“உன்னை இனி நீங்கேன்.” என்று தமிழுக்குக் கொடுத்த வாக்கைத் தவறப் போகிறோம் என்றறியாத பார்த்தி, தமிழுக்கு அடுத்து தன் வீட்டினர் அனைவரையும் அழைத்துத் தன் முடிவைக் கூற எண்ணியிருந்த வேளை ராஜேஷ் தேடி வந்து சொன்ன சுப செய்தியில் வீடே திருவிழாக்கோலம் பூண்டது.
Advertisement
ஆம்… பத்துப் பன்னிரண்டு வருடங்கள் மேலாகியும் மழலை வரம் அருளப் பெறாத ராஜேஷ்-நிர்மலா தம்பதியினருக்கு இறைவன் இரங்கி விட்டிருந்தான்.
Advertisement
அந்த நல்ல விஷயத்தோடே பார்த்தி தான் எடுத்த முடிவையும் சொல்லி விட, ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு மகிழ்ச்சி.
Advertisement
ராஜேஷ் ஸ்டிரிக்ட்டாக சொல்லி விட்டிருந்தான், நிர்மலா இருக்கும் நிலைக்கு அவளால் திருமணத்துக்காக என்று இங்கே எல்லாம் பயணம் செய்ய முடியாதுதான். ஆனால் அதற்காக எல்லாம் திருமணத்தைத் தள்ளி வைக்க வேண்டாம் என்று!
Advertisement
பார்த்தி மறுத்துப் பேச வந்தபோது கூட, “இங்க பாரு மாப்பிள்ளை, நான் மத்தவங்க மாதிரி மாப்பிள்ளை முறுக்கைத் தூக்கிட்டு பொண்டாட்டி வீட்டு விவகாரத்துல மூக்கை நுழைக்கிற ஆள் இல்ல. ஆனா இந்த விஷயத்துல நீ என் பேச்சைக் கேட்டுத்தான் ஆகணும். இல்லேனா நானும் வேற மாதிரி மாறிடுவேன்.” என்று விட்டிருந்தான்.
பார்த்தியும் அத்தான் காரணம் இல்லாமல் இப்படி வற்புறுத்தமாட்டார் என்று அரை மனதாய் ஒப்புக் கொண்டான்.
நிர்மலா இல்லாது பார்த்தியின் திருமணத்தை நடத்த நிரஞ்சனா, தருணுக்குமே இஷ்டமில்லை. அதனால் அவர்களும் ஏன் இந்தப் பிடிவாதம் என்று தனியாக ராஜேஷைப் பிடித்துக் கேட்டு நிற்க,
அவனோ, “இருந்திருந்திட்டு அவனே இப்பதான் இறங்கி வந்து கல்யாணம் பண்ணுறேன், இங்கேயே பொழைச்சுக்கிறேன்னு நிக்கிறான். இப்போ நிர்மலா பிரசவம் தாண்டி கல்யாணம் பண்ணிக்கோனு சொன்னா, எப்பிடியும் குழந்தை பிறந்து மூணு மாசம் மேலதான் தேதி குறிக்க வேண்டி வரும். அதுக்கு ஒரு வருஷம் மேல இழுத்துக்கும். அதை சாக்கு சொல்லி அதான் ஒரு வருஷம் இருக்கேனு அவன் பாட்டுக்கு கிளம்பி போக நின்னுட்டான்னா?
அவனுக்கே இஷ்டம் இல்லேன்னாலும் அத்தை அனுப்பி வைக்க பார்த்தாங்கனா? அந்தப் புள்ளை தமிழ் எப்பிடி சமாளிக்கும் சொல்லுங்க?” என்று நியாயமாகக் கேட்க, இருவருக்கும் கூட அவன் சொல்வதே சரி என்று பட்டது.
சித்ரா மானசீகமாக இதை வெறுப்பாய் உணர்ந்தாள் என்றால் பர்வதம் உண்மையைப் போட்டுடைக்க அச்சப்பட்டு, நிர்மலா இல்லாமல் திருமணம் நடப்பது சரிவராது என்று பிடிவாதமாக நின்றவர் அடுத்து ராஜேஷ் சொன்னது போல்,
“அவ பிரசவம் முடிஞ்சதுமே கல்யாணத்தை வச்சுக்கலாம். அதுக்கு இன்னும் நிறைய மாசம் இருக்கு. அதுக்குள்ள சின்னவன் ஆசைப்பட்ட மாதிரி மறுபடி குவைத் போயிட்டு வந்திடட்டுமே!” என்று பதட்டத்தை மறைத்து சாதாரணமாய் சொல்ல…
தருண், நிரஞ்சனா இருவரும் ராஜேஷைத் திரும்பிப் பார்த்தனர்.
அவனும் ‘பார்த்தீர்களா?’ என்ற பார்வையை இவர்களுக்குக் கொடுத்தான்.
நிரஞ்சனாவு திரும்பி அண்ணனைப் பார்த்தாள்.
அவன் முகத்தில் இருந்த குழப்ப ரேகைகளே, அவன் எடுத்த முடிவில் இருந்த உறுதி குறைந்து தாயின் வாய்மொழி உரைத்த எண்ணங்கள் சரியாக இருக்குமோ என்ற சிந்தனைக்கு தாவிவிட்டான் என்று கட்டியம் கூற, தான் களத்தில் குதித்தாள்.
“அம்மா! வேணாம் மா… என்னைப் பேச வைக்காத. நீ அக்காக்காகத்தான் இவங்க கல்யாணத்தை பிற்போட நினைக்கிறியா? அப்பிடினா ரெண்டு மாசம் முன்னாடி இவங்க கல்யாணத்தைப் பத்திப் பேசினப்போ ஏன் ‘வேணாம், ரெண்டு வருஷம் போகட்டும்’னு சொன்ன?” என்ற, இப்போது பார்த்தியின் பார்வை கூர்மையாய் தாயின் மேல் படிய பர்வதம் வியர்த்துப் போனார்.
“நா..நான் அது… சின்னவனுக்கு அதுதானே விருப்பம்னு சொன்னேன்.” என்று அவர் திணற,
“எங்களுக்கும் அண்ணாவோட அந்த விருப்பம் தெரியும். ஆனாலும் கல்யாணத்தை முடிச்சுட்டு எங்கனாலும் போன்னு அவரு நல்லதுக்கு அவருக்கிட்டவே போராடிட்டு இல்ல? என்னைக் கூட விடு, அத்தான பாரு. அவரு பொண்டாட்டி இல்லனாலும் அண்ணன் கல்யாணம் நடக்கணும்னு நிக்கிறாரு.
ஆனா நீ அவன் அம்மாவா இருந்துக்கிட்டு, போய்ட்டு வரட்டும்.. போய்ட்டு வரட்டும்கிற! பெத்த பிள்ளை வாழ்க்கையை விட, அங்க போய் அண்ணா அனுப்புற பணம்தான் பெருசா போச்சா உனக்கு?” என்றவள் சுள்ளெனக் கேட்டுவிட, பர்வதம் துடிதுடித்துப் போனார். கண்களும் நீரால் நிரம்பி விட்டிருந்தது.
நிரஞ்சனாவிடம் இருந்து இப்படி ஒரு பேச்சை எதிர்பாராதவர்கள் முதலில் திகைத்து பின் மூவரும் ஒருமித்த குரலாய் அவள் மீது கண்டிப்புக் குரல் எழுப்பியும் அவள் தன் வாதத்தில் இருந்து பின்வாங்கவில்லை.
“நீங்க என்ன சொன்னாலும் சரி, இவங்க பண்ணுறதைப் பார்த்தா எனக்கு அப்பிடித்தான் தோணுது. அப்பிடி இல்லனா அவங்களை அதை நிரூபிக்க சொல்லுங்க. அண்ணா ஏன் குவைத் போயே ஆகணும்றதுக்கான நியாயமான காரணத்தை சொல்ல சொல்லுங்க. நானே முன்ன நின்னு அண்ணாவை அனுப்பி வைக்கிறேன்.” என்று கேட்டு நிற்க, சித்ராவுக்குப் பக்கென்றது.
எங்கே மகள் கொட்டிய கொடுக்கில் இவர் உள்ளதையெல்லாம் கொட்டி விடுவாரோ என்று உள்ளே பதறினாள்.
அந்நேரம் பர்வதம் தன் கலங்கிய கண்களை நொடிக்கும் குறைவாக சித்ரா புறம் திருப்பியிருக்க, அந்தக் குறுகிய நேரத்துக்குள்ளேயே அவருக்கு விழிச் சமிக்ஞை அனுப்பியிருந்தாள் அவள்.
அதில் இன்னுமே கலக்கம் கூடிப் போனவர், “என… எனக்கு இதுல எந்த உள்நோக்கமும் இல்ல. என் புள்ளை வாழ்க்கையை விட அவன் அனுப்புற பணம் எனக்கு ஒண்ணுமே இல்ல. அவனோட நல்லதுக்காகத் தான் நான் சொன்னேன்.” என்றார் தழுதழுத்த குரலில்.
அவர் சொன்னது முழுதும் பொய் என்றில்லை. பாதி உண்மையைத் தான் சொல்லியிருந்தார். பார்த்தி நன்றாக இருக்க வேண்டும். எங்களுக்காக எல்லாம் செய்தவன், அவனுக்கென்று எதுவும் இல்லாதவனாக அவன் நின்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான் அவரின் இந்தப் போராட்டம். என்ன, முழு உண்மையை சொல்லத்தான் தைரியம் வர மறுக்கிறது!
“ஆ… நல்லா சொல்லுவீங்க நீங்க…” என்று நிரஞ்சனா பேச ஆரம்பிக்க பார்த்தி குறுக்கிட்டவன்…
“நிரஞ்சா! நீ இரு…” என்றுவிட்டுத் தாயை நேருக்கு நேர் நோக்கியவன்,
“அம்மா! உங்க மனசுல என்ன உறுத்திட்டு இருக்குனு தெளிவா சொல்லுங்கமா. நான் அதைக் கேட்டுட்டு என் முடிவை எடுத்துக்கிறேன்.” என்று தன்மையாககக் கேட்க, அவருக்குக் குற்றவுணர்ச்சி கொன்றது.
உண்மையைக் கொட்டவும் முடியாமல் உள்ளே வைத்து அழுத்தவும் முடியாமல் திணறிப் போனவர், “எ…என் மனசுல என்னப்பா இருக்கு? ஒன்னுமே இல்ல. உன் விருப்பத்துக்காகத்தான் பார்த்தேன்.” என்றார் அப்போதும்.
“நிஜமாவே ஒன்னும் இல்லதானேமா?” அவரின் தடுமாற்றத்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவன் கேட்க தடுமாறினாலும் கடைசிவரை ஒன்றும் இல்லையென்றே சாதித்தார் அவர்.
அதை நம்பிய பார்த்தியும் திருமணத்துக்கான அடுத்தடுத்த வேலைகளைத் திட்டமிடத் தொடங்கி விட்டிருந்தான்.
மனதுக்குள் ஆயிரம் யோசனைகள் இருந்தாலும் கடமையில் தவறாதவனாக, அன்று மாலையே குடும்பத்துடன் தமக்கையை சென்று பார்த்தவன் அவளுக்கு பத்திரங்கள் கூறி விட்டுத் தன் திருமண செய்தியைக் கூறியிருந்தான்.
அவளுக்குத் தான் இல்லாமல் அவன் திருமணம் என்பது வருத்தத்தைத் தந்தாலும் காலங்கள் கடந்து தாயாகப் போகும் பூரிப்பில் வழமையைப் போன்று தன் விஷத்தைக் கக்கவில்லை அவள்.
குழந்தை பிறக்கும் வரை டென்ஷன் இல்லாமல் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ள சொல்லியிருந்தாரே மருத்துவர்.
அதில் அவள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியை மட்டுமே தத்தெடுத்துக் கொள்ள, அவளின் இந்த மகிழ்ச்சிக்கான சிலுவை பார்த்தி மற்றும் தமிழ் இருவரின் தோள்களில் ஏறக் காத்திருந்தது.
பர்வதமும் மகன், தான் இனி இங்கேதான் என்று மூத்த மகளிடம் செய்தி தெரிவித்ததில் இருந்து அவள் முகத்தில் எதுவும் சிந்தனை ரேகைகள் தெரிகின்றதா என்று சோதித்துப் பார்த்தவர், அப்படி எதுவும் தெரியாது போனதில் இன்னும் மனம் சோர்ந்து போனார்.
தமக்கையைப் பார்த்து வந்த மறுதினம் பார்த்தி ஆனந்தனை சந்தித்தவன்…
“அண்ணா! கல்யாணம் பத்தி வீட்டுல பேசிட்டேன். வீட்டுல இருந்து வந்து உங்ககிட்ட பேசுவாங்க. ஆனாலும் எனக்கு… நானே உங்ககிட்ட எல்லாம் பேசிட்டாதான் திருப்தியா இருக்கும்.” என்று ஆரம்பித்தவன் தெள்ளத் தெளிவாய் தன் மனதின் எண்ணங்களை விவரித்தான்.
“கல்யாணத்தை சிம்பிளா கோவில்லயே வச்சுக்கலாம்ணா. ரொம்ப நெருங்கினவங்களுக்கு மட்டும் வீட்டோட பந்தலைப் போட்டு விருந்து வச்சுக்கலாம். அதுக்கான செலவை ரெண்டு சைடுமே ஏத்துக்கலாம். அடுத்து அவங்க இவங்க சொல்றாங்கனு சீர் செய்றேன்னு செலவை இழுத்து விட்டுக்காதீங்க. எங்க வீட்டுக்காரங்க என்னை மீறி எதுவும் கேட்க மாட்டாங்க. ஒருவேளை எனக்குத் தெரியாம உங்களை சந்திச்சுக் கேட்டா கூட, என்னைக் கூட்டிட்டு வந்து பேசுங்கனு சொல்லி விட்டுடுங்க.
உங்களால இப்போ இருக்க கையிருப்பை வச்சு என்ன முடியுமோ அதை மட்டும் செய்தா போதும்ணா. ஒருவேளை உங்க தங்கச்சிக்கு அதிகமா செய்யணும்னு விருப்பம் இருந்தா, நீங்க இனி சம்பாதிக்கிறதுல கொஞ்சம் கொஞ்சமா பண்ணுங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட அப்புறமும் தமிழ் உங்களுக்குத் தங்கச்சிதான். அதால மொத்தமா குடுத்து கடனை கழிச்சு விட்டுடணும்னு நீங்க அதிகமா கடனை வாங்காதீங்க.
என்னடா இவன் எனக்குப் புத்தி சொல்றான்னு யோசிக்காதீங்க! கடன் ஒரு குடும்பத்தை எப்பிடியெல்லாம் போட்டு ஆட்டி வைக்கும்னு என்னை விட நல்லாத் தெரிஞ்சவன் யாருண்ணா இருக்க முடியும்?
எங்களுக்காக கடன் பட்டு நீங்க அதை அடைக்கக் கஷ்டப்படுறதை பார்த்திட்டு எங்களால சந்தோஷமா இருக்க முடியாதுணா.
அதோட உங்களுக்கே தெரியும், எங்க குடும்ப சூழ்நிலை தெரிஞ்சு என் அத்தானும் நிரஞ்சனா மாப்பிள்ளையும் சீர் விஷயத்துல எவ்வளவு பெருந்தன்மையோட நடந்துக்கிட்டாங்கனு. அந்த நேரம் நான் அடைஞ்ச நன்மையை இந்த உலகத்துக்கு நானும் திரும்ப செலுத்தணுமே அண்ணா! அப்போதான நல்லது மீள் சுழற்சில நம்மை சுத்தி இருக்கும்? அதுக்கு எனக்கு வாய்ப்புக் குடுங்கணா.” என்று கேட்டிருந்தான்.
அவன் பேசப் பேச ஆனந்தனுக்கு அவன் மேல் இருந்த அபிப்பிராயம் மேலும் கூடிக் கொண்டே போனது. தங்கையின் தேர்வை மனதார மெய்ச்சியும் கொண்டான்.
“நீ என்னைப் பத்தி யோசிச்ச மாதிரியே என் தங்கச்சியும் யோசிச்சிருக்கா, பார்த்தி. ஒவ்வொரு மாச சம்பளத்திலயும் தன் செலவு போக மிச்சத்தை என்கிட்ட கொடுத்திடுவா. அத வச்சு நம்ம முதலாளிக்கிட்ட சீட்டுப் போட்டு கொஞ்சம் சேர்த்து வச்சிருக்கன். அதுவே அவளுக்கு செய்யப் போதுமா இருக்கும்.
ஆனாலும் நீ சொன்ன மாதிரி என்னால முடிஞ்சதையும் நான் செய்வேன். நிச்சயமா அந்த எல்லை, நீங்க என்னை நினைச்சுக் கவலைப்படுற மாதிரி இருக்காது.” என்று அவனும் வாக்குத் தந்தான்.
அதன் பின் ஆனந்தன் தன் வீட்டில் பார்த்தி பேசியதை சொல்லி, அவர்கள் வீட்டில் இருந்து விரைவில் பேச வருவார்கள், தயாராக இருக்கும்படி சொன்னவன் செல்வத்திடம்,
“அவனை விட வேற ஆம்பளையே இல்லையானு கேட்டீங்கல? இப்போ சொல்லுங்க, அவனை விட நல்லவனா ஒருத்தனை உங்க பொண்ணுக்குப் பார்த்துக் கொண்டுவர முடியுமா உங்களால?” என்று கேட்க, அவர் அப்போதும் அடங்காமல்,
“அவன் உன்கிட்ட நல்லா நடிக்கிறான்டா. அது தெரியாம உனக்கு செலவில்லாம ஓசில ஒரு மாப்பிள்ளை கிடைச்சிட்டான்னதும் நீ அவனைத் தூக்கிட்டு ஆடுற. ஒருநாள் இல்லனா ஒருநாள் அவன் குணம் உங்க எல்லாருக்கும் தெரிய வரும். இப்போ கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி பண்ணிட்டு ஒருநாள் இவளை அம்போனு விட்டுட்டு ஓடத்தான் போறான் அவன்.”
“என்ன மனுஷன்யா நீ? பிள்ளை வாழ்க்கை பத்தி நல்ல விஷயம் பேசிட்டு இருக்கும் போது இப்பிடி நஞ்சைக் கக்கிறியே! இவ அப்பன்தான நீ?”
“அதை நீதான்டி சொல்லணும். இதுகளை நீ எனக்குப் பெத்திருந்தா என் பேச்சைக் கேட்காம போகுங்களா இதுங்க?”
“ஐயோ… கல்யாணத்துக்கு வளர்ந்து நிக்கிற பிள்ளைங்களை வச்சிக்கிட்டு என்ன பேச்சுயா பேசுற? இப்பிடித்தான் பேசிட்டுத் திரிவேன்னு தெரிஞ்சிருந்தா சாமி பிறக்கும் போதே உன்னை ஊமையா படைச்சிருக்கக் கூடாதா?” என்று அவர் புலம்ப,
“என்னடி சொன்ன?” அடிக்கப் பாய்ந்தார் செல்வம்.
ஆனந்தன் குறுக்கே நின்று அவரைத் தடுத்தவன்,
“அம்மா! அவர்தான் கழுத்து வரைக்கும் போதையேறி கண்டபடி பேசுறாருனு தெரியுதில்ல? அப்புறம் ஏன் அவரோட கூடக் கூடப் பேசிக்கிட்டு? உள்ள போய் படுங்க நீங்க. தமிழ்! அம்மாவை அழைச்சிட்டு உள்ள போ.” என்ற தமிழும் தாயை அழைத்துச் சென்றாள்.
அவர்கள் சென்றபின்னும் துள்ளிக் கொண்டிருந்த செல்வத்தைப் பார்த்தவன்,
“இங்க பாருங்க, என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு. கூடிய சீக்கிரம் தமிழுக்குக் கல்யாணம் நடக்கப் போகுது. அது வரைக்குமாவது பிரச்சனை பண்ணாம ஒழுங்கா இருந்துக்கோங்க. இல்லேனா கள்ளச்சாராயம் விக்கிறார்னு கேஸ் கடுத்து நானே உங்களை உள்ள தள்ளிடுவேன்.” என்று லேசாய் மிரட்டி விட்டு அவனும் அவனிடத்தில் சென்று படுத்துக்கொண்டான்.
கேஸ் சென்றதும் செல்வமும் கொஞ்சம் அடக்கி வாசித்தவர் வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே அதீத போதையால் அந்த இடத்திலே கையை காலை எறிந்து படுத்துவிட்டார்.
மறுநாள் தங்கள் வீட்டில் இருந்து பேச வருவதாக பார்த்தி அழைத்து சொன்னதும் காலையிலேயே தகப்பன் கண்ணில் படுமாறு பணத்தை வைத்துவிட்டான்.
அவரும் அவனின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் பணத்தை எடுத்துக்கொண்டு காலையிலே டாஸ்மாக் தேடி சென்றிருந்தார்.
திட்டம் போட்டு அவரை அகற்றி இருந்தாலும் மனதுக்குள் கொஞ்சம் நெருடல் இருக்கவே செய்தது மூவருக்கும்.
ஆனால் அவர்களாலும் என்னதான் செய்ய இயலும்? திருமணம் முடியும் வரை இப்படி சாமர்த்தியமாக ஏதேனும் செய்து அவரை ஓரங்கட்டினால் தான் எல்லோருக்கும் நல்லது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டனர்.
10 மணியளவில் நிர்மலா தவிர்ந்த பார்த்தியின் குடும்பம் மொத்தமும் தமிழின் வீட்டில் கூடியிருந்தது. ராஜேஷ் கூட மனைவியை தாயோடு விட்டுவிட்டு வந்திருந்தான்.
அது ஒரு திருமணத்தைப் பற்றி பேசி முடிவெடுக்கும் நிகழ்வாக அல்லாமல் சம்பிரதாயமாக பெண்பார்க்கும் படலமாக அதை மாற்றி பார்த்தியையும் தமிழையும் ஓட்டியே அந்த இடத்தை கலகலப்பாக்கினர் அண்ணன் தம்பி இருவரும்.
மணமக்கள் இருவரையும் தலையை நிமித்த விடாத அளவு கேலி பேசி ஒரு வழியாக அடுத்து வந்த பதினான்காம் நாளில் திருமணம் என்று முடிவு செய்து கிளம்பினர்.
பர்வதம் பெரிதாக எதிலுமே கலந்து கொள்ளவில்லை. அமைதியாக இருந்தே எல்லாவற்றுக்கும் ஆமோதித்தார்.
அதுவரை நாணத்தில் தலை கவிழ்ந்திருந்த தமிழ், அவன் செல்லப் போகிறான் என்ற நேரம் வந்ததும் நிமிர்ந்து அவன் முகத்தையே ஒருவித ஏக்கம் சுமந்து பார்த்தாள்.
இதுவரை நீ அருகில் இருந்த பொழுதை உன்னை ரசித்துப் பிரயோசனமாய் போக்காமல் நாணத்தால் வீணடித்தேனே என்றது அந்தப் பார்வை.
அவளிடம் விடைபெறுவதற்கு வேண்டி அவளைப் பார்த்தவனுக்கும் அவள் பார்வை புரிந்து போக,
‘இன்னும் கொஞ்சநாள் இந்த ஏக்கம் எல்லாம். அதன் பின் மொத்தமாய் துடைத்தெறிந்து விடுகிறேன் ஏக்கத்தையும் தூக்கத்தையும்!’ கண்களில் சிரிப்போடு கவிதையும் கல்மிஷமுமாய் அவள் விழிகளுக்கு ஆறுதல் சொன்னவன், சிறு தலையசைப்போடு விடைபெற கூடுதலாய் சிவந்து விட்ட கன்னங்களோடு அவளும் தலை குனிந்து தலையசைத்து அனுப்பி வைத்தாள்.
மழையும் வெயிலும் அபூர்வமாய் சந்தித்துக் கொள்ளும் பொழுதுகளில் நிபந்தனைகள் பொருந்தி வர, சொற்ப நிமிடங்களே தோன்றி மறையும் வானவில் போல்தான் இவர்கள் வாழ்க்கையும்!