Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 9

9



Advertisement

மறுநாள் யாருக்கு பொழுது விடிந்ததோ இல்லையோ, ஜேகோபிற்கு தூக்கம் தூர போனது. எழுந்ததும் கண்களை கசக்கி பார்த்தவனுக்கு சுற்றிலும் இருளே படிந்திருக்க, அலைபேசியை எடுத்து மணியை பார்த்தான். மணி மூன்றாக போவதாக காட்டியது.

Advertisement

கண் விழித்ததுமே அடுத்து பாத்ரூம் நியாபகம் வர, ‘ஐயோ’ என்று இருந்தது அவனுக்கு.  ஆனாலும் எதையும் இங்கே அவனால் மாற்ற முடியாதே! அதையும் விட சகித்துக்கொள்ளும் குணம் அவனுக்கு தாராளமாய் உண்டு என்பதால், உடனே மனதை சமன்படுத்திக்கொண்டு அடுத்த வேலைகளை முடிக்க நகர்ந்துவிட்டான்.

Advertisement

பல்துலக்கி முடித்ததும் இரவு தேவி வைத்துவிட்டு போன தண்ணீர் பாட்டிலில் இருந்த மொத்த தண்ணீரையும் குடித்து முடித்தான். அடுத்து என்ன செய்வதென தெரியவில்லை. சோம்பி இருந்தும் பழக்கமே இல்லை.  மெதுவாக கீழே இறங்கி சென்று கண்ணுக்கெட்டும் தூரம் வரை நடந்துவிட்டு வந்தால் என்ன என்று தோன்ற, ஹூடியை எடுத்து அணிந்துக்கொண்டு மணியை பார்க்க அது நான்கு அருகே நகர்ந்துக்கொண்டிருந்தது.

Advertisement

ஓசையின்றி கதவை சாற்றிவிட்டு திரும்பியவன் கண்கள், அவனறியாமல் எதிர் அறையின் கதவுகளை பார்க்க, மனதுக்குள் ரோஷிணியின் முகம் மின்னி மறைந்தது.  அவள் நினைவு வந்ததுமே ‘இடியட்’ என அவனை மீறி திட்ட வர, அதை மேலும் தொடராமல் விறுவிறுவென படிகளில் இறங்கி சென்றான்.

வெளிக்கதவு பூட்டியிருக்குமோ என்ற ஐயத்தோடு அவன் முன்னேற, அங்கோ இரு கதவுகளும் அகல திறந்திருந்தது.

சிறு ஆச்சர்யத்துடன் அவன் அங்கே போக, ஈரத்தரையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கோலம் போட்டுக்கொண்டிருந்தார் தேவி. அவன் அரவம் உணர்ந்து நிமிர்ந்தவர், விழிகளை அகல விரித்து, “அதுக்குள்ள எழுந்துட்டியா பப்பூ?” என்று வினவ,

“எங்க ஊருல இப்போ மார்னிங் எயிட் தெர்ட்டி” புன்னகையோடு சொன்னவன் திண்ணையில் அமர, “அது உங்க ஊருல தானே? இங்க இன்னும் கொஞ்சம் தூங்கினா என்ன?” கேட்டுக்கொண்டே கோலத்தை தொடர்ந்தார் தேவி.

“அது செட் ஆக டைம் ஆகும்” என்றவன், “மாம்மி கூட இதே மாதிரி ‘சாக் டிராயிங்’ பண்ணுவாங்க சம்டைம்ஸ்” என்றான் ஜேகோப்.

“என்ன சாக்கு டிராயிங்’கா?” என்று சிரித்தவர், “இதுக்கு பேரு கோலம்” என்றார் சிரிப்புடனே.

“நானும் அதான் சொன்னேன்…” என்றவனோ, பக்கத்து வீட்டை தான் பார்த்துக்கொண்டிருந்தான். எட்டிக்கூட பார்க்க தேவையில்லாமல் எளிதாக கண்முன் விரிந்து கிடக்க, ஆள் நடமாட்டமே இருப்பதை போல தெரியவில்லை.

யாரேனும் அங்கிருந்து வெளியே வருவார்களா என அவன் பார்த்துக்கொண்டிருக்க, அவன் மீது நீர் துளிகள் தெளிக்கவே, கவனம் களைந்து திரும்பியவனை, “நான் பேசுறதை கூட கவனிக்காம அப்படி என்ன பக்கத்து வீடு மேல யோசனை?” என்றார் தேவி.

“உன் அம்மா கோலம் கூட போடுவாளா அங்க?” என்று கேட்டதற்கு தான் அவன் பதில் சொல்லாமல் வேடிக்கை பார்த்தபடி இருக்கவும் பக்கத்தில் கிடந்த வாளியில் இருந்து சிறிது நீரை அள்ளி அவன்மீது விளையாட்டாய்  தெளித்திருந்தார் தேவி.

“சாரி ஆன்ட்டி, கவனிக்கல” என்றவனுக்கு அவர் என்ன கேட்டார் என கேட்க தோணவில்லை. மாறாக, “அங்க யாரும் கோலம் போட மாட்டாங்களா?”  என்றான்.

கோலத்தை நிறுத்திவிட்டு அவனை நிமிர்ந்துப்பார்த்தவர், “என்ன அந்த வீட்டு மேல இவ்ளோ ஆர்வம்?” என்றார் சிறு குறும்புடன்.

ஆனால் அவர் ஏன் இப்படி கேட்கிறார் என புரியாதவன், “இல்ல, யாருமே வெளில வரல! நீங்க மட்டும் இந்த டைம்ல இருக்கீங்க… அதான் கேட்டேன்” என்றான். அது உண்மையும் கூட… யாருமே இல்லாத கடைல யாருப்பா டீ ஆத்துற? என்பதை போல, ஆள் அரவமே இல்லாத இருட்டிய நேரத்தில் இன்னமும் கோலம் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறாரே தேவி!

“நான் வெள்ளிக்கிழமை மட்டும் நேரமே எழுந்து இந்த வேலையெல்லாம் பார்த்து, சாமி கும்பிடுவேன்! சின்னதுல இருந்து பழக்கம்! மத்த நாளெல்லாம் ஆறு பக்கம் தான் எழுந்துப்பேன்!” என்றவர், “இங்க எல்லாரும் ஐஞ்சரைக்கு மேல தான் பொழங்க ஆரம்பிப்பாங்க!” என்றார்.

“ஓ!” என்றவன் அந்த பக்கம் யாரும் இப்போதைக்கு வெளிவர போவதில்லை என்று தெரிந்ததும் தேவியின் பக்கமே முழுதாய் திரும்பிவிட, “வேற ஒன்னும் கேட்க வேணாமா பக்கத்து வீட்டை பத்தி?” கேலியாய் கேட்டார் தேவி.

‘வேறு என்ன கேட்பது?’ யோசித்தவனுக்கு அந்த நேரம் ஒன்றும் தோன்றவில்லை. ஆனால், தேவியோ, “உன் மாமனுக்கு ஒரு மக இருக்காளே! அவள பத்தி கேட்க தோணலையா?” என்று கண்ணடிக்க, “சங்கவியா?” என்றான் ஜேகோப்.

ஆச்சர்யத்தில் லேசாக வாய் பிளந்தவர், “பேரெல்லாம் கூட தெரியுமா?” என்றார். அவருக்கு தான் அவனுடன் அந்த தங்கக்கட்டிகள் செய்த அக்கப்போருகள் தெரியாதே!

“உங்க எல்லாரையுமே தெரியும்! மாம்மி சொல்லிட்டே இருப்பாங்க! நான் பேசுனது இல்ல, பட் ஐ க்நொவ் எவ்ரிஒன்”

“அவளுக்கு உடம்பு தான் அங்க இருக்கும்… உயிர் எல்லாம் இங்கயே தான் இருக்கும்! அவளுக்கு இந்த ஊருன்னா ரொம்ப பிடிக்கும்! அப்பா, அண்ணன் மேல எல்லாம் ரொம்ப பிரியமா இருந்தா! அப்படிப்பட்டவ உங்க அப்பாவோட போயிட்டான்னு சொன்னப்போ என்னாலேயே நம்ப முடியல… அப்போ உங்க தாத்தா, மாமாவ நினைச்சு பாரு! எவனோ ஒருத்தனுக்காக எங்களையே தூக்கி எறிஞ்சுட்டாளேன்னு ஆதங்கம், அதை கோவமா  காட்டுறாங்க!” என்றவர்,

“ஆனாலும் நேத்து உங்க தாத்தா இப்படி நடந்துப்பாங்கன்னு நாங்க யாருமே நினைக்கல! உன்னை பார்த்ததும் வெளில அனுப்பிடுவாருன்னு நினைச்சா, ஆளுக்கு முதல்ல உன்னை கைய புடிச்சு உள்ள கூட்டிட்டு வராரு! அந்த வகைல ஒரு நம்பிக்கை வந்துடுச்சு, சீக்கிரமே தேவகியை இந்த வீட்டுல பாக்க முடியும்ன்னு!” பேசிக்கொண்டே வாசல் அடைக்க போட்ட கோலத்தை முடித்து எழுந்தவர்,

“நீ டீ, காபி எல்லாம் குடிக்க மாட்டியாமே!? வேற என்ன தரட்டும்?” என்றார்.

“எல்லாமே கேட்டுட்டீங்களா அம்மாக்கிட்ட?” என்றான் வியப்பாய்.

“பின்ன? என் வீட்டுக்கு உன்னை அனுப்பிருக்கா என் ஃபிரன்டு! உன்னை இங்க பாக்குறதே எவ்ளோ சந்தோசமா இருக்கு தெரியுமா எனக்கு?” என்றவர், அவன் தாடையை பிடித்து கொஞ்ச, அன்னையை தவிர வேறு யாரிடமும் இப்படி ஒரு செய்கையை உணர்ந்திராதவனுக்கு இது பிடித்திருந்தது.

அவர் கையில் இருந்த கோலமாவு துகள்கள் அவன் தாடையில் ஒட்டிக்கொள்ள, ‘அச்சோ’ என்றவர் புடவை முந்தியில் அவன் முகம் துடைக்க, தொண்டையை செருமிக்கொண்டே அங்கே வந்தார் சத்தியநாதன்.

கணவனை கண்டதும் அவர் உடல்மொழி மாற, புருவம் சுருக்கினான் ஜேகோப். தேவகி, ரிச்சர்டை கண்டால் அவரிடம் ஒரு துள்ளல் தான் வெளிப்படும். இங்கே தேவியோ கணவரை கண்டதும் வாத்தியாரை கண்ட மாணவன் போல பம்ம, அவனுக்கு விநோதமாய் இருந்தது.

அவர் வாசலுக்கு வந்ததும் எழுந்து நின்றவன், “குட் மார்னிங் அங்கிள்” என்றான் புன்னகையாய்.  அவன் தன்னிடம் பேசுவான் என எதிர்பாராதவர் முதலில் தயங்கி, பின் சின்ன கெத்துடன், “ஹான், வணக்கம்” என்றார் எங்கோ பார்த்து.

“நீங்க இருங்க, நான் காப்பி எடுத்துட்டு வரேன்” என்ற தேவி, ஜேகோபின் கையை சுரண்டி ‘தன்னோடு வா’ என்பதை போல கண்களால் அழைக்க, அதற்கெல்லாம் பழக்கமே இல்லாதவன், “என்ன ஆன்ட்டி சொல்றீங்க?” என்று வினவி விட, சத்தியநாதன் இவர்கள் புறம் திரும்பி விட்டார்.

கணவன் பார்த்ததும், “க…கேஸ் முடிஞ்சுடுச்சு, சிலிண்டர் மாத்தனும்! வாயேன்” என்றார் ஜேகோபிடம்.

“ஓ! அதெல்லாம் நான் பண்ணதே இல்ல… எப்படி பண்ணனும்ன்னு தெரியாதே!” அவன் யதார்த்தமாய் சொல்ல, ‘ஐயோ இந்த பையனோட’ மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டார் தேவி.

அதற்குமேல் என்ன சொல்லலாம் என அவர் யோசிப்பதற்குள், “உன் சிநேகிதி பையனை நான் ஒன்னும் கடிச்சு தின்னுட போறதில்லை… சீக்கிரம் போய் காப்பி எடுத்தா!” முறைத்துக்கொண்டே சொன்னவர் அவனுக்கு மறுப்பக்க திண்ணையில் அமர்ந்துவிட்டார்.

இதற்குமேல் என்ன செய்யமுடியும் அவரால்…! கணவர் ஏதேனும் அவன் மனம் நோகும்படி பேசிவிடுவரோ என்ற பதட்டத்துடனே மனமே இன்றி அங்கிருந்து சென்றார் தேவி.

திண்ணையில் அமர்ந்திருந்தவன், இடப்பக்கம் திரும்பி சத்தியநாதனை பார்ப்பதும், பின்னே வலப்பக்கம் திரும்பி பக்கத்து வீட்டை பார்ப்பதும் என்றே தான் இருந்தான். அந்த பக்கம் ஆட்கள் இல்லை என்றால், இப்பக்கம் ஆள் இருந்தும் இல்லாதது போல் தான்! தூரத்து பச்சையை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் மனிதர்.

அவர் உடல்மொழியே ‘என்னிடம் பேசாதே’ என அவனுக்கு உணர்த்தி, தள்ளி நிறுத்தியது.

ஆனாலும் எப்படி பேசாமல் எல்லோரையும் வழிக்கு கொண்டு வர முடியும்!? தயக்கத்தை விடுத்தவன், “அங்கிள்… இங்க குளிக்க ஏதோ ரிவர் இருக்குன்னு ஆன்ட்டி சொன்னாங்க நேத்து… எவ்ளோ டிஸ்டன்ஸ்ல இருக்கும் அது?” என்றான்.

அவன் என்னவோ சட்டென பேசிவிட்டான். அவருக்கு தான் அவனுக்கு இயல்பாய் பதில் சொல்லவும் முடியவில்லை. சொல்லாமல் தவிர்க்கவும் மனம் வரவில்லை. பக்கத்து வீட்டை ஒருமுறை பார்த்தார். நண்பனின் தலை தெரிகிறதா என்று! இல்லை என்றதும், ‘க்கும்’ கனைத்தவர், “மேக்கால கொஞ்ச தூரம் போனா வாய்க்கா வரும்” என்றார் யாரிடமோ சொல்வது போல வேறெங்கோ பார்த்து.

அவனுக்கு, ‘மேக்கா…வாய்க்கா’ ஒன்றும் விளங்கவில்லை

“சாரி அங்கிள்… ஐ டின்ட்..கெட் யூ!” என்றவன், “இப் யூ டோன்ட் மைன்ட், நீங்களே என்னை அங்க அழைச்சுட்டு போக முடியுமா?” என்றான்.

‘நானா? இவனையா?’ உள்ளுக்குள் எகிறினாலும், வெளியே அவனிடம் முகத்தில் அடித்தாற்போல ‘முடியாது’ என்று சொல்ல முடியவில்லை.  அவருக்கு தனிப்பட்ட முறையில் தேவகியின் மீது எந்தவித கோபமும் கிடையாது. நண்பனின் வெறுப்பை தன் வெறுப்பாக்கி தள்ளி நின்றுக்கொண்டிருந்தார் இத்தனை நாளும்.

இப்போது பனியில் குளித்த வெண்புறாவென ஒருவன் தன்னிடம் வந்து பேச, அவனிடம் முயன்று கூட கடுமை வர மாட்டேன் என்றது அவருக்கு.

‘நண்பனுக்கு தெரிந்தால் தவறாக நினைப்பானே! அவனுக்கு ஆகாதவனை தான் ஆதரிப்பதாய் நினைப்பானே!’ என்று அவர் யோசனையில் இருக்க, “அங்கிள், நான் ரெடி! போலாமா?” என முன்னே வந்து நின்றான் ஜேகோப்.

கையில் சிறு பை இருந்தது. மாற்றுடை போலும் என எண்ணிக்கொண்டார்.  இருப்பினும், தான் ‘சரி’ என்று சொல்லும் முன் அவன் எப்படி தயாராகி வரலாம் என்ற வீம்பு எழ, “எனக்கு வேலை இருக்கு, அழைச்சுட்டு போக முடியாது” என்றார் அவர்.

அவன் முகம் அப்படியே சுருங்கிப்போனது அவர் கண்களில் விழுந்தது. மனது கேட்கவில்லை.

“பைக் எடுத்துட்டு அப்படியே நேரா கொஞ்ச தூரம் போ, உனக்கே தெரிஞ்சுடும்!” என்றவர் திண்ணையில் இருந்து எழுந்துவிட்டார்.

அவனோ, “எனக்கு பைக் ஓட்ட தெரியாதே!” என்று சொல்ல, ‘என்ன?’ என்ற திகைப்புடன் பார்த்தார் சத்தியநாதன்.

அவர் பெண்ணிற்கே கியர் பைக் ஓட்ட தெரியும் எனும்போது ஒரு ஆண்பிள்ளைக்கு தெரியாதா என்ற நினைப்புடன் அவர் பார்க்க, “கார் தான் டிரைவ் பண்ணுவேன்! பைக் பழக்கம் இல்ல” என்றான்.

‘இதென்னடா அக்கப்போரு’ என அவர் நினைக்க, “ப்ளீஸ் அங்கிள், இன்னைக்கு மட்டும் கூட்டிட்டு போங்க!” இறைஞ்சலாய் கேட்டான் ஜேகோப்.

இதற்குமேல் அவருக்கு மனம் பொறுக்கவில்லை. சாவியை எடுத்துக்கொண்டு பைக்கை நோக்கி செல்ல, அவர் அழைக்காமலே புன்னகையோடு அவர் பின்னே சென்றான் ஜேகோப்.

“ப்ச்… எழுந்து வந்தோன வேலை சொல்லிடுவீங்களே? வேலை சொல்லியே உசுர வாங்குங்க!” கத்திக்கொண்டே தேவி கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்த ரோஷிணி, ஒரே பைக்கில் ஒன்றாக இரு ஆடவரும் செல்வதைக்கண்டு, தூக்கம் பறந்து ஓட, ஒற்றை கையாய் கண்களை பரபரவென தேய்த்துக்கொண்டு பார்த்தாள். கண்ணுக்கெட்டிய தொலைவில் வண்டி சென்றுக்கொண்டிருந்தது.

வாயை பிளந்தவள், “அம்மாஆஆஆ” என்று அலற, “என்னடி?” பதறிக்கொண்டு வந்தார் தேவி.

“அம்மா… அப்பா அந்த வெள்ளெலியை வண்டில ஏத்திக்கிட்டு எங்கயோ போறாரு’ம்மா!” என்று சொல்ல, தேவிக்கு திக்கென்றானது.

மறுநொடி அரக்கபரக்க அவன் அறைக்கு சென்றார். அவன் உடைமைகள்  எல்லாம்  அப்படியே தான் இருந்தது. அதை கண்ட பிறகு தான் பிடித்து வைத்திருந்த மூச்சை இழுத்து விட்டார் தேவி. ஆனாலும் ‘அவர் எங்க, எதுக்கு கூட்டிட்டு போறாரு?’ என்ற கேள்வி வண்டாய் குடைய, யோசனையில் இருந்தவரை,

“என்னமா அப்பா எதுக்கு அவனை வெளில கூட்டிட்டு போறாரு?” என்று கத்திக்கொண்டே வந்து கலைத்தாள் ரோஷிணி.

“எனக்கென்ன தெரியும்? நான் அடுப்படில இருந்தேன்!”

“குடும்பமே அவங்கக்கிட்ட அன்னம் தண்ணி பொழங்க மாட்டோம்ன்னு சொல்லிட்டு திரிஞ்சீங்க? இப்ப என்னன்னா வந்த உடனே வண்டில வச்சு கூட்டிட்டு போற அளவுக்கு ஆகிடுச்சா? அப்பா எப்படிம்மா உடனே மாறுனாரு?” படபடவென பொரிந்தாள்.

“சித்த சும்மா இருடி கத்தாம! நானே ஒன்னும் புரியலன்னு இருக்கேன், நீ வேற!” கடிந்தவர், “போய் கொல்லைல வெண்டைக்காய் பறிச்சுட்டு வா! போ” என்று வேலை ஏவினார்.

வேலை சொன்னதும் மற்றதை விட்டவள், “ஆங், எனக்கு படிக்கணும்… அடுத்த வாரம் பரீட்சை” என்றுவிட்டு அறைக்குள் ஓட,

“அதானே, வேலை சொன்னாதான் உனக்கு பரீட்சை எல்லாம் நினைவு வரும்… எனக்குன்னு வந்து பொறந்துருக்க பாரு தண்டமா!” வழமை போல கத்திவிட்டு அவரே வேலைகளை செய்ய ஆரம்பித்தார். ஆனாலும் மனமும் செவிகளும் வாசலில் தான் போனவர்களுக்காக காத்திருந்தது.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் சென்று பைக் சத்தம் கேட்டது. போட்டதை போட்டபடி போட்டுவிட்டு வாசலுக்கு விரைந்தார் தேவி.

பக்கத்து வீட்டின் வெளியே அப்போது தான் திராட்சை தோட்டம் செல்வதற்காக பரமேஸ்வரன் வாசலில் செருப்பை மாட்டிக்கொண்டிருந்தார்.

தேவிக்கு, ‘ஐயோ!’ என்றிருந்தது.

பைக் அவர்கள் வீட்டை நெருங்க, இருவரின் முகத்தையும் பார்த்த தேவிக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. சத்தியநாதன் வண்டியை செலுத்த, அவரது இரு தோள்களிலும் கை போட்டபடி சிரித்துக்கொண்டு ஜேகோப் வர, அவன் முகத்தில் இருந்த சிரிப்புக்கு கொஞ்சமும் குறையாமல் சிரிப்பை பூசியிருந்தது சத்தியநாதனின் வதனம்.

திருமணமான இத்தனை வருடத்தில் கணவரின் முகத்தில் இப்படி ஒரு சிரிப்பை தேவியே கண்டதில்லை. அசந்துப்போய் நின்றார்.

வீட்டின் முன்னே வண்டியை செலுத்தியவர் உட்காந்த வாக்கில் ஸ்டேன்ட் போட, பின்னிருந்து இறங்கிய ஜேகோப், அவர் இடுப்பில் கிள்ளிவிட, துள்ளி குதித்து வண்டியில் இருந்து இறங்கிய சத்தியநாதன், தோளில் கிடந்த துண்டால் அவனை அடிக்க வர, அவனோ அவரிடம் இருந்து சத்தமாய் சிரித்துக்கொண்டே ஓடி, தேவியை கவசமாக பற்றிக்கொள்ள, சத்தியநாதன் தன்னை மறந்து அவனை துரத்த வர, அப்போது புழுதி பறக்க, விருட்டென்று அங்கிருந்து வேகமாய் கடந்து போனது பரமேஸ்வரனின் வண்டி!

சத்தியநாதனின் சிரித்த முகம் நொடியில் இறுகிக்கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!