Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 04

தாய்மொழி 04

நிரஞ்சனா திரும்பி வரும் போதும் குடும்பம் மொத்தமும் பார்த்திபனை சுற்றிதான் நின்று கொண்டிருந்தது.

இவளும் வந்ததும் அவனிடம் நலம் விசாரித்து விட்டுதான் தள்ளி வந்து தோழியும் வருங்கால அண்ணியுமானவளை வறுத்தெடுத்திருந்தாள்.

“கிளம்பலாமா?” என்று கேட்டபடி வந்தவளை, “என்ன அர்ச்சனைய முடிச்சிட்டியா?” என்று கேட்டான் பார்த்திபன் நிரஞ்சனாவின் ஒரு வயது மகளைத் தலைக்கு மேல் தூக்கிப் போட்டு கொஞ்சிக் கொண்டே…



Advertisement

நிரஞ்சனா வேறு ஏதோ சிந்தனையில் அவன் கேட்டதைப் புரிந்து கொள்ளாது, “என்ன ண்ணா?” என்று கேட்க,

பார்த்தியை முந்திய அவள் கணவன்,
“அதான் நிரஞ்சா, வீட்ல வண்டில ஏறுனதுல இருந்து இங்க வந்து இறங்குற வரைக்கும் தமிழ அர்ச்சனை பண்ணிட்டே வந்தியே, அந்த அர்ச்சனைய ஃபோன் பண்ணி முடிச்சிட்டியானு கேட்குறாரு உங்க அண்ணா” என்றான் விளக்கமாக.

நிரஞ்சனா கணவனை முறைத்தவள், தமையனிடம்,

Advertisement

“நல்லா திட்டலாம்னுதான் போனேன். அதுல பாதி திட்டி முடிக்கல, அவ பேசினதைக் கேட்டு நேர்ல போய் அவளுக்கு ஆறுதல் சொல்லணும்னு தோண வச்சுட்டா” என்றாள் கவலையாக.

Advertisement

“உனக்கு எல்லா கதையும் இங்க வச்சே பேசணுமா? முதல்ல வீட்டுக்கு போலாம். சின்னவன் எவ்வளவு தூரம் பயணம் பண்ணி வந்திருக்கான்? அவன் நல்லா சாப்டு தூங்க வேணாமா? உன் கதையை எல்லாம் வீட்ல வந்து அளந்துக்கோ!” என்று அதட்டினார் என்றார் அந்தப் பேச்சை வளர்க்க விருப்பமின்றி…

நிரஞ்சனா, “ஆ.. போதும்.. போதும்.. உன் அக்கறை. இந்த வசனத்தை உனக்கு முன்னாடியே உன் மருமக சொல்லிட்டா, ‘அவரை சீக்கிரம் கூட்டி வந்து ரெஸ்ட் எடுக்க வை’னு. சோ நீ பேசி நேரத்தைக் கடத்தாம கிளம்பு!” என்றவள், தமையனிடம் இருந்து தன் மகளை வாங்கக் கையை நீட்டினாள்.

“பாப்பாவை நானே வச்சுக்கிறேன் நிரஞ்சா.” என்றுவிட்டு குழந்தையை அழகாகத் தூக்கித் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்துக் கொண்டு முன்னே நடந்தவன் இதழ்களில் புன்னகையை மிளிர்ந்தாள் தமிழ்.

Advertisement

கையில் துஞ்சும் மழலையின் மென் ஸ்பரிசத்துக்கு நிகராக அவள் நேசமும் நெஞ்சில் நின்று சிலிர்ப்பூட்ட, நெகிழ்ந்தவன் கால்கள் இப்போதே அவள் இருக்குமிடம் செல்லத் துடித்தது.

தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டான் அவளின் சூழ்நிலை உணர்ந்து.

லக்கேஜ்கள் எல்லாவற்றையும் தருண் முன்னமே கொண்டு சென்று வேனில் வைத்திருந்தான் ஆகையால் யாரும் எந்த சுமையும் இன்றித் தங்களை மாத்திரம் சுமந்தபடி நடந்து சென்றனர்.

வரதனும் இவர்களுடன் கடனே என்று வந்தவன், தம்பியிடம் ஒப்புக்காய் நலம் விசாரித்து விட்டு தன் மனைவி மகன்களுடன் ஒதுங்கி நின்று விட்டான்.

சித்ராவும் அப்படியே! கொழுந்தனாரை வரவேற்க என்றெல்லாம் அவள் குடும்பத்துடன் கிளம்பி வரவில்லை, சதா வீட்டிலேயே அடைந்து கிடப்பதற்கு ஓசியில் ஒரு மினி சுற்றுலா மாதிரி சென்று வருவோமே என்றுதான் கிளம்பி வந்திருந்தது அந்தக் குடும்பம்.

சொல்லப்போனால் இந்தப் பயணத்தை மறைமுகமாகத் தொடக்கி வைத்ததே சித்ராதான். சித்தப்பாவை தாங்கள் சென்று அழைத்து வர வேண்டும் என்று மகன்கள் விரும்புகின்றனர் என்று லேசுபாசாய் ஆரம்பித்தவள், வரதனைக் கொண்டு அதை பார்த்திபன் காதில் போட்டும் வைத்தாள்.

பார்த்திபனும் சிறுவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று செலவைத்தான் ஏற்றுக் கொண்டு தருண் மூலம் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தான்.

இது அவனுக்கு வேண்டாத செலவுதான். போன தடவை வந்தது போல் தனியே அவன் வீடு வந்து இறங்கி இருந்தால் இந்தத் தொகையை சேமித்திருக்கலாம்.

குடும்பத்திற்காக என்று எங்கோ கடல் கடந்து உழைக்க சென்றவன், அவர்களின் ஆசையைக் கூட நிறைவேற்றாவிட்டால் பிறகு தான் உழைத்தும் பயன் என்ன என்று முழுமனதாக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தான்.

ஆனால் யார் ஆசைப்படுகிறார்கள் என்று சொல்லி இது எல்லாம் செய்தானோ, அந்த அண்ணன் மகன்கள் இருவரும் இவனை நெருங்கக் கூட இல்லை.

இவனாக வாருங்கள் என்று அழைத்தபோதும் தாயின் பின்னே சென்று ஒதுங்கிக் கொண்டனர்.

இத்தனைக்கும் அவர்கள் இருவரும் பிறந்த போது பார்த்திபன் இங்கேதான் இருந்தான். அவன் வெளிநாடு செல்லும் போது பெரியவனுக்கு மூன்றரை வயதும் சின்னவனுக்கு ஒன்றரை வயதும் இருக்கும். அவர்களே தன்னை அந்நியமாகப் பார்க்கும் போது, தன்னைப் பார்த்தே இல்லாத தங்கை மகள் எப்படித் தன்னுடன் சேர்வாள் என்ற ஐயத்தில் அவளை நோக்கி அவன் கையை நீட்ட, அந்த வாண்டு அவன் கேட்பதற்கு முன்னே அவனிடம் தாவி இருந்தாள்.

அந்தநொடி ஒன்றைப் புரிந்து கொண்டான் பார்த்திபன். குழந்தைகள் தங்கள் தாய் தந்தையின் நடத்தைகளையே பிரதிபலிக்கின்றன என்று!

அண்ணன் மகன்களை தான் அழைத்து அவர்கள் வர மறுத்த போது, அண்ணனும் அண்ணியும் சித்தப்பாதான கூப்பிடுறாரு என்று அவர்களைத் தன்னிடம் செல்ல ஊக்கவில்லை.

மாறாக அண்ணியாகப்பட்டவள், “அவங்களுக்குப் பெருசா உன்னைப் பழக்கம் இல்ல, இல்லயா? அதான் இப்பிடி! எங்க அண்ணன்கிட்டயும் முதல் தடவை இப்பிடிதான் பண்ணாங்க. அப்புறம் அண்ணன் அது இதுனு நிறைய வாங்கிக் குடுத்துதான் இப்போ அவரு கூட சகஜமா பேசவே செய்றானுங்க!” என்று சந்தடி சாக்கில் ‘நீ என் பிள்ளைகளுக்கு எதுவும் செய்யவே இல்லை!’ என்பது போல் சொல்லி விட்டிருந்தாள்.

அவள் பேச்சின் பொருள் புரிந்து, நிரஞ்சனா சூடாக எதுவோ பேசப் போனவள் தமையன் மற்றும் கணவனின் பார்வைக்கு அடங்கி நின்றாள்.

அந்தக் கடுப்பை எல்லாம் சேர்த்துக் கொண்டு போய்தான் தமிழிடம் கொட்டியிருந்தாள்.

நல்லவேளையாக இந்தக் காட்சியில் பாத்திரமேற்று நடிக்க நிர்மலா வரவில்லை. இல்லையென்றால் கூத்து இன்னும் சிறந்திருக்கும்.

ஆம்.. தன்னை விட்டு செல்கிறார்கள் என்று பாவம் போல் பேசி தமிழின் முதல் மன மாற்றத்திற்கு காரணமானவள், தன் சதிச் செயல் நிறைவேற்றப்பட்ட பின்னும் இவர்களுடன் வந்திருக்கவில்லை.

அவள்தான் வரவேண்டும் என்ற முடிவிலேயே இல்லையே! குழந்தைக்கான சிகிச்சையில் இருப்பவளை தூரப் பயணங்களை தவிர்க்க சொல்லி மருத்துவர்கள் சொல்லி இருக்க, தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யவும்; செய்யாமல் இருக்கவும் தயாராக இருப்பவள் அவள் ஆதலால், முன்னமே செல்லக்கூடாது என்று முடிவெடுத்திருந்தாள்.

இருந்தும் தான் செல்லாத போது தன் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத தமிழ் மட்டும் செல்ல வேண்டுமா என்ற காழ்ப்புணர்ச்சியில் தான் அவள் அப்படி பேசியதும் நடந்து கொண்டதும்.

தமிழும் தன்னை அறியாமலும் தந்தையினாலும் அவள் நினைத்ததை நிறைவேற்றிக் கொடுத்து விட்டாள்.

செல்லும் வழியில் தருணிடம் சொல்லி கோவையில் ஒரு நல்ல ஹோட்டலாக நிறுத்தியவன், அவரவருக்கு வேண்டியவற்றை கணக்கே பாராது வாங்கிக் கொடுத்து உண்ண வைத்தான்.

அவன் கணக்கு பார்க்காத தாள்களின் பின்னே கணக்கு வழக்கு இல்லாத அவன் உழைப்பு கரியாவதைப் பார்த்துப் பொறுக்க முடியாத நிரஞ்சனா,

“எதுக்கு அண்ணா இவ்வளவும்? வேற எங்கேயாச்சும் சின்ன ஹோட்டலா பாத்து நிறுத்தி இருக்க வேண்டியதுதானே?” என்று கடிந்து கொண்ட போதும் இன்னைக்கு ஒரு நாள்தானே என்று அவளுக்கு சமாதானம் சொல்லி, உண்ண வைத்தான்.

அவனுக்கு மட்டும் உணவு தொண்டைக் குழி தாண்டி இறங்க மாட்டேன் என்றது.

மூன்று இட்லியை மாத்திரம் வாங்கிக் கொண்டவன், அதில் இரண்டு விள்ளல்களைப் பிட்டு போக்குக்காய் வாய்க்குள் போட்டு விட்டுத் தொடர்ந்து குழந்தை மித்ராவுக்கு ஊட்டிக் கொண்டு இருந்தான்.

இங்கே இருக்கப் போவது இன்னும் முப்பதே நாட்கள். அந்த முப்பது நாட்களிலும் சேர்ந்தார் போல் மூன்று மணி நேரங்கள் தமிழைக் கண்ணால் பார்ப்பதே கடினம் என்ற அளவு இருவருக்கும் இடையில் ஏகப்பட்ட குறுக்கீடுகள் இருக்கிறது.

வாரத்தின் ஆறு நாட்கள் காலை எட்டில் இருந்து மாலை ஐந்து வரை அவளின் வேலை நேரம். அதற்கு மேல் அவளை அவள் வீட்டிலோ தன் வீட்டிலோ சந்தித்துப் பேச நம் பண்பாடும் பழக்கவழக்கங்களும் அனுமதிக்காது.

அவற்றை மீறி அவளுக்கு ஒரு அவப்பெயரை பெற்றுத்தர அவனாலும் முடியாது.

எஞ்சியது ஞாயிற்றுக் கிழமைகள் மாத்திரமே! எப்படித்தான் கால தேவனிடம் காலைப் பிடித்துக் கெஞ்சினாலும் ஒரு மாதத்தில் நான்கு ஞாயிற்றுக் கிழமைகள்தானே கணக்கில் வரும்? அதில் ஒன்று நாளை முடிந்து விடும். நாளை கண்டிப்பாக அவள் வரமாட்டாள்.

மிகுதி மூன்று ஞாயிறுகளிலும் முழுதாக அவள் தன்னுடன் இருந்தால் கூட அவனுக்குப் போதாது. ஆனால் அதற்கும் வாய்ப்பில்லை.

செல்வநாயகம் நிச்சயம் கண் கொத்திப் பாம்பாக அவளைக் கண்காணித்து ஏழரையை இழுத்து விடுவார்.

பின் எப்போதுதான் அவளைக் காண்பது?

தான் இங்கே வந்ததே வீணோ? பேசாமல் இருவருடங்களையும் முடித்துக் கொண்டே இங்கே வந்திருக்கலாமோ? வந்து திருமணம் செய்து கொண்டிருந்தால் இப்படியான இடையூறுகள் ஏதுமின்றி அவளைக் கைகளுக்குள் வைத்து அத்தனை வருட தொலைதூரக் காதலுக்கும் முற்றுப் புள்ளி வைத்து காதலைக் கொண்டாடித் தீர்த்திருக்கலாமே!

இப்படியான கனமான எண்ணங்களின் பிடியில் அவன் மனம் உள்ளுக்குள் துவண்டு போக, வெளியே பஞ்சாய் வெந்திருந்த இட்லி கல்லாய் தெரிந்தது.

நிரஞ்சனா, தருண் தவிர வேறு யாரும் அவன் நிலையைக் கவனித்திருக்கவில்லை.

“அண்ணா! அவ குடலைத் தாண்டி நெஞ்சு வரைக்கும் இட்லியைப் போட்டுத் திணிச்சது போதும். அவளை இங்க குடுத்துட்டு நீ சாப்டு.” என்றவள் பிடிவாதமாக மகளைத் தன்னிடம் பிடுங்கிக் கொண்டாள்.

“இல்ல, எனக்குப் போதும் நிரஞ்சா. ஃப்ளைட்டுலயே சாப்டுதான் வந்தேன்.” சொன்ன கையோடே எழுந்து சென்று கைகளைக் கழுவி வந்தவன், மீண்டும் தங்கையிடமிருந்து மித்ராவைக் கைப்பற்றிக் கொண்டான்.

“நீ இப்பிடிலாம் பண்ணப் பண்ணத்தான் எனக்கு அவ மேல கோபம் கோபமா வருது. என்னை அநியாயத்துக்கு வில்லி நாத்தனாரா ஆக்கப் பார்க்கிற நீ!” என்றவள் தமையனை முறைக்க,

தருண், “ஆமா, மச்சான்! உங்களாலதான் என் பொண்டாட்டி கூனி, சூர்ப்பனகையா மாறிக்கிட்டு வரா. இல்லனா என் பொண்டாட்டி எவ்ளோ சாந்தமானவ தெரியுமா?” தீவிரமான குரலில் மனைவியை நக்கல் பேசினான் தருண்.

நிரஞ்சனாவின் முறைப்பு கணவனிடம் இடம் மாற, இருவரையும் பார்த்த பார்த்திபன், தற்காலிகமாக தன் மனக்கவலையை மறந்து சிரித்தான்.

“இப்பிடி சிரிச்சு சந்தோஷமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கு உன் முகம்? அதை விட்டுட்டு வந்ததுல இருந்து முகத்துல அருளே இல்லாம இருந்துக்கிட்டு…” என்றார் பர்வதம் தாயாக.

“அம்மா! நீ சொல்ற மாதிரி உன் பையன் சிரிச்சிட்டே இருக்கணும்னா, அவன் எதை நினைச்சுக் கவலைப்படறானோ அதை முதல்ல தீர்த்து வைக்கணும். அதை விட்டுட்டு சும்மா எல்லாம் வாயால அளந்து விடாத!” என்று வெடுக்கென்று சொல்லி விட, பர்வதம் உடனே கண்ணில் தண்ணி வைத்துக் கொண்டார்.

“ஏன்டி என்கிட்ட எப்போவும் இப்பிடி வெடுக்கு வெடுக்குனு பேசுற? நான் உன்னைப் பெத்தவதான? என்னவோ என்னை மாமியார் கணக்கா நினைச்சு சதா கொட்டிட்டே இருக்க? எனக்கு வந்த மருமக கூட என்னை இப்பிடி மனசு நோகப் பேசினதில்ல.” என்றார் மூக்கை உறிஞ்சி.

அவர் அப்படி சொன்னதும் சித்ராவின் முகத்தில் வந்து போன தேஜஸை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

அதை நொடியில் சுட்டுப் பொசுக்கியிருந்தாள் நிரஞ்சனா.

“ஓஓ… அப்பிடி? எனக்கு உன்கிட்ட இருந்து எந்த ஆதாயமும் வேண்டியது இல்ல. அதால என் பேச்சுல உண்மை முள்ளா குத்ததான் செய்யும். இந்த விஷத்துக்கு மேலாப்புல தேன தடவி முழுசும் தேன்னு நம்ப வச்சு குடிக்க வைக்கிற வித்தை எல்லாம் எனக்குத் தெரியாது” என்று விட்டாள்.

சித்ரா முகம் நொடியில் மாறினாலும் அதே வேகத்தில் மீண்டும் தன் முகத்தை சீராக்கித் கொண்டவள், நிரஞ்சனாவின் பேச்சுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் மகன்கள் தட்டில் மீன் வறுவலை எடுத்து வைத்தாள்.

அதைக் கவனித்த நிரஞ்சனா, “சரியான பச்சோந்தி” என்று வாய்க்குள் முணுமுணுக்க அவள் அருகில் இருந்த தருண்,

“ரஞ்சி! எது பேசுறதா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம். இப்போ வாய சாப்பிடுறதுக்கு மட்டும் திற!” என்று சிறு கண்டிப்பாய் கூற, அவன் சொல்லை மதித்து அமைதியாக உண்ண ஆரம்பித்தாள் அவள்.

நடந்தவற்றைப் புரியாது பார்த்திருந்த பார்த்திபனும் யாரை என்ன சொல்வது என்று தெரியாமல் இன்னுமே கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தாயிடம்,

“அம்மா.. நிரஞ்சா பத்திதான் தெரியுமே! பட படனு பேசிடுவாளே தவிர மனசுல பாசத்தைத் தவிர எதுவும் இருக்காது. அவ பேசிட்டானு நீங்க அழுவிங்களா? உங்க பொண்ணுதான அவ? திருப்பி என்னனு அவளைக் கேட்காம இப்பிடி பொது இடத்துல அழுகிறது நல்லாவா இருக்கு? கண்ணைத் தொடைச்சுட்டு சாப்பிடுங்க மா!” என்றிட, பர்வதமும் இருக்கும் இடம் உணர்ந்து கண்களைத் துடைத்துக் கொண்டவர்,

“அவ மனசுல இருக்கிறதுதான் சின்னவனே வெளிய வருது. அது எதனாலனும் எனக்கு நல்லாவே புரியுது. ஆனா என்னால என்ன பண்ண முடியும்?” என்று தன்பாட்டில் ஏதோ புலம்ப ஆரம்பித்தவர், பட்டென தன்னை சுதாரித்து நிறுத்திக் கொண்டார்.

பார்த்திக்குத்தான் அடியும் புரியவில்லை, நுனியும் புரியவில்லை.

அவன் சாதாரணமாக இருந்திருந்தால் விடயம் தன் திருமணம் சம்பந்தப்பட்டது என்று உடனே புரிந்து  கொண்டிருந்திருப்பான்.

அதைப் பற்றிய பேச்சு வார்த்தை ஏதோ முன்னமே தாய்க்கும் தங்கைக்கும் இடையே நடந்துள்ளது, அதைத் தொட்டே இந்த வாதப் பிரதிவாதங்கள் என்றும் புரிந்திருக்கும்.

அவன் மனதில் தற்சமயம் தமிழைக் குறித்த ஏகப்பட்ட ஏக்கங்கள் சூழ்ந்து நின்றதில் ஆரம்பத்தில் இருந்து இவர்களின் பேச்சில் சரியாகக் கவனம் வைத்திருக்கவில்லை.

இருந்தாலும் மேற்கொண்டு எதையும் இங்கே பேசிக் கொள்ள வேண்டாமே என்று,

“அம்மா! எதுவா இருந்தாலும் வீட்டுக்குப் போய் பேசிக்கலாம் மா. இப்போ அமைதியா சாப்பிடுங்க” என்று கண்டிப்பான குரலில் சொல்லவும், அந்தக் குரலை மீறி எதையும் பேச முடியாது பர்வதமும் அமைதியாகி விட்டார்.

வந்திறங்கிய முதல் நாளே இத்தனை பெரிய பஞ்சாயத்தா என்று மனதுக்குள் பெருமூச்சு விட்டுக் கொண்டவன்,

‘தமிழ்! இங்க இருக்கற வரைக்கும் என்னைக் கொஞ்சம் நிதானமா வச்சுக்கோ டி.’ என்று கடவுளிடம் வேண்டுதல் வைப்பது போல் மனதில் அவளிடம் பிரார்த்தித்துக் கொண்டான்.

நாம் சாதாரணமாய் ‘கடவுளே!’ என்று கை கூப்பி நிற்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் இவன் இப்படித்தான் ‘தமிழே!’ என்று உருகி வேண்டி நிற்பான்.

சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் ஒருங்கே பெறும் இடம் ஆண்டவன் சந்நிதானம் என்றால், அவனுக்கு அவை கிடைக்கும் ஒரே இடம் அவள் சந்நிதானம் தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!