Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 12 2

பதில் வராமல் அவள் காலடி ஓசை மட்டும் தேய, “கூடவே இருந்தியே செவ்வாழை! இப்படி பச்சோந்தியா மாறிட்டியே?” அவளுக்கு கேட்கும் தூரம் கத்தியவள்,

“இங்கேருடி… நம்மூரு பசங்களை கூட நம்பலாம்… இந்த வெளிநாட்டு வெள்ளத்தோலு ஆளுங்களை எல்லாம் நம்பவே முடியாது… எப்போ எவ கூட போவானுங்கன்னு யாருக்கும் தெரியாது.. இப்போவே அந்த ஊருல இவனுக்கு எத்தனை இருக்கோ? எத்தனைய அத்து விட்டானோ?  சொன்னா கேளு… தேவையில்லாம போய் காவால விழுந்துடாத!” காட்டுக்கத்தலாய் அவள் கத்தி முடித்து திரும்ப, கேட்க வேண்டியவளுக்கு கேட்டதோ இல்லையோ, கேட்க கூடாதவனுக்கு திவ்யமாய் கேட்டது.



Advertisement

பால்கனியில் அவள் நிற்க, அவளுக்கு கீழே இடுப்பில் கைவைத்து மேலே நிமிர்ந்து இவளையே பார்த்துகொண்டு நின்றிருந்தான் ஜேகோப்.

அவன் பார்வையே அவள் சொன்னதெல்லாம் தனக்கு கேட்டுவிட்டது என சொல்ல, உள்ளுக்குள் ஜர்க்கானாலும் வெளியே கூலாக, “என்ன?” என்றாள் அவனிடம்.

Advertisement

Advertisement

அவன் அப்படியே பார்க்க, அப்போது தான் தெரிந்தது அவன் பார்க்கவில்லை.. முறைக்கிறான் என்று!!!

‘முறைச்சா பயந்துடுவோமா?’ என நினைத்தவள், “என்ன? உனக்கு தான் கண்ணு இருக்கா? நான் முறைச்சா இந்த ஊரே எரியும் தெரியுமா? போ… போய் பாதாம் பால் குடி!” என்று கெத்தாய் சொல்லிவிட்டு, “வந்துட்டான், மகேஷ் பாபுக்கு டஃப்’பு குடுக்க” என்று அவள் மறைந்துவிட, கீழே அவன் தலையை உலுக்கிக்கொண்டான்.

Advertisement

‘பொண்ணா இதெல்லாம்?’ என உள்ளுக்குள் தோன்றாமல் இல்லை.

வீட்டுக்குள் வந்தவனுக்கு ஹாலில் யாரும் இல்லாமல் போக அடுக்களைக்குள் சத்தம் கேட்கவே அங்கே நுழைந்தான். தேவியும் ருக்மணியும் பேசிக்கொண்டே இரவு உணவுக்கான வேளைகளில் இருந்தனர்.

சமையல் மேடையில் ஏறி அமர்ந்தவன், தோல் சீவியிருந்த கேரெட்டை எடுத்து கடிக்க, “உனக்கு இடியாப்பம்… தேங்காய்ப்பால்… ஓகே வா?” என்றார் தேவி.

மென்றுக்கொண்டே கட்டை விரலை உயர்த்தி, ‘ஓகே’ என்றான் ஜேகோப்.

இரு பெண்களும் அவன் வந்தபோது பேசிக்கொண்டிருந்ததை தொடர்ந்தனர்.

ருக்மணி, “எப்பப்பாரு அடுப்படி…! அதவிட்டா கொல்லை… வாழ்க்கை முழுக்க என்னத்தை செஞ்சோம்ன்னு திரும்பிப்பார்த்தா, அடுக்கடுக்கா சுட்ட தோசையும், அண்டா அண்டாவா வச்ச சாம்பாரும் தான் கண்ணு முன்ன வருது, போ!” என்றார் வெகு சலிப்பாய்.

“ம்ச்… நம்ம வாழ்க்கை தான் இப்படின்னா, நமக்கு பொறந்ததுங்களுக்கும் அதே தான் அமையும் போல… இந்த வீடு, வீடு விட்டா காலேஜு… அதைத்தாண்டி ஒரு இடம் கூட போனதில்லை. நாலு மனுஷங்களை பார்த்து பேச தெரியுமா? பழக தெரியுமா? கூண்டு கிளியாட்டம் அடைச்சு வச்சே வளர்த்துட்டோம்… இனி போற வீட்டுல அடுப்படில அடைச்சு வைப்பாங்க…” வருத்தமாய் சொன்னவர்,

“சங்கவி கூட நயந்துப்போய் பொழைச்சுப்பா! ஆனா நான் பெத்தேனே ஒன்னு, அதுக்கு சூதுவாது கூட தெரியாது… எல்லாரையும் நம்பிடும்… சரியான ஏமாளி…!  ஏமாத்தி பொழைக்கிறது, காலை வாறுறது, பொய் பொரட்டு பேசுறதுன்னு எதுவுமே வராது” என்று அடுக்கிக்கொண்டே போக, கேட்டுக்கொண்டிருந்த ஜேகோபிற்கு வாயில் அரைப்பட்டுக்கொண்டிருந்த கேரெட் மொத்தமும் வெளியே தெறித்து சிதறும் அளவுக்கு புரை ஏற, திகைத்துப்போனவர்களில் ஒருவர் தலையை தட்ட, மற்றொருவர் தண்ணீர் கொடுக்க என அல்லாட,

இருமி முடித்து அடங்கியவனோ, தேவியை ஒன்றுமே சொல்லாமல் பார்த்தான்.

அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் “என்ன பப்பூ?” என்று வினவ, மனதுக்குள் வடிவேலுவை போல, ‘உங்க ஜட்ஜூமெண்டு ரொம்ப தப்பு ஆன்ட்டி’ என சொல்லலாம் போல வந்தது அவனுக்கு.

அவன் பதில் சொல்லும்முன் அங்கே வந்த பரமு, “என்ன நடக்குது இங்க? வீடா இல்ல கடைத்தெருவா? எப்பப்பாரு சத்தம்!” என்று கத்த, இரு பெண்களும் தலை குனிந்து நின்றனர்.

“இதென்ன அடுப்படில ஆம்பளை நிக்குறது? வெட்கமா இல்ல?” முகத்தை சுளித்து அவர் கேட்க, ஜேகோபோ, “அதானே… வாங்க அங்கிள் போலாம்! எதுக்கு இங்கல்லாம் வரீங்க?” என்றான் அவரிடம்.

அவரோ அவனது இந்த பதிலில் விளக்கெண்ணை குடித்தார் போல கோண, பெண்களுக்கு எழுந்த சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் போனது. வேறுபக்கம் திரும்பி வேலை செய்வதை போல மறைத்துக்கொண்டனர்.

அப்படியே நின்ற பரமுவிடம், “வயிறு எல்லாருக்கும் இருக்கு அங்கிள்… அதுல பசி எல்லாருக்கும் காமன் தான்! பசிச்சா குக் பண்ணி சாப்பிட்டுக்கணும்! அதவிட்டுட்டு இது கேர்ளி வொர்க், அது மேன்லி வொர்க்’ன்னு செக்ரிகேட் பண்ணக்கூடாது…! நான் அட்வைஸ் பண்ணல… இட்ஸ் ஜஸ்ட் எ பேசிக் திங்… அதை உங்களுக்கு நியாபகப்படுத்துறேன்” என்றுவிட்டு,

“எல்லாத்தையும் நான் கொண்டு போய் வைக்குறேன்… ஐயம் சோ ஹங்ரி” என்றவன் யாருக்கும் காத்திராமல் ஹாட்பாக்ஸுடன்  வெளியே சென்றான்.

எங்கே தாம் அங்கே நின்றால் திட்டுவிழுமோ என்றஞ்சி பெண்களும் பாத்திரங்களை அள்ளிக்கொண்டு வெளியேறிவிட, முறைத்துக்கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தார் பரமேஸ்வரன்.

அன்று இரவு உணவு இரு வீட்டு ஆட்களும் ஒன்றாக உண்டனர்.

வீரைய்யணும் கமலமும் பிறகு உண்பதாக சொல்லிவிட இவர்கள் உண்டபின் அவர்களுக்கு கொடுக்கலாம் என்று இருந்தனர்.

எல்லோருக்கும் பார்த்து பார்த்து பரிமாறிக்கொண்டே இருவீட்டு தலைவிகளும் உண்ண, உண்டுக்கொண்டிருந்த  பரமு திடீரென உக்கிரத்துடன் நிமிர்ந்து எதிரே இருந்த ஜேகோபை முறைக்க, அவனைத்தவிர அனைவரும் திடுக்கிட்டனர். பின் அவரே அமைதியாகி கடுகடுவென உண்ண, அருகே இருந்த சத்தியன், “என்னடா?” என்றார் மெள்ள.

அவர் கேட்டதும், உண்டுக்கொண்டே அவர் வேட்டிக்குள் அவன் காலைவிட, மீனை போல துள்ளிக்குதித்தார் மனிதர்.

அவர் துள்ளுவதற்க்கான காரணம் புரிந்த ரோஷிணியும் தேவியும் சிரிக்க, மற்றவர்கள் குழப்பமாய் பார்க்க, ஒன்றும் அறியா குழந்தை போல உண்டுக்கொண்டிருந்த ஜேகோப், “உங்களை போல இந்த வீக்னெஸ் இருந்தா சீக்கிரம் கரெக்ட் பண்ணிடலாம்ன்னு செக் பண்ணேன்! பட் நோ யூஸ்” என்று தோளை குலுக்கினான் அசட்டையாய்.

அவன் மண்டையிலேயே போடலாமா என்று வந்தது சத்தியனுக்கு.

அதன் பின்னே எந்தவித சலசலப்பும் இல்லாமல் உணவு நேரம் முடிய, வீரைய்யன் கமலத்துடன் சிறிது நேரத்தை செலவிட்டவன் தனது அறையின் படுக்கையில் வந்து விழுந்தபோது அவனை மீறி நிம்மதியான உறக்கம் வந்து கண்களை கவ்வியது.

ஆனால், அவனுக்கு எதிர் அறையில் கட்டிலில் கிடந்தவளது கண்கள் முழுக்க ஜேகோப் அடைத்துக்கொண்டிருந்தான். சங்கவி அவனை வர்ணித்துவிட்ட போனதன் விளைவா, அல்லது இடியாப்பத்தை கத்தியில் வெட்டி ஃபோர்க்கில் குத்தி தேங்காய் பாலில் முக்கி, பின் ஸ்பூனால் அதை அள்ளி தின்றுக்கொண்டிருந்த ஜேகோபின் வினோத நடவடிக்கையா… எதுவோ ஒன்று அவளை அவன் புறம் இழுக்க, நேரெதிரே அமர்ந்திருந்தவனை தன்னை மீறி கவனிக்க ஆரம்பித்தாள்.

‘என்ன பெரிய கலரு?  என்னை விட கொஞ்சூண்டு அதிகம்! இவ்ளோ வெள்ளையா இருந்தா அது கலரு இல்ல, வியாதி!’ அவளே சொல்லிக்கொண்டாள்.

‘ஆர்ம்ஸ் பெருசா இருக்கா என்ன?’

மேசையில் இரு முழங்கைகளையும் ஊன்றி இடியாப்பத்தில் மூழ்கியிருந்தவனின்  கரங்களது தசைகோலங்கள்  டீஷர்டிற்கு மேலாக புடைத்துக்கொண்டிருக்க,

‘ரொம்ப பெருசெல்லாம் இல்ல… என்னுத விட கொஞ்சம் பெருசு’ மனசாட்சியே இல்லாமல் சொல்லிக்கொண்டாள்.

அடுத்து அவன் முகத்தை உற்றுப்பார்க்க, அவன் கண்களும், குட்டி மூக்கும், பளபளத்த உதடுகளும்… அவளால் என்ன முயன்றும் குறை சொல்ல முடியவில்லை. குறை சொல்லக்கூட தோன்றாது அவள் பார்த்துக்கொண்டிருக்க, அப்போது தான் ஜேகோப் பரமுவின் கால்களை சீண்டியது.

பின்பு சத்தியனைத் தீண்டியதும் அதற்கு தந்தை குதித்ததும், அவன் நல்லப்பிள்ளையாய் முகத்தை வைத்துக்கொண்டு உண்டதும் கண்டு, அவளுக்கு அவளை மீறி சிரிக்க வந்தது.

‘பண்றதெல்லாம் பண்ணிட்டு மூஞ்ச பாரு… பாப்பா மாறி!’

அவன் நடவடிக்கை எல்லாம் மௌனமாய் கிரகித்தவளை அவன் திரும்பியும் பார்க்கவில்லை.

அறைக்குள் வந்து அரைமணி நேரம் கடந்த பின்னும் இன்னமும் அவன் நினைவாகவே இருந்தது  அவளுக்கு.

‘இதுக்கு தான் காலாகாலத்துல காதலிக்கனும்ன்னு சொல்லுவாங்க… இப்போ பாரு சாயங்கலாம் வரை டிஸ்லைக் பண்ணிட்டு இருந்தவனை நைட்டுக்குள்ள லைக் பண்ண தோணுது! இதெல்லாம் என் தப்பு இல்ல… இந்த வயசு..!! அது தான் தப்பு… ஆனா, அதுக்கெல்லாம் இந்த ரோஷிணி அசைஞ்சு குடுக்க மாட்டா…

நான் தடுமாறிட்டா என் வரலாறு என்ன ஆகுறது…? என் அருமை பெருமை என்ன ஆகிறது…?  பிற்கால சந்ததி  என்னை காறி துப்பாது…!!!?

நோ… நான் மாற மாட்டேன்… ரோஷிணி ஸ்டெடியா இரு… வெள்ளைத்தோலுக்கு மயங்கிடாத…

உனக்கும் அவனுக்கும் பகை, பகை தான்… ரத்தம், ரத்தம் தான்!!!’

தனக்குத்தானே சொல்லிக்கொண்டவள், வீராப்பாய் கண்ணை மூடி உறங்க, சற்று நேரத்தில் அவள் கனவில் கூட ஜேகோப் தான் வந்தான், கையில் ஃபோர்க்குடன் இடியாப்பத்தை குத்தி கொலைசெய்துக்கொண்டு…!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!