Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 13

13



Advertisement

‘அந்த கண்ணை பார்த்தாக்கா…

லவ்வு தானா தோணாதா?

அவன் கிட்ட போனாக்கா…

Advertisement

மனம் மானா மாறாதா?

Advertisement

அகமெல்லாம் அவன்தான்… அவன்தான்…

இருந்தான், நடந்தால் அவன் கனவெல்லாமே…

Advertisement

அவன் முகம் தானே…. அவன் அழகன் தானே!!!

அழகா அளவா அவன் சிரிப்பானே…

அட அழகன் தானே…!!

பூப்போல மனசு…’ காதின் வழி உள்ளே சென்றுக்கொண்டிருந்த பாடல் வரிகளுக்கு அப்படியே பொருத்தமாக கண் முன்னே அங்கும் இங்குமாய் ஆடிக்கொண்டிருந்த ஜேகோப் தெரிய, கன்னத்தில் கைவைத்து அப்படியே ஏதோ ஒரு கனவு லோகத்தில் கண்ணை திறந்தே மூழ்கிக்கிடந்தவளின் மோனநிலையை கெடுக்கவெனவே ரோஷிணியின் தோளில் ‘சுள்ளென்ற’ அடியுடன்,

“என்னடி முழிச்சுட்டே தூங்குற?” என்று கேட்டுக்கொண்டு வந்து அமர்ந்தாள் சங்கவி.

ஒரு நல்ல மனநிலை கலைந்ததன் கடுப்பில், “என்னடி?” என்று சிடுசிடுத்தாள் ரோஷிணி. அவள் காதில் சொருகியிருந்ததை கழட்டி விட்ட சங்கவி, “நான் தான் உன்னை கேட்கணும்… காலைல இங்க வந்ததுல இருந்து இதே இடத்துல உட்காந்து என்னத்துக்கு அடை காத்துக்கிட்டு இருக்க?” என்றாள்.

திரும்பி அவள் முன்னே சிறு குழந்தைகளுடன் அங்கும் இங்குமாய் போக்குக்காட்டி ஓடிக்கொண்டிருந்த ஜேகோபை பார்த்தவள், “சும்மா… இந்த இடம் பாக்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருந்துச்சு…அதான்” என்றாள்.

சுற்றிலும் பார்த்த சங்கவி, “நம்ம திராட்சை தோட்டமாச்சே! குளிர்ச்சியா தான் இருக்கும்!”  என்று சொல்ல, “நம்ம தோட்டம் இல்ல, என் தோட்டம்” என்றாள் ஜேகோபை பார்த்துக்கொண்டே.

“ஒய்… உங்க தோட்டமா? வெளுத்துடுவேன்… இதுல எனக்கு தான் உரிமை அதிகம்… ஏன்னா இது எங்க தாத்தாவோடது… நீ… எனக்கு அப்புறம் தான்!” சங்கவி தோட்டத்தை சொல்ல, அது ரோஷிணிக்கு ஜேகோபை சொல்வது போல தோன்றியது.

உண்மை தானே!? அவன் சங்கவிக்கு தானே உரிமையானவன்…! தான் ஒன்று விட்ட முறையில் அவனுக்கு உறவென்றாலும் சொந்த மாமன் மகளுக்கு பிறகு தானே!? இப்படி தோன்ற,

‘ஐயோ கடவுளே… சண்டை, பகை, பழிவாங்கல்ன்னு பேசிக்கிட்டு நல்லா தானே இருந்தேன்!? திடீர்ன்னு என்னாச்சு எனக்கு? அவனை பாக்கும்போது ஏதேதோ பண்ணுது…’ மனசுக்குள் அவள் நொந்துக்கொண்டிருக்க,

“அப்பறம் உன் பழிவாங்கும் படலத்துக்கு ஐடியா கிடைச்சுடுச்சா?” என்றாள் சங்கவி.

“ஹான்? பழி தானே!? அதைதான் எப்படி வாங்கலாம்ன்னு யோசிக்குறேன்” என்ற ரோஷிணியோ, ‘இவனை கல்யாணம் பண்ணி கூடவே வச்சு அணுவணுவா பழிவாங்குனா என்ன?’ என்று உள்ளுக்குள் நினைக்க, என்னவோ அந்த நினைப்பு அவளுக்கு ஒருவித குஷியை தான் கொடுத்தது. அது அவள் முகத்தில் அப்பட்டமாய் தெரிய,

“என்னடி நானும் காலைல இருந்து பாக்குறேன்… நீயா சிரிக்குற… நீயா சிணுங்குற… என்ன விஷயம்?” என்றாள் சங்கவி.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” ரோஷிணி நழுவ,

“இல்லன்னு சொல்ற வேகமே ஏதோ இருக்குன்னு சொல்லுது” என்று சங்கவி அடித்து சொன்னாள்.

காலையில் பொழுது விடிந்தபோது இரு வீட்டிற்கும் பொதுவாய் இருந்த செவன் சீட்டர் கார் ஒன்று தூசி தட்டப்பட்டு வெளியே நிற்க, பெண்களுக்கு புரிந்துப்போனது ‘குலதெய்வம் கோவிலுக்கு படையெடுக்க போகிறோம்’ என்று! பின்னே, அதற்கு மட்டுமே தானே அவர்களை வெளியே அழைத்து செல்வதே…!

ஆனால், சத்தியனோ… ‘கிளம்புங்க… நம்ம திராட்சை தோட்டம் போலாம்’ என்று சொல்ல, ‘நான் காண்பது என்ன கனவா இல்ல நினைவா?’ என திகைக்கும் அளவில் இருந்தனர் நான்கு பெண்களும். எங்கே விட்டால் மனசு மாறிவிடுவார்களோ என பரபரப்பாய் கிளம்பியவர்கள் ஆளுக்கு முந்தி வண்டியில் ஏறிவிட, இதோ இப்போது ஏதோ காணாததை கண்டது போல எல்லாரும் அவர்கள் தோட்டத்தையே அதிசயம் போல சுற்றிக்கொண்டிருந்தனர்.

“கொஞ்சம் நொய்நொய்க்காம கிளம்புறியா? நிம்மதியா பாட்டு கூட கேட்க முடியல!” ரோஷிணி கடுப்பு போல சொல்ல, அவளை முறைத்துக்கொண்டே எழுந்து சென்றாள் சங்கவி. அங்கே விளையாட்டு முடிந்து குழந்தைகளுடன் களைத்துப்போய் நிழலில் ஜேகோப் அமர்ந்திருக்க, அவனை பார்த்து லேசாக சிரித்துக்கொண்டு நகரப்போனவளை,

“கம் கம்… சிட் ஹியர்” என்றான் அவனுக்கு அருகே காட்டி.

உடனே அவள் வீட்டு ஆண்களை தான் தேடினாள் சங்கவி. அவர்கள் அங்கே இல்லை என்றதும் சிரித்த முகமாய் அவனை விட்டு தள்ளி அமர்ந்தவள், நன்றாக சிரிக்க, அவனும் பதிலுக்கு சிரித்தான்.

என்ன பேசுவதென தெரியாமல், “நீங்க ஏன் அன்னைக்கு பணம் கொடுத்தீங்க? நாங்க ஏமாத்துறோம்ன்னு தெரிஞ்சுதுல? அப்போவே சொல்லிருக்கலாமே!?” என்றாள் மனதில் உறுத்திக்கொண்டிருந்ததை.

திடீரென அவள் கேட்டதில் சில நொடிகள் தாமதித்தவன், பின்னே, “எனக்கு நீங்க தான் என் மாமா பொண்ணுங்கன்னு தெரியும்… ரோட்’ல எந்த கிளாஷ்’ஷும் வேண்டாம்ன்னு தான் கேட்டதை குடுத்தேன்… நெக்ஸ்ட் டே எல்லாம் பேசி சால்வ் பண்ணலாம்ன்னு வந்தப்போ தான், ரெண்டு ஃபோர் டுவன்டியும் எஸ்கேப்ட்…” இறுதி வரியை தூரமாய் அவனை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த ரோஷினியை பார்த்தபடி சொன்னான் ஜேகோப்.

சங்கவி சங்கடமாய், “அது.. சாரி! நான் எவ்வளவோ வேண்டாம்ன்னு சொன்னேன்… அவ தான் கேட்கவே இல்லை!” என்றாள். அவளுக்காக தான், அவளது அழுகைக்காக தான்,  அத்தனை ரிஸ்க் எடுத்து, ரோஷிணி அவளை வெளியே அழைத்து சென்றாள் என்பதை வசமாய் மறந்துப்போய் அவனிடம் அப்ரூவர் ஆகிப்போனாள் சங்கவி.

“உனக்கொரு பெஸ்ட் அட்வைஸ் சொல்றேன்… அதோ… அவ இருக்காளே…” ரோஷினியை விரல் நீட்டி காட்டியவன், “அவகூட சேராத! கட் ஆஃப் ஹர் பிரன்ட்ஷிப்” என்றான் சீரியஸாய்.

அவன் விரல் நீட்டியதுமே அவனிடம் வேகமாய் எழுந்து வந்தாள் ரோஷிணி.

“என்ன? என்னவாம்?” முறைப்பாய் அவள் ஆரம்பிக்க, “கம்…கம்… லெட்ஸ் ப்ளே அகைன்” என சிறுசுகளை அள்ளிக்கொண்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான் ஜேகோப்.

அவன் போனதும், “என்னவாம் டி அவனுக்கு? என்ன சொன்னான் உன்கிட்ட?” கோபம் போல அவள் கேட்க, “எனக்கும் என் அத்தை மகனுக்கும் நடுல ஆயிரம் இருக்கும்… உனக்கெதுக்குமா அதெல்லாம்?” அசட்டையாய் சொன்ன சங்கவி,

“மாமா வேற உன்னோட சேரக்கூடாதுன்னு சொல்லுச்சு… நான் பேசிக்கிட்டு இருக்கேன் பாரு…” என தலையில் அடித்துக்கொள்ள, வாயை பிளந்த ரோஷிணி, “மாமா’வா?” என்றாள் அதிர்ந்து.

“ஹான்… அத்தை மகன் தானே? அப்போ மாமா தானே எனக்கு” கெத்தாக சொன்ன சங்கவி, வேண்டுமென்றே சிலுப்பிக்கொண்டே அங்கிருந்து போக, அப்படியே சமைந்து நின்றாள் ரோஷிணி.

திராட்சை தோட்டத்தில் வேலைக்கு இருக்கும் ஆட்களின் குழந்தைகளோடு தான் ஜேகோப் விளையாடிக்கொண்டிருந்தது. அவர்கள் அடுத்து அங்கிருந்த சிறிய சிமெண்ட்டு தொட்டி நீரில் விளையாட சென்றுவிட, ஜேகோப் பேரிளம் பெண்களுடன் வந்து அமர்ந்தான்.

இருவரும் அவனை நமட்டு சிரிப்போடு பார்க்க, பார்வைக்கு பொருள் விளங்காதவன், “வாட்?” என்றான் அவர்களிடம்.

“அப்பறம், மாமன் மக கூட பேச்சு வார்த்தை எல்லாம் முடிஞ்சுதா?” கிண்டலாய் ஆரம்பித்தார் தேவி.

புருவம் சுருக்கியவன், “சங்கவியா?” என்று கேட்டுவிட்டு, “இயா” என்றான் சாதாரணமாய்.

“எங்க ஊருல முறைப்பசங்க ஒண்ணா பேசிக்கிட்டா நாங்க எல்லாம் கிண்டல் பண்ணுவோம்!  தேவி அதனால தான் இப்படி கேட்குறா!” அவன் புரியாத முக பாவத்தை வைத்து ருக்மணி சொல்ல,

“ஃபண்ணி” என்று சிரித்தான் ஜேகோப்.

“உனக்கு ஒன்னு தெரியுமா ருக்கு!” தேவி கொக்கி போட்டு ஆரம்பிக்க, ஜேகோப் தேவியை பார்த்தான்.

“பப்பூ நம்ம ஊருக்கு வரவே மாட்டேன்னு அடம் புடிச்சானாம்! தேவகி அழு அழுன்னு அழுது தான் சரின்னு சொல்லிருக்கான்” என்று சொல்ல,

“ஏன் பப்பூ… எங்களை எல்லாம் பாக்கணும்ன்னு தோணலையா?” என்றார் ருக்மணி.

“நோ ஆன்ட்டி, நாட் லைக் தட்! எனக்கு தோணல இங்க வரணும்ன்னு! இங்க சிட்சுவேஷன் இப்படி இருக்கும், பாட்டி இவ்ளோ சிக்’கா இருப்பாங்கன்னு தெரியல… சோ ஐ ரெஃப்யூஸ்ட்”

பூசி மொழுகாமல் அவன் சொல்ல, “அது மட்டும் இல்லை! அவன் இங்க வரதுக்கு இன்னொரு காரணம் தெரியுமா?” தேவி பீடிகை போட, ஜேகோபே ‘அது என்ன?’ என்பது போல பார்க்க,

“தேவகியும் இவனும் ஒரு சவால் விட்டுருக்காங்க… அது என்னன்னா, அவன் மாமன் பொண்ணு மேல விருப்பப்பட்டு அதாவது, உன் பொண்ணு சங்கவி மேல ஆசைப்பட்டு அவளை கல்யாணம் பண்ணிவைங்கன்னு இவனே வந்து கேட்பான்னு அவளும், அதுக்கு வாய்ப்பே இல்லன்னு இவனும் மாத்தி மாத்தி சவால் விட்டு வச்சுருக்காங்க” என்றதும்,

“ஹோ ஆன்ட்டி… தட்ஸ் நாட் எ சீரியஸ் ஒன்…!” என்று ஜேகோப் குறுக்கிட்டதை இருவருமே மதிக்கவில்லை.

ருக்மணியோ, “அப்போ என் பொண்ணை கட்டிக்கிட்டன்னா வெளிநாட்டுக்கு அழைச்சுட்டு போயிடுவியா?” என்று எதிர்க்காலத்துக்குள் நுழைந்துவிட்டார்.

அவன் மறுப்பதற்குள், “பின்ன கட்டிக்கிட்டு இங்கயேவா விட்டுட்டு போவான்?” என தேவி சொல்ல,

“அப்ப சரி… எனக்கு என் பொண்ணை குடுக்குறதுல எந்த மறுப்பும் இல்ல… அவ வெளிநாட்டு போவா… அவளை பாக்க வர சாக்குல நானும் வெளிநாடு போவேன்!” சொல்லும்போதே ருக்மணியின் கண்களில் கனவு விரிந்தது.

பேச்சு விளையாட்டாக தான் போய்க்கொண்டிருந்தது. ஜேகோப்’பை வம்பிழுக்கும் நோக்கத்தில் மட்டுமே இருவரும் பேசினாலும், ருக்மணியின் இந்த வெளிநாட்டு கனவு அவர் உண்மையாக சொன்னது. ஆனாலும் நிஜத்தில் ‘திண்டுக்கல்லையே இத்தனை வருஷத்துல தாண்டுனது இல்ல… நமக்கு வெளிநாடு எல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல?’ என்று அவரே கேட்டுக்கொண்டார்.

அப்போதும் சிமென்ட் தொட்டியில் ஒருவரையொருவர் நீரில் அடித்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களில், ஒரு பொடியன் சிமென்ட் திட்டில் காலை வைத்து ஏறி உள்ளே குதிக்க பார்க்க வழுக்கி விட்டு பின்னே மல்லாந்து சரிந்தான், “அம்மா…” என்ற அலறலோடு.

பெரியவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அங்கே விரைய, விழுந்தவனின் முழங்கையில் நல்ல அடி! மண்தரையில் விழுந்ததில் நன்றாக சிராய்த்து விட்டிருக்க, ரத்தம் வடிய ஆரம்பித்தது.

விழுந்த பயம், வலி, ரத்தம் எல்லாம் அவனை அதிகமாய் பேடிக்க வைத்து அழுகையை கூட்ட, ‘ஒழுங்கா இருன்னா கேட்குறியா?’ என அவனை அதோடு அடிக்க பாய்ந்தார் அவன் அன்னை. ஜேகோப் அவனை தன்னோடு வாரி இழுக்க முன்னேற, அவனுக்கு முன்னே அச்சிறுவனை தன்னோடு அணைத்துக்கொண்டு விட்டாள் ரோஷிணி.

“என்னக்கா நீங்க? அவனே அடிப்பட்டதுல பயந்து கடக்கான்… இன்னும் கையை ஓங்கிக்கிட்டு வாரீங்க?” அவள் அதட்ட,

“இவனுக்கு இதே வேலையா போச்சும்மா! கையை காலை வச்சுக்கிட்டு சும்மா இல்லாம ஏதாவது செஞ்சு வச்சுடுறான்.. இவன் அப்பன் கிட்ட நான் பேச்சு வாங்குறேன்!” அந்த அம்மா கத்த, “சும்மா இருங்க க்கா” என்றவள் அவனை அழைத்து சென்று, தண்ணீரில் காயத்தை கழுவினாள்.

காயத்தின் தன்மையை பார்த்தவள், சங்கவியிடம் மோட்டார் அறையில் எப்போதும் இருக்கும் முதலுதவி பெட்டியை கொண்டு வர சொல்லி, டிஞ்சர் வைத்து மருந்திட, அவன் கத்தும்போது கூட, ஆதரவாய் அவன் கவனத்தை திசைத்திருப்பிக்கொண்டே வேலையை முடித்தாள் அவள்.

முகமெல்லாம் அழுது அழுது மூக்கில் இருந்து கூட வடிந்து பார்க்க அலங்கோலமாய் அவன் இருக்க, “ஒன்னும் இல்லடா… ரெண்டு சாக்லேட் சாப்பிட்டா சரியாகிடும்” என்ற ரோஷிணி, தன் துப்பட்டாவில் அவன் முகத்தை அழுந்த துடைத்துவிட,

“ஏய் புது ஷாலு டி” என்று கடிந்தார் தேவி.

“ப்ச்… போ மா!” என்றவளோ, இன்னும் நன்றாக அவனுக்கு துடைத்துவிட்டு, மேலே பழுத்து தொங்கிக்கொண்டிருந்த திராட்சை கொத்தொன்றை பறித்து அவனிடம் கொடுக்க, சமத்தாய் வாங்கிக்கொண்டான் அவன்.

“பையனை திட்டாதீங்க க்கா! அவன் இனிமே கவனமா விளையாடுவான்!” என்று அந்த அம்மாவிடம் சொன்னவள், குனிந்து அவனிடம், “என்னடா? இனி கவனமா இருப்ப தானே?” என்று கேட்க, அவனும் ‘ம்ம்..ம்ம்’ என்றான் திராட்சையை சுவைத்துக்கொண்டு.

அத்தோடு எல்லாம் களைந்து அவரவர் பேச்சிலும் வேலையிலும் நகர்ந்துவிட, சிரித்துக்கொண்டு சங்கவியிடம் ஏதோ சொல்லிக்கொண்டு அவனைத்தாண்டி போனவளை ஒருவித ஆர்வத்துடன் முதல்முறையாய் கவனித்துப்பார்த்தான் ஜேகோப்.

‘இவளும் கொஞ்சம் நல்லவதானோ?’ அவனுக்குள் தோன்றியது.

“ரோஸ்…” அழைத்தான். சங்கவியிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தவளுக்கு கேட்கவில்லை.

“ஒய்… ரோஸ்…” இன்னும் சத்தமாய் அவன் அழைக்க, திடுக்கிட்டு திரும்பினாள் அவள்.

அழைத்துவிட்டு அவன் அப்படியே நிற்க, “என்ன?” என்றாள் அவள்.

அவளை நிதானமாய் உற்றுப்பார்த்தவன், “இங்க வா” என்றான் விரல் நீட்டி.

‘நீ கூப்பிட்டா நான் வருவேனா?’ என முரண்டு பிடிக்காமல், அவனை வெகு நேரமாய் சைட் அடித்துக்கொண்டிருந்த மனம் உடனே அவனிடம் அவளை தள்ளிக்கொண்டு போனது.

அவனிடம் வந்தவள், “என்ன?” என்றாள் மெள்ள.

ஒன்றும் சொல்லாமல் அவளிடம் தன் வலக்கரத்தை நீட்டி, “பிரண்ட்ஸ்?” என்றான். அவனை நம்பாமல் பார்த்தவள், “என்ன திடீர்ன்னு?” என்றாள் சந்தேகமாய்.

“நீ ரொம்ப மோசம்ன்னு நினைச்சேன்… அப்படி இல்ல போலயே! அதான் பிரண்ட்ஸ்’ஸா சேர்த்துப்போம்ன்னு…” குறும்பாக சொன்னான்.

“அய்ய” என்று நொடித்தாலும், வெகு வினாடிகளாய் அவள் முன் நீண்டிருந்த கரத்தை மறுக்க அவளுக்கு மனம் இல்லை. தயக்கத்தோடு என்றாலும் அழுத்தமாய் பற்றினாள். அவன் உள்ளங்கை வெப்பம் அப்படியே அவள் உடலுக்குள் ஊடுருவுவதை போல பிரம்மை!

அவன் எந்தவித தயக்கமும் இன்றி அவள் கரத்தை அழுந்த பற்றி குலுக்கியவன், மெல்ல விடுவித்தான்.

எங்கோ பார்த்தபடி நின்றவளிடம், “என்னவோ, இப்போ என் கண்ணுக்கு கொஞ்சம்… கொஞ்சமா அழகா தெரியுற!” என்றான் சிரிப்பை அடக்கி.

முறைத்தவளோ, “நான் எப்பவுமே அழகு தான்” என்றாள் முறுக்கிக்கொண்டு.

“இருக்கலாம்… பட், இவ்ளோ நாளா நீ ஒரு ‘ஃபிராடு’ங்குற வியூ’ல மட்டுமே பார்த்துட்டு இருந்தேன்! இப்போ தான் உன்னை பத்தி ‘குட்’டா நினைக்குற மாறி ஒன்னு நடந்துருக்கு! சோ….” என்று இழுக்க,

“சோ?” என்றாள் அவளும்.

“சோ அண்ட் சோ….” இழுத்தபடி, சிரித்தவன், “யூ ஆர் அப்பீலிங் டு மை ஐஸ்” என்றான் வாடா புன்னகையோடு.

“ஹான்?” புரியாமல் முழித்தாள் அவள்.

அதில் வாய் விட்டு சிரித்தவன், “உன்மேல எனக்கிருக்க ‘ஃப்ர்ஸ்ட் ‘பேட்’ இம்ப்ரெஷனை’ சீக்கிரமே சேஞ் பண்ணு… அது உன் பொறுப்பு!” என்றுவிட்டு உல்லாசமாய் விசில் அடித்தபடி அவன் போக,

“இப்போ என்ன சொல்றான் இவன்? நான் என்ன பண்ணனும்? ஏன் பண்ணனுமாம்?” குழம்பிப்போய் நின்றவளின் தோளை சுரண்டி, “என்ன சொல்றான்?” என்றாள் சங்கவி.

அவளை ஏற இறங்க மிதப்பாய் பார்த்தவள், “எனக்கும் என் அத்தை மகனுக்கும் நடுல ஆயிரம் இருக்கும்… அதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியுமா?” என்று அவளை போலவே சொல்லிவிட்டு ‘ஹும்!’ என்ற சிலுப்பலோடு ரோஷிணி அங்கிருந்து போக,  ‘பாரேன்!’ என வாயை பிளந்து நின்றிருந்தாள் சங்கவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!