Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக்

திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 1 1

1

“அம்மா சொன்னா கேட்பியா மாட்டியா?” சிவந்திருந்த மூக்கை உறிஞ்சிக்கொண்டே எதிரில் இருந்தவனிடம் கிட்டத்தட்ட மிரட்டல் போல கெஞ்சலாய் கேட்டுக்கொண்டிருந்தார் தேவகி.



Advertisement

அன்னையின் அழுது வீங்கிய முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவன், “ஒய் ஷுட் ஐ மாம்?”  (நான் ஏன் கேட்கணும்?) என்று அசட்டையாக கேட்டு வைக்க, அடக்கமாட்டாமல் குபீரென சிரித்துவிட்டார் சற்று தள்ளி அமர்ந்திருந்தவர்.

மகனிடம் காட்ட முடியாத கடினத்தை, “ரிச்சர்ட்…!” என்று பல்லைக் கடித்துக்கொண்டு கணவரிடம் காட்ட, இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி சரணடைந்துவிட்டார் அவர்.

Advertisement

Advertisement

மகனை விட்டால் பிடிக்க முடியாது என்றறிந்து, “பப்பூ… பப்பூ… அம்மாக்காக டா!” என்று கையை பிடித்துக்கொண்டு கெஞ்சலாய் அவர் ஆரம்பிக்க, தன் வலக்கை மீதிருந்த அவர் கைகளை இடக்கைக்கு மாற்றிவிட்டு மறுகையை அவர் தோளோடு போட்டு இறுக்கமாய் அணைத்துக்கொண்டான் அவன்.

அவன் கழுத்துக்கும் கீழே இருந்த தன் முகத்தை தூக்கி பாவமாய் அவனை அண்ணாந்து பார்க்க, “உம்ம்மாஆஆ” ராகமாய் சத்தம் போட்டு அவர் நெற்றியில் முத்தம் வைத்தான்.

Advertisement

“ஹும்! எனக்கு இதெல்லாம் வேண்டாம்!” சிறுப்பிள்ளை போல சிணுங்கினார் தேவகி.

“தென் ஐ திங்க்….” இழுத்தவன், “டேட்…?” என்றழைக்க, இருந்த இடத்தில் இருந்தே, “இயா பப்பூ” என்ற ரிச்சர்டிடம்,  “மாம்மி நீட்ஸ் யூ” என்று அவன் கண்ணடிக்க, அவன் விஷம பேச்சு புரிய,  “போடா டேய்” என்று வேகவேகமாய் அவனை உதறினார் தேவகி.

மகனுக்கும் தந்தைக்கும் அப்படி ஒரு சிரிப்பு!!!

எப்போதும் கேட்பது போல, “ஹவ் டிட் யூ கிராப் திஸ் ஏஞ்சல் ?” (எங்கிருந்து இந்த தேவதையை பிடிச்சுட்டு வந்தீங்க?) என்றான் கோவத்தில் சிணுங்கிக்கொண்டு நிற்கும் தாயை ரசித்துக்கொண்டே.

அதற்கு ரிச்சர்ட் பதில் சொல்லும் முன்னே முந்திக்கொண்ட தேவகி, “சும்மா ஏஞ்செல் ஊஞ்சல்’ன்னு சொல்லுவ… ஆனா அம்மா கேட்டா ஒண்ணுமே செய்ய மாட்ட!” என்று முகம் தூக்க,

“யூ ஆர் ஆஸ்கிங் மீ டு டூ, வாட் ஐ டோன்ட் லைக்…!” சற்றே தீவிரமான குரலில் சொன்னவனிடம், “தமிழ்ல பேசு!” என கடுப்படித்தார் தேவகி.

அவனும் அதே போன்ற கடுப்புடன், “நீங்கள் எனக்கு பிடிக்காததை செய்ய சொல்கிறீர்கள் தாயே!” என்று அழுத்தமாய் அதே நேரம் எள்ளலுடன் சொல்ல, ரிச்சர்ட் மறுபடியும் சிரித்து மாட்டிக்கொண்டார்.

கணவனை முறைத்த தேவகி, “நீங்களாவது சொல்லலாமே ரிச்சர்ட்!” என்றிட, “ஐ நெவர்  ஃபோர்ஸ் ஹிம் டு டூ எனிதிங்” (அவனை எதையும் செய்ய சொல்லி எப்பவும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்) என்ற ஒரே வரியில் கழண்டுக்கொண்டார் அவர்.

தந்தையும் மகனும் ‘ஹை ஃபை’ போட்டுக்கொள்வதை பார்க்க எரிச்சலாய் வந்தது தேவகிக்கு.

“பப்பூ அங்க உடம்பு சரியில்லாம இருக்கிறது என்னோட அம்மா! அவங்களை பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு! என் மேல ரொம்ப கோவத்துல இருக்காங்க இன்னும்! எனக்காக நீ அங்க போய் அவங்களை கன்வின்ஸ் பண்ணக்கூடாதா?” கண்களில் இருந்து நீர் கொட்ட கேட்டவரை பார்க்க இரு ஆண்களுக்குமே தாங்கவில்லை.

“டேவு…” வேகமாய் எழுந்து வந்து மனைவியை அணைத்துக்கொண்டார் ரிச்சர்ட்.

இருவரையும் பார்த்த பப்பூவுக்கு ஆயாசமாய் இருந்தது. ‘இந்த லவ்வ ஒன்னு பண்ணிட்டு எங்க மாம்மி படுற பாடு இருக்கே!’ என உள்ளூர தந்தை மொழியான ஆங்கிலத்தில் சலித்துக்கொண்டவன்,  “மாம்! உங்களை ‘நோ’ சொல்றவங்களை ஏன் தேடி போகணும்! லெட் தெம் ஃப்ரீ” என்றான்.

அவரும் அப்படி தானே இத்தனை காலமும் இருந்தார்.  முப்பது வருடங்களுக்கு  முன்னர் ஊர் சுற்றிப்பார்க்க வந்த  ஆஸ்திரேலியரை காதலிக்கிறேன் என்று தேவகி சொன்னபோது அடித்து அறைக்குள் அடைத்தனர். அதையும் மீறிய அவரது காதல் அத்தனை பேரையும் துறந்து ரிச்சர்டை கரம் பிடிக்க வைக்க, ஒரு குழந்தை வந்தால் சரியாகும் என்ற அவர் எண்ணம் தூள் தூளானது கை குழந்தையோடு சென்ற அவரை அவர் வீட்டாட்கள் துரத்தியடித்தபோது.

அதன் பின் அவ்வூரில் இருக்கும் தன் நெருங்கிய தோழி மூலம் வீட்டின் விஷயங்களை காதில் வாங்கிக்கொண்டும் அவ்வப்போது அவர் அனுப்பும் நிழல் படங்களை பார்த்துக்கொண்டும் என காலம் ஓட்டியவருக்கு மீண்டும் ஒருமுறை அவர்கள் முன் சென்று நிற்க மட்டும் தைரியமே வரவில்லை.

அண்ணனுக்கு திருமணம், குழந்தை பேரு, பூப்பு நீராட்டு, புதுமனை குடிபுகல், ஒன்று விட்ட தங்கை ஒருவரின் திடீர் மரணம் என அத்தனை நல்ல, கெட்ட காரியங்களை கேட்டும் தளரா மனதோடு இத்தனை காத தூரத்தில் நிம்மதியாய் இருந்தவருக்கு, சென்ற வாரம் தோழி சொன்ன, ‘உன் அம்மாக்கு தான் ரொம்ப முடியல தேவி, படுக்கைல தான் இருக்காங்க! பொண்ணு ஏக்கமோன்னு வைத்தி சித்தப்பா சொன்னதுக்கே உன் அண்ணன் அந்த ஆட்டம்! அவ வந்து தான் இவங்க உயிர் தங்கனும்ன்னா இந்த உயிர் இப்படியே போட்டும்’ன்னு உங்கண்ணன் சொல்லிட்டாரு! உங்க அப்பா விட்டாக்கூட அவர் விட மாட்டார் போல’ என்ற செய்தி இருந்த நிம்மதியை எல்லாம் துணி கொண்டு துடைத்து எறிந்தது.

இத்தனை காலமும் தள்ளி நின்று தவறு செய்துவிட்டோம் என்பதே அவருக்கு வெகு தாமதமாய் தான் விளங்கியது. ஒருமுறை துரத்தியிருந்தால் என்ன? திரும்ப திரும்ப போய் நின்றிருக்க வேண்டுமோ? தன் காதல், தன் சந்தோஷம் என எத்தனை பெரிய சுயநலவாதியாய் இருந்துவிட்டோம் என்று உரைக்க, அவரால் குற்றவுணர்வை தாள முடியவில்லை.

இப்போதே சென்று அந்த வீட்டின் முன்னே நிற்க மனம் ஏங்கினாலும், இன்னமும் தனியா கோபத்துடன் இருக்கும் ஆட்களை சமாளித்து அன்னையை பார்த்துவிட முடியும் என்று அவருக்கு தோன்றவில்லை. உண்மையில் அதற்கான தைரியமில்லை.

என்ன செய்வது என பலவாறு யோசித்துக்கொண்டு இருந்தவரின் கண்களில் கலங்கரை வெளிச்சம் போல விழுந்தவன் தான் ‘ஜேகோபியன்’. அவரது ஒரே வாரிசு.

தோற்றத்தில் அப்படியே ரிச்சர்டை உரித்து வைத்திருப்பான். தலைமுடி முதல், பல் தெரியாது சிரிக்கும் சிரிப்பு வரை அத்தனையிலும் தேவகியின் மனதை கவர்ந்த அந்த ஆஸ்திரேலியனையே கொண்டு பிறந்திருந்தவன் குணம் மட்டும் துளியிலும் மாறாது தேவகி தான்!

பாசம் வைப்பதிலும், பிடிவாதம் பிடிப்பதிலும், கோவம் காட்டாமல், செயலில் வாகை சூடுவதிலும், சற்றே சுயநலமாய் யோசிப்பதிலும் என அத்தனையும் தேவகியை போன்றே!

என்னதான் பிறந்ததில் இருந்து ஆங்கிலத்தில் விழுந்து புரண்டாலும் தேவகியின் கட்டாயத்தால் தமிழ் கற்றவனுக்கு, அன்னையிடம் தமிழில் மட்டுமே பேச வேண்டும் என்பது தேவகியின் எழுதப்படாத சாசனம்.

ஒவ்வொரு வருட விடுமுறைக்கும் ஒவ்வொரு நாட்டை சுற்றிப்பார்க்க என கிளம்புபவன் இம்முறையும் அதே போன்று தன் மூட்டை முடிச்சுகளை கட்ட, தேவகிக்கு கண்ணிமைக்கும் நொடியில் வந்து போனது தான், ‘ஜேகோப்’பை தன் தாய் வீட்டுக்கு தூது விடும் திட்டம்!

அதை சொல்லாமல் விடுமுறைக்கு ‘இந்தியா போக சொல்லி’ அவர் கெஞ்ச, அதற்கே முடியாது என முரண்டினான் அவன். பின்னே கொஞ்ச கொஞ்சமாய் அவர் விஷயத்தை வெளியிட்டபோது,

“ரொம்ப பழைய டெக்னிக் மாம்மி… நானே நிறைய தமிழ், தெலுகு மூவீஸ்ல பார்த்துருக்கேன்” என்றுவிட்டான்.

ஆனாலும் விடாமல் அவனுடன் அவர் போராட, “மாம்… உங்களுக்கு ஒன்னு வேணுன்னா அதை நீங்க தான் செய்யணும்… தப்பு நீங்க பண்ணுவீங்க… அதை கரெக்ட் பண்றதுக்கு இன்னொரு ஆள் வேணுமா? ஹவ் செல்பிஷ் யூ ஆர்?” என்று முகத்தில் அடித்ததை போல அவன் கேட்டுவிட, உண்மையை மறுக்க முடியாத இயலாமையில் கண்ணீர் மட்டுமே வடித்தார் தேவகி.

ரிச்சர்டுக்கு எந்தபுறமும் பேச முடியாத நிலை. மனைவிக்காக மகனையோ, மகனுக்காக மனைவியையோ சமாதானம் செய்ய முடியவில்லை.

பிடிக்காத ஒன்றை கட்டாயப்படுத்தக்கூடாது என்ற மேல்நாட்டு சுதந்திர உணர்வு அவரது.

பிடிக்காதது என்றாலும் பாசத்தின் முன்னே கட்டுப்பட வேண்டும் என்ற இந்திய தாய்மாரின் சராசரி எண்ணம் இவரது.

ஜேகோப் இரண்டும் கலந்த கலவை. அவனுக்கு ‘சரி’ என்றால் மட்டுமே செய்வான்.  ஏனோ ‘இந்தியா’ செல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அதிலும் அன்னை சொல்லும் காரணம்!? அவனுக்கே அவர் செய்தது பெரும் தவறு என்ற எண்ணம் தான். அதை சொன்னால் இன்னமும் வருந்துவாரே என்று நாவடக்கினான்.

முடிந்த வரை அவர் மனம் நோகாமல் மறுக்கத்தான் பார்க்கிறான். அவர் விட்டப்பாடில்லை.

இறுதியில், ‘அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா?’ என்ற தன் பிரம்மாஸ்திரத்தை தேவகி கையில் எடுக்க, “நான் ஏன் கேட்கனும்?” என்ற சுதர்சன சக்கரம் கொண்டு அதை தூள் தூளாய் நொறுக்கி விட்டான் ஜேகோப்.

தேவகிக்கு இதற்குமேல் அவனை வற்புறுத்த வரவில்லை. அவன் கேட்பதும் சரிதானே? தன் தப்புக்கு அவன் ஏன் போய் நிற்க வேண்டும்? என்ற எண்ணத்தை மனதுக்குள் வரவழைத்துக்கொண்டு மௌனமாய் அறைக்குள் புகுந்துக்கொண்டார்.

இத்தனை நேரம் அவர் அழுதுக்கொண்டே கேட்டபோது  திடமாய் சமாளித்தவனுக்கு, மௌனமாய் அறைக்குள் அவர் நுழைந்துக்கொண்டது மனதை பிசைந்தது. எப்படியும் அழுதுக்கொண்டு தான் இருப்பார் என அவனுக்கு தெரியும்! அதை புறக்கணித்து சுற்றுப்பயணம் கிளம்ப அவன் மனம் ஒத்துழைக்கவில்லை. அதற்காக அவர் சொல்வது போல ‘நான் தான் ஜாக்கி… என் அம்மா பேரு தேவகி’ என அங்கு சென்று நிற்க முடியாதே!

தலையைத்தாங்கிக்கொண்டு குஷனில் யோசனையாய் அமர்ந்துவிட்டான் ஜேகோப்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!