வார்த்தைகளைப் பேசக் கூட முடியாததில் பெரிதும் ஏங்கிப் போனது.

ஒரு மாதம் முடிந்து மீண்டும் அவன் வேலைக்கு என்று சென்றால் முன்னர் போல் அவளுடன் தொடர்பே இல்லாது இருக்க எல்லாம் அவனால் முடியாது. அவளுக்குமே அது பெரும் தண்டனை என்றுதான் தங்கையின் திருமணம் முடிந்த கையோடு, தங்கள் காதலை இரு வீட்டாரிடமும் பக்குவமாக எடுத்துச் சொல்லி விட்டிருந்தான்.

அப்படி சொல்லிவிட்ட பின்னும், அவர்களுக்கு என்று பிரைவேசியாக யாரும் நேரமோ இடமோ ஒதுக்கித் தரவில்லை.

இவர்கள் விஷயம் அரசல் புரசலாக தெரிய வந்த பின், எல்லோர் கண்களும் இவர்கள் மேலேயே கண்காணிப்பாய் படிய, நெருங்கிப் பழகி அவர்கள் கண்களுக்கு விருந்தாகி தங்கள் உறவை கிசுகிசுப்புக்கு உள்ளாக விடாது, விலகி இருந்தே உணர்வுகளால் மற்றவரை உணர்ந்து காதல் செய்தனர் தமிழும் பார்த்தியும்.

இருந்தும் அதி அற்புதமாய் கிடைத்த  ஒரு தனிமையில் அவனிடம் இருந்து அவளுக்குக் கிடைத்த ஒற்றை அணைப்பும், உச்சந்தலை முத்தமும் மட்டும்தான் இந்த எட்டு வருடக்காதலிலும் இருவரும் மற்றவரை ஸ்பரிசத்த ஒரே ஒரு தருணம். அதைக் கூட, மெய் தீண்டலாய் அன்றி உயிர்த் தீண்டலாய்தான் உணர்ந்தனர் இருவரும்.

அந்த முத்தத்தை இப்போதும் மனதால் உணர்ந்து சிலிர்த்தவள், குறுக்கே இருந்த சந்தில் தெரிந்த ஒரு வீட்டை எட்டிப் பார்த்தாள். வீடு பூட்டப்பட்டிருந்தது.

‘அவங்க அம்மா வீட்டுக்குப் போயிட்டா போல’ என்று நினைத்துக் கொண்டே மேலே தன் வழியில் செல்லப் போனவள், எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த நிர்மலாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து,

“அண்ணி, எப்போ வந்தீங்க?” என்று உற்சாகமாகக் கேட்டாள்.

பக்கத்து ஊரில் தான் நிர்மலாவைக் கட்டிக் கொடுத்திருந்தனர் என்றாலும் சின்னதாக மளிகைக் கடை வைத்து நடத்தும் கணவனுக்கு உதவியாக இருக்க வேண்டி, நிர்மலா தாய் வீட்டுக்கு வருவதே குறைவு.

நாளை வரும் பார்த்தியை வரவேற்கத்தான் அவளின் இன்றைய இந்த விஜயம் என்று புரிந்து கொண்ட தமிழ், தன்னவன் வரவைக் கொண்டாட தன்னோடு சேர்த்து ஒரு கூட்டமே இருக்கிறது என்ற எண்ணத்தில் பூரித்துப் போனாள்.

ஆனால் நிர்மலா அவளைக் கண்ட கடுப்பை உள்ளே மறைத்துக் கொண்டவள், அவள் கேள்விக்குப் பதிலாக,

“இன்னைக்குக் காலையிலதான் வந்தேன் தமிழ். ஆனா வந்தும் என்ன பிரஜோசனம்? ஒன்னும் இல்லை. அது சரி, எனக்கு எதுக்குதான் கொடுப்பினை இருக்கு, இதுக்கு  இருக்க? பேசாம ஊர்ல இருந்திருந்தாலாச்சும் என் புருசனுக்கு ஒத்தாசையா ரெண்டு பொட்டலம் கட்டிக் குடுத்திருப்பேன்” என்று விசயத்தை சொல்லாமல் நீட்டி முழக்க தமிழ் முகம் யோசனையில் சுருங்கியது.

நிர்மலாவுக்கு திருமணம் ஆகி இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் இன்னும் குழந்தைச் செல்வம் இல்லை. சதா அந்தக் கவலையிலே உழலுவதால், நிர்மலாவின் பேச்சு எப்போதும் இது போல் தன்னிரக்கத்தில்தான் வரும்.

அதனால் தமிழுக்கு, நிர்மலா மேல் இயல்பாகவே ஒரு பரிவு உண்டு.

“நீங்க இப்பிடிக் கவலைப்படுற அளவுக்கு என்னாச்சு அண்ணி?” என கனிவாகவே வினவினாள்.

“என்ன விஷயம்னு உனக்குத் தெரியாமலா? என்னை விட எங்க வீட்டு சங்கதி எல்லாம் உனக்குதான நல்லா தெரியும்?” வேடிக்கை போல் தன் மன ஆதங்கத்தை சொன்னவள், தொடர்ந்து,

“நாளைக்கு பார்த்தியைக் கூட்டிட்டு வரனு எல்லாரும் கோயம்புத்தூர் போறாங்க. ஆனா என்னை மட்டும் கூட்டிப் போக மாட்டாங்களாம். கேட்டா போகும் போது  தாராளமா இடம் இருக்காம். அங்க இருந்து வரும் போது பார்த்தி வருவான். கூடவே அவன் பெட்டிலாம் வைக்க இடம் இருக்காதாம். இந்த சித்ரா இருக்காளே, அவளுக்குலாம் என் தம்பியைக் கூட்டிட்டு வரப் போகணும்னு என்ன இது இருக்குனு அவ எல்லாம் கிளம்புறா? அவ நின்னு அந்த இடத்தை எனக்குத் தரலாம் இல்லையா? என்ன பண்றது, பொறந்ததுல இருந்து எங்க வீட்ல நான்தான் எல்லாரை விடவும் வஞ்சிக்கப்பட்டவளாவே இருக்கேனே.. ஹ்ம்ம்..” என்று பெருமூச்சு விட, தமிழ் உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் அவளைப் பார்த்தாள்.

சித்ரா என்ற இடத்தில் தமிழ் என்ற பெயரையும் பொருத்திதான் இந்த ஆதங்கத்தை அவள் வெளியிடுகிறாள் என்று அவளுக்கா தெரியாது? அதனால் அமைதியாக அவர் சொல்வதைக் கேட்டபடி நின்றிருந்தவளை, இப்போது மறைமுகத்துக்கும் நேர்முகத்துக்கும் இடையில் உள்ள ஒரு முகத்தில் தாக்க ஆரம்பித்தாள் நிர்மலா.

“ஏன் தமிழ் நீயும் நாளைக்கு அவங்க கூட போறயாமே? வேலைக்கு லீவ் சொல்லிட்டு வந்துட்டியா? இல்ல மறந்துட்டியா?” என்று கேட்டவள் பின் தானாகவே…

“அதெல்லாம் நீ மறந்திருக்க மாட்ட. ஒரு மாசத்துக்கு முன்னாடியே லீவ் சொல்லி இருப்ப..!” என்று கேலி போல் சொல்லி பொய்யாய் சிரித்தாள்.

தமிழ் தன் முகத்தில் எதையும்  காட்டிக் கொள்ளாதவள்,

“லீவு கேட்டேன் அண்ணி! ஆனா நாளைக்கு ஆர்டர் கூட இருக்கிறதால அனாவசியமா யாருக்கும் லீவு தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. நான் நாளைக்கு வேலைக்குப் போயாகணும்” என்று உண்மையை மறைத்து பொய் சொல்ல,

“என்ன சொல்ற தமிழ்?” என்று வார்த்தையில் மட்டும் வருத்தத்தைக் காட்டிக் கேட்ட நிர்மலாவின் கண்களில் வருத்தத்துக்கான சாயல் துளியும் இல்லை.

தமிழுக்குத் தெரியும், அவளுக்கு இந்த செய்தி எவ்வளவு சந்தோசத்தைக் கொடுக்கும் என்று. அந்த சந்தோசம் நாளை அந்த குடும்பத்தின் மொத்த சந்தோஷத்தையும் கெடுக்காது காக்கும் என்று மனதை சமாதானம் செய்து கொண்டவள்,

“ஆமா அண்ணி. எனக்கும் வருத்தம்தான்” என்று தன் வருத்தத்தைக் கூறி அவளுக்கு போனஸ் சந்தோசம் கொடுத்தாள்.

“சரி விடு தமிழ். வேலைனா அப்பிடி  இப்பிடிதான் இருக்கும். பார்த்தி ஒரு மாசம் இங்க தான இருப்பான்? அப்புறம் வந்து அவனைப் பாத்துக்க. இப்போ நீ களைப்பா வந்திருப்ப. எதையும்  யோசிக்காம வீட்டுக்கு போய் ஓய்வெடு. நான் ரூபி வீடு வரைக்கும் போயிட்டு வரலாம்னுதான் வந்தேன்.” என்று விடைபெறும் நோக்கோடு அவள் சொல்ல…

“சரி அண்ணி!” என்று தலையசைத்து அவளுக்கு விடை கொடுத்தவள், அவள் அறியாது ஒரு பெருமூச்சோடு நகர்ந்து சென்றாள்.

இன்று வரை இவர்கள் காதலை  ஏற்றுக்கொள்ளாதவர்கள் இரண்டே பேர்தான். ஒன்று செல்வநாயகம், மற்றொன்று நிர்மலா.

என்ன ஒன்று, செல்வநாயகம் போதை ஏறினால் முகத்துக்கு நேராகத் தன் அதிருப்தியைக் கொட்டுவார். ஆனால் நிர்மலா யாருக்கும் சந்தேகம் வராதவாறு நாசுக்காக அதை வெளிப்படுத்துவாள்.

ஆனால் தமிழ் அவர்கள் இருவரின் வார்த்தைகளுக்கோ செய்கைகளுக்கோ எந்தவித பிரதிபலிப்பையும் காட்ட மாட்டாள்.

சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் சந்திரனின் ஒளி ஒன்றும் மங்கிப் போய் விடாதே! நாய்க்குத்தான் வாய் வலிக்கும். அதுபோல இவர்களின் இந்த சில்லறைத்தனமான செயல்களால் அவர்கள் காதலின் மகிமை குன்றிப் போய்விடுமா என்ன?

தானே பின் வாங்க நின்றாலும் தன்னவன் தன் காதலை இழக்கத் துணிய மாட்டான் என்ற பெரும் கர்வம் ஒன்றே இவர்களை அவள் அமைதியாகக் கடக்கக் காரணம்.

அந்த அமைதி குலையும் காலம் அவள் மறு அவதாரம் என்னவென்று இருவரோடு சேர்த்து மொத்தக் குடும்பமும் அறிந்து கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!